இந்த வலையில் தேடவும்

Thursday, August 18, 2011

அணு அண்டம் அறிவியல் -44

அணு அண்டம் அறிவியல் -44 உங்களை வரவேற்கிறது

ஒரு வாகனத்துக்கு மிகவும் தேவையான பாகங்கள் என்ன? ப்ரேக், ஆக்சிலரேடர் & ஸ்டியரிங் ...ஆனால் நீங்கள் ஒளி என்ற வாகனத்தின் மேல் ஏறிப் பயணிக்கும்(வெற்றிடத்தில்) போது இந்த மூன்று கருவிகளும் வேலை செய்யாது. ஒளி வண்டியை இன்னும் வேகமாகப் போ என்று முடுக்கவோ ப்ரேக் போட்டு நிறுத்தவோ (எதனுடனும் மோதாமல்) அதன் திசையை
திருப்பவோ முடியாது.

இந்த பிரபஞ்சம் உருவான போது அது இப்போது இருப்பது போல இத்தனை VERSATILE ஆக, இத்தனை கோலாகலமாக இருக்கவில்லை. கார்பன், ஆக்சிஜன், தங்கம்,வெள்ளி கந்தசாமி குப்புசாமி என்று எதுவும் இல்லாமல் வெறும் ஹைட்ரஜன் மயமாக இருந்தது என்கிறார்கள். நாம் எப்படி முதலில் மாவை அரைத்து வைத்துக் கொண்டு பின்னர் இட்லியோ தோசையோ பணியாரமோ ஆப்பமோ ஒரே மாவில் செய்து கொள்கிறோமோ அதே போல பிரபஞ்சத்தாய் (தான் குழந்தைகளுக்காக)முதலில் கொஞ்சம் அதிகப்படியாகவே ஹைட்ரஜன் மாவை அரைத்து வைத்துக் கொண்டு விட்டாள். இந்த மாவை வைத்துக் கொண்டு நமக்கு இதுவரை 118 விதம் விதமான உணவு வகைகளை சமைத்துப் போடுகிறாள்.

1812 ஆம் ஆண்டில் லண்டன் வி
ஞ்ஞானி வில்லியம் ப்ரௌட் (WILLIAM PROUT ) என்பவருக்கு தான் இந்த 'ஐடியா' முதலில் தோன்றியது. இது ஏன் என்றால் ஒரு லித்தியம் அணு (தனிம வரிசையில் மூன்றாவது தனிமம்)ஒரு ஹைட்ரஜன் அணுவை விட மிகச் சரியாக ஆறுமடங்கு எடை இருந்தது. ஒரு கார்பன் அணு ஓர் ஹைட்ரஜன் அணுவைப் போல சரியாக பன்னிரண்டு மடங்கு எடை இருந்தது. எனவே லித்தியம் அணு ஆறு ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றிணைந்து உருவாகி இருக்கலாம் என்ற கருத்தை அவர் முன் வைத்தார்.

அதற்குப் பிறகு சுமார் ஒரு நூற்றாண்டுகள் கழித்து F.W. Aston என்பவர் Mass Spectrograph (நிறை அலைக்கற்றை மானி) என்ற ஒரு கருவியை கண்டுபிடித்தார். இந்தக்கருவி நியூட்ரான் ப்ரோட்டான் போன்ற நுண்ணிய துகள்களின் நிறையை (மறைமுகமாக) அளவிடும். இந்த கருவியின் மூலம் ஆஸ்டன் ஒரு கார்பன் அணுவின் நிறையை மிகத் துல்லியமாக அளவிட்ட போது அது பன்னிரண்டு ஹைட்ரஜன் அணுக்களின் மொத்த நிறையை விட சற்றே குறைவாக இருந்தது! அதாவது ஒரு கிலோ தோசை மாவில் செய்த தோசைகளை எல்லாம் எடை போட்டுப் பார்க்கும் போது அவற்றின் மொத்த எடை 999 .9999999 கிராம் தான் வந்தது என்று சொல்லலாம். நிறையை எந்தக் காரணம் கொண்டும் அழிக்க முடியாது என்றால் அந்த தக்கனூண்டு நிறை எங்கே போனது? அந்த நிறைக்கு சமமான அணுத்துகள் ஒன்று ஹைட்ரஜன் அணுக்கள் இணையும் போது எஸ்கேப் ஆகி இருக்கலாம் என்றால் அந்த நிறைக்கு சமானான அளவு நிறை கொண்ட எந்தத் துகளும் இருப்பதற்கான ஆதாரங்கள் இயற்பியலில் இல்லை. இதே போல ஹைட்ரஜனுக்கு அடுத்த லேசான தனிமமான ஹீலியத்தை எடுத்துக் கொண்டால் (ஹைட்ரஜனை வைத்துக் கொண்டு செய்ய முடியும் ஒரு இன்ஸ்டன்ட் உப்புமா தான் ஹீலியம்) ஒரு ஹீலியம் அணுவின் நிறை நான்கு ஹைட்ரஜன் அணுக்களின் மொத்த நிறையை விட்ட கிட்டத்தட்ட 0.8 சதவிகிதம் குறைவாக இருந்தது! இந்த நிறை வேறுபாட்டை அவர் 'Mass defect ' (நிறைப் பிழை)( எங்கேயோ இடிக்கிறது) என்ற அளவில் பெயரிட்டு விட்டு பின்னர் பேரக்குழந்தைகளுடன் விளையாடப் போய்விட்டார்.

நிற்க
மோகினி அவதாரம்


காலம் காலமாக
விஞ்ஞானிகளை உறுத்திய ஒரு விஷயம் நட்சத்திரங்கள் எப்படி எரிகின்றன என்பது. அப்போதெல்லாம் எல்லாரும் சூரியனை ஒரு தேவன் என்றும் அவன் குதிரைகள் பூட்டிய ரதத்தில் வலம் வருகிறான் என்றும் கருதி வந்தார்கள். அனுமார் ஓடும் சூரியனின் பின்னே ஓடிச் சென்று கல்வி கற்றார் என்று ஹிந்து புராணங்கள் சொல்கின்றன. சூரியன் சந்திரன் இரண்டும் கடவுளின் கண்கள் என்றும் நம்பினார்கள்.கிரகணங்கள் வந்த போது அதற்கு மிக அழகான கதைகளை சொன்னார்கள். பாற்கடலைக் கடையும் போது விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு அமிர்தம் வழங்குகிறார்.இதை எப்படியோ மோப்பம் பிடித்து விடும் ராகுவும் கேதுவும் தேவர்களைப் போல வேடம் அணிந்து சூர்ய சந்திரர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொள்கிறார்கள். இதை அறிந்து கொண்ட சூர்ய சந்திரர்கள் மோகினியிடம் இருவரையும் போட்டுக் கொடுக்கிறார்கள். மோகினி தன் சக்ராயுதத்தால் ராஹுவின் உடலையும் கேதுவின் தலையையும் அறுத்து விடுகிறார். இருவரும் கொஞ்சம் அமிர்தம் சாப்பிட்டு விடுவதால் சாவதில்லை. வானில் கிரகங்களாக மாறி தம்மைக் காட்டிக் கொடுத்த சூரியனையும் சந்திரனையும் வருடம் ஒருமுறை விழுங்குகிறார்கள் ?!?!

சூரியனைப் பற்றிய ஓரளவு அறிவியல் விளக்கத்தை அளித்தவர் கிரேக்க தத்துவ ஞானி அனெக்ஸகோரஸ் . அவர் சூரியன் கடவுள் எல்லாம் இல்லை .அது கிட்டத்தட்ட கிரேக்கத்தின் அளவுக்கு பெரிய ஓர் எரியும் உலோக பந்து என்றும் சந்திரன் சூரியனின் ஒளியை வெறுமனே பிரதிபளிக்கிறது என்றும் புரட்சிகரமான ஒரு கருத்தை வெளியிட்டார்.(இதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது வேறு விஷயம்) .பிறகு லார்ட் கெல்வின் என்பவர் சூரியன் என்பது பயங்கரமாகக் கொதித்துக் கொண்டிருக்கும் ஒரு தண்ணீர் தொட்டி (எப்படியெல்லாம் யோசிக்கறாங்க?) என்றும் அது குளிரும் போது வெப்பத்தை வெளியிடுகிறது என்றும் அனுமானித்தார்.இன்னும் சிலர் சூரியன் என்பது ஒரு பிரம்மாண்டமான நிலக்கரி சுரங்கம் என்றும் அதன் சக்தி நிலக்கரி எரிவதால் கிடைக்கலாம் என்றும் அனுமானித்தார்கள். ஆனால் சூரியன் அப்படி ஒரு நிலக்கரி சுரங்கமாக இருந்தால் கிட்டத்தட்ட அது ஒரு 5000 வருடங்களுக்கு எரிந்து பின்னர் சாம்பலாகி வெந்து தணிந்து விடும் . ஆனால் பூமியின் வயது சில கோடி ஆண்டுகள் என்று புவியியலாளர்கள் கணக்கிட்டிருந்தனர். எனவே நிலக்கரியை விட கோடிக்கணக்கான மடங்கு ஆற்றல் கொண்ட ஒரு எரிபொருள் உள்ளே இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஊகித்தார்கள். ஆனால் அது என்ன? என்ற மர்மம் தொடர்ந்தது.

RADIOACTIVITY என்ற கதிரியக்கம் கண்டுபிடிக்கப்பட்டதும் (கதிரியக்கம் என்றால் கனமான தனிமங்கள் சுமை தாங்காமல் தாமாகவே லேசான தனிமங்களாக உடைவது) கனமான தனிமங்கள் தங்கள் அணுக்கருவில் இருந்து தள்ளும் துகள்கள் பயங்கர வேகத்தில் வெளிவரும். அந்த துகள்களின் இயக்க ஆற்றல் சூரியன் போன்ற நட்சத்திரங்களுக்கு எரிசக்தியைத் தரலாம் என்று ரூதர்போர்ட் என்ற
விஞ்ஞானி ஒரு கருத்தை முன்வைத்தார். (வெப்பம் என்பது ஒரு பொருளின் துகள்கள் எந்த வேகத்தில் இயங்குகின்றன என்று அளவிடுவது)

1890 இல் ஜோசப் லாக்யர் என்பவர் கண்டுபிடித்த ஒரு விஷயம் சூரியனுக்குள் என்ன
தான்தான் இருக்கிறது என்பதை ஓரளவு தெளிவாக்கியது. இந்த SPECTRUM SPECTRUM (2 -ஜி அல்ல) என்கிறார்களே, அந்த சூரிய நிறமாலைகளை அவர் ஆராய்ந்து கொண்டிருந்தார். ஒரு பொருள் மின்காந்த ஆற்றலை வெளித்தள்ளும் போது அது அந்த ஆற்றலை ஒன்றுக்கு மேற்பட்ட அதிர்வெண்களில் வெளித்தள்ளலாம்.இந்த அதிர்வெண்கள் (அலைநீளங்கள்) வெவ்வேறு நிறங்களாக நம் கண்களுக்கு தெரியும். ஒரு விண்மீனில் இருந்து வரும் ஒளியின் நிறமாலையை ஆராய்ந்து பார்த்து அந்த விண்மீனின் வெப்பநிலை என்ன? அந்த விண்மீனில் என்ன என்ன தனிமங்கள் உள்ளன என்று சொல்லிவிடலாம்.ஒவ்வொரு தனிமமும் வெப்பப் படுத்தப்படும் போது ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தை உள்வாங்கி அந்த தனிமத்தின் நிறமாலையில் அந்த அலைநீளத்துக்கு ஒத்த நிறம் இல்லாமல் (absent )இருக்கும். ஒரு விண்மீனில் இருந்து வரும் ஒளி அதன் தனிமத்தின் வழியே வரும் போது ஒரு குறிப்பிட்ட நிறம் அந்த தனிமத்தால் உறிஞ்சப்பட்டு நாம் பூமியில் இருந்து கவனிக்கும் போது அந்த நிறம் MISS ஆகி இருக்கும்.எனவே அந்த விண்மீனில் அந்த குறிப்பிட்ட தனிமம் இருக்கும் என்று அறிந்து கொள்ளலாம். சூரிய நிறமாலையை கவனிக்கும் போது அதில் பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் இருக்க வேண்டும் என்று தெளிவானது..


பல்வேறு தனிமங்களின் நிறமாலை


இது இப்படி இருக்க இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்த்தில் ஐன்ஸ்டீன் தன் சார்பியல் சித்தாந்தத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார். ஒளியின் கூம்பு ஒன்று காலவெளியில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்து கொண்டிருந்தார் அவர். (ஒளிக்கூம்புகள் எப்படி காலத்தை தீர்மானிக்கின்றன என்று முன்பே பார்த்தோம்)



நாம் சாலையில் போகும் போது அங்கங்கே Speed limit 80 கி.மீ என்றெல்லாம் போர்டுகள் பார்ப்போம்.ஆனால் அதையெல்லாம் மதிக்காமல் நம் இஷ்டத்துக்கு ஓட்டுவோம். பிரபஞ்சத்திலும் இந்த மாதிரி SPEED LIMIT போர்டுகள் இருக்கின்றன. 'நீங்கள் ஒளிவேகத்தை மிஞ்ச முடியாது' என்ற எச்சரிக்கை போர்டுகள். ஆனால் நாம் இங்கே வழக்கம் போல இதை மதிக்காமல் நம் ஆக்சிலரேட்டரை அழுத்த முடியாது.சாலையில் வேண்டுமானால் நாம் ஒரு நூறு ரூபாய் ஃபைன் கொடுத்து விட்டு போய்க்கொண்டே இருக்கலாம்.ஆனால் ஒளிவேகத்தை மிஞ்ச (அல்லது எட்டிப்பிடிக்க) நாம் இயற்கைக்கு மிக அதிக
ஃபைன் கட்ட வேண்டும்.

ஒளிவேகத்தை நெருங்க நெருங்க ஒரு பொருள் காலம் போன்ற (TIME-LIKE) என்ற நிலையில் இருந்து வெளி போன்ற (SPACE -LIKE ) நிலைக்கு மாறுகிறது. காலத்தில் அதன் existence குறைகிறது. ஒளிவேகத்தில் அதற்கு வெளி மட்டுமே இருக்கிறது. காலம் பூஜ்ஜியமாகிறது. ஒளிவேகத்தை மிஞ்சும் போது காலவெளியை சமன் செய்ய இயற்கை அதன் காலத்தின் அம்பை திசைமாற்ற வேண்டும். இரண்டும் இரண்டும் நான்கு. ஒன்றும் மூன்றும் நான்கு .பூஜ்ஜியமும் நான்கும் நான்கு. இது வரைக்கும் தான் இயற்கை அனுமதி தருகிறது. மைனஸ் ஐந்தும் ஒன்றும் கூட நான்கு தான் .ஆனால் காலத்தின் அம்பு திசைமாறிய ஒரு காலவெளிக் கட்டமைப்பை பிரபஞ்சம் அனுமதிப்பதில்லை.எனவே ஒளிவேகத்தை பிரபஞ்சத்தின் அதிகபட்ச வேகமாக இயற்கை நிர்ணயிக்கிறது. சரி அப்படியென்றால் ஒளிவேகத்தை கிட்டத்தட்ட நெருங்கி விட்ட ஒரு பொருள் தன் ஆக்சிலரேட்டரை அழுத்தினால் என்ன ஆகும்? நாம் எண்பது கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தால்
ஆக்சிலரேட்டரை அழுத்தினால் இஞ்சினுக்கு அதிக எரிபொருள் சென்று நமக்கு 81 கி.மீ. வேகம் கிடைக்கும்.ஆனால் ஒளிவேகத்தை எட்ட முயலும் பொருளுக்கு கொடுக்கப்படும் ஆற்றல் என்ன ஆகும்? ஆற்றல் அழிவின்மை விதிப்படி ஆற்றல் அப்படியே மறைந்து விட முடியாது. அதே சமயம் அந்த ஆற்றல் அந்த பொருளின் வேகத்தை அதிகரிக்க முடியாது. இதற்கு ஐன்ஸ்டீன் ஓர் அழகான விளக்கத்தை கண்டுபிடித்தார். அதாவது ஒரு குறிப்பிட்ட(வேக )எல்லைக்கு மேல் பொருளுக்கு அளிக்கப்படும் ஆற்றல் அதன் நிறை அதிகரிப்பாக உணரப்படும். நாம் எரிபொருள் மூலம் கொடுக்கும் ஆற்றல் அதன் நிறையை அதிகரிக்குமே தவிர அதற்கு மேலும் வேகத்தை அளிக்கும் முயற்சியை கைவிட்டு விடும். பொருள் பெருக்க ஆரம்பிப்பதால் அதை மேலும் முடுக்க அளவில்லாத ஆற்றல்(INFINITE ENERGY) தேவைப்படும். ஓவர்லோட் ஏற்றப்பட்ட மாடு படுத்து விடுவதை போல விண்கலம் இதற்கு மேல் போகமாட்டேன் என்று முரண்டு பிடிக்க ஆரம்பிக்கும்.

ஆற்றலும் பொருளும் ஒன்று தான் (Mass energy equivalence) தேவைப்பட்டால் ஆற்றல் தன்னை நிறையாகவும் நிறை தன்னை ஆற்றலாகவும் வெளிப்படுத்தும் என்ற இந்த கண்டுபிடிப்பு சூரியன் பற்றிய புதிரை எளிதாகத் தீர்த்தது. அதாவது சூரியன் தன் பிரம்மாண்டமான நிறை காரணமாக தன்னைத்தானே அழுத்துகிறது.அப்போது அதன் ஹைட்ரஜன் அணுக்களை நெருக்கி (அணுவின் எலக்ட்ரான்கள் தப்பித்து ஓடி விடுகின்றன) நான்கு ஹைட்ரஜன் அணுக்கருக்கள் இணைந்து ஒரு ஹீலியம் அணுக்கரு உருவாகிறது.ஆனால் ஒரு ஹீலியம் அணுக்கருவின் நிறை நான்கு ஹைட்ரஜன் அணுக்கருக்களின் மொத்த நிறையை விட கொஞ்சம் குறைவு.இந்த நிறை இழப்பை (MASS DEFECT)இயற்கை ஆற்றல் இழப்பாக ஈடுகட்டுகிறது. இந்த நிறை வித்தியாசம் மிக மிக சிறியது தான் என்ற போதிலும் அதை ஒளிவேகத்தின் இருமடியால் பெருக்கும் போது பிரம்மாண்டமான ஆற்றல் கிடைக்கிறது. ஒரு விஷயம் நாம் கவனிக்க வேண்டும்: சூரியன் ஒரு மிக மிகச் சிறிய நிறையை மட்டுமே ஆற்றலாக மாற்றுகிறது.முழு நிறையையும் மாற்ற முடிந்தால்? உதாரணம் ஒரு கடுகு. அது இந்த பிரபஞ்சத்தை
அழிக்க போதுமானதாக இருக்கும்.

இதே போல ஒரு அணுவில் அதன் அணுக்கருவின் நிறையானது அதன் கட்டுமானப் பொருட்களான ப்ரோடான் மற்றும் நியூட்ரான்களின் மொத்த நிறையை விட கொஞ்சம் குறைவாக இருக்கும்.இந்த நிறை இழப்பு எங்கே போகிறது? எங்கும் போகவில்லை! ஒரே மின்சுமை உள்ள துகள்களை அணுக்கருவுக்குள் விலகி ஓடாமல் இறுக்கி அடைத்து வைக்க கணிசமான ஆற்றல் (BINDING ENERGY ) தேவைப்படுகிறது. இந்த ஆற்றலை அணுக்கரு தன் துகள்களின் நிறை இழப்பில் இருந்தே எடுத்துக் கொள்கிறது. இந்த BINDING ENERGY எத்தனை வலுவானது என்றால் புவி ஈர்ப்பு ஆற்றலைப் போல அது கோடிக்கணக்கான மடங்கு அதிக வலிமை பெற்றது.குட்டி போட்ட பூனை தனக்கு சக்தி வேண்டும் என்று தான் போட்ட குட்டிகளில் ஒன்றையே விழுங்குவது போல தான் இது. இயற்கை தனக்கு ஆற்றல் தேவைப்பட்டால் அதை நிறையில் இருந்து எடுத்துக் கொள்கிறது. தேவைப்பட்டால் நிறையை இழந்து ஆற்றலை அளிக்கிறது.

ஐன்ஸ்டீன் எப்படி காலத்தையும் வெளியையும் இணைத்து காலவெளி (SPACETIME ) என்ற ஒன்றை முன்வைத்தாரோ அதே போல நிறையையும் ஆற்றலையும் இணைத்து நிறை-ஆற்றல் (mass energy ) என்ற கருத்தை ஏற்படுத்தினார்.இயற்பியலில் வேறு வேறு என்று கருதப்பட்ட நிறைய விஷயங்கள்
விஞ்ஞானிகளால் ஒன்றிணைக்கப்பட்டு வரலாற்றில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. நியூட்டன் கல்லை கீழே இழுக்கும் விசையும் நிலாவை பூமியை சுற்றிவர செய்யும் விசையும் என்று தான் என்று சொன்னபோது ஈர்ப்பு பிறந்தது. பாரடே மின்விசையும் காந்தவிசையும் ஒன்றுதான் என்று சொன்னபோது மின்காந்தவியல் உதித்தது. ஐன்ஸ்டீன் வெளியும் காலமும் ஒன்றுதான் (ஒருவருக்கு வெளியாக தெரிவது இன்னொருவருக்கு காலமாகத் தோன்றலாம்) என்று கண்டுபிடித்த போது சார்பியல் பிறந்தது.அதே போல நிறையும் ஆற்றலும் ஒன்று தான்.நிறை மாறாது ஆற்றல் மாறாது என்று தனித்தனியாக சொல்வதை விட ஒரு அமைப்பில் (System) நிறை மற்றும் ஆற்றலின் கூடுதல் எப்போதும் மாறாது என்று சொல்லலாம். நிறைய விஷயங்கள் இப்படி ஒன்றிணைக்கப்பட்டு விட்டாலும் 'எல்லாம் ஒன்று தான்' (GRAND UNIFICATION ) என்று ஆதி சங்கரர் மாதிரி ஒருநாள் சொல்லிவிடமுடியாதா என்று விஞ்ஞானிகள் ஏங்குகிறார்கள். பிரபஞ்சத்தின் அத்தனை ரகசியத்தையும் ஒரு துண்டு சீட்டில் எழுதி விட முடியாதா என்று கனவு காண்கிறார்கள். எழுதுகிறார்களா பொறுத்திருந்து பார்ப்போம்..

[கவனத்தில் கொள்க: விறகை எரித்து நாம் தண்ணீர் காய்ச்சும் போது நமக்கு வெப்ப ஆற்றல் கிடைக்கிறது. இங்கே நிறை ஆற்றலாக மாறுவதில்லை.விறகின் நிறை அது முற்றிலும் எரிந்த பின்னும் அப்படியே இருக்கிறது. (சாம்பல்,புகை,நெருப்பு ) விறகில் இருந்த மூலக்கூறுகளின் பிணைப்பு வேதி ஆற்றல் (bond energy ) வெப்ப ஆற்றலாக மாற்றப்பட்டது அவ்வளவே. முழு விறகையும் சாம்பலே இல்லாமல் புகையே இல்லாமல் ஆற்றலாக மாற்ற முடிந்தால் ? அடுத்த முறை இதெல்லாம் எனக்கு தூசு மாதிரி என்று சொல்வதற்கு முன்னர் கொஞ்சம் E =MC2 என்பதை யோசித்து விட்டு அப்புறம் சொல்லுங்கள்]

[கவனத்தில் கொள்க: நிறை ஆற்றலாக 'மாறுகிறது' என்ற சொல்வழக்கை நிறைய இயற்பியல் வல்லுனர்கள் எதிர்க்கிறார்கள். நிறை என்பதே ஆற்றல் தான் .அதே போல ஆற்றலுக்கும் உள்ளார்ந்த நிறை உண்டு. ஒளிவின் திசைவேகமான C என்பதற்கு அலகு(unit) இல்லை. அதை ஒன்று என்று எடுத்துக் கொண்டால் E=M என்று வரும். எனவே சூடாக இருக்கும் ஒரு பொருளுக்கு அதன் ஆற்றல் காரணமாக கொஞ்சம் நிறை அதிகமாக இருக்கும். ஒரு பொருளின் மீது ஒளி விழுந்தால் ஒளியின் ஆற்றல் (hv) காரணமாக அதன் நிறை சற்றே அதிகரிக்கும். ]

சமுத்ரா




16 comments:

Jayadev Das said...

பெரு வெடிப்பு [Big Bang] நிகழ்ந்த பின்னர் சில மைக்ரோ செகண்டுகள் பொருட்கள் [matter] ஒளியின் வேகத்தைக் கட்டிலும் பலமடங்கு வேகமாக பயணித்தன என்று சொல்கிறார்களே? இது குறித்து தங்கள் விளக்க முடியுமா?

\\(எதனுடனும் மோதாமல்) அதன் திசையை திருப்பவோ முடியாது. \\ ஒளியின் பாதை பொருளீர்ப்பு விசையின் மூலம் வளைகிறதே!

சமுத்ரா said...

(எதனுடனும் மோதாமல்) it includes gravitational field as well

Jayadev Das said...

\\அதாவது சூரியன் தன் பிரம்மாண்டமான நிறை காரணமாக தன்னைத்தானே அழுத்துகிறது.அப்போது அதன் ஹைட்ரஜன்
அணுக்களை நெருக்கி (அணுவின் எலக்ட்ரான்கள் தப்பித்து ஓடி விடுகின்றன) நான்கு ஹைட்ரஜன் அணுக்கருக்கள் இணைந்து ஒரு ஹீலியம் அணுக்கரு உருவாகிறது.\\

4 Hydrogen Atoms [4 Proton + 4 Electrons] ---------> Helium [2 Proton + 2 Neutrons+ 2 electrons] The two excess electrons cannot runaway, may be they help two protons to become neutrons. But, I am not sure about it.

சமுத்ரா said...

No electrons cannot get into nucleus due to uncertainly principle..they fly away

Jayadev Das said...

உங்க பதிவுகள் அத்தனையும் அற்ப்புதம் நண்பரே. நான் எல்லாவற்றையும் படிக்கிறேன், சிலதுக்கு மட்டுமே பின்னூட்டம் போட்டுள்ளேன். தங்களது எளிய உதாரணங்கள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன. கடினமான விஷயங்களை எல்லோருக்கும் எளிதில் புரியும்படி எழுதுகிறீர்கள், இது ஒரு அறிய கலை, எல்லோராலும் முடியாது. தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் பிளாக் நிறைய பேர் படிக்க வேண்டுமென்பதே எனது அவா.

Aba said...

All right.. But how did Einstein combined the three basic measuring units: Kg, m, s? (Kg/10 x m = Kg x[(c)ms-1]^2)? All the Standerd unit are just assumptions.. aren't they?

Mohamed Faaique said...

///தங்களது எளிய உதாரணங்கள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன. கடினமான விஷயங்களை எல்லோருக்கும் எளிதில் புரியும்படி எழுதுகிறீர்கள், இது ஒரு அறிய கலை, எல்லோராலும் முடியாது. தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் பிளாக் நிறைய பேர் படிக்க வேண்டுமென்பதே எனது அவா.////

நான் ஆமோதிக்கிறேன்

இராஜராஜேஸ்வரி said...

ஒளிவேகத்தை மிஞ்ச (அல்லது எட்டிப்பிடிக்க) நாம் இயற்கைக்கு மிக அதிக ஃபைன் கட்ட வேண்டும். /

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

Aba said...

///தங்களது எளிய உதாரணங்கள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன. கடினமான விஷயங்களை எல்லோருக்கும் எளிதில் புரியும்படி எழுதுகிறீர்கள், இது ஒரு அறிய கலை, எல்லோராலும் முடியாது. தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் பிளாக் நிறைய பேர் படிக்க வேண்டுமென்பதே எனது அவா.////

நான் ஆமோதிக்கிறேன்//

I third it...

saarvaakan said...

அருமை நண்பரே,
இதற்கான‌ மூல சுட்டிகளையும் அளித்தால் மிக பயன் அளிக்கும்.ஒளியின் வேகத்தில் செல்ல்முடியாது என்கிற விதி பூமியில் வாழும் நமக்கு மட்டுமா?அல்லது இப்பிரபஞ்சத்திலேயே எதனாலும் முடியாதா?
நன்றி.

பத்மநாபன் said...

சமுத்ரா... நிறையும் ஆற்றலும் ஒன்று என்றது... ஆதிசங்கரரின் அத்வைதத்தை படம் பிடித்தது... சூரியன் ஆற்றலாக மாற்றும் துக்குனுண்டு அளவு ( நமக்கு பிரமாண்டம்.) .. என இந்த பதிவின் மொத்தத்தையும் // // இட்டு பாராட்டவேண்டும்..

Anonymous said...

Nice Posting! Keep up your good work!
Arunkumar M.

VELU.G said...

கொஞ்சம் நாட்களாக வேலை பிஸியால் நெட் பக்கம் அதிகம் வருவதில்லை.

அப்படியே வந்தாலும் முதலில் சமுத்ரா அப்டேட் ஆகியிருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான்(படித்துவிட்டுத்தான்) மற்றவை படிக்கச்செல்வேன்.

தனியே அன்றைய பதிவைப் படித்தாலும் கம்பேரிட்டிவாக பின்னாலும் சென்று படித்து வருகிறேன்


நன்றி

VELU.G said...

I am always present in your physics class sir

BASU said...

//Jayadev Das said...
உங்க பதிவுகள் அத்தனையும் அற்ப்புதம் நண்பரே. நான் எல்லாவற்றையும் படிக்கிறேன், சிலதுக்கு மட்டுமே பின்னூட்டம் போட்டுள்ளேன். தங்களது எளிய உதாரணங்கள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன. கடினமான விஷயங்களை எல்லோருக்கும் எளிதில் புரியும்படி எழுதுகிறீர்கள், இது ஒரு அறிய கலை, எல்லோராலும் முடியாது. தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் பிளாக் நிறைய பேர் படிக்க வேண்டுமென்பதே எனது அவா.//

எனது அவாவும் கூட :)

mrs.chanaka said...

தொடர்ந்து இதை எழுத மாட்டீர்களா?என்னைப் போன்றவர்களுக்கு உங்களின் இந்த தொடரின் பெறுமதி வார்த்தைகளில் சொல்லி மாளாது. மிகுந்த நன்றி.