இந்த வலையில் தேடவும்

Thursday, August 11, 2011

கலைடாஸ்கோப் -33

லைடாஸ்கோப் -33 உங்களை வரவேற்கிறது

1
==


இந்த YES மற்றும் NO என்று இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. உங்களுக்கு YES பிடிக்குமா? NO பிடிக்குமா? தயங்காமல் சொல்லுங்கள் ,பரவாயில்லை . NO பிடிக்கும் என்று சொன்னால் நீங்கள் எதிர்மறை சிந்தனை கொண்டவர் என்று அர்த்தம் எல்லாம் இல்லை. நீங்கள் பாதுகாப்பை விரும்புபவர் அவ்வளவே! 'இல்லை' என்ற வார்த்தை(சில சமயங்களில்) 'ஆமாம்' என்பதை விட பாதுகாப்பானது. YES அல்லது NO இரண்டில் ஏதாவது முதலில் சொல்லுங்கள் பிறகு கேள்வி கேட்கிறேன் என்றால் நம்மில் பெரும்பாலானோர் NO என்று தான் சொல்வோம். (எதற்கு வம்பு?கேட்டவர் சொத்தை எழுதித்தர சொன்னால்?) ஆனால் பாதுகாப்பாக இருக்கும் ஒன்று நம்மை பக்குவப்படுத்துவதில்லை. நமக்கு அனுபவங்களை அளித்து முதிர்ச்சி ஆக்குவதில்லை . NO என்று சொல்லி விட்டால் மேட்டர் முடிந்து விட்டது. வீட்டுக்கு போய் சீரியல் பார்த்து விட்டு பாதாம் பால் குடித்து விட்டு கம்பளி போர்த்திக் கொண்டு தூங்கி விடலாம். YES மட்டுமே நமக்கு பலவிதமான அனுபவங்களைத் தருகிறது. நாம் No என்று சொல்வதற்கும் YES தான் நமக்கு முதலில் கற்றுத் தருகிறது.

நம் வாழ்க்கை என்ற முள் YES என்ற துருவத்தில் இருந்து NO என்ற துருவத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்வதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஒரு குழந்தையின் அகராதியில் NO என்பதே இருப்பதில்லை. குழந்தை எல்லாவற்றுக்கும் YES என்கிறது. சாக்லேட் வேணுமா? பார்க் போலாமா? அத்தை வீட்டுக்கு போலாமா? தண்ணீரில் விளையாடலாமா? எல்லாவற்றுக்கும் YES தான். குழந்தை அத்தனைக்கும் ஆசைப்படுகிறது. உலகமே தனக்கு வேண்டும் என்று நினைக்கிறது. முள் நகர்ந்து வாழ்க்கையின் மத்தியில் YES மற்றும் NO சமமாக இருக்கின்றன. வாழ்க்கையில் எதை தெரிவு செய்வது எதை ஒதுக்குவது என்ற பக்குவம் மனிதனுக்கு வந்து விட்டிருக்கிறது. வாழ்க்கையின் இறுதிநாட்களில் நம்மிடம் NO மட்டுமே எஞ்சி இருக்கிறது.எல்லாமே அர்த்தமற்றதாக தோன்றுகிறது. தாத்தா ஸ்வீட் வேணுமா?இல்லை வேண்டாம்..கோயிலுக்கு வர்றீங்களா? இல்லை..நீங்கள் போங்கள்! பாட்டி நாத நீராஞ்சனத்துல ஆரபி பாடறா, கேட்கறியா? இல்லை.வேண்டாம்! (ஒரு காலத்தில் அவள் ஆரபி என்றால் பைத்தியமாக இருந்திருப்பாள்.)

SELF IMPROVEMENT சுய முன்னேற்றம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு ஒரு கோஷ்டி பிசினஸ் செய்கிறது.'POWER OF YES ' என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள். அவர்களிடம் கொஞ்சம் உஷாராக இருங்கள்.ஏனெனில் உங்களுக்கு NO சொல்லத்தெரியவில்லை என்றால் உங்கள் YES அர்த்தம் அற்றது .அதே போல உங்களுக்கு YES சொல்லத்தெரியவில்லை என்றால் உங்கள் NO கூட அர்த்தமற்றது. 'இல்லை' என்பது கெட்ட வார்த்தை அன்று.YES என்பது ஏதோ தெய்வீக வார்த்தையும் அன்று. YES மற்றும் NO இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. ஒன்றை ஒன்று நிறைவு செய்கின்றன.இல்லை என்பது அமங்கலமான வார்த்தை என்று சில வீடுகளில் சொல்வார்கள். 'சர்க்கரை இல்லை' என்று சொல்லாமல் 'சர்க்கரை டப்பா காலியாக இருக்கிறது' என்றோ 'சர்க்கரை நிறைந்து வழிகிறது' என்றோ சொல்வார்கள். இல்லை என்று சொன்னால் க்ஷ்மி வீட்டை விட்டு நீங்கி விடுவாளாம். ஏன் நீங்க வேண்டும்? சில சமயம் நீங்கள் இல்லை என்று சொல்வதே நல்லது. சரி இந்த வீட்டில் சர்க்கரை இல்லை நாம் சர்க்கரை மற்றும் நெய்யின் கால்வாய் ஓடச் செய்வோம் என்று அந்த பாக்யத லக்ஷ்மி நினைக்கக்கூடும்.

சில காலங்களுக்கு முன் சானல்களில் 'யார் மனதில் யாரு' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது நினைவில் வருகிறது. அதில் ஒரு ஜீனி நீங்கள் தரும் YES அல்லது NO இரண்டை வைத்துக் கொண்டே உங்கள் மனதில் இருக்கும் Celebrity யை கண்டுபிடித்து விடுவார்!
yet, yes and no are too short an answers!


வாழ்க்கையில் நாம் சில சமயம் YES சொல்லவேண்டிய விஷயங்களுக்கு NO சொன்னதால் வருந்துகிறோம்; சில சமயம் NO சொல்ல வேண்டிய விஷயங்களுக்கு YES சொன்னதால்;இந்த இரண்டும் நம்மை எப்படி எல்லாம் படுத்துகின்றன பாருங்கள்! இன்னும் சில சமயங்களில் நமக்கு YES மற்றும் NO இரண்டுமே சொல்லலாம் போலத் தோன்றும்.ஆனால் இவை இரண்டுக்கும் இடையில் ஒரு 0 .5 வார்த்தை இல்லை. May be (இருக்கலாம்) என்பது புத்தகத்தில் மட்டுமே இருக்கிறது. நிஜ வாழ்க்கையில் May be இல்லை. அருவியில் குளிக்க நண்பர்கள் அழைக்கும் போது தலை மட்டும் நனையும் படி குளிக்கிறேன் என்று
சொல்ல முடியாது.

சரி பெண்கள் NO என்று சொன்னால் YES என்று அர்த்தமாமே? No என்று சொல்வது இருக்கட்டும் அவர்கள் No No என்று சொன்னால் நிச்சயம் YES தான்! (சரி சில சமயம் நம்மால் YES அல்லது No இரண்டையும் விடையாக சொல்ல முடியாது. Is No the answer of this question? say YES or NO..)

2
==

YES மற்றும் No போல நம் வாழ்வில் பின்னிப்பிணைந்து விட்ட இரண்டு சொற்கள் THANK YOU மற்றும் SORRY ..இந்த இரண்டும் தான் எத்தனை இயந்திரத்தனமாக நம் வாயிலிருந்து வந்து விடுகின்றன? சின்ன வயதில் இருந்தே இந்த இரண்டும் நம் மீது திணிக்கப்பட்டு விடுகின்றன. யாராவது ஏதாவது கொடுத்தா THANK YOU சொல்லு.போ போய் அண்ணாவிடம் SORRY கேளு என்று இவை இரண்டும் நமக்கு மிக சீக்கிரமாகவே அறிமுகமாகி விடுகின்றன. இப்போது நவ நாகரிக உலகில் இந்த இரண்டு வார்த்தைகளும் குட்டி வேறு போட்டு விட்டன, THANK YOU என்று சொன்னால் WELCOME என்றும் SORRY என்றால் It 's ok என்றும் சொல்ல வேண்டுமாம். சில நாட்களுக்கு முன்னர் ஆபீஸ் காண்டீனில் சாப்பிட்ட தட்டை (ஐ.டி. கம்பெனிகளில் நாம் சாப்பிட்ட தட்டை நாம் தான் எடுக்க வேண்டும்) எடுத்துக் கொண்டு செல்லும் போது அது ஓர் எதிர்பாராத வளைவில் ஒருவர் மீது மோதி அவர் மீது (சற்று) அபிஷேகம் ஆகி விட்டது. நான் சொன்ன SORRY அவருக்கு போதவில்லை போலும். முறைத்துக் கொண்டே சென்றார். என்ன தான் SORRY சொல்வதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் நாம் SORRY மற்றும் THANK YOU இவற்றை அடிமனதில் எதிர்பார்க்கத்தான் செய்கிறோம். 'மாடு மாதிரி இடிச்சுட்டு ஒரு சாரி கூட சொல்லாம போறானே' என்று நாள் முழுவதும் புகைந்து கொண்டே இருப்போம். ஆனால் நாம் அம்மாவின் காலை தெரியாமல் மிதித்து விட்டால் சாரி சொல்வோமா? தலைவலியாக இருக்கும் போது மனைவி காப்பி போட்டு எடுத்து வந்தால் நன்றி சொல்வோமா? (சில பிறவிகள் சொல்வார்கள்!) நமக்கு மிக நெருக்கமானவர்களிடம் இந்த வார்த்தைகள் அர்த்தம் அற்றுப் போகின்றன. இது ஏன் என்றால் அவர்களிடம் நம் நன்றியையும் மன்னிப்பு கேட்பதையும் வேறுவகையில் நிரூபிக்க நிறைய சந்தர்ப்பங்கள் வாழ்வில் இருக்கின்றன. ஆனால் முகம் தெரியாத ஒரு புதியவரை இடித்து விடும் போது உடனே சாரி சொல்லி உனக்கும் எனக்கும் எல்லாம் முடிந்து விட்டது வேலையைப் பார்த்துக் கொண்டு போ என்று சொல்லாமல் சொல்கிறோம்! இந்த .டி. கம்பெனிகளின் தாரக மந்திரம் 'கஸ்டமர் கடவுள்' என்பது. கஸ்டமர் ஒரு சின்ன உதவி செய்தாலும் THANK YOU என்று வழிய வேண்டும். தவறு அவனிடமே இருந்தாலும் நாம்தான் SORRY கேட்க வேண்டும்........

3
==

இப்படி அடிமையான தங்கக்கூண்டு கிளி போன்ற ஐ.டி.வாழ்க்கை தேவை தானா என்று அடிக்கடி யோசிக்கிறேன். பாரதியார் போல உலகம் பெரியது உன்னை நம்பியா நான் இஞ்சினியரிங் படித்தேன் என்று உதறி விட்டு ஓடி விடலாம் என்று சில சமயங்களில் தோன்றும்.ஆனால் மாதம் ஒன்றாம் தேதி ஆனதும் அது சமர்த்தாக நம் அக்கவுண்டில் போடும் கணிசமான சம்பளத்தைப் பற்றிய நினைப்பு முதலில் நினைத்ததை கான்சல் செய்து விடும். இந்த ஐ.டி யைப் பற்றி ஏராளமான ஜோக்குகள் நெட்டில் குவிந்து கிடக்கின்றன.பி,எம் என்று பிரதமர் லெவலுக்கு பில்ட்-அப் கொடுக்கப்படும் ப்ராஜெக்ட் மானேஜர்களை ஜோக்குகளில் வெளுத்து வாங்குகிறார்கள்.குறிப்பாக கஸ்டமர் சப்போர்ட் ஜோக்குகள். ஒரு பெண்மணி கஸ்டமர் கேருக்கு போன் செய்து "ஹலோ என் கம்ப்யூட்டர் Cannot find the printer என்று சொல்கிறது. பிரிண்டரை கஷ்டப்பட்டு தூக்கி அதன் முன்னே காட்டினாலும் கூட
Cannot find the printer என்கிறது" என்று சொன்னாளாம்.இன்னொருத்தர் கால் செய்து தன்னால் ஒரு மெயில் அட்ரஸ் ஐ டைப் செய்ய முடியவில்லை என்றாராம். அதாவது அவருக்கு கீ போர்டில் a தெரிகிறதாம். அதைச் சுற்றி ஒரு வளையம் போடுவது எப்படி என்று தெரியவில்லையாம்.இன்னொருவர் கதை இப்படி போகிறது

.: ஹலோ, கஸ்டமர் சப்போர்ட்
இவர்: ஹலோ நான் எதை டைப் செய்தாலும் அது திரையில் வருவதில்லை
.: உங்கள் கீ போர்டு வேலை செய்கிறதா ?
இவர்: செய்கிறது. காலையில் கூட என் மகள் அதில் டைடானிக் மியூசிக் வாசித்தாள்
.: அது இல்லை சார், உங்கள் கணிப்பொறி கீ போர்டு..நீங்கள் டைப் செய்வது
இவர்: வேலை செய்கிறது. நான் ஒரு கீயை அழுத்தினால் அது உள்ளே போகிறது.
.: அது உங்கள் CPU உடன் இணைக்கப்பட்டு உள்ளதா?
இவர்: சி.பி.யூ என்றால்?
.: செவ்வக வடிவில் ஒரு பெட்டி இருக்குமே? உங்கள் கீ போர்டு அதில் ஒரு ஒயரின் மூலம் இணைக்கப்பட்டு உள்ளதா?
இவர்: இங்கே நிறைய ஒயர் இருக்கிறது . என்னால் பார்க்க முடியவில்லை.
.: உங்கள் கீ போர்டை கையில் எடுத்துக் கொண்டு பத்தடி பின்னே நகருங்கள்
இவர்: ஆயிற்று
.: உங்கள் கீபோர்ட் உங்களோடு வந்ததா?
இவர்: இல்லை..
.: சரி நான் ஒருவரை அங்கே அனுப்புகிறேன்
இவர்: அது வரை நான் என்ன செய்வது..
.: On -screen கீபோர்ட் உபயோகியுங்கள்..உங்கள் மவுஸ் மூலம் ஸ்டார்ட் கிளிக் செய்யுங்கள்.
இவர்: ஸ்டார்ட் எங்கே இருக்கிறது தெரியவில்லை.
.: இடது பக்க கீழ் மூலையில்
இவர்: எனக்கு இடது பக்கமா? உங்களுக்கா
.: உங்களுக்கு
இவர்: எனக்கு இடது பக்க மூலையில் குப்பைத் தொட்டி தான் இருக்கிறது
.: உங்கள் கம்ப்யூட்டர் திரையில் பாருங்கள் சார்.
இவர்: திரை கருப்பாக இருக்கிறது
.: உங்கள் மானிட்டர் ஆன் செய்யப்பட்டுள்ளதா?
இவர்: அது எனக்கு எப்படித் தெரியும்?
.: உங்கள் மானிட்டரின் கீழே பச்சை விளக்கு எரிகிறதா?
இவர்: இல்லை.
.: மானிட்டரின் சுவிட்சை போடுங்கள்.
இவர்: ஆயிற்று
.: இப்போது திரை தெரிகிறதா
இவர்: இல்லை.. ஒரு நிமிடம்..வீட்டில் கரண்ட் இருக்கிறதா என்று பார்த்து விட்டு வருகிறேன்.
. மயங்கி விழுகிறார்

இப்போது தெரிகிறது. ஏன் கால் சென்டரில் வேலை செய்பவர்களுக்கு அதிக சம்பளம் என்று. சரி என்ன ஆனாலும் ஆகட்டும்

4
==

இன்னும் ஒரு மாதத்தில் BANK EXAM வருகிறதே? அதை எழுதி எப்படியாவது கவர்ன்மென்ட் ஜாபில் நுழைந்து விடலாம்(ஹையா பென்ஷன் வரும்!) என்று அதற்கு அப்ளை செய்திருக்கிறேன். ஆனால் அதற்கு படிக்க வேண்டியதை நினைத்தால்தான் அடிவயிற்றில் பயமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் கட்டுரை எல்லாம் பக்கம் பக்கமாக
எழுத வேண்டுமாம்(தலைப்பு அமெரிக்க சந்தை வீழ்ச்சி இந்திய பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும்?
:-( . தமிழிலேயே நமக்கு சுமாராக தான் எழுத வருகிறது. இந்த லட்சணத்தில் இங்கிலிபீசில் எழுத முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. அதை விடுங்கள். ரண்டு ரயில்கள் ஒன்றை ஒன்று கடந்து போக எத்தனை நேரம் எடுத்துக் கொள்ளும், நாலு பேர் ஒரு வேலையை மூன்று நாளில் செய்தால் ஐந்து பேர் எத்தனை நாளில் செய்வார்கள் என்றெல்லாம் (வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமான) கேள்விகள். (வங்கிக்கும் ரயிலுக்கும் என்ன சம்பந்தமோ?) ஒரு கட்டத்துக்கு அப்புறம் இந்த மாதிரி பாடங்களைப் படிக்க வாழ்க்கையில் ஆர்வம் இருப்பதில்லை தான். பொது அறிவு கேள்விகள் வேறு இருக்கிறது. இந்த வருடம் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் சாம்பியன் யார்? (யாராக இருந்தால் எனக்கு என்ன?அவனுக்கு நான் கடன் கொடுத்திருக்கிறேனா என்ன) உலக சுற்றுசூழல் தினம் எப்போது (நமக்கு நாம் பிறந்த நாளே சில சமயம் மறந்து விடுகிறது) என்றெல்லாம் . சரி இந்தியா முழுவதும் எத்தனை பேர் இந்த தேர்வை எழுதுகிறார்களோ..எத்தனை பேர் எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்களோ? எத்தனை பேர் இரவு டீ குடித்துக் கொண்டு கண்விழித்து ரயில் பஸ் ஏரோப்ளேன் ஃபார்முலா எல்லாம் மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறார்களோ? நான் இங்கே ஆபீஸ் வேலை கூட செய்யாமல் உட்கார்ந்து சின்சியராக லைடாஸ்கோப் எழுதிக்கொண்டிருக்கிறேன்! 'என் புருஷனும் சண்டைக்கு போனான்' என்ற கதையாக போய்
ஏதோ எழுதிவிட்டு வரலாம் என்று இருக்கிறேன். நெகடிவ் மார்க்கிங் வேறு இருக்கிறதாம். டேய் மண்டையா! தப்பு என்றால் தப்பு என்று அடித்து விட்டு அடுத்த கேள்விக்கு போ! அது என்ன நெகடிவ் மார்க்? என்ன ஒரு கொலை வெறி!




5
==
ஒரு வரைபடம்.(நன்றி: http://graphjam.memebase.com/)





6
==
ஒரு கவிதை

பேருந்தில் எனக்கு முந்தைய இருக்கையில்
நிறைய பேர் உட்கார்ந்தார்கள்
முழுக்கை சட்டை போட்டு கழுத்து வரை பட்டன் போட்ட ஆசாமி -பின்னர்
காதில் -
பாட் மாட்டிய ஓர் இளைன்
சில்லறை தரவில்லை என்று சண்டை போட்ட
மஞ்சள் சட்டை போட்ட அந்த பெரியவர்
கனமான பையுடன் ஏறிய
அழுக்கு லுங்கி கட்டிய ஒரு ஆள்
'I hate Monday ' என்ற வாசகம் கொண்ட
கருப்பு டி-ஷர்ட் அணிந்த மாணவன்
குமுதம் படித்துக் கொண்டு வந்த அந்த மொட்டைத் தலை

பேருந்தில் எனக்கு முந்தைய
இருக்கையில்
நிறைய பேர் உட்கார்ந்தார்கள்
அந்த இருக்கை மட்டும் அப்படியே இருந்தது!-சமுத்ரா

7
==
ஓஷோ ஜோக்

பள்ளி ஒன்றில் ஒரு நாள் ஆசிரியை பையன்களைப் பார்த்து 'இங்கே யாராவது எப்போதாவது ஒரு உயிரைக் காப்பாற்றி இருக்கிறீர்களா? என்றாள்

லிட்டில் ஹெர்னி கை தூக்கி 'நான்' 'நான்' என்றான்...

'ரொம்ப சந்தோஷம் ஹெர்னி ' யார் அது? என்றாள் ஆசிரியை

'அது என் அக்கா பையன் ' என்றான் ஹெர்னி

அப்படியா 'எப்படி? அவன் தண்ணீரில் விழுந்து விட்டானா? அவனை எப்படி காப்பாற்றினாய்?'

'அதெல்லாம் ஒன்றும் இல்லை டீச்சர் ஒரு நாள் நான் அக்காவின் கருத்தடை மாத்திரைக்கு பதிலாக வைட்டமின் மாத்திரையை மாற்றி வைத்து விட்டேன்!


முத்ரா

14 comments:

adhvaithan said...

vaarthaigalukkulla ivalo irukka.. arumai ah yosikkareenga...

ஷர்புதீன் said...

http://rasekan.blogspot.com/2011/02/blog-post.html

முத்ரா... அநேகமாக மேல உள்ள லிங்கை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் - தலைவருடையது !

கலைடாஸ்கோப் வழக்கம் போல் அருமை! எளிமையான விஷயத்தை இன்னும் எளிமையாக சொல்லும் கலை உங்களுக்கு அருமையாக வருகிறது . பாங்க உத்தியோகம் கிடைக்க வாழ்த்துக்கள்

Chitra said...

Good post? - YES

Boring post? - NO

:-)

rajamelaiyur said...

Very detailed post . . . Thanks

Mohamed Faaique said...

வழமை போல சூப்பர் போஸ்ட். ஓசோ ஜோக் அருமை.
என்னதான் இருந்தாலும், கவர்மெண்ட் வேலை`ல உள்ள சொகுசே தனிதான்... முக்கியமாக விடுமுறை

சாந்தி மாரியப்பன் said...

செம கலக்கல் தொகுப்பு..

bandhu said...

எனக்கு என்னவோ May Be இருக்கு என்று தோன்றுகிறது. (நான் நல்லவனா. May Be. ) sorry சொல்வது மிக எளிதாக இருப்பதால் ஏறக்குறைய எல்லா அர்த்தத்தையும் இழந்துவிட்டது, நம்ம ஊரில். அமெரிக்காவில் இன்னும் அதை சொல்வதற்கு பெரிய அளவு யோசிக்கிறார்கள், அனாவசியமான விஷயத்தில் சொல்வதற்கு.

HVL said...

YES-NO நன்றாக இருந்தது. அதே போல ஐ.டி ஜோக்கும்.

சமுத்ரா said...

Thanks to all...

G.M Balasubramaniam said...

வாழ்க்கையில் சுகமான ( ? ) பொறுப்புகளை சுமக்கத் தயாராகி விட்டீர்களா? Answer -YES OR NO.

அப்பாதுரை said...

சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள். ஓஷோ ஜோக்கும் தேவலாம்.

Jayadev Das said...

எல்லாக் கேள்விகளுக்கும் எப்போதும் Yes or No பதிலையே சொல்ல முடியாது. உதாரணம்: "நீங்கள் உங்கள் மனிவியை அடிப்பத்தை நிறுத்தி விட்டீர்களா?" இதற்க்கு ஆமாம் என்றோ, இல்லை என்றோ எந்த பதிலைச் சொன்னாலும் மனைவியை அடித்த குற்றத்தை ஒப்புக் கொண்டு மாட்டிக் கொள்ள வேண்டிவரும். [இது "யார் மனசில யார்" ப்ரோகிரம்ல பங்கேற்ற ஒருத்தர் சொல்லி கேட்டேன். ஹி...ஹி..ஹி...]

Jayadev Das said...

\\வங்கிக்கும் ரயிலுக்கும் என்ன சம்பந்தமோ?
யாராக இருந்தால் எனக்கு என்ன?அவனுக்கு நான் கடன் கொடுத்திருக்கிறேனா என்ன?
அது என்ன நெகடிவ் மார்க்?\\ இவையெல்லாம் நேரடியாக உங்கள் திறமையை பரிசோதிக்காத மாதிரி தெரிந்தாலும், நீங்கள் செய்யப் போகும் பணியில் நீங்கள் எவ்வளவு தகுதியானவராக இருப்பீர்கள் என்று அளவீடு செய்ய இந்தத் தேர்வுகள் உதவுகின்றன. அந்தத் தேர்வை நடத்துபவர்களும் தலையில் மசாலா உள்ளவர்கள்தானே!! அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் தானே அதை உருவாக்கியிருக்கிறார்கள்! நிச்சயம் அதில் விஷயம் இல்லாமலா இருக்கும்?

Jayadev Das said...

\\அந்த இருக்கை மட்டும் அப்படியே இருந்தது!-சமுத்ரா\\ கவிதை புரியலையே???!!!