இந்த வலையில் தேடவும்

Wednesday, March 2, 2011

கண்ணப்பன் கதை!


சிவராத்திரி ஸ்பெஷல்..

இலை அமரும்
கிளை ஒன்று
மழை அமரும்
முகிலை முட்டும்
மரங்கள் அடர்ந்த காடு
அந்தக் காடு தான் -நம்
கதாநாயகன் வீடு

அவன் பெயர் கண்ணப்பன்
கண்ணப்பனுக்கு அப்பன்
அந்த விண்ணப்பன்
தென்னப்பன் என்று
தேவாரம் புகழும்
மண்ணப்பன்!

இவன்
அடவி விலங்கை
அம்பால் அடிப்பவன்
இருந்தாலும் அடியவர்
பிறவி விளங்கைப்
பிய்க்கும் பரமனின்
அன்பால் துடிப்பவன்

புலி உலவும் காட்டில் வாழ்ந்தாலும்-இவன்
அம்புலி உலவும் ஐயனை மறவான்
கரி உலவும் காட்டில் அலைந்தாலும் -இவன்
சங்கரி உலவும் மெய்யனை மறவான்

இவன்
மானை அடித்தாலும்
மானைப்
பிடித்தவன்
மகிமை
யை மறக்கவில்லை
முயலைப் பிடித்தாலும்
முயலை மிதித்தவன்
மேன்மை
யை மறக்கவில்லை

ஒரு நாள் கண்ணப்பன்
தன் சாகாக்களுடன்
பன்றி ஒன்றை துரத்திப் போனான்
பன்றியோ
அகப்படாமல் போக்குக் காட்டியது
அவன் நாக்கு
எனக்கு நீர் தர மாட்டாயா
என்று
மேலண்ணத்தில் போய்
தூக்கு மாட்டியது

ஒரு கட்டத்தில்
பன்னி வேண்டாம்
தண்ணி போதும் என்று
நீர் தேட மூவரும் விளைந்தனர்.
தண்ணீர் தேடி தாள் நோக
அலைந்தனர்...

தூரத்தில் ஒரு குன்று
தென்பட்டது
அங்கே 'பொன் முகலி' ஆறு
இருப்பதாக நாணன் சொன்னதும்
அவர்கள் தாகம்
பாதி போய் விட்டது

தாகம் தீர்ந்து திரும்பும் வழியில்
திருக்காளத்தி மலை வந்தது
அதை நோக்கிச் செல்கையில்
கண்ணப்பன் மனதில்
இனம் புரியாத உணர்வொன்று தோன்றி
மனம் நிறைந்து
மகிழ்வைத் தந்தது

குன்றின் உச்சியில் -சிவன்
கோவிலொன்று இருந்தது
கோவிலின் உள்ளே
சிவலிங்கம் ஒன்று தனிமையில்
தவம் பூண்டிருந்தது

அதைக் கண்டதும்
அடியவனுக்கு அன்பு பொங்கியது

அய்யா
உம்மைக் கவனிப்பார் இல்லையா?
ஆனை உலாவும் மலையில்
உம்மை
அம்போ என்று விட்டுவிட்டு
அம்பிகை
அப்பன் வீடு போனாளா?

உலகின்
உறுபசி தீர்க்கும் உந்தன்
சிறுபசி தீர்க்க இங்கோர்
சீவனும் இல்லையா?

காலாடை அணிந்த
காசினி காக்கும் நீர்
மேலாடை இன்றி
மேனி நடுங்கவா ?

குளிர் அடித்தால்
சாம்பலைப் பூசிக் கொள்ளட்டும் என்றார்களா?
கங்கை சுமந்த தலைமேல்
மழை பொழிந்தால் என்ன என்று
மேற்கூரை கட்டாது விட்டார்களா?

உன் மைத்துனன் அங்கே
பாற்கடலில்
பாம்பின் மேல் படுத்திருக்க
நீர் இங்கு
பாம்புகளுடன் படுத்திருப்பதா?
பிரம்மன்
தாமரை மலர் மேல் வாசம் செய்ய
நீர் இங்கு
முட்களின் மீது மவுனித்திருப்பதா?

உடனே
கண்ணப்பன் செயலில் இறங்கினான்
மகேசனுக்குப் பசிக்கும்
முதலில் நல்ல
மாமிசம் சமைக்கலாம் என்று மனத்தில் இயம்பினான்

பன்றி ஒன்றை
வேட்டையாடி
அதன் சதையைக்
கரத்தில் நிரப்பினான்
'பொன் முகலி' நதிக்குச்
சென்று அதன்
நீரை உறிஞ்சி
வாயில் நிரப்பினான்
காட்டு மலர்களைக் கொய்து
தன் முரட்டு மண்டையில்
முடிந்து கொண்டான்

கோவில் திரும்பி
சிவன் தலையில் இருந்த
பழைய மலர்களை-செருப்புக்
காலால் தள்ளினான்
தன் சாமிக்குச்
சேவை செய்யும் பேறை
எண்ணி
சந்தோஷத்தில் துள்ளினான்

தன் வாய்நீரை
லிங்கத்தின் மேல் துப்பினான்
கையில் வழிந்த ரத்தத்தை
திலகம் போல் அதன்
நுதலில் அப்பினான்

தான் முடிந்து வந்த மலர்களைத்
தன்
தலைவனுக்கு முடிந்தான்
பன்றி இறைச்சியை-கொஞ்சம்
தின்று பார்த்து விட்டு
பரமனுக்கு நிவேதனம் செய்தான்

நெடுச்சா
ண் கிடையாக
நீல கண்டன் முன் விழுந்தான்
'தேவா நீயே கதி' என்றுரைத்து
தூசி தட்டாது எழுந்தான் !


அவன் சகாக்கள்
அவனுக்கு சித்தம் கலங்கி விட்டது
என்று எண்ணினர்!

ஆனால் அன்று தான்
அவன் சித்தம் தெளிந்திருந்தது
ஆம்
ஆண்டவன்
அன்புக்கன்றோ மயங்குவான்!
ஆடம்பரம் காட்டி
ஆண்டவா என்றால்
நம்மை நோக்கி ஓர்
அடிவைக்கவும் அவன் தயங்குவான்

கொடிய மிருகங்கள்
கடவுளைத் தாக்கலாம் என்பதால்
இரவு முழுதும்
வில்லேந்தி
காவலுக்கு நிற்பதாய்க்
கண்ணப்பன் முனைந்தான்
காவலுக்கே காவலா என்று
கைலாச நாதன்
தன் இதழ்க் கடையோரம்
ஒரு புன்னைகையை உதிர்த்தான்!

ஆம்
அவன் விளையாட்டை
ஆறறிவு இருந்தாலும்
ஆர் தான் அறிவார்?


அடுத்த நாள்
அதிகாலையில்
வேட்டையாடிவிட்டு விரைவில் வருவேன் என்று
கண்ணப்பன் நகர்ந்தான்

அப்போது-

அந்தக் கோயிலின்
அர்ச்சகர்
ஒன்றும் அறியாதவராய்
உள்ளே நுழைந்தார்
அங்கு கிடைத்த
காட்சியைக் கண்டு
உள்ளம் நடுங்கி
நிலை குலைந்தார்

அபச்சாரம்
நிகழ்ந்து விட்டதாய்
அழுதார்
மன்னிக்க வேண்டும் என்று
மகேசனை
மருகித் தொழுதார்

பஞ்சாமிர்தம்
படைக்க வேண்டிய உனக்கு
பன்றி இறைச்சியா?
வில்வப் பூக்களுக்கு பதில்
வனப் பூக்களா?

இந்தப்
பாவச் செயலைச் செய்யும்
புல்லன் யார் என்று
மறைந்திருந்து பார்ப்பதாய்
முடிவு பண்ணினார்
அவனை அங்கேயே
அடித்துப் போடவேண்டும் என்று
ஆவேசமாய் எண்ணினார்

வழக்கம் போல
கண்ணப்பன் வந்தான்
தான் கொண்டு வந்திருந்த
இறைச்சியை
நீலகண்டனுக்கு
நிவேதனமாய்த் தந்தான்


பாவம் அந்தணர்
வேடனின் வில்லையும்
வேலையும் கண்டு
மனதிற்குள் அஞ்சினார்
இந்த அவசெயலைப்
பொறுக்கும் படி
அரனிடம் கெஞ்சினார்

அன்றிரவு
அய்யன்
அந்தணர் கனவில் தோன்றினான்
கண்ணப்பன் பக்தி
கடலினும் பெரியது
என்பதை அவர் கருத்தில் ஊன்றினான்

நாளை நடக்க இருப்பதை
மறைந்திருந்து பார்க்கும் படி
திருவாய் மலர்ந்தான்
பின்
அருவாய் மறைந்தான்!

ஆம் அடுத்தநாள்
கண்ணப்பன்
பக்திக்கு ஒரு சோதனை!


வழக்கம் போல
வாயில் நீர் நிரப்பிக்
கையில் ஊண் நிரப்பி
தலையில் மலர் நிரப்பி
பூசை செய்ய
ஆசை கொண்டு
கண்ணப்பன் வந்தான்
நொடிக்கு நொடி
நமசிவாயா ! எந்தாய்! என்றான்

வழக்கம் போல்
இறைச்சியை சுவைத்துப் பார்த்து
'சாப்பிடு சாமி' என்றான் !
கயிலை நாதன்
கனக மேனியைக் கண்டு
காயம் மறந்து நின்றான்

சிவ லிங்கத்தில்
அதுவரையில்
கருணையைச் சுரந்து கொண்டிருந்த
கண்களில் ஒன்று
குருதியைச் சுரந்தது!

ஆம்
லிங்கத்தின் கண்களில்
குருதி வெளிப்பட்டு விரைந்தது!
இதைப் பார்த்த
கண்ணப்பன் இதயத்தில்
குருதி திடுக்கிட்டு உறைந்தது

ஐயோ சாமி
உன் கண்ணில் கண்ணீர் வடிந்தாலே
எனக்கது கலவரம்
செந்நீர் வடிகிறதே
சொல்லாயோ நிலவரம்


அய்யா
இறைச்சி நன்றாய் இல்லையா?
என் சதையைக் கீறித்
தரவா?
நான்
உமிழ்ந்த தண்ணீர் உனக்கு
உபத்திரம் தந்ததா?
என் குருதியால்
உன்னைக் குளிப்பாட்டி விடவா?

ஐயா ஏழை நான்
என்ன பாவம் செய்தேன்
ஏன் உன் விழி சிவந்தது?

கண்ணப்பன் செய்வதறியாது
அரற்றினான்!
தரையில் விழுந்து
புரண்டான்!

உடனே ஓடிப்
போய்
காட்டுப் பச்சிலைகளைப்
பறித்துக் கைகளில் ரொப்பினான்
கல்லில் அரைத்துக்
கடவுளின் கண்ணில் அப்பினான்

ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது

தன் ஆடை கிழித்து
ஆண்டவன்
கண்களில் கட்டினான்
முரட்டுக் கைகளால்
மகேசன்
முகவிழி ஒற்றினான்..

ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது

ஏதோ ஒரு
முடிவெடுத்தவனாக
வேடன் தன் கூரிய
அம்பை எடுத்தான்
தன் விழியைத் தோண்டி
வலியை மறந்து
அதை
வில்வப் பிரியனுக்குக் கொடுத்தான்

கண்ணப்பன்
விழி இருந்த குழியில்
ரத்தம் வடிந்து கொண்டிருக்க
இப்போது
தென்னப்பன் விழியில்
ரத்தம் நின்று விட்டிருந்தது

கண்ணப்பன்
வலி மறந்து கூவினான்
மூன்று கண்ணன் முன்
ஒற்றைக் கண்ணன்
உவகை பொங்கக் கூத்தாடினான்

ஈசனுக்கு
இரக்கமில்லை போலும்!
அவன் இன்னொரு
கண்ணிலிருந்து இப்போது
குருதி வடிந்தது!
கண்ணப்பன் இதயம் இடிந்தது

அய்யா இது என்ன
சோதனை?
அடியவனுக்கு ஏன்
வேதனை மேல் வேதனை

கண்ணில் குருதி வடியும்
அளவு நான்
குரூரக் காரனா?
வேல் பிடித்த நான் உன்
தாள் பிடித்தல் பாவமா?

புலம்பினால் ஆகாது என்று
எழுந்து நின்றான் வேடன்
தன் இதழில் இருந்து
ஒரு புன்னகைப் பூவை உதிர்த்தான்
கைலாய நாடன்!

தன் செருப்பணிந்த காலால்
நெருப்பணிந்த கையன்
நீளக்கண்களில் அடையாளம் வைத்தான்...
அம்பு கொண்டு-தன்
அடுத்த கண்ணைப் பிய்த்தான்

அப்போது
'நில் கண்ணப்பா நில்' என்று
ஓர்
அசரீரி ஒலித்தது!
அதைக் கேட்டு
காற்றுக்கே காது வலித்தது!

ஆம்
காம்போதிப் பிரியன்
கண்ணப்பனை ஆட்கொண்டான்
கண்ணப்ப நாயனாரும்
கைலாய நாடேகி
கணங்களில் ஒன்றாகக் கலந்தான்...

கண்ணப்பன் புகழ் பாடுவோம்
கண்ணப்பனைத் தடுத்தாட்கொண்ட
தென்னப்பன்
காளை ஏறும் சம்புவை நம்
கருத்தில் ஏற்றி
அர அர மகாதேவா என்று
அகம் மகிழ்ந்து ஆடுவோம்!

இந்த இரவு
இந்துவை தரித்தவன் இரவு !
இன்பனை எரித்தவன் இரவு!
காலனை உதைத்தவன் இரவு!
ஆலம் வேண்டி உண்ட
அரனின் இரவு!


இந்த இரவில்
ஈசனைப் பாடுவோருக்கு வருமோ
மறுபடி
இந்த
மண்ணுலகின்
உறவு?


சமுத்ரா

9 comments:

Chitra said...

பாராட்டுக்கள்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////////உலகின்
உறுபசி தீர்க்கும் உந்தன்
சிறுபசி தீர்க்க இங்கோர்
சீவனும் இல்லையா?

காலாடை அணிந்த
காசினி காக்கும் நீர்
மேலாடை இன்றி
மேனி நடுங்கவா ?///////

அருமையான வர்ணனை
சிவனுக்கு பணிவிடை சீவன்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்கள் கவிதை நடை ஐயா வாலி அவர் களின் நடையை ஒத்து இருந்தது..(அவதார புருஷன்)
சிவராத்தியில் காளஅஸ்தி சிவனின் வரலாரை தெரிந்துக் கொண்டேன்..

பெரியதாக இருந்தாளும் எங்கும் தோய்வு இல்லை..
வாழ்த்துக்கள்..

ஹேமா said...

வனக்கம் சமுத்ரா.இன்றுதான் உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.அருமையான கவிதைகள்.வாழ்த்துகள்.

சிவராத்ரிக்கும் கண்ணப்பநாயனார் கதைக்கும் தொடர்பு இருக்கிறதா?உண்மையில் தெரியவில்லை !

ஆனந்தி.. said...

wow..wow..wow....fentastic...:)

ஆயிஷா said...

அருமையான கவிதைகள்.வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான கவிதை.வாழ்த்துகள்.

ரிஷபன் said...

அழகு தமிழில் நீரோடையாய் கவிதை.. மிக மிக ரசித்தேன்..

Anonymous said...

பாராட்டுக்கள்!