இந்த வலையில் தேடவும்

Wednesday, March 16, 2011

பீட்டா(சயின்ஸ் ஃபிக்சன் சிறுகதை)


நான் உள்ளே நுழையும் போது பாஸ் படு பிசியாக இருந்தார்.நான் உள்ளே நுழைந்தது கூட அவருக்குத் தெரியவில்லை..

ஒரு சாணிப் பேப்பரில் பூச்சி பூச்சியாகக் கணக்கெல்லாம் போட்டுக் கொண்டிருந்தார். திடீரென என்னைக் கவனித்து அவசர அவசரமாக நோட்டை மூடினார்..

நான் "குட் மார்னிங் பாஸ்" என்று கூறி விட்டு "கவலைப் படாதீங்க பாஸ், இந்த சைன் தீட்டா, காஸ் தீட்டா எல்லாம் எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது" என்றேன்..

பாஸ் என்னை முறைத்தார்.இப்போதெல்லாம் மிகவும் டென்ஷனாக இருக்கிறார்..நேரத்திற்கு சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை போலிருக்கிறது. அவரை பார்ப்பதற்கே பயமாக இருந்தது.மூன்று நாளாக தூக்கம் இல்லை போலிருக்கிறது. அவரிடம் நான் "பாஸ், நீங்க யாரு , modified M theory ப்ரபோஸ் பண்ற அளவு ஒரு இன்டர்நேஷனல் பிசிஸ்ட் ...நீங்க போயி ஒரு பொண்ணுக்காக டைம் டிராவல் அது இதுன்னுட்டு"

"சுந்தர், அவளை வெறுமனே பொண்ணுன்னு சொல்லாதே, அவள் வேதியியல் மின்சாரம் ஒடிய என் நரம்புகளில் வாழ்வியல் மின்சாரம் ஓடச் செய்தவள்..என் இதயத்து நரம்புகளை தந்திகளாக்கி இன்ப வீணை வாசித்தவள்" -பாஸ் வைரமுத்து லெவலுக்கு உளறிக் கொண்டிருக்க நான் குறுக்கிட்டேன்...

"போதும் பாஸ், பொதுவா விஞ்ஞானிகள் காதல்ல வீக்கு அப்படின்னு சொல்வாங்க..நீங்க என்னடான்னா கவிதையெல்லாம் எழுதறது கொஞ்சம் ஓவர்"

பாஸ் என்னைக் கூர்ந்து பார்த்து விட்டுத் தொடர்ந்தார் " விஞ்ஞானமும் காதலும் எதிரிகள் இல்லை சுந்தர்..In fact they nourish each other. ஐசக் நியூட்டன் ஒரு இளைஞனை உயிருக்கு உயிராகக் காதலித்தார் தெரியுமா?" என்றார்.

நான் புரியாமல் "என்ன பாஸ், இளைஞன்னா சொன்னீங்க ?" என்றேன்

"ஆமாம்...so what ? The subject is love..object does not matter" என்றார்

நான் கொஞ்சம் பயந்து போய் "இந்த விஞ்ஞானிகள் எல்லாம் கொஞ்சம் டேஞ்சரான ஆசாமிகள் தான் பாஸ்" என்றேன்

"அது வெளிப்பார்வைக்கு..ஆனால் உண்மையில் அவர்கள் குழந்தை போன்றவர்கள்"

"ஓகே பாஸ் என்னிக்கு உங்கள் காலப்பயணம் நடக்கப் போகிறது?" என்று கேட்டு சப்ஜெக்டை மாற்றினேன்..எங்கே இன்னொரு கவிதையை ஆரம்பித்து விடுவாரோ என்று பயமாக இருந்தது..

"மோஸ்ட் ப்ராபப்லி இந்த சண்டே" என்றார்..

ஓகே இங்கே என் பாஸைப் பற்றி கொஞ்சம் சொல்கிறேன்.. ஐன்ஸ்டீனுக்கு அப்புறம் இவர் தான் ஜீனியஸ் என்று தயங்காமல் சொல்லலாம்..வருடத்தில் முன்னூறு நாட்கள் இயற்பியல் கருத்தரங்குகளுக்கு, ஆய்வு அறிக்கைகளுக்கு என்று தேசம் தேசமாகப் பறந்து கொண்டிருப்பவர்..நான் இவரிடம் assistant ஆக சேர்ந்தது என் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்..ஆனால் இப்போதெல்லாம் வெளி உலகத்தில் இருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு ஒரு stupid டைம் மிஷினை மெனக்கெட்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.அது சாத்தியம் என்று நான் இன்று வரை நம்பவே இல்லை..ஆனால் என் பாஸுக்கு இருக்கும் அறிவுக்கு அவர் கண்டிப்பாக ஒன்றைக் கண்டுபிடித்திருக்கக் கூடும்..இவரை இப்படி பைத்தியமாக்கிய பெருமை 'பீட்டா' என்ற பெண்ணையே சாரும்..(ரீட்டா இல்லை..பீட்டா!) அவளை எங்கே எப்படி சந்தித்தாரோ தெரியவில்லை.அவள் ஒரு பிரபஞ்ச அழகியாம்.அழகி மட்டும் இல்லை..அறிவில் அவரையே மிஞ்சுவாளாம்..இயற்பியலில் பயங்கர ஈடுபாடு! 'இனம் இனத்தை சேரும்' என்பது போல எப்படியோ சந்தித்து இருவரும் காதலில் விழுந்து விட்டனர். ஆனால் துரதிஷ்ட வசமாக பீட்டா என் பாஸை அனாதையாக விட்டு விட்டு இறந்து போய் விட்டாள்..அவளை மீண்டும் காலத்தில் பயணித்து மீட்டு வருவதற்கு தான் இந்த கால இயந்திரமும் வருடக்கணக்கில் கடின உழைப்பும்..

சரி, பாஸிடம் கவிதை கேட்டது போதும் ..கொஞ்சம் டெக்னிகலாகக் கேட்டு தன்யனாகலாம் என்று முடிவெடுத்து "பாஸ், உங்க டைம் மெஷினை அப்படி எங்க தான் வச்சிருக்கீங்க ..காட்டக் கூடாதா ? அது என்ன பிரம்ம ரகசியம் ? " என்று கேட்டேன்

"யு ஆர் ரைட்.. பிரம்ம ரகசியம் தான்..இதை அந்த பிரம்மனுக்கே தெரியாமல் தான் செய்கிறேன்..இயற்கைக்கு அதன் விதிகளை மீறுபவர்களைக் கண்டால் பிடிக்காது" என்றார்.

"அப்புறம் ஏன் மீறனும்?"

"பீட்டா, பீட்டா , என் உயிர்-மலர்...என் சுவாசக்.."

"போதும் பாஸ், I need something technical"

"Ask me "

"ஏன் உங்க மஷினை ரகசியமா வச்சிருக்கீங்க"

"In order to keep the effect of environmental entropy minimum"

"புரியலை"

"புரியாத வரைக்கும் நல்லது"

"சரி..காலப் பயணம் சாத்தியமா..இல்லை சும்மா உடான்ஸா?"

"உனக்கு அதைப் பத்தி என்ன தெரியும்"?

"எனக்குத் தெரிந்த வரையில் கடந்த காலத்துக்கு போவது சாத்தியமே இல்லை..எதிர் காலத்துக்கு போவது வேண்டுமானால் ஓரளவு சாத்தியம்..மிக அதிக ஈர்ப்பு உள்ள ஒரு பொருள், say, கருந்துளை, அதன் விளிம்பில் அதாவது event horizon இல் இருக்கும் ஒருவருக்கு காலம் மெதுவாக நகரும்..அதாவது ஈர்ப்பு காலத்தை மெதுவாக நகர்த்தும்..அப்போது மற்ற இடங்களில் காலம் வேகமாக நகர்வதை வீடியோவில் FAST FORWARD மோடில் பார்ப்பது போல அவரால் அங்கிருந்து பார்க்க முடியும்.அவர் ஒரு வேளை அங்கிருந்து எஸ்கேப் ஆகித் திரும்ப வந்தால் அவர் எதிர்காலத்துக்குத் திரும்பி வருவார்.."

"ஹ்ம்ம் நீ சொல்வது சரி தான்"

"அப்படியானால் உங்கள் மெஷின் எந்தத் தத்துவத்தை வைத்து செயல்படுகிறது?"

"Guess "

"இயற்பியல், 'காலத்திற்கு' மூன்று அம்புகள் இருப்பதாகவும் , அந்த அம்புகளின் திசையை யாராலும் திருப்ப முடியாது ,அவை uni -directional arrows என்றும் சொல்கிறதே?"

"சொன்னவன் ஒரு முட்டாள்..அது சாதாரண அம்பு..ராமபாணம் என்றால் அது எதிரிகளை அழித்து விட்டுத் திரும்ப அவரிடம் எதிர்-திசையில் பயணித்து வந்து சேரும்"

"அப்படியானால் காலம் என்பது ராமனின், அதாவது கடவுளின் அம்பு " என்கிறீர்கள்..

"kind of ..சரி அந்த அம்புகள் என்ன என்ன என்று சொல் பார்க்கலாம்"

எனக்கு ரெண்டு தான் ஞாபகம் வந்தது..சரி சொல்வோம் என்று சொன்னேன்..

முதலாவது வெப்பவியல் அம்பு: அதாவது நம் பிரபஞ்சத்தில் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருவதாகச் சொல்கிறார்கள்..அந்த வெப்பம் அதிகரிக்கும் திசையில் காலம் உணரப்படுகிறது

இரண்டாவது பிரபஞ்ச அம்பு: நம் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே வருகிறது..அது விரிவடையும் திசையில் காலமும் நகர்கிறது

"மூன்றாவது " என்று கூறி கொஞ்சம் மழுப்பினேன்..

"சிம்பிள்" என்றார் பாஸ்...மனோவியல் ,சைக்கலாஜிகல் அம்பு..the arrow of cause and effect !"

"பாஸ், உங்களால நிஜமாவே இறந்த காலத்துக்குப் போக முடியுமா? அது எப்படிசாத்தியம்?" என்று மறுபடியும் கேட்டேன்..காசினி என்ன சொல்றார்னா, எதிர் காலத்துக்குப் போவது என்பது ஒரு ரயில் பயணம் மாதிரியாம் ..நீங்க சென்னையில் இருந்து டிரைனில் டெல்லிக்குப் போறீங்கன்னு வச்சுக்கங்க..நீங்க டிரைனுக்குள்ள வேகமா ஓடினா டெல்லி சீக்கிரமா வந்திடுமா ? இல்லை தானே ..it depends on the train..அது மாதிரி நாமெல்லாம் பிரபஞ்சம் என்ற விரிவடையும் டிரைனின் கைதிகள்..அதன் கால வேகம் என்னவோ அது தான் நம் வேகமும்...அதாவது one second per second...


"சொன்னவன் ஒரு இடியட்"

இந்த கர்வம் தான் அவரிடம் எனக்கு சில சமயங்களில் பிடிக்காதது..சில சமயங்களில் பிடித்ததும் கூட...பாஸ் தொடர்ந்தார்...

"சாத்தியம் தான்..கனவுல நாமெல்லாம் சர்வ சாதாரணமா இறந்த காலத்துக்குப் போறது இல்லையா?" என்றார்

"பாஸ், அது கனவுல!" என்றேன்

"ஒ, எது கனவு, எது நிஜம்னு பிரித்துப் பார்க்கக் கூடிய நிலையை நீ அடைஞ்சுட்டியா?" "ஈஷா உபநிஷத் இந்த பிரபஞ்சமே கடவுள் காணும் கனவு என்கிறது"..

"ஓகே ஓகே..உங்க கூட பேசி ஜெயிக்க முடியுமா, அப்படின்னா காலப்பயணம் என்பது கனவு மாதிரியா?" என்றேன்

"Not exactly ! சில விஷயங்களை நாம இயற்கைக்குத் தெரிந்து அதனுடன் அக்ரீமென்ட் போட்டுக் கொண்டு பண்ண வேண்டியிருக்கு ..சில விஷயங்களை அதற்குத் தெரியாமல் இயற்கையில் உள்ள loop -holes ஐப் பயன்படுத்திப் பண்ண வேண்டியிருக்கு..நான் பண்ணப் போவது அந்த மாதிரி ஒன்று தான் " என்றார்.

"சரி பாஸ், பீட்டாவை மீண்டும் கூட்டி வந்து என்ன செய்யப் போறீங்க"? என்று கேட்டேன்

"என்னது , மீண்டும் கூட்டிட்டு வர்றதாவது , நான் அவளைக் காப்பாற்றியதும் நாங்க மீண்டும் இந்த future -கு திரும்பி வர முடியாது..நாங்க இருவரும் வேறு PARALLEL UNIVERSE ல ஜாலியா இருப்போம்"

"குழப்பறீங்க பாஸ்"

"பெயின்மனின்(Feynman) தத்துவப்படி இந்த பிரபஞ்சத்துக்கு நிறைய இணையான வரலாறுகள் இருக்கலாம் ..அதில் எதில் வேண்டுமானாலும் வாழ்வதற்கு நமக்கு சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் இப்போது நாம்வாழும் இந்தப் பிரபஞ்சம் ..பீட்டாவைப் பறி கொடுத்து விட்டு நான் தனியாக இருப்பது ஒன்று ..இன்னொன்றில் நானும் அவளும் சேர்ந்து வாழலாம்..குழந்தை குட்டி பெற்றுக் கொள்ளலாம்..நான் இறந்த காலத்துக்குச் சென்று அவளைக் காப்பாற்றுகிறேன் என்று வைத்துக் கொள்ளலாம்..அப்படி செய்வதால் நான் பிரபஞ்சத்தின் entropy எனப்படும் உள்ளக வெப்பத்தை கண்டபடி alter செய்து விடுகிறேன்..அதனால் வெப்பவியக்கவியலின் விதிகள் நான் திரும்பி வருவதற்கு அனுமதிக்காது..நான் மாற்றிய entropy யை initial condition ஆகக் கொண்ட மற்றொரு உலகில் நாங்கள் வாழ வேண்டியிருக்கும்"

எனக்குத் தலை சுற்றியது.."அப்படின்னா பாஸ் உங்களை நான் இனிமே பார்க்க முடியாதா" என்றேன்

"எஸ்"

"பாஸ்..உங்க பீட்டா மேல உங்களுக்கு இவ்வளவு காதலா?"என்று வியந்தேன்..

"அவள் தான் என் வாழ்க்கை..உயிர்..அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்"

"சரி பாஸ், அவங்க எப்படி இறந்து போனாங்க?" என்று கேட்டேன்..அதை இது வரைக்கும் அவர் என்னிடம் சொன்னதில்லை..

"வெல்..பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் நாங்கள் ரெண்டு பேரும் ஒரு ஹில் ஸ்டேஷனுக்கு ஜாலி டூர் போயிருந்தோம்..அப்போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது..திரில் வேண்டும் என்று நாங்கள் ரெண்டு பேரும் மலை உச்சிக்கு நடந்து போனோம்...நன்றாக என்ஜாய் செய்தோம்..ஒரு உயரமான திண்டில் ஏறி நின்று கொண்டு என்னை டவுன் ஆங்கிளில் போட்டோ எடுக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள்...நான் மறுத்தேன்..எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் என் பிடியை விடுவித்துக் கொண்டு ஓடிப் போய் மேலே ஏறினாள்..போட்டோ எடுத்து விட்டுக் கீழே இறங்கும் சமயத்தில் எங்கிருந்தோ பூதாகாரமாக காற்று வீச ஆரம்பித்தது..அது அவளை அப்படியே கீழே தள்ளி என் உயிர் பீட்டா அதல பாதாளத்தில் உருண்டாள் " ..அவர் கண்கள் குளமாகி இருந்தன ...

"சரி விடுங்க பாஸ்,, அது தான் திரும்பவும் அவரை மீட் பண்ணப் போறீங்களே" என்றேன்

"அப்புறம் ஒரு request பாஸ், நானும் உங்க கூட வருகிறேனே.. எல்லாவற்றையும் சாட்சியாக இருந்து பார்கிறேன்..ஒரு passive observer ஆக..எதிலும் கலந்து கொள்ளாமல்..அப்படியானால் என்னால் மீண்டும் எதிர்காலத்திற்கு திரும்ப முடியும் தானே?" என்றேன்..என்னவோ அந்த பயணத்தில் நானும் பங்கு கொள்ள வேண்டும் என்ற ஆசை என்னுள் முளை விட்டிருந்தது..

நீண்ட நேர யோசனைக்குப் பின் பாஸ் அதற்கு சம்மதித்தார் ..நிறைய கண்டிஷன்களுடன்

"நீ கண்டிப்பாக ஒரு
passive observer ஆகத் தான் இருக்க வேண்டும்..எதையும் தொடக் கூட செய்யாதே...அது ஒரு கனவு என்பது போல தள்ளி நின்று பார்..பேசக் கூட செய்யாதே ..நீ ஒன் பாத்ரூம் போனால் கூட entropy யை மாற்றி விடுவாய் ஜாக்கிரதை" என்றெல்லாம்..

கடைசியாக அந்த ஞாயிற்றுக் கிழமை வந்தது..

"பாஸ் எந்த நேரத்துல போயி லேன்ட் ஆகப் போறோம்?" என்றேன்,..

"நானும் பீட்டாவும் மலை ஏறினோம் இல்லையா? ,,அந்த நேரத்தில்.."

"பாஸ், கொஞ்சம் முன்னதாகவே போய் உங்க டூர் ப்ரோக்ராமையே கான்சல் பண்ணி இருக்கலாமே" என்றேன் கொஞ்சம் பெருமிதத்துடன்..

"உளறாதே...நான் சொன்ன மாதிரி நாம் இயற்கையை ஏமாற்றி விட்டு தான் பயணம் செய்கிறோம்..முன்னரேயே போய் நாம் லேன்ட் ஆனால் நிறைய விஷயங்களை மாற்ற வேண்டி இருக்கும்..அப்போது இயற்கை entropy change ஐ வைத்துக் கொண்டு நாம் ஏதோ தில்லு முள்ளு செய்கிறோம் என்று அறிந்து கொண்டு விடும்..அப்புறம் ஒரு விஷயம் பீட்டாவின் கண்களில் நீ பட வேண்டாம்.."

"ஓகே பாஸ்"

எப்படி நான் எதிர்காலத்திற்கு திரும்பி வருவது என்ற வழிமுறையை பாஸ் எனக்கு ஒரு மணி நேரம் விளக்கினார்... "இந்த மெஷினை மீண்டும் பயன்படுத்த முடியாத படி பண்ணி இருக்கிறேன்..just one time use ..நானே நினைத்தாலும் அதை இன்னொரு முறை பயன்படுத்த முடியாது" என்றார்...பாவி பாஸ்!

ஒரு இருட்டான அறைக்குள் கூட்டிச் சென்று "இது தான் டைம் மெஷின் " என்றார்...படங்களில் வருவது போல பளபளப்பாக, கலர் கலர் ஒயர்களுடன், லீவர்களுடன், பட்டன்களுடன் , ஒரு எல்.இ.டி டைம் டிஸ்ப்ளே இதையெல்லாம் எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமாக இருந்தது..

கொஞ்ச நேரத்தில் (?) நான் பாஸையும் பீட்டாவையும் ஐம்பது அடி விட்டு பின் தொடர்ந்து கொண்டிருந்தேன்..பீட்டா பின்னாலேயே அவ்வளவு அழகாக இருந்தாள்...

"டார்லிங்..அங்கே போகணும்.." என்றாள் பீட்டா

"Are you mad or what ? Just stay here "

"இல்லை அங்கிருந்து down view பார்க்கணும்..உங்களை down view ல ஒரு போட்டோ எடுக்கணும்"

இப்போது நான் பீட்டாவின் அழகை முழுவதும் பார்த்தேன்...என் பாஸ் வருடக்கணக்கில் ஏன் மெனக்கெட்டு டைம் மெஷினைக் கண்டு பிடித்தார் என்பது இப்போது புரிந்தது..

எங்கள் ப்ளானின்
படி பீட்டா மேலே போவதற்கு ரொம்ப அடம் பிடித்தால் பாஸ் அவளை ஒரு அறை அறைந்து கையைப் பிடித்து இழுத்து கீழே அழைத்துப் போவதாக ஏற்பாடு..அதற்குப் பின்னர் அவர்கள் பாடு..அவர்கள் வேறு ஒரு parallel universe இல் சந்தோஷமாக இருப்பார்கள்..நான் திரும்பி வர வேண்டும்.ச்சே..எனக்கும் பத்து வருடம் முன்பு ஒரு ஆல்பாவோ , காமாவோ யாரோ ஒரு காதலி இருந்திருக்கக் கூடாதா?

பீட்டா அடம் பிடித்தாள்..let me go ...i can manage ..Just few seconds ..!

பாஸை ஒரு அறை விடுமாறு தூரத்தில் இருந்து நான் செய்கை காட்டினேன்..அவர் அதைக் கண்டு கொள்ளவில்லை..
பீட்டாவின் கையைப் பிடித்து இழுத்து 'வேண்டாம்' என்றார்.

அவள் திமிறினாள்...

ஏனோ அவள் கையை தானாகவே விடுவித்து 'ok be careful ' என்றார் பாஸ்...

'பாஸ், என்ன பண்ணறீங்க போய்க் காப்பாத்துங்க ?' என்று பதட்டமாக செய்கை செய்தேன் ஒரு மரத்தின் பின்னே மறைந்து கொண்டு..

ஒரு கல்லை எடுத்து அவர் மீது வீசலாம் என்று பார்த்தேன்...பின்னர் entropy வந்து பயமுறுத்தியதால் செய்யவில்லை..

பாஸ் ஒரு சுவர் மாதிரி அசையாமல் நின்று கொண்டிருந்தார்..அவர் முகம் இறுகியிருந்தது..

ஒரு பலமான காற்று வீசி
பீட்டா அந்தத் திண்டில் இருந்து அதல பாதாளத்தில் உருண்டாள்..

--

--

--

--

--

--

--

--

நானும் பாஸும் ஆபீசில் உட்கார்ந்திருந்தோம்..தேதி 01 -03 -2011

திரும்ப வந்து விட்டோம் என்று தெரிந்து கொண்டு பாஸிடம் நிதானமாகக் கேட்டேன்.."ஏன் உங்கள்
பீட்டாவைக் காப்பாற்றவில்லை?"

அவரிடமிருந்து ஒரு மௌனம் பதிலாக வந்தது..

"சொல்லுங்க பாஸ்...you are cruel !" என்றேன்..

"shut up ...I 'm Just practical ..நடந்தது நடந்த மாதிரியே இருக்கட்டும்..நீ என்னைக் கோழை என்று கூட சொல்லலாம்..it 's ok ..எனக்கு அந்த புதிரான Parallel universe இல் வாழ பயமாக இருந்தது..அங்கே என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? அந்த இணை உலகத்தில் பீட்டா என்னைப் பிடிக்கவில்லை என்று யாருடனாவது ஓடிப் போய் விடலாம்...என்னை ஏமாற்றி விடலாம்..ஏன் நான் கூட சீக்கிரமாக ஒரு லாரியில் அடிபட்டு செத்துப் போகலாம்..இப்போது நான் உலகம் அறிந்த ஒரு விஞ்ஞானி ...ஆனால் இந்த இடத்தை நான் அந்த இணை உலகத்தில் அடைந்திருக்க முடியுமா? இந்த புகழ், இந்த சொகுசான வாழ்க்கை....யாருக்குத் தெரியும்? நான் அவளால் ஏமாற்றப் பட்டு ரோட்டில் பிச்சக் காரனாகக் கூட அலையலாம்..பழக்கம் இல்லாத தேவதையைக் காட்டிலும் பழகின பேய் எவ்வளவோ மேலானது என்று சொல்வார்களே?...எனக்கு உண்மையான பீட்டாவை விட அவளது நினைவுகளுடன் இயல்பான இந்த உலகத்தில் வாழ்வது தான் உண்மையில் அழகானது என்று அந்த சமயத்தில் தோன்றியது "

உணர்ச்சி வசமாகப் பேசி முடித்தார்...

"சுந்தர், Will you let me alone ?" என்றார்

இனம் புரியாத ஒரு வித உணர்வுடன் நான் வெளியே வந்தேன்...


~முத்ரா

21 comments:

ரிஷபன் said...

நம்ப முடியாத கதையில் நம்புகிற மாதிரி முடிவு. கதை அலசல் விறுவிறுப்பு.. கடைசி வரை என்ன .. என்று எதிர்பார்ப்புடன் போனது..

தமிழ் உதயம் said...

நிச்சயம் ஒரு மாறுபட்ட சிறுகதை. வழக்கமாய் சொல்லப்படும் கால இயந்திர கதையில் இருந்து வேறுபட்டு. படிக்க சுவையாக இருந்தது.

எல் கே said...

நல்ல கதை பாஸ். வித்யாசம இருக்கு

கார்த்திகைப் பாண்டியன் said...

நிறைய டெக்னிக்கலாப் பேசியிருக்கீங்க.. நீங்க இன்ஜினியரா? நல்லா கொண்டு போயிருக்கீங்க..:-))

bandhu said...

வாத்யார் படித்திருந்தால் பெருமை பட்டிருப்பார்! கிரேட் ஸ்டோரி!

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலக சுஜாதா ஆக வாழ்த்துக்கள் சார்

சமுத்ரா said...

கார்த்திகைப் பாண்டியன், இஞ்சினியர் எல்லாம் இல்லை..
இந்த சுப்ஜக்டுல interest ...that 's it ..

Chan4k said...

அருமையான கதை.....சில சமயம் உரையாடல் போல தோன்றினாலும்....விறுவிறுப்பாக இருந்தது.....டெக்னிகல் விஷயங்கள் சுவாரசியம்....:)

ஆனால் கதையின் முடிவு வெறும் நெகடிவ் விஷயங்களை மட்டுமே பேசுகிறது....பீட்டா விட்டு போயிடுவாள், ஓடிபோயிடுவாள்...இது அந்த அழகான பாத்திரத்தின் தன்மையை கெடுக்கிறது.....அவரின் இந்த பெரிய முயற்சியே...அவள் மேல் உள்ள காதல்தான்...அது களங்கப்படுத்த படுகிறது என தோண்டுகிறது....அவரின் பயம் காரணமாக வந்துவிட்டேன் என்றால் நல்ல முடிவாக இருக்கும் என நினைக்கிறன்...

இது நிறைய பேரால் படிக்கப்பட வேண்டும்....குமுதம், விகடன் போன்ற பத்திரிக்கைகளுக்கு அனுப்பவும்....வாழ்த்துக்கள்...

எஸ்.கே said...

வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_5823.html

Nagasubramanian said...

சமுத்ரா, செம சூப்பருங்க. கிட்டத்தட்ட சுஜாதா கதைய படிச்சா மாதிரியான ஒரு திருப்தி. உங்க நகைச்சுவை உணர்வு, பல இடங்கள்ள (எனக்குப்) புரியாத சயின்ஸ், சிலப் பல தத்துவங்கள்.
கிரேட் !!!!

Unknown said...

great...innum padika villai..arumai thodarkiren..

Free Traffic said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

சிவகுமாரன் said...

ஏற்கெனவே சொன்ன மாதிரி அடுத்த சுஜாதா தான்

Pranavam Ravikumar said...

நல்ல கதை!நன்றி...வாழ்த்துக்கள்!

VELU.G said...

மிக அருமையாக டெக்னிக்கலாக சொல்லப்பட்டுள்ள கதை. SUPER

உங்கள் அணு அண்டம் அறிவியலை முதலில் இருந்து பொறுமையாக படித்து வருகிறேன். மிக அற்புதமான தொடர் அது. நானே அறைகுறையாகப் படித்து விட்டு கமெண்ட் போட்டிருக்கிறேன். அதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

கண்டிப்பாக அடுத்த பதிவில் (அ அ அ) என்னுடைய உண்மையா கமெண்ட் உண்டு. தொடருங்கள்

நன்றி

Prasanna said...

Superb :) Really enjoyed it..

adhvaithan said...

superr.....

நெல்லி. மூர்த்தி said...

அற்புதமான அறிவியற்தனமான கதைவளம். என்னதான் விஞ்ஞானியாக இருந்தாலும் அவனும் ஒரு சராசரி மனிதனின் மனம் படைத்தவன் என்பதினை இக்கதையின் முடிவு எதார்த்தமாக அமைந்துள்ளது. தங்களின் எழுத்து இன்னும் அதிகளவில் மக்களை சென்றடைய எப்போதும் தங்களிடம் கூறுவது போல் பிரபல தமிழ் ஊடகங்களை தொடர்புக்கொள்ளவும். தாமதிக்க வேண்டாமே!

Unknown said...

தலீவா ! எப்டி தலீவ இத்த மாதிரி உன்னால மட்டும் திங் பன்ன முடியுது. "பீட்டா பின்னாழையும் அழக்கா இருந்தாள்" நாங்காட்டி இருந்தேன்னு வச்சுக்கோ பாஸ போட்டு தள்ளிட்டு பீட்டவ இஸ்த்துக்குனு ……… ஆமா எந்த காலத்திற்கு செல்ல வேண்டும். parellal universe க்கா இல்ல ஏற்கனவே இருந்த உலக்த்திற்கா ……… ஐயோ சமுத்ரா காப்பாற்றுங்களேன். ஆனால் நல்ல முடிவு. புரபசர் எடுத்த முடிவுதான் சரி. உங்கள் எழுத்து திறமை, கதை சொல்லும் பாணி சரளமான நகைச்சுவை நடை, த்ரில்லிங், அடுத்து என்ன் என ஊகித்திருந்தாலும் அதில் வைக்கிற ட்விஸ்ட். சமுத்திரம் சமுத்திரம்தான். அது 'ஒன்று' தான் இருக்கும்.

Unknown said...

தலீவா ! எப்டி தலீவ இத்த மாதிரி உன்னால மட்டும் திங் பன்ன முடியுது. "பீட்டா பின்னாழையும் அழக்கா இருந்தாள்" நாங்காட்டி இருந்தேன்னு வச்சுக்கோ பாஸ போட்டு தள்ளிட்டு பீட்டவ இஸ்த்துக்குனு ……… ஆமா எந்த காலத்திற்கு செல்ல வேண்டும். parellal universe க்கா இல்ல ஏற்கனவே இருந்த உலக்த்திற்கா ……… ஐயோ சமுத்ரா காப்பாற்றுங்களேன். ஆனால் நல்ல முடிவு. புரபசர் எடுத்த முடிவுதான் சரி. உங்கள் எழுத்து திறமை, கதை சொல்லும் பாணி சரளமான நகைச்சுவை நடை, த்ரில்லிங், அடுத்து என்ன் என ஊகித்திருந்தாலும் அதில் வைக்கிற ட்விஸ்ட். சமுத்திரம் சமுத்திரம்தான். அது 'ஒன்று' தான் இருக்கும்.

Unknown said...

தலீவா ! எப்டி தலீவ இத்த மாதிரி உன்னால மட்டும் திங் பன்ன முடியுது. "பீட்டா பின்னாழையும் அழக்கா இருந்தாள்" நாங்காட்டி இருந்தேன்னு வச்சுக்கோ பாஸ போட்டு தள்ளிட்டு பீட்டவ இஸ்த்துக்குனு ……… ஆமா எந்த காலத்திற்கு செல்ல வேண்டும். parellal universe க்கா இல்ல ஏற்கனவே இருந்த உலக்த்திற்கா ……… ஐயோ சமுத்ரா காப்பாற்றுங்களேன். ஆனால் நல்ல முடிவு. புரபசர் எடுத்த முடிவுதான் சரி. உங்கள் எழுத்து திறமை, கதை சொல்லும் பாணி சரளமான நகைச்சுவை நடை, த்ரில்லிங், அடுத்து என்ன் என ஊகித்திருந்தாலும் அதில் வைக்கிற ட்விஸ்ட். சமுத்திரம் சமுத்திரம்தான். அது 'ஒன்று' தான் இருக்கும்.