இந்த வலையில் தேடவும்

Thursday, January 6, 2011

எனது முதல் அறிவியல் சிறுகதை!


[எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம் சிறுகதை. ஆனால் மிக மிக சலிப்பூட்டும் விஷயங்களையும் சிறுகதை மூலம் ரொம்பவே சுவாரஸ்யமாக விளக்க முடியும் என்று படித்திருக்கிறேன். எனவே இந்த முதல் அறிவியல் சிறுகதை..பிடித்திருந்தால் மறக்காமல் கமெண்டில் சொல்லுங்கள்..உங்கள் கமெண்டைப் பொருத்து இந்த மாதிரி தொடரலாமா என்று முடிவெடுக்க முடியும் :D]


**********************************ராக்கெட்***************************************


ஒன்று
=====


ஸ்கை -லிமிட் (skylimit ) ஆர்கனைஷேஷனின் (SLO) முதன்மை நாவிகேஷன் இஞ்சினியர் ராம் மிஸ்ரா முன் நின்றிருந்தான். அவன் கையின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டன..

"வெல்கம்..மிஸ்டர் ராம். உட்காருங்கள்" என்றார் மிஸ்ரா.

"உட்காருவது இருக்கட்டும் ..என்னை எதுக்காக கடத்துனீங்க? நீங்க யார்? நான் யார் தெரியுமா? என்னோட போஸ்ட் தெரியுமா? ஒரு போன் பண்ணினால் உங்களுக்கு மரண தண்டனையே கிடைக்கும் படி பண்ணிருவேன்" என்று கத்தினான் ராம். அவனது முகம் வெகுவாக வியர்த்திருந்தது. கைகள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன.

ஒரு பெரிய தொழிலதிபர் போல தோன்றிய மிஸ்ரா தன் தாடியைத் தடவிய படியே பேசினார்: "கூல் டவுன் மிஸ்டர்.ராம்..உங்க போஸ்ட் தெரியாமலா நான் உங்களை இவ்வளவு கஷ்டப்பட்டு உங்க வீட்ல இருந்து இந்த அர்த்த ராத்திரியில கடத்திட்டு வரணும்? மொதல்ல உட்காருங்க...விடியறதுக்குள்ள டீல் பேசிட்டா காலைல நீங்க வழக்கம் போல துயில் எழுந்து நியூஸ் பேப்பர் படிக்கலாம்..ஏதாவது முரண்டு பண்ண பாத்தீங்களா என் கைல பாருங்க ..." என்று ஏதோ துப்பாக்கி மாதிரி ஒன்றைக் காட்டினார்..

ராம் ஒரு வினாடி நிலை தடுமாறினாலும் சுதாரித்துக் கொண்டு "என்ன துப்பாக்கியைக் காட்டறீங்க, பின் விளைவுகளை யோசிக்காம பண்ணாதீங்க...I will show you who Iam " என்றான்..

மிஸ்ரா ஈறுகள் தெரிய பெரிதாகச் சிரித்தார் " என்ன ராம் , எஸ்.எல். ஓ வுல
நாவிகேஷன் இஞ்சினியராக இருக்கீங்க..சின்னப் புள்ளை மாதிரி துப்பாக்கின்னு சொல்றீங்களே, இது
"CONCENTRATED RADIOACTIVE EMITTER " ..கதிரியக்க குட்டி ராட்சஷன்...டிரிக்கர் பண்ணா ஆள் காலி"

ராம் "உங்களுக்கு என்னதான் வேணும்"? என்றான்..அவ்வளவு பாதுகாப்பு இருந்தும் பாதி ராத்திரியில் தன்னை எப்படி கடத்தினார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை. நல்ல வேளை மனைவி அம்மா வீட்டுக்குச் சென்றிருக்கிறாள்..இல்லை என்றால் இந்நேரம் ஊரைக் கூட்டி அழுதிருப்பாள்" என்று சிந்தனையில் ஆழ்ந்தான். தூக்கம் இழந்த கண்கள் சிவந்து கோபமாக இருந்தன.

மிஸ்ரா மீண்டும் சிரித்தார்.."அப்படி வாங்க வழிக்கு...அடுத்த மாசம் நீங்க உங்க நாட்டின் பெருமையான ராணுவ சாட்டிலைட் ஒன்று அனுப்புகிறீர்களாமே? அதைப் பத்தி தான் பேசணும்

ராமுக்கு ஏதோ பொறி தட்டியது "so you are a terrorist ?" என்றான் நேரடியாக

மிஸ்ரா "பரவாயில்லையே, சீக்கிரமா புரிஞ்சுக்கிட்டீங்க.."but im not a terrorist ...im just taking a revenge " சரி என்னைப் பற்றி எதுக்கு? நீங்க அனுப்பற ராக்கெட் அப்படியே சமர்த்தா போய் கடல்ல விழுந்துர்ற மாதிரி கொஞ்சம் உங்க நாவிகஷன் சிஸ்டத்த மாத்தீட்டா போதும்..சரி சொல்லுங்க என்ன எதிர்பாக்கறீங்க" என்றார் இயல்பாக..

ராம் அப்போது ஒரு கெட்ட வார்த்தையை உதிர்த்து விட்டு "என்னைக் கொன்று போட்டாலும் தாய் நாட்டுக்கு துரோகம் செய்ய மாட்டேன்" என்று கத்தினான்..

மிஸ்ரா நிதானமாக "இதெல்லாம் சரி மிஸ்டர் ராம்..தேச பக்தி உங்களுக்கு சோறு போடாது...எத்தனையோ வருசங்களா
எஸ்.எல். ஓ ல இருக்கீங்க.. என்ன சுகத்தைக் கண்டீங்க? ஒரு பாரின் ட்ரிப் உண்டா? ஒரு ஹாலிடே பாக்கேஜ் உண்டா?" இப்ப நான் சொன்ன சின்ன மேட்டரைப் பண்ணா உங்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத ஆதாயங்கள் கிடைக்கும்..பயமே படாதீங்க..எங்களோடது பெரிய நெட்வொர்க்..உங்களுக்கு எதிர்காலத்துல எந்த தொந்தரவும் வராது.." என்றார்..

ராம் மீண்டும் திமிறினான்...கடைசியில் கைகேயி கூனியின் வலையில் விழுந்தாள்.

"ஓகே...நீங்க சொன்னதும் நியாயம் தான்.. நான் பண்ணப்போற இந்த செயலால எந்த உயிர் சேதமும் கிடையாது.ஆனா செட்டில்மென்ட் எல்லாம் கரெக்ட்டா கவர்மெண்டுக்கு சந்தேகம் வராதபடி இருக்கணும்"

"அதைப் பத்தி நீங்க கவலையே படாதீங்க ராம்..எங்களிடம் திறமையான தொழில்நுட்பக் குழு, பொருளாதார நிபுணர்கள் குழு எல்லாம் இருக்கிறது" என்றார் மிஸ்ரா.

"ஓகே...done ..ஆனா
எஸ்.எல். ஓ வோட செக்யூரிட்டி, ப்ராசஸ் எல்லாம் தெரியும் தானே? எப்படி இதை நான் நிறைவேற்றுவது?"

"ராம், நீங்க உங்க நாவிகஷன் சிஸ்டத்தின் கடைசி செக்கின் போது நாங்க கொடுக்கற மைக்ரோ பிராசசரை அதன் மெயின் சி .பி.யு வுல இணைச்சிரனும்..அதோட ப்ளாக் டயக்ராம்லாம் கொடுத்துர்றோம்..
செக்யூரிட்டி பத்தி கவலைப்படாதீங்க...அந்த நாளில் அந்த சமயத்தில் ப்ராசசர் சிப் உங்கள் கையில் இருக்கும்"...

சரி..

"ஒரு முக்கியமான விஷயம் ராம் ..எங்க சிப் ரொம்ப ரொம்ப பவர் புல்..அதை இங்கே இருந்து எங்களால வாட்ச் பண்ண முடியும்..இதை இணைத்தால் ராக்கெட் கடலில் விழுவது நிச்சயம்..ஏதாவது கோல்மால் பண்ணி சாட்டிலைட்டை பூமியின் சுற்றுப்பாதையில் விட்டால் அடுத்த நாள் நீயும் அதே சுற்றுப்பாதையில் ஆவியாக சுற்றுவது நிச்சயம்" என்றார் மிஸ்ரா..இப்போது அவர் குரல் கொஞ்சம் கடுமையாக இருந்தது..

மிஸ்ரா மிகவும் நேர்மையான (?)மனிதர் போலும்..அவர் சொன்ன படி அடுத்த நாள் காலையில் வீட்டில் உட்கார்ந்த படி ராம் டீயுடன் பேப்பர் படித்தான் "
எஸ்.எல். ஓ வின் ராக்கெட் அடுத்த மாதம் ஏவப்படும் :கடைசி கட்ட பணிகள் தீவிரம்"

அந்த நாள் நெருங்க நெருங்க ராமின் மனம் குழப்பத்தில் தவித்தது..ஐயோ பிறந்த மண்ணுக்கு துரோகம் செய்கிறோமே என்று ..ஆனால் மிஸ்ரா தரப்போகும் பெனிபிட்களை நினைத்தால் சந்தோசமாக இருந்தது..வாழ்நாள் முழுவதும் அவனால் நினைத்துப் பார்க்க முடியாத செல்வம்..இதை செய்வதில் பெரிதாக தவறு இல்லை என்று தோன்றியது.."என்ன ஒரு ராக்கெட்டை கூட சரியாக லாஞ்ச் செய்ய திறமை இல்லை என்று உலக நாடுகள் ஏளனம் செய்யும்..நாட்டின் தொழில்நுட்ப இமேஜ் பாதிக்கப்படும்..படட்டும் நமக்கு என்ன? ராக்கெட் கடலில் விழுந்ததும் அடுத்த நாள் Root cause analysis வைப்பார்கள்..நாவிகேஷன் டிபார்ட்மென்ட் அழைக்கப்படும்..அதற்கு பொறுப்பேற்று பதவி விலகி மிஸ்ரா சொன்னது போல் சுவிட்சர்லாந்தில்..."

அந்த நாளும் வந்தது...

கடுமையான செக்கிங்குக்குப் பிறகு ராம் உள்ளே அனுமதிக்கப்பட்டான்..லாஞ்ச் செய்ய இன்னும் எட்டு மணி நேரம் இருந்தது..
நாவிகேஷன் final check - இவன் தலைமையில் நடைபெறும்.ராக்கெட்டை தரையில் இருந்து கட்டுப்படுத்தும் மெயின் நாவிகேஷன் யூனிட்டுக்கு இவன் ஒருவன் மட்டுமே செல்ல முடியும்..அப்போது உள்ளே போய் ஐந்து நிமிட வேலை தான்.ராக்கெட்டின் நாவிகேஷன் யூனிட் ப்ரோக்ராமில் ஒரு சிறிய மாற்றம் மற்றும் இந்த சிப் இணைப்பு அவ்வளவு தான் ..

ராமின் இதயம் தெறித்து விழுந்து விடும் போல் துடித்தது..இன்னும் மிஸ்ராவின் சிப் வேறு கைக்கு வரவில்லை..அவர் சொன்ன ப்ளானின் படி ஒரு முக்கிய பைலை கேட்டுக் கொண்டு லைப்ரரிக்குப் போக வேண்டும்...அங்கே எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பிரிவில் நாலாவது ரேக்கின் கடைசி பிங்க் புத்தகத்தின் அருகில் ஒரு புத்தகம் மாதிரி இருக்கும் ஒரு அட்டைப்பெட்டியில் அந்த பிராசசர் சிப் இருக்கும்..லைப்ரரிக்கும் லான்ச் யூனிட்டுக்கும் இடையே இரண்டே செக்யூரிட்டிகள் தான்.. மெடல் டிடக்டர்களால் உணர முடியாத சிப் அது..

ராம் ப்ளானின் படி லைப்ரரிக்கு போனான்...வேலை சுலபமாக முடிந்தது..

வழியில் தன்னுடன் பணிசெய்யும் இன்னொரு இஞ்சினியர் சீபை சந்தித்தான் ..அவன் பெயரும் ராம் தான்.."ஹலோ ராம்...உங்க யூனிட்டோட
பைல் செக் முடிஞ்சுருச்சா?"

"இல்லை...ரெண்டு மணிக்கு ஸ்டார்டிங்..."

"ஆல் தி பெஸ்ட்"

இரண்டு

=======


பைல் செக்கிங்கின் போது ராமுக்கு ஏனோ மனம் மாறியது..தன் நாட்டைப் பற்றி கவிர்கள் பாடியது அவன் நினைவில் வந்து உறுத்தி அவனை அந்த சிப்பை இ-வேஸ்ட் கூடையில் வீசச் செய்தது."அந்த மிஸ்ரா என்னை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்...உயிர் போகுமா? ஒரு தரம் தானே போகும்? போகட்டும்.. என் தேசத்துக்காக" என்றெல்லாம் நினைத்துக் கொண்டான்..கண்களில் தேச பக்தி நீராக வழிந்தது..

எல்லாம் முடிந்து ராக்கெட்டின் கவுன்ட்-டவுன் தொடங்கியது...பத்து, ஒன்பது, எட்டு,ஏழு,........ஜீரோ..

ராக்கெட் கம்பீரமாக விண்ணில் எழும்பியது..
எஸ்.எல். ஓ வின் விஞ்ஞானிகள் பரவசத்துடன் ராக்கெட்டின் பாதையைப் பார்த்து மெய் மறந்தார்கள்..பின்னணியில் தேசிய கீதம் ஒலித்தது..

சில வினாடிகளில் அந்த அசம்பாவிதம் நடந்தது...ராக்கெட் தன் பாதையை விட்டு விலகி கடலை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது...

எஸ்.எல். ஓ வின் விஞ்ஞானிகள் தலையைப்பிடித்துக் கொண்டு உட்கார்ந்தார்கள்..எங்கும் துக்கம் நிலவியது..

ராமுக்கு ஒரே குழப்பம்..நாம் தான் சிப்பை இணைக்கவில்லை...கோடையும் மாற்ற வில்லை..பின் எப்படி இது நடந்தது ? சரி இதுவும் நல்லது தான்.."மிஸ்ராவின் பெனிபிட் எல்லாம் இப்போதும் நமக்கு கிடைக்கும் ..உயிரும் தப்பினோம் "என்று அகமகிழ்ந்தான்..



மிஸ்ரா தன் வலக்கையான ரோஹித்தை அழைத்தார்..

"ரோஹித்...டீ.வில நியூஸ் பார்த்தாயா , வி ஹாவ் டன் இட்! "

"குட் பாஸ், இன்னிக்கு நைட் நம்ம ப்ளான் பண்ண படி பார்ட்டி தானே, பை த பை ? who is the culprit ?"

"சிப் நம்பர் டூ..பினிஷ் ஹிம்.."

மூன்று

======


ராம் ஆயாசத்துடன் வீடு திரும்பினான்... தான் செய்தது சரி தானா என்ற குற்ற உணர்ச்சி அவனை துளைத்தெடுத்தது...நம் தேசத்தின் இறையாண்மையையே அடகு வைத்ததாக உணர்ந்தான்...தன் பெட்டில் படுத்தபடி அந்த துரோகி மிஸ்ராவுடனான தன் சந்திப்பை கசப்புடன் நினைவு கூர்ந்தான்...

(இப்போது கதையின் முதல் பகுதியை மட்டும் மீண்டும் படிக்கவும்..நாவிகேஷன் என்பதற்குப் பதில் கண்ட்ரோல் என்று படிக்கவும்)

சமுத்ரா


8 comments:

arasan said...

அசத்தலா இருக்குங்க தொடருங்க .... வாழ்த்துக்கள்

கணேஷ் said...

நல்லா இருக்குங்க தொடருங்கள்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் ட்விஸ்ட்டு பாஸ்......!

Unknown said...

கலக்கல்! தொடருங்கள்!

bandhu said...

நன்றாக உள்ளது
+ - புதிய கதை களன்
- எதிர்பாராத திருப்பம்
- -மன மாற்றங்கள் குறித்து / லஞ்சம் குறித்து விவரமாக எழுதாதது.

பெயர் குழப்பம் பயன் படுத்திய விதத்தில் ஒரு சாப்ட்வேர் எஞ்சினியரின் ப்ரோக்ராம்மிங் உத்தி தெரிகிறது!

தாராளமாக நிறைய எழுதலாம் !

chandrasekar said...

அருமையான நடை..
இருந்தாலும் கடைசியில் ரோஹித் வசனத்தில் ஒரு சின்ன மாற்றம் தேவை. அவர்களது முறையில் குற்றம் நடக்கவில்லை அப்புறம் எப்படி குற்றவாளி?
"குட் பாஸ், இன்னிக்கு நைட் நம்ம ப்ளான் பண்ண படி பார்ட்டி தானே, பை த பை 6 செகண்டல கவிழ வேண்டியது ஏன் 8 செகண்ட் ? who is the culprit ?"

நெல்லி. மூர்த்தி said...

அசத்திட்டீங்க..... இன்னமும் இது போல பல அசத்தல்களை எதிர்பார்க்கின்றோம். ஏதோ சுஜாதா எழுதிய சிறுகதைப் போல படிக்கும் போதே மனசுக்கு ரொம்பவும் சந்தோஷமாயிருக்கு. - நெல்லி. மூர்த்தி, சவூதி அரேபியா (www.nellimoorthy.blogspot.com)

சமுத்ரா said...

Chandrasekar

certain things need to be said implicitly in the story. They have a clear mechanism to detect which chip was attached to the rocket and which one is thrown