இந்த வலையில் தேடவும்

Monday, January 17, 2011

கலைடாஸ்கோப் -2

லைடாஸ்கோப் -2 உங்களை வரவேற்கிறது.

கஸ்டமர் கடவுளா?
=================

கஸ்டமராக இருக்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக சில பேர் செய்யம் அலும்புகள் தாங்க முடிவதில்லை. துணிக்கடைக்கு சென்று ஒரு இருநூறு ரூபாய்க்கு
சேலை எடுப்பதற்காக , பாவமாக நின்றிருக்கும் அந்த கடைப்பெண்ணை படாத பாடு படுத்துபவர்களை பார்த்திருக்கிறேன். பெண்களில் பலபேருக்கு சேலை வாங்குவதற்கென்று சில விதிகள் இருக்கிறது போலும்..முதலில் காட்டும் இருபது சேலைகள் நன்றாகவே இருந்தாலும் அவற்றை புறக்கணித்து விட வேண்டும், எட்டாத உயரத்தில் இருக்கும் சேலையை கேட்க வேண்டும்...ஐம்பது சேலைகள் பார்த்து முடிந்த பின்னர் 'முதல்ல காட்டுனதே நல்லா இருந்துச்சு' என்று கூறி அசடு வழிய வேண்டும் என்றெல்லாம்..இதே போல ஹோட்டல்களுக்கு சென்று விட்டால் சில பேர் அந்த சர்வரை மனித ஜென்மமாகவே மதிப்பதில்லை..மெனு கார்ட் கண் முன்னேயே இருந்த போதும் சர்வரைப் பார்த்து "என்ன இருக்கு" என்று அலட்சியமாக கேட்பார்கள்..சர்வர் கஷ்டப்பட்டு "ரைஸ் பாத், மசாலா தோசை, செட் தோசை, ரவா தோசை, ..." என்று லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்கும் போது கூலாக "ரெண்டு காபி" என்பார்கள், உணவு சூடாக இல்லை என்றால் சர்வரை விரட்டுவார்கள்..

அடுத்து கஸ்டமர் கேருக்கு கால் செய்பவர்கள்.. கஸ்டமர் ஆகி விட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக இங்கிலிஷில் எல்லாம் திட்டுவார்கள்.."I TAKE ONE CONNECTION YESTERDAY .WHY NOT WORKING ? I WANT NOW IMMEDIATELY TODAY OR TOMORROW " என்றெல்லாம்..கஸ்டமர் கேரில் இருப்பவர்களும் மனிதர்கள் தான் என்று நமக்கு ஏன் தெரிவதில்லை? நமக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள்..ஒவ்வொரு அழைப்பையும் நிதானமாக 'handle ' செய்து மனம் கோணாமல் இன்முகத்துடன் பேசி,அவர்கள் தரும் அரை குறைத் தகவல்களை வைத்துக் கொண்டு தீர்வு சொல்வது என்பது எத்தனை கஷ்டமான ஒரு விஷயம்? நம் கனெக்சன் வேலை செய்யவில்லை என்றால் அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்..இதைத் தெரிந்து கொள்ளாமல் கால் செய்து யாராவது 'hello , how may i assist you ?" என்று கூறிய அடுத்த கணத்தில் அவர்கள் மீது நாய் மாதிரி எரிந்து விழ வேண்டுமா?

கஸ்டமர் ஆகி விட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக நாம் கடவுள் (?) ஆகி விட்டோம் என்றும் நமக்கு இரண்டு கொம்பு முளைத்து விட்டது என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் சிலர் மாற வேண்டும்..


கொஞ்சம் ஆதங்கம்
=================

பொங்கல் லீவுக்கு ஊருக்குப் போயிருந்த போது ஒரு பஸ்ஸில் பள்ளி மாணவிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறுவதைப் பார்க்க நேர்ந்தது. புத்தகங்கள் , டிபன் பாக்ஸ் சகிதம். ..படிக்கும் காலங்களில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் கஷ்டப்படுகிறார்கள். மாணவிகள் நேரம் தவறாமல் வகுப்புகளுக்கு வருகிறார்கள், டீச்சர் போர்டில் எழுதும் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் எழுதிக் கொள்கிறார்கள், ஒரு டெஸ்டை கூட விடாமல் எழுதுகிறார்கள், ஹெர்பேரியம் தயாரிக்கிறார்கள், சலிப்பு பார்க்காமல் டியூஷன் செல்கிறார்கள், வேதியியல் லேபில் உப்பைக் கண்டு பிடித்து விட்டு 'மேடம், இது ஜின்க் சல்பைடு' என்று உடனே கூறுகிறார்கள், பரீட்சை சமயங்களில் கிட்டத்தட்ட துறவு பூணாத மணிமேகலை போல சுகங்களைத் துறந்து படிக்கிறார்கள்..

இவ்வளவு கஷ்டப்படும் மாணவிகளில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் படிப்பு முடிந்து வேலைக்குப் போகாமல் 'குடும்பம் குட்டி(?)' என்று 'செட்டில்' ஆகி விடுகிறார்கள். வாழ்க்கைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத குப்பைகளை நம் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையான விஷயம் .நம் கல்வி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்று சொல்லித்தருவதில்லை. வரலாறு பற்றி பக்கம் பக்கமாகப் படிப்பவர்களுக்கு அடிப்படை இந்திய சட்டம் சொல்லித் தரப்படுவதில்லை..வேதனை வசப்பட்ட சமயங்களில் மனமுடைந்து போகாமல் இருக்க உதவும் ஒரு தியானம், யோகா,,,உஹும்...

எவ்வளவோ படித்து விட்டு இன்று மாமியாருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அக்காவைப் பார்த்து "இதற்கு தானா Inhomogeneous Equations and Homogeneous Boundary Conditions " என்றெல்லாம் படித்தாய் என்று கேட்கத் தோன்றுகிறது.


கொஞ்சம் இரங்கல்
=================

சபரிமலை விபத்தில் நூற்றுக்கணக்கான பேர் இறந்து போனதற்கு..சரணம் என்று வந்தவர்களை ஐயப்பன் காப்பாற்றி இருக்கக் கூடாதா என்றெல்லாம் நாத்திகம் பேசாமல் மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் குடும்பத்தினற்கு ஆழ்ந்த இரங்கல்கள்..இனிமேலாவது கோயில் நிர்வாகங்கள் பக்தர்களின் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..

வாழ்த்துக்கள்
=============

தமிழ்மணம்-2010 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு,,, என்னை ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம் இவ்வளவு பேர் தமிழில் எழுதுவது..ஒரு லட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் போன வருஷத்தில் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றனவாம்..

"மின்னேர் சுடராழி வெங்கதிரோன் ஏனையது
தன்னேரிலாத தமிழ்" என்று சூரியனுக்கும் மேலாக தமிழை வைத்த பாட்டு ஒன்று நினைவுக்கு வருகிறது..

கொஞ்சம் இசை
==============

'சிந்து பைரவி' என்பது கர்நாடக இசையில் பிரபலமான ஒரு ராகம்...ஹலோ பாஸ், உடனே அடுத்த பகுதிக்கு ஓடி விடாதீங்க! சினிமா பாட்டு சொல்றேன்..'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே' 'சந்தனத் தென்றலை' என்பவையெல்லாம் கொஞ்சம் அருகில் வரும் பாடல்கள்..ஓகே ஏன் இப்போது இதை சொல்கிறேன் என்றால் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் இந்த ராகத்தில் ஒரு பாட்டு கூட இயற்றவில்லையாம். இந்த ராகத்தின் மீது அப்படியென்ன பாராமுகமோ தெரியவில்லை..

.ஆர். ரகுமானுக்கு 'கோல்டன் குளோப்' விருது மிஸ் ஆகி விட்டதாம்.அவருடைய பாடல்கள் முன்பு போல் இல்லை என்று சொல்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். எனக்கு என்னவோ எந்திரன் பாடல்களைக் கேட்ட பின்பு அப்படிதான் தோன்றியது.ஒரு ஓஷோ ஜோக்
===============

சர்ச் ஒன்று மிகவும் பழமையடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விடலாம் என்ற நிலைமைக்கு வந்து விட்டது. மக்கள் வருவதும் நின்று போனது. சர்ச்சின் நிர்வாகிகளுக்கு அதை புதுப்பிப்பதில் விருப்பம் இல்லை. ஆனால் மக்கள் வர வேண்டுமே? எனவே நீண்ட தயக்கத்திற்கு பின் அவர்கள் ஒரு மீட்டிங் போட்டார்கள்..சர்ச்சுக்கு வெளியே தான்.."பழமை வாய்ந்த நம் சர்ச்சை புதுப்பிக்க வேண்டிய துரதிர்ஷ்ட நிலைக்கு நாம் வந்திருக்கிறோம்" என்று ஆரம்பித்து நீண்ட நேரம் மீட்டிங் நடைபெற்றது.அதன் முடிவில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

ஒன்று: பழைய சர்ச் இருந்த இடத்தில் தான் புதியது கட்டப்பட வேண்டும்

இரண்டு: புதிய சர்ச் பழைய சர்ச்சைப் போல, அதே மாதிரி தான் வடிவமைக்கப்பட வேண்டும்

மூன்று: பழைய சர்ச்சில் இருந்து எடுக்கப்பட்ட மூலப்பொருள்களைக் கொண்டே புதியது கட்டப்பட வேண்டும்

நான்கு: புதிய சர்ச் கட்டப்படும் வரை பழையதன் மீது கைவைக்கக் கூடாது.

ஓஷோ சொல்வது
================

மனிதன் புதியவற்றை ஏற்றுக் கொள்வதே இல்லை..


~சமுத்ரா

7 comments:

தமிழ் வினை said...

நல்ல பகிர்வுகள். எல்லாமே நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் !

தினேஷ்குமார் said...

சந்திக்கவைத்து தர்மசங்கடம் புகுத்தி சிந்திக்கவும் வைத்து பாதை நகர்கிறது நகர்வனத்து கேள்விகளுடன் நல்ல பகிர்வு

hareaswar said...

sindhu bhairavi raagam is newer one comparitively. It comes into existence only in late 18 hundreads or earlier 19 hundreads.. that is d reason no much compositions on this raaga.. there are lotta raagas which become popular only with tyagaraja swamigal. the other two have not made any compositions on them.. well it may lead me to speak for years if i start something like sampoornam and asampoorna melam.. sampoornam was followed by swamigal and asampoornam was followed by deekshidhar. u cannot find any krithi by deekshidhar in raagas like karaharapriya, gaanamoorthi etc. ithula paaramugam laam onnum illai...

sila points contradicting ah irukum.. there are some thirupugazh in sindhu bhairavi.. may b somebody who came later would have tuned it... in similar way purandaradasar's venkata chala nilayam would have get tuned..

please correct me if i am wrong anywhere

Chitra said...

கிட்டத்தட்ட அதை மாதிரி கட்டப்பட்ட சர்ச் ஒன்றை, Santa Fe, New Mexico வில் பார்த்து இருக்கிறேன்.
http://en.wikipedia.org/wiki/Cathedral_Basilica_of_St._Francis_of_Assisi

பா.ராஜாராம் said...

nice! ப்ரியமாய் ஒரு வந்தனம்!

ஆயிஷா said...

நல்ல பகிர்வுகள்.வாழ்த்துக்கள் !

Abarajithan said...

//ஏ.ஆர். ரகுமானுக்கு 'கோல்டன் குளோப்' விருது மிஸ் ஆகி விட்டதாம்.அவருடைய பாடல்கள் முன்பு போல் இல்லை என்று சொல்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். எனக்கு என்னவோ எந்திரன் பாடல்களைக் கேட்ட பின்பு அப்படிதான் தோன்றியது.//

உண்மைதான்.. இப்போது அவர் பாடலைக் கேட்டல் பிடிக்கிறது. கேட்கக் கேட்கத்தான் பிடிக்கவில்லை.. பழைய பாடல்களைத் தேடித்தேடி கேட்க வேண்டியதுதான். எந்திரன் பாட்டுக்களில் மின் உபகரணங்களின் அதிகப்பிரசங்கித்தனத்தால் பாட்டு மனதுள் நுழையவில்லை..