இந்த வலையில் தேடவும்

Thursday, January 20, 2011

கலைடாஸ்கோப்-4

லைடாஸ்கோப்-4 உங்களை வரவேற்கிறது..

ஏற்பது இகழ்ச்சி
==============

கொடுமையானது என்னவென்றால் தனியாக இருப்பது. அதை விட கொடுமையானது ஒருவருக்கு மட்டும் சமைத்து சாப்பிடுவது..ம்ம்.என்ன செய்வது? சரி வீட்டு ஒனரின் தோட்டத்தில் நிறைய தக்காளி விளைகிறதே, கேட்டுப் பார்க்கலாம் என்று கேட்டதற்கு 'இல்லை' என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டார்கள்..உண்மையிலேயே இல்லையா அல்லது வேண்டுமென்றே இல்லை என்று சொன்னார்களா என்பது இருக்கட்டும்..நான் சொல்ல வருவது என்னவென்றால் உயிர் போகிற அவசரம் என்று இருந்தால் மட்டும் அடுத்தவரிடம் எதையாவது இரவல் கேளுங்கள்.கடைக்கு போக சோம்பல்பட்டோ, இல்லை நிறைய ADVANTAGE எடுத்துக் கொண்டோ பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் 'காபிப்பொடி இருக்கா' 'கறிவேப்பிலை இருக்கா' என்று கேட்காதீர்கள். சில பேருக்கு இரவல் கேட்பது என்றால் என்னவோ 'வறுவல்' சாப்பிடுகிற மாதிரி..நியூஸ் பேப்பர், ஸ்க்ரூ டிரைவர், தயிர்,கடப்பாரை என்றெல்லாம்..சிலர் தங்கள் வீட்டு குழந்தைகளையும் இரவல் வாங்க அனுப்புவார்கள்..நாளை அவர்களுக்கும் அதே பழக்கம் தானே வரும்?

சில சமயங்களில் இந்த இரவல் உங்கள் 'இமேஜை' யே பாதித்து விடக்கூடும். அதே மாதிரி யாரிடமாவது பத்து நூறு கடன் வாங்கியிருந்தால் மறக்காமல் திருப்பிக் கொடுத்து விடுங்கள்..திருப்பிக் கொடுத்தால் வேண்டவே வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் 'என்ன ஒரு அலட்சியம்,பணத்தை வாங்கிய நினைப்பே இல்லை இவனுக்கு' என்று நினைக்கக் கூடும்..

நம் முன்னோர்கள் 'ஏற்பது இகழ்ச்சி' என்று இரண்டு வார்த்தைகளில் கூறியதன் ஆழத்தையும் அர்த்தத்தையும் நினைத்து வியக்கிறேன்..


எங்கே பொறுமை?
================

இப்போது நம்மிடம் இருந்து மறைந்து வரும் குணங்களில் 'பொறுமை'யும் ஒன்று..WHAT IS HAPPENING ? இன்றைய இளை
ர்களில் யாராவது ஒரே டி .வி. சேனலை ஐந்து நிமிடத்திற்கு மேல் பார்த்தால் அவருக்கு அவார்டே கொடுக்கலாம் போல இருக்கிறது..'அடுத்தது என்ன? அடுத்தது என்ன' என்று பறந்து கொண்டே இருக்கிறார்கள்..அந்தக் காலத்தில் எல்லாம் மூன்று மணி நேரங்களுக்குக் குறையாத கச்சேரிகளை மக்கள் நகராமல் கேட்டு ரசித்திருக்கிறார்கள்..அதுவும் ஒரே ராகம்..அதுவும் சங்கராபரணம் போன்ற இழுவை ராகங்களை..சில சமயங்களில் பாடகர் 'மந்தர' (கீழ்) ஸ்தாயியில் நீண்ட நேரம் பாடுவார்...என்னவோ பாடகர் தூங்கி விட்டு குறட்டை விடுவது போல இருக்கும். இப்போதெல்லாம் 'பாஸ்ட் பீட்' டில் வரும் சினிமா குத்துப் பாடல்களைக் கூட மூன்று முறைக்கு மேல் யாரும் கேட்பதில்லை..எல்லாம் 'இன்ஸ்டன்ட்' ஆக வேண்டும் இன்றைக்கு..'க்யூவில்' நிற்பது என்பது இன்றைய உலகில் ஒரு பாவகாரியம்.டிக்கெட் புக் செய்வது, பில் கட்டுவது எல்லாமும் ஆன்லைனிலேயே' வந்து விட்டது ஒரு விதத்தில் நல்லது தான். ஆனால் இந்த 'ஆன்லைன்' நம்மிடம் இருந்து பொறுமை என்ற அரிய குணத்தை எடுத்துக் கொண்டு விட்டது. கோயில்களில் கூட ஸ்பெஷல் தரிசன டிக்கெட் எடுத்துக் கொள்கிறோம்..நீண்ட நேரம் நின்று, கால் கடுத்து, கஷ்டப்பட்டு கடைசியில் இறைவனை தீப ஜோதியில் தரிசிக்கும் பேரானந்தத்தை நாம் 'இன்ஸ்டன்ட் தரிசனத்தில்' இழந்து விடுகிறோம்..

ஒரு ஜோக் நினைவில் வருகிறது...பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் அடுத்த பகுதிக்கு போகவும்..

ஒரு அமெரிக்கப் பெண்ணும் பிரெஞ்சுப் பெண்ணும் பேசிக்கொள்கிறார்கள்..

அமெரிக்கப் பெண் பிரெஞ்சுப் பெண்ணைப் பார்த்துக் கேட்கிறாள்: 'உன் கணவர் உன்னிடம் எப்படியெல்லாம் காதல் செய்வார்?'

பி.பெ: ம்ம்..முதலில் என் நெற்றியில் முத்தம் தருவார்..பின் மெதுவாக கண்களில், பிறகு கன்னத்தில், உதட்டில்,பின் கழுத்தில்..

.பெ: வெயிட் ...இதற்குள் நாங்கள் 'ஹனிமூனை' முடித்து விட்டுத் திரும்ப வந்திருப்போம்..

நாமெல்லாம் மெல்ல மெல்ல அமெரிக்கர்களாக மாறி வருகிறோம்
இளைர்களே!

கொஞ்சம் இசை
=============

அடுத்த வாரம் திருவையாறு தியாகராஜ ஆராதனை வருகிறது.பஞ்சரத்ன கீர்த்தனைகளை கேட்கும் போது கர்நாடக அரசு பவர் கட் செய்யாமலிருக்க கடவுளை வேண்டுகிறேன்.. ஆந்திராவில் எல்லாரும் 'தெலுங்கானா' 'அரசியல்' லொட்டு லொசுக்கு' என்று வன்முறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இங்கே நாம் பக்தி மயமாக 'எந்தரோ மகானு பாவுலு' என்று தெலுங்கில் பாடுவது நமக்கெலாம் பெருமை சேர்க்கக்கூடிய விஷயம்..

இந்த கருப்பு சட்டைகள் தொல்லை தாங்க..
====================================

சபரிமலை விபத்து நடந்ததை சாக்காக வைத்து இப்போது ஒரு கோஷ்டி 'ஐயப்பன் பொய்யப்பன்' 'எரி மேடு எமன் மேடு' என்றெல்லாம் கிளம்பியிருக்கிறது ..(யூனிபார்ம் 'மேட்ச்' ஆனாலும் உணர்வுகள் 'மேட்ச்' ஆகவில்லை..) என்னவோ கடவுள் பக்தி கொண்டவர்கள் சாகவே கூடாது என்பது போல..போதுமான வசதி செய்து தராத அரசாங்கத்தை கண்டிப்பதை விட்டு விட்டு 'சிவனே(?)' என்று அமர்ந்திருக்கும் ஐயப்பனை வசைபாடுகிறார்கள். of course , இப்படி கூட்டத்தில் நசுங்கிக் கொண்டு மகர ஜோதியை தரிசிப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை..உள்ளே இருக்கும் ஒளியைக் கண்டு கொள்ளாதவர்கள் வெளியே ஆயிரம் மகரஜோதியை தரிசித்து என்ன பிரயோஜனம்? ஆன்மிகம் என்பது முற்றிலும் வேறு ஒரு பரிமாணம்...SO IS நாத்திகம்..சும்மா 'பார்பனர்களைத்' திட்டுவது, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைக் 'காட்டு மிராண்டிகள்' என்று பேசுவது இது தான் நாத்திகம் என்று சில பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..'தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரனா' என்பது போல கருப்பு சட்டை போட்டவன், வெப் சைட்டில் பெரியார் படத்தைப் போட்டவன் எல்லாம் பகுத்தறிவாளன் இல்லை...(அப்பாடா பத்தி விட்டாச்சு!)

நாத்திகம் என்பது ஒரு REFINED ஆன சமாசாரம்..ராமாயணத்தில் கூட ஒரு நாஸ்திகர் வருகிறார்..ஆதி சங்கராச்சாரியார் ஒரு சூத்திரன் தன்னைத் தொட்டு விட்டதும் 'போச்சு மறுபடியும் குளிக்கணும்' என்கிறார்..அதற்கு அவன் 'தீட்டு உங்களுக்கா இல்லை உள்ளே இருக்கும் ஆத்மாவுக்கா' ? தீட்டு படும் என்றால் அது ஆன்மாவே இல்லை' என்கிறான்..இதைப் போன்ற ஒரு புத்திசாலித்தனமான வாதத்தை இதுவரை எந்த கருப்பு சட்டையிடமும் நான் கேட்டதில்லை..

மேலும் இந்த நாத்திகர்கள் தான் கடவுளைப் பற்றி அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..பாகவதத்தில் ஒரு கதை..விஷ்ணுவின் வாயில் காப்பாளர்களான ஜய விஜயர்கள் ஒரு தவறு செய்து விட அதற்கு தண்டனையாக அவர்கள் பூலோகத்தில் பிறக்கும் படி முனிவர்களால் சபிக்கப்படுகிறார்கள்..பின் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்ததும் விஷ்ணு 'சாபம் சாபம் தான், ஆனால் ஒரு கண்ஷஷன்..எனக்கு பக்தர்களாக நூறு பிறவிகள் வேண்டுமா? இல்லை எதிரிகளாக மூன்று பிறவிகள் வேண்டுமா? என்கிறார்..அதற்கு
ஜய விஜயர்கள் மூன்று பிறவிகள் எதிரிகளாக இருப்பதை தேர்ந்தெடுக்கிறார்கள். அப்போது தான் இறைவனை நிறைய நினைக்க முடியுமாம்..:)

பாவம் திருக்குறள்
================

ஒரு விஷயத்தையோ ஒரு ஆளையோ சரமாரியாக கண்டபடி புகழ்வது அவரை அலட்சியப்படுத்தும் வழிகளில் ஒன்றாம்.. (அப்பா, இனி மேல் 'அவனுக்கு மட்டும் எப்படி நூறு கமெண்டு வருது' என்று பதிவுலகில் யாரும் பொறாமைப்பட தேவையில்லை) மேலும் ஒரு பொருள் நமக்கு அதிகமாகக் கிடைத்தால் அதன் பெருமை நமக்குத் தெரியாது என்பார்கள்..இது திருக்குறளின் விஷயத்தில் ரொம்பவே உண்மை போலிருக்கிறது..காலையில் கண்டிப்பாக ஏதாவது ஒரு சானலில் ஒரு தாத்தா திருக்குறளை சொல்லிக் கொண்டிருக்கிறார்..பள்ளிகளில் ஆ, ஊ என்றால் ஒரு திருக்குறளை பரிசு கொடுத்து விடுகிறார்கள்..எனக்கு பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் போது ஒரு ஐம்பது தி.கு. சேர்ந்து விட்டது..எல்லாவற்றையும் லைப்ரரிக்கு தானம் (?) செய்து விட்டேன்..நல்ல நோக்கத்துடன் தான் கொடுக்கிறார்கள்..ஆனால் எத்தனை பேர் அதை பொறுமையாகப் பிரித்து படித்து குறளின் பெருமையை வியக்கிறார்கள்??

இதில் திருக்குறள் போட்டிகள் வேறு...'எஸ்.பி.பி ரேஞ்சுக்கு எல்லா குறளையும் மூச்சு விடாமல் சொல்வது, தலைகீழாக சொல்வது, உதடு ஒட்டாத குறளை சொல்வது, யானை எத்தனை குறள்களில் வருகிறது என்று கணக்கு பார்ப்பது என்று சின்னப் பிள்ளைத் தனமாக ...திருவள்ளுவர் சிலை வைப்பது, வள்ளுவர் கோட்டம் கட்டுவது என்று பாவம் அவரை ரொம்ப வம்புக்கு இழுத்து அவர் கூறிய அபாரமான கருத்துகளை மறந்தே போய் விட்டோம்..'எல்லாம் எனக்குத் தெரியாததா அவர் சொல்லிட்டார் ?' என்ற அலட்சியமா?

யாரையாது கோபத்துடன் 'நீயெல்லாம் ஒரு ஆம்பளையா' என்று ஆரம்பித்து திட்டத் தொடங்கும் முன் 'யாகாவார் ஆயினும்' என்ற குறளை தமிழர்கள் நினைத்துக் கொண்டால் எத்தனை நன்மைகள் நடந்திருக்கும்?

ஒரு சந்தேகம்
============

சில blog - குகளில் என்னால் கமெண்டு போட முடியவில்லை..'Subscribe to post comment ' என்று வருகிறது..அது என்ன? (இது கூடத் தெரியவில்லையா என்று கேட்க வேண்டாம்..எனக்கு கம்ப்யூட்டர் என்றாலே அலர்ஜி..)

நிறைய சீரியஸ் ஆன விஷயங்களைப் பேசி விட்டோம்..இப்போது ஒரு ஜோக்:

ஓஷோ ஜோக்
============

ஒரு படகு முழுகும் நிலைமையில் இருந்தது..அதை ஓட்டிக் கொண்டிருந்தவர் 'இங்கே பிரார்த்தனை செய்யத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா' என்று கேட்டார்..ஒரு சாமியார் 'நான் இருக்கிறேன்' என்று உற்சாகமாக கை உயர்த்தினார் "அப்படின்னா நீங்க அப்படியே உட்கார்ந்து பிரார்த்தனை பண்ணுங்க...மீதி இருக்கறவங்க இந்த லைப் ஜாக்கெட்டைப் போட்டுக்கங்க...ஒண்ணு கம்மியா இருந்துச்சு" என்றார்..

கடைசியாக கே.பாலமுருகனின் ஒரு கவிதை
====================================


வீட்டு வாசலில்
உட்கார்ந்து கடந்த
எத்தனையோ மாலை பொழுதுகள்!

எப்பொழுதோ ஒரு மாலை பொழுதில்தான்
பக்கத்து வீட்டு அம்மாயி அக்கா
தவறிப் போனாள்!

எப்பொழுதோ ஒரு மாலை பொழுதில்தான்
வீட்டு நாய்க்குட்டி
எங்கேயோ ஓடிப் போனது!

எப்பொழுதோ ஒரு மாலை பொழுதில்தான்
வீட்டின் எதிரிலிருந்த
மரம் சாய்ந்து போனது!

எப்பொழுதோ ஒரு மாலை பொழுதில்தான்
அப்பா கயிற்று நாற்காலியில்
இறந்து கிடந்தார்!

எல்லாமும் ஒரு மாலை பொழுதில்
நிகழ்ந்து முடிந்து
விடுகிறதே!

அன்றென்னவோ. . .
மாலை பொழுதில்தான்
இரு பட்டாம்பூச்சிகள் வீட்டில்
பறந்து கொண்டிருந்தன!


முத்ரா

9 comments:

sakthistudycentre-கருன் said...

Me the First

sakthistudycentre-கருன் said...

சொன்ன அனைத்து விஷயங்களும் அருமை. பதிவிற்கு நன்றி..

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9630.html

DrPKandaswamyPhD said...

ஆஜர்.

நெல்லி. மூர்த்தி said...

ஏற்பது இகழ்ச்சி -

உயிர் போகிற அவசரம் என்று இருந்தால் மட்டும் அடுத்தவரிடம் எதையாவது இரவல் கேளுங்கள்.


எங்கே பொறுமை?

இறைவனை தீப ஜோதியில் தரிசிக்கும் பேரானந்தத்தை நாம் 'இன்ஸ்டன்ட் தரிசனத்தில்' இழந்து விடுகிறோம்..


இந்த கருப்பு சட்டைகள் தொல்லை தாங்க..

..உள்ளே இருக்கும் ஒளியைக் கண்டு கொள்ளாதவர்கள் வெளியே ஆயிரம் மகரஜோதியை தரிசித்து என்ன பிரயோஜனம்?


தினந்தோறும் இது போன்ற அனுபவங்களைக் கடந்து வந்தாலும் அதில் எழாத உணர்வு, தங்கள் பதிவினை படிக்கும் பொழுது எழுவது தான் சிறப்பு. உண்மையான ஆத்திகமும் சரி, நாத்திகமும் சரி இவ்விரண்டிற்கும் பெரியளவில் வித்தியாசம் இருப்பதில்லை; அதனை முழுமையாக உணர்ந்து கடைபிடிக்கப்படும் போது. ஆனால் இன்று, சமுதாயத்தில்... சடங்குக்களால் ஆத்திகமும், சாடுதல்களால் நாத்திகமும் தவறாகச் சித்தரிக்கப்பட்டு ஒன்றையொன்று பங்காளிப் பகையாக பார்த்துக் கொண்டிருக்கின்றன.

Abarajithan said...

உண்மைதான்.. என்னைப் பொறுத்தவரை, நாத்திகம் என்பது, இதுவரை எந்த மதமும் காட்டாத ஒரு கடவுளை / கடவுளை அடையும் வழியை நம்புவது / பின்பற்றுவது. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி கடவுளைப்பற்றிய பாலிசிகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான நாத்திகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளைத் துதிக்கிறார்கள். எனவே, என்னைப்பொறுத்தவரை நாத்திகம் என்பது பல்லாயிரம் சிறுபான்மை மதங்களின் தொகுப்பேயாகும்..

Danielle said...

Oke, I;m at the wrong place. Its is a beautyful language, but I can not read this hihi

arul said...

உள்ளே இருக்கும் ஒளியைக் கண்டு கொள்ளாதவர்கள் வெளியே ஆயிரம் மகரஜோதியை தரிசித்து என்ன பிரயோஜனம்?

true words

விஜயன் said...

//இன்றைய இளைஞர்களில் யாராவது ஒரே டி .வி. சேனலை ஐந்து நிமிடத்திற்கு மேல் பார்த்தால் அவருக்கு அவார்டே கொடுக்கலாம் போல இருக்கிறது..'அடுத்தது என்ன? அடுத்தது என்ன' என்று பறந்து கொண்டே இருக்கிறார்கள்..//

நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் இப்பவும் மூன்று மணிநேர திரைப்படங்களை ஒரே மூச்சில் பார்க்கும் நபர்கள் இருக்கிறார்கள் :p

//ஒரு விஷயத்தையோ ஒரு ஆளையோ சரமாரியாக கண்டபடி புகழ்வது அவரை அலட்சியப்படுத்தும் வழிகளில் ஒன்றாம்.//

:) :) போலிப்புகழ்ச்சிக்கும்,மெய்யான புகழ்ச்சிக்கும் வித்யாசம் இருக்கு சமுத்ரா

//இதில் திருக்குறள் போட்டிகள் வேறு...'எஸ்.பி.பி ரேஞ்சுக்கு எல்லா குறளையும் மூச்சு விடாமல் சொல்வது, தலைகீழாக சொல்வது, உதடு ஒட்டாத குறளை சொல்வது, யானை எத்தனை குறள்களில் வருகிறது என்று கணக்கு பார்ப்பது என்று சின்னப் பிள்ளைத் தனமாக ..//
:D :D

விஜயன் said...

மாலை பொழுதின் மயக்கத்திலே..... (ய்)