இந்த வலையில் தேடவும்

Wednesday, January 5, 2011

அணு அண்டம் அறிவியல்-11

அறிவியல் அன்பர்கள் எல்லாரும் நலமா? இனிய 2011 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

இயற்பியலின் வரலாற்றைப் பற்றிப் பேசும் போது யாராலும் நியூட்டனை ஒதுக்கி விட முடியாது.அப்படி நியூட்டனை மறந்து விட்டால் நாம் பஞ்ச மகா பாதகங்களில் ஒன்றை செய்து விட்ட பாவத்திற்கு உள்ளாவோம். இயற்பியலில் இன்று வளர்ந்து வரும் இரண்டு முக்கியமான பிரிவுகள் குவாண்டம் இயற்பியல் (quantum mechanics ) மற்றும் சார்பியல் கொள்கை.. (relativity theory ) ஆனால் இவை இரண்டின் விளைவுகளை நாம் பொதுவாக நம் சாதாரண நடவடிக்கைகளின் போது உணர முடியாது. காரணம் குவாண்டம் இயற்பியல் என்பது மிக மிகச் சிறிய அணுவின் உலகங்களில் மட்டுமே செயல்படும் ஒரு விளைவு. சார்பியல் கொள்கை என்பது பொருட்கள் மிக மிக அதிக வேகங்களில் பயணிக்கும் போது நிகழும் ஒரு விளைவு.




இவை இரண்டுக்கும் இடைப்பட்ட சாதாரண வாழ்க்கையில் இன்னும் நியூட்டனின் விதிகள் தான் கோலோச்சுகின்றன. நியூட்டன் எழுதிய 'principia mathematica ' என்ற புத்தகம் 'இயற்பியலின் வேதம்' என்று போற்றப்படும் அளவுக்கு ஒரு முக்கியமான ஒரு புத்தகம். இவரின் மூன்று இயக்கவியல் விதிகள் (laws of motion ) மற்றும் ஈர்ப்பு விதி (universal law of gravitation ) இவைகளை வைத்துக் கொண்டு அண்டத்தில் உள்ள எந்த ஒரு கிரகத்தின் இயக்கத்தையும் சுற்றுப் பாதையையும் நம்மால் துல்லியமாகக் கணிக்க முடிகிறது.

இயற்பியல் உலகின் பாதையையே புரட்டிப் போட்ட இந்த மாபெரும் விஞ்ஞானி பிறக்கும் போது , உரிய காலத்துக்கு முன்பே பிறந்த ஒரு pre -matured baby யாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பிழைக்குமா என்பதே சந்தேகமாக இருந்ததாம். மேலும் அவர் பிறந்த உடனேயே தந்தை இறந்து விட்டாராம். அம்மா இன்னொரு கல்யாணம் செய்து கொண்டு இவரைக் கைவிட்டு விட, இவர் தன் பாட்டி வீட்டில் தான் வளர்ந்தார். மேலும் இவரது இறுதிக் காலங்களில் கொஞ்சம் மனநிலை .....சரி வேண்டாம் விடுங்கள் அறிவியல் அறிஞர்களின் சொந்த வாழ்க்கையை ஒரு லெவலுக்கு மேல் அலசக் கூடாது. இவர் செய்த அபாரமான சாதனைகளை மட்டும் எண்ணி வியக்கலாம்.

இன்னொரு விஷயம்: நியூட்டன் மற்ற விஞ்ஞானிகளைப் போல் அல்லாமல் கடவுள் நம்பிக்கை மிகுந்த ஒரு பக்கா கிறிஸ்துவராக இருந்தார்."கடவுள் நம்பிக்கை என்பது அறிவியலுக்கு எதிரானது இல்லை;அதே சமயம் நாத்திகம் பேசுபவர்கள் எல்லாரும் அறிவாளிகளும் இல்லை "என்ற கருத்துக்கு நியூட்டன் மிகச்சிறந்த ஒரு உதாரணம்.

ஸ்கூலில் 'Differential calculus ' (வகை நுண் கணிதம்) 'Integral Calculus ' (தொகை நுண்கணிதம் ) என்பது நமக்கெல்லாம் அலர்ஜியாக இருக்கும் இரண்டு விஷயங்கள். ஆனால் இந்த இரண்டும் இல்லாமல் இன்று இயற்பியலும் இல்லை, கணிதமும் இல்லை..இயற்பியலே ஒருவருக்கு கொஞ்சம் கூடத் தெரியாவிட்டாலும் அவருக்கு கண்டிப்பாக ஐன்ஸ்டீனின் "E =mc2 " என்ற சூத்திரம் தெரிந்திருக்கும். வகை நுண்கணிதம் இல்லை என்றால் இந்த சூத்திரம் வந்திருக்காது. இதைக் கண்டுபிடித்த பெருமை நியூட்டனையே சேரும். (இந்தியாவில் பழங்காலத்தில் செயல்பட்ட ஒரு கேரள பல்கலைக்கழகத்தில் கால்குலஸ் வழக்கத்தில் இருந்ததாக சொல்பவர்களும் உண்டு. வழக்கப்படி இந்தியர்கள் அதை உலகுக்கு அறிவிக்காமல் இருந்து விட்டார்கள் போலும்)

கால்குலஸ் என்பது ஒரு முக்கியமான டாபிக்.. ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் இரண்டு அளவுகளை எடுத்துக்கொள்ளலாம். அந்த இரண்டு அளவீடுகளும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக உங்கள் ஆபீசில் உங்கள் சம்பளம் உங்கள் செயல்திறனைப் (performance ) பொறுத்தது என்றால் (ஓ இப்படியெல்லாம் இருக்கிறதா ??!!:) ) சம்பளம், salary S = f(P) என்று குறிப்பிடலாம். அதாவது சம்பளம் என்பது செயல்திறனை சார்ந்த ஒரு சார்பு (function ) . இங்கே முக்கியமான ஒரு விஷயம் நம்மால் S =f(P) என்று எழுத முடியாவிட்டால் அங்கே வகை,தொகை எல்லாம் வேலை செய்யாது. அதாவது ஒரு அளவுக்கும் இன்னொரு அளவுக்கும் என்னப்பா தீர்க்கமான சம்பந்தம் என்று தெரியாவிட்டால்..உதாரணமாக நம் வாழ்க்கையில் சில சமயங்களில் தென்னைமரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெரி கட்டும். இதற்கெல்லாம் கால்குலஸ் பயன்படாது. இதை அறிவியலில் நம் கட்டுப்பாட்டில் வராத 'பட்டாம் பூச்சி விளைவு' 'butterfly effect ' என்பார்கள். உதாரணமாக தசாவதாரத்தில் நெப்போலியன் கமலை கடவுளுடன் கடலில் வீசியதற்கும் எண்ணூறு ஆண்டுகள் கழித்து அதே கடலில் சுனாமி வந்து கிருமியை NaCL - ஐக் கொட்டி அழித்ததற்கும் என்ன சம்பந்தம்? (ஓகே இங்கே ஒரு ஆதங்கம்: கொசுவுடன் தமிழ் பேசும் 'எந்திரன்' படத்தை விட கமலின் 'தசாவதாரம்' எவ்வளவோ இயற்பியல் பூர்வமாக advanced ஆன திரைப்படம் என்று தோன்றுகிறது)

நியூட்டன் தசாவதாரம் எல்லாம் டிக்கெட் வாங்கிக்கொண்டு போய் பார்க்காத காரணத்தால் பட்டாம் பூச்சி விளைவு,புடலங்காய் விளைவு இதையெல்லாம் துளியும் நம்பவில்லை. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் மிக மிகத் தீர்மானமாக வரையறுக்க, விளக்க, தொடர்புபடுத்த முடியும் என்று நம்பினார். (absolute quantities ) இதை முதலில் சந்தேகப்பட்ட ஒரு மனிதர் யார் தெரியுமா? நம்ம ஐன்ஸ்டீன் அண்ணாச்சி தான்.

இந்த கால்குலஸ் என்றால் என்ன என்றால் RATE OF CHANGE . அதாவது மாறுபடும் வீதம். மாற்றமடையும் அளவுகளுக்கு மட்டுமே இதை உபயோகப்படுத்த முடியும். இதனால் தான் மாறுபடாத மாறிலிகளை (constant ) கணிதம் நிராகரித்து விடுகிறது . எனவே 'மாற்றம்' தான் இங்கே பிரதானம். S =f(P) என்ற நம் உதாரணத்தை மறுபடியும் எடுத்துக்கொள்ளலாம். இங்கே S (சம்பளம்) என்பது உங்கள் செயல்திறமை (P) யைப் பொறுத்துள்ளது. உதாரணமாக நீங்கள் ஒரு கம்பெனியின் salesperson என்று வைத்துக் கொண்டால் உங்கள் சம்பள உயர்வானது ஒரு மாதத்தில் நீங்கள் விற்கும் தயாரிப்புகளைப் (products ) பொறுத்து இருக்கலாம். நீங்கள் சராசரியாக மாதம் நூறு தயாரிப்புகளை விற்றால் உங்கள் வருட சம்பளம் 1 % அதிகரிக்கும் என்றால் உங்கள் வருட சம்பள உயர்வை சுலபமாக இப்படி எழுதலாம்: S =12 (S0 /100 ) (P /100 ) .இங்கே S0 என்பது உங்கள் தற்போதைய சம்பளம். P என்பது ஒரு மாதத்திற்கு சராசரியாக நீங்கள் விற்கும் தயாரிப்புகளின் எண்ணிக்கை.

இப்போது: நீங்கள் விற்கும் தயாரிப்புகளின் எண்ணிக்கை கொஞ்சம் மாறினால் அது எந்த விதத்தில் உங்கள் சம்பளத்தை பாதிக்கும் என்று அளவிடுவது தான் கால்குலஸ். விற்கப்படும் தயாரிப்புகளின் எண்ணிக்கையில் ஏற்படும் சிறிய அதிகரிப்பு '
ΔP ' என்றால் S =F (P+ΔP ) என்று ஆகும் அல்லவா?இப்போது புதிய 'S '(சம்பளம்) பழைய S ஐ விட அதிகரித்திருக்கும் அல்லவா? அந்த அதிகரிப்பைக் கணக்கிட ΔS =F (P+ΔP ) -F (P) என்ற சமன்பாட்டைப் பயன்படுத்தலாம்.(ரொம்ப போர் அடிக்கிறதா? இன்னும் ஒரு பாரா தான்..கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளவும்) இப்போது ΔS ஐ ΔP யால் வகுத்தால் அது உங்கள் சம்பள உயர்வு நீங்கள் அதிகமாக விற்ற தயாரிப்புகளைப் போல எவ்வளவு மடங்கு என்று காட்டும். understood ? ஓகே. ஆனால் கால்குலஸ் என்பது மிக மிகச் சிறிய அளவிலான மாற்றங்களையே அனுமதிக்கிறது. அதாவது ΔP-> 0
(delta P tends to zero ) அதாவது 'தர்க்க ரீதியாகப்' பார்த்தால் நீங்கள் மிகச் சிறிய அளவிலேயே செயல்திறனை அதிகரித்திருந்தால் சம்பளமும் மிகக் குறைவான அளவிலேயே அதிகரித்திருக்கும். எனவே இவை இரண்டுக்கும் உள்ள விகிதம் பொதுவாக எண் ஒன்றாக இருக்கும் (unity ) .இந்த 'ஒன்று' என்ற எண் தான் உங்கள் சம்பள சார்பின் 'வகை' (differentiation ) .அதாவது dS /dP =lim ΔP -> 0 ( ΔS /ΔP) . கணித ரீதியாகப் பார்த்தால் lim ΔP ->0 ( ΔS /ΔP) என்பது முடிவில்லாத ஒரு எண்ணாக இருக்க வேண்டும். எந்த ஒரு எண்ணையும் பூஜ்ஜியத்தால் வகுத்தால் முடிவில்லாத எண் விடையாகக் கிடைக்கும். ஆனால் தர்க்க ரீதியாக நமக்கு முடிவிலி (∞) கிடைக்காமல் ஒரு குறிப்பிட்ட எண் (ஒன்று) கிடைத்துள்ளது. இது தான் கால்குலசின் அற்புதம். சரி இன்னும் விளக்கினால் ஏதோ இந்த ப்ளாக்கை போனால் போகிறது என்று 'follow ' செய்யும் கொஞ்சம் பேரும் unfollow செய்து விடுவார்கள் என்பதால் இங்கே நிறுத்துகிறேன்... நியூட்டனின் ஜீனியசை விளக்குவதற்காக இதை சொல்கிறேன்.

நமக்கு ஒரு கெட்ட பழக்கம். சைக்கிள் கேப் கிடைத்தால் (சைக்கிள் கேப் என்றால் என்ன???) அங்கே ஆன்மீகத்தை நுழைத்து விடுவது. அதன்படி கால்குலசுடன் சம்பந்தப்பட்ட இன்றைய ஆன்மிகம்: இந்தியாவில் தோன்றிய முக்கியமான தத்துவங்களில் ஒன்று த்வைதம். இதை ஸ்தாபித்தவர் ஸ்ரீ மத்வாச்சாரியார்(1238–1317)
. மகான் ராகவேந்திரரைத் தெரியுமா? அவர் பின்பற்றியது த்வைத சித்தாந்தம் தான். இந்த சித்தாந்தத்தின் படி கடவுளும் (பரமாத்மா) உயிரும் (ஜீவாத்மா) வேறு வேறு. ஒருக்காலும் அவை ஒன்றாக முடியாது. (கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் இந்த தத்துவம் மிகவும் ஒரு refined ஆன ஒன்று என்கிறார்கள் ) . மத்வாச்சாரியாரில் இருந்து தொடங்கி பல்வேறு மகான்களை உள்ளடக்கிய பெரிய பரம்பரை அது.



நிற்க.. (யாரது ரொம்ப சின்சியரா எந்திருச்சு நிக்கறது? )

இப்போது ஒரு வட்டத்திற்குள் ஒரு முக்கோணம் போடுவோம்..போட்டாச்சு..





இப்போது வட்டத்திற்குள் ஒரு சதுரம் போடுவோம். DONE




இப்போது வட்டத்திற்குள் ஒரு பென்டகன் (ஐங்கோணம்) போடுவோம். அதுவும் ஆச்சு.



இப்படியே வட்டத்திற்குள் போடும் வடிவத்தின் பக்கங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே போனால் என்ன ஆகும்? கடைசியில் வட்டமும் அந்த வட்டத்திற்குள் வரைந்த பலகோணமும் (polygon ) ஒன்றாகி விடும் இல்லையா? வேறு விதமாகச் சொல்வது என்றால் வட்டம் என்பது அளவிட முடியாத பக்கங்கள் கொண்ட ஒரு பல்கோணம். (CIRCLE IS A POLYGON WITH INFINITE NUMBER OF SIDES ) அதாவது பலகோணத்தின் முடிவு எல்லை வட்டம். ஆனால் என்னதான் நாம் பக்கங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போனாலும் வட்டத்திற்கு மிக மிக அருகில் போக முடியுமே தவிர வட்டம் கிடைக்கவே கிடைக்காது.

Lim Area of POLYGON = வட்டத்தின் பரப்பளவு
N ->
∞ (பலகோணத்தின் பரப்பளவு)





இது மாதிரி தான் த்வைதமும். பலகோணம் தான் ஜீவாத்மா. வட்டம் தான் பரம்பொருள். ஜீவாத்மாவின் இறுதி இலக்கு பரமாத்மா தான். ஆனால் என்ன தான் சாதனை செய்தாலும் பரம்பொருள் நிலைக்கு மிக மிக அருகில் நெருங்க முடியுமே தவிர அந்த பரம்பொருளாகவே ஆகி விட முடியாது. அதாவது பரம்பொருள் என்பது very very refined state of souls .த்வைதம் என்றால் பொதுவான அர்த்தம் இரண்டு என்பது. மத்வாச்சாரியாரின் படத்தைப் பார்த்தால் அவர் இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டுவது தெரியும். (படம்) அதாவது பரம்பொருளும் நாமும் ஒன்றல்ல. அவனுக்கும் நமக்கும் இடையே எண்ண முடியாத அளவு இடைநிலைகள் உள்ளன என்று.

மேலோட்டமாகப் பார்த்தால் இது ஆன்மீகத்தில் ஈடுபடும் ஒரு சாதகனுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தைத் தருவதாக இருக்கும். என்னடா இது? 'நாம் எப்போது
ம் பரநிலையை அடையவே முடியாது என்றால் நாம் என்ன செய்து என்ன பிரயோஜனம்?' என்ற வகையில் ...ஆனால் உண்மையில் த்வைதம் தனது சாதகனை வழியில் எங்கும் ஆணவம் கொண்டு நின்று விடாமல் 'இன்னும் மேலே செல், இன்னும் மேலே செல்' என்று பக்தி நெறியில் உந்திக் கொண்டே இருக்கிறது. 'உன் இலக்கு பரமாத்மா தான்..இன்னும் கொஞ்சம் தான்' என்று ஆசை காட்டி அவனை பக்தியில் கனியச் செய்கிறது. "இன்னும் கொஞ்சம் தூரம் தான்,இதோ வட்டம் வந்து விடும் நீ முழுமை அடைந்து விடுவாய் "என்று பலகோணங்களுக்கு ஆசை காட்டி ஒரு முதிர்ச்சியை உள்ளே வளரச் செய்கிறது அது. சங்கராச்சாரியார் கூறுவது போல "அஹம் பிரம்மாஸ்மி"(நான் கடவுள்) என்று உண்மையை முதலிலேயே கூறி விட்டால் மனிதர்கள் சோம்பல் வசப்பட்டு "மச்சான், நம்ம ஏற்கனவே கடவுள் தானாம் ..நல்லாதாப் போச்சு...சரி வா மன்மதன் அம்புக்குப் போயிட்டு அப்படியே குமார் வீட்ல இனிக்கு தண்ணி பார்ட்டியாம் ..மஜா பண்ணலாம்' என்று வாளாவிருந்து விட வாய்ப்புள்ளது

அணுவின் உலகங்களில் நாம் மேலே பயணிப்பதற்கு முன் நியூட்டனின் இயக்க விதிகளைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.அதானால் தான் அ-அ-
வில் இந்த நியூட்டனுக்கான அத்தியாயங்கள்..

தொடரும்

சமுத்ரா

16 comments:

கணேஷ் said...

நண்பரே ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் அன்றாட மிக முக்கியமான செயல் ஒன்றுக்கு பயன்படுகின்றது..

GPS முறைக்கு இவரின் TIME DILATION தான் துள்ளியமான தகவலை கொடுக்க காரணம்..

என்ன இருந்தாலும் நியூட்டன் விதிகள் அளவுக்கு இல்லை எளிமையாக பயன்படுத்துவதாக இல்லை..

நல்ல தகவல்கள்..தொடர்ந்து எழுதுங்கள்..

கோவி.கண்ணன் said...

த்வைதம் விளக்கம் அருமை. நான் அத்வைதத்தை நிராகரிப்பவன்.
:)

Rajakamal said...

fantastic explantion, especialy without boring, please keep it up.

Sugumarje said...

என்னதான் இருந்தாலும், தான் சொல்ல வந்தத சொல்லனும்ங்கிற நேர்மை எனக்கு ரொம்ம்ப பிடிச்சிருக்கு... கீப் இட் அப் :)

Unknown said...

துவைதத்திக்கு அருமையான விளக்கம்

Unknown said...

//பலகோணம் தான் ஜீவாத்மா. வட்டம் தான் பரம்பொருள்//
த்வைதம் பற்றி சூப்பர் விளக்கம் பாஸ்! :-)

vasu said...

உங்களின் அறிவியல் சார்ந்த கட்டுரைகள் அருமை.....
//"இன்னும் கொஞ்சம் தூரம் தான்,இதோ வட்டம் வந்து விடும் நீ முழுமை அடைந்து விடுவாய் "என்று பலகோணங்களுக்கு ஆசை காட்டி ஒரு முதிர்ச்சியை உள்ளே வளரச் செய்கிறது அது.//
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை....

Anonymous said...

உங்கள் அறிவியல் சார்ந்த அனைத்து பதிவுகளையும் படித்தேன். அனைத்தும் அருமை. தொடர்த்து இதை போல் அறிவியல் சம்பந்த பட்ட பதிவுகளை நிறைய எளுதவும். நன்றி

ஷர்புதீன் said...

i read later

Jana said...

எனக்கு இந்த சப்ஜக்ட்ல படு இன்ரஸ்ட். எனக்கு தாங்கள் சொன்னவ்றிலும் சில மேஜர் டவுட்ஸ் இருக்கு. விரிவாக மெயில் பண்ணுறன்.

Ayyanar said...

நண்பரே,
எனக்கு ஒரு சந்தேகம் space-க்கு காலம் இல்லை என நான் நினைக்கிரேன் .
என்னை பொறுத்த வரை பொருள்களின் இயக்கம் மட்டும் காலம் ஆகும். அந்த இயக்கத்தை காலம் என சொல்வதை விட கணக்கீடு என்று சரியாக சொல்லலாம். இயக்கத்தின் அளவீடை தவிர காலம் என்ற ஓன்று இல்லை .பிறகு எப்படி கால பயணம் சாத்தியம் ஆகும். மேலும் பொருள்களின் இயக்கத்தை அளவீடு செய்யலாம் . space-இணை எவ்வாறு அளவீடு செய்ய முடியும்? அளவீடு செய்ய முடியாது என் என்றால் அதட்க்கு இயக்கம் இல்லை. ஏன்? அணுவில் கூட space இருக்கிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது .எனவே காலம் இருந்தால் அதை தெளிவாக விவரிக்கவும் .
நான் கூறியது முட்டாள் தனமாக இருந்தால் மன்னிக்கவும்.
பதில் கிடைக்குமா? நண்பரே

சமுத்ரா said...

ayyanaar , இன்னும் நாம் காலம், வெளி போன்ற Macroscopic டிஸ்கஷன்களுக்கு வரவில்லை..இதைப் பற்றி கண்டிப்பாக சொல்கிறேன்..
மேலும் உங்கள் கேள்வி எனக்கு கொஞ்சம் புரியவில்லை..பொருட்களின் இயக்கத்தைக் காலம் என்கிறீர்கள்..Good view point ..ஆனால் அறிவியல்
பொருட்கள் வெளியிலும் காலத்திலும் இயங்குகின்றன என்கிறது..அதாவது வெளி மற்றும் காலத்தால் ஆக்கப்பட்ட ஒரு நான்கு பரிமாண தளத்தில்..
காலம் என்பதை பொருட்களில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் நாம் உணர்கிறோம்..அதாவது ஒரு ஐஸ் கட்டி கரைந்து தண்ணீராக ஓடுகிறது..
இதற்கு இருபது நிமிடம் ஆகிறது என்கிறோம்..உங்கள் கேள்விப்படி ஐஸ் கட்டி உருகாமல் (அதன் மூலக்கூறுகள் நகராமல் அப்படியே போட்டது போட்டபடி)
இருந்தால் காலம் என்பது இருக்காது (உணர முடியாது) என்பது தானே? உண்மை தான்..ஆனால் இயக்கம் இல்லாமல் இருப்பது என்பது பிரபஞ்சத்தில் சாத்தியம்
இல்லை..எல்லாம் இயங்குகின்றன..ஒரு ஒழுங்கான நிலையில் இருந்து ஒழுங்கற்ற நிலைக்கு..இதை இயற்பியல் ENTROPY அல்லது TIME IS THE THERMODYNAMICAL
ARROW ..அதாவது காலம் என்பது பொருட்கள் பெப்ப மாற்றம் அல்லது ஒழுங்கின்மை படி மாறுபடுகின்ற அம்பு என்கிறது...இதைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள
அணு அண்டம் அறிவியலின் இன்னும் சில எபிசோடுகள் வரை காத்திருங்கள்..

Ayyanar said...

நண்பரே,
பதிலுக்கு மிக்க நன்றி. நீங்கள் கூறியது தெளிவாக புரிகிறது.
இருந்தும்,
(எனக்கு அறியியல் பத்தி அதிகம் தெரியாது, நான் எழுதியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும் . என் அறிவுக்கு எட்டியது இவ்வளுவ்தான் )

//ஒரு ஐஸ் கட்டி கரைந்து தண்ணீராக ஓடுகிறது..//

இது உண்மை தான்.இது ஏன் என்றால் இயக்கங்கள் அனைத்தும், அணுக்களால் ஆனது. இந்த அனுக்களுகுள்ளும் வெளி இருக்கிறது.ஆனால் இயக்கங்களை சூழ்ந்த வெளி-யில் என்ன மாறுதல் உள்ளது? நான் என்ன சொல்ல வருகிரேன் என்றால் வெளி வேறு , இயக்கத்தில் உண்டாகும் காலம் வேறு. நான் கூறுவது வெளிக்கு , இத்தகைய இயக்கத்தின் அளவீடு என்ற காலம் பொருந்தாது.

//இதற்கு இருபது நிமிடம் ஆகிறது என்கிறோம்//

காலம், 3 வகையாக பிரிக்கபட்டுள்ளது . நம்மால் கடந்த காலதித்க்கு செல்ல முடயுமா? வருங்கலதுகக்கு செல்ல முடயுமா? அல்லது இப்போது நடந்து கொண்டது இருப்பதை நிருபிக்க முடயுமா? (அ) நிறுத்த முடயுமா?

// அறிவியல் பொருட்கள், வெளியிலும் காலத்திலும் இயங்குகின்றன என்கிறது//

இக்கூற்றில் அறிவியல், வெளி மற்றும் காலம் வெவ்வேறு என்கிறது.
இதை தான் நானும் சொல்கிரேன் . இருந்தும் காலம், வெளி-க்கு பொருந்தாது என்பதில் தெளிவாக இருக்கிறான் . இக்கூற்றில் பொருட்கள், வெளியிலும் இயங்குகின்றன என்பதை எற்றுக்கொள்ள முடியாது. நான் சொல்வது தெளிவாக உங்களுக்கு புரியும் என நம்புகிரேன் .

இந்த இடத்தில ஆன்மீகத்தை இழுப்பதற்க்கு மன்னிக்கவும்.
கீதை-யில் சொல்லபடுகிறது , பரமாத்மா வேறு, ஜீவாத்மா வேறு என்று. இருந்தும் பரமாத்மாவிடம் இருந்தே தோன்றி பிரிக்கபட்டுள்ளது ஜீவாத்மா . பின்பு அதே மாதிரி பரமாத்மாவிடமே சேர்ந்துவிடும்.
இதுதான் நான் கூறும் . காலமும் மற்றும் வெளி .
நீங்கள், கூறினீர்

//இந்தியாவில் தோன்றிய முக்கியமான தத்துவங்களில் ஒன்று த்வைதம். இதை ஸ்தாபித்தவர் ஸ்ரீ மத்வாச்சாரியார்(1238–1317). மகான் ராகவேந்திரரைத் தெரியுமா? அவர் பின்பற்றியது த்வைத சித்தாந்தம் தான். இந்த சித்தாந்தத்தின் படி கடவுளும் (பரமாத்மா) உயிரும் (ஜீவாத்மா) வேறு வேறு. ஒருக்காலும் அவை ஒன்றாக முடியாது//

வெளி = பரமாத்மா , இயக்கம் = ஜீவாத்மா .
Macroscopic பதிவிட்காக காத்திருக்கேன் .

மிகுந்த நன்றி ............

Aba said...

@அய்யனார் சார்,

உங்கள் கேவிக்கு எனக்கு தெரிந்த மட்டும் சொல்லியிருக்கிறேன். சமுத்ரா சாரின் இந்த பதிவில் :

http://www.blogger.com/comment.g?blogID=4730986936972181980&postID=893867143190122113&page=1&token=1302439281161&isPopup=true

Anonymous said...

Saved being a favourite, I genuinely like your web site!

Unknown said...

Super ji.. i am waiting for next Episode