இந்த வலையில் தேடவும்

Wednesday, December 12, 2012

கலைடாஸ்கோப்-80

லைடாஸ்கோப்-80 உங்களை வரவேற்கிறது.

“A bachelor's life is a fine breakfast, a flat lunch, and a miserable dinner.” Francis Bacon


ங்கிலேயர்களில்(British) சுமார் 50% மக்கள் மட்டுமே காலை உணவு சாப்பிடுகிறார்களாம். அதிலும் பெரும்பாலானோர் நின்று கொண்டே சாப்பிடுகிறார்கள் மற்றும் காலை உணவை மூன்று நிமிடங்களுக்கு முன்பே முடித்துக் கொள்கிறார்களாம்.இங்கே மட்டும் என்ன வாழ்கிறது என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான். நம்மில் இன்று யாரேனும் ஆற அமர குடும்பத்துடன் உட்கார்ந்து காலையில் இட்லி தோசை  சாப்பிடுகிறோமா? மேகி, கார்ன் பிளேக்ஸ் சாண்ட்விட்ச், பிரட் டோஸ்ட்  எல்லாம் வந்த பிறகு இட்லியாவது தோசையாவது ?!அந்தக் காலத்தில் எண்ணெய் வழிய அரிசி தோசை உளுந்து தோசை என்று மிளகாய் பொடியில் நெய் விட்டு  அடுக்கிச் சாப்பிட்ட மாமிகள் இன்று 90+ ஆகி செஞ்சுரிக்கு காத்திருக்க, ஹெல்தி ஹெல்தி ஓட்ஸ் கஞ்சி  குடிப்பவர்கள் 50+ இலேயே ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போய் விடுகிறார்கள்.நீண்ட ஆயுளுக்கு உணவு மட்டும் அல்ல உணர்வுகளும் காரணம் என்பதை நாம் ஏனோ மறந்து போய் விடுகிறோம். எனவே எதை சாப்பிட்டாலும் , வாரத்துக்கு இரண்டு முறையாவது குடும்பத்துடன் உட்கார்ந்து ஆராமாக BF சாப்பிடுவதை (நல்ல வேளை பார்ப்பதை என்று எழுதிவிட வில்லை;))வழக்கப் படுத்திக் கொள்ளுங்கள். ஆமாம்,Break fast டைமின் போது தான் நிறைய உண்மைகள் வெளியே வரும் என்கிறார்களே, அது உண்மையா?

தலை போகிற அவசரமாக இருந்தாலும் BF ஐ கட் செய்யாதீர்கள் என்கிறார்கள். அப்படி செய்தால் டின்னருக்கும் லஞ்சுக்கும் இடையே கிட்டத் தட்ட பதினைந்து மணிநேர இடைவெளி வந்து விடுகிறது. பின்னால்(ள்) அல்சர் கில்சர் எல்லாம் வந்து விடுமாம்! பாவம் வயிறுக்கு ஏன் துரோகம் செய்ய வேண்டும்?காலையில் ஏதேனும் உள்ளே போட்டு விடுங்கள்..அது பாட்டுக்கு சிவனே அல்லது விஷ்ணுவே என்று கிடக்கட்டும்.




விஷ்ணு என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது. நம் விஷி-க்கு பத்து அல்ல 24 அவதாரங்கள் என்கிறது பாகவத புராணம்.தத்தாத்ரேயர் (சுற்றிலும் நாய்கள் மற்றும் பசுக்களுடன் இருப்பவர்) , பத்ரிகாசிரமத்தில் தவம் செய்யும் ட்வின்ஸ் நர நாராயணர்கள், பாற்கடல் கடைந்த போது தோன்றிய டாக்டர். தன்வந்திரி  , வியாசர், குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவர் ,மோகினி போன்றவை அவரது unofficial அவதாரங்கள்.சைக்கிள் கேப்பில் இவ்வளவு அவதாரங்களை எடுத்துள்ளார் பாருங்கள். சரி நமக்கெல்லாம் பொதுவாகத்  தெரிந்த தசாவதாரத்திலேயே ஒரு குழப்பம். பலராமரை அதில் சேர்ப்பதா வேண்டாமா என்று. 

பலராமரும் கிருஷ்ணரும் ஒரே காலத்தவர்கள் என்பதால் எதற்கு தேவையில்லாமல் ஒரே காலத்தில் இரண்டு அவதாரங்கள்? energy waste, time waste! மேலும் கிருஷ்ணரின் லீலைகள் & பராக்கிரமங்களுடன் ஒப்பிடும் போது பலராமர் கிட்டத்தட்ட ஜீரோ. ஏதோ கிருஷ்ணர் நாரை வாய் பிளக்கும் போதும்  காளையை சுழற்றி எறியும் போதும் மலையை தூக்கும் போதும் கூடமாட ஒரு கை கொடுத்து ஒத்தாசை செய்ததோடு சரி. பலராமரை கணக்கில் சேர்ப்பவர்கள் புத்தரை சேர்ப்பதில்லை. மேலும், விஷ்ணுவின் அவதாரமான புத்தரும் கௌதம புத்தரும் ஒன்றுதானா என்றும் தெரியவில்லை. 


புத்தர் கூட மஹாவிஷ்ணுதான். அதைப் பற்றி கதை ஒன்று சொல்கிறார்கள்.
விஷ்ணுவின் அவதாரங்களின் மகிமையால் மக்கள் மிக நல்லவர்களாக மாறிவிட நரகம் வெறிச்சோடியதாம். யமன் திருமாலிடம் சென்று, யமலோகம் டல் அடிக்கிறது. எண்ணெய்  சட்டியில் போட்டு வறுக்க யாருமே இல்லை.ஆயுதங்கள் துருப்பிடித்து பேரிச்சம் பழத்துக்கு கூட லாயக்கி இன்றி ஆகி விட்டன. யம கிங்கரர்கள் ஈ ஓட்டுகிறார்கள்.(மேனேஜர்களிடம் இருக்கும் கெட்ட பழக்கம் இதுதான். தனக்கு கீழே இருப்பவர்கள் சும்மா இருந்தால் ,என்ஜாய் செய்தால் பிடிக்காது!) எனவே ஏதாவது செய்யுங்கள் என்று வேண்டுகிறார். விஷ்ணு ரஜினி ஸ்டைலில் புன்னகை ஒன்றை asymmetric ஆக உதட்டில் உதிர்த்து 'யமா, கவலை வேண்டாம்..இனி யமலோகம் இந்திய பார்லிமென்ட்  போல பிஸி ஆகப் போகிறது. நான் புத்தர் அவதாரம் எடுத்து மக்களுக்கு தவறான , சாஸ்திரங் களுக்கு எதிரான தர்மங்களைப் போதிப்பேன். எனவே அதைப் பின்பற்றும் மக்களுக்கு நேரடியாக point-to-point நரகம் தான்...இப்போது ஈ ஓட்டும் யம தூதர்கள் ஈ காதில் நுழைந்தால் கூட தெரியாத அளவு பிஸி ஆகி விடுவார்கள் என்கிறார்...




சிவனுக்கு பல்வேறு வடிவங்கள் உண்டே தவிர அவதாரங்கள் இல்லை. வைஷ்ணவர்கள் பௌத்தர்களை கிண்டல் செய்தால் சைவர்கள் வைஷ்ணவர்களை கிண்டல் செய்கிறார்கள். அதாவது சிவன் அழிவற்றவன்.. ஆதி அந்தம் அற்றவன்..தனக்கு பிறப்பும் இறப்பும் உண்டு என்பதை எடுத்துக் காட்டவே  திருமால் உலகில் அவதாரங்களை எடுத்தான் என்கிறார்கள்.இது ஒரு உலா பாட்டில் வருகிறது. ஊலலல்லா பாட்டு தெரியும் அது என்ன உலா பாட்டு ?உலா என்பது ஒரு சிற்றிலக்கியம்.

நாமெல்லாம் வீதியில் உலா (ஊர்வலம்)வரும் சாமியை நள்ளிரவில்  வேடிக்கை பார்த்திருப்போம். போய் தேங்காய் பழம் உடைத்து எட்டணா போட்டுவிட்டு விபூதி பூசிக் கொண்டு வந்து விடுவோம்..ஆனால் அப்படி சமர்த்தாக திரும்பவந்து  போர்த்திக் கொண்டு படுத்துக் கொள்ளாமல் விபரீதமாக உலா வருபவர் மீது பெண்கள் காதல் கொண்டு பாடுவது தான் இந்த உலா. பேதை முதல் பேரிளம்பெண் வரை தலைவனை காதலிப்பது. அம்மாவின் சேலைத்தலைப்பில் தன்னை மறைத்துக் கொண்டு அம்மா இவர் யார் மகனம்மா (இத்தேரமர்பவன் யார் மைந்தன் இது பன்னுக வென்றாடை முதல் பற்றுதலும் மின்னனையார் ....) (இவர் யார் என்று direct -ஆகக்  கேட்கமாட்டாளாம் !..வெட்கமாம்) என்று கேட்பது முதல் காதல் வயப்பட்டு எப்ப வருவாரோ என்று ஏங்கும் வரை.பலபட்டடை சொக்கநாதக்கவிராயர் ராமேஸ்வரர் மீது இயற்றிய உலாவில்(தேவையுலா) இருந்து சில சுவாரசியங்கள்(சிலேடைகள்):-

கண்ணிடந் தப்புமெனக் காலா லுதைத்தொருவன்
கண்ணிடந் தப்புவதுங்  காதேலா -பெண்ணமுதம் 

கண் இடம் தப்பும் - கண் இடம் மாறி விடும் என 
கண் இடந்து அப்பும் -கண்ணை பிய்த்து அப்புதல் 

அங்கிதஞ் செய்தது போலங்கை வளையால் முலையால்
லங்கிதஞ் செய்த தடுக்குமோ - இங்கிதந்தான்

அங்கிதம் செய்தல் -கையெழுத்து இடல் 
அங்கு இதம் செய்தல் -அந்த இடத்தில் இதம் செய்தல் 

மாறனடித்த மதுரை யிலே  யஞ்சாமல்
மாறனடித்த   மதம்பாரீர் -நீறணியும் 

மாற நடித்த மதுரையில் - மண் சுமப்பவனாக மாற நடித்தல்
மாறன் அடித்த  -மாறன் பிரம்பால் அடித்தல் 

மதனை யெரித்தீரே மாதிடஞ்சேர் காம 
மதனை யெரித்திட வொண்ணாதோ -விதனஞ்சேர் 

காமமதனை -காமம் அதனை 

மாமிக்காய் மாமன்போய்  மாமனைக் கொன்றபழி
சேமித்  திடாக்கோடி  தீர்த்தமும்-காமத்தால் 

[ஏதோ கள்ளக்காதல் சமாசாரம் என்று நினைக்க  வேண்டாம்...மாமிக்காய் -மா மிக்காய் -பெருமை மிகுந்து ;மாமன் போய்  -மா மன் போய்  -திருமகள் அரசன் (கண்ணன்) போய்;  மாமனைக் கொன்ற பழி  -கம்சனைக் கொன்ற பாவம் தீர 


ஒன்று இரண்டு மூன்று என்று இறைவனை வரிசைப்படுத்திப் பாடு என்றதும் ஒன்றானவன் உருவில் இரண்டானவன் என்று பாடுவார்  ஔவையார் . இவரும்  ஒன்று இரண்டு மூன்று என்று பாடுகிறார். கொஞ்சம் out-of-box திங்கிங்!


இரு மழுவன் முக்காலன் நாற் கண்ணன் 
வேதம் ஐந்தன் ஆறுதலை மேவினோன் -காதல் 
எழு சமயம் எட்டுலகும் ஒன்பது திக்கும் 
பழுதகலின் பத்து  நிதியும் -தொழவருள்வோன் 


என்னடா இது? ஒரு மழு ,இரண்டு கால், மூன்று கண், நான்கு வேதம், ஐந்து தலை, ஆறு சமயம் , ஏழு உலகு , எட்டு திக்கு ஒன்பது நிதி என்று தானே சிவனைப் பற்றிப்  பாட வேண்டும். இவர் என்ன N +1 என்று ஒன்று சேர்த்து இரண்டு மழு , மூன்று கால், நாலு கண், ஐந்து வேதம், ஆறு தலை, ஏழு சமயம் , எட்டு உலகம் , ஒன்பது திக்கு, பத்து நிதி என்று பாடுகிறாரே , இவருக்கு கணக்குசொல்லித்தந்த  டீச்சர் சரி இல்லையா என்று நினைக்கத் தோன்றும். ஆனால் நாம்தான் சரியில்லை. நாம் ஒரே dimension -இல் யோசிக்கிறோம். கொஞ்சம் கற்பனை குதிரையை கொள் கொடுத்து தட்டி விட்டால் அவரது புலமை புரியும்.



இரு மழுவன் - பெரிய மழுவை ஏந்தியவன் 
முக்காலன் - இறந்த நிகழ் எதிர் என்னும் மூன்று காலமும் ஆனவன் 
ஆற்க்கண்ணன் - ஆலமரத்தின் கண் (ஆலமரத்தினடியில்) இருப்பவன் 
வேதமைந்தன் -வேதத்தின் பொருளை உரைத்தவனை (முருகனை) மைந்தனாகக் கொண்டவன் 
ஆறுதலை மேவினோன் -கங்கை என்னும் ஆறை (நதியை) தலையில் கொண்டவன் 
காதல் எழு சமையன் -அன்பு உதிக்கும் மதத்தவன் 
நெட்டுலகும்  -நெடிய உலகங்களும் 
ஒன்பதுதிக்கும் -ஒன்பதாக உதிக்கும் 
பழுதகல் இன்பத்து நிதியும் - குற்றமில்லாத இன்பம் தரும் நிதியும் 

புண்டரீகக்
கண்ணினான் கண்களுக்குக் காட்டாத பொற்பாதங்
கண்ணிலா வந்தகற்குங்காட்டினோன்  - கண்ணின்

-தாமரை போன்ற கண்களை உடைய திருமால் கீழே சென்று காண முடியாத பாதத்தை (அடிமுடி) கண்ணோட்டம் இல்லாத(பின்னே என்ன நடக்கும் என்ற vision இல்லாத) அந்தகனுக்கு (யமனுக்கு) காட்டினோன்  -உதைத்தவன் 

தாமரைக் கண்ணால்(பெரிய கண்களால்) கூட காண முடியாத பாதத்தை  கண் இல்லாத அந்தகனுக்கு (குருடனுக்கு) காட்டினனான் என்று இன்னொரு பொருள் வருவது சிறப்பு. 

என்பணி கொள்ளும் இராமேசன்  -என் பணிவிடையை ஏற்று அருளும் ஈசன் 
என்பு அணி கொள்ளும் இராமேசன் - எலும்பை மாலையாக அணியும் ஈசன் 

பண்டு பிரிந்த  பவளமும் முத்து மெதிர்
கண்டு  கலந்தன்ன கனிவாயாள் - பண்டைமக 

கடலில் பிறந்த பவளமும் முத்தும் இப்போது மீண்டும் இணைந்தன. எப்படி? simple ...பவளம் போன்ற வாயில் முத்துப் போன்ற பற்கள்..:) 

இப்படி ஒரு வார்த்தை விளையாட்டு வேறெந்த மொழியிலும்  விளையாட முடியுமா என்பது சந்தேகம் தான்.இங்கே, உவமை செய்யும் சில வழிகள்:-

முத்து போன்ற பல் - உவமை 
முத்துப்பல் -உவமைத்தொகை 
பல்முத்து -உருவகம் 
முத்து -முத்தே பல்லுக்கு பதில் ஆகி வருவது.

குபெயர் என்ற இந்த விஷயம் தமிழ் இலக்கணத்தில் முக்கியமானது. ஒரு சொல், நேரடியாக ஒரு பொருளைக் குறிக்காமல் அதற்கு தொடர்புடைய இன்னொரு பொருளை குறிப்பது...தலையை சுற்றி மூக்கை தொடுதல்... இங்லீஷில் metonymy என்பார்கள்.
'ஹாலிவுட்' என்றால் பொதுவாக  அமெரிக்காவில் உள்ள ஒரு நகரம். ஆனால் அது அதனைக் குறிக்க பயன்படாமல் அமெரிக்க சினிமாவுக்கு பொதுவாக  உபயோகப் படுகிறது.DISH என்பது பாத்திரம்...(dish -wash !)..ஆனால் அது சிலசமயம் (dish -இல் போடப்படும்) உணவையும்  குறிக்கலாம்.(side -dish !) மீடியாவை உள்ளே விடாதே என்பதில் மீடியாவில் இருந்து வந்த நிருபர்களை விடாதே என்கிறோம்! உனக்கு போன் வந்துச்சு! என்பதில் போன் என்பது போனில் வரும் call -லை மறைமுகமாகக் குறிக்கிறது!தக்காளிக்கு தண்ணி ஊற்று  (தக்காளிச் செடியின் வேருக்கு தண்ணி ஊற்று (சினையாகு பெயர்).இந்தியா இலங்கையை நேற்றைய ஆட்டத்தில் வீழ்த்தியது...இந்தியா எப்படி வீழ்த்தும்?இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் அணி வீரர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்..(இடவாகு பெயர்) 

எல்லாருக்கும் தெரிந்த  ஒரு உதாரணம் 

அங்கே பாரு பிகர் வருது....( நல்ல பிகரை உடைய பெண் வருகிறாள்.... பண்பாகு பெயர்...யாரங்கே அடிக்க வருவது???)

சரி....ஒரு பொருளின் பெயரே அதைத் தான் உண்மையில் குறிக்கிறதா என்பது தத்துவ விசாரம். குழந்தைக்கு டி .வி யைப் பார்த்து 'அங்கே பாரு சிங்கம்' என்று சுட்டிக் காட்டும் போது உண்மையில் எதைக் காட்டுகிறோம்? உண்மையான சிங்கத்தையா டி .வி யையா?அதன் எலக்ட்ரானிக் பிம்பத்தையா? சிங்கம் என்று குழந்தை மனிதில் ஏற்கனவே பதிவான ஒரு உருவத்தையா ??ரேனே மார்க்ரிட் என்பவர் வரைந்த 'The Treachery of Images' என்னும் ஓவியம் புகழ்பெற்றது.


இந்தப் படத்தில் ஒரு புகைபிடிக்கும் பைப்பை வரைந்து அதன் கீழே 'இது ஒரு பைப் அல்ல' என்று முரண்பாடாக எழுதப்பட்டுள்ளது. ஒரு பொருளின் பெயரோ , உருவமோ எதுவும் அதை குறிக்க(வே) முடியாது என்பது மார்க்ரிட் -இன் வாதம். ஒருவேளை நாம் உபயோகப்படுத்தும் எல்லாப் பெயர்களும் ஆகு பெயர்கள் தானோ?

 
Soundcloud -இல் ரஞ்சனி காயத்ரியை கேட்டுக் கொண்டிருந்தேன்...(இதுவும் ஆகுபெயர் தான்.:-))) கீழ்க்கண்ட தேவாரப் பாடலில் ஒரு வரி அப்படியே மனதுக்குள் stuck ஆனது)3:44 இல் வரும் அமிர்த வர்ஷினி..அல்லது 6:30 இல் வரும் சிந்து பைரவி!  பாடலை IE அல்லது GC  இல் கேட்கவும்..மொசில்லா நரி சில சமயம் கிறுக்கு செய்யலாம்.



மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி
யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.



பிரளயத்துக் கப்பாலோரண்டமாகி - what ???? wait ...இது big -bang ???? பிரளயத்துக்கப்பால் அண்டம்????

 இன்னொரு வரியை பார்த்து விட்டு இதற்கு வருவோம்.பெண்ணாகி பெண்ணுக்கோர் ஆணுமமாகி..சும்மா எதுகைக்காக எழுதப்பட்டது என்று நினைக்கத் தோன்றினாலும் இது ஓர் உயிரியல் உண்மை...'பெண்' தான் உயிரின் PROTOTYPE ...ஆண் சும்மா அவளின் extension தான்.பெண்ணுக்காக தான் ஆண்..ஆணுக்காக பெண் அல்ல... மதங்கள் சொல்வது போல கடவுள் ஆணைப் படைத்து விட்டு அதற்குப் பின் பாரப்பா உன் மகிழ்ச்சிக்கு பெண்ணை உன் தாசியை உன் உடம்பில் இருந்து படைக்கிறேன்,எஞ்சாய்  என்பது அண்டப் புளுகு...பெண் உடம்பு தான் reference.இதனால் தான் ஓர் உயிர் உருவாகும் போது அதை prototype ஆன பெண் என்றே treat செய்து சில நாட்களுக்கு இயற்கை வளர்க்கிறது.மார்புக் காம்புகளை முன்னமே  உருவாக்குகிறது. பின் ஆண் என்று முடிவெடுத்து அவனுக்கு ஆணின் பிரத்யேக உறுப்புகள் வளரத் தொடங்கினாலும் நிப்பிள் அப்படியே மார்பில் நின்று விடுகிறது.ஆண் தான் prototype என்று இருந்தால் எதற்கும் பயனற்ற நிப்பிளை ஆணுக்கு இயற்கை உருவாக்கி இருக்காது...

back to  பிரளயத்துக்கப்பால் அண்டம்


 இது ஒரு sheer co -incidence என்றாலும் ஒன்றுமே இல்லாத சூனியத்தில் ஒரு பிரளயம் தோன்றி பிரபஞ்சம் வெடித்தது என்ற இயற்பியல் தத்துவத்திற்கு எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது? சரி...பிரபஞ்சம் தோன்றியதை விட்டு விடுவோம்... எப்படியோ கழுதை தோன்றி விட்டது...நாமெல்லாம் சுப யோக சுப  தினமான 21-12-2012 வெள்ளிக்கிழமை அன்று சாகிறோமோ இல்லையோ ஒருநாள் பிரபஞ்சம் வெப்பச்சாவு (heat death ) வந்து அனாதையாக  செத்துப்போகுமாம்.
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
 
நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை
வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே
 
வேதமும் ஆகம  விரிவும் பரம்பர
நாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே  -என்று இறைவனையே  வெப்பம் என்கிறார் 
வள்ளலார் 



ச்சா போவதில் இருந்து உலகத் திரைப்படம் எடுப்பது வரை நாம் செய்யும் செயல்கள் எல்லாம் , பிரபஞ்சத்தின் இயக்கங்கள் அனைத்தும் Heat transfer தான். சூரியன் தன்னை விட குளிர்ந்த கிரகங்களுக்கு கிரணங்களை, வெப்பத்தை வெளியிடுகிறது. ஒரு பேச்சுக்கு சூரியனும் பூமியும் ஒரே வெப்ப நிலையில் இருந்தால் அங்கே heat  transfer நடக்காது. ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் போன்ற கவிதைகள் பொருள் இழந்து விடும்.பிரபஞ்சம் மெல்ல மெல்ல தன இயக்கங்களை நிறுத்திக் கொண்டு போதும்டா சாமி என்று ஒரு thermodynamic equilibrium நிலையை அடைந்து விடுமாம்.வெப்ப ஆற்றலை எடுத்தும் கொடுத்தும் டெபாசிட் செய்தும் savings -இல் போட்டும்  கடன் வாங்கியும் திருடியும் அடகு வைத்தும்  ஓகோவென்று நடக்கும் ஆற்றல் வங்கி  பிஸினஸ் ஒருநாள் திவாலாகி entropy கண்டபடி எகிறி இனிமேல் வேலை செய்ய முடியாது என்று அணுக்கள் ஒட்டுமொத்தமாய்  ராஜினாமா செய்துவிட, கம்பெனியை மூடிவிடும் நிலைமை என்று வைத்துக் கொள்ளுங்களேன். என்ன பிரபஞ்சக் கம்பெனி எந்தக் கொம்பனுக்கும் கஸ்டமருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை! இப்போது நாம் இருப்பது ஒருவிதமான சம நிலை அற்ற imbalanced ஸ்டேட்..எனவே நட்சத்திரங்கள் பிறந்து கிரகங்கள் தோன்றி நாமெல்லாம் வந்து டீ குடித்துக் கொண்டே (ஆபீசில்)ப்ளாக் எல்லாம் எழுதுகிறோம். எல்லாமே சமம்...completely balanced என்றால் அங்கே சூனியம் தான்...FLOW ,ஓட்டம் அதுதான் உயிரின் மூலம்..


ழக்கம் போல் ஓஷோ ஜோக்குடன் என் அறிவுப் பொக்கிஷங்களை அறுவையை முடித்துக் கொள்கிறேன்..

" முல்லா , உங்களை நாங்கள்  ஏன் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ள முடியாது என்கிறீர்கள் ;அதற்கு தகுந்த காரணம் காட்டி நிரூபிக்க முடியுமா?" என்றனர் அதிகாரிகள்...போர் நேரம் அது.

முன்னால் அமர்ந்திருந்த முல்லா, "எனக்கு பிறந்ததில் இருந்தே கண்ணில் குறைபாடு சார், பார்வை மந்தம்" என்றார்.

"சரி, அதற்கு எதாவது நிரூபணம் இருக்கிறதா?" 

"கொண்டு வந்திருக்கிறேன் அய்யா, இதோ இது என் மனைவியின் புகைப்படம்" ....

முத்ரா 
 

14 comments:

G.M Balasubramaniam said...


என்னதான் கடவுள் ஆண்டவன் என்பன போன்றவை பற்றிக் கேள்விகள் எழுப்பினாலும் அதன் காரணத்தால் எழுந்த இறை இலக்கியங்கள் ( தமிழில்) ஏராளம் ரசிக்க வைக்கின்றன. எல்லாவற்றையும் படித்து மகிழ கொடுப்பினை இல்லாத என் போன்றோர் ரசிக்கும்படி இருக்கிறது உங்கள் பதிவு. keep it up சமுத்ரா !

”தளிர் சுரேஷ்” said...

சுவாரஸ்யமான தகவல்கள்! புத்தரை பற்றிய கதை நான் அறியாதது! பகிர்வுக்கு நன்றி!

suvanappiriyan said...


//பின் ஆண் என்று முடிவெடுத்து அவனுக்கு ஆணின் பிரத்யேக உறுப்புகள் வளரத் தொடங்கினாலும் நிப்பிள் அப்படியே மார்பில் நின்று விடுகிறது.ஆண் தான் prototype என்று இருந்தால் எதற்கும் பயனற்ற நிப்பிளை ஆணுக்கு இயற்கை உருவாக்கி இருக்காது...//

அதனை அழகுக்காக என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? ஆணழகர்கள் தேர்வாவது அனேகமாக இந்த மார்பு கட்டை வைத்துதானே!

தலைமுடி, நகம், தாடி, மீசை என்பதெல்லாம் கூட ஒரு மனிதனுக்கு அவசியமில்லைதான். ஆனால் அது அந்த மனிதனின் உருவத்தை மேலும் மெருகூட்டுகிறதே

--------------------------------------------------------

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் வெளிப்படுத்தி உலகில் பரவச் செய்தான்;
குர்ஆன் 4:1

சமுத்ரா said...

அழகு எல்லாம் நமக்கு தான்
இயற்கை ஆணழகன் போட்டிக்கு என்று ஆண்களைப்
படைக்கும் என்று நம்ப இயலவில்லை

விஸ்வநாத் said...

// நான் புத்தர் அவதாரம் எடுத்து மக்களுக்கு தவறான , சாஸ்திரங் களுக்கு எதிரான தர்மங்களைப் போதிப்பேன். எனவே அதைப் பின்பற்றும் மக்களுக்கு நேரடியாக point-to-point நரகம் தான் //

எனக்கு தா இந்த வாக்கியம் தப்பா தெரியுதா இல்லே இது உண்மையிலேயே நெகடிவ் அர்த்தம் தருதா ?

Caricaturist Sugumarje said...

அருமை, அருமை, அருமை... ரஞ்சனி காயத்ரியை கேட்டுக் கொண்டே பதிலளிக்கிறேன் :)

Caricaturist Sugumarje said...

ஒரு கேள்வி... கர்நாடக சங்கீதம் கேட்பதற்கு பாக்கெட்டிலோ, வீட்டிலேயோ, வங்கியிலேயோ நிரம்பிவழியவேண்டும்... அப்பொழுதுதான் ரசிக்கமுடியும் என்று ஒரு விமர்சகரே சொன்னதாக் அறிந்தேன்...இதை எப்படி எடுத்துக்கொள்வது?

சமுத்ரா said...

கர்நாடக இசையை ரசிக்க ஆர்வம் மட்டுமே போதுமானது சார்.வீட்டில் டி.வி யும் கேபிளும் இருந்தாலே போதுமானது.எத்தனையோ கச்சேரிகள் வருகின்றன....பணம் இருந்தால்
சி.டி...லைவ் கச்சேரி என்று கொஞ்சம் வாய்ப்புகள் அதிகம்.ஆனால் முதல் தேவை ஆர்வம்...இசையின் மீது ஒரு பக்தி...

Caricaturist Sugumarje said...

நல்லது சமுத்ரா :)

Anonymous said...

iraivan why aanirku marbai padaithan enral avan futuril pen aaga vendum enral harmon injection potu kolvadharkagathan?...

Uma said...

நீங்க ப்ளாக் எழுதறதும் நான் ப்ளாக் படிக்கிறதும் கூட ஒரு Knowledge tranfer தான்னு நினைக்கிறேன்.. நீங்க நெறைய படிச்ச/ கேட்டு(கெட்டு) எழுதறதும் அதை சும்மா உக்காந்து நான் படிக்கறதும் ஒரு imbalanced state'ஒ ....
//பிரபஞ்சம் தோன்றியதை விட்டு விடுவோம்... எப்படியோ கழுதை தோன்றி விட்டது...// Perfect... தோன்றி நம்ம உயிரை எடுக்குது..

Dino LA said...

பயனுள்ள பதிவு.

Vinothini said...

ungakooda doo... no post for long time

Aba said...

செம இன்டரஸ்டிங்..

//நான் புத்தர் அவதாரம் எடுத்து மக்களுக்கு தவறான , சாஸ்திரங் களுக்கு எதிரான தர்மங்களைப் போதிப்பேன். எனவே அதைப் பின்பற்றும் மக்களுக்கு நேரடியாக point-to-point நரகம் தான்...//

ஏதோ நம்ம சமயத்துல அன்பு வழியுதுன்னு சொல்றாங்கன்னு பார்த்தா இப்படி கேவலமான டைரக்ட் அட்டாக் வேறே இருக்கா?

# பாடல்கள்,
அற்புதம், இனி ஒவ்வொரு பதிவிலும் எதிர்பார்ப்பேன்..

//பிரபஞ்சம் தோன்றியதை விட்டு விடுவோம்... எப்படியோ கழுதை தோன்றி விட்டது...//

ROFL..