இந்த வலையில் தேடவும்

Tuesday, December 4, 2012

கலைடாஸ்கோப்-78

லைடாஸ்கோப்-78 உங்களை வரவேற்கிறது .




-சென்ற கலைடாஸ்கோப் -உடன் இந்த ப்ளாக்கில் 300 பதிவுகள் நிறைவடைகின்றன.இது 301-ஆவது! :) வாசகர்களுக்கு நன்றிகள்.


=

FACEBOOK இல் படித்தது:

வெற்றி அடைவதற்கு இரண்டு ரகசியங்கள் :-

ஒன்று:உங்களுக்குத் தெரிந்தது எல்லாவற்றையும் மற்றவர்களிடம் சொல்லி விடாதீர்கள்.


==

  தமிழில் குறும்படம் ஒன்று பார்த்தேன். அது இப்படி செல்கிறது:  மிகவும் அன்னியோன்னியமான  தம்பதி... கணவனுக்கு ஒரு நண்பன். கணவன் ஒருநாள் மனைவியிடம் உனக்கு என்ன கலர் பிடிக்கும்? என்று கேட்கிறான். அவள் " மஞ்சள்" என்கிறாள். சிறிது நேரம் கழித்து நண்பன் மஞ்சள் கலர் சட்டை மஞ்சள் கலர் பேண்டுடன் வந்து நிற்கிறான்.தன் மனைவிக்கு பிடித்த கலர் அவனுக்கு எப்படித் தெரிந்தது என்று குழம்புகிறான் கணவன்.மனைவி இப்போது "எனக்கு மஞ்சள் பிடிக்காது, நீலம் தான் பிடிக்கும் " என்கிறாள்.

மறுநாள் நண்பன் நீல கலர் சட்டை அணிந்து வந்து பீதி கிளப்புகிறான். மனைவி தனக்கு இதை
ப்பற்றி தெரியாது என்கிறாள். கணவன் கடுப்பாகவும், "எனக்கு எந்த கலருமே பிடிக்காது..அதாவது வெள்ளை தான் இனிமேல் என் கலர்" என்கிறாள். மறுநாள் நண்பன் வெள்ளை சர்ட் வெள்ளை பேன்ட் அணிந்து ஸ்டைலாக வீட்டுக்கு வருகிறான். இருவரும் குழப்பமடைகிறார்கள் . நாம் பேசுவதை யாரோ கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறார்கள். கணவன் ஒரு ஐடியா சொல்கிறான். "உனக்கு  பிடித்த கலரை இன்று ரகசியமாக என் காதில் சொல்லு" என்று மனைவியிடம் சொல்கிறான். மனைவியும் ரகசியமாக காதில் சொல்கிறாள். அடுத்த நாள் நண்பன் சிவப்பு நிற சட்டை,பேண்ட்  அணிந்து வந்து நிற்கிறான். மனைவி இப்போது அழுவது போல பாவனை செய்து பின் சிரிக்கிறாள். (அதாவது நண்பன் அணிந்து வந்த கலர் அவள் காதில் சொன்ன கலர் அல்ல ). அப்படியானால் நாம் பேசுவதை யாரோ கண்டிப்பாக கேட்டிருக்க வேண்டும் என்று மனைவி மீண்டும் சந்தேகிக்கிறாள்.பிறகு, கணவன் அது யார் என்று காட்டுகிறேன்;வா என்று மனைவியை கூட்டிச் செல்கிறான்.கணவனின் ஆட்காட்டி விரல் கேமராவை (நம்மை) நோக்கி நீள்கிறது. "வேற யாரு இவங்க தான் அது" என்று கணவன் (நம்மை)சுட்டிக் காட்ட குறும்படம் முடிகிறது.

 முடிவு மொக்கையாக தோன்றினாலும் இதில் Philosophical ஆக நிறைய சமாசாரங்கள் அடங்கியிருக்கின்றன. பார்ப்பவர் அல்லது ஆடியன்ஸ் தன்னுடைய பங்கை மறைமுகமாக Performance -க்கு அளிக்கிறாரா என்று ஆராயும் விஷயம்.மனைவி சொல்லும் கலரை தான் நண்பன் அணிந்து வருவான் என்று நம் மனமே எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறது அல்லவா. மனைவி காதில் சொன்ன கலர் நமக்கு தெரியவில்லை என்றவுடன் இந்த audience involvement  மறைந்து போய்  நண்பன் ஏதோ ஒரு டிரஸ்  அணிந்து வருகிறான் (புரிகிறதா?) மார்ஸல் டுசாம்ப் என்பவர் "கலை என்பது performer -இன் பங்களிப்பு மட்டும் அல்ல...அது audience அல்லது கலையை அனுபவிப்பவரின் மனநிலை, புரிதல், உள்  அனுபவம் இவற்றை சார்ந்தது என்கிறார். "The creative act is not performed by the artist alone; the spectator brings the work in contact with the external world by deciphering and interpreting its inner qualifications and thus adds his contribution to the creative act. - Marcel Duchamp" .

பெரும்பாலான திரைப்படங்கள் , கதைகள் ஒரு விஷயத்தை கதா பாத்திரங்களுக்கு தெரிவிப்பதற்கு முன்னரே அதன் பார்வையாளர் /வாசகர்களுக்கு தெரிவித்து விடும். பேய் , திகில் படங்களில் இதை பெரும்பாலும் காணலாம். அந்த ஹோட்டலில் பேயோ அல்லது கொலைகார சைக்கோவோ இருக்கிறான் என்பது முதலில் நமக்கு தெரிந்து விடும். ஆனால் அப்பாவி ஹீரோயினுக்கு தெரியாது. அப்போது ஆடியன்ஸ்
கதையுடன் ஒன்ற முடியும்... இதற்கு நேர் மாறான விஷயம் துப்பறியும் கதை/படங்களில் நிகழ்கிறது. கதையில் யாரோ ஒருவருக்கு விஷயம் தெரிந்திருக்க வாசகருக்கு அது இன்னும் தெரிவதில்லை...இப்படிப்பட்ட கதைகளில் படிப்பவர் அதனுடன் உணர்ச்சிப்பூர்வமாக ஒன்ற முடிவதில்லை என்பதை கவனியுங்கள்...

எனவே , ஒரு இசையை கேட்கும் போதோ இல்லை ஒரு ஓவியம் , கவிதை இதை கண்ணுறும் போதோ அதில் உங்கள் பங்களிப்பும் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்....அதாவது வாசகன் இன்றி கதை முழுமை அடைவதில்லை...ரசிகன் இன்றி இசை முழுமை அடைவதில்லை...in fact ரசிகன் இன்றி இசையே இல்லை!


===

(தொடர்ச்சி)

ஜான் கேஜ் (John Cage ) என்ற இசைக் கலை
ர் , 4.33 என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார் ..இது வரை உலகில் வெளிவந்த இசை ஆல்பங்களிலேயே மிக வித்தியாசமானது ;சர்சைக்குரியது இது. அப்படி என்ன தான் இதில் இருக்கிறது என்று நீங்களே கீழே கேட்டுப் பாருங்கள்:
(play பட்டன் சில browser -களில் work ஆகாது)




என்ன? குழம்பி விட்டீர்களா? ஆமாம். இந்த ஆல்பம் முழுவதும் மௌனம் தான்...ஆனால் இதை ஒரு இசை ஆல்பமாக கேஜ் வெளியிட்டார்.  இடம் மற்றும் காலம் கடந்த ஒரு சங்கீதம் இது என்கிறார்...நான்கு முப்பத்து மூன்று என்னும் இந்த ஆல்பம் என்றுமே மாறாத (never changing )அதே சமயம் ஒவ்வொரு முறையும் மாறுகிற (ever changing )ஆல்பம் என்று சொல்லலாம்..ஆம் ...ஆல்பத்தை மீண்டும் ஒருமுறை கேட்டுப் பார்க்கவும்..பின் புலத்தில் தோன்றும் சத்தங்களை (உங்கள் ஆபீசிலோ வீட்டிலோ உங்களுக்கு பின்புலத்தில் கேட்கும் சத்தங்கள் ) உங்களால் கேட்க முடிகிறது அல்லவா...அது தான் இந்த ஆல்பம்....இந்த ஆல்பத்தில் யாராவது பாடி இருந்தாலோ அல்லது இசைக் கருவிகள் இசைக்கப் பட்டிருந்தாலோ உங்களுக்கு இந்த பின்புல சத்தங்கள் இயர் போனில் கேட்கவே கேட்டிருக்காது. நம்மை சுற்றிக் கேட்கும் ஒலியெல்லாம் சங்கீதம் என்கிறாரா கேஜ்?அல்லது மௌனம் தான் பிரபஞ்சத்தின் உயரிய சங்கீதம் என்கிறாரா? அல்லது சங்கீதம் என்பதை நாம் தான் உருவாக்குகிறோம் என்கிறாரா? தலை சுற்றுகிறது!


கலைஞனையும் ரசிகனையும் கடந்த ஒரு இசை!  what an idea ! மிகச் சிறந்த வில்லாளி ஒருவன் தன் வில்லை விட்டு விடுகிறான் என்பது ஜென் சொல் வழக்கு.உயரிய இசை ஒன்றில் இசைக்கலைஞன்  மறைந்து விடுகிறான் என்று கேட்டிருப்பீர்கள்.ஆனால்  மகோன்னதமான சங்கீதம் ஒன்றில் இசை, அதை இசைப்பவன் அதைக் கேட்பவன் மூன்று பேரும் ஒருங்கே  மறைந்து விடுகிறார்கள். படைப்பவன், பார்ப்பவன் மறைந்து கடைசியில் படைப்பும் மறைவதே உண்மையான கலை...நாம் என்னடா என்றால் சும்மா ஏதோ ஒரு மொக்கை கவிதை எழுதி விட்டு கீழே சமுத்ரா என்று கையெழுத்து எல்லாம் போடுகிறோம்...படம் ஒன்று வரைந்து விட்டு கீழே நம் பெயரை (எல்லாரும் படிக்க முடியும்படி) கிறுக்குகிறோம் !

ஓஷோவின் இந்த ஜென் கதையைப் படித்து விட்டு மீண்டும் ஒரு முறை 4.33 ஆல்பத்தை கேட்டுப் பாருங்கள்...இது தான் நீங்கள் இதுவரை கேட்ட இசையிலேயே சிறந்தது என்று சொல்வீர்கள்.

வில்வித்தையில் மிகத் தேர்ச்சி பெற்ற வல்லுனன் ஒருவன், வில்லில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்று சவால் விடுகிறான். யாரோ அவனிடம் மலைமேல் வசிக்கும் ஜென் குரு  ஒருவரை சென்று பார்க்கும்படி அறிவுறுத்துகிறார்கள்.அவனும் அவரை சென்று பார்க்கிறான். குரு வில்,அம்பு இவை எதுவுமே இல்லாமல் இருப்பதைப் பார்க்கிறான். குரு அவனை தூரத்தில் உள்ள இலக்கு ஒன்றை குறிவைத்து அம்பெய்யும் படி சொல்கிறார். அவனும் அம்பு எய்கிறான் .அம்பு சற்றுகூட பிசகாமல் குறியை கச்சிதமாக எட்டுகிறது.குரு 'எனக்கு திருப்தி ஏற்படவில்லை' என்கிறார். ஒவ்வொரு முறையும் வல்லுனன் மிகச் சரியாக அம்பை எய்கிறான். ஆனாலும் அவர் திருப்தி அடைவதில்லை."இலக்கு முக்கியம் அல்ல ...எய்பவன் தான் முக்கியம்" நீ அம்பை செலுத்தும் போது  ஒரு வித பதட்டம் தெரிகிறது...அங்கே "நீ" இருக்கிறாய்..இலக்கை சரியாக துளைக்கிறாயா என்பது முக்கியம் அல்ல..வில்லை விட்டு அம்பு புறப்படும் அந்த மனமற்ற கணம் தான் முக்கியம்" என்கிறார். அவனுக்கு அந்த கலை கடைசி வரை வரவே இல்லை... ஒருநாள் தான் ஊருக்கு செல்வதாக சொல்லி விட்டு வல்லுனன் விடை பெறுகிறான் .அப்போது குரு கடைசியாக ஒரு முறை முயன்று பார்க்கும்படி சொல்கிறார்.அவன் நாணில் அம்பைப் பூட்டி அதை விடுகிறான். முதல்முறையாக ஒரு புதிய அனுபவத்தை உணர்கிறான். அன்று அவன் மனம் இறக்கிறது. குரு  ஓடிவந்து அவனை கட்டிக் கொள்கிறார்.."முதல்முறை நீ இலக்கின் கவலை இன்றி முழு ஓய்வில் அம்பு எய்ததைப் பார்த்தேன்..அங்கே நீ இருக்கவில்லை.அம்பு தானாக வில்லில் இருந்து நழுவிக் கொண்டு சென்றது...உன் கண்களில் அந்த பதட்டம் இல்லை..முழு ஓய்வு இருந்தது" என்கிறார். அவன் இனிமேல் தனக்கு வில்லும் அம்பும் தேவையில்லை என்று அவற்றை தூர எறிந்து  விடுகிறான்.

====
ரெஸ்டாரன்ட் ஒன்றின் ரெஸ்ட்-ரூமில் படித்தது:-

Let go..There are better things to hold on to..

=====

ஆபீஸில் முப்பது நாளுக்கு ஒருமுறை இந்த 'password ' மாற்ற வேண்டி இருக்கும்.முதலில் உபயோகித்த ஐந்து password மறுபடியும் உபயோகிக்கக் கூடாது என்பதால் இது ஒரு பெரிய தலைவலி.password  set செய்வது ஒரு 
பெரிய கலை தான்...இப்போதெல்லாம் password set செய்ய ஒரு technique பயன்படுத்துகிறேன். பாட்டி சொல்லிக் கொடுத்த நூற்றுக்கணக்கான பாடல்கள் கை(தலை)வசம் உள்ளன. அதை வைத்து பாஸ்வேர்ட் அமைத்து விடுகிறேன்.உதாரணமாக நகுமோமு கனலேனி என்றால் என் பாஸ் வேர்ட் பெரும்பாலும் NAG$123kan என்று இருக்கும். (ஐயோ..ரகசியத்தை சொல்லி விட்டேனா ! யாராவது ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் -ஐ ஹேக் செய்து விடாதீர்கள் அமாம்)நீங்களும் சினிமா பாட்டு ஏதாவது வைத்து உங்கள் பாஸ்வேர்ட் -ஐ உருவாக்கலாம்.வொய் திஸ் கொலைவெறி பாட்டு உங்களுக்கு அந்த சமயத்தில்  நினைவில் வந்தால் WHY$%123this என்று அமைக்கலாம்.ஒருவரின் password ஐ வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்று தோராயமாக சொல்லி விடலாம். ஒருவர் தன் password -ஐ யாருக்கும் சொல்லமாட்டார் என்பதால் இந்த password psychology நடைமுறைக்கு வரவே வராது என்று தோன்றுகிறது.

* ஒழுங்கே இல்லாமல் கண்டபடி p .w .set செய்பவர்கள்: (ADJakaA4@uty)
 -இவர்கள் கலையார்வம் அற்றவர்கள். வாழ்க்கையில் எதையும்  அதிகமாக பிளான் செய்ய மாட்டார்கள். TAKE IT  EASY type !

* எல்லாராலும் எளிதில் கண்டுபிடிக்க முடியும்படி  p .w .set செய்பவர்கள்-பெயர் குமார் என்றால் kumar@123
-இவர்கள் எளிதில் ஏமாறக்கூடிய அப்பாவிகள்.

*உலகின் தலைசிறந்த super computer கூட மண்டை உடைத்துக் கொண்டாலும் ஹேக் செய்ய முடியாதபடி p .w அமைப்பவர்கள் 
(Q!ux##l-B@rnj&&!ix)
-இவர்கள் மிகவும் கறார் பேர்வழி. மிகவும் ஜாக்கிரதை ஆனவர்கள்.

* symmetric ஆக password அமைப்பவர்கள். (qwe12321ewq
-கலைநயம் மிக்கவர்கள் இவர்கள்..எதையும் அழகுணர்ச்சியோடு பார்ப்பவர்கள்.

* முதலில் இருந்த girl  friend பெயரில் எல்லாம் pw அமைப்பவர்கள்.
(DivyaI143U)

-மிகவும் emotional பேர்வழிகள்.

======

 தலைபோகிற ஒரு விஷயத்தைப் பற்றி இப்போது பேசலாம். பழைய roommate ஒருத்தனுக்கு முடி உதிரும் பிரச்சனை இருந்தது.almost எல்லாம் உதிர்ந்து கிட்டத்தட்ட சொட்டை ஆகும் நிலை! அப்போது டி .வியில் 'அமேசான்' காடுகளில் கிடைக்கும் மூலிகையில் தயாரிக்கப்பட்ட ஹேர் லோஷன் ஒரே மாதத்தில் ரிசல்ட்(?) கியாரண்டி என்றெல்லாம்  ஒரு விளம்பரம் வந்தது. நண்பன் உடனே missed கால் கொடுத்து ஆர்டரும் செய்து விட்டான்.(I mean missed call கொடுத்தால் அவர்கள் திரும்பக் கூப்பிடுவார்கள்) பிறகு அதை உபயோகித்து வந்தான் போலிருக்கிறது. வேலை விஷயமாக பிரிந்து விட்டோம். பிறகு இரண்டு வருடங்கள் கழித்து சந்தித்த போது எல்லா முடியும் complete -ஆக உதிர்ந்து ஏதோ பெயருக்கு ஒன்றிரண்டு சோட்டா பீம் ராஜு போல ஒட்டிக் கொண்டிருந்தது.'அமேசான்' லோஷன் வேலை செய்யவில்லையா என்று கேட்டதற்கு அது போட்டு இருந்த முடியும் உதிர்ந்தது தான் மிச்சம் என்று வேதனையுடன் சொன்னான். முடி உதிர்வதை தீர்மானிக்கும் ஜீன்களை அறிவியல்  கண்டுபிடிக்கும் வரை ,அல்லது hair  transplantation செய்து கொள்ளும் வரை இழந்த முடியை யாராலும் திரும்பக் கொண்டு வர முடியாது என்றே தோன்றுகிறது.இருக்கிற முடியை காப்பாற்றிக் கொள்ள மட்டும் சில டிப்ஸ்:

* தினமும் தலைக்கு தண்ணீர் ஊற்றுவது தேவையில்லை. வாரம் இரண்டு முறை தலைக்கு குளியல் போதும்.கூடுமானவரை உப்புத் தண்ணீர் தவிர்க்கவும்.

* ஹெர்பல் ஷாம்பூக்கள் நல்லதுதான். ஆனால் அவை பொடுகை நீக்க ஏற்றவை அல்ல.உங்களுக்கு பொடுகுப் பிரச்சினை இருந்தால் ஏதாவது anti dandruff ஷாம்பூவையும் (அளவாக)உபயோகிக்கவும்.  brand ஐ அடிக்கடி மாற்ற வேண்டாம்.

*உங்கள் தலையணை உறையை  அடிக்கடி துவைத்து வெயிலில் காய வைக்கவும். ஆறு மாதம் ஆகியும் துவைக்கவில்லை என்றால் உங்கள் தலை அழுக்கு பொடுகு மீண்டும் உங்களுக்கே வந்து விடும்.

*பிளாட்பாரத்தில் விற்கும் இரண்டு ரூபாய் ஐந்து ரூபாய் சீப்புகள் உங்களிடம் இருந்தால் அவற்றை தூக்கி வீசி விடவும். சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கும் Root என்ற rounded edge சீப்புகள் உபயோகிக்கவும்.

*  பழைய தமிழ்ப்பட ஹீரோ போல தினமும் எண்ணெய் தேய்த்து படிய வாருவது தேவை அற்றது. இப்போது இருக்கும் pollution இல் தலையில் உடனே அழுக்கு  சேர்ந்து விடும்.தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவு எண்ணெய் தேய்த்துக் கொண்டால் போதும் . முடிந்தால் ஆலிவ் ஆயில் உபயோகிக்கவும்.
*எண்ணெய் தேய்க்கும் போது முடியை லேசாக 15 நிமிடம் மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர வைக்கும் என்கிறார்கள்.

*தலைக்கு குளித்து விட்டு உடனே முடியை டவலால் வரக் வரக் என்று துடைக்காதீர்கள் . fan காற்றில்  இயல்பாக காய விடுங்கள்.

*வெய்யிலில் அதிகம் அலைவதை,கலரிங் செய்து கொள்வதைத்  தவிர்க்கவும்.

*ஒன்றரை மாதம் ஒருமுறை கட்டிங் செய்து கொள்ளவும்.நீண்ட முடிக்கு பராமரிப்பு அதிகம் ஆகிறது.

* முடி  உதிர டென்ஷனும் ஒரு காரணம். நீங்கள் டென்ஷன் ஆகா விட்டாலும் பிரபஞ்சம் அப்படியேதான் இருக்கும். எனவே டென்ஷனைக் குறைத்துக் கொள்ளவும்.

*தினமும் ஏழு மணிநேரத் தூக்கம், நிறைய தண்ணீர் குடித்தல் ஆகியன முக்கியம்.

*இது எல்லாம் செய்த பின்பும் முடி கொட்டினால் 'விக்' என்ன விலை என்று விசாரிக்கவும்.அல்லது ஆண்களுக்கு சொட்டை தான் அழகு என்று மனதைத் தேற்றிக் கொள்ளவும்.



=======

ஓஷோ ஜோக் 

சிறுவன் எர்னி ஒரு ஆமை வளர்த்து வந்தான்.ஒருநாள் ஆமை நீச்சல் குளத்தின் அருகே இறந்து கிடந்தது .எர்னி சத்தம் போட்டு அழத் தொடங்கி விட்டான்.

அவன் அப்பா ஓடி வந்து என்ன என்று பார்த்தார்.."ஆமை செத்துருச்சு" என்றான் எர்னி.

"அழாதே எர்னி..சமத்து இல்ல...நான் உன்னை இன்னிக்கி எக்ஸ்சிபிஷன் 
கூட்டிப் போறேன்..நிறைய ஐஸ் கிரீம் வாங்கித் தரேன்..."

எர்னி அழுகையை நிறுத்த வில்லை..

"அப்படியே ஷாப்பிங்  போய் உனக்கு புது டிரஸ் வாங்கலாம். பிறகு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு உனக்குப் பிடித்த பொம்மை வாங்கித் தாரேன் ..இப்ப சமத்தா இரு..ஆமையை புதைக்கலாம்."

எர்னி அழுவதை நிறுத்தி விட்டு ஆமையை புதைக்க ஒப்புக் கொண்டான்.

கையால் தொட்டதும் ஆமை சரேல் என்று நகர்ந்து குளத்துக்குள் ஓடியது 

"எர்னி..பாரு உன் ஆமை சாகலை" என்றார் அப்பா..

"அப்பா! அப்பா! ஆமையை  கொன்னுரலாம்ப்பா " என்றான் எர்னி.

~சமுத்ரா 

5 comments:

”தளிர் சுரேஷ்” said...

எனக்கு சொட்டைதான் அழகு! ஷாம்பூ நிறைய உபயோகித்து முடிநிறைய இழந்துவிட்டேன்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

Aba said...

//பார்ப்பவர் அல்லது ஆடியன்ஸ் தன்னுடைய பங்கை மறைமுகமாக Performance -க்கு அளிக்கிறாரா//

குவாண்டம் இயற்பியலோட விளைவுகள் இதத்தான் சொல்லுதுன்னும், நவீன இயற்பியலால சில விஷயங்களை (இன்னும்) விளக்க முடியாம இருக்கறதுக்கு அது இந்த observer's effect ஐ கூட்டு சேர்த்துக்காததுதான் காரணம்னும் சொல்லிகிட்டு, ஒட்டுமொத்த இயற்பியலுக்கும் ஆப்படிக்கடிக்கிறோம், அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைக்கிறோம்னு Bio centrism ங்கற புது தத்துவத்துடன் ஒரு கூட்டம் அலையுது. அதைப் பற்றின உங்க கருத்தை எழுதினா நல்லா இருக்கும்.

//"அப்பா! அப்பா! ஆமையை கொன்னுரலாம்ப்பா " என்றான் எர்னி.//

LOL... உங்களை மாதிரியே யோசிக்க ட்ரை பண்ணினா, இந்தக் கதைக்குப் பின்னாடியும் ஒரு மாபெரும் சைல்ட் சைக்காலஜி பிரச்சனை காட்டப்பட்டிருக்கு. குழந்தைகள் அழும்போதும், பிடிவாதம் பிடிக்கும்போதும் பல பேர், அந்த உணர்ச்சிகளை எப்படி சரியா சமாளிக்கறதுன்னு சொல்லிக் கொடுக்காம, அந்த நிமிஷத்துல குழந்தையை தாஜா பண்றதுக்கு லஞ்சம் கொடுத்துடறாங்க. இந்தப் பழக்கத்துனால குழந்தைங்க, பிடிவாதம் தப்புன்னு புரிஞ்சுக்கரதுக்குப் பதிலா அதையே அட்வான்டேஜா எடுத்துக்க பழகிக்கறாங்க... (அப்பாடா, நானும் இலக்கியவாதி ஆயிட்டேன்)

சமுத்ரா said...

நன்றி அபராஜிதன், S.Suresh.

Caricaturist Sugumarje said...

அருமை!

Unknown said...

அருமை.....