இந்த வலையில் தேடவும்

Thursday, November 22, 2012

கலைடாஸ்கோப்-77

லைடாஸ்கோப்-77 உங்களை வரவேற்கிறது  

“Home is where you hang your head” - Groucho Marx
 
எந்த ஒரு குழந்தையும் கீழ்க்கண்ட இரண்டையும் கடந்து வர வேண்டி இருக்கும். 1. Home work 2. Home Sick. Home work பற்றி இப்போது பேசப் போவது இல்லை. [கவர்மென்ட் ஸ்கூல் என்பதால் சனி ஞாயிறு வீட்டுப் பாடங்களை வெள்ளிக் கிழமை ஸ்கூலிலேயே முடித்து விடுவோம் :)....] சில குழந்தைகளுக்கு எத்தனை வயதானாலும் அதாவது  home work போனாலும் home sick மட்டும் அவர்களை விட்டுப் போகவே போகாது. (என்னைப் போல!) ஆபீசில், இப்போது தானே ஊரில் இருந்து வந்தாய்? மெயில் பாக்ஸ் கூட ஓபன் செய்யவில்லை அதற்குள் KSRTC.IN ஓபன் செய்கிறாயே என்று கேட்பார்கள். என்ன செய்வது ? என் ஹொம் சிக் அத்தகையது!இதனாலேயே வெளிநாடு போகும் வாய்ப்புகளை பெரும்பாலும் தவிர்த்து இருக்கிறேன்.ஆபீசில் வடநாட்டுக் காரர்கள் சில பேர் வருடம் ஒருமுறை தான் பெரும்பாலும் தீபாவளிக்கு ஊருக்குப் போகிறார்கள். சின்ன வயதிலிருந்தே ஹாஸ்டலில் வளர்ந்தவர்களாம் ....வீட்டில் ஒருவாரம் இருந்தாலே HOMESICK வந்து விடுமாம்!!!!


சொந்த வீட்டில் இருந்தே தினமும் ஆபீசுக்கு சென்று வருபவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று தோன்றுகிறது...!!! ஊரில் இருப்பவர்களை இங்கேயே கூட்டி வந்து விட வேண்டியது தானே? பெங்களூரிலேயே வீடு வாங்கி விட வேண்டியது தானே என்று கேட்கிறார்கள்....வீட்டை வேண்டுமானால் இங்கே shift செய்யலாம்.. ஆனால் ஊரை!???சொர்
க்கமே என்றாலும் சொந்த ஊர் போல வராது இல்லையா?

=====================
'போகோ' டி .வி யின் 'சோட்டா பீம்' பார்ப்பீர்களா? எனக்கு ஏனோ
சோட்டா பீம் பிடிப்பதே இல்லை. குழந்தைகளை சூப்பர் ஹீரோவாகக் காட்டும் கார்ட்டூன்களை நான் எப்போதும் வெறுத்து வந்திருக்கிறேன். குழந்தைகள் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்..

அரக்கர்களை, வில்லன்களை, திருடர்களை, காட்டு விலங்குகளை சோட்டா பீம் அனாயாசமாக கையில் சுழற்றி எறிகிறான். வானில் சர்வ சாதாரணமாக பறக்கிறான். குதிரை ஓட்டுகிறான்.....ராஜு என்ற ஒரு வயதே நிரம்பிய குழந்தை 'கெட்டவர் ' களை கையால் குத்தியே அடக்குகிறது! ஓடி வரும் காளை என்ன? பதுங்கி வரும் பாம்பு என்ன எல்லாமே சோட்டா பீமுக்கு 'ஜுஜுபி' தான்.

 இத்தகைய கார்ட்டூன் கேரக்டர்களால் குழந்தைகளுக்கு தைரியம் வளரும் என்கிற வாதம் என்னவோ உண்மை தான். ஆனால் குருட்டு தைரியம் ஆபத்தானது அல்லவா? பாம்பைப் பார்த்தால் விலகி வந்து விடு என்று நம் குழந்தைகளுக்கு சொல்லித் தருவது தான் நல்லது. தன்  குழந்தை சோட்டா பீமாக இருப்பதை எந்த தாயும் விரும்ப மாட்டாள் என்றே தோன்றுகிறது. தன் கண் முன்னே தன் மகன் ஆரோக்யமாக எந்த வில்லங்கமும் வியாதியும் வேதனையும் இன்றி  வளர வேண்டும் அதுவே போதும் என்பது தான் எந்த ஒரு தாயின் விருப்பமாக இருக்கும். எதற்கு பயப்பட வேண்டும் எதற்கு பயப்படக் கூடாது என்று 'அஞ்சுவதஞ்சலை'நாம் தான் குழந்தைகளுக்கு  சொல்லித் தர வேண்டும் ...இல்லாத பேய்க்கு பயப்படும் படி குழந்தைகளுக்கு சொல்லித் தருவது முட்டாள்தனம் . பாம்பு வந்தால் பயப்படாமல் சோட்டா பீம் மாதிரி அதை எதிர்க்கணும் என்ற எண்ணத்தை மனதில் விளைவிப்பது அதைவிட வடிகட்டிய முட்டாள்தனம்.

================

ஸ்பூனர் ,ஸ்பூனர் என்று ஒரு ஆள் இருந்தாராம். அவருக்கு பாவம் நாக்கில் ஏதோ கோளாறோ இல்லை சும்மா கிக்குக்காகவோ வார்த்தைகளில் எழுத்துகளை மாற்றி மாற்றி பேசுவாராம்.

Go and take a shower என்று சொல்வதற்கு பதில் Go and shake a tower என்பாராம்.இதனாலேயே இதற்கு spoonerism என்று பெயர் வைத்து விட்டார்கள்.  நாமும் நிறைய தடவை டங் -ஸ்லிப் ஆகி இதற்கு ஆட்பட்டிருப்போம்! தமிழில் Exact 
spoonerism கொஞ்சம் அரிது என்றாலும் வார்த்தைகளின் முதல் எழுத்துகளை மாற்றிப் போட்டு இப்படி சிலவற்றை உருவாக்கலாம் :-(இரண்டுக்கும் அர்த்தம் இருக்க வேண்டும்)

- கேட்டு பாக்கலாம் - பாட்டு கேக்கலாம்
- கொற்றவன் விழித்தான் -விற்றவன் கொழித்தான்
- கடலில் குளி  - குடலில் களி
- தாங்கி வந்தான் -வாங்கி தந்தான்
- வாடிய பயிறு -பாடிய வயிறு
- வாக்கு தந்தான் -தாக்க வந்தான்
- பறவைக் காய்ச்சல் -கறவை பாய்ச்சல்
- மாடு கறந்தா
ள்- காடு மறந்தாள்
- சாமி மாலை -மாமி சாலை
- காட்டு மலர் -மாட்டு கலர்
- பாட்டு கட்டணம் -காட்டு பட்டணம்
- முதிர் அரசு -அதிர் முரசு 

-  பாக்கு வெட்டி -வாக்குப் பெட்டி
- தேசம்  பாடு -பாசம் தேடு
-ஆச்சி பேரு -பேச்சி ஆரு (?)
- குட்டை மணம் -மட்டை குணம்
- பூட்டை மாட்டு -மாட்டை பூட்டு
- ஊனை படை -பானை உடை (இதில் மனித வாழ்வு முழுதும் அடங்கி விட்டதே :))

=====================

'நம்பர்' (Number)என்றால் என்ன என்று சில வேளைகளில் சிந்தித்திருக்கிறீர்களா? (என்னது , இல்லையா?! அப்ப நான் மட்டும்தான் லூசா?) சரி....

ஒன்று என்றால் என்ன? ஒன்று என்றால் ஒன்று என்று சொல்லக் கூடாது ( தத்துவம் வேதாந்தம் எல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம்)நம்பர் ஒன்று என்பதற்கு ஆச்சரியமாக எந்த வரையறையும் இல்லை. ஒன்றிலிருந்து இரண்டுக்கு செல்லும் போது விஷயங்கள் இன்னும் குழப்பமடைகின்றன.
இரண்டு என்பது என்ன? 'ஒன்று' , அது போல் இன்னும் 'ஒன்று' ..அதுதான் இரண்டா? இரண்டு ஒன்றுகள் சேர்ந்தது இரண்டு என்று சொன்னால் நாம் மீண்டும் ஒரு வட்டத்துக்குள் மாட்டிக் கொள்கிறோம். அதாவது இரண்டுக்கான வரையறையில் மீண்டும் நாம் இரண்டையே உபயோகிக்கிறோம்.  இரண்டு என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே மாதிரி இருக்கும் பொருளை குறிக்க பயன்படுகிறது என்று சொல்லலாம். உதாரணமாக வள்ளியிடம் ஒரு ஆடு, ஒரு நாய், ஒரு கோழி ஒரு பன்றி இருக்கிறது என்று சொல்லும் போது இரண்டின் தேவையே ஏற்படுவது இல்லை.in fact , அப்போது ஒன்று என்பது கூட தேவைப்படுவது இல்லை. ஒரே ஆடு மாதிரி இன்னொன்று இருந்தால் அதை எப்படி குறிப்பிடுவது? 
ஒன்று அல்ல என்றா ? ஒன்றைப் போன்ற இன்னும் ஒன்று என்றா? தலை சுற்றுகிறது.

இயற்கைக்கு எண்களைப் பற்றிய ஐடியா இல்லை என்ற கருத்தை முன்வைக்கிறார் ஓஷோ. இங்கே இரண்டு விதமான வாதங்கள் இருக்கின்றன

ஒன்று
* இயற்கை கணக்கில் Ph .D வாங்கியிருக்கிறது அதற்கு கணிதம் கால்குலஸ் எல்லாம்  தெரியும் என்று நம்புவது ( ஆண் பெண் பிறப்பு விகிதம், சில இயற்கை Fractal pattern கள் இவற்றையெல்லாம் பார்த்து விட்டு சொல்வது)

இரண்டு
* எண்கள் , கணிதம் என்பதெல்லாம் மனிதனின் படைப்பு ..இயற்கைக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று நம்புவது.(அந்த ரூமில் ஆறு நாற்காலிகள் இருக்கின்றன என்று சொல்கிறோம்... உண்மையில் அங்கே 'ஆறு' நாற்காலிகள் இல்லை....அங்கே மனிதர்கள் யாரும் இல்லை என்றால் வெறுமனே நாற்காலிகள் இருக்கும்...'ஆறு' இருக்காது )

மேலும், மனிதன் ஒன்பது வரை எண்ணி விட்டு பிறகு இலக்கங்களை Repeat செய்து விடுகிறான் ..மனிதனுக்கு பத்து விரல்கள் இருப்பதால் இந்த MODE -10 ஏற்பட்டது என்று சொல்கிறார்கள்.இப்படி இலக்கங்களை repeat செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நூறு வரை ஆயிரம் வரை பிரத்யேக எண்களை  வைத்துக் கொண்டு அதன் பிறகு Repeat செய்யலாம்....எல்லாம் நம் சௌகரியம் தான்....

மேலும் ஒன்று ,இரண்டு, மூன்று என்று எண்ணி விட்டு பிறகு அவற்றையே (அந்த digit -களையே )திரும்ப உபயோகிக்கலாம். தப்பில்லை. மனிதனுக்கு கையில் மூன்றே விரல்கள் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்கும் ....நான்கு ஐந்து ஆறு எல்லாம் தேவையில்லை. உதாரணமாக 1,2,3 என்று எழுதி விட்டு பிறகு நான்கு என்பதை 11 ஐந்து என்பதை 12 ஆறு என்பதை 13 ஏழு  என்பதை 21 எட்டு:22 ஒன்பது:23 பத்து: 31 பதினொன்று: 32 பன்னிரண்டு : 33 பதிமூன்று : 111 என்று எழுதலாம். ஏன் நம் கம்ப்யூட்டருக்கு கூட இரண்டு மூன்று ,நாலு எல்லாம் தெரியாது. ரெண்டே ரெண்டு எண்களை   தெரிந்து வைத்துக் கொண்டு அது உலகையே ஆட்சி செய்யவில்லையா? ரெண்டும் ரெண்டும் 4 (நாலு )அது என்றும் மாறாதுடா கோபாலு என்று சொல்வதெல்லாம் சும்மா relative ....நாம் பார்த்த mode -3 முறையில் ரெண்டும் ரெண்டும் 2+2 = 11 (இப்போதைய பதினொன்று ) என்று வரும்....

mode -3 வாய்ப்பாடு ஒன்று:

1x1=1
1x2=2
1x3=3
2x1=2
2x2=11
2x3=13
3x1=3
3x2=13
3x3=23
11x1=11
11x2=22
11x3=33
12x1=12
12x2=31
5x 3=113
:):):()

இப்போதைய நம் mode -10 இல் நம்பர்-9 கொஞ்சம் ஸ்பெஷல்... குழந்தைகளிடம் கீழ்க்கண்ட விளையாட்டை விளையாடிப் பாருங்கள்:

ஏதோ ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளவும். (எத்தனை இலக்க  எண்ணாயினும் சரியே) அதன் இலக்கங்களை கூட்டி வரும் எண்ணை அந்த முதல் எண்ணில்  இருந்து கழிக்கவும் .இப்போது வரும் எண்ணில் இருந்து ஏதாவது ஒரு இலக்கத்தை (digit -ஐ) அழித்து விடவும். மீதி இருக்கும் எண்ணை  அப்படியே சொல்லவும். அதில் இருந்து எந்த இலக்கம் அழிக்கப்பட்டது என்று சுலபமாக சொல்லி விடலாம்.

உதாரணம்: விளையாடுபவர் 36578 என்ற எண்ணை  நினைத்துக் கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.

இப்போது 36578 - (3+6+5+7+8) = 36549

36549 இல் நடு இலக்கமான 5 ஐ அழித்து விட்டு மீதி 3649 என்று சொல்வார்கள்....இப்போது சொன்ன எண்ணின் இலக்கங்களை மறுபடியும் கூட்டவும்.3+6+4+9= 22 =4.. இந்த நான்கை ஒன்பதில் இருந்து கழித்து விட வேண்டியது. 9-4 =5....5 என்ற எண்  தான் அழிக்கப்பட்டது  என்று பந்தாவாக சொல்லி விடலாம். நமக்கு விடை பூஜ்ஜியமாக வந்தால் விளையாடுபவர் ஒன்பதையோ அல்லது பூஜ்ஜியத்தையோ அழித்திருக்க  வேண்டும் ....

===========================================

ஒரு 'சிறிய' சயின்ஸ் பிக்ஷன் கதை...

தேதி -30:2:5012*

ஷீலா சமையல் செய்து கொண்டிருக்கிறாள். ..அவள் கண்களில் இருந்து bio light வேலை செய்து கொண்டிருக்கிறது.இப்போது டார்ச் லைட், கேண்டில் எமர்ஜென்சி லைட் எல்லாம் இல்லை.எல்லாருக்கும் சிறு வயதிலேயே ஆபரேஷன் செய்து கண்ணில் பயோ லென்ஸ் பொருத்தி விடுகிறார்கள்... கரண்ட் போய் விட்டால் சுவிட்ச்-ஐ ஆன்  செய்தால் நம் கண்ணில் இருந்தே வெளிச்சம் வரும்...உடலில் இருக்கும் bio -எனர்ஜியை ஒளியாக மாற்றுகிறது அது. உடலில் இதயம் துடிக்கிறது நுரையீரல் வேலை செய்கிறது...வயிறு வேலை செய்கிறது. இதில் இருந்தெல்லாம் மின்சாரம் எடுத்து அதில் இருந்து வெளிச்சம் வரவைப்பது....

"டி ,ஷீலா! ரெண்டு நாளா உடம்பு சரியில்லை....அதனால என் bio  light வேலை செய்யலை...கொஞ்சம் சார்ஜ் ஏத்திக் கொள்கிறேன் வாடி" என்றால் வர மாட்டேன் என்கிறாள் .சார்ஜ் ஏற்றும் சாக்கில் நான் வேறு ஏதாவது செய்த ஆரம்பித்தால் சமையல் வேலை நின்று விடுமாம்! அதனால் என்ன? வழக்கம் போல நியூட்ரிஷன் காப்ஸ்யூலை முழுங்கலாம் என்றால் கேட்க மாட்டேன் என்கிறாள். அரசாங்கம் ஞாயிறு ஒரு நாள் மட்டும் இப்படி traditional ஆக சமைத்துக் கொள்ள அனுமதித்து அன்று ஒரு நாள் மட்டும் டியூபில் கேஸ்  சப்ளை செய்கிறது. அதை ஏன் விட வேண்டும் என்று இன்று பாட்டி சமையல் செய்து கொண்டு உட்கார்ந்திருக்கிறாள் .அதுவும் ராத்திரி  21 மணிக்கு மேலே சமையலை ஸ்டார்ட் செய்திருக்கிறாள்!

காய்கறி எல்லாம் கொள்ளை விலைக்கு ஏறிப் போச்சு! international பார்ம் சென்டரில் மட்டுமே விளைவிக்கிறார்கள் ....கொஞ்சம் கேரட் , கொஞ்சம் கத்திரிக்காய் , கொஞ்சம் பீன்ஸ் தக்காளி கொத்தமல்லி எல்லாம் நூறு  இண்டோ என்கிறான் படுபாவி......ஆங்..இந்த இண்டோ இப்போதைய காசு... ரூபாய் ,யூரோ, டாலர் எல்லாம் மலையேறி ஆயிரம் வருஷம் ஆகிறது ....உலகில் கண்டங்கள் எல்லாம் முட்டிக் கொண்டு ஒன்று சேர்ந்த பின் ஒரே இன்டர்நேஷனல் கரன்சி தான்..இண்டோ ...அதைப் பார்க்க முடியாது எலக்ட்ரானிக் கரன்சி..சும்மா மாடலுக்காக ஒன்று ஐ.மியூசியத்தில் வைத்திருக்கிறார்கள்...உலக கண்டங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்த பின்னும் ஆசியா அமெரிக்கா என்று பிரிவினை தொடர வேண்டுமா எல்லாம் ஒரே உலகம் ஒரே கண்டம் 'பாஞ்சியா' என்று கொண்டு வர வேண்டும் என்று அரும்பாடு பட்டு போராடிய ரீமேனின் படத்தை இண்டோவில் அச்சிட்டு போட்டிருக்கிறார்கள்....இப்போது கண்டங்களை கடல்கள் அல்ல மலைகள் பிரிக்கின்றன..கண்டங்கள் மோதிக் கொண்டபோது உருவானவை.. .அவைகளுக்கு ஹிமாலயன் -2
ஹிமாலயன் -3....என்று பெயரிட்டு விட்டார்கள்...நம் இந்திய ஹிமாலயம் இன்னும் வளர்ந்து கொண்டு இருக்கிறது!

நான் இப்போ போய் ஷேவ் செய்து கொண்டு ஷீலா செய்ததை சாப்பிட வேண்டும்....சாப்பாடு எப்படி இருக்கிறதோ..! ஆண் குழந்தைகளுக்கு இப்பவெல்லாம் சின்ன வயதிலேயே ஆபரேஷன் செய்து தாடி மீசை முளைக்காமல் செய்து விடுகிறார்கள்...டெய்லி  ஷேவிங் செய்வது நியூசென்ஸ் -ஆம்! எனக்கு தாடிமீசை வேண்டும் என்பதால்  டி -ஆபரேஷன் செய்து கொண்டு மாசா மாசம் பணம் அழுது கொண்டிருக்கிறேன்....நான் மீசை வைத்துக் கொண்டிருப்பது ஷீலாவுக்குப் பெருமை.....! 1521 ஆவது floor -இல் நான் மட்டுமே மீசை வைத்துள்ளேன்...மற்றவன்கள் கஞ்சப் பயல்கள்!இதனால் நாம் ஆண் என்று எல்லாருக்கும் சுலபமாக தெரிந்து விடுகிறது..இப்போது ஆண் பெண் எல்லாருக்கும் ஒரே டிரஸ் தான்...அதில் ஆக்சிஜன் பில்டர்கள் இருக்கும்...இருட்டில் ஒளிரும்...சோலார் சார்ஜர்!

சமையல் ரெடி என்றாள்  ஷீலா...டேப்லெட்டை சாப்பிட்டு சாப்பிட்டு மரத்துப் போன நாக்குக்கு வாரம் ஒருமுறை வீட்டு சமையல்......அப்படியே பாட்டி கைப்பக்குவம் ஷீலாவுக்கு.பாட்டி அறுபதிலேயே போய் சேர்ந்து விட்டாள் ....அறுபதுக்கு மேல் இருந்தால் மாதம் முன்னூறு இண்டோ அரசாங்கத்துக்கு அழ வேண்டும்... பாட்டி ! போகாதே !நீ இரு நான் சம்பாதிக்கிறேன் தானே நீ இரு என்று சொன்னாலும் கேட்காமல் போய் விட்டாள் ...அவள் ஒரு கஞ்சப் பெண்மணி! தாத்தா பிடிவாதமாக இன்னும் இருக்கிறார்...வயது என்பது!தானே சம்பாதித்து தானே LIFE PENALTY கட்டுகிறார்.

டைனிங் டேபிளில் அமர்ந்தோம். ஐ.லேபில் இருந்து போன் வந்தது!குழந்தை ரெடியாம் ...ஷீலா எஸ்பரேன்டோவில் பேசி விட்டு போய் பார்த்து விட்டு வரலாம் என்றாள் .வெளியே 
எஸ்பரேன்டோ வில்தான் பேச வேண்டும்.. எழுத வேண்டும்...வீட்டுக்குள் அவரவர் தந்தை மொழி பேசிக் கொள்ளலாம்... நாங்கள் தந்தை மொழி தமிழ் தான் பேசிக் கொள்வது வீட்டுக்குள்...தமிழை எப்படி எழுதுவது என்று தெரியாது...யாருக்கும் தெரியாது......தமிழ் எழுத்து வழக்கொழிந்து விட்டது.. டி...தலைமுடி மட்டும் பாட்டி மாறி கொஞ்சம் சுருட்டையா வேணும்னு சொல்ல சொன்னேனே என்றேன்...சொன்னேன் சொன்னேன் என்றாள் ....அது என்னதான் பெண் குழந்தையோ? ஆண் வாங்கலாம் என்றால் கேட்டால்தானே என்று அலுத்துக்கொண்டாள் ....என்ன செய்வது....ஒரே ஒரு குழந்தைக்கு தான் அனுமதி....இன்னொன்று வேண்டும் என்றால் கட்டணமாக சொத்தை எழுதி வைக்க வேண்டும்...

ஆங்..சொத்து இப்போது எங்கே இருக்கிறது? காலம் தான் இப்போது சொத்து !வாழ்நாளில் பத்து வருடங்களை எழுதி வைக்க வேண்டும்...அதாவது ஐம்பதிலேயே ஊசி போட்டு விடுவார்கள்...பக்கத்து பிளாட்டில் ஒருத்தன் மூன்று குழந்தை பெற்றுக் கொண்டு நாற்பதிலேயே செத்துப் போனான்! இதற்கு மட்டும் இல்லை...வீட்டில் பங்ஷன் என்று பத்து இண்டோ அதிக சம்பளம் கேட்டால் வாழ்நாளில் ஒருநாள் குறைத்து விடுவார்கள்.... உலகத்திற்கு ஏதாவது சேவை செய்தால்  புதிய கண்டுபிடுப்புகள் நிகழ்த்தினால் தான் பெனால்டி கண்ஷஷன் உண்டு....அந்த எளவு எல்லாம் எனக்கு எங்கே வருகிறது?!

'என்ன ஒரு இயந்திரத்தனமான ' வாழ்க்கை இது....என்றாள் ஷீலா...ரோபோ தண்ணீர் கொண்டு வந்து வைத்தது....அப்பவெல்லாம் பெண்கள் ஒன்பது மாதம் சுமந்து குழந்தை பெத்துக்குவார்களாம் ...அந்த சுகமான சுமையே அலாதி தானாம்...எனக்கும் ஆசையா இருக்குது.யூட்ரஸ் மீண்டும் பொருத்திக்கறேன் " என்றாள் ..

"அய்யோ ,இவள் எனக்கு ஐந்தாயிரம் இண்டோ சிலவு வைத்து விடுவாள் போலிருக்கிறதே" என்று நினைத்துக் கொண்டு 'பாரு ஷீலா , இப்பவே எல்லாரும் நான் சம்பளம் ஜாஸ்தி வாங்கறேன்னு பொறாமைப்படறா ..அதுல இது வேறயா? கொஞ்ச நாள் பார்ப்போம்....இப்பத்திக்கு ரெடிமேட் குழந்தை போதும்" என்றேன்.,

சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் virtual பீச்சில் உலாவினேன்....மெஷின் காற்று நிஜ கடற்கரைக்கு சற்றும் குறைவில்லாததாய் இருந்தது...எனக்கு வரவேண்டிய கனவை செட் செய்து கொண்டு உறங்கினேன்...அந்த ப்ரோக்ராமை எட்டிப் பார்த்த ஷீலா என்ன கனவிலும் என் முகம் தானா? வேற மாத்திக்குங்க ,பரவாயில்லை...ஈ னே க்ராவாஸ்" என்றாள்

"நேநியூ"என்றேன்..

"மியா தோட்ல்சா எட்ஜோ , போனான் நோக்டன் " என்றாள் ....

நாங்கள் தூங்கி விட்டதை உணர்ந்து விளக்குகள் தானாக அணைந்தன. பெட் ரூம் தவிர வீட்டின் மற்ற பாகங்கள் மடங்கிக் கொண்டன.அந்த இடத்தில் நைட் ஷாப் ஒன்று உருவாகும்...காலையில் மீண்டும் வீடு விரிந்து கொள்ளும்..குட் நைட்!

(* சமீபத்தில் வந்த சூப்பர் நோவாவுக்கு பிறகு இப்போது பூமி சூரியனை வருடத்துக்கு ஆறுமணிநேரம் அதிகமாக சுற்றுகிறது. எனவே இப்போது பிப்ரவரி 30 ஐயும் சேர்த்து விட்டார்கள்!)


========================================

ஓஷோ ஜோக்...

சேல்ஸ் மேன்  ஒருவன் ஒரு சிறிய நகரம் ஒன்றில் ஹோட்டல் ஒன்றுக்கு வந்து தனக்கு ஒரு ரூம் வேண்டும் என்றான்.

"மன்னிச்சுக்கங்க சார்..ரூம் காலியா இல்லை" என்றாள் ரிசப்ஷனிஸ்ட்.

"சரி" என்று அவன் திரும்பிப் போகும் சமயம் மீண்டும் அழைத்து "சார்..ஒரு ரூம் காலி இருக்கு...ஆனால் அங்க ஏற்கனவே ஒரு லேடி இருக்காங்க
அவங்க பெட், திரை போட்டு மறைக்கப்பட்டிருக்கும்..அவங்க பாட்டுக்கு தூங்கிட்டு இருப்பாங்க..டிஸ்டர்ப் பண்ணாம இருந்துக்கரீங்களா ?" என்றாள் 

"சரி" என்ற சேல்ஸ் மேன் ரூமுக்கு சென்றான் 

சுமார் ஒரு மணி நேரம் கழித்து கீழே வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தான் 

"என்னாம்மா , ரூம் குடுத்திருக்க...அது பொண்ணு இல்லை.. பிணம்...
செத்துப் போச்சு" என்றான்.

ரிசப்ஷனிஸ்ட், "அது தெரியும்...ஆனால் சார் அது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்றாள்

சமுத்ரா

13 comments:

அமுதா கிருஷ்ணா said...

Tamil spoonerism சூப்பர்.பதிவு ரொம்ப பெரிசா இருக்கோ.
கணக்கு விளையாட்டு நல்லாயிருக்கு.
நம்ம தமிழே சூப்பர் தான்.
பென்சிலை சீவும் பெண்சிலையே என்று காலையில் ஒரு பாட்டை ரேடியோவில் கேட்டேன். வைரமுத்துவா??

சமுத்ரா said...

//வைரமுத்துவா?? //-May be

kaviyazhi.blogspot.com said...

நீங்க சொன்னதுபோல ஊரை மாற்றவும், பேரையும்,மனசையும் மாற்ற முடியவே முடியாது.சின்ன வயசு மனசையும் மாற்றவே முடியாது

திண்டுக்கல் தனபாலன் said...

குழந்தைகளுக்கு மிகவும் உதவும்...

மிக்க நன்றிங்க...

VENTURER said...

நானும் நீங்கள் கூறியதை போல தான். ஊரை விட்டு வர மனமே இல்லை. பெங்களூர் நிலைமை நீங்கள் அறியாதது இல்லை. வாடகை குட தரலாம் சார் ஆனா இந்த advanceக்கு எங்க போய் முட்டிகிரதுனு தெரியல.

Sci Fic கதை மிகவும் அருமை. வரும்காலம் சிறிது நேரம் கண் முன்னே தெரிந்தது போல் இருந்தது. சினிமாவாகவே வந்தாலும் வரலாம்.நான் அதிகம் ப்ளாக் படிப்பதில்லை. ஆனால் உங்கள் kaleido வை நான் மிகவும் ரசிப்பேன்.

Abarajithan Gnaneswaran said...

# கணிதம்

கணிதம் என்பது இயற்கையிலேயே இருக்கிறது என்று நம்புகிறேன். இல்லாவிட்டால் கணித மாதிரிகள் மூலம் இயற்கியை இவ்வளது துல்லியமாக விளக்க முடியாதே? அதாவது, 1.44 solar mass இற்கு அதிக எடை உள்ள நட்சத்திரங்கள் தானாகவே gravitational collapse இற்கு உட்படுகின்றன. இயற்கைக்கு 1.44 எனும் எண் தெரியாவிட்டால், இது எப்படி சாத்தியம்? (solar mass, kg எல்லாம் நாங்களே உருவாக்கி வைத்துக்கொண்டதுதான். ஆனால், 1.44 solar mass என ஒரு quantity இயற்கைக்கு தெரிந்திருக்கிறதல்லவா?)

//ரெண்டும் ரெண்டும் 4 (நாலு )அது என்றும் மாறாதுடா கோபாலு என்று சொல்வதெல்லாம் சும்மா relative ....//

எந்த number base இலும் கணிதத்தின் கோட்பாடுகள் தவறுவதில்லையே?

//இல்லாத பேய்க்கு பயப்படும் படி//

பேய் / துர்ஆவி இருக்கிறது என்று ஓஷோ சொன்னதாக நினைவு...

சேலம் தேவா said...

ஸ்பூனரிசம் உதாரணங்கள் அருமை.தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க உங்கள் பதிவுகள் உதவுகிறது. "பென்சிலை சீவிடும் பெண் சிலையே" எழுதியது வைரமுத்துவின் கலைவாரிசு மதன்கார்க்கி.

சேலம் தேவா said...

ஸ்பூனரிசம் உதாரணங்கள் அருமை.தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க உங்கள் பதிவுகள் உதவுகிறது. "பென்சிலை சீவிடும் பெண் சிலையே" எழுதியது வைரமுத்துவின் கலைவாரிசு மதன்கார்க்கி.

சமுத்ரா said...

அபராஜிதன், நீங்கள் சொல்வது புரிகிறது. கணிதத்தின் லாஜிக் என்றுமே மாறாது என்கிறீர்கள்.
இயற்கை கணித அறிவு கொண்டுள்ளது என்றுதான் நானும் நினைக்கிறேன். ஒருவேளை வெற்றுக் கிரக அறிவுசார் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடைய நம்பர் சிஸ்டமும் நம்முடையதும் ஒத்துப் போகாவிட்டாலும்
'லாஜிக்' பெரும்பாலும் ஒரே மாதிரி தான் இருக்கும்.

G.M Balasubramaniam said...


Eppatiyellaam yosikkirirkal.?..!

இரவின் புன்னகை said...

மிக நீண்டுவிட்டது... இருப்பினும் முழுதும் படித்துவிட்டேன்... குழந்தைகள் பற்றி மிக அழகாக கூறியுள்ளீர்கள்....நன்று. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள்... தொடருங்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Caricaturist Sugumarje said...

ஊனை படை -பானை உடை (இதில் மனித வாழ்வு முழுதும் அடங்கி விட்டதே :))

அருமை! :)