Δ
I wake up every morning at nine and grab for the morning paper. Then I look at the obituary page. If my name is not on it, I get up-Benjamin Franklin
உங்கள் பெயர் என்ன? எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை ஒரு மூன்று முறை உரக்க சொல்லுங்கள். ஒரு மாதிரி இருக்கிறது அல்லவா? நம் பெயரை நாம் பயன்படுத்துவதே இல்லை என்பதால் தான் அது. பெயர் என்பது நமக்கு அல்ல. மற்றவர்களுக்கு. பெயரை வைத்து செய்யும் ஓஷோவின் தியானம் ஒன்று இருக்கிறது. அதை அப்புறம் சொல்கிறேன்.
ஸ்கூலில் படித்தபோது ஒவ்வொரு வகுப்பிலும் கண்டிப்பாக ஒரு சேகர், ஒரு மணிகண்டன், ஒரு குமார், ஒரு செந்தில், ஒரு தினேஷ் ஒரு கணேஷ், இருப்பார்கள்.ஒரு பிரியா, ஒரு சங்கீதா, ஒரு வனிதா ஒரு வித்யா இருப்பார்கள்.இங்கே கர்நாடகாவில் ஸ்ரீநிவாஸ், மஞ்சுநாத், லிங்கப்பா போன்ற பெயர்கள் பிரபலம்.
'common ' பெயர்கள் இருப்பவர்கள் நமக்கு ஸ்பெஷல் பெயர் இல்லையே என்று வாழ்க்கையில் ஒரு முறையாவது நினைத்து வருந்தியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. [இதற்கு வடிகாலாகத்தான் ப்ளாக் எழுதும் போது பேயோன், வேதாளம், சிறுத்தை, புலிக்குட்டி, பூனைக்குட்டி, ஆட்டுக்குட்டி, அக்னிக்குஞ்சு,வெட்டிப்பயல்,தண்டப்பயல்,பெயரிலி என்றெல்லாம் நமக்கு நாமே பெயர் வைத்துக் கொள்கிறோம்] இப்போதெல்லாம் பிள்ளைகளுக்கு கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பெயர்களை வைக்காமல் புதிது புதிதாக அனிருத், சங்கல்ப், ரியா, ரிதன்யா,ஆதனா, கௌசிக், மிலன், என்றெல்லாம் வைக்கிறார்கள்.
சரி. இந்தியாவில் பஞ்ச பூதங்களுக்கும் பெயர்கள் இருக்கின்றன.
வானம் - ஆகாஷ்
பூமி - பிருத்வி
காற்று - பவன்
நீர் - சுதா
நெருப்பு -பிரஜ்வல்
பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்லும் ஒரு கோஷ்டி இருக்கிறது. பெயரில் தான் எல்லாமே இருக்கிறது என்று சொல்லும் கோஷ்டியும் இருக்கிறது.எனக்கு நியூமராலஜியில் நம்பிக்கை கிடையாது.J என்ற எழுத்தில் பெயர் இருந்தால் ஜே ஜே என்று வருவார்கள் . R என்ற எழுத்தில் தொடங்கினால் ராஜா மாதிரி வாழ்வார்கள் ;M என்ற எழுத்தில் தொடங்கினால் மத்யஸ்த வாழ்க்கை தான் ; இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.என்னைப் பொறுத்தவரை Name is just a Name ...
ஆனால் பெயர் என்பது நம்முடன், நம் வாழ்வுடன் மிகவும் ஒன்றிக் கலந்து விட்ட ஒன்று போலத் தோன்றுகிறது. எனவே பெயரை மாற்றினால் வாழ்க்கை மாறுமோ இல்லையோ நம் மனநிலை மாறும். அது ஒரு மறுபிறப்பு போல; இதனால்தான் பெண்கள் புகுந்தவீடு போகும்போது பெயரை மாற்றுகிறார்கள். சந்நியாசம் ஏற்கும் போது பெயரை மாற்றுகிறார்கள். நீ அதே பழைய மனிதன் அல்ல. நீ புதிதாகப் பிறந்திருக்கிறாய் என்று நினைவுபடுத்த!
நம்முடைய பெயர் நம் மனதில், அடியாழத்தில், விழிப்பற்ற நிலையில் புதைந்துள்ளதாக ஓஷோ சொல்கிறார். யாராவது நம் பெயரை அழைத்தால் உடனே ஆட்டோமேடிக்-ஆகத் திரும்புகிறோம் இல்லையா?
ஓஷோவின் 'பெயர்' தியானம் என்பது உங்கள் பெயரை ஒரு மந்திரம் போல உபயோகிப்பது. உதாரணமாக உங்கள் பெயர் இசக்கி என்றால் (வேற பேரே கிடைக்கலையா?) இசக்கி இசக்கி இசக்கி என்று உங்கள் மூளையை கசக்கி தொடர்ந்து விடாமல் உச்சரிப்பது.அப்படி உச்சரிக்கும் போது உங்களுக்கும் உங்கள் பெயருக்கும் ஒரு சிறிய இடைவெளி உருவாகிறது. நான் இசக்கி அல்ல என்ற உணர்வு மெல்ல மெல்ல வருகிறது.மேலும் நீங்கள் ஒன்றை கண்டிப்பாக செய்ய விரும்பினால் உங்களுக்கு நீங்களே உங்கள் பெயருடன் கட்டளை இடுங்கள்..உதாரணமாக இசக்கி, நாளை காலை சரியாக ஐந்து மணிக்கு எழுந்து கொள் ..இசக்கி, நீ அந்தப் பெண்ணை திரும்பிப் பார்க்காதே, இசக்கி , தூங்கப்போ, இசக்கி ஜொள்ளு விடாமல் இயல்பாகப் பேசு என்றெல்லாம்! IT WORKS ..(நான் சொல்லலைங்க ஓஷோ சொல்கிறார்)
ΔΔ
சத்தம் என்பதைப் பற்றி மேலும் ஓஷோ சொல்கிறார்; (டேய், உனக்கு சொந்தமா எதுவும் தெரியாதா ???)இந்து மதம் சத்தம் என்பதற்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. நவீன அறிவியல் ஒளியை பிரபஞ்சத்தின் ஆதாரம் என்கிறது. ஆனால் மதங்கள் ஒலிக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன.ஒரு குறிப்பிட்ட சப்தத்தின் மூலம் உங்கள் உடலையும் மனதையும் கட்டுப்படுத்த முடியும்.வேத மந்திரங்கள் அதைத் தான் செய்கின்றன. குறிப்பிட்ட மந்திரங்கள் மூலம் காட்டு விலங்குகளையும் கட்டிப்போட முடியும். மேலும் 'ராகங்களுக்கும்'மனித உணர்சிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது.
[அமிர்த வர்ஷிணி பாடினால் மழை வரும் ; புன்னாக வராளி பாடினால் பாம்பு வரும்; குந்தள வராளி பாடினால் சிரிப்பு வரும்; முகாரி பாடினால் சோகம் வரும் சஹானா பாடினால் காதல் வரும் ஆஹிரி பாடினால் சாப்பாடு வரும்; சாரி வராது; என்றெல்லாம் சும்மா சொல்லவில்லை. பாடும் விதத்தில் பாடினால் உண்மையிலேயே இதெல்லாம் வரும்.தான்சேன் பாட்டுப்பாடி தீபங்களை ஏற்றி வைத்தார் என்று கேட்டிருக்கிறோம்.ஏதோ ஒரு ஏடாகூட ராகத்தைப் பாடியதன் காரணமாக கோவலன் மாதவி உறவு பிரேக் ஆனது என்று படித்திருக்கிறோம்.எந்தெந்த ராகங்கள் எந்தெந்த நோயை தீர்க்கும் என்று ஒரு லிஸ்டே இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் பைரவி கேளுங்கள் என்றும் தோல்வியாதி ஏதாவது இருந்தால் அசாவேரி கேளுங்கள் என்றும் சொல்கிறார்கள். அதற்காக ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா ரேஞ்சுக்கு சொரிந்து கொண்டிருக்கும் போது 'தசரத நந்தனா' கேட்டுக் கொண்டிருக்க வேண்டாம். டாக்டரை அணுகவும்]
piezo electric effect என்று ஒன்று இருக்கிறது.அதிர்வுகளால் மின்சாரம் பிறக்கும் என்று சொல்லும் ஒரு அறிவியல் தத்துவம். [உங்கள் வாட்சில் நடப்பது உல்டா. மின்சாரத்தால் அதிர்வுகள் பிறக்கின்றன] ஒலியும் ஒருவித அதிர்வு தானே?எனவே ஒலியால் ஏன் மின்சாரம் பிறக்காது?Sonoluminescence என்ற ஒன்றும் அறிவியலில் இருக்கிறது.இது என்ன என்றால் சில திரவங்கள் சத்தத்தின் மூலம் அதிரும் போது அதிலிருந்து வெளிச்சம் பிறக்கிறது என்னும் கண்டுபிடிப்பு!டெலிபோனில் நாம் பேசும் சத்தம் மின் துடிப்புகளாக மாறி தான் மறுமுனைக்கு செல்கிறது. ஆனால் சத்தத்தின் மூலம் ஒரு வீட்டுக்குத் தேவையான மின்சாரம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. நம்மை சுற்றி எத்தனையோ சத்தங்கள் கேட்டபடி உள்ளன. டிராப்பிக்கில் சிவப்பு எரிவது தெரிந்தும் பொறுமை இன்றி ஹாரன் அடிக்கும் வண்டிகளின் சத்தம், மெஷின்கள் ஓடும் சத்தம் புல்டவுசர் சத்தம், ரேடியோ சத்தம், அரசியல் பிரசார சத்தம்,மனைவி கணவனை ஹை பிட்சில் திட்டும் சத்தம், பக்கத்து வீட்டுக்காரர் அபஸ்வரமாக வயலின் கற்றுக் கொள்ளும் சத்தம் என்று நிறைய. இதையெல்லாம் சோலார் செல் போல சேகரித்து ஒரு குண்டு பல்பை எரிய வைக்க முடியுமா? விஷயம் தெரிந்தவர்கள் சொல்லவும்.ELECTRICITY FROM NOISE POLLUTION என்பதை யாராவது கடைசி வருட இஞ்சினியரிங் மாணவர்கள் ப்ராஜக்ட்-ஆக எடுத்துக் கொண்டு செய்யலாம். மின் பற்றாக்குறையால் தவிக்கும் தமிழ் நாட்டுக்கு புண்ணியமாகப் போகும். [இங்கே பெங்களூருவில் அவ்வளவாக பவர் கட் இல்லை. போனாலும் ஒரு இருபது நிமிடத்தில் சமர்த்தாகத் திரும்பி விடுகிறது]
ΔΔΔ
ரசித்த கவிதை அப்பா
டாட்டா காட்டும் போது
உற்சாகமாக கையசைக்கும் குழந்தை -
ஏனோ
அம்மா
டாட்டா காட்டும் போது
முகம் மாறி
அழத் தொடங்குகிறது.
ஒரு ஜோக் ஞாபகம் வருகிறது.
ஒரு ஆல்பத்தைப் பார்த்து சின்னப்பையன் ஒருவன் கேட்கிறான்.
அம்மா அந்தப் போட்டாவில் அழகா, கரு கரு முடியோட , எடுப்பா மீசை வைச்சுக்கிட்டு இருக்காரே அவரு யாரும்மா?
அம்மா 'டேய், அதான்டா உங்க அப்பா'
சின்னப்பையன் : 'அப்ப எப்பவாச்சும் வீட்டுக்கு வந்து போறாரே, அந்த சொட்டைத் தலை யாரும்மா?'
[இதற்கு தான் அப்பாக்கள் ஆபீஸே கதி என்று கிடக்கக் கூடாது. அவ்வப்போது குழந்தைகளுக்கு உங்கள் திருமுகத்தைக் காட்டவும்]
ரசித்த ஒரு ட்விட்:
#அம்மா, முதன் முதல்ல நில அபகரிப்பு பண்ணவர் நம்ம மகா விஷ்ணு, வாமன அவதாரத்துல, அவர் மேல ஒரு கேஸ் போட்டுடலாமா?
ΔΔΔΔ
இப்போது நிறைய பேர் விருது வழங்குகிறேன் பேர்வழி என்று கிளம்பி இருக்கிறார்கள். எனக்கு கூட இரண்டு மூன்று பேர் விருது(?) கொடுத்திருக்கிறார்கள். இது தவறு என்று சொல்ல வரவில்லை. VERSATILE BLOGGER என்று ஒருவருக்கு விருது கொடுக்கிறார்கள். அவர் எழுத்தைப் படித்துப் பார்த்தால் அவர் எழுதுவதில் எவ்வளவோ முன்னேற வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.VERSATILE ஆக எழுத வேண்டும் என்று நிறைய பேர் ஆசைப்படுவது சரிதான். ஆனால் அதற்கு நிறைய படிக்க வேண்டும்.கண்டதையும் படிக்க வேண்டும். (சாரு நிவேதிதா உட்பட)நிறைய அனுபவப்பட வேண்டும். அப்போது தான் VERSATILITY கிடைக்கும். சும்மா கூகிளில் தேடி காபி பேஸ்ட் செய்வதில் பயன் இல்லை. (இன்று அறிவியலை சரியாகப் படிக்காமல் நிறைய பேர் பரிணாமமே தவறு ; மனிதன் பிரம்மாவின் மூஞ்சியில் இருந்துதான் வந்தான் என்றெல்லாம் எழுதக் கிளம்பி இருக்கிறார்கள்.)காபி பேஸ்ட் என்று அதுவே காட்டிக் கொடுத்து விடும். அல்லது உங்கள் எழுத்து காப்பி அடித்தது என்று
யாருக்கும் தெரியாத படி (நான் எழுதுவது போல) தில்லுமுல்லு செய்து எழுத வேண்டும்.ஒருவர் எழுத்தைத் திருடினால் திருட்டு. நூறுபேர் எழுத்தைத் திருடினால் ஆராய்ச்சி :) :)
நமக்கு நாமே விருது கொடுத்துக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது ? ஒருவர் உங்கள் ப்ளாக்குக்கு தவறாது வந்து பின்னூட்டம் இடுகிறார் என்றால் அவருக்கு விருது கொடுத்து விடுவதா? இந்த ப்ளாக்கிலும் தான் J .D . தாஸ் என்பவர் விடாப்பிடியாக கமென்ட் போடுகிறார். (நான் தான் அவரை கண்டுகொள்வதே இல்லை :( :( ).உங்கள் வாசகர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை என்பது இன்னும் இன்னும் நன்றாக எழுதுவது தான். 'உங்கள் கருத்துரைக்கு நன்றி ' என்று சொல்லக் கூடத் தேவை இல்லை. எனவே என்னைப் பொறுத்தவரை விருது என்பதெல்லாம் சின்னப் பிள்ளை சமாச்சாரம். ANYWAY ,என்னையும் மதித்து விருது கொடுத்தவர்கள் மனம் புண்பட்டிருந்தால் அடியேனை மன்னித்தருளவும்.
ΔΔΔΔΔ
கன்னடத்தில் ஒரு பிரபலமான பாவ கீதே மொழிபெயர்ப்புடன்:
ತೆರೆದಿದೆ ಮನ ಓ ಬಾ ಅತಿಥಿ
ಹೊಸಬೆಳಕಿನ ಹೊಸ ಗಾಳಿಯಾ
ಹೊಸ ಬಾಳನು ತಾ ಅತಿಥಿ
ಆವ ರೂಪದೊಳು ಬಂದರು ಸರಿಯೇ
ಆವ ವೇಷದೊಳು ನಿಂದರು ಸರಿಯೇ
ನೀಸೆರುದಯದೊಳು ಬಹೆಯಾ ಬಾ
ತಿಂದಳನ್ದದಲಿ ಬಹೆಯಾ ಬಾ ||
தெரெதிதே மனே ஓ பா அதிதி
(திறந்துள்ளதில்லம் ஓ வா விருந்தே)
ஹொஸ பெளகின ஹொஸ காளியா
ஹொஸ பாளனு தா அதிதி
(புது வெளிச்சத்தின் புது காற்றினை புது வாழ்வினைத் தா விருந்தே)
ஆவ ரூபதொளு பந்தரு சரியே
ஆவ வேஷதொளு நிந்தரு சரியே
(எந்த வடிவினில் நீ வரினும் சரிதான் எந்த வேடத்தினில் வரினும் சரிதான்)
ಇಂತಾದರು ಬಾ ಅಂತಾದರೂ ಬಾ
ಎಂತಾದರು ಬಾ ಬಾ ಬಾ
இந்தாதரு பா அந்தாதரு பா
எந்தாதரு பா பா பா
இப்படியேனும் வா அப்படியேனும் வா எப்படியேனும் வா வா வா
-அப்போதெல்லாம் விருந்தினர்களை எவ்வாறு உயர்வாக (கடவுளைப்போல)மதித்தார்கள் என்பதற்கு இந்தப் பாடலே உதாரணம், அதிதி என்ற சொல்லுக்கே ௮-திதி நேரம் காலம் இல்லாமல் வருபவர் என்றுதான் பொருள். அதிதி எப்போது வந்தாலும் அவரை உபசரிக்க வேண்டுமாம். அவர் என்ன கேட்டாலும் கொடுக்கவேண்டுமாம். உங்கள் பெண்ணை எனக்குப் பிடித்திருக்கிறது; கல்யாணம் செய்து வையுங்கள் என்று ஆசைப்பட்டால் அதிதிக்கு பெண்ணைக் கொடுத்து விட வேண்டுமாம்; (பெண் , பிள்ளைக்கறி இதெல்லாம் கேட்பது கொஞ்சம் ஓவர்)எனவே யார் வேண்டுமானாலும் வரட்டும் ...என் வீடு திறந்து தான் இருக்கிறது ..நீ எப்போதுவேண்டுமானாலும் வரலாம். உன்னால் தான் என் வாழ்வு விளங்கும்; உன்னால்தான் என் வீடு துலங்கும் என்று பெருந்தன்மையுடன் சொல்கிறது இந்தப் பாடல்!
சரி. இந்தக் காலத்தில் யார் வீட்டை திறந்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்?பெரும்பாலான கதவுகள் மூடியே இருக்கின்றன. வெளியே இருப்பவன் எல்லாம் திருடன் கிராதகன் கொலைகாரன் என்ற எண்ணத்திலேயே யாரும் வீட்டை திறப்பது கூட இல்லை. தப்பித் தவறி திறப்பவர்கள் கூட குருவி போல தலையை மட்டும் வெளியே நீட்டி காரியத்தை முடித்து விட்டு பட்டென்று கதவை சாத்தி விடுகிறார்கள். அதிதிக்காக இல்லாவிட்டாலும் கொஞ்சம் புதுக்காற்று உள்ளே வரட்டும் என்பதற்காகவாவது கதவை கொஞ்ச நேரம் திறந்து வையுங்கள்! அப்புறம் இன்னொரு வேண்டுகோள். கொரியர் காரரோ, காய்கறி விற்பவரோ, பேப்பர் காரனோ, கொஞ்ச தூரம் போனபிறகு கதவை சாத்துங்கள். ஆள் இருக்கும் போதே முகத்தில் அறைவது போல கதவை மூடாதீர்கள்.
ΔΔΔΔΔΔ
ஓஷோ ஜோக்..
(Partially ' A ' )
சார்டினி, போலீஸ் ஸ்டேஷன் சென்று ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும் என்றான்.
யார் மீது? என்றார் இன்ஸ்பெக்டர்..
'ஒரு நாதாரி லாரி டிரைவர் மேல சார், நான் ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்தில் இருந்தேன். அந்த நாய் நான் வெளியே வருவதற்கு அவகாசமே கொடுக்காம பூத் டோரை ஒடச்சு வெளியே தள்ளி விட்டுட்டான்.ஒரு நிமிஷம் நானும் டைம் கேட்டுப் பார்த்தேன். அவன் ஒத்துக்கலை. என்னதான் அவசரம்-னாலும் இப்படியா வன்முறையா நடந்துக்கறது? 'என்று பரிதாபமாக சொன்னான் சார்டினி.
"சரிதான். உண்மையிலேயே அவன் ஒரு ராஸ்கல் தான். அந்த சமயத்தில் நீங்கள் எப்படி மோசமாக உணர்ந்திருப்பீர்கள் என்று என்னால் உணர முடிகிறது"
'ரொம்ப சரி இன்ஸ்பெக்டர். ரொம்ப மோசமா உணர்ந்தேன்.அந்த பரதேசிநாய் என் காதலி மேலாடையை அணிந்து கொள்ளக் கூட அவகாசம் கொடுக்கவில்லை' !
சமுத்ரா
51 comments:
தங்களது பிளாக்குக்கு வந்தாலே தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன..அதை ஒவ்வொன்றாக எடுத்து அறிவில் துளைத்து மனதில் பதித்து செல்ல வேண்டியதாகிறது..ஆச்சரியம்..எத்தனை விதமான தலைப்புகளை பேசுகிறீர்கள்..தங்களை பார்க்கும் போது நானும் நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.நீங்கள் எனக்கொரு இன்ஸ்பிரஷன்..ஒரு வழிக்காட்டி.நன்றி.
Jerry Maguire (1996) அருமையான திரைப்படம்.
,தண்டப்பயல்////
ennanga kuththi kaatureengala ;( :(
பிளாக்கர் விருது பற்றிய உங்கள் கருத்து அருமை. உங்கள் கருத்துக்கு நன்றி. ;-)
ஆனால் நீங்கள் பிழைக்க தெரியாதவர்களாய் இருக்கிறீர்கள். இப்படியெல்லாம் சொன்னால் உங்கள் "வாசகர் வட்டம்" சுருங்கி விடும். பார்த்து சூதனமா நடந்துகோங்க.
//இன்னொரு வேண்டுகோள். கொரியர் காரரோ, காய்கறி விற்பவரோ, பேப்பர் காரனோ, கொஞ்ச தூரம் போனபிறகு கதவை சாத்துங்கள். ஆள் இருக்கும் போதே முகத்தில் அறைவது போல கதவை மூடாதீர்கள்.//
கொஞ்சம் மன கதவை திறந்து யோசிக்க வேண்டிய விஷயம் தான்.
நீங்கள் ஓசோவை தானே பின்பற்றுகிறீர்கள்?
"கதவை திற காற்று வரட்டும்" என்று சொல்வதை பார்த்தால் நித்தியானந்தாவை பின்பற்றுகிறீர்களோ என்று சந்தேகமாய் உள்ளது.
//உங்கள் ப்ளாக்குக்கு தவறாது வந்து பின்னூட்டம் இடுகிறார் என்றால் அவருக்கு விருது கொடுத்து விடுவதா?//
நான் விருது கொடுத்த ஐந்து பேரும் அநேகமாய் எனக்கு பின்னூட்டமே இடாதவர்கள். எனக்கு பின்னூட்டம் இட்டவரை ஊக்குவிக்கும் பொருட்டோ, புதிதாய் பின்னூட்டம் போட ஆள் பிடிக்கும் பொருட்டோ நான் இதை வழங்க வில்லை. நிஜமாகவே நன்கு எழுதுபவர் என்று நினைதோருக்கு தான் வழங்கினேன். ..உங்களுக்கும் சேர்த்து.
உங்களுக்கு ஒரு காபி தருகிறேன். நீங்கள் அதை வேண்டாம் என்று சொல்லி என் முகத்தில் ஊற்றுகிறீர்கள். நல்லது உங்களின் திமிர் புரிகிறது.
எனில் என் ப்ளாகில் வந்து, பின்னூட்டத்தில் நீங்கள் " Thank You " சொன்னது ஏனோ? உங்களுக்கு நான் மெயிலில் சொன்னதால் என்று சொன்னால் அது பம்மாத்து. நீங்கள் என் ப்ளாகை படிக்கிறீர்களா என்று தெரியாத நிலையில், உங்களுக்கு விருது தந்ததை நான் சொன்னால் தானே உங்களுக்கு தெரியும். அதனால் மட்டுமே மெயிலில் தெரிய படுத்தினேன்.
நன்றாக எழுதுவது மட்டும் முக்கியம் இல்லை. நல்ல மனிதராகவும் இருப்பது அவசியம். திமிரும், பிறரை எடுத்தெறிந்து பேசுவதும் எந்த பலனும் தராது.
இத்தகைய மனிதருக்கு அந்த விருது கொடுத்தது தவறு தான். எடுத்து விடுகிறேன்.
Mr .மோகன்குமார் , நான் யாரை எடுத்தெறிந்து பேசினேன்
என்று தெரியவில்லை. விருதுகள் பற்றி எனக்கு இருக்கும் கருத்தை சொன்னேன், அவ்வளவு தான். மேலும் நீங்கள் விருதை கொடுத்தால் அதை அடுத்தவர் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை.நோபல் பரிசையே நிராகரித்தவர்கள் இருக்கிறார்கள். விருதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னால் திமிர் பிடித்தவன் என்ற அர்த்தம் இல்லை.
வாசகர்களுக்கு இன்னும் கொஞ்சம் ............... கொடுக்கலாமே????????
நன்றாக எழுதுவது மட்டும் முக்கியம் இல்லை. நல்ல மனிதராகவும் இருப்பது அவசியம். திமிரும், பிறரை எடுத்தெறிந்து பேசுவதும் எந்த பலனும் தராது. ///
enakku terintha varai samudhra appadi pesubavar illai. ingum appadi pesiyathaaga teriyavillai. viruthugalai patria pothuvaana abiprayathtai terivithu iruppathagave arigiren. coffee vendam endru solvatharkum mugathil ootruvatharkkum vithyasam irukkirathu. avar vendam endruthane solli irukkirar?
etho en parvaiyil pattathai sonnen.
ஓஷோ பெயர் தியானம் நிஜமான ஒன்று. உள்ளான மனிதனை அல்லது ஆத்மாவை ( அப்படினா என்னனு கேக்கப்படாது ) வாயின் வார்த்தை (ஒலி) கட்டுப்படுத்தலாம்(மாம்)
சாமுத்ரா விருதை பற்றி சொன்னதை புரிந்து கொள்ள இயலவில்லை என்றால்,
நீங்கள் பிளாக்கிற்கு புதியதாக இருக்க வேண்டும். (அல்லது)
நீங்கள் இவ்வளவு நாள் பிளாக் எழுதியும் பக்குவ படவில்லை.
சமுத்ரா: பின்னூட்டங்கள் குறித்தும் விருது குறித்தும் நீங்கள் எழுதியது முழுக்க வாசியுங்கள். அது திமிர் இல்லை என்று நீங்கள் நினைத்தால் ....என்ன சொல்வது? உங்கள் மீதான என் நிலைப்பாடு மேலும் உறுதிப்படும்.
விருது தந்ததாக நான் உங்களிடம் மெயிலில் சொன்னதும், நன்றி என தனி மெயிலிலும், பின்னூட்டத்திலும் சொல்லி விட்டு, உங்கள் ப்ளாகில் பொதுவில் தான் அசிங்க படுத்துவீர்கள். அப்படி தானே? "எனக்கு இத்தகைய விருதில் எல்லாம் நம்பிக்கை இல்லை" என்று தனி மெயிலில் சொல்லி இருந்தால் அது நன்று. உங்களுக்கு நீங்கள் விருது பெற்றதையும் " Versatile பிளாக்கர்"- பட சிம்பல் உடன் ப்ளாகில் சொல்லணும், அதே நேரம் விருது தந்தவரை பொதுவில் அவமான படுத்தணும்.
உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ, எனக்கு உங்கள் நடவடிக்கை இப்படி தான் தோன்றுகிறது.
தண்டப்பயல் : நண்பரே : நீங்களே உங்கள் முதல் பின்னூட்டத்தில் " குத்தி காட்டுகிறீர்களா?" என்று தானே சமுத்ராவை கேட்டுள்ளீர்கள்? சிறு Suggestion (எடுத்து கொள்வதும், விட்டு விடுவதும் உங்கள் விருப்பம்): தண்ட பயல் என்று உங்களை நீங்களே அழைக்கணுமா? நீங்கள் நிச்சயம் தண்ட பயலாக இருப்பீர்கள் என தோன்ற வில்லை. ஆனால் தமிழுக்கும், எண்ணங்களுக்கும் ஒரு சக்தி உண்டு. திரும்ப திரும்ப சொல்வதால் அப்படி ஆகவும் வாய்ப்புண்டு. வேறு நல்ல புனை பெயர் முடிந்தால் தேர்வு செய்க. (இந்த இடத்தில் இதை சொன்னதற்கு என்னென்ன அர்த்தங்கள் கற்பிக்கபடுமோ? )
சமுத்ரா: விருதுகள் பெயரில் இருந்து உங்கள் பெயரை நீக்கி விட்டேன். எனது பின்னூட்ட பெட்டியில் அதற்க்கான காரணம் (உங்கள் ப்ளாகில் போட்ட அதே 1st பின்னூட்டம்) தந்து விட்டேன்.
Katz: :நண்பரே: சமுத்ரா முதல் நாள் மெயிலிலும், பின்னூட்டத்திலும் விருதுக்கு நன்றி என சொல்லி விட்டு, மறு நாளே தன் பதிவில் " விருது குடுக்குறோம்னு கிளம்பிடுறாங்க" என்றால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்காதா?
எனக்கு இங்கு பெரிய அதிர்ச்சி : சமுத்ராவின் Double game-ம் தான் !
சமுத்ரா: நேற்று நான் ஐந்து பேருக்கு விருது தந்து பதிவு எழுதிய பிறகு, பின்னூட்டத்திலேயே சிலர் சமுத்ரா பதிவு இது வரை வாசித்ததில்லை வாசிக்கிறேன் என்று கூறினார்கள். அவர்களில் சிலர் உங்களிடம் இன்று தொடர்வோர் ஆக இணைந்ததை காண்கிறேன்.
இப்படி நன்கு எழுதும் ஒருவரை குறித்து இன்னொருவர் எழுதும் போது, பரிந்துரைப்பவரை வாசிப்போரும் அடுத்தவரை வாசிக்க துவங்குகிறார்கள். இது நல்ல விஷயம் தானே?
**
உங்களுக்கு நானோ, எனக்கு நீங்களோ அநேகமாய் பின்னூட்டம் இட்டதில்லை. இந்த பதிவால் தான் இவ்வளவு விவாதம் செய்கிறேன். நீங்கள் பதில் சொல்ல ஏதும் இல்லை என்றால் இனி இது பற்றி தொடர வில்லை. புல் ஸ்டாப்.
Double game ஆ? அப்படியென்றால்?:) நண்பர் மோகன் குமார், நீங்கள் எனக்கு
விருது தந்தீர்கள் என்ற காரணத்துக்காக மட்டுமே இவ்வளவு UPSET ஆகிறீர்கள்.
ஒருவேளை கொடுக்கவில்லை என்றால் எப்போதும் போல பதிவைப் படித்து விட்டு நகர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மேலும் கலைடாஸ்கோப்-இல் ஒரு பகுதியாகவே இதை எழுதி இருக்கிறேன். மற்ற பகுதிகள் உங்கள் கண்ணில் படாமல் இதுமட்டும் உங்களை உறுத்துகிறது. This is human nature ..I accept ..attracted to controversial things! 'நான்' விருது கொடுத்திருக்கிறேன், அதை இந்த ஆள் எப்படி பப்ளிக்காக
கேவலப்படுத்தலாம் என்று 'ஈகோ'...மெயிலில் பதில் அளித்து இந்த விருது எனக்கு வேண்டாம் என்று சொல்லி இருந்தால் கூட இவ்வளவு புண்பட்டிருக்க மாட்டீர்கள்.
மேலும், நீங்கள் மட்டும் அல்ல. நிறைய பேர்.. இன்று பதிவுலகில் மூத்த பதிவர் என்று அறியப்படும் ஜி.எம்.பி அவர்கள் கூட கொடுத்தார்கள். ஆனால் எனக்கு விருதை ஏற்று
நான் வெர்சடைல் ப்ளாக்கர் என்று என் ப்ளாக்கில் போட்டுக் கொள்ள விருப்பம் இல்லை.
நீங்கள் காபி கொடுத்தால் அதை வேண்டாம் என்று நாகரீகமாக மறுக்கிறேன். உங்கள்
முகத்தில் வீசி எறிந்தால் நான் மனித ஜென்மமே அல்ல.
//Double game ஆ? அப்படியென்றால்?:) //
நேற்று தனி மெயிலிலும் பின்னூட்டத்திலும் நீங்கள் நன்றி சொல்லி விட்டு, இன்று நீங்கள் இப்படி எழுதுவது தான் டபிள் கேம். விருது வேண்டாம் என்றால், தந்தவரிடம் சொல்லி இருக்க வேண்டும். மற்றவரிடம் அல்ல. இது புரியாத மாதிரி ஸ்மைலி போட்டு Double game ஆ? அப்படியென்றால்? என கேட்பதும் கூட டபிள் கேம் தான்.
***
//மற்ற பகுதிகள் உங்கள் கண்ணில் படாமல் இதுமட்டும் உங்களை உறுத்துகிறது.//
இந்த கலைடாஸ்கோப்பில் இது ஒன்று மட்டும் தானே நீங்களாக எழுதியது ! மற்றவை ??? உங்கள் மனசாட்சிக்கு அவை எங்கிருந்து எடுக்கப்பட்டவை என தெரியும்.
**
//நீங்கள் காபி கொடுத்தால் அதை வேண்டாம் என்று நாகரீகமாக மறுக்கிறேன்//
அதை என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். என்னிடம் நன்றி சொல்லி விட்டு, ஊரை கூப்பிட்டு சொல்வது அழகு அல்ல.
**
எனக்கு பிடிக்காத ஒரு கருத்தை நீங்கள் இன்று உங்கள் பதிவில் சொல்கிறீர்கள். அதை நான் இங்கேயே, இன்றே உங்கள் ப்ளாகிலேயே மறுக்கிறேன். நீங்களும் அப்படி நேற்றே மறுத்திருக்கலாமே?
பதிவுலகில் பிரச்சனைகள் இப்படி தான் ஆரம்பிக்கின்றன. ஒருவர் ஒன்று எழுத, அதை மறுத்து இன்னொருவர் தனி பதிவு எழுத, கோபம், காழ்ப்புணர்ச்சி பதிலுக்கு பதில், அதற்கு பதில், ஒவ்வொருவர் நிலையை ஆதரித்து சிலர் பதிவு என தொடருகிறது.
உங்கள் நிலையில் நான் இருந்தால், தகவல் தெரிந்த உடன் நிச்சயம் தனி மெயிலில் வேண்டாம் என சொல்லி இருப்பேன்.
****
பின்னூட்டம் மூலம் ஏற்கனவே அறிமுகம் ஆனவருக்கு மட்டும் விருது தருவதை நானும் தவறு என தான் நினைத்திருந்தேன். இப்படி தெரியாத நபருக்கு தந்து அசிங்க படவேண்டாம் என்பதால் தான் அவர்கள் ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு மட்டுமே விருது தருகிறார்கள் போலும் !
உங்களின் இந்த பதிவு வந்த பிறகு, பின்னூட்டத்தில் நமது விவாதங்களையும் பார்த்து விட்டு, பல பதிவர் நண்பர்களிடம் இருந்து தொலை பேசி வந்த வண்ணம் உள்ளது. அவர்கள் தரும் தகவல் மேலும் அதிர்ச்சி தருகிறது.
உங்களை பற்றி அறியவும், உங்களை Unfollow- செய்யவும் இந்த நிகழ்ச்சி உதவியது. இந்த பதிவு குறித்த விவாதம் முடிந்த பிறகு உங்களை - Unfollow செய்து விடுவேன்.
@சமுத்ரா சார்,
என்னைப் பொறுத்தவரை இணையத்தின் தலைசிறந்த ப்ளாக்கர்களில் நீங்களும் ஒருவர். வெறும் ஐஸ் வைப்பதற்காக சொல்லவில்லை. எழுதுவதில் உங்களுக்கு தெரிந்தவற்றை மட்டும் சுருக்கமாகவும், தேவையற்ற இழுப்புக்கள் இல்லாமலும் மெல்லிய நகைச்சுவையோடும் எழுதுவது ஒரு சிலருக்கு மட்டுமே கைவந்த பாணி.
நான் பதிவெழுத வரும்போது உங்களைப்போல பல விடயங்களை அறிந்து உங்களைப்போல எழுத முற்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். எனக்கு எல்லாம் தெரியும் என fool pride உடன் திரிந்த, பலருடைய பதிவுகளில் அதிகப்பிரசங்கித்தனமாக பின்னூட்டமிட்டுக் கொண்டிருந்த நான், எனக்கு தெரிந்தது ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தது உங்கள் பதிவுகளைப் படித்த பின்புதான்.
நான் போடும் பின்னூட்டங்களுக்கு பதிவரும் பதில் பின்னூட்டமிடவேண்டும் என எதிர்பார்த்தவன் நான். உங்கள் மௌனங்கள் முதலில் காயப்படுத்தினாலும் பின் சிந்திக்க வைத்தன. இப்போது எனது attitudeஐ மாற்றிக் கொண்டேன். இதற்கு மேலும் நீங்கள் எவ்வாறு என்னைப் பண்படுத்தினீர்கள் என எழுதலாம். எழுதினால் நீங்களும் மற்றவர்களும் இதைக் கிளிஷே-வாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது சமுத்ராவின் அடிவருடி, அல்லக்கை நான் என்பது போன்ற பின்னூட்டங்கள் குவியும் அபாயம் இருக்கிறது. :)
எவ்வளவோ விடயங்களை தொகுத்து போரடிக்காமல் சொல்லியிருக்கீங்க சமுத்ரா. கலைடாஸ்கோப் வரவர நான் அடிக்கடி எதிர்ப்பார்க்கும் பதிவுகளில் ஒன்றாக மாறுகிறது. அவ்வளவு சுவையான தொகுப்பு. நன்றி
எனவே, இப்படிப்பட்ட ஒரு சிறந்த பதிவருக்கு என்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. என் நண்பர்களிடம் அறிமுகப்படுத்தினாலும் ஒண்ணுமே புரியல என ஓடிவிடுகிறார்கள். (அதுசரி, எல்லாருக்கும் என்னைப்போல ஒன்றுமே புரியாமல் எல்லாம்புரிந்ததாகக் காட்டிக்கொள்ள முடியாதல்லவா).
அப்படி உங்களுக்கான ஒரு மரியாதையாகத்தான் மோகன் அவர்களும் உங்களை தனது பதிவில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதனால் உங்கள் வாசகர் வட்டம் சிறிதேனும் விரிவடைய வாய்ப்பு இருக்கிறது. இது உங்களுக்கு மட்டுமல்ல, அறிவியலுக்கும் ஒரு பெரும் நன்மையாகும். என்போன்ற வெறும் வெட்டி வாசகர்கள் செய்ய நினைத்தும் முடியாததை அவர்போன்ற சிலர் செய்வது எமக்கு மகிழ்ச்சியே.
எனவே இந்த விருது சமாச்சாரத்தை வெறும் விளையாட்டாகப் பார்க்காமல் உங்களுக்கான, அறிவியலுக்கான ஒரு மரியாதையாகப் பாருங்கள். எனக்கும் இப்படிப்பட்ட பதிவுலக விளையாட்டுக்களில் (ஹிட்ஸ், அலெக்ஸ்சா, பின்னூட்டக் குழுக்கள், ஓட்டுக்கள்) நம்பிக்கை துளியும் இல்லை. ஆனால் அறிமுகம் என்பது ஒரு நல்ல விடயம். பல சிறந்த தொழில்நுட்பப் பதிவர்களை நான் subscribe செய்தது இப்படிப்பட்ட அறிமுகங்கள் வாயிலாகத்தான். எனவே, விருதை நீங்கள் வைத்துக்கொள்ளாவிட்டாலும், இப்படி உடனே உங்கள் எதிர்ப்பை, பொதுவில் வெளியிட்டதை நான் வரவேற்கவில்லை. ஒரு கொஞ்ச நாள் கழித்து இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கலாம் என்பது எனது கருத்தாகும்.
அத்துடன் இதையே சாக்காக வைத்து இருபக்கத்துக்கும் ஒரு பத்து பதினைந்துபேர் சேர்ந்து அடுத்த பதிவுலக யுத்தம் ஆரம்பமாகும் சாத்தியம் உள்ளதான் மீ ஜூட்..
எனது தாழ்மையான கருத்துக்களையே நான் வெளியிட்டுள்ளேன். யாருடைய மனமாவது புண்படும்படி பேசியிருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.
சமுத்ராவுக்கு இதுவரை யாரும் விருது கொடுத்திருக்காத பட்சத்தில் இது போல் அவர் எழுதி இருந்தால் பிரச்சினையே இருந்திருக்காது. ஆனால் இது கொடுத்தவருக்கு கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும்.
சமுத்ரா இப்போதே எழுதியது தவறாகத் தான் படுகிறது. இன்னும் சில மாதம் கழித்து எழுதி இருந்தால் பரவாயில்லை.
anyhow
மோகன் குமார்,
விருதை கொடுப்பது பற்றிய உங்கள் கருத்து என்ன?
விருது கொடுப்பதற்கும், பிளாக்கை பரிந்துரைப்பதற்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. அதில் ஏழு வித்தியாசங்கள் கண்டுபிடித்து சொல்லுங்களேன். ஹி ஹி.
பொதுவாய் சொல்கிறேன். விருது மற்றும் பட்டம் என்பது ஒருவரை சந்தோசப் படுத்தவே கொடுப்பது. உண்மையான திறமைக்கு விருது கொடுப்பது அரிது. அரசியல் செய்பவர்கள் விருது என்ற சொல்லை கேவலப்படுத்தி வைத்துள்ளார்கள்.
கருணாநிதிக்கு "தமிழின தலைவர்" என்ற பட்டம் கொடுத்தது பார்க்கையில் உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா? அட்லீஸ்ட் கோபமாவது வர வேண்டும்.
இப்போதெல்லாம் காசு கொடுத்தால் தான் விருதாம். :-D
பாஸ் என்கிற பாஸ்கரனில் வருவது போல சில பேர் "நான் என்ன சாதிச்சுட்டேன். எனக்கு எதுக்கு பாராட்டு விழா" என்பது போல சொல்லிக்கொண்டே விருதை வாங்கி கக்கத்தில் வைத்துக் கொள்வார்கள்.
நமக்கு யாரையாவது பிடித்திருந்தால் படித்து ரசித்துவிட்டு போய் கொண்டிருக்கலாம்.
எனக்கெல்லாம் விருது கொடுத்தால் எனக்கே கூச்சமாக இருக்கும்.
தமிழ் பிளாகர் வட்டமே பல அரசியல் கட்சிகள் போல செயல் படுகின்றன. ஏகப்பட்ட அரசியல் இருக்கிறது. கொள்கைகளும் நிறைய இருக்கிறது.
give & take comment கொள்கை. கூட்டம் சேர்த்து கோவிந்தா போடுவது.
சில பேர் கொடுக்கிற விருதை எல்லாம் வாங்கி பெருமையாய் பிளாக்கில் போட்டு கொள்வார்கள். விருதை விலக்கி பார்த்து தான் அவர்கள் பதிவை கஷ்டப் பட்டு படிக்க வேண்டி இருக்கும்.
நான் புதிதாக ப்ளாக் எழுத வந்த போது, யாராவது விருது கொடுக்க மாட்டார்களா என்று பிளாக்கை எந்நேரமும் திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தேன். யாருமே கொடுக்கவில்லை. ஏமாற்றத்தில் வெந்து நூடுல்ஸ் ஆகி போனேன். ;-)
ஆரம்பத்தில் சரக்கு அடிக்கும் போது மிக போதையாகத் தான் இருக்கும்.
நாள் ஆக ஆக போதை குறைந்து தெளிவு வந்து விடும்.
இன்னும் மொக்கையாய் நிறைய பேசலாம். போதும்.
me too ஜூட். bye
// தமிழ் பிளாகர் வட்டமே பல அரசியல் கட்சிகள் போல செயல் படுகின்றன.
give & take comment கொள்கை. கூட்டம் சேர்த்து கோவிந்தா போடுவது.//
சமுத்ரா பதிவில் ரெகுலராய் நீங்களும், உங்கள் பதிவில் அவ்வப்போது அவரும் போடும் பின்னூட்டங்களை வைத்து பார்த்தால் அவருக்கு நீங்கள் சப்போர்ட் செய்வதன் பின்னணி (நீங்கள் சொல்லும் கமன்ட் கொள்கை) புரிகிறது :))
இந்த ப்ளாகில் சமுத்ராவை தொடர்ந்து வாசிப்போர், நான் எழுதுவதை சற்று எதிர்க்கவே செய்வர். அதையும் மீறி, அபராஜித் கட்ஸ் போன்றோர் நான் சொல்வதில் உள்ள கருத்துகள் சிலவாவாது ஒத்து கொண்டதே, நான் சொல்வதில் உள்ள உண்மையை உணர்த்துகிறது.
இதே விவாதம் சமுத்ராவிற்கு விருது தந்த என் ப்ளாகில்/ பதிவில் நீங்கள் தொடரலாம் கட்ஸ் & அபராஜித். இங்கு நான் தனி ஆளாகவும் சமுத்ரா, அபராஜித், கட்ஸ் ஒன்றாகவும் (ஒரே குருப்) வாதிடுவது போர் அடிக்கிறது.
என் நண்பர்கள் சமுத்ரா பற்றி பகிர்ந்த பல விஷயங்கள் (அவர் இப்பதிவில் சொன்ன மாதிரி அவர் பத்து புத்தகங்களில் இருந்து சமாசாரம் எடுப்பதில்லை. மிக சில புததகங்களே). அவற்றின் பெயர் உட்பட என் பதிவிற்கு வந்தால் என் நண்பர்கள் உங்களுக்கு சொல்வார்கள் . You are welcome there (Not for hits or for number of comments but for this debate only)
நன்றாய் எழுதுகிறீர்கள்...Sometimes from you heart...
\\இதனால்தான் பெண்கள் புகுந்தவீடு போகும்போது பெயரை மாற்றுகிறார்கள். சந்நியாசம் ஏற்கும் போது பெயரை மாற்றுகிறார்கள். நீ அதே பழைய மனிதன் அல்ல. நீ புதிதாகப் பிறந்திருக்கிறாய் என்று நினைவுபடுத்த!\\ அட இது நல்லாயிருக்கே!!
\\யாராவது நம் பெயரை அழைத்தால் உடனே ஆட்டோமேடிக்-ஆகத் திரும்புகிறோம் இல்லையா?\\ சிறு வயதில் இருந்த பல சமயங்களில் என் உறவினர்கள் அல்லது நண்பர்கள் என்னுடைய பெயரல்லாது வேறு பெயர்களில் அழைத்திருக்கின்றனர். [அன்பாக சிலர், வாயில் பெயர் நுழையாமல் சிலர், என் பெயரையே தவறாக புரிந்து கொண்டு அழைத்த சிலர் என்று வெவ்வேறு காரணங்களுக்கு இது நடந்திருக்கிறது!!]. அந்த குறிப்பிட்ட நபர்கள் அந்தந்த பெயரை அழைக்கும் போதெல்லாம் என்னுடைய ஒரிஜினல் பெயருக்கு ஏற்ப்படும் அதே ரியாக்ஷன் வருகிறதே!! காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபில் நம்பரை சொல்லி, "யோவ் போர் நாட் எய்ட் அந்த ஆளை ரிலீஸ் பண்ணுய்யா" என்று சொல்லும் போது அந்த போலீஸ் காரர் ரியாக்ட் பன்னுறாரே!!
\\பாடும் விதத்தில் பாடினால் உண்மையிலேயே இதெல்லாம் வரும்.\\ நல்ல ஐடியா, அமிர்த வர்ஷிணி பாடி மழை வந்தால், பாத்தியா நாங்க சொன்னது பளிச்சிடுச்சு எனலாம், வராவிட்டால், பாடகர் தலையில பழிய போட்டுவிட்டு தபிச்சுக்கலாம்.
\\நம்மை சுற்றி எத்தனையோ சத்தங்கள் கேட்டபடி உள்ளன.......இதையெல்லாம் சோலார் செல் போல சேகரித்து ஒரு குண்டு பல்பை எரிய வைக்க முடியுமா?...ELECTRICITY FROM NOISE POLLUTION என்பதை யாராவது கடைசி வருட இஞ்சினியரிங் மாணவர்கள் ப்ராஜக்ட்-ஆக எடுத்துக் கொண்டு செய்யலாம்.\\ தலைவா எங்கேயிருந்து இந்த மாதிரி யோசனையெல்லாம் உங்களுக்கு வருது!! இது எப்படி இருக்குன்னா, பவர் கட் ஆனா ஃபான் நின்னுபோயிடும், வீட்டில் உள்ளவர்களுக்கு வியர்க்கும், அந்த வியர்வையெல்லாம் ஒரு குழாய் வழியே பிடிச்சு கொண்டு போய் ஒரு டுர்பினே -ஐச் சூழ வைத்து அதிலிருந்து மின்சாரம் எடுக்கலாம்னு ஆனந்த விகடன்ல கார்ட்டூன் போட்டிருந்தான். நீங்க சொல்வது போல நடந்தால் நல்லதுதான் முயற்சி செய்யட்டும். ஹா...ஹா...ஹா...
\\டுர்பினே -\\ Turbine
\\ அம்மா, முதன் முதல்ல நில அபகரிப்பு பண்ணவர் நம்ம மகா விஷ்ணு, வாமன அவதாரத்துல, அவர் மேல ஒரு கேஸ் போட்டுடலாமா?\\ ஆஹா.... எப்படி ஐயா நம்மாளுங்களுக்கு இப்படியெல்லாம் ஐடியா வருது.....!!! இதை யோசித்தவர் எங்கேயோ............ போயிட்டார். சபாஷ்....!!! ஆனா ஒரு சிறிய திருத்தம், இது ஒரு நில அபகரிப்பு வழக்குதான் சந்தேகமே இல்லை, ஆனால் தேவர்களிடம் நில அபகரிப்பு செய்தவர் மகாபலி சக்ரவர்த்தி, அதை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியைத்தான் வாமனனாக வந்த மகா விஷ்ணு செய்தார்.... Anyway wonderful thinking!!
\\VERSATILE BLOGGER என்று ஒருவருக்கு விருது கொடுக்கிறார்கள்.\\ பாரத ரத்னா விருது குறித்து சோ ராமசாமி ஒரு கோட்டத்தில் பேசியிருந்தார். அந்த விருதால் ஒரு பிரயோஜனமும் இல்லையாம், ஒரு ரயில்வே ரிசர்வேஷன் கூட பண்ண முடியாதாம். அந்த மாதிரி விருதுகளை வேண்டாமென்று சொல்லலாம். இங்கே உங்களுக்கு 'VERSATILE BLOGGER ' என்ற விருதுக்கு உங்களை ஒருவர் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றால் குறைந்த பட்சம் அவர் மனதளவிலாவது நீங்கள் VERSATILE ஆக எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறார், மேலும், இதன் மூலம் உங்கள் எழுத்துகளை மென்மேலும் பலர் படிக்கும் வாய்ப்பு இருக்கிறது. பலர் படிக்கத்தானே எழுதுகிறோம், அந்தலவிலாவது இந்த விருதினால் ஒரு பிரயோஜனம் இருக்கிறது. அதை நீங்கள் உதாசீனப் படுத்தினால் நிச்சயம் அவர் மனம் வேதனைப் படும். \\எனக்கு கூட இரண்டு மூன்று பேர் விருது(?) கொடுத்திருக்கிறார்கள்.\\ என்று எழுதிய பிறகு நீங்கள் கொடுத்த விருதை மனதில் எண்ணி நான் இதை எழுதவில்லை என்றும் நீங்கள் சொல்ல முடியாது. குறைந்த பட்சம் பின்னூட்டத்திலாவது நீங்கள் 'உங்கள் மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று சொல்லியிருக்கலாம்'- இருப்பினும் உங்களுக்கு சரி என்பதை நீங்கள் செய்யுங்கள் நான் சொல்ல ஒன்றுமில்லை.
\\என் நண்பர்கள் சமுத்ரா பற்றி பகிர்ந்த பல விஷயங்கள் (அவர் இப்பதிவில் சொன்ன மாதிரி அவர் பத்து புத்தகங்களில் இருந்து சமாசாரம் எடுப்பதில்லை. மிக சில புததகங்களே). அவற்றின் பெயர் உட்பட என் பதிவிற்கு வந்தால் என் நண்பர்கள் உங்களுக்கு சொல்வார்கள் .\\ அப்படியானால் எதற்காக விருது கொடுத்தீர்கள் அன்பரே? சீ...சீ... இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையாக இருக்கிறது.
//அப்படியானால் எதற்காக விருது கொடுத்தீர்கள் அன்பரே? சீ...சீ... இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையாக இருக்கிறது.//
எனது பின்னூட்டத்தில் நான் சொல்லி உள்ளதை பாருங்கள் :
//உங்களின் இந்த பதிவு வந்த பிறகு, பின்னூட்டத்தில் நமது விவாதங்களையும் பார்த்து விட்டு, பல பதிவர் நண்பர்களிடம் இருந்து தொலை பேசி வந்த வண்ணம் உள்ளது. அவர்கள் தரும் தகவல் மேலும் அதிர்ச்சி தருகிறது.//
//என் நண்பர்கள் சமுத்ரா பற்றி பகிர்ந்த பல விஷயங்கள் (அவர் இப்பதிவில் சொன்ன மாதிரி அவர் பத்து புத்தகங்களில் இருந்து சமாசாரம் எடுப்பதில்லை. மிக சில புததகங்களே). அவற்றின் பெயர் உட்பட என் பதிவிற்கு வந்தால் என் நண்பர்கள் உங்களுக்கு சொல்வார்கள் //
தாஸ்: இப்போது புரிகிறதா? நேற்று வரை நானும் சமுத்ராவை ஆச்சரியமாக பார்க்கும் வாசகனாக தான் இருந்தேன். இன்று நண்பர்கள் மூலம் தான் அவர் செய்வது "மொழி பெயர்ப்பு" வேலை தான் .. அதுவும் ஓரிரு புத்தகங்களில் இருந்து என்று புரிகிறது.
சமுத்ரா : உங்கள் நண்பர்கள் எனக்கு மட்டும் கேள்விகளாக கேட்கிறார்கள். என் கேள்விகளுக்கு நீங்கள் பதில் தாருங்கள். அல்லது Katz போன்ற உங்கள் நண்பர்களை இந்த விவாதத்தை நிறுத்த சொல்லுங்கள்
இல்லா விடில் நான் இந்த விஷயம் பற்றி தனி பதிவு என் ப்ளாகில் எழுதகிறேன். அங்கு அனைவரும் விவாதிக்கலாம்
இப்படி உண்ர்ச்சிக்குவியலாக இருந்தால், இணையத்தில் எப்போதும் காயப்பட்டுக்கொண்டே இருப்பீர்கள்.. take it easy Mohan..
நீங்கள் F = mA என்று சொல்வதை, நாங்கள் physics புக்கில் இருந்து திருடினார் என்று சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா? தமிழில் இப்படி, entertaining ஆக எழுத திறமை வேண்டும்.. கற்றுக்கொள்ளும் புத்தகங்களில் இருந்து எடுத்து நம் நடையில் share செய்வது என்ன தவறு?
Art என்றால், copy அடிப்பதை கண்டிக்கலாம்.. for eg: cinema songs.. அது copy அடித்தால் தப்பு.. ஆனால், இயற்பியல் போன்ற விஷயங்கள் பெரும்பாலும் புத்தகங்கள் மூலமாகவே நம்மை வந்து அடைகின்றன.. நம் அறிவு வட்டம் அதனாலேயே பெருகுகிறது.. அதில் இருந்த விஷயங்களை share செய்வது, அதுவும் entertaining நடையில் சொல்ல தனி திறமை வேண்டும்.. அது சமுத்ராவிற்கு உள்ளது!
-parthi2929
சமுத்ரா.. நீங்கள் இந்த விருது பற்றிய பார்வையை கொஞ்சம் வேறு மாதிரி எழுதியிருக்கலாம் என நினைக்கிறேன். கொடுத்த விருதுக்கு , அந்த அன்புக்கு நன்றி.. ஆனால் இதுதான் என் கருத்து என்று..
hate to see this becoming a snow-ball.. also hate to see this misunderstanding..especially when i find both of you good (through your writings, of course!)
@ மோகன் குமார்,
நீங்கள் சமுத்ரா சாருக்கு செய்யும் மரியாதையாகத்தான் விருது வழங்கியிருக்கிறீர்கள் என்பது எனது அபிப்பிராயம். அதை அவர் உடனடியாக பொதுவில் மறுத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. அவ்வளவுதான் எனது கருத்து.
சமுத்ரா சாரின் வாசகர்கள் எனும் ஒரே காரணத்துக்காக அவருக்கு நாங்கள் எப்போதும் சப்போர்ட் செய்வதில்லை. (உ+ம்: கோபுர கலசங்கள் காஸ்மிக் ரே ஏரியல்கள் போலச் செயற்படுகின்றன எனும் கருத்துக்கு குவிந்த பின்னூட்டங்கள்)
உண்மையில் சமுத்ரா சார் புது விடயங்களைக் கண்டுபிடித்து இங்கே ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதவில்லை என்பதை எல்லோருமே (சமுத்ரா சார் உட்பட) ஒப்புக்கொள்கிறோம். அவர் செய்வதெல்லாம் பிறர் கண்டுபிடித்த இயற்பியலை தமிழில் சுவாரஸ்யமாக அறிமுகப்படுத்துவதே. பலருக்கும் வேப்பங்காயாக இருக்கும் இயற்பியலில் பள்ளி கணிதம் தவிர வேறேதும் கற்றிராத என் போன்றவர்களுக்கு ஆர்வம ஏற்படுத்தும் சேவையையே அவர் செய்து வருகின்றார்.
அத்துடன் தற்போதைய பதிவுலகம் பற்றி நாங்கள் சொன்ன கருத்துக்கள் உண்மையே என்பதும் பலரும் அறிந்த ஒன்று. அதைவிட, இது ஒரு ஆரோக்கியமான விவாதமுமல்ல.. இதைத் தொடர நான் விரும்பவுமில்லை.
ஒரு வாசகராக எனது கடமை பதிவு பற்றிய எனது கருத்துக்களை (மட்டும்) இங்கே தெரிவிப்பது. இப்பதிவில் நான் கொஞ்சம் எல்லை மீறிவிட்டேன். மன்னிக்கவும். இனிமேல் இவ்விடயம் பற்றி நான் கருத்துக் கூறப் போவதில்லை.
நன்றி.
இந்த பதிவுக்கு யார் ஓனர் என தெரியலை. எல்லாருக்கும் நானே பதிவின் ஓனர் போல பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன்
நண்பர்களே, சமுத்ரா விருது வேண்டாம் என சொல்வது தப்பே இல்லை. அதை அவர் மறுத்திருக்கலாம். வேண்டாம் என சொல்லி இருக்கலாம். ஆனால் முதல் நாள் சமுத்ரா மகிழ்ச்சியுடன் தனி மடல் அனுப்பி விட்டு பதிவிலும் நன்றி சொல்லி விட்டு மறு நாள் " விருது கொடுக்குறேன்னு கெளம்பிடுறாங்க " என்றால் எப்படி இருக்கும்? யோசியுங்கள். சமுத்ரா செய்தது தவறு என அவரை தொடர்ந்து வாசிப்போரே சொன்னதில் நான் சொல்வதில் உள்ள நியாயம், வலி உங்களுக்கு புரிந்தது தெரிகிறது. ஆனால் யாருமே சமுத்ராவை முதல் நாள் மகிழ்ச்சி தெரிவித்து விட்டு, மறு நாள் பொதுவில் பல்டி அடித்து அசிங்கபடுதுவது ஏன் என கேட்க வில்லை. நீங்கள் சமுத்ரா என்கிற மனிதரை புரிந்து கொள்ள வேண்டிய இடம் இந்த பல்டியில் தான்.
விருது வாங்கிய மற்ற பதிவர்களை இவர் வாசித்தாராம். யாருமே Versatile ஆக எழுதலையாம். அதுக்கு நிறைய படிக்கணுமாம். பின்னூட்டத்தில் ஊக்குவிப்போருக்கு விருது தர்றாங்களாம் !
இங்கு தான் இருக்கு விஷ(ய)ம். சில பேர் கல்யாண வீட்டில் தான் தான் மாப்பிள்ளையா இருக்கணும்.................................... (அடுத்த வரி உங்களுக்கே தெரியும்) என்று நினைக்கிறார்கள். தன்னை தவிர மற்றவர்களும் புகழப்படுவது " இவர்களோடு போய் எனக்கு விருதா?" என கோபம் வந்து விட்டது.
நான் விருது வழங்கிய மற்ற யாரும் இரண்டு புக்கை இடப்பக்கம் வைத்து கொண்டு மொழி பெயர்ப்பவர்கள் அல்ல. அவர்களுக்கு நானோ எனக்கு அவர்களோ பின்னூட்டம் இட்டது இல்லை. ஓஷோ மற்றும் அறிவியல் என்கிற இரண்டு தளம் மட்டுமல்லாது பல விஷயங்கள் எழுதுபவர்கள்; இதனை எனது பின்னூட்டத்தில் அவர்களை பிறர் பாராட்டியதை பார்த்தால் அறியலாம்.
தொடர்ந்து எழுதா விட்டாலும் தங்கள் சொந்த அனுபவத்தை மட்டுமே சுவையாக, பல பரிணாமங்களில் எழுதுபவர்கள் அவர்கள். அவர்களோடு சேர்த்து புக்கை மொழி பெயர்க்கும் ஒருவருக்கு விருது கொடத்தது என் தவறு தான் !( இந்த பய புள்ளைங்க இந்த ரெண்டு புக்கு பேரையும் இவ்ளோ சண்டைக்கு பின்னாடி தான் சொல்றாங்க. முன்னாடி சொல்லி தொலைச்சா, இந்த பிரச்சனையே இல்லை)
இப்படி நான் பரிந்துரைப்போரின் -Quality குறித்தும், பரிந்துரைத்த நான் பின்னூட்டத்துக்காக இப்படி செய்கிறேன் என்றும் சொன்னால் நான் பேசாமல் இருக்க முடியுமா?
சமுத்ரா "Good " "Good one " என்று தன் தளங்களில் வந்து பின்னூட்டம் போட்டதாகவும் (இதை தவிர வேற பின்னூட்டம் அவர் போட மாட்டாருங்களா?), தானும் பின் வந்து அவருக்கு பின்னூட்டம் இட்டதாகவும், தான் நிறுத்திய பிறகு அவரும் தன் தளத்துக்கு வருவதில்லை என்றும் போனில் பேசிய ஒரு நண்பர் சொன்னார். அவர் சொன்னார் என்பதற்காக இல்லை, நானும் அத்தகைய சமாசாரத்தில் அவர் ஈடுபடுவதை இந்த இரண்டு நாட்களாக சில பதிவர்களின் தளத்தில் பார்த்தேன்.
இதை தவறு என்று சொல்ல வில்லை. ஆனால் பதிவுலகம் முழுதும் உள்ள "மொய்க்கு மொய் " கலாசாரத்தில் தானும் ஈடுபட்டு கொண்டு ஆனால் " மற்றவர்கள் இப்படி செய்கிறார்கள்" என சமுத்ரா கிண்டலடிப்பது கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிவது போல் தான் உள்ளது
ஜெயதேவ் தாஸ்: சமுத்ராவின் இந்த பதிவை முதல் முறை வாசித்த போதே அவர் உங்களை பற்றி எழுதிய விதம் தான் என்னை மிக கோப படுத்தி, உடனேயே " திமிர்" என்று எழுத வைத்தது . நீங்கள் தொடர்ந்து பின்னூட்டம் போட்டு அவர் பதிலுக்காக ஏங்குவதாகவும், அவர் தான் உங்களை கண்டு கொள்ளவே இல்லை என்றும் எழுதி உள்ளார். இது திமிர் இல்லை என்றால் வேறு எது திமிர் என நண்பர்கள் சொல்லலாம்.
இது புரியாமல், பதிவில் தன் பெயர் குறிப்பிட்டதே போதும் என்று தாஸ், அப்பாவியாக இந்த பதிவிலும் வந்து வழக்கம் போல் பத்து கமன்ட் போட்டு விட்டு போகிறார்.
தனி பதிவு எழுதும் அளவு விஷயம் இதில் உள்ளதால், இந்த சமாசாரம் தனி பதிவாக என் ப்ளாகில் வர கூடும். பிற நண்பர்களின் கேள்விகளுக்கு இனி பதில் இங்கோ அல்லது அங்கோ கிடைக்கலாம்
****
தன் மேல் எரிகிற கற்களை வைத்து, தனக்கான வீடு கட்டி கொள்ளலாம். இது பாசிடிவ் Attitude.
தனக்கு போடப்படும் மலர் மாலையை முதல் நாள் " நன்றி மகிழ்ச்சி" என சொல்லிவிட்டு, மறு நாள் அந்த மாலையை வைத்தே தன் கழுத்தை தானே நெரித்து கொள்ளலாம்.
சமுத்ரா செய்வது எது என நீங்களே யோசியுங்கள்.
@ மோகன் குமார்
எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு- என்று வள்ளுவன் சொல்லுவான். உங்கள் விஷயத்தில் இதை நீங்கள் கடைபிடிக்கவில்லை. சமுத்ரா அவர்களுக்கு விருது கொடுப்பதற்கு முன்னரே அவர் அதற்குத் தகுதியானவர் தானா [உங்கள் வரையரைப் படி] என்று உறுதி செய்துகொண்டு கொடுத்திருக்க வேண்டும், அவசரத்தில் கொடுத்துவிட்டு அதை அவர் உதாசீனம் செய்கிறார் என்ற நிலை வந்த பின்னர் இப்போது அவர் காப்பியடிக்கிறார், கொஞ்சம் புத்தகங்களைத்தான் படித்து எழுதுகிறார், அவர் விருதுக்கே தகுதியில்லாதவர் என்றெல்லாம் குறை சொல்லி கூக்குரலிடுவதில் அர்த்தமே இல்லை. தற்போது அதே தப்பை மீண்டும் செய்கிறீர்கள். நான் பின்னூட்டங்கள் இடுவது சமுத்ரா எனக்கு பதிலளிப்பார், அதைப் பார்த்து அகமகிழலாம் என்றல்ல. [சில பதிவர்கள் பதிலளிக்கவும் செய்கிறார்கள், அங்கே நான் எதிர் பார்ப்பேன், இல்லை என்று சொல்லவில்லை]. அனால் இங்கே பெரும்பாலும் அவர் பதிலளிப்பதில்லை. ஆகையால் நான் எதிர்ப்பார்ப்பதும் இல்லை. நான் அவ்வாறு ஏங்குவதாக இருந்தால் பின்னூட்டமிடுவதையே நிறுத்தியிருக்க வேண்டும். நான் பின்னூட்டமிடுவதற்க்கு வேறு காரணம் இருக்கிறது. நீங்கள் சொல்வது போல சில புத்தகங்களை காப்பியடித்து எழுதுவதே ஆனாலும் அதை மொழி பெயர்த்து தமிழில் தட்டச்சு செய்து பதிவு போடுவது அவ்வளவு சுலபமல்ல. அப்படியே அவர் காப்பியடித்தாலும், இதுவரை நான் அறிந்திராத பல தகவல்களை [அவற்றில் பல என்னை பிரமிக்க வைத்திருக்கின்றன] இந்த பிளாக் மூலம் அறிந்து கொண்டிருக்கிறேன். அந்தத் தகவல்கள் கல்லூரிகளிலோ பாடப் புத்தகங்களிலோ கூட நான் படித்ததில்லை. நான் போடும் பின்னூட்டங்கள் அவருக்கு நன்றிக்கடன், மேலும் ஊக்கமாக இருக்கட்டும் என்று தானே தவிர வேறு காரணங்கள் எதுவும் இல்லை. இது தவிர, அவர் எழுதும் கலைடாஸ்கோப் நன்றாகவே இருக்கிறது. எது எப்படியோ, சமுத்ரா பதிவு போடும் வரையில் நான் படிப்பேன், பின்னூட்டமிடுவேன், என்னுடைய இந்த முடிவை எதுவும் மாற்றாது.
தாஸ்: உங்கள் கமன்ட் பார்த்து சமுத்ரா நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார். பின்னே? அவர் மற்ற பதிவுகளில்
முக்கால் வாசி பின்னூட்டம் போடுறது நீங்க தானே? நீங்க பாட்டுக்கு கடையை காலி பண்ணிட்டா, நாலைந்து பேரை வச்சிக்கிட்டு, சுவாரஸ்யம் குறைஞ்சிடும் பாருங்க
வடிவேலுவின் " எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே.. இவன் ரொம்ப நல்லவன்" காமெடி எப்போது பார்த்தாலும் ரசித்து சிரிப்பேன். அடுத்த முறை டிவியில் அதை பார்க்கும் போது உங்கள் நினைவும் வந்து போகும் தாஸ் ! You continue !
நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லலையே என்கிறீர்களா தாஸ்? முதல் நாள் " நன்றி " என மெயிலும் பின்னூட்டமும் போட்டு விட்டு பல்டி அடித்தது ஏன் என்கிற கேள்விக்கு சமுத்ரா பதில் தரட்டும் முதலில் .. அப்புறம் நான் சொல்கிறேன் .
//ஆனால் முதல் நாள் சமுத்ரா மகிழ்ச்சியுடன் தனி மடல் அனுப்பி விட்டு பதிவிலும் நன்றி சொல்லி விட்டு மறு நாள் " விருது கொடுக்குறேன்னு கெளம்பிடுறாங்க " என்றால் எப்படி இருக்கும்? யோசியுங்கள்.//
நன்றி சொல்வது மனிதப் பண்பு. அது ஒரு இச்சைச் செயலாகிவிட்டது. அந்த அளவுக்காவது மனிதராகப் பாருங்கள்.
கலைடாஸ் கோப்பில் கருத்துச் சொல்கிறார். ஆனால் அதில் இவ்வளவு அவசரம் காட்டியிருக்க கூடாதுதான். எனக்கும் ஒரு விருது வந்தது.ஆனால் அந்த விருதை வழங்கியவர் எனது மரியாதைக்குரிய நன்பர் என்பதால் ஏற்றுக் கொன்டேன். அந்த விருதின் கண்டிசன் எனக்கு பிடிக்காததால் நானும் இதே கருத்தில்தான் இருந்தேன். பொறுத்திருந்து ரியாக்ட் செய்வோம் என்றிருக்கிறேன்.அதை நான் ஐவருக்கு அளிக்கவேண்டும் என்பதுதான் எனக்கு பிடிக்க வில்லை. ஒரு ஆள் ஐவருக்கு கொடுத்தால் அது ஒரு ஆறுமாத காலத்தில் உலகத்தில் உள்ள அனைவருக்கும் சுற்றி வந்துவிடும்.ஆகவே விதியை மாற்றி நான் ஒருவருக்கு மட்டும் அளிக்கலாமென இருக்கிறேன்.
//ஆனால் நீங்கள் பிழைக்க தெரியாதவர்களாய் இருக்கிறீர்கள். இப்படியெல்லாம் சொன்னால் உங்கள் "வாசகர் வட்டம்" சுருங்கி விடும். பார்த்து சூதனமா நடந்துகோங்க.//கட்ஸ் சொன்னதுதான் சரி.ஆனாலும் மோகன் குமார் ரியாக்சன் ஜாஸ்திதான்
\\தாஸ்: உங்கள் கமன்ட் பார்த்து சமுத்ரா நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார். பின்னே? அவர் மற்ற பதிவுகளில் முக்கால் வாசி பின்னூட்டம் போடுறது நீங்க தானே? நீங்க பாட்டுக்கு கடையை காலி பண்ணிட்டா, நாலைந்து பேரை வச்சிக்கிட்டு, சுவாரஸ்யம் குறைஞ்சிடும் பாருங்க.\\ என்னுடைய பின்னூட்டத்தை நம்பி சமுத்ரா பிளாக் நடத்தவில்லை. பிளாக் போடுவதால் பலர் படிக்கிறார்கள் என்பதைத் தவிர்த்து பத்து பைசா பிரயோஜனமும் இல்லை என்ற உண்மையை 365 ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் உங்களுக்கு நான் சொல்லத் தெரியவேண்டியதில்லை. சமுத்ராவின் பிளாக்கிற்கு வெறும் பத்து ஃபாலோவர்ஸ் இருத்த போதிலிருந்தே நான் தொடர்ந்து படித்து வருகிறேன், நிறைய பின்னூட்டங்களை எழுதுகிறேன். நான் சமுத்ராவுக்கு மட்டுமல்ல எனக்கு பிடித்த பதிவர்கள் எல்லோருக்குமே பின்னூட்டமிடுவதில் ஒரே மாதிரிதான், மனதில் தோன்றிய அத்தனையும் எழுதுகிறேன். இந்த விடயம் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இது என்னுடைய இயல்பு. உங்கள் இருவருக்கும் இப்போது மனக்கசப்பு என்பதால் நான் என்னை மாற்றிக் கொள்ள முடியாது.
\\வடிவேலுவின் " எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே.. இவன் ரொம்ப நல்லவன்" காமெடி எப்போது பார்த்தாலும் ரசித்து சிரிப்பேன். அடுத்த முறை டிவியில் அதை பார்க்கும் போது உங்கள் நினைவும் வந்து போகும் தாஸ் ! You continue ! \\ சமுத்ராவின் பதிவுகளைப் படிப்பதன் மூலம் நான் அடைந்த பயன், அவர் என்னால் அடைந்ததை விட எத்தனையோ மடங்கு அதிகம். அதனால் இந்த உவமை பொருத்தமற்றது.
\\நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லலையே என்கிறீர்களா தாஸ்? \\ அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே!!
@ சமுத்ரா
நீங்கள் விருதைப் பற்றி சொன்ன கருத்துக்கள் கொடுத்தவர் மனதில் மிகப் பெரிய காயத்தை ஏற்ப்படுத்தியிருக்கிறது. மேலும் அவரது பின்னூட்டங்கள் உங்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கக் கூடும் என்றும் நான் நினைக்கிறேன். நீங்கள் எழுதுவதை இது பாதிக்கக் கூடாது. உங்களுடைய கருத்து வேறுபாடுகளை மெயில்கள் மூலம் தீர்த்துக் கொண்டு, நீங்கள் வழமை போல தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எனது அவா. உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படிக்க நாங்கள் காத்திருக்கிறோம். மற்ற வாசகர்களும் இதை ஆமோதிப்பார்கள் என்றே நம்புகிறேன்.
//உங்களுடைய கருத்து வேறுபாடுகளை மெயில்கள் மூலம் தீர்த்துக் கொண்டு, நீங்கள் வழமை போல தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எனது அவா.//
உண்மை.. நானும் இதை ஆமோதிக்கிறேன். பதிவுலக சண்டைகளிள் எதிலும் (இந்த விவாதத்தில்கூட) பங்கெடுக்காத சமுத்ரா சாரின் தளத்தில் இவ்வாறான ஒரு விவாதம் இடம்பெறுவதற்கு நான் ஒரு வாசகனாக மிகவும் வருந்துகிறேன். இந்த விடயத்தை இத்துடன் முடித்துக் கொள்வதே எல்லாருக்கும் நன்மை தரும்.
நண்பர்களே, நீங்கள் சொல்வது போல் நான் காயப்பட்டது உண்மை. பதிலுக்கு நான் சமுத்ராவிடம் மன்னிப்பு எதிர்பார்க்க வில்லை. ஆனால் இப்படி முதல் நாள் ஒரு மாதிரியும், மறுநாள் வேறு மாதிரியும் unpredictable ஆக நடந்து கொண்டதன் காரணத்தை தான் எதிர் பார்த்தேன். என்னை ignore-- செய்வதாக நினைத்து கொள்கிறார் போலும் சமுத்ரா.
அவர் பதிவில் வழக்கமாய் வந்து "பல கருத்துக்களை" உதிர்த்து போகும் தாஸ் சொல்வதும், நான் சொல்வதும் ஒன்றல்ல. நான் சொல்வது அவர் மீது குற்றச்சாட்டு. அதற்கு சமுத்ரா தான் பதில் சொல்ல வேண்டும்.
நான் வழக்கறிஞர் என்பதால், இதை வாசிக்கும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதால் சொல்கிறேன்: உங்கள் மீது பிறர் குற்றம் சுமத்தும் போது, நீங்கள் சும்மா இருந்தால், குற்றத்தை ஒத்து கொண்டதாக தான் பொருள். இது கோர்டுக்கு உள்ளே மட்டுமல்ல, வெளியிலும் பொருந்தும். உதாரணமாய் "X" திருடினார் என "X" முன்னே ஒருவர் சொல்கிறார் . குற்றம் சாட்டப்படும் " X" பேசாமல் இருக்கிறார்; இதை சிலர் பார்க்கின்றனர். இந்த சம்பவமே கோர்ட்டில் பேசாமல் இருந்த- "X"க்கு எதிராய் Evidence-ஆக காட்டலாம் என Evidence சட்டம் சொல்கிறது. (நான் சொன்ன அதே உதாரணம் - Ditto -வாக - Evidence சட்டத்தில் உள்ளதை நீங்கள் தேடி படித்து தெரிந்து கொள்ளலாம்; இன்னும் இந்த சட்டத்தை -ACS Institute-ல் நான் பாடம் எடுப்பதால் சொல்கிறேன் )
சமுத்ரா " என்னை மாதிரி பத்து இடத்திலிருந்து திருட வேண்டும்" என்றும், "உனக்கு சொந்தமா எழுதவே தெரியாதா?" என்று தன்னை தானே கேட்பது போல் பதிவுகளில் கிண்டல் செய்து கொள்ளட்டும். என்னை நேராகவோ, மறை முகமாகவோ எழுதினால் நான் இங்கேயோ, என் பதிவிலேயோ பதில் சொல்ல தான் செய்வேன்
நண்பர் அபராஜித் சொன்னது போல் இந்த பிரச்னையை இத்துடன் முடிக்கலாம்.
யார் யார் மேல் என்ன தவறு என அவரவரே கால போக்கில் உணருவோம் !
many more happy returns of the day!
உஸ்.. யப்பா... சண்டை முடிஞ்சுடுச்சா... ஒரு குழாயடி சண்டையே நடந்து முடிஞ்சா மாறி இருக்கு... போங்கப்பா, போய் ஆவுற வேலையா பாருங்க... (இதுக்கும் மறுபடி பொங்கிடுவாங்களோ??) :)
- parthi2929
தங்களின் இணையப் பதிவை நான் தொடர்ந்து படிக்கிறேன். You are doing a good job.
தங்களின் பார்வைக்கு என் பதிவையும் தருகிறேன். சும்மா விளம்பரம்தான்.
http://shimarao.blogspot.com/
நன்றி.
//உங்களுடைய கருத்து வேறுபாடுகளை மெயில்கள் மூலம் தீர்த்துக் கொண்டு, நீங்கள் வழமை போல தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எனது அவா. உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படிக்க நாங்கள் காத்திருக்கிறோம்.//நானும் ஆமோதிக்கிறேன், சமுத்ரா சார், ஒரு வாசகியாக உங்க பதிவில் இப்படியொரு விவாதம் நடப்பது வருத்தத்தை அளிக்கிறது.... விவாதிக்கப்பட்ட கருத்துக்களை மனதில் ஏற்றி கொள்ளாதீர்கள், தொடர்ந்து உங்கள் நடையில் எழுதுங்கள் ...
Post a Comment