இந்த வலையில் தேடவும்

Wednesday, February 8, 2012

கலைடாஸ்கோப்-53

லைடாஸ்கோப்-53 உங்களை வரவேற்கிறது.

un
===


'நண்பன்' திரைப்படத்தில் இரண்டு விஷயங்களை மட்டும் இங்கே எடுத்துக் கொள்வோம்.

* மாணவர்களுக்குப் புரியும்படி பாடம் நடத்த வேண்டும்.
** தங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.

இந்த இரண்டுக்கும் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. ஆனால் பாருங்கள் A movie is a movie...அங்கே என்ன வேண்டுமானாலும் நடக்கும்.முதலாம் ஆண்டு மாணவன் கல்லூரி முதல்வரை எதிர்த்துப் பேசலாம்; மாடியில் இருந்து கீழே குதித்தாலும் ஒரே வாரத்தில் சரியாகி விடலாம்.(ALL IS WELL என்று சொன்னால் போதும்) .ஃபைனல் இயர் ப்ராஜெக்டை வைத்துக் கொண்டு பிரசவம் பார்க்கலாம்!மேலும் கடைசியில் எப்படியோ ஹீரோவும் ஹீரோயினும் வழக்கம் போல ஒன்று சேர்ந்து விடுவார்கள். ஆனால் நடைமுறையில் * மற்றும் ** கொஞ்சம் கஷ்டம்.

* கல்லூரிகளில் செமஸ்டர்களின் காலம் மிகக் குறைவு. நான்கைந்து மாதங்களுக்குள் முழு சிலபஸ்ஸை முடிக்க வேண்டும்.
இந்த லட்சணத்தில் எல்லாவற்றையும் பொறுமையாக புரியும்படி விளக்கிக் கொண்டிருக்க முடியாது. குறிப்பாக தங்கள் துறைக்கு சம்பந்தம் இல்லாத பாடத்தில்! மெக்கானிக்கல் மாணவர்கள் முதலாம் ஆண்டில் எலக்ட்ரிகல் இஞ்சினியரிங் படிப்பார்கள். அவர்கள் அதில் பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டார்கள். அவர்களுக்கு ட்ரான்ஸ்பார்மர் எப்படி வேலை செய்கிறது என்று ஒருவாரம் படம் போட்டு விளக்கிக் கொண்டிருப்பது வேஸ்ட்.மேலும் சில விஷயங்கள் 'இது இப்படித்தான்' (TAKE IT FOR GRANTED ) என்றுதான் சொல்ல முடியும். IOW , மிகவும் எளிமைப்படுத்த முடியாது. அதிகபட்சம் ஆங்கிலத்தில் இருப்பதைத் தமிழில் விளக்கலாம். ஆனால் அதனால் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடப் போவதில்லை.

கல்லூரிகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் ஆய்வகங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் அங்கேயும் இந்த ஒயரையும் இந்த ஒயரையும் கனெக்ட் பண்ணு,இதை அமுக்கு, இங்கே ரீடிங் எடு என்றுதான் சொல்லித் தருகிறார்கள்.KIT என்று அழைக்கப்படும் பெட்டியின் உள்ளே என்ன இருக்கிறது அது எப்படி வேலை செய்கிறது என்று கடவுளுக்கே வெளிச்சம். அதே மாதிரி
Industrial Visit என்பதும் வேஸ்ட். மாணவர்களைப் பொறுத்தவரை அது ஒரு ஜாலி டூர். They need a prototype model . ராட்சச இயந்திரங்களை தூரத்தில் இருந்து காட்டி அவை உமிழும் இரைச்சலில் 'இதுதான் டர்பைன்' என்று ஆரம்பித்து தொழில்நுட்ப வார்த்தைகளில் விளக்கினால் ஒரு மண்ணாங்கட்டியும் உள்ளே ஏறாது.(என் அனுபவத்தில் சொல்கிறேன்) இண்டக்ஷன் மோட்டார் எப்படி ஸ்டார்ட் ஆகிறது என்று கேட்டால் மாணவர் 'டுர்ர்ரர்ர்ர்ர்' என்று உருட்டுவது ஒரு பழைய ஸிக் ஜோக். திரைப்படத்தில் அதைத் தவிர்த்து சங்கர் அல்லது மதன் கார்க்கி உண்மையிலேயே ஒரு
Two-stroke என்ஜின் எப்படி வேலை செய்கிறது என்று படத்தில் எளிமையாக படம்போட்டு
மாணவர்களுக்கு விளக்கி இருந்தால் பரவாயில்லை. அப்படியெல்லாம் பண்ண மாட்டார்கள். என்ன சொல்ல வருகிறேன் என்றால் (எனக்கே குழப்பமாக இருக்கிறது, எனிவே) ....சரி அடுத்த விஷயத்தைப் படிக்கவும்.

** இந்த 'விரும்பிய-துறையைத்-தேர்ந்தெடுப்பது' : பள்ளிகளில் இருந்தே மாணவர்கள் டாக்டர் இல்லை இஞ்சினியர் ஆவார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் தான் பாடங்கள் இருக்கின்றன. எழுத்தாளர் ஆவதற்கோ ஃபோட்டோக்ராபர் ஆவதற்கோ இயக்குனர் ஆவதற்கோ பாடங்களும் இல்லை பயிற்சிகளும் இல்லை. கொடுமை என்ன என்றால் படிப்பை முடித்ததும் நமக்கு என்ன என்ன சாய்ஸ்கள் இருக்கின்றன என்பதே மாணவர்களுக்குத் தெரிவதில்லை.SPECIALIZATION என்பது, என்னைப் பொறுத்த அளவில், பள்ளிப் பருவத்திலேயே தொடங்க வேண்டும்.ஏழு கழுதை வயதில் தொடங்கக் கூடாது. அப்படி வந்தால்தான் தவளையின் சிறுநீரகம் பற்றிப் படித்து விட்டு பின்னர் பேங்கில் வேலை செய்யும் அபத்தங்கள் நடக்காமல் இருக்கும். ஆறாம் வகுப்பு வரை பொதுவாகப் படித்து விட்டு பின்னர் உனக்கு எதில் விருப்பம் என்று கேட்டு அந்த டிபார்ட்மெண்டுக்கு அவனை/அவளை அனுப்ப வேண்டும். சங்கீதம் கற்றுக்கொள்ள விருப்பம் என்றால் அப்போதே அவனை அந்த துறைக்கு மாற்றம் செய்ய வேண்டும். IOW , பள்ளிகள் ஒரு மினி பல்கலைக்கழகங்கள் போல செயல்பட வேண்டும்! Deep knowledge or Wide knowledge ??? என்று மாணவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். களவும் கற்று மறப்பதா இல்லை களவை மற்றும் கற்று பிழைப்பதா என்று.

[ BTW , நண்பன் ஒரு modify செய்யப்பட்ட வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என்று தோன்றுகிறது ! பிரகாஷ் ராஜுக்குப் பதில் சத்ய ராஜ்! கமலுக்குப் பதில் விஜய்! சிநேகாவுக்குப் பதில் இலியானா, அங்கே மெடிக்கல் இங்கே இஞ்சினியரிங்! அங்கே நோயாளிகளிடம் அன்பு,இங்கே மாணவர்களிடம் அன்பு! ஒரு வித்தியாசம் என்ன என்றால் அங்கே கமல் பாஸ் ஆக வேறொருவர் பரீட்சை எழுதுகிறார், இங்கே வேறொருவர் பாஸ் ஆக விஜய் பரீட்சை எழுதுகிறார்!]

deux
====

நீ
சாம்ராஜ்யங்களை
தரைமட்டம் ஆக்கி இருக்கிறாய்!
நாகரீகங்களை
நாராசம் செய்திருக்கிறாய்.
மெளனமாக இருந்து கொண்டே
மலைகளை
தகர்த்திருக்கிறாய்!
கண்டங்களை
நகர்த்தி இருக்கிறாய்
அழகை
அலங்கோலமாக மாற்றி இருக்கிறாய்
அன்பை வெறுப்பாக்கி இருக்கிறாய்
வெறுப்பை அன்பாக மாற்றி இருக்கிறாய்
சர்வாதிகாரிகளை
பிச்சை எடுக்க வைத்திருக்கிறாய்
மனிதர்களை மண்ணில் புதைத்திருக்கிறாய்

இதற்கு விடை என்ன என்று ஓரளவு ஊகித்திருப்பீர்கள். 'காலம்' தான் அது. 'உலகிலேயே மிக அதிக கொலைகளை செய்தது யார்? என்ற கேள்விக்கு பதிலும் காலம் தான். ஆம். Time is a serial killer ..Time is a slow poison !அது மட்டும் அல்ல. காலம் காயங்களை ஆற்றும் மருந்துகளிலேயே மிகச் சிறந்தது கூட. ஆற்றின் ஓட்டம் போல காலம் சில இடங்களில் மெதுவாகவும் சில இடங்களில் ஆக்ரோஷமாகவும் நகருகிறது. சக்ரவர்த்தியானாலும் பரதேசியானாலும் சந்தனக் கட்டை ஆனாலும் , நாறும் பிணம் அனாலும் எல்லாவற்றையும் இழுத்துக் கொண்டு தான் கதியில் பயணிக்கிறது காலநதி.

You are not killing the time...Time is killing
You என்பார் ஓஷோ.

எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்லணுமா? ஏன் ரோ(ROW ) சொல்லாதா என்பது மறுபடியும் ஒரு சிக் ஜோக்.

trois
===========

* அடிக்கடி you have Won $ 1 (பின்புறம் ஒரு ஏழெட்டு ஜீரோ!) டாலர், யூரோ. உடனே தொடர்பு கொள்ளவும் என்று இமெயில் எஸ்.எம்.எஸ் எல்லாம் வருகிறது. உதாரணம்: We wish to congratulate you formally and inform you that your E-mail address has won you the sum of £500,000.00 GBP(Our grand prize) In the recent on-line promotion through computerize random email selection draws held today by BBC NATIONAL LOTTERY UK.Please contact ..சரி. இவையெல்லாம் உண்மையாக இருந்தால் எப்போதோ அம்பானியை ஓவர்-டேக் பண்ணி இருக்கலாம்! பில் கேட்சுடன் பிசினஸ் பேசலாம்! சோனியா காந்தியுடன் அமர்ந்து சோன் பப்படி சாப்பிடலாம்.ஹ்ம்ம் :(

** இப்போது ATM மெஷின்களில் நூறு ரூபாய் வருவதே இல்லை. ஐநூறு தான் வருகிறது. கடைகளிலும் சில்லறை தருவதில்லை.பேங்க் காரர்கள் கவனிக்கவும்.காசு இல்லாவிட்டால் மட்டும் பிச்சைக் காரன் அல்ல. உங்கள் கையில் ஒரே ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டும் இருந்தாலும் நீங்கள் பி.கா தான். நோட்டை வாங்கவே மாட்டேங்கறாங்க எஜமான்!

*** ஒவ்வொரு நாளின் டாப்-டென் கீச்சுகளைத் தொகுத்துத் தருகிறது இந்தத் தளம். ட்விட்டரில் நடக்கும் வெட்டி அரட்டைகளை விரும்பாதவர்கள் அந்தந்த நாளின் சிறந்த ட்விட்டுகளை இங்கிருந்தே பார்த்துக் கொள்ளலாம். கோயிலின் நெரிசலை விரும்பாதவர்கள் டி.வி யில் லைவாக கும்பாபிஷேகம் பார்ப்பது போல!

**** பிடித்த பொன்மொழி

The first step to empty a water tank is to stop the supply

quatre
========

A well-spent day brings happy sleep - Leonardo da Vinci

The best cure for insomnia is to get a lot of sleep.-W. C. Fields

தூங்காதே தம்பி தூங்காதே என்று எம்.ஜி.ஆர் பாடினாலும் தூக்கம் எத்தனை அவசியம் என்று நம் எல்லாருக்கும் தெரியும். பிறந்த குழந்தை நாளுக்கு 22 மணிநேரம் தூங்குகிறதாம். நாளுக்கு 22 மணிநேரம் தூங்காமல் விழித்திருப்பவர்களையும் பார்த்திருக்கிறேன். 'மெய் வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார் கருமமே கண்ணாயினார்' என்று படித்திருக்கிறோம். ஏதாவது சாதிக்க வேண்டும் என்றால், மறுநாள் வேலை ஆக வேண்டும் என்றால், பரிட்சைக்குப் படிக்க வேண்டும் என்றால், கல்யாணத்துக்குப் போக வேண்டும் என்றால்,(அல்லது புதிதாக கல்யாணம் ஆகி இருந்தால்) நாம் முதலில் குறிவைப்பது தூக்கத்தைத் தான். ஆனால் தூக்கத்தை நம்மால் ஏமாற்ற முடியாது. அது நம்மை அறியாமலேயே நம்மை ஆட்கொண்டு விடும்.இதனால் தான் உண்ணா விரதம் இருக்கும் மனிதன் 'தூங்கா விரதம்' என்று ஒன்று இருப்பதில்லை. எப்படியோ, எங்கிருந்தோ வந்து தூக்கம் நம்மை எடுத்துக் கொண்டு விடும். சரி.

தூக்கம் மனிதர்களைப் பொறுத்து மாறுபடும். எத்தனை இரைச்சலாக இருந்தாலும் , கல்யாண வீட்டில் மேளச் சத்தம் ,பெண்கள் சத்தம் ,குழந்தைகள் சத்தம்,பலூன் உடையும் சத்தம் ,அபத்த ஜோக்குகளுக்கு சிரிக்கும் ஆண்களின் சத்தம் ,குழந்தைகளை பெற்றோர்கள் அதட்டும் சத்தம்,சம்பந்திகள் சண்டை போடும் சத்தம் என்று என்ன சத்தம் வந்தாலும் சேரில் உட்கார்ந்து கொண்டே சின்சியராக குறட்டை விடுபவர்களைப் பார்க்க பொறாமையாக இருக்கும். நமக்கெல்லாம் 'முளுக்' என்றாலும் 'படக்' என்று விழிப்பு வந்து விடுகிறது:( அதே போல படுத்ததும் சில பேர் சுவிட்ச் போட்டது போல குறட்டை விட ஆரம்பித்து விடுவார்கள்.சில பேர் எத்தனை வெளிச்சமாக இருந்தாலும் அப்படியே தூங்கிப் போய் விடுவார்கள்.நமெக்கெல்லாம் ஜீரோ வாட்ஸ் எரிந்தாலே தூக்கம் வருவதில்லை.)

சில பேர் பஸ்ஸில் ஏறி ஒரு (ஜன்னல்)சீட் கிடைத்து விட்டால் போதும். டிக்கெட் கூட வாங்காமல் தூங்க ஆரம்பித்து விடுவார்கள்.டெர்மினல் வந்த போதும் சீட்டில் குறட்டை விட்டு ஜொள் ஒழுக நித்திரா தேவியை அணைத்துக் கொண்டிருக்கும் ஒரு பயணி கண்டிப்பாக ஒவ்வொரு பஸ்சிலும் இருப்பார்! அது ஏனோ தெரியவில்லை சில பேருக்கு சலூனில் போய் அமர்ந்த உடனேயே வாராத தூக்கம் எல்லாம் பொத்துக் கொண்டு வந்து விடுகிறது. தலையில் கத்திரியை வைத்ததும் தாலாட்டு பாடுவது போல இருக்கும் போலிருக்கிறது. சரி. என்ன தான் சொன்னாலும் காலை பதினொரு மணி அளவில் ஒரு விதமான பசி கலந்த கண் மயக்கம் வருமே? அதற்கு இணையாக எதையும் சொல்லவே முடியாது போங்கள்! ஆபீசில் உட்கார்ந்து கொண்டு என்ன எழுதிக் கொண்டிருக்கிறேன் பாருங்கள்? ! ;-(

cinq
=====

'தமிழ்த் திரைப்படப் பாடல்களில் பறவைகள்' என்று யாராவது பி.ஹெச்.டி. செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் பாடல்களில் மிக அதிகம்இடம் பெற்ற பறவை ( Any guess )....

.
..
...
....
.....
......
.......
........


நம் குயிலக்காவுக்கே போகிறது. ஆமாம்.. எத்தனை பாடல்கள்!

குயிலே குயிலே குயிலக்கா...
குயிலப் புடிச்சு கூண்டில் அடச்சு
கூக்கூ என்று குயில் கூவாதோ
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதோ
குயில் பாட்டு ஒ வந்ததென்ன
சின்ன சின்ன வண்ணக்குயில்
சின்னகுயில் பாடும் பாட்டுக் கேட்குதா

சரி. தமிழ்ப் பாடல்கள் எந்தப் பறவையையும் விட்டு வைக்கவில்லை :-

கொக்கு பற பற..
கொஞ்சும் மைனாக்களே
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து
மாதவிப் பொன் மயிலாள்
உரக்கக் கத்துது கோழி
ஆத்தீ இது வாத்துக் கூட்டம்
பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு
மரங்கொத்திப் பறவை ஒன்று மனங்கொத்திப் போனதென்று
காக்கைச் சிறகினிலே நந்தலாலா
வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது
அண்டங்காக்கா கொண்டைக்காரி
தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
தூக்கணாங்குருவிக்கூடு தூங்கக்கண்டேன்
வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்

சரி... ஆந்தை, கழுகு இவற்றை வைத்து எந்தப் பாடலும் கிடைக்கவில்லை. ஒரு வேளை இருக்கலாம்!உங்களுக்கு
தெரிந்தால் கூவலாம், சாரி கூறலாம்.


six
====


ஓஷோ ஜோக்.

நகரத்திற்கு புதிதாக வந்த ஒரு மனிதனைப் பார்த்து முல்லா கேட்டார் "எதற்காக வந்திருக்கிறாய்"

"இங்கே ஒரு நேர்மையான வாழ்வை மேற்கொள்ளலாம் என்று வந்திருக்கிறேன் அய்யா"

அப்படியானால் சரி.. நீ கண்டிப்பாக செய்யலாம். அதற்கு இங்கே பெரிதாகப் போட்டி ஒன்றும் இல்லை!ஒரு நாள் ஒரு டாக்டருக்கு முல்லாவிடம் இருந்து ஃபோன் வந்தது.

"டாக்டர், டாக்டர் , என் மனைவிக்கு குடல்வால் வலி வந்து மிகவும் துடிக்கிறாள்" சீக்கிரம் டாக்டர்..

டாக்டர் " காலையில் வருகிறேனே "

முல்லா, "ரொம்ப அவசரம் டாக்டர், நீங்கள் வரவில்லை என்றால் செத்துப் போய்விடுவாள் போல இருக்கிறது!"

"முல்லா, போன வருடம் தானே உங்க மனைவிக்கு குடல்வால் அறுவை சிகிச்சை செய்தேன்.. ஒருத்தருக்கு
ரெண்டு குடல்வால் இருக்க வாய்ப்பே இல்லை.

"ஆனா டாக்டர், ஒருத்தருக்கு ரெண்டு மனைவி இருக்க வாய்ப்பு இருக்குங்களே"


சமுத்ரா

17 comments:

வரதராஜலு .பூ said...

ரொம்ப நல்லா இன்னைய தொகுப்பு

க.பாலாசி said...

என்னடா இந்த நேரத்துல சமுத்ரா பதிவு போட்டுட்டாரேன்னு பாதி தூக்கத்திலேயே படிக்கிறேன்.. 11 மணிக்கு பசி தூக்கம், இது உண்டபின் :(((

சுவாரசியம்.

கணேஷ் said...

ஆஹா... ஏ.டி.எம்மில் ஐநூறு ரூபா நோட்டு மட்டும் தானே தருவேங்குது 200 ரூபா தேவைப்படற நான் என்ன செய்யறதுன்னு தருமி மாதிரி புலம்பிருக்கேன் பல சமயங்கள்ல. நீங்களும் அதை அனுபவிச்சிருக்கீங்கன்றதுல எவ்ளோ ஆறுதல் எனக்கு. (வொய் பிளட், ஸேம் பிளட்!)

போரிங் மெஷின் நுறு மாவுமில் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்க, அதன் அருகில் படுத்துத் தூங்கும் தொழிலாளியைக் கண்டு வியந்திருக்கிறேன். நீங்கள் சொன்னது மிகமிகச் சரி.

கணேஷ் said...

இந்த எஸ்.எம்.எஸ.கள் எனக்கும் வந்து தொலைக்கின்றன. ஆரம்ப வரியைப் படித்த உடனேயே டெலிட் செய்து விடுவேன். அதை ரைமிங் வார்த்தைகளுடன் நீங்க சொன்னது அருமை.

முல்லா ஜோக் பிரமாதம்.

காலத்தின் வலிமையைப் பற்றி இதைவிட அழகாக யாரும் சொல்லிவிட முடியாது.

கல்வி பற்றிப் பேசற அளவுக்கு நமக்கு சரக்குப் பத்தாதுங்கறதால... கலைடாஸ்கோப் இம்முறையும் நல்லாவே ஜொலிச்சிருக்குன்னு பாராட்டிட்டு ஜகா வாங்கிக்கறேன்.

Katz said...

//உங்கள் கையில் ஒரே ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டும் இருந்தாலும் நீங்கள் பி.கா தான். நோட்டை வாங்கவே மாட்டேங்கறாங்க எஜமான்!//


ROFL..

ஸ்ரீராம். said...

பல்சுவைப் பதிவு மாதிரி எல்லாப் பக்கமும் தொட்டு எழுதி இருக்கிறீர்கள். யாருக்கு எதில் சுவாரஸ்யமோ அதை விரும்பிப் படித்து அதில் உரையாடலாம்! இரண்டாவது ஜோக் பிரமாதம்!
அதோ அந்தப் பறவை போல, பறவைகள் பலவிதம், குருவிகளா குருவிகளா என்று போது விளிப்பிலும் பாடல்கள் இருக்கின்றன. 'எண்ணப் பறவை சிறகடித்து என்று எண்ணப் பறவைக்குக் கூட பாட்டு இருக்கிறது! நடுவில் வருவது போல 'கருடா சௌக்கியமா' என்று பாட்டு இருக்கிறது.
தூக்கத்தில் எனக்கு வரம் இருக்கிறது!
கவிதையும் நண்பன் அலசலும் அருமை.

Kumaran said...

@@ You are not killing the time...Time is killing You @@
எத்தனைஅ சத்தியம் இதில்..இப்பொழுதுதான் ஓஷோ என்னும் சமுத்திரத்தை வேடிக்கை பார்க்க தொடங்கியுள்ளேன்.

ரொம்ப நீண்ட பதிவாகவே போட்டுட்டீங்க..முடிந்தளவுக்கு இல்லை.. புரிந்த அளவுக்கு படித்தேன்..சிறப்பாக உள்ளது..ஒவ்வொரு கருத்தும் உண்மையாக சிந்திக்க வைக்கின்றது..என் மனமார்ந்த நன்றிகள்..
சைக்கோ திரை விமர்சனம்

chandru said...

நண்பன்= வசூல்ராஜா அருமையான விளக்கம்.துறையை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு தெளிவுள்ளவர்களாக மானவர்கள் உள்ளனரா? அவர்களே குழப்பத்தில் இருக்கும் போது வழிகாட்டிகள்(Guide) தேவைதானே?

ஓ இதைத்தான் brief history of time என்பார்களோ
பீனிக்ஸ் பறவை பற்றி கூட கேட்டமாதிரி இருக்கு.

ILA(@)இளா said...

வழமை போல் நன்று.. ஆமென்

சேலம் தேவா said...

//கோயிலின் நெரிசலை விரும்பாதவர்கள் டி.வி யில் லைவாக கும்பாபிஷேகம் பார்ப்பது போல!//

ரசிக்கவைக்கும் உதாரணம்..!! :)
வழமை போல் அருமை.

POWER Thaz said...

அங்கே கமல் பாஸ் ஆக வேறொருவர் பரீட்சை எழுதுகிறார், இங்கே வேறொருவர் பாஸ் ஆக விஜய் பரீட்சை எழுதுகிறார்!

நல்லா இருக்கின்றது.


இந்த ப்ளாக்கை பார்த்த தேதி மட்டும் ஒட்டிக்கொண்டது என் ஞாபகத்தில்,
என் கணணி வாழும் காலமெல்லாம் உன் bookmark இருக்கும் என் browersஇலே,
இணையத்தில் பிடித்தது எது என்று எனை கேட்டால் இந்த ப்ளாக்'கை காட்டிடுவேன்,
என் அடுத்த ஜன்மத்தில் இங்கே பதிவாவேன்...

G.M..BALASUBRAMANIAM. said...

உங்கள் எழுத்தை நீங்களே ரசித்தால்தான் இம்மாதிரி எல்லாம் எழுத முடியும். உங்களுக்குப் பிடிக்காதவற்றையும் கூர்ந்து கவனிக்கிறீர்கள். அதனால்தான் எதையும் எழுத முடிகிறது. பாராட்டுக்கள்.

ஷர்புதீன் said...

nice and as usual!

Munusamy said...

நண்பன் பற்றிய உங்கள் கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன். ஆனால் ஒரு எழுத்தாளனுக்கு தவளையைப் பற்றியும் டார்வின் கோட்பாடு பற்றியும் சுத்தமாக தெரிய வேண்டியதில்லை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. படித்த அனைவருக்கும் அறிவியல், கணிதம் உள்ளிட்ட அடிப்படை துறைகளில் அவர்களது படிப்பிற்கு எற்றவாறு அறிவு போதிக்கப் பட வேண்டும். Mech student-க்கு Civil தெரிந்திருக்க வேண்டும் (and vice versa) அப்போதுதான் அவன் EPC-Project-களில் வேலை செய்யமுடியும். நமது பாடத்திட்டம் real life case study-களை உள்ளடக்க வேண்டியது அவசியம்தான் மற்ற குறைகள் அனைத்தும் படிக்க முடியாததாலும் படம் ஓட வேன்டியதாலும் கூறப்படுபவை என கருதுகிறேன். - தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை - நன்றிகள் பல.

Anonymous said...

http://www.youtube.com/watch?v=r9LelXa3U_I&feature=relmfu

http://www.youtube.com/watch?v=rrkrvAUbU9Y&feature=relmfu

Thats the answer to anything to be shared about ours and global education system.

-parthi2929

Anonymous said...

Education system பற்றிய உங்கள் கருத்துக்கள் உண்மை..அதுவும் நகைச்சுவையாக, எளிமையாக விளக்கும் ஆற்றல் உங்களிடம் உள்ளது.. ஆனால், இது கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் சென்று விவாதிக்கப்பட வேண்டும்.. இதை நீங்கள் அங்கு கொண்டு செல்ல வேண்டும்... TEDx போன்ற தளங்களை உபயோகப்படுத்துங்கள்.. எனக்குத்தெரிந்து கோவைக்கும், சேலத்திற்குமே TEDx இருக்கின்றன.. So, சென்னை, பெங்களூருக்கும் கண்டிப்பாக இருக்கும்...

-parthi2929

சார்வாகன் said...

Nice One .Thanks