இந்த வலையில் தேடவும்

Wednesday, September 28, 2011

நவராத்திரி பாடல் (குழந்தைகளுக்கு)

மழை பொய்த்து விட்ட
மாநிலத்திலும் -
குழந்தைகள் பாடுகிறார்கள்
'RAIN RAIN GO AWAY '

இது தான் எத்தனை உண்மை? ஆங்கில ரைம்ஸ்களில் பல, அந்த நாட்டு கலாச்சாரத்துக்கும் சூழ்நிலைக்கும் பருவநிலைக்கும் பொருந்துபவை, அவற்றை இங்கே நாம் நம் குழந்தைகளுக்கு பெருமையாக சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சரி ஆங்கில அறிவு வளர அர்த்தம் எல்லாம் பார்க்க வேண்டாம் என்று வைத்துக் கொண்டாலும் நாம் குழந்தைகளுக்கு எளிய தமிழ்ப் பாடல்களையும் கற்றுத் தரலாமே? பின்னர் பேருந்துகளில் தமிழில் எழுதி இருக்கும் வழித் தடங்களைப் படிக்க முடியாத நிலைமையை நாம் நம் குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டிருக்காது. சரி குழந்தைகளுக்கு எளிமையான ஒரு நவராத்திரி பாடல். பிடித்திருந்தால் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம்:


அழகழகாய் பொம்மை பாரு
அணிவகுத்து நிற்குது
கலகலப்பாய் கண் சிமிட்டி
கவலை மறக்க வைக்குது 1

குண்டு வயிறு செட்டியாரு
கடுகு சீரகம் விற்குது
அண்ட வந்த ஈயும் விரட்ட
ஆளில்லாமல் சுத்துது 2

பூங்காவிலே பொம்மையெல்லாம்
புதிய பாட்டு பாடுது
தூங்காமலே இரவும் பகலும்
தூளியிலே ஆடுது 3

மரப்பாச்சி பொம்மை பாரு
மணி மணியாய் நிற்குது
கருப்பாச்சி பொண்ணு அங்கே
கணவனை முறைக்குது 4

ராமர் பொம்மை வில்லை ஏந்தி
ரம்மியமாய் நிற்குது
சாமி முன்னே அனுமாரும்
சாந்தமாய்கை குவிக்குது 5

சின்னக் கண்ணன் கையினிலே
வண்ணப் பானை இருக்குது
உண்ண உண்ண வாய்வழியே
வெண்ணையும் தான் ஒழுகுது 6

தஞ்சாவூரு பொம்மையும்தான்
தலையை தலையை ஆட்டுது
கொஞ்சம் அங்கே திரும்பிப் பாரு
கொரங்கு பொம்மை அசத்துது 7

பாவை விளக்கு பொம்மை ஒண்ணு
பத்திரமாய் நிற்குது
சாவி கொடுத்த ரயிலு ஒண்ணு
சக்கரம் போல் சுத்துது 8

முருகன் பொம்மை மயிலு மேலே
முத்து முத்தாய் ஒளிருது
அருகில் வந்து பாரு இங்கே
ஆனை ரெண்டு பிளிருது 9

மூணாவது படியில் பாரு
முதலை ஒண்ணு சிரிக்குது
ஆனா கிட்டப் போயிடாதே
அடிவயிறு கலக்குது 10

கல்லியாண ஊர்வலத்தில்
குதிரை ஒண்ணு நடக்குது
ஒல்லியான மணப்பொண்ணு
ஒயிலாத்தான் சிரிக்குது 11

கொக்கு பாரு ஆமை பாரு
கோழி பாரு கத்துது
பக்கத்திலே வந்து பாரு
பூமி உருண்டை சுத்துது 12


பாவக்காய் கத்திரிக்காய்
பிளாஸ்டிக்கிலே சிரிக்குது
கோவக்கார பூனை ஒன்னு
கண் முழித்துப் பார்க்குது 13

பார்த்தாயா நாயி பொம்மை
படுத்து கனவு காணுது
வாத்து பொம்மை தண்ணி இன்றி
வருத்தமாக தோணுது 14


புள்ளையாரு பொம்மை ஒண்ணு
புதுவிதமாய் இருக்குது
குள்ளமான பொம்மை ஒண்ணு
குடைபிடித்து நிற்குது 15


காவி உடை சாமியாரு
கண்ணை மூடி இருக்குது
தாவி வரும் மானு பாரு
தலை நிமிர்த்திப் பார்க்குது 16

ஒன்பதுநாள் கொலுவும் இங்கே
ஒயிலாத்தான் இருக்குது
தின்பதற்கு தினம் தினமும்
தீனி கூட கிடைக்குது 17

பெரிய துன்பம் வந்த போதும்
பொம்மை போல இருக்கணும்
உறுதியாக இருந்து விட்டால்
உள்ளம் இன்னும் பலப்படும் 18


சமுத்ரா
9 comments:

பத்மநாபன் said...

இந்த பாட்டு நம்மையே ஆசை ஆசையாய் பாட வைக்குதே..... வாழ்க....

Sugumarje said...

நிச்சயமாக கொலுவில் இந்த பாடலை சேர்த்துக்கொள்ளலாம் :)

kaialavuman said...

வாவ். அருமையான பாடல்.

G.M Balasubramaniam said...

மழை பற்றி நான் சின்னவனாக இருந்தபோது கேட்ட பாடல் கொஞ்சம் நினைவுக்கு வருகிறது.”ஜோர் ஜோர் மழை பார் , கோவில் மண்ணை தூக்குது பார், “என்று போகும். நம் நாட்டுப் பாடல். ரெயின் ரெயின் கோ அவே கேட்கும்போது எனக்குக் கோபம் வரும்.

Li. said...

நீங்களே எழுதியது என்று நினைக்கிறேன் ! நல்ல முயற்சி ... :-) வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

மனதை நிறைக்கும் அருமையான பாடல் வரிகளுக்குப் பாராட்டுக்கள்!

M.R said...

அருமையான பாடல் ,பகிர்வுக்கு நன்றி

நம்பிக்கைபாண்டியன் said...

பெரிய இயற்பியல் ஆர்வலரா இருப்பிங்க போல, ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்ன் அணுவிலிருந்து அண்டம் உருவான விதம் பற்றி நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் பார்த்திருக்கிறேன்(தமிழில்) அருமையாக இருக்கும்! உங்கள் விளக்கம் இன்னும் விரிவாக உள்ள்து,நன்று.

அம்பாளடியாள் said...

அருமையான சந்தக் கவிதை .இதை நீங்கள்தான் எழுதினீர்களா ?...
வரிகள் ஒவ்வொன்றும் விளையாடும் வார்த்தை ஜாலம் அற்புதமாக
உள்ளது .வாழ்த்துக்கள் மென்மேலும் சிறப்பான ஆக்கங்களை
உருவாக்க .மிக்க நன்றி பகிர்வுக்கு ......