இந்த வலையில் தேடவும்

Monday, September 26, 2011

கலைடாஸ்கோப் -39

லைடாஸ்கோப் -39 உங்களை வரவேற்கிறது.

1
==

சில விஷயங்கள் அல்லது பொருட்கள் உண்மையில் எதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டனவோ அதை விட்டு வேறு சில உபயோகங்களுக்காகவும் பயன்படும். சேஃப்டி பின்னை அல்லது பென்சிலை சில சமயம் காது குடைய உபயோகிக்கிறோம். பத்திரிக்கைகள் சில சமயம் விசிறிகள் ஆகின்றன. விசிறிகள் (டேபிள் பேன்) சில சமயங்களில் 'ஹேர் ட்ரையர்' ஆகி விடுகிறது.கரண்டிகள் சில சமயம் கணவனை அடிக்கப் பயன்படுகின்றன. ஒரு வீட்டில் ஏலக்காய் பொடி செய்ய டி.வி ரிமோட் உபயோகித்ததைப் பார்த்திருக்கிறேன். சீப்பு சில சமயம் முதுகு சொரியப் பயன்படுகிறது. நியூஸ் பேப்பர் பார்சலுக்கு பயன்படுகிறது.தேளை அடிக்க செருப்பு உபயோகப்படுகிறது.இப்படி நிறைய... இந்த லிஸ்டில் செல்போனும் அடக்கம் என்று தோன்றுகிறது. இப்போது செல்போன் பேசுவதற்கு தான் குறைந்த அளவில் பயன்படுகிறது. சாம்சங் காலக்சி, பாப், வேவ், சாம்ப் என்று என்னென்னவோ சொல்கிறார்கள். செல்போன் கிட்டத்தட்ட ஒரு கம்ப்யூட்டர் ஆகி விட்டது.இந்த மாதிரி மொபைல் போன் இப்போதெல்லாம் வருகிறதா என்று தெரியவில்லை.(வந்தாலும் யாரும் வாங்க மாட்டார்கள்)



செல்போன்கள் என்ன என்னவோ செய்கின்றன. படம் எடுக்கின்றன. வீடியோ எடுக்கின்றன.டெம்பரேசர் காட்டுகின்றன.பக்கத்தில் கொண்டு வந்தால் ஃபைல்களை TRANSFER செய்கின்றன. பெயர் சொன்னால் அந்த பெயர் உள்ளவர்களுக்கு கால் செய்கின்றன. மனதில் நினைத்தாலே கால் செய்யும் செல்போன்கள் வரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று தோன்றுகிறது.

லேன்ட் லைன் என்று அழைக்கப்படும் வீட்டு போன்கள் செல்போன்களுடன் ஒப்பிடும் போது ஒரு கற்கால மனிதனைப் போலத் தோன்றுகின்றன.


சைடு பிட்: செல் போன் ரிங்-டோன்களைப் பார்க்கும் போது மனிதர்களின் கற்பனை வளம் வியக்க வைக்கிறது. ஒரு மெசேஜ் வந்தால் நாய் குரைப்பதுபோல, 'டேய் வெத்து வேட்டு உனக்கு ஒரு மெசேஜ்' என்று, அப்புறம் குழந்தை அழுவது போல , வடிவேலுவின்அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...இதையெல்லாம் வைத்திருக்கிறார்கள்....FUNNY !

2
==

நம்முடைய
வாழ்க்கை
நேர்க்கோடாக,

LINEAR ஆக இருந்தால் நம்மால் ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியாது என்று சொல்கிறார்கள். லீனியர் என்றால் நம்முடைய இன்றுகள் நேற்றுகளின் நகலாக,நம்முடைய நாளைகள் இன்றுகளின் நகலாக இருப்பது. செய்ததையே செய்து கொண்டு இருப்பது. காலையில் எழுந்து பல்துலக்கி காபி குடித்து பாத்ரூம் சென்று பஸ் பிடித்து ஆபீஸ் வந்து பொய்யாக சிரித்து பொய்யாக குட் மார்னிங் சொல்லி,பேலன்ஸ் சீட் தயார் செய்து , கஸ்டமரை பொய்யாகப் புகழ்ந்து, ஏதோ சாப்பிட்டு, சாயங்காலம் கூட்ட நெரிசலில் வீடு வந்து சேர்ந்து, டி.வி ரிமோட்டை கையில் எடுப்பது.

இன்றைய தொழிலதிபர்கள் , சி... க்கள் எல்லாரும் இந்த லீனியர் மாயையை உடைத்துக் கொண்டு வந்தவர்கள் தான். கம்பெனி தரும் மாத சம்பளத்துக்கு மாடு மாதிரி உழைத்துக் கொண்டிருக்காமல் நல்ல சம்பளம் வரும் வேலையை உதறி விட்டு நிச்சயமில்லாத ஒரு பிசினஸை கையில் எடுத்தவர்கள் இருக்கிறார்கள். வனஸ்பதியையும் பேபி சோப்பையும் (வெற்றிகரமாக) மார்கெட் செய்து கொண்டிருந்த விப்ரோவை சாப்ட்வேரை நோக்கி நகர்த்திய போது அஜிம் பிரேம்ஜியை 'நீ முன்னேற மாட்டாய்' என்று திட்டியவர்கள் இருந்தார்கள்.

சாப்ட்வேர் என்றதும் ஞாபகம் வருகிறது. டிகிரி முடித்து விட்டு வரும் பட்டதாரிகளுக்கு இன்றைய சாப்ட்வேர் துறை பரீட்சித்து மாளிகை போல நுழைவதற்கு கஷ்டமாக இருக்கிறது. புதிதாக வருபவர்களிடத்தில் OUT OF BOX THINKING என்ற அணுகுமுறையை எதிர்பார்க்கிறார்கள். ஒரு பிரச்சினையை நேர்கோட்டில் அணுகாமல் புதிய பரிமாணங்களில் அதற்கான தீர்வை யோசிப்பது.
இன்டர்வியூக்களில் CASE STUDY எனப்படும் நடைமுறை பிரச்சானைகளையும் கொடுத்து அதற்குரிய தீர்வுகளை அலச சொல்கிறார்கள்.

கணித மேதைகள் மூன்று பேர+ஒரு சாதாரண ஆள் இவர்கள் நாலு பேரையும் ஒரு சிறையில் அடைத்து ஒரு சிக்கலான புதிரைக் கொடுத்து அதை விடுவிக்க சொன்னார்களாம். அந்த புதிரின் விடையின் படி அந்த சிறைக்கதவின் பூட்டை செட் செய்தால் அது திறந்து கொள்ளுமாம். கணித மேதைகள் மூன்று பேரும் மணிக்கணக்காக பேப்பர்களை வைத்துக் கொண்டு புதிரை விடுவிக்க மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்த போது அந்த ஆள் கூலாக உட்கார்ந்திருந்தானாம். பின்னர் மெதுவாக நடந்து சென்று கதவைத் தள்ள அது திறந்து கொண்டதாம். அதாவது கதவு பூட்டப்படவே இல்லை.இதுதான் OUT OF BOX சிந்தனை. இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் இன்னொரு விஷயம் என்ன என்றால் Before working on the solutions, make sure the problem really exists!

இன்ஃபோசிஸ் போன்ற சில கம்பெனிகள் சகுந்தலாதேவி டைப் புதிர்களைக் கொடுத்து மாணவர்களை விடுவிக்க சொல்கின்றன. இப்போது லைடாஸ்கோப் வாசகர்களுக்காக இரண்டு புதிர்கள்:

1 . ஒரு மாதத்தில் ஒரு முறை வரும்; பன்னிரண்டு ஆண்டுகளுக்கு இருமுறை வரும்; ஒரு யுகத்தில் ஒருமுறை கூட வராது; அது என்ன?

2 . நான் ஒரு விலங்கு. என் தலையை வெட்டினால் நான் ஒளிருவேன். என் இடையை வெட்டினால் நான் ஒரு கோள். நான் யார்?

(விடைகளை இமெயிலில் சொன்னால் நல்லது)

3
==

உலகிலேயே மனிதனால் அமைக்கப்பட்ட மிக உயரமான சிலை எது? சுதந்திரதேவி சிலையா? தப்பு. SPRING TEMPLE BUDDHA எனப்படும் வசந்த கோயில் புத்தர் சிலை. சைனாவில் இருக்கும் இதன் உயரம் 420 அடி.நம் கன்யாகுமரி திருவள்ளுவரை விட மூன்று மடங்கு உயரம். புத்தரின் கால் கட்டை விரல் மட்டும் இரண்டு ஆள் உயரம் இருக்கிறது. படத்தைப் பாருங்கள்.




ஆனால் மனித மனதிற்கு இந்த உயரங்கள் எல்லாம் ஜுஜுபி. நினைத்தால்அபாரமான உயரங்களில் பயணிக்க வல்லது மனம்.அதே சமயம் அதல பாதாளத்துக்கு இறங்கவும் கூடியது.கழிவில் உட்காரும் , அதே சமயம் இறைவன் நைவேத்தியத்திலும் உட்காரும் போன்றது மனித மனம். காலையில் மிக உயர்ந்த உலக இலக்கியங்களைப் படைத்து விட்டு இரவில் வேசி வீடு தேடிய கவிகள் இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது.இதில் தவறு ஏதும் இல்லை. EXTREMISM என்பது மனித மனத்தின் தவிர்க்க முடியாத ஒரு பண்பு. வயிறு முட்ட சாப்பிடுவது. மறுநாள் வயிற்று வலியில் துடிக்கும் போது சாப்பாட்டைப் பார்த்தாலே வாந்தி எடுப்பது. குடித்து விட்டு கண்கள் இருள HANG OVER இல் இனிமேல் வாழ்வில் அதைத் தொடவே மாட்டேன் என்று சத்தியம் செய்வது.மறுநாள் மீண்டும் அதே BAR க்கு செல்வது. ஓஷோவின் இந்த கதையின் மேல் தியானம் செய்யுங்கள் :

பண்டிதன் ஒருவன் ஞானத்தைத் தேடி மிகவும் அலைந்தான். சத்தியம் எது , உண்மை எது என்ற தேடலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மனைவி மக்களைத் துறந்து தேசம் தேசமாக சுற்றி வந்தான். ஆனாலும் அவனுக்கு ஞானத்தின் ஒரு கீற்று கூட சாத்தியப்படவில்லை. மிகவும் நொந்து போன நிலையில் ஒரு நாள் சாது ஒருவரை அவன் சந்தித்தான். அவர் கண்களில் தோன்றிய ஒளியைக் கண்டு, அவர்பால் ஈர்க்கப்பட்டு காலில் விழுந்து 'சுவாமி, எனக்கு உண்மை எது என்று அறிவுறுத்துங்கள்' என்றான். அவர் சிரித்து விட்டு 'முட்டாளே , உன் குரு உனக்கு பக்கத்து வீட்டிலேயே இருக்கிறார்;போய் அவர் காலில் விழு' என்று சொல்கிறார். பண்டிதனுக்கு ஒரே குழப்பம்; ஏனென்றால் அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு படிக்காத ,ஏழையான, தராசு தயாரிக்கும் தொழிலாளி ஒருவன் தான் வசிக்கிறான் .அவனுக்கு தராசு செய்வதைத் தவிர ஒன்றும் தெரியாது. அதனால் அவன் பெயரே 'துலாதர்' என்று மாறி விட்டிருந்தது. அவனிடம் என்ன உபதேசம் கிடைக்கக் கூடும் என்று பண்டிதன் தயங்கினான்.ஆனாலும்அந்த சாது சொல்லிவிட்டாரே என்பதற்காக தன் ஊருக்கு திரும்பி வந்து அவன் வீட்டுக்கு செல்கிறான். துலாதர் தராசு செய்வதைப் பார்த்து அவன் வியந்து போகிறான். அவன் முகத்தில் ஆயிரம் ஞானிகளின் தரிசனத்தைப் பார்க்கிறான் பண்டிதன். துலாதரின் காலின் விழுந்து தனக்கு உபதேசம் தரும்படி கேட்கிறான். துலாதர் 'எனக்கு இந்த தராசு செய்வதைத்தவிர ஒன்றும் தெரியாது; தராசு செய்து செய்து நானே ஒரு தராசு போல மாறிவிட்டேன்; தராசின் முள்ளை மையத்தில் நிறுத்தி நிறுத்தி என் மனமும் மையத்தில் நின்று விட்டது. என் மனமும் துருவங்களில் அலைபாய்வதை நிறுத்தி விட்டது' என்கிறான். அன்று முதல் பண்டிதன் துலாதரின் சிஷ்யன்ஆகிறான்.

இந்தக் கதையில் இருந்து நமக்கு இரண்டு விஷயங்கள் தெரிய வருகின்றன

ஒன்று: நாம் எதைத் தேடுகிறோமோ அது நமக்குப் பக்கத்து வீட்டிலேயே இருக்கலாம் (யாரது? இது ஃபிகருக்கும் பொருந்துமா என்று கேட்பது?. கொஞ்சம் சீரியஸ் ஆக இருங்கள்)

இரண்டு: துருவங்களுக்கு நகர்வது நமக்கு எளிது. மையத்தில் நிற்பது கஷ்டம்; ஒன்று ஏசுவாக இருக்க வேண்டும். இல்லை ஜூடாஸ்-ஆக இருக்க வேண்டும். இடையில் ஆட்டு மந்தைகளில் ஒரு ஆடாக இருக்க மனம் விரும்புவது இல்லை.ஒன்று தாடி மீசை வளர்ப்பது; இல்லை அடுத்த துருவத்துக்கு சென்று மொட்டை போட்டுக் கொள்வது.

4
==

தாடி மீசை என்றதும் ஒன்று தோன்றுகிறது. ஆண்களுக்கே உரிய அவஸ்தைகளில் ஒன்று இந்த கட்டிங் மற்றும் ஷேவிங். (அடுத்த ஜென்மத்தில் பஞ்சாபில் பிறக்க வேண்டும்!) பெண்களின் மாதாந்திர அவஸ்தை கூட குறிப்பிட்ட வயதுக்கு அப்புறம் நின்று போகிறது. ஆனால்ஆண்களுக்கு இந்த மற்றும் ஷே சுடுகாடு வரை வருகிறது. சுயமாக சேவிங் செய்யக் கற்றுக் கொண்ட மனிதன் சுயமாக கட்டிங் செய்யக் கற்றுக் கொள்ளவில்லை.சின்ன வயதில் அப்பா கட்டிங் செய்து விட பார்பர் ஷாப் கூடப் போவார். ஒரு உயர்ந்த நாற்காலி, அதன் மேல் ஒரு பலகை, ஒரு பெஞ்ச், ஒரு நீண்ட கண்ணாடி, சீப்புகள், இவ்வளவு தான் இருக்கும். ஷேவிங் இரண்டு ரூபாய் கட்டிங் ஐந்து ரூபாய் ஆகும். கட்டிங் செய்து விட்டு வீட்டுக்கு வரும் போது ஏதோ பஞ்சமா பாதகங்களில் ஒன்றை செய்து விட்டது போல பம்மியபடியே பின்பக்க வழியாக வர வேண்டும். துணிகளை நனைத்து வைக்க வேண்டும்.

இப்போது எல்லாம் தலைகீழாக மாறி விட்டன. பெண்கள் அழகு நிலையங்களுக்கு சற்றும் குறையாமல் பார்பர் ஷாப்புகள் மாறி விட்டன. கட்டிங் செய்யப் போனால் கட்டிங் மட்டும் செய்து கொண்டு வர முடிந்தால் அது உங்கள் சாமார்த்தியம். சார், ஃபேஷியல் பண்ணிக்கங்க, ஹெர்பல் ஃபேஷியல், சைட் எபெக்ட் இருக்காது, தலைக்கு ஆயில் மசாஜ் பண்ணிக்கங்க ,ப்ளீச் பண்ணிக்கங்க ஏதாவது சொல்லி என்று பணம் கறந்து விடுவார்கள். (நமக்கும் அழகாகலாம் என்ற ஆசையில் வேண்டாம் என்று சொல்ல மனம் வராது) இப்போதெல்லாம் ஆண்களிடமும் அழகுணர்ச்சி அதிகமாகி வருகிறது. அப்பாயின்மென்ட் வாங்கிக் கொண்டு கட்டிங் செய்து கொள்கிறார்கள்! பத்து ரூபாயில் முடிந்து கொண்டிருந்த பார்பர் ஷாப் விஷயங்கள் இன்று ஆயிரம் ரூபாய் வரை பர்ஸைப் பதம் பார்க்கின்றன. சரி இத்தனை செய்து அழகாக இருக்கிறோம் என்ற திருப்தி ஏற்படுகிறதா? கண்ணாடியில் பார்க்கும் போது முதலில் இருந்த முகமே தேவலாம் என்று தோன்றும் கொடுமையை என்னவென்று சொல்ல?

5
==

கவித! கவித!

தூக்கம் கலைக்கப்பட்ட
கும்பகர்ணன் போல
சலித்துக் கொள்கின்றன பெட்டியைத் திறந்ததும் பொம்மைகள்!
சிவந்த கண்களுடன்
வேண்டா வெறுப்பாய் வெளிவருகின்றன..
அம்மாவுக்கு தெரியாமல்-படியில்
சுட்டிக் குழந்தைகள் தங்களை ஒன்பது நாட்கள்
தொட்டு நகர்த்தி விளையாடும் -என்று தெரிந்ததும்
உற்சாகப் புன்னகையை அணிந்து கொண்டு
ஒயிலாய் சோம்பல் முறிக்கின்றன!

6
==

ஒரு ஓஷோ ஜோக்.

ஒரு ஆள் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான்.

'இன்ஸ்பெக்டர் , நேற்று இரவு எங்க வீட்ல நுழைந்த அந்த திருடனை நான் பார்க்கணும்' என்றான்.

அதெல்லாம் முடியாதுப்பா 'கோர்ட்டுல வேணா பார்த்துக்க' என்றார் இன்ஸ்பெக்டர்.

'இல்லை சார், அவனைப் பார்த்து ஒண்ணே ஒண்ணு கேட்கணும்.அது எப்படி என் பொண்டாட்டியை எழுப்பாமல் உள்ளே நுழைந்தாய் என்று, நானும் இதை நாலு வருஷமா முயற்சி பண்ணிட்டு இருக்கேன், முடியலை ' என்றான்.


முத்ரா


14 comments:

பால கணேஷ் said...

எக்ஸலண்ட்! செல்போன் குறித்த கருத்து எனக்கும் உடன்பாடே. புத்தர் சிலை விஷயமும் துலாதர் கதையும் அருமை. எல்லா வண்ணங்களையும் காட்டி மகிழ்வித்துள்ளது இந்த கலைடாஸ்கோப்.

Unknown said...

அனைத்துமே அருமை, குறிப்பாக உங்கள் பதிவில் எது பெஸ்ட் என சொல்ல முடியாது

Aba said...

சார், ரொம்ப நாள் வராததுக்கு மன்னிக்கணும்.

CERN-இல் நியூட்ரிநோக்களை ஒளியை விட வேகமாக பயணிக்க வைத்திருக்கிறார்களாமே? என்ன நினைக்கிறீர்கள்?

Sugumarje said...

Hi Do redirect from http://www.samudrasukhi.blogspot.com to http://www.samudrasukhi.com/

இது வழக்கமான முந்தைய அன்பர்களை திணற வைக்கும்... எனவே சரி செய்க...

அன்பன்
சுகுமார்ஜி

பொன் மாலை பொழுது said...

I like your way of writing. keep it up dude!

பொன் மாலை பொழுது said...
This comment has been removed by the author.
பொன் மாலை பொழுது said...

வீட்டில் நவராத்திரி கொலு வைக்க தயாராகி விட்டதா?
கவிதை அதைத்தான் சொல்லுகிறதோ !
நல்லாயிருக்கு :))

Philosophy Prabhakaran said...

ஒருமுறை லவ் பண்ணி தோத்துப் பாருங்க... அதுக்கப்புறம் ஷேவிங் பண்ற தொல்லை இருக்கவே இருக்காது...

நெல்லி. மூர்த்தி said...

" Before working on the solutions, make sure the problem really exists!"

சத்தியமான வார்த்தை! என்னுடைய அனுபவத்திலும் இது போன்ரு நிறைய சந்தித்துள்ளேன்!
----------------------
“கண்ணாடியில் பார்க்கும் போது முதலில் இருந்த முகமே தேவலாம் என்று தோன்றும் கொடுமையை என்னவென்று சொல்ல?

..ஹி...ஹி...ஹி

Jayadev Das said...

\\பெயர் சொன்னால் அந்த பெயர் உள்ளவர்களுக்கு கால் செய்கின்றன.\\ இந்த வசதி நீங்கள் படத்தில் போட்டுள்ள மொபைலிலேயே இருக்கிறது, நான் பயன்படுத்தியிருக்கிறேன்!!! [Still have doubt?? !!முதலில் உங்கள் குரலில் உங்கள் நண்பரின் பெயரை நீங்கள் பேசி பதிவு செய்ய வேண்டும், பின்னர் அதற்க்கு வேண்டிய எண்ணை assign செய்தால், அடுத்த முறை ஒரு குறிப்பிட்ட பொத்தானை அழுத்திக் கொண்டு அந்தப் பெயரைச் சொன்னால் நீங்கள் தேர்ந்தெடுத்த எண்ணுக்கு கால் போகும்!!]

Jayadev Das said...

\\செல்போன்கள் என்ன என்னவோ செய்கின்றன.\\ Jack of all and Master off none!! It won't do any of them perfectly like what a dedicated device can do. It is meant to be a Cellular phone, the other functions it is capable of are either too low in quality or too tedious to make use of.

Jayadev Das said...

\\லேன்ட் லைன் என்று அழைக்கப்படும் வீட்டு போன்கள் செல்போன்களுடன் ஒப்பிடும் போது ஒரு கற்கால மனிதனைப் போலத் தோன்றுகின்றன.\\ Never underestimate a land line phone. We don't know the harmful effects of a Cell phone, especially to those who use it for a long period of time at a stretch [that too uselessly!!]. Land line phone is very safe, it is better to avoid Cell phones as much as possible. But the younger generation too addicted to listen to this. :((

Jayadev Das said...

\\கம்பெனி தரும் மாத சம்பளத்துக்கு மாடு மாதிரி உழைத்துக் கொண்டிருக்காமல் நல்ல சம்பளம் வரும் வேலையை உதறி விட்டு நிச்சயமில்லாத ஒரு பிசினஸை கையில் எடுத்தவர்கள் இருக்கிறார்கள்.\\ பாராட்டத் தக்கவர்கள். என்னால் அப்படியிருக்க முடியவில்லையே என்று இன்றும் ஏங்குகிறேன்.

Jayadev Das said...

\\இன்டர்வியூக்களில் CASE STUDY எனப்படும் நடைமுறை பிரச்சானைகளையும் கொடுத்து அதற்குரிய தீர்வுகளை அலச சொல்கிறார்கள்.\\ பத்து நிமிஷமா அறை நாளிலோ நடத்தும் இன்டர் வியூ வில் எப்படி ஒரு மாணவரின் திறமையை எடை போட்டுவிட முடியும்? சிந்தித்து செயல் பட வேண்டிய பணிக்கு நேரம் நியமித்தால் எப்படி திறமை வெளிப்படும்?