இந்த வலையில் தேடவும்

Thursday, August 22, 2013

கலைடாஸ்கோப் -100

லைடாஸ்கோப் -100 உங்களை வரவேற்கிறது.

கலைடாஸ்கோப்- 1 எழுதும் போது ஒருநாள் இதன் பின்னே இரண்டு ஜீரோ சேர்ப்பேன் என்று நினைக்கவில்லை. எப்படியோ எழுதியாகிவிட்டது. கலைடாஸ்கோப் எழுதுவதில் சில சவால்கள் இருந்தன. முதலில் டாபிக் தேடுவது. ஒவ்வொரு கலைடாஸ்கோப் எழுதி முடிக்கும் போதும் இனி அடுத்ததற்கு எழுத டாபிக்கே இல்லை என்று தோன்றும். பிறகு எப்படியோ அடுத்த கலைடாஸ்கோப்பிற்கு டாபிக் கிடைத்து விடும்.அடுத்து முடிந்த வரை டாபிக்கை repeat செய்யாமல் இருப்பது. எனக்கு இருக்கும் ஞாபக சக்திக்கு இது பெரிய சவால். முடிந்தவரை டாபிக் -களை repeat செய்யாமல் பார்த்துக் கொண்டுள்ளேன். கலைடாஸ்கோப்பில் இசை, இலக்கியம், ஆன்மீகம் , அறிவியல், உளவியல், சினிமா, கவிதை, மதம், மொழி , நகைச்சுவை என்று எல்லா டாபிக்கும் பேசி இருக்கிறோம். எல்லாருக்கும் முக்கியம் நாம் இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்று அவ்வப்போது கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது. அந்த விதமாக இதுவரை வந்த கலைடாஸ்கோப்புகளில் இருந்து சில பகுதிகள்:-

கலைடாஸ்கோப் -1

கலைடாஸ்கோப் என்ற தொடருக்கு உங்களை வரவேற்கிறேன்...
 
 ஒரு சின்ன முன்னுரை
====================

'கலைடாஸ்கோப்' பலதரப்பட்ட விஷயங்களின் கலவையாக இருக்கும் . நம்  எழுத்தின்  மூலம் பலதரப்பட்ட , வெவ்வேறு  ரசனை கொண்ட வாசகர்களைக் கவர வேண்டும் என்பதில் எல்லாருக்கும் விருப்பம் தான் .. ஏனென்றால் ஜோக்குகளை மட்டும் படித்து ரசிக்கும் கூட்டம் இங்கே இருக்கிறது. சிலர் கவிதைகளை மட்டும் தேடிப் பிடித்து படிக்கிறார்கள்.
சிலர்அரசியல்  இல்லை என்றால்  பதிவுகளைப் படிப்பதே இல்லை.அறிவியலைப் பற்றி எழுதினால் 'நன்றாக இருக்கிறது' என்று சொல்லும் நிறைய பேர்  அதே பதிவர் ஒரு கவிதை எழுதினால் எதோ அவர் செய்யக்  கூடாத ஒன்றை செய்து விட்டது போல நினைக்கிறார்கள்..ஆம் அறிவியலும் கவிதையும் ஒரு விதத்தில் ஒன்றுக்கொன்று எதிரும்  புதிருமான  விஷயங்கள் தான்.. ஜே.ஜே.தாம்சன்  எலக்ட்ரானை  கண்டுபிடித்து விட்டு லேபை விட்டு வெளியில் ஓடி வந்து  "பொன்  சுமக்காமல் மின் சுமந்த ஒரு மங்கையைக்  கண்டேன்.. அவள் அணுவினும்  சிறியவள், அணுவை சதா  சுற்றிக்கொண்டு  திரிபவள்'  என்றெல்லாம்  கவிதை பாடினால் அது ஏற்புடையதாக இருக்காது தான்..  என்னதான்  சொன்னாலும் LIFE IS எ MIX OF CONTRADICTING THINGS  இல்லையா? இனி முதல் பகுதி....

முதல் பின்னூட்டம் இட்டவர்: ரேவா

கலைடாஸ்கோப் -15

கவிஞர்கள் ,ஞானிகள் ,இலக்கியவாதிகள் இவர்கள் எல்லாம் உயிரைக் கொடுத்து தங்களை அர்ப்பணித்து எழுதியதை, அவர்களின் பரவச அனுபவத்தில் விளைந்த கவிதைகளை, பாடல்களை, அவர்களின் ஜீவானுபவத்தை, நாம் இன்று ரெண்டு மார்க் , ஐந்து மார்க் கேள்விகளாக தரம் தாழ்த்தி விட்டோம் என்பது ஒரு வருந்தத்தக்க விஷயம்.

தேரா மன்னா என்று விளித்து 'வாயிற் கடைமணி நாடு நா நடுங்க ' என்று எழுதிய போது இளங்கோவடிகளுக்கு உண்மையிலேயே நடுநா துடித்திருக்கும்.ஆனால் அதுவே மனப்பாடச் செய்யுளாக வரும்போது இன்று எத்தனை மாணவர்களுக்கு அந்த ஒரிஜினல் பரவசத்தின் ஒரு கீற்றாவது வந்து போகும் என்று தெரியவில்லை (நடுநா எல்லாம் நடுங்காவிட்டாலும் பரவாயில்லை)

சரி இப்போது கபீரின் ஒரு தோஹெ பார்க்கலாம்

கால் கரே ஸோ ஆஜ் கர், ஆஜ் கரே ஸோ அப்
பல் மே பிரளய் ஹோயேகி பஹூரி கரோகே கப்

தமிழில்:

நாளை செய்யவிருப்பதை இன்று செய்; இன்று செய்வதை இப்போ
பேரழிவு எப்போது
ம் வரலாம்..நீ நற்செயல் செய்வது எப்போ ?

நம் ஆட்கள் தான் தப்பர்த்தம் செய்து கொள்வதில் கில்லாடிகள் ஆயிற்றே ? ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது: ஒரு ஆபீசில் மானேஜர் தன் துணை மானேஜரைப் பார்த்துக் கேட்கிறார்: "நாளை செய்ய நினைப்பதை இன்றே செய்யுங்கள்" என்று ஆபீசில் எழுதி வைக்கச் சொன்னேனே? ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா? என்று

துணை மானேஜர் சொன்னார் : "ஆம் நல்ல பலன்..தலைமை குமாஸ்தா டைப்பிஸ்டை இழுத்துக் கொண்டு ஓடி விட்டார்..காசியர் பத்தாயிரம் பணத்துடன் தலைமறைவாகி விட்டார் ..ஐந்து பேர் வேலையை ராஜினாமா செய்து விட்டார்கள்!"


கலைடாஸ்கோப் -28

தீவிரவாதிகள் தாக்கப் போகிறார்கள் என்று தகவல் வந்திருப்பதால் எல்லா விமான நிலையங்களிலும் செக்யூரிட்டி 'டைட்' செய்யப்பட்டிருக்கிறதாம். (செக்யூரிட்டி வேலை செய்பவர்கள் இன்னும் கொஞ்சம் டைட்டாக பெல்ட் ,டை இதையெல்லாம் அணிந்து வருவார்களோ???) ஆனால் உண்மை என்னவென்றால் செக்யூரிட்டி டைட் ஆக இருக்கும் போதோ சுதந்திர தினங்களில் நாம் படு உஷாராக இருக்கும் போதோ எதுவும் நடப்பதில்லை. பயணிகளுக்கு நேரம் தான் செலவாகிறது. இரட்டை கோபுர தாக்குதலோ, மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலோ ஒரு சாதாரண நாளில் நாம்  எல்லாரும் 'லூசாக' (புத்தியிலும்) இருந்த போது தான் நடந்தன. போலீஸ் வேலை செய்பவர்களுக்கு ஒரு பெரிய கடுப்பு என்ன என்றால் வதந்திகள் பெரும்பாலும் பொய் தான் என்று தெரிந்திருந்தாலும் துப்பாக்கிகளை 'லோட்' செய்து கொண்டு நாய்களைக் கூட்டிக் கொண்டு ஒரு திருவிழா போல ஜீப் ஏறி புறப்பட வேண்டி இருப்பது!


பெரும்பாலான விஷயங்கள் நாம் தயாராக இருக்கும் போது நடப்பதே இல்லை. விகடனில் ஒரு கவிதை வந்திருந்தது. அது தாத்தா சாகட்டும் என்று காத்திருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றியது.வெட்டியானுக்கு சொல்லியாகி விட்டது. தாரை தப்பட்டை எல்லாவற்றுக்கும் அட்வான்ஸ் கொடுத்தாகி விட்டது. உறவினர்களுக்கு சொல்லி அனுப்பியாயிற்று இனி தாத்தா சாவது ஒன்று தான் பாக்கி என்று அந்த கவிதை போகிறது. (கடைசியில் தாத்தா வைகுண்டப் ப்ராப்தி அடைந்தாரா தெரியவில்லை!) ஆனால் பெரும்பாலான மரணங்கள் எதிர்பாராமல் தான் நடக்கின்றன. நேற்று வரை திடகாத்திரமாக இருந்தவர் யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத வகையில் 'பொட்' என்று போய் விடுகிறார்! யாராவது இப்படி எதிர்பாராமல் இறந்து விட்டால் சிலர் 'நேத்து கூட பாத்தேனே, ஜாக்கிங் போறப்ப என்னோட சிரிச்சு சிரிச்சு பேசினாரே' என்று சொல்லும் போது அதைக்கேட்க வேடிக்கையாக இருக்கிறது. நாளை இறக்கப் போகிறவர் இன்று மரணத்தின் சாயலை சுமந்து கொண்டுதான் இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை நண்பர்களே!


ஆம்.


நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் உலகு !


கலைடாஸ்கோப் -36

 தெய்வீகத்தின் உடனான காதலில் வலிகள் அதிகம்.மனிதக் காதலியாவது நாலு நாள் பின் தொடர்ந்தால் ஐந்தாம் நாள் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பாள். தெய்வம் அவ்வளவு சீக்கிரம் RESPONDசெய்யாது.அந்தப் பக்கத்தில் இருந்து பதில் வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.மனிதக் காதலுக்கு ஒன்றோ இரண்டோ அல்லது அதிகபட்சம் சின்னத்தம்பி குஷ்பு போல மூன்று சகோதரர்கள் வில்லன்களாக இருக்க முடியும். ஆனால் தெய்வீகக் காதலுக்கு ஐம்புலன்கள் , மனம் ,புத்தி, அகங்காரம் என்று ஏகப்பட்ட வில்லன்கள். நாம் இறைவனை நோக்கி கொஞ்சம் நூல் விட்டாலே பயங்கர ஆயுதங்களைத் தூக்கிக்  கொண்டு  அடிக்க  வந்து விடுவார்கள் அவர்கள்! .என்ன தான் இருந்தாலும் கடவுள் மேல் கொள்ளும் காதல் ஸ்பெஷல் தான். அஜித்தும் தேவயானியும் கட்டிய காதல் கோட்டைகள் சில காலங்களில் மக்களின் மனங்களில் இருந்து இடிந்து விழுந்து விடும். மீராவின் பஜன்களும் ஆண்டாளின் பாசுரங்களும் உலகம் உள்ள வரை வாழ்ந்திருக்கும்.  

அப்துல் ரகுமான் தமிழில் அழகாக கஜல்கள் எழுதி இருக்கிறார். ஆனால் பாடுபொருளாக இறைவனைத் தேர்ந்தெடுக்காமல் காதலியைப் பார்த்து எழுதுகிறார். அந்தப் புத்தகத்தின் பெயர்'மின்மினிகளால் ஒரு கடிதம்' . புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படித்துப் பாருங்கள்..
இதயத்தைஉருக்கும் கவிதைகள் அவை. 





"ஒரு மழைக்கால இரவு. எங்கும் இருட்டு. நடுசாமத்தை தாண்டிவிட்டது நேரம். நானக் இன்னும் தூங்காமல் பக்திப்பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார். பக்கத்து அறையில் இருந்த அவரது தாய், 'நானக், நேரம் ஆகி விட்டது, பாட்டை முடித்து விட்டு தூங்கு' என்கிறார். கொஞ்ச நேரம் பாட்டை நிறுத்திய நானக், எங்கோ தொலைவில் ஒரு குருவி 'குவிக் குவிக்' என்று கூவுவதைக் கேட்டு விட்டு மீண்டும் பாடத் தொடங்கினார். தன் தாயாரைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்,  "அம்மா,  அந்தக் குருவி இந்த நேரத்திலும் தன்  துணையை  அழைக்கிறது; நானும் என்  துணையை(கடவுளை) அழைக்க வேண்டும் குருவியின் துணை  அருகிலேயேபக்கத்து  மரத்திலேயே  இருக்கலாம்ஆனால் என் துணையோ மிக  தூரத்தில்   இருக்கிறதுபிறவி பிறவிகளாக  அவனைஅழைத்தாலும் அது போதாது. எனவே  நான்  காலத்தை வீணடிக்க விரும்பவில்லை"- நானக் மனமுருகிப் பாடுவதன் மூலமாகவே இறைவனை அடைந்தவர். தியானம், யோகம், சடங்குகள்  இவை நானக்கின் வழிமுறைகள் அல்ல"

சீக்கிய மதத்தை ஒரு வீர மதமாக, சீக்கியர்களை குருவின் (கடவுளின்) படை வீரர்களாக சித்தரித்தவர் குரு கோவிந்த் சிங். 'தெய்வீக வீரர்கள்'!)


இந்தத் தளத்தில் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசிப்பது போல நம் பிரபஞ்சம் முழுவதையும் வியப்புடன் தரிசிக்கலாம்.ஒரு குறிப்பிட்ட ஸ்கேலுக்கு மேல் நம்மால் வெறும் கண்களால் பிரபஞ்சத்தைப் பார்க்க முடியாது இல்லையா? ஆனால் இங்கே VIRTUAL ஆகப் பார்த்துக் கொள்ளலாம்.பிரபஞ்சத்தின் பெரிய எல்லை OBSERVABLE UNIVERSE ..ஒரு சக்தி  வாய்ந்த தொலைநோக்கியால் எதுவரை பார்க்க முடியும் என்ற எல்லை.சில காலக்ஸிகளில் இருந்து வரும் ஒளி இன்னும் நம்மை வந்து அடையவில்லை என்றால் அவற்றை நம்மால் பார்க்க முடியாது.அதனால் நம்மால் பார்க்க முடிந்த பிரபஞ்சத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறோம்.அதே போல சிறிய எல்லை.அணுவின் உள்ளே அணுத்துகளின் உள்ளே , குவார்க்குகளின் உள்ளே என்ன இருக்கும்? சங்கு சக்ர தாரியாக மகாவிஷ்ணு இருப்பார் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு முட்டை மார்க்.அப்படி இல்லை. என்ன இருக்கிறது என்று நீங்களே சென்று பார்த்துக் கொள்ளவும்.


சில விசித்திரமான Quotes :

நான் இந்த உலகத்தை மாற்ற விரும்புகிறேன்.. ஆனால் அதன் Source code தான் கிடைக்கவில்லை -யாரோ

காலம் என்பது ஒரு நல்ல ஆசான். ஆனால் அது தன் எல்லா மாணவர்களையும் கொன்று விடுகிறது - ஹெக்டர் பெர்லியாட்ஸ்

இன்று தான் கடைசி என்பது போல ஒவ்வொரு நாளும் வாழுங்கள். ஒருநாள் உங்கள் அனுமானம் உண்மையாக இருக்கும் -யாரோ

இளமையாக இருப்பதற்கு மூன்று வழிகள். ஒன்று சந்தோஷமாக இருப்பது இரண்டு ஆரோக்யமான உணவுகள் சாப்பிடுவது மூன்று உங்கள் வயதைப் பற்றி பொய் சொல்வது -லூசில் பால்

உங்களுக்கு வயதாகும் போது மூன்று விஷயங்கள் நடக்கின்றன. ஒன்று உங்கள் ஞாபக சக்தி பழுதடைகிறது. மற்ற இரண்டும் என்ன என்று ஞாபகம் இல்லை -சர் நார்மன் விஸ்டம் 

என் கிரடிட் கார்ட் தொலைந்து விட்டது என்று நான் போலீசிடம் புகார் கொடுக்கவில்லை. அதைத் திருடியவன் என் மனைவியை விட குறைவாகவே செலவு செய்து வருகிறான் -இலி நாச்ட்ஸ்


வயதாகிறதே என்ற கவலை பட்டினத்தாரில் இருந்து பக்கத்து வீட்டு பத்மநாபன் மாமா வரை எல்லாரையும் ஆட்டிப் படைத்துள்ளது.


வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்து இருகண்கள் இருண்டு
வயதுமுதிர்ந்து 
நரைதிரை வந்து
வாதவிரோத 
குரோதம் அடைந்து -

என்று பட்டினத்தாருக்கு தத்துவார்த்த கவலைகள் என்றால் பத்மநாபன் மாமாவுக்கு ரிட்டையர் ஆனதும் பென்சன் கிடையாதே,,எப்படி காலம் தள்ளுவது? என்ற கவலை ....சரி.

மனித உடலின் வடிவமைப்பின்படி அது தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளவேண்டும் என்கிறார்கள் வி
ஞ்ஞானிகள். வயதாவதற்கு உயிரியல் காரணங்கள் எதுவும் இல்லையாம். பின்னே நமக்கு ஏன் வயதாகிறது? இயற்கையின் வஞ்சனைகளில் இதுவும் ஒன்று. வயதாகி செத்துப் போ என்ற செய்தி நம் ஜீன்களிலேயே எழுதப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்து வருகிறார்கள். உயிரியல்விஞ்ஞானிகள். எந்திரன் ரஜினிகாந்த் போல எப்போதும் இளமையாக இருக்கும் சிலரிடம் ஜீன் ஆராய்சிகள் செய்து வருகிறார்கள். Aging ஜீன்களைத் தேடும் வேலை கடற்கரை மணலுக்கிடையே கடுகைத் தேடுவது போல என்கிறார்கள். (அதானே? சுலபமாக வைத்தால் மனிதன் அதைக் கண்டுபிடித்து ஹிரண்யகசிபு போல அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விடுவான்!) .

வயதாவதற்கு பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கை Free radical கொள்கை. இதன்படி நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமாக கருதப்படும் ஆக்ஸிஜனே நமக்கு எமனாக மாறி நம்மை தாத்தா பாட்டி ஆக்குகிறது.அமுதமே விஷம்! இரும்பு துருப்பிடிப்பது போல வெள்ளி கறுத்துப் போவது போல ஆக்சிஜனால் நம் செல்கள் மெல்ல மெல்ல சேதாரம் அடைகின்றன. அதாவது நம் செல்களிலும் துருப்பிடிக்கிறது.



இதன் உச்சகட்டமாக, VHEM (Voluntary Human Extinction Movement) என்ற அமைப்பு, உலகத்தில் இருக்கும் அத்தனை பேரையும் தயவு செய்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறது. பூமி மனிதனுக்குப் படைக்கப்பட்டது அல்ல; அது மரங்களுக்கும் விலங்குகளுக்கும் பூச்சிகளுக்குமானது. எனவே மனிதன் மெல்ல மெல்ல பூமியை விட்டு அகல வேண்டும்..இனப்பெருக்கத்தை நிறுத்திவிட்டு மெல்ல மெல்ல நாம் பூமியிடம் இருந்து விடைபெற வேண்டும் என்கிறது.

 மேலும், எதற்கு இந்த மனித வாழ்க்கை? அதன் வலிகள் , கஷ்டங்கள், வேதனைகள், கவலைகள்? இ .எம்.ஐ கவலைகள், இன்கம் டாக்ஸ் பயங்கள் !அரக்கப் பறக்க கனவு கலையாமல் எழுந்து, தீர்ந்து போன டூத் பேஸ்டை இம்சை செய்து பிதுக்கி பல் துலக்கி , பக்கெட் தண்ணீரில் எந்திரம் போல  குளித்து விட்டு, அண்டர்வேர் தேடி, எதையோ உடுத்திக் கொண்டு, பஸ் பிடித்து கூட்டத்தில் நசுங்கி, ஆபீஸுக்கு  சென்று, இன்று மேனேஜர் என்ன மெயில் அனுப்பி இருக்கிறானோ என்று பயத்துடன் mail பாக்ஸ் ஓபன் செய்யும் அவலங்கள்? எதற்கு அர்த்தமற்ற இந்த வாழ்க்கை ..உண்டதே உண்டு நித்தம் உடுத்ததே உடுத்து! சும்மா வழக்கொழிந்து போய் விடலாம்! ஜிம் ஜோன்ஸ் செய்தது போல mass suicide செய்து கொள்ளாமல் ஒரு புது வித ஐடியா...நம்முடைய சந்ததிகளை வாழ்வின் அத்தனை கஷ்டங்க -ளிலிருந்தும் நாமே விடுவித்து விடுவது தான் இந்த VHEM . sounds different ???


ஓஷோ ஜோக்.

திருடன் ஒருவன் பெரிய வசதியான ஒரு வீட்டில் , நள்ளிரவு நேரத்தில் நுழைந்து , யாரும் விழித்திருக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு 
சுதந்திரமாக பொருட்களைத் திருட ஆரம்பித்தான்.

அப்போது கூண்டில் இருந்த கிளி ஒன்று " சாமி உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது..." என்றது.

திருடன் ஒன்றும் பேசாமல் தன் வேலையைத் தொடர்ந்தான்.

கிளி மீண்டும் " சாமி உன்னை கவனித்துக் கொண்டிருக்கிறது" என்றது.

திருடன் ஒன்றும் பேசவில்லை. சில வினாடிகள் கழித்து கிளி மீண்டும் அதையே சொன்னது. 

எரிச்சல் அடைந்த திருடன் " முட்டாள்,,,கிளியே வாயை மூடு...என்ன விதமான கிளி நீ, மதப் பிரசாரம் செய்யும்  கிளியா? உன் பெயர் என்ன?" என்றான்.

"என் பெயர் பூசாரி" என்றது கிளி.

"எந்த மடையன் உனக்கு பூசாரி என்று பெயர் வைத்தான்?"

"ஏன், இந்த வீட்டின் எஜமானர் தான். அவர் தான் தன் வேட்டை நாய்க்கும் சாமி என்று பெயர் வைத்தார்" என்றது.


நன்றி ..

மேலும் உங்கள் ஆதரவையும்  அன்பையும்  கலைடாஸ்கோப்- பிற்கு தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

சமுத்ரா ..

17 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கலைடாஸ்கோப் தொகுப்பு அருமை... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

Anonymous said...

congrats sir

விஸ்வநாத் said...

உலகத்தின் அதிசயங்களை அளக்கும்,
முல்லாவின் சிரிப்பலை அடிக்கும்,
அறிவுக்கு வேலை கொடுக்கும்,
இன்னும் பலத்துறைகளில்
உங்கள் அறிவின் பரப்பு அபாரம்.

வாழ்த்துக்கள் சமுத்ரா.

ஜீவன் சுப்பு said...

கிரேட் பிரதர் ...!

கரந்தை ஜெயக்குமார் said...

தொகுப்பு அருமை... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

Vijayan Durai said...

சென்ச்சுரி அடித்துவிட்டீர்கள் !!. வாழ்த்துக்கள் !
//பொன்  சுமக்காமல் மின் சுமந்த ஒரு மங்கையைக்  கண்டேன்.. அவள் அணுவினும்  சிறியவள், அணுவை சதா  சுற்றிக்கொண்டு  திரிபவள்'//

இந்தக்கவியில் புள்ளரித்துப்போனேன் :) வாழ்க்கை என்பது condradiction களின் கலவை அவற்றை எதிர் என்று பார்க்காமல் ஒன்றின் இரு பகுதி என்று இணைத்துப்பார்க்கையில் இந்த காஸ்மிக் ஜோக் எனக்கு சிரிப்பு காட்டுகிறது..

வார்த்தைகள் கொண்டும் மவுனம் கொள்ளலாம் !!

சந்துரு said...

வாழ்த்துக்கள் தொடருங்கள். கீதையின் படி கடமையைச் செய்யுங்கள் பலனை (பின்னூட்டத்தை)எதிர்பார்க்க்கதீர்கள். மௌனமான வாசகர்தான் அதிகம், அவர்கள் மனதார பாரட்டுவார்கள். புத்தகமாகக் கூட வெளியிடுங்கள்

Kavinaya said...

100-க்கு வாழ்த்துகள்! தொடருங்கள்... பின்னூட்டாவிட்டாலும் வாசிப்பவர்களில் நானும் ஒருத்தி :)

Anonymous said...

Congrats. Like Chandru & Kavinaya.. Me also one of your silent reader..

Now, Start your AAA... I am waiting :)


Rajarajan.

Unknown said...

vazthukkal. Nanga ethai ethirparkiroma atha mattum ezhutha matringa boss? I am waiting for you Anu andam ariviyal, regards, sathiya seelan

Caricaturelives said...

தொடரட்டும் உங்கள் வெற்றி...

பத்மநாபன் said...

மௌனத்திலிருந்து வார்த்தைக்கு.....

99லியே 100க்கு வரவேற்பு வாழ்த்து போடுவதற்குள் சதம் அடித்துவிட்டீர்கள்.... பல்லாயிரம் தாண்டி தொடர வாழ்த்துகள்...

கவிதையிலும் தெளிவு அறிவியலிலும் தெளிவு

ரங்கராஜன் + ரங்கராஜன் = சமுத்ரா...

sugu said...

நண்பரே கலைடாஸ்கோப் 100ஐ தொட்டுவிட்டது வாழ்த்துக்கள் ..
ஆனால் அணு அண்டம் அறிவியல் 100ஐ தொடும் என வாக்களித்துள்ளீர் . பெரிய மனுசன் வாக்கு தவற கூடாது. தயவு செய்து அ.அ.அ. வை தொடருங்கள் .

Unknown said...

hai samudraa

waiting for your aaa., start soon., visit me at asbalaji92.blogspot.com

Uma said...

vivid and exhaustive knowledge. Samudra amazed at your details, waiting for more such blogs.

இரசிகை said...

//வயதாவதற்கு பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கை Free radical கொள்கை. இதன்படி நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமாக கருதப்படும் ஆக்ஸிஜனே நமக்கு எமனாக மாறி நம்மை தாத்தா பாட்டி ஆக்குகிறது.அமுதமே விஷம்! இரும்பு துருப்பிடிப்பது போல வெள்ளி கறுத்துப் போவது போல ஆக்சிஜனால் நம் செல்கள் மெல்ல மெல்ல சேதாரம் அடைகின்றன. அதாவது நம் செல்களிலும் துருப்பிடிக்கிறது.//

ithai neththuthan vaasithen.
inga yevvalavu azhakaa solliyirukkeenga.

yellaame nalla yezhuthiyirukkeenga.
vaazhthukal.

jos said...

வாழ்த்துக்கள் Sir.