இந்த வலையில் தேடவும்

Tuesday, August 13, 2013

கலைடாஸ்கோப் -98

கலைடாஸ்கோப் -98 உங்களை வரவேற்கிறது.


உன்னோடும் என்னோடும் உடம்போடும் வேர்த்தாலும்
உதட்டு மேல வேர்க்காதய்யா நீ நம்பணும் 


தலையெழுத்து என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? ஒவ்வொரு குழந்தைக்கும் பிரம்மா உட்கார்ந்து பொறுமையாக பால் பாயிண்ட் பேனாவால் தலை எழுத்தை எழுதுவாரா என்று தெரியவில்லை. இல்லை , advanced ஆக ஒவ்வொரு குழந்தையையும் ஒரு மெகா சைஸ் dot -matrix -printer  இன் உள்ளே அனுப்பி விடுவாரா என்பதும் தெரியவில்லை. நம்முடைய வாழ்க்கை முழுவதையும் சுருக்கி நெற்றியில் எழுத வேண்டும் என்றால் அதுதான் உண்மையான short -hand ! உண்மையான compressed zip file ! உலகின் எல்லா நாகரீகங்களும் தலையெழுத்தை நம்புகின்றன என்று தோன்றுகிறது. ஆனால், ஆங்கிலத்தில் தலையெழுத்து என்பதற்கு சொல் இருப்பதாகத் தெரியவில்லை. head -writing ???

கன்னடத்தில் புரந்தர தாசர்,

"நா மாடித கர்ம  பலவந்தவாதரே
நீ மாடுவதேனோ ரங்கா
சாமான்ய வல்லவிது பிரம்ம பரெத பரஹ' - என்கிறார்.

தமிழில்,

'என் வினைப்பயன் அப்படி இருந்தால்
நீ என்ன செய்ய முடியும்- அய்யா ?
இது சாமான்யமா? பிரம்மன் எழுதிய எழுத்தாயிற்றே! '

-பின்னே மாற்றமுடியாதபடி Read Only யாக   hard -code செய்து விடுகிறான் போலும் பிரம்மன்.தியாகராஜர் தன்னுடைய பாட்டு ஒன்றில்

மீவல்ல குண தோஷமேமி ஸ்ரீ ராமநாவல்லனே கானி நளின தள நயன - என்கிறார் 

தங்கம் சரியில்லை என்றால் பொற்கொல்லனை நொந்து கொள்ளலாமா என்கிறார்.

பாடலை கீழே கேட்கலாம்.
சரி.. எது வலியது? கர்ம பந்தமா இறைவனின் அருளா என்பது ஒரு முடிவில்லாத வாதம். கர்ம பந்தம் தான் வலியது என்றால் இறைவனின் கருணைக்கு மதிப்பே இல்லை. எல்லாம் கர்மப்படி நடக்கும் என்றால் இறைவனின் கருணைக்கு வேலையே இல்லை. மேலும், கருணை தான் பெரியது என்றால் சரி, என்ன வேணா தப்பு பண்ணிக்கலாம் இறைவனிடம் நெக்ஸ்ட் ஜென்மத்தில் கருணையை வேண்டினால் போறது! என்ற மனோபாவம் வந்து விடுகிறது. 

மனிதனின் பார்வை மிகக் குறுகியது. வயிறு முட்ட எண்ணெய் அயிட்டங்களை 
சாப்பிட்டு விட்டு மறுநாள் வயிற்றுவலி வந்தால் சாமியிடம் ' நீ கடவுள் தானே, என் மீது கருணை இல்லையா ? நான் நல்லவன் தானே, எனக்கு எப்படி வயிற்றுவலி வரலாம்?' என்று கேட்கிறான். எனவே கடவுள் என்பவர், எப்போதும் தன பக்தர்களின் வினைப் பயனுக்கும் , தன் கருணைக்கும் ஒரு trade -off செய்து கொள்ள வேண்டி இருக்கிறது.


இந்த குட்டிக் கதையை நீங்கள் கேட்டிருக்கலாம்.

ஆஸ்திகன் ஒருவன், கடவுள் நம்பிக்கை இல்லாத நாஸ்திகனை வற்புறுத்தி சம்மதிக்க வைத்து இருவரும் கோயில் பிரகாரத்தை சுற்றி வருகின்றார்கள். வழியில் , ஆஸ்திகனுக்கு காலில் முள் குத்தி விடுகிறது. இன்னொருவனுக்கு நாணயம் ஒன்று தட்டுப்படுகிறது. நாஸ்திகன் , 'பார்த்தாயா, கடவுளை நம்பிய உனக்கு முள் வலி, எனக்கு அதிர்ஷ்டம்' என்கிறான்.

உண்மையில் அன்று அவனை பாம்பு கடிக்க வேண்டும் என்று விதி. ஆனால் கடவுள் அதை வெகுவாகக் குறைத்து முள்-குத்தோடு நிறுத்தினார். மேலும், இன்னொருத்தனுக்கு புதையல் கிடைத்திருக்க வேண்டியது. அவன் அவநம்பிக்கையால் நாணயத்தோடு நின்றது.


பட்டினத்தாரை திருடன் என்று தப்பாக முடிவு செய்து அரசன் முன்னர் நிறுத்துகிறார்கள். 
அரசனும் நேற்றைய இரவின் hang -over இல் ஆராயாமல் திருடனை கழுவில் ஏற்றுங்கள் go go என்று சொல்லி விடுகிறான். அப்போது பட்டினத்தார் , 'இப்பிறப்பில் என் மனம் அறிந்து யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. முன் ஜென்ம வினை தான் நியூட்டனின் மூன்றாம் விதிப்படி இப்போது வந்து என்னை வாட்டுகிறது போலும் ' என்று பொருள்வரும்படி பாடுகிறார்.


என்செய லாவதியாதொன்று மில்லை இனித்தெய்வமே
உன்செய லெயென்றுணர்ப் பெற்றேன் இந்தஊனெடுத்த
பின்செய்த தீவினையாதொன்று மில்லை பிறப்பதற்கு
முன்செய்த தீவினையோலிங்ஙனேவந்து மூண்டதுவே

நல்லவன் ஒருவன் கஷ்டப்படுவதை விதி என்று சொல்லாமல் வேறெப்படி சொல்ல முடியும் என்று திருவள்ளுவரும் சலித்துக் கொள்கிறார்.

சரி. தலை-எழுத்தை விடுவோம். இந்த கையெழுத்தை பற்றி கொஞ்சம். கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து  நன்றாக இருக்காது. vice -versa என்பார்கள். டாக்டர்களைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது. எனவே உங்கள் குழந்தை ஹோம் ஒர்க் நோட்டில் கோழி கிறுக்குவது போல எழுதினால் சந்தோஷப்படுங்கள்!

டாக்டர்கள் கையெழுத்தைப் பற்றி இப்படி சொல்வார்கள்.

டாக்டர் ஒருவருக்கு மருந்துக்கடை கம்பவுண்டர் ஒருவர் நண்பராக இருந்தாராம். ஒருநாள், டாக்டர் வழியில் சென்ற பையனை அழைத்து, ஒரு சீட்டில் ' நாளை என் வீட்டில் ஒரு விசேஷம். கண்டிப்பாக வந்துவிடவும். நேரில் வந்து அழைக்க முடியவில்லை' என்று எழுதி 'மருத்துக்கடை அங்கிளிடம் கொடுத்துவிடு' என்று சொல்கிறார். பையன் அங்கே சென்று அவரிடம் பேப்பரைக் கொடுத்த உடனேயே அதை மேலோட்டமாகப் பார்த்து விட்டு அவர் உள்ளே மறைந்து போய் விடுகிறார்.திரும்பி வரும்போது அவர் கையில் கலர் கலராக மாத்திரைகள், சிரப்புகள் !!!


யாருக்கும் புரியாமல் எழுதுவது ஒரு கலை போலும்!

என்ன தான் இருந்தாலும் இந்த ஆசாமியை மிஞ்ச முடியாது.

இதுவரை எழுதப்பட்ட புத்தகங்களிலேயே இதுதான் மிகவும் புதிரான புத்தகம் என்கிறார்கள். நூற்றுக்கணக்கான பக்கங்கள் ஏதோ ஒரு புரியாத மொழியில் எழுதப்பட்டுள்ளன. படங்கள் வரைந்து விளக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் என்ன எழுதி இருக்கிறது என்று தெரியவில்லை. இதை
வாய்நிச் manuscript என்கிறார்கள். (Voynich manuscipt ) .இதுவரை நாம் அறிந்திராத தாவரங்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன.மருத்துவக் குறிப்புகளாக இருக்கலாம் என்கிறார்கள்.  இது என்ன புத்தகம்? யார் எழுதியது? இதைப் புரிந்துகொண்டால் மனித இனத்துக்கு உபயோகமாக ஏதேனும் இருக்குமா? ஒன்றும் தெரியவில்லை. இந்தப் புத்தகம் 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

ஏதாவது புரிந்தால் சொல்லுங்கள்.


&*&*&*&*&*&

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் - பாரதி

Prediction is very difficult, especially if it's about the future.
Niels Bohr

"Drill for oil? You mean drill into the ground to try and find oil? You're crazy." -- Workers whom Edwin L. Drake tried to enlist to his project to drill for oil in 1859.

எதிர்காலத்தை கணித்தல் என்பது ஒரு திரில்லான சப்ஜெக்ட் ஆக இருந்து வந்திருக்கிறது.
கணிப்பது என்றால் "உங்களின் சப்தமாதிபதியான சூரியன் வலுவாக 3ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த தமிழ்  வருடம் பிறப்பதால் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப் பீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம்..." இப்படி தனி மனிதனின் எதிர்காலத்தை அல்ல. ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிர்காலத்தை, பொருளாதாரம், இலக்கியம், மொழி , தொழில்நுட்பம் போன்றவற்றின் எதிர்காலத்தை சாமார்த்தியமாக கணிப்பது.

எதிர்காலம் கணிப்பதில் பெரும்பாலும் பலர் கடைபிடிப்பது இறந்த காலத்தை கணக்கில் வைத்து செய்வது.
ஏற்கனவே வரையப்பட்ட ஒரு நேர்கோட்டை இழுத்து விடுவது போல! உதாரணம் மூரின் விதி : கணினிகளின் செயல்திறன் ஒவ்வொரு இரண்டு வருடத்துக்கும் இரட்டிப்பாகும்; விலை பாதியாகும் என்ற இந்த கணிப்பு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு சரியாக இருந்திருக்கிறது. இன்னொன்று சும்மா வாய்க்கு வந்த ஏதோ ஒன்றை உளறி வைக்க பின்னால் அது பலித்து விடுவது! ....மூன்றாவது மனத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றினால் vision எனப்படும் காட்சியில் கண்டு சொல்வது.ஜான் வாட்கின்ஸ் என்ற பொறியாளர் 1900-ஆம் ஆண்டில் நூறு ஆண்டுகள் கழித்து உலகம் எப்படி இருக்கும் என்று கணித்திருந்தார். அவைகளில் பெரும்பாலானவை அப்படியே பலித்து விட்டன.

அவரின் கணிப்புகளில் சில:

1. 2000 ஆம் ஆண்டில் கேமிரா தொழில்நுட்பம் வளர்ந்து புகைப்படம் எடுத்து அதை சில நிமிடங்களில் உலகின் இன்னொரு மூலைக்கு அனுப்ப இயலும்.

2. கம்பியில்லாத (wireless ) தொலைபேசி உலகை ஆளும். தொலைபேசிகள் மூலம் கண்டம் தாண்டி கண்டம் பேச இயலும்.

3. பதப்படுத்தப்பட்ட உணவுகள் விற்பனை செய்யப்படும்.

4. மணிக்கு நூறு மைல் வேகம் செல்லும் ரயில்கள் வரும். ( வாட்கின்ஸ் காலத்தில் ரயிலின் வேகம் மணிக்கு இரண்டு மைல் !)

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தகவல் தொடர்பு என்பது  வெறும் கருக் குழந்தையாக இருந்தது என்பதை கவனிக்கவும். 

வாட்கின்ஸ் செய்த தவறான கணிப்புகள் சில:

1. ஆங்கில எழுத்துகளில் X  மற்றும் Q  இருக்காது.

2. அடுத்த நூற்றாண்டுகளில் நகர போக்குவரத்து முழுவதும் தரைக்கு அடியே இருக்கும்.

3. கொசுக்கள் சுத்தமாக ஒழிக்கப்படும் .

(எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் கொசுவை ஒழிக்க முடியாது போலிருக்கிறது!)

"Radio has no future. Heavier-than-air flying machines are impossible. X-rays will prove to be a hoax." -

என்று 1899 இல் வில்லியம் தாம்சன் என்ற விஞ்ஞானி சொன்னார்.
நாம் 2013 -னிலும்  ரேடியோ மிர்ச்சி கேட்டுக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் பொய்த்துப் போன மிகப் பெரிய கணிப்பு 2012 இல் உலகம் அழியும் என்ற மாயன்களின் கணிப்பு என்கிறார்கள். 

இதையும் கவனியுங்கள்.

  • "Everything that can be invented has been invented." -- Attributed to Charles H. Duell, Commissioner, U.S. Office of Patents, 1899, but known to be an urban legend.
  • "Louis Pasteur's theory of germs is ridiculous fiction." -- Pierre Pachet, Professor of Physiology at Toulouse, 1872.
  • "The abdomen, the chest, and the brain will forever be shut from the intrusion of the wise and humane surgeon." -- Sir John Eric Ericksen, British surgeon, appointed Surgeon-Extraordinary to Queen Victoria 1873.
இன்று கூட நாம் எல்லாமே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் 2113-இல் என்னவெல்லாம் வருமோ? சும்மா 
predict செய்யலாம்.காசா பணமா?* குழந்தைகள் பயங்கர புத்திசாலியாக இருப்பார்கள். 15 வயதிலேயே graduate ஆகி இரண்டு மூன்று டிகிரிகள் வைத்திருப்பார்கள். மாணவர்களிடம் டீச்சர்கள் பயப்படுவார்கள். 

* திரையே தேவைப்படாத முப்பரிமாண டி .வி கள் வந்து விடும்.
நிஜத்துக்கும் கற்பனைக்கும் உள்ள வித்தியாசங்கள் வெகுவாய்க் குறைந்து விடும்.

*  இந்தியாவில் இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள்  தடை செய்யப்படும். சைக்கிள்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

* காகிதங்களின் பயன்பாடு 50% குறைந்து விடும்.

* 100 ஆண்டுகளில் நான்கைந்து ராட்சச சுனாமிகள் கடற்கரைகளைத் தாக்கும்.

* எல்லா வீட்டிலும் கம்ப்யூட்டர் இருந்தே தீரும். பட்ஜெட் போடுதல், பொருளாதார நிர்வாகம் இவைகளை கம்ப்யூட்டரே கவனிக்கும். மனைவி மாதிரி 'ஆயிரம் ரூபாய் உதைக்குதே' என்று சண்டை கூட போடும்.

* வேலைவாய்ப்பு அதிகரிக்கும். ஒருத்தருக்கு ஏழெட்டு வேலைகள் க்யூவில் இருக்கும். மக்கள் தொகை தொடர்ந்து வளராமல் saturate ஆகும். 

* உலகின் 50% இளைஞர்கள்  live -in relationship இல் இருப்பார்கள். 

* மனித வாழ்க்கை மேலும் அர்த்தம் இழக்கும். ஹை -டெக் சாமியார்கள் அதிகரிப்பார்கள். 

* இந்தியாவின் சில மாநிலங்கள் இரண்டாகப் பிரிந்து விடும். 

இதெல்லாம் இன்னும் நூறு வருடத்துக்கு நடக்காது.

* கேன்சர், எயிட்ஸ் முற்றிலும் குணப்படுத்தும் மருந்துகள் 
* செவ்வாய்க்கு மனிதனை அனுப்புதல் 
* மரபணு முறையில் நோய்களை குணப்படுத்தல் 
* வேற்றுக் கிரக உயிர்களுக்கான ஆதாரம் 

நூறு வருடம் கழித்தும் கூட இவையெல்லாம் மாறாது.

* நீங்கள் (வாசகர்கள்) தான் சொல்லுங்களேன்?
கீழ்க்கண்ட பத்தியில் என்ன ஸ்பெஷல் என்று கண்டுபிடியுங்கள்.

குரங்கு ஒன்று ஒரு தட்டெழுத்து எந்திரத்தில் உட்கார்ந்து கொண்டு  விசைகளை அதன் இஷ்டத்துக்கு அழுத்தி அந்தத் தாளை வெளியே எடுத்து நோக்கினால் ஒரு தலை சிறந்த கவிஞரின் கவிதை ஒன்று கிடைத்தால் எவ்வாறு உணர்வீர்கள்? இதற்கான சாத்தியக்கூறு சுழி அல்ல. ஆனால் குரங்கு அசலான கவிதையை தட்டச்சு செய்ய அண்டத்தின் வயது வரை உட்கார்ந்து அடித்துக் கொண்டே இருத்தல் தேவையாகிறது. ஒழுங்கில்லாத நிலையில் இருந்து ஒழுங்கு உருவாவது இவ்வாறு தானா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.சரி, சிறு வயதில் தட்டெழுத்து கற்றுக் கொள்கையில்  ஒரு குரங்கு தட்டுவதற்கு நிகராகவே நான் அடித்திருக்கிறேன். :)

clue : ஆரம்பத்தில் உள்ள பாட்டு!

***************************

பக்தன் ஒருவன் இறைவனிடம் எனக்கு முக்தி தரமாட்டாயா என்று கெஞ்சுகிறான்.

இறைவன் அவனிடம் அசரீரியாக , மடையனே, 'உன்னிடம் பக்தி, வைராக்கியம், மனோதிடம், விரக்தி என்று ஒன்றுமே இல்லையே உனக்கு எப்படி நான் மோட்சம் தர முடியும்?' என்கிறான்.

பக்தன், 'அட ராமா, உனக்கு நான் சொல்ல வேண்டியதாய் போய் விட்டதே,
ஒரு குட்டிக் கதை சொல்லுகிறேன் கேள், ஒரு ஊரில் கோடீஸ்வரன் ஒருவன் தன்னிடம் இருக்கும் தங்கம், வைரம், வைடூரியம் , நகைகள் , நாணயங்கள் எல்லாவற்றையும் தானம் செய்ய முடிவு செய்து அறிவிப்பு விட்டானாம். மறுநாள் அவன் வீட்டின் முன் ஏகப்பட்ட கூட்டம். எல்லாரும் அண்டா, குண்டா, சாக்குப்பை , மூட்டைகளுடன் குவிந்து விட்டார்களாம். ஒருத்தன் மட்டும் வெறும் கையை வீசிக் கொண்டு வந்தானாம். அவன் முறை வந்த போது ,செல்வந்தன் ,'ஏம்பா , எடுத்துட்டு போக பை ஒண்ணும் கொண்டு வரலையா?' என்று கேட்டதற்கு ,அவன், 'சாமி, நீங்க இவ்வளவு தங்கம் , வெள்ளி என்று அள்ளி அள்ளிக் கொடுக்கும் போது சாக்குப் பை உங்களுக்குப் பெருசா? அதையும் நீங்களே சேத்துக் கொடுத்துடுங்க' என்றானாம். அப்படி தான் நானும் சொல்கிறேன். அதி உயர்ந்த மோட்சத்தையே நீ கொடுக்கும் போது மற்றதெல்லாம் உனக்குப் பெரியதா? இந்த பக்திப் பை, வைராக்கிய மூட்டை, இவைகளை நீயே கொடுக்கலாகாதா? என்கிறான் பக்தன்.

-நன்றி....' ஜீரோ டிகிரி ' - சாரு நிவேதிதாஒரு காதல் கவிதை:

-பா. மதியழகன்


பூக்களுக்கு
புனிதர் பட்டம்
உன் கூந்தலை
அலங்கரித்ததினால்.

மாலையில் தான் பூங்காவில்
அவளைப் பார்த்து வந்தேன்
இருந்தாலும்
கதகதப்பு தேடும்
இரவு தான்
எத்தனை நீளம்.


ஓஷோ ஜோக்.


முல்லா நசுருதீனின் கழுதைக்கு என்னவோ ஆகி விட்டது. ஒருநாள் அவர் மனைவியை கீழே தள்ளிவிட்டு கொன்றே விட்டது.

முல்லாவின் மனைவிக்கு இறுதி சடங்குகள் நடந்து கொண்டிருந்தன.
சடங்குகளை செய்து வைக்கும் குரு முல்லாவைப் பார்த்து, 'உங்கள் மனைவி ரொம்பவே பிரபலம் போல, இறுதி சடங்குக்கு இவ்வளவு கூட்டம்?' என்றார்.

முல்லா , ' இல்லை ஐயா, இவர்கள் எல்லாம் சடங்கு முடிந்ததும் கழுதையை விலை பேசி ஏலத்தில் எடுக்க வந்திருக்கிறார்கள்' என்றார்.


சமுத்ரா 
4 comments:

ஜீவன்சுப்பு said...

ஜோக் செம்ம...!

//நியூட்டனின் மூன்றாம் விதிப்படி // ஹா ஹா ...

// இந்தியாவில் இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் தடை செய்யப்படும். சைக்கிள்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.//

நிச்சயமா ... நா நாலு மாசத்துக்கு முன்னாடியே சைக்கிள் வாங்கிட்டேன் ...!

//மக்கள் தொகை தொடர்ந்து வளராமல் saturate ஆகும். //

எனகென்னமோ ரெம்பவே கம்மியாயிரும்னு தோணுது ...!

வழக்கம் போல கலைடாஸ்கோப் சூப்பர் .

Jayadev Das said...

ஆனால் 2113-இல் என்னவெல்லாம் வருமோ?\\ சுற்றுப் புறச் சூழல் அழிவைப் பார்த்தா ............. மேற்கொண்டு சொல்ல மனம் வரவில்லை..........

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

samyuktha prithviraj said...

everything starts from a woman.. but all of u write as though everything ends because of woman... any one soul out there who knows and realizes the value and worth of a woman...
- sam