இந்த வலையில் தேடவும்

Friday, August 16, 2013

கலைடாஸ்கோப் -99

லைடாஸ்கோப் -99 உங்களை வரவேற்கிறது

இந்திய இல்லங்களின் தொலைக்காட்சிகளை விட்டு இந்த ராமாயணம், மஹாபாரதம் இரண்டும் எப்போதும் அகலாது போலிருக்கிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஏதோ ஒரு வகையில் டி .வி களில் ரா மற்றும் ம தொடர்ந்து கொண்டே இருக்கும் போலிருக்கிறது. எத்தனை தடவை பார்த்தாலும் கேட்டாலும் படித்தாலும் சலிப்பு தராத இதிகாசங்கள் அவை. அடுத்து நடப்பது தெரிந்தாலும் கூட, இப்போது கூனி வருவாள், இப்போது கைகேயி மனம் மாறுவாள், இப்போது பொன்மான் வரும் இப்போது ராவணன் வருவான் என்று அடுத்து நடப்பது தெரிந்தாலும் கூட அதே சுவாரஸ்யத்துடன் இருக்க முடியும் ...

சன் டி  .வி யில் தமிழிலேயே எடுக்கப்பட்ட மகாபாரதம் வருகிறது. இதுவரை ஹிந்தி சானல்களின் காப்பி ரைட்டாக இருந்த இந்தத் தொடர்களை தமிழில் எடுக்க முன் வந்தது ஒரு பாராட்டத்தக்க விஷயம்.உச்சரிப்பு, உதட்டசைப்பு, மொழி பெயர்ப்பு குழப்பங்கள் இல்லாமல் nativity உடன் பார்க்கலாம்.  ரா. எடுப்பதை விடவும் ம. எடுப்பது கொஞ்சம் காஸ்ட்லியான விஷயம். ராமாயணத்தில் நிறைய எபிசோடுகளை காட்டிலேயே ஒட்டி விடலாம். இங்கே, செட்டுக்கே அதிக செலவாகும். தமிழில் , சில காட்சிகளில் ஹிந்தி அளவு பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும் திருப்தியாகவே வந்திருக்கிறது !சத்தியவதி, பீஷ்மர், விதுரன், சகுனி , நல்ல தேர்வுகள். ராஜ மாதா சத்தியவதியாக வரும் தேவிப்ரியா chance -less !


விசித்திரவீர்யன் திருமணம் 


ஆனால் சில நடிகைகள் அசல் தமிழ் நாட்டுப்புற கிராம கெட் -அப்பில் பூ, பட்டுப் புடவையுடன் வருவது உறுத்துகிறது . கௌ (gow )ரவர் , ச(sa ) க்கரவர்த்தி,அஸ்தினாபுரம் என்று சொல்லும் தமிழ் நடிகர்களின் உச்சரிப்பும்.

இதற்கு முன் விநாயகர் திருவிளையாடல் என்று ஒன்று வந்து கொண்டிருந்தது. பாதியிலேயே நின்று விட்டது.மகாபாரதம் கு(ku)ருச் சேத்திரப் போர் வரை போகிறதா என்று பார்ப்போம் ! ok ..

கம்ப ராமாயணம் போன்று வில்லியின் பாரதம் ஏனோ அத்தனை பப்ளிசிட்டி பெறவில்லை. மூன்று பாட்டுகளைப் பார்ப்போம் !


கண்ணன், போரைத் தடுக்க நான் துரியோதனாதிகளிடம் தூது போகிறேன் என்கிறான். நகுலன், அவனிடம்  போகாதே , சுத்த வேஸ்ட் ! நீ எப்படிப்பட்டவன் ! மழை இடையர்களை நனைத்து விடக்கூடாதே என்று initial stage  இலேயே  கருணையுடன்  மலையை எடுத்தவன்..உன்னை அவன் மதிக்கமாட்டான், கூப்பிட்டு கூல் ட்ரிங்க்ஸ் கொடுக்க மாட்டான் ! மேலும், பாண்டவர்கள் நிலத்தை பிச்சை கேட்டார்கள் என்ற பழி வேறு வரும் ...சண்டை செய்யலாம்.
ஏ .கே .47 எல்லாம் வேலை இன்று துருப்பிடித்து விடும் போலிருக்கிறது என்கிறான்.


'கேவலம் தீர் வலிய பகை கிடக்க, முதல் கிளர் மழைக்குக் கிரி ஒன்று ஏந்து 
கோவலன் போய் உரைத்தாலும்,குருநாடும் அரசுமவன் கொடுக்கமாட்டான்; 
நாவலம் பூதலத்து அரசர், நாடு இரந்தோம் என நம்மை  நகையாவண்ணம், 
காவலன்தன் படை வலியும், எமது தடம் புய வலியும்   காணலாமே!

அர்ஜுனனுக்கு வேறு  கவலை. சபையில் எல்லார் முன்னிலையிலும் திரௌபதி அவமானப் பட்டாளே !அப்போது நாமெல்லாம் பிணங்கள் போல நின்றிருந்தோமே அந்தக் களங்கத்தை துடைக்க வேண்டாமா என்கிறான்.


தீண்டாத கற்புடைய செழுந் திருவைத் துகில் உரிய,  செயல் ஒன்று இன்றி, 
"நீண்டானே! கரியானே! நிமலா!" என்று அரற்றினளாய்  நின்று சோர, 
மாண்டார்போல், அது கண்டும், மன் அவையில் யாம்   இருந்த மாசு தீர 
வேண்டாவோ? வேண்டுவதும் மேம்படு நல் அறமேயோ?  வேந்தர் வேந்தே!

கம்ப ராமாயணத்தை விட எளிமையாய் இருக்கிறதா ? படித்தால் புரிகிறதா ? ஒய்வு நேரத்தில் வில்லி பாரதம் படியுங்கள். இன்டர்நெட்டில் எல்லாமே கிடைக்கிறது.  


சகதேவன் மட்டும்தான் ,


ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை; யான் அறிவேன், உண்மையாக

திருவுளத்துக் கருத்து எதுவோ, அது எனக்கும் கருத்து!' 

என்கிறான் !%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

நண்பர் ஒருவர், "No artificial flavors and colors' என்கிறார்களே.....artificial என்று ஏதேனும் உண்டா ? மனிதனால் எதையும் உண்டாக்க முடியுமா ? எல்லாமே 'Natural ' தானே என்றார்.உண்மை தான். தெளிவான வரையறை இல்லாமலேயே நாம் நிறைய சொற்களை உபயோகித்து வருகிறோம்.
'பழையது' , 'புதியது' என்பது கூட அப்படித்தான்.

When a man opens a car door for his wife, it's either a new car or a new wife.
Prince Philip 


A  trillion years from now an advanced civilization will look back at us with envy and say "They knew the Universe when it was young." -Arthur C Clarke 


நாம் புதியது என்று நினைப்பது ஒரு விதத்தில் மிகப் பழையது ..!


ஒரு விதத்தில் பார்த்தால் எல்லாமே பழையது....மிகப் பழையது . அறிவியல் , பிரபஞ்சத்தின் வயது 13 பில்லியன் ஆண்டுகள் என்கிறது...(13000 கோடி வருடங்கள் !) 
இப்போது இருக்கும் கார்பன், சிலிக்கான், கருப்புசாமி எல்லாம் அத்தனை பழையவைகள் !இன்னொரு விதத்தில் எல்லாமே புதிது ,எல்லாமே மாறுகிறது. முந்தைய நொடி இருந்தது இப்போது  இல்லை...எல்லாமே சுழற்சி முறையில் மாறுகிறது.நம் உடலின் செல்கள் ஒவ்வொரு நிமிடமும் மாற்றப்படுகின்றன. சில பேர், மனித உடல் ஏழு வருடங்களில் முற்றிலும் மாறி விடுகிறது என்ற கருத்தை நம்புகிறார்கள். அதாவது ஏழு வருடம் முன்பு இருந்த செல்கள் ஒன்று கூட இப்போது இல்லை. நீங்கள் முற்றிலும் வேறு மனிதர்....இதை சில பேர் மறுக்கிறார்கள்.. .எல்லாமே மாறி விட்டாலும் 'நான்' என்ற உணர்வு தொடர்கிறதே, சின்ன வயதில் நடந்தது ஞாபகம் இருக்கிறதே ? எனவே மூளை மற்றும் தண்டு வடத்தின் சில ஆதார நியூரான் செல்கள் எப்போதும் மாறுவதில்லை  (cerebral cortex )என்கிறார்கள்.நம்மை சுற்றிச் சூழ்ந்துள்ள வெட்ட வெளி கூட...நாம் நேற்று பார்த்த வெளி இன்றைக்கு இல்லை. in fact , அதை வேறெப்போதும் பார்க்க முடியாது பூமி சூரியனை சுற்றுவதால் தினமும் வேறு வேறு வெட்டவெளி...சூரியன் பால்வெளி வீதியை சுற்றுவதால் வருடா வருடம் வேறு வேறு வெளி. ஆனால் நமக்கு இது தெரிவதில்லை..ஒன்றுமே இல்லாததை , சூனியத்தை  எப்படிப் புதியது, பழையது என்று வேறுபடுத்த முடியும் ?? இறைவன் போல !!! பழையதும் அவன்...புதியதும் அவன்... பழையதில் ஒயின் அவன். புதியதில் இன்றைய நியூஸ் பேப்பர் !"முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே " - மாணிக்கவாசகர் 

%%%%%%%%%%%%%%%%%%%%%%%5

'ராக ரஞ்சனி'  என்ற பதிவை ப்ளாக்கில் எழுதி வந்தேன். பல பேர் பேரைப் பார்த்ததுமே காத தூரம் ஓடிப் போனதால் இனிமேல் கலைடாஸ்கோப்-இலேயே ராகங்களைப் பற்றி அவ்வப்போது எழுதலாம் என்று.. now  you have no choice !

ராக ரஞ்சனி ..
ராகம் : சாருகேசி 

'சொல்லுக்கும் அர்த்தத்துக்கும் தூரங்கள் கிடையாது' என்கிறது ஒரு தமிழ் சினிமா பாட்டு. ஆனால் , சொல்லுக்கும் அர்த்தத்துக்கும் ரொம்பவே தூரம் என்று தோன்றுகிறது. 'தூக்கம்' என்ற சொல்லுக்கும் தூங்குவதற்கும் என்ன சம்பந்தம் ? இந்த association எப்படி ஏற்பட்டது ? முதன் முதலில் மொழி வந்த போது இந்த association ஏற்பட ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது. சரி.

சாருகேசி எல்லா ஸ்வரங்களும் வரும் ஒரு சம்பூர்ண (முழுமையான) ராகம்.இதன் ஸ்வரங்கள் 
ஸ ரி2 க3 ம1 ப த1 நி2 ஸ் ,
 ஸ் நி2 த1 ப ம1 க3 ரி2 ஸமுதலில் சினிமாப் பாட்டில் இருந்து ஆரம்பிப்போம். 

ராகவேந்திரருடன் போட்டிக்கு வரும் நாட்டியப் பெண் , நீங்கள் பாடும் பாடலுக்கு நான் சரியாக அபிநயம் பிடிக்க வராவிட்டால் நான் தோற்றதாக ஒப்புக் கொள்கிறேன் என்கிறாள். ராகவேந்திரர் பாடுகிறார். 'சாருகேசி' என்ற ராக முத்திரையை பிரயோகித்து அவளை ஆட முடியாமல் நிறுத்தி விடுகிறார் அவர். இந்தப் பாடலைப் பார்க்கும் போது பாட்டி, 'சாருகேசின்னா அழகான கூந்தலை உடையவள்' -ன்னு அர்த்தம் வர்றதே , அதை அபிநயத்தில் காட்ட வேண்டியது தானே ? என்பாள். அதை ஏன் அவள்  காட்டவில்லை ?சொல்லுக்கும் அர்த்தத்தும் ரொம்ப தூரம் ஆகி விட்டதோ என்னவோ ? 

ராகத்தின் பெயரைப் பார்த்து இது பெண் ராகம் என்று நினைத்து விடாதீர்கள். உண்மையில் இது ஆண் ராகம். அதாவது அழகிய கூந்தலை  உடையவன் ! அந்தக் காலத்தில் பெண்களுக்கு இணையாக ஆண்களும் கூந்தல் அழகன்-களாக இருந்தார்கள் போலும் ! பாடலின் காணொளி கீழே !

சாருகேசியில் சில பிரபலமான திரையிசைப் பாடல்கள்.

* மன்மத லீலையை வென்றார் உண்டோ 
* தூது செல்வதாரடி 
* சின்னத்தாயவள் தந்த ராசாவே 
* காதல் கசக்குதையா 
* உதயா உதயா உளறுகிறேன் 
* நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ 

கர்நாடக இசை 
லால்குடி ஜெயராமன் இயற்றிய சாருகேசி வர்ணம் ரொம்பவே பிரபலம்.
'இன்னும் என் மனம் அறியாதவர் போல இருந்திடல் நியாயமா ?'

ப த நி தா ப ம த ப ம க ரி க ம பா ....

பாடல் கீழே 
என்னுடன் பேசுவதற்கு என்னப்பா பிகு பண்ணுகிறாய் , ராமா என்று கேட்கும் தியாகராஜரின் 'ஆட மோடி கலதே' ...  விசாகா ஹரி கதையுடன் சொல்கிறார். எப்படிப் பேச வேண்டும் என்றும் ஒரு communication கிளாஸ் எடுக்கிறார் விசாகா ஹரி இதில்...
கடைசியாக ஸ்வாதித் திருநாளின் 'கிருபயா பாலய சௌரே '...ரொம்ப அறிவு உள்ளவர்கள், ஜீனியஸ்கள் சீக்கிரமே பூமியை விட்டுப் போய் விடுவார்கள் என்பார்கள்.சமஸ்கிருதத்தில் சொகசான கிருதிகள் 400க்கும் மேல் இயற்றி விட்டு 31 வயதிலேயே போய் விட்டார் திருநாள் ! 
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

வாழ்க்கையின் பெரிய அபத்தம் எது ? ஆசைப்பட்டது கிடைத்து விடாமல் இருப்பதா ? இல்லை... ஆசைப் பட்டது கிடைத்து விடுவது என்கிறார்கள். 
புத்தரின் தந்தை அவருக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும்படிச் செய்து ஒரு மிகப் பெரிய தவறு செய்து விட்டார் என்கிறார் ஓஷோ. அப்படிச் செய்திருக்கக் கூடாது. சின்னச் சின்னத் தோல்விகள் , ஏமாற்றங்கள், விரக்திகள் இவற்றை சித்தார்த்தன் அனுபவிக்கும் படி செய்திருக்க வேண்டும் என்கிறார். சித்தார்த்தன் என்ற பெயரே சித்த அர்த்தன் -ஆசைகளின் நிறைவு என்று பொருள்படும் படி வைத்து விட்டார்கள். எல்லாமே கிடைத்து விடுகிறது. செல்வம், ஆடை, ஆபரணம், பணியாட்கள், தூக்கம் , பெண்கள் எல்லாமே ! இந்த எல்லாம் -கிடைத்து-விடும் சூழ்நிலையில் எல்லாமே சலித்துப் போவது இயல்பு தான். 

மேல்நாட்டு சிந்தனையாளர் ஒருவர் மனிதகுலம் எதிர்காலத்தில் பசி, பட்டினி, பஞ்சம், போர் இவற்றால் அழிவதை விட எல்லாத் தேவைகளும் நிறைவடைந்து , எல்லாமே கிடைத்து, எல்லாமே கொடுக்கப்பட்டு வாழ்க்கை வெறுத்துப் போய் தற்கொலை செய்து கொண்டு விடும் என்கிறார்.

ஏழைகளை விடப் பணக்காரர்கள் அதிக விரக்தியில் இருக்கிறார்கள் என்கிறார் ஓஷோ. ஏழைகளுக்காவது hope , நம்பிக்கை இருக்கிறது. நாளை ஏதோ ஒன்று நடக்கும், நாளை நாம் பணக்காரர் ஆவோம் என்று. பணக்கார்களுக்கு அதுவும் இல்லை. எல்லாமே இருக்கிறது. நம்பிக்கை விழுந்து விட்டது.! 

ஆசைகளின் பூர்த்தியில் வரும் ஞானமே உண்மையானது. ஆசைகளின் அடக்குதலில் அல்ல.கனிந்த பழம் தானாகவே கீழே விழுந்து விடும் !

ஸ்கூலில் படிக்கும் போது   , +2 வில் நல்ல மார்க் வாங்கி நல்ல கட்-ஆப் வாங்குவது லட்சியமாய் இருந்தது. வாங்கியாயிற்று. பின் நல்ல இஞ்சினியரிங் காலேஜில் சேர்ந்தாக வேண்டுமே ! என்று.. பின்னர் நல்ல கம்பெனியில் place ஆகவேண்டும் என்று. பிறகு நல்ல project , onsite கிடைக்கணுமே என்று..பின்னர் நல்ல location இல் வீடு வாங்க வேண்டுமே என்று.! கல்யாணமும் ஆகி இடுகிறது. எல்லாப் பக்கங்களில் இருந்தும் நம்பிக்கை வாசல் மூடப்படுகிறது. ...எல்லாமே நடந்து விடுகிறது. கல்யாணம் ஆகாவிட்டால் at least கற்பனைகளில் வாழலாம். நாளை அழகான பெண் , மிஸ். மெட்ராஸ் ஒருத்தி வந்து மலர்க்கொத்தை நீட்டி  நம்மிடம் ஐ -லவ்-யூ சொல்லலாம். யார் கண்டது ? there seems to be a  chance ...கல்யாணம் ஆகி விட்டால் அதுவும் விழுந்து விடுகிறது.

ஹி ஹி...அதனால் தான் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை...
வீடு கார் எதுவும் வாங்கவில்லையாக்கும் ! இவ்வளவு சின்ன வயதில் (?) ஞானம் அடைய (??) நான் விரும்பவில்லை....


%%%%%%%%%%%%%%%%%%%%%


Discovery சானலின் food factory  பார்த்திருக்கிறீர்களா ? பார்த்தாலே ஒரு ஃ புல் மீல்ஸ் சாப்பிட்டு விட்ட திருப்தி ஏற்படும். மாவிலிருந்து தொடங்கி குளோப் -ஜாமூன் பெட்டிகளில் பேக் செய்யப்பட்டு வெளியேறுவது வரை விலாவாரியாக ! நாக்கில் எச்சில் ஊறும் ! என்னைக் கவர்ந்தது factory -யில் 
இருக்கும் இயந்திரங்கள் தான். அவை கலக்குகின்றன; உடைக்கின்றன; சேர்க்கின்றன , தள்ளுகின்றன,பிரிக்கின்றன,  பிசைகின்றன, கட்டுகின்றன , ஒட்டுகின்றன ! அழகான சொன்ன சொல் கேட்கும் pre programmed இயந்திரங்கள் ..!

விலங்குகளிடம் இருந்து மனிதர்களை வேறுபடுத்தும் விஷயம் சிரிப்பு என்பார்கள். வேறுபடுத்தும் இன்னொரு விஷயம் 'சமையல்' ..எந்த மிருகமும் சமைத்து சாப்பிடுவதாகத் தெரியவில்லை. மனிதனின் நாக்கு தான் ஸ்பெஷல் ! அதற்காக எத்தனை பிரயத்தனங்கள் ! பிசினஸ்கள் ! ரசனையான நாக்கு ! ஆங்....சமஸ்கிருதத்தில் நாக்குக்கு ரசனா (Rasana )என்று பெயர் !

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

சமஸ்கிருதம் ஏன் ஸ்பெஷல் என்று யோசிக்கலாம். இத்தனை அழகான மொழியை நம்மிடம் வைத்துக் கொண்டு நாம் பிரெஞ்சு , ஸ்பானிஷ் என்று கற்றுக் கொண்டிருக்கிறோம்.

* சுருக்கம் : 

பார்வதி இமயத்தில் தவம் செய்யும் போது , மகளே தவம் செய்தது போதும் என்று பொருள் வரும்படி சமஸ்கிருதத்தில் அவள் தாய் சொல்கிறாள். 
அது என்ன வாக்கியம் என்று யோசியுங்கள் ! வாக்கியம் கூட இல்லை. சொல் தான். இரண்டே எழுத்து:-   'உமா'

*கடவுள்களில் பெரியவர் யார் ?
who is the greatest of Gods ?
கிமேகம் தைவதம்  ?

*யாரை வழிபடுவதால் மனிதனுக்கு அமைதியும் செல்வமும் கிடைக்கிறது ?
By worshiping whom can a man reach auspiciousness (peace and prosperity)?
*கிம் அர்ச்சனாத் ப்ராப்னுயுர் மானவா : சுபம் ?

*எப்போதும் சாந்தமானவரும் , அகில உலகத்துக்கு நாயகரும் ஆனவரை வந்திக்கிறோம்.
We meditate  upon the master of the universe , lord Vishnu, who is ever peaceful 
சாந்தாகாரம் வந்தே சர்வ லோகைக நாதம் 

-எது சுருக்கமானது என்று தெரிகிறதா ?

* வாக்கிய அமைப்பு.

தமிழில் இப்படி எழுதினால் நன்றாக இருக்காது :

வாங்கி வருவாயா சாயங்காலம் வரும்போது காய்கறி ?

இங்லீஷில் இப்படி எழுத முடியாது:

 In the evening when you come, vegetables, will you bring?

சமஸ்கிருதத்தில் இரண்டு விதத்திலும் எழுதலாம்.
(ஏன் இன்னும் பல விதத்தில் எழுதலாம் )

ஆனயந்தி வா சாயம் ஆகமன சமயே ஷாகம் ?
சாயம் ஆகமன சமயே ஷாகம் ஆனயந்தி வா ?
सायं आगमनसमये शाकं आनयन्ति वा?


புரியாத மொழி என்றே நாம் எடுத்துக் கொண்டு விட்டோம். உண்மையில் பிரெஞ்சு கற்பதை விட சம்ஸ்க்ருதம் சுலபம் தான் . கற்றுக் கொண்டால் இன்னொமொரு விஷயம் நமக்கு advantage . கோயிலில் அர்ச்சகர் என்ன சொல்கிறார் தப்புத் தப்பாக சொல்கிறாரா , அதன் அர்த்தங்கள் எல்லாம் தெரிந்து விடும்.

தெரியாதவரை நல்லது என்கிறீர்களா...ஆமாம் தெரிந்தால் சில விஷயங்கள் உறுத்தும்.

அம்மாவுக்கு ஸ்ரார்தம் செய்யும் போது ,'யன் மே மாதா ப்ரலுலோபா ஸ்சரந்தி அநனுவ்றதா' - என் அப்பா யார் என்று எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் இவளை என் தந்தைக்கு உண்மையான மனைவி என்று நினைத்துக் கொண்டு ஸ்ராத்தம் செய்கிறேன்.என் தாய் என் தந்தைக்கு உண்மையானவளாக இல்லாதிருந்திருந்தால் இந்த பிண்டம் வீணாகாமல் என் தந்தைக்கே போய் சேரட்டும்.!


அப்பாவுக்கு சொல்லும் மந்திரத்தில் 'அப்பா என் அம்மாவுக்கு துரோகம் செய்திருந்தால்...' என்றெல்லாம் வருவதில்லை....ஹ்ம்ம்..ஆணாதிக்கம் !!

அர்த்தம் தெரியாத வரைக்கும் நல்லது ! தர்ப்பணம் கொடுத்தோமோ , சம்பாவணை செய்தோமா சாப்பிட்டோமா மத்தியானம் ஆபீசுக்கு ஓடினோமா மீட்டிங்கில் "I already told u many times ...'என்று (உண்மையிலேயே ஒருதரம் தான் சொல்லி இருப்பார் ) வெட்டி பந்தா காட்டினோமா என்று இருக்கலாம்.


ஓஷோ ஜோக்.


ஒரு பெண் அவசரமாக முல்லாவின் வீட்டில் நுழைந்து . 'டாக்டர்,  தயவு செய்து என்னைப்பார்த்து என்னிடம் என்ன குறை என்று சொல்லுங்கள்.. அவர் ஏன் என்னை விட்டு ஓடி விட்டார்' என்றாள் .

முல்லா அவளை பொறுமையாக மேலிருந்து கீழ் வரை பார்த்து விட்டு  ' அம்மையாரே  , மூன்று விஷயங்கள் ...

ஒன்று : நீங்கள் முப்பது கிலோ ஓவர் -வெயிட்டாக உள்ளீர்கள்.

இரண்டு : உங்கள் உதட்டில் இருக்கும் அடர்த்தியான லிப்-ஸ்டிக்கை அழித்து விட்டால் நீங்கள் கொஞ்சம் அழகாகத் தெரிவீர்கள்.

மூன்று : நான் டாக்டர் அல்ல... அது எதிர் வீடு'

என்றார்.


சமுத்ரா 

6 comments:

VENTURER said...

Normally I won`t read blogs/books... But I am impressed with your wordings and information. Waiting for your 100th one.. All the best..

G.M Balasubramaniam said...

உங்கள் கலைடாஸ்கோப்பில் எனக்குப் பிடித்தது அவற்றின் வெரைடிதான். எதைச் சொல்ல எதைவிட.?

Anonymous said...

//இனிமேல் கலைடாஸ்கோப்-இலேயே ராகங்களைப் பற்றி அவ்வப்போது எழுதலாம் என்று.. now you have no choice !//


i scrolled down.. ;-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வணக்கம் சமுத்ரா! நலமா?

//*எப்போதும் சாந்தமானவரும் , அகில உலகத்துக்கு நாயகரும் ஆனவரை வந்திக்கிறோம்.
We meditate upon the master of the universe , lord Vishnu, who is ever peaceful
சாந்தாகாரம் வந்தே சர்வ லோகைக நாதம்

-எது சுருக்கமானது என்று தெரிகிறதா ?//

உங்களுக்குச் சம்ஸ்கிருதம் பிடிக்கும் என்று அறிவேன்:)
ஆனாலும், ஒப்பீடு -ன்னு வந்து விட்டால் நியாயம் வேண்டும் அல்லவா?:))

* ஸ்வாமி + புஷ்கரிணி = இது சம்ஸ்கிருதம்
* கோன்+ஏரி = இது தமிழ்!

எது சுருக்கமானது என்று தெரிகிறது அல்லவா?:))

"கோனேரி" வாழும் குருகாய்ப் பிறப்பேனே!
ஸ்ரீஸ்வாமி புஷ்கரிணி தடே, ரமயா ரமாமாநாய ஸ்ரீநிவாசாய மங்களம்!

"சுருக்கம்" என்பதே மொழியின் நிறை அளவு கோல் ஆகி விடாது!
ஒரு மொழியில், ஒரு வாக்கியம் சுருக்கமாய் இருக்கும்; இன்னொன்று நீநீநீளும்...

மற்றபடி, அழகான "சாரு+கேசிக்கும்", பதிவுக்கும் என் வாழ்த்துக்கள்!:)

விஜயன் said...

//பழையதில் ஒயின் அவன். புதியதில் இன்றைய நியூஸ் பேப்பர் !//
news paper பழைய செய்திகளின் தொகுப்புகள், லைவ் டெலிகாஸ்ட் சரிப்படக்கூடும்!..rrsri said...

காதல் கசக்குதையா பாடல் ஷண்முகப்ரியா ராகம் ஆச்சே