இந்த வலையில் தேடவும்

Friday, July 19, 2013

வாலி - வைணவம் தந்த வைரம்


இதோ-
இன்னொரு கவிதைப் புத்தகத்தை 
கிழித்துப் 
போட்டுவிட்டான் 
எமன்!


-தமிழ் அன்னைக்கு இப்போது ஒரு
தலையாய பிரச்சினை
வாடகைக்கு வேறு வீடு தேடுவது!
வாலியின் நாக்கு தான் வீழ்ந்து விட்டதே!


தமிழ்க் கவிதையில்
தலை வலியாய் இருந்து வந்த

யாப்பை விலக்கிய கவிஞன்
உடல் பழுத்த போதும்
உள்ளத்தின்
மூப்பை விலக்கிய இளைஞன்


-எதுகை மோனை
இவனுக்கு இடதுகை தூரம்
சந்தம் இவனுக்கு பக்கத்து சொந்தம்.
அணி -
கையில் இருக்கும் கனி


மொத்தத்தில்
தமிழ் என்னும் பாவை மொழி
நிதமும்
இவனுடன் விளையாடிற்று பல்லாங்குழி!

இனி தமிழன்னை
'கம்பெனி' இல்லாமல்
கையொடிந்தது போல் ஆவாள்!
மைந்தனை இழந்த
மாதா போல் நோவாள் !


கம்பன்
யாப்புச் சாக்கில்
கட்டி வைத்திருந்த ராமாயணக் கற்கண்டை
புதுக் கவிதைப் பொட்டலங்களில்
சின்னச் சின்னதாய்க் கட்டி
ஊரெங்கும் வினியோகித்தவன்!

அழகர்மலைக் கள்ளனில் இருந்து
தில்லுமுல்லு வரைக்கும்
தமிழ்த் தேரை
தள்ளுமுள்ளு இன்றி
தள்ளிக் கொண்டு வந்த சாரதி!
இவன்
முக்காபுல்லா எழுதத் தெரிந்த
முண்டாசில்லா பாரதி!
வெள்ளை உடுத்தி
ஆண் வேடத்தில் வந்த சரசுவதி!

எம்.எஸ் .வி யின்
கூட்டுக்காரன்
பாஸ்போர்ட்
வைத்துக் கொள்ளாத
பாட்டுக்காரன்.


இவன்
ராக்குமுத்து ராக்குவும் எழுதுவான்
ராமானுஜ காவியமும்
எழுதுவான்!

சிக்குபுக்கு ரயிலு என்பான்
ஸ்ரீரங்க நாதனை
சிலாகிப்பான்!

பெரியாரையும் புகல்வான்
பெரியாழ்வாரையும்
புகழ்வான் !

இந்த முறை
காலம் என்ற கதாநாயகன்
வாலியை
மறைந்திருந்தல்ல
நம்-
கண் முன்னாலேயே
கொன்று விட்டான்!

முன்னே வருபவரின்
பலத்தில்
பாதி
எடுத்தவன் ராமாயண வாலி!
தன் கவிதையால்
தன் பலத்தில் பாதி கொடுத்தவன்
இந்த
ரங்கராஜ வாலி!


இனி
யாருண்டு
தமிழுக்கு அணி செய்ய?
பகலும் இரவும்
பக்குவமாய் பணி செய்ய?

வாலி என்னும்
வைர மூக்குத்தி விழுந்து விட்டதால்
மூளியானது
தமிழன்னை மூக்கு!
எந்த ஜி .அர் .டி யிலும்
கல்யாண் ஜுவல்லர்சிலும்
இனிமேல் கிடைக்காது!முருகா முருகா என்று
முப்போதும் உச்சரித்தவன்
கம்யூட்டர் காலத்துக்கு
மாடர்ன் ஆக மாறு என்று
தமிழ்த்தாயை
அன்புடன் நச்சரித்தவன்!


பலாப் பழத்துக்கு
பறந்து வரும் ஈக்கள் போல
இவன் உதடு திறந்தால்
எங்கிருந்தோ
ஓடிவரும்
எதுகை மோனை!
ஐம்பது ஆண்டுகளாய்
தமிழை தன் முதுகில் சுமந்தது
இந்த வெள்ளை யானை!


அய்யா
பாரதத்தை விட
பெருமை மிக்கது உன்
பாண்டவர் பூமி!
உன் பிரிவால்
பசுமை இழந்தது போ
பாவலர் பூமி!


சீரங்கம் கொடுத்த ஒரு
செண்பகப் பூவை
கால யானை
நசுக்கி விட்டது!

எண்ணத்துப் பூவில்
இதழை வைக்கும்
வண்ணத்துப் பூச்சியை
கால நெருப்பு
பொசுக்கி விட்டது!

ஆயிரம் பாடல்கள்
இசைத்த  -ஒரு
புல்லாங்குழல் -இன்று
தன்
காற்றை விட்டு விட்டது!
தமிழ்
தான் எழுதி வந்த
ஒரு சுந்தரக் காவியத்துக்கு இன்று
முற்றுப்புள்ளி இட்டது!


இவன்

-குங்குமம் வைத்த
ஜி.யூ. போப்பு
இவன் தீண்டியதால் தான்
தமிழ் மேவிற்று பூப்பு!

இவன்

கண்ணாடி போட்ட கம்பன்!
கொம்பினால் காசினி தூக்கிய
கொம்பனுக்கு அன்பன்
உதய சூரியனுக்கும்
இரட்டை இலைக்கும்
ஒரு சேர நண்பன்!எம்.ஜி.ஆர் என்ற
எல். ஐ. ஸி கட்டிடம்
வாலி என்ற
அஸ்திவாரத்தின் மேல் தான் நின்றது!
தமிழ் சினிமாவின்
தங்கத் தேரை
வாலிதான் தன்
தன்
வெற்றிலை நாக்கால்
வடம் பிடித்து
தடம் வடித்து
நடத்திச் சென்றது!

இந்த வாலி
தமிழ்க் கிணற்றில் மூழ்கி
கணக்கே இல்லாமல்
கவியமுதம் இறைத்த
வாளி
வாலி நீ வாழி !மெய்யென்று மேனியை யார் சொன்னது ?

வாலி
உன் கார்பன் மேனி சிதைந்தாலும்
உன் கவிதை மேனி சிதையாது!
பைசா கோபுரம் புதைந்து போனாலும்
உன்
புகழ் புதையாது!

நீ
வழுத்திய
நீலவண்ணன் உலகில்
நீ
நித்திய சூரியாய்  இனி உலவு !
நின்
நினைவில் உலா வரட்டும்
தமிழென்னும் நிலவு!
-சமுத்ரா !


14 comments:

G.M Balasubramaniam said...

பாட்டெழுதிய வாலிக்கு பா எழுதியே சமர்ப்பித்த இரங்கல் அருமை. அதில் நானும் பங்கு கொள்கிறேன்

Yaathoramani.blogspot.com said...

அவர் பாணியிலேயே
அவருக்கு அஞ்சலி செலுத்தியது அருமை
அவரது ஆன்மா சாந்தியடையட்டும்

ஜீவன் சுப்பு said...

மிக அற்புதமான அஞ்சலிக்கவி ...!

புல்லாங்குழல் தன காற்றை விடவில்லை , காற்றோடு கரைந்துவிட்டது .

வானம் உள்ளவரை வாலியின் கானம் காற்றில் கரைந்து நம் உள்ளத்தில் நிறைந்து இருக்கும் ...!

திண்டுக்கல் தனபாலன் said...

அஞ்சலி நன்று...

ஆழ்ந்த இரங்கல்கள்...

கவியாழி said...

உடல் பழுத்த போதும்
உள்ளத்தின்
மூப்பை விலக்கிய இளைஞன்//

மறுக்க முடியாத உண்மைதான்

சேலம் தேவா said...

வாலியை மீண்டும் கண்டது போல இருந்தது.

Anonymous said...

நன்று...

சந்துரு said...

ஆஹா அருமை டிஎம் எஸ்ஸுக்கு வாலி எழுதிய இரங்கற்பா (ஆனந்த விகடன்)படித்து மெய் சிலிர்த்துப் போனேன். வாலி இறந்த போது இவருக்கு யாரால் இப்படி ஒரு இரங்கற்பா எழுதமுடியும் என வருத்தப் ப்ட்டேன். தமிழுக்கு என்றும் பஞ்சமில்லை என்பதை போற்றும் வகையில் சமுத்ராவின் அஞ்சலி பறைசாற்றுகிறது. நன்றி சமுத்ரா

திண்டுக்கல் தனபாலன் said...

visit : http://blogintamil.blogspot.in/2013/07/2.html

வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

அழகான அஞ்சலிக் கவிதை...
வாழ்த்துக்கள்.

இளமதி said...

வணக்கம்!

இன்று உங்களை வலைச்சர அறிமுகத்தில் கண்டு வந்தேன்...

மீண்டும் வாலி மனக்கண்ணில் தோன்றிட, மிகமிக அருமையான அஞ்சலிக் கவிதையினை இங்கு கண்டேன்.

வாழ்த்துக்கள்!

Ragavachari B said...

மிக அற்புதமான அஞ்சலிக்கவி ...!

G.M Balasubramaniam said...

கணினி அனுபவம் எனும் சங்கிலித் தொடரில் நானும் ஒரு கண்ணியாக எழுதுகிறேன். சங்கிலியைத் தொடர உங்களையும் அழைக்கிறேன். எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். என் பதிவு இன்னும் ஓரிரு நாளில் வெளிவரும். நன்றி. இப்படிக்கு ஜீஎம்பி.

அ வேளாங்கண்ணி said...

மிக மிக அற்புதமான கவிதாஞ்சலி!