இந்த வலையில் தேடவும்

Friday, July 5, 2013

கலைடாஸ்கோப் -94

லைடாஸ்கோப் -94 உங்களை வரவேற்கிறது.


நம்முடைய கவலைகள் இருந்தே இருக்கின்றன. பிறருடைய கவலைகளை கொஞ்சம் கவனிப்போம் என்றால் இந்த சீரியல்கள் இருக்கவே இருக்கின்றன. ஒவ்வொருத்தருக்கும் எத்தனை விதம் விதமான வேறுபட்ட கவலைகள்? ராகினியைப் பெண் பார்க்க வருகிறார்கள் என்று கோபியின் கவலை. உத்தரா நிச்சயதார்த்தத்தின் போது காணாமல் போய் விட்டாள் (தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு விட்டாள் !)என்று அண்ணாச்சிக்குக் கவலை. சரோஜாவுக்கு சிங்கப் பெருமாள் கோயில் அருகில் பிளாட்டை கிரயம் பண்ணும் கவலை. தான் இல்லாமல் அண்ணன் கல்யாணம் நடந்து விட்டதே என்று சூர்யாவுக்கு கவலை. அவனவனுக்கு அவனவன் கவலை. கடவுள் அல்லது existence என்று ஒன்று இருந்தால் அது யாருடைய perspective இல் இருந்து கொண்டு பிரபஞ்சத்தை பார்க்கும் என்று யோசித்துப் பாருங்கள். நாம் நம்முடைய perspective இல் இருந்து உலகை, வாழ்க்கையை, மனிதர்களைப் பார்க்கிறோம். நம்முடைய உணர்வுகளின் படி, நம்முடைய கவலைகளின் வழியே பார்க்கிறோம்.ஆனால் நம்மை விட்டு ஒரு சில அடிகள் சுற்றளவுக்கு விலகியதுமே நம்முடைய கவலைகள் மதிப்பிழந்து போய் விடுகின்றன. நம்முடைய ஆதாரக் கவலைகள், மற்றும் இன்னும் மொபைல்  பில் கட்டவில்லையே , கீஸர் ரிப்பேராகி விட்டதே , இன்னும் regression testing முடிக்கவில்லையே போன்ற day -2-day கவலைகள் பற்றி அதோ ரோட்டில் நடக்கிறாரே அவருக்கு என்ன கவலை? எனக்கு அருகில் பஸ்ஸில் அமர்ந்து வரும் அந்த மஞ்சள் சட்டைக் காரருக்கு என்ன கவலை? அவருக்கு அவருக்கே உரித்தான கவலைகள் இருக்கலாம் ...இதில் கடவுள் அல்லது உயிர்த்தன்மை யாருடைய perspective ஐ எடுத்துக் கொள்ளும்? என்னுடையதையா இல்லை மஞ்சள் சட்டைக் காரருடையதையா? இல்லை உறவுகள் ரம்யா கிருஷ்ணனுடையதையா ??

பூமியில் 600 கோடிப் பேர் இருக்கிறார்கள். அதில் யாருடைய perspective -ஐ கடவுள் எடுத்துக் கொள்வார்? பேஷண்டுக்கு ஒரு வியாதி; டாக்டருக்குப் பல வியாதி என்பது போல நோயாளி மற்றும் மருத்துவரின் பார்வைகள் எப்படி வேறுபடுகின்றன என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? டாக்டருக்கு அது next என்றதும் இருமிக் கொண்டு உள்ளே நுழையும் இன்னொரு ஜந்து. பேஷண்டுக்கோ அது வாழ்க்கைப் பிரச்சனை. புலி மானைத் துரத்தும் போது புலிக்கு அது சாப்பாட்டுப் பிரச்சனை. மானுக்கு ஜீவ மரணப் போராட்டம்!

எப்படி இருந்தாலும் நம்முடைய பைப்பில் தண்ணீர் வரவில்லையே, பால் பாக்கெட் ஒரு ரூபாய் விலை ஏறிருச்சே , நேற்று வாங்கிய அண்டர்வேர் டைட்டா இருக்கே போன்ற கவலைகள் அற்பமானவை, அபத்தமானவை என்றே தோன்றுகிறது.ஓஷோ ஜோக் ஒன்று ஞாபகம் வருகிறது.

எல்லாரும் பரபரப்பாக ஓடி வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒருவன் ஒடுபவர்களில் ஒருத்தனை நிறுத்தி, ' என்னப்பா சமாச்சாரம் '? என்று கேட்கிறான்.

'தலைநகரில் தலைகள் சரமாரியாக  வெட்டப்படுகின்றன...' என்றான் ஓடுபவன்..

'அய்யோ கடவுளே, அப்படியானா என் தொப்பி வியாபாரம் என்ன ஆவது' என்றான் இவன்.


- அன்புடன் அந்தரங்கம் போன்ற அழுகாச்சி கடிதங்களை நான் சீரியசாகப் படிப்பதே இல்லை. ஏனென்றால் வீட்டுக் காரரைப் பற்றி இவள் இப்படி கடிதம் எழுத, வீட்டுக் காரர் இவளைப் பற்றி புதிதாக ஆயிரம் சொல்வார்.

ஒரு உதாரணம்:

அன்புள்ள அம்மா...

நான் மிகவும் அழகாக இருப்பேன். கல்லூரியில் படிக்கும்போதே எனக்கு திருமணமாகி விட்டது. சில வீணான வதந்திகள் காரணமாக, முதல் நாளிலிருந்து, என் கணவருக்கு என் மீது சந்தேகம். என்னுடன் பேசவே மாட்டார். இரண்டு வருடங்கள் என் அப்பா வீட்டிலேயே இருந்தேன். பின், ஒரு வழியாக சமரசம் பேசி கணவர் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். வந்தபின் தான் தெரிந்தது அவருக்கும், அவரது அண்ணிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று. இவ்வளவு படித்துப் பெரிய பதவியில் உள்ளவர் இப்படி செய்கிறாரே என்று வேதனைப்படுவேன். இந்நிலையில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயானேன். குழந்தை பிறந்ததிலிருந்து எங்களுக்கு.......

அவர் கடிதம் எழுதினால் 

அன்புள்ள சகோதரி...

பொருத்தம் இல்லாத மனைவியுடன் நான் படும் வேதனைகளை எழுதுகிறேன். அழகாக இருக்கிறோமே என்ற திமிர் அவளை அளவுக்கதிகமாகவே ஆட்டிப் படைக்கிறது. என்னுடன் ஆசையாகப் பேசவே மாட்டாள். பேசினால் விலகிப் போய் விடுவாள். அடிக்கடி ஏதோ ஒரு நொண்டிச் சாக்கை வைத்துக் கொண்டு அப்பா வீட்டுக்கு ஓடி விடுவாள். என் அண்ணி என் பிசினஸில் பார்ட்னர். நாங்கள் இருவரும் ஏதாவது சகஜமாக பிஸ்னஸ் விசயங்களைப் பேசிக் கொண்டிருந்தால் கூட அதை தப்பாகப் பார்க்கும் அருவருப்பான குணம் அவளுக்கு. அழகு மட்டும் இருந்தால் போதும் என்று நான் நினைத்து அவளை மணந்தது எவ்வளவு பெரிய தவறு...! ....

Perspective !!!!!


சரி....சீரியல்களில் எனக்குப் பிடித்த விஷயம் உஜாலாவோ என்னமோ வழங்கும் முந்தானை முடிச்சு sponsored by என்று சொல்லி விட்டு  பின்னர் ஒரு சங்கிலித் தொடர் போல அறிவிப்பது.பெரும்பாலும் ஒரு மலையாளத் தொண்டையில்! 

ஒரு சீரியலில் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை என்று ஒரு ஆள் (ஆண் ) பிழியப் பிழிய அழுது கொண்டிருக்கிறார்.இன்னொரு சீரியலில் ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்து இனிமேல் நீ என் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டாம் என்று சொல்கிறார். இன்னொன்றில் வில்லி ஒருத்தி ஒரு வாலிபனை இருட்டு அறையில் அடைத்து வைத்து கரப்பான் பூச்சி பிரியாணி தின்கக் கொடுக்கிறாள். 

இதெல்லாம் என்ன??!!!


- olx .in இல் எதை எதைத் தான் விற்பது என்று விவஸ்தையே இல்லை போலிருக்கிறது. சமீபத்தில் ஒருவர் தன் ஆயிரம் ரூபாய் நோட்டை விற்பனைக்கு என்று அறிவித்திருக்கிறார். ஆயிரம் ரூபாய் நோட்டு 12,000 ரூபாயாம். என்னடா இது குழப்பம் என்று பார்த்தால் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டின் சீரியல் நம்பர் '786' என்று முடிகிறதாம். இன்றும் இப்படிப் பட்ட  பைத்தியங்கள் இருக்கின்றன!  6 மாதமே ஆன அழகிய மனைவி விற்பனைக்கு என்று ஓ .எல்.எக்ஸ் .இல் வந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை.


- எனக்கு மறதி ரொம்பவே ஜாஸ்தி. சமீபத்தில் கூட ஆபீஸ் ஐ.டி . கார்டை எங்கேயோ  தொலைத்து விட்டேன். இதுவரைக்கும் பத்து பதினைந்து ஏ .டி .எம். கார்டு தொலைத்து விட்டேன். அது ஒரு பெரிய தலைவலி...முதலில் கார்டை ப்ளாக் செய்ய வேண்டும். பின்னர் புதிய கார்டுக்கு அப்ளை செய்ய வேண்டும்.(ரூ .200/-) புது பின் நம்பரை மனப்பாடம் செய்ய வேண்டும்.! இப்படி! இந்த கிரெடிட் கார்டு டெபிட் கார்டு எ.டி .எம். கார்டு தொலைந்து போகாமல் இருக்க என்னிடம் ஒரு ஐடியா உள்ளது. எதிர்கால விஞ்ஞானிகள் யோசிக்கலாம்.  எல்லாக் கார்டுகளையும் ஒரே கார்டாக மாற்றி உடம்பின் ஏதோ ஒரு பாகத்தில் நிரந்தரமாக ஆபரேஷன் செய்து மேலோட்டமாகப் புதைத்து விட வேண்டியது. கடைகளில், ஏ.டி .எம். மெஷின்களில் அதை ரீடர் மூலம் படித்துக் கொள்ள வேண்டியது. எப்படி ஐடியா?

யார் அது அடிக்க வருவது? 

-
ஒரு வாகனம் ரோட்டில் செல்லும் போது ஹாரன் அடிக்க எனக்குத் தெரிந்து இரண்டே இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும்.

ஒன்று முன்னே இருக்கும் வாகனம் நகராமல் ரொம்ப நேரம் இடத்தை அடைத்துக் கொண்டு நின்றிருத்தல்.

இன்னொன்று visibility இல்லாத கார்னர்களில் அல்லது சந்திப்புகளில்...


சாலையை அசந்தர்ப்பமாக கவனமின்றி கடக்கும்  பாத சாரிகளை எச்சரிக்க சில சமயம் மட்டும்...

சில பேர் ஹாரன் என்பதை சைரன் ரேஞ்சுக்கு , ' நான் வர்றேன்...எல்லாரும் மரியாதையா ஒதுங்கிக்கங்க ' என்ற அளவுக்கு உபயோகிக்கிறார்கள்.
தமிழ் நாட்டுடன் ஒப்பிடும் போது பெங்களூருவில் ஹாரன் விஷயத்தில் ஓரளவு maturity தெரிகிறது. குறைந்த பட்சம் சிக்னல்களில் ஹாரன் அடிக்காத அளவு பெங்களூருவில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளார்கள். 


படித்ததில் பிடித்தது:

A developed country is not a place where the poor have cars. It's where the rich use public transportation.

-

லா- வோத் சூவின் கவிதை ஒன்று:


செய்வதோ சக்கரம் இருபத்து நான்கு ஆரங்களுடன் 
உபயோகிப்பதோ அதன் வெற்றிடத்தை 
உருவானது களிமண்ணால் ஒரு பானை 
உபயோகமோ அதன் வெற்றிடத்தில் 
கதவும் ஜன்னல்களும் சுவர்களுமாய் வீடு 
வாழ்வதோ நடுவேயுள்ள வெற்றிடத்தில் 
இல்லாதது எதுவோ அதனை உபயோகி 
இருப்பது எதுவோ அதன் பலனை அனுபவி பிடித்த quote :

“The scientific theory I like best is that the rings of Saturn are composed entirely of lost airline luggage.” – Mark Russell

* இந்த so called காமெடி சானல்களை காலை இரண்டு மணி நேரம் மாலை இரண்டு மணி நேரம் ஒளிபரப்பினால் என்ன என்று நினைக்கிறேன்.24 x  7  யாரோ ஒருவர் ஈரோடு தனபாலோ காரைக்குடி சுகுமாரோ  கால் செய்து கடி ஜோக்கோ விடுகதையோ சொல்லிக் கொண்டிருக்கிறார்.

"வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் எங்கிருந்து வருது??

எல்லாமே முட்டையில் இருந்துதான் வருது...."

காம்பியரிங் செய்பவர்கள்  tv வால்யூம் கம்மி பண்ணுங்க என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

மேலும் போட்ட காமெடி சீன்களையே போட்டு கடுப்படிக்கிறார்கள். ஒரு ஏழெட்டு எனக்குத் தெரிந்து தினமும் அம்பது முறை மாறிமாறி வருகிறது.....

நடுநடுவே அறச்சீற்றத்துடன் சூரியா மற்றும் சிங்க முகம் மாறிமாறி வந்து சின்னக் குழந்தைகளை பயமுறுத்துவது.

*  வடிவேலு போலீஸ் ஆபிசர் பின் பாக்கெட்டில் கை விட்டு, கை மாட்டிக் கொண்டு விடுவது.
* பெயிண்டராக வரும் விஜய் விழுந்து விழுந்து சிரிப்பது.
* வார்டன் வடிவேலுவிடம் பெண்கள் துணிமணி கேட்கும் ஜோக்.
* கவுண்டமணி ஆல் இன் ஆல் அழுகுராஜாவாக சைக்கிள் கடை வைத்திருப்பது.
* மொட்டைத் தலையன் தலையில் வடிவேலு கை வைத்திருத்தல் 
* வடிவேலு குழு அரிசி வாங்கச் சென்று எடைக் கல் முதல் எல்லாவற்றையும் ஆட்டையைப் போடுதல் 
* வடிவேலு மோட்டார் சைக்கிள் ஓட்டி வருபவரை பையனை விழ வைத்து பணம் பறித்தல் 
* பெண் வேடத்தில் வரும் விவேக் கோபால் கோபால் என்று அழுவது 
* துபாய் பில்ட் அப் வடிவேலுவும் பார்த்திபனும் 
* வடிவேலுவும் ரஜினியும் சந்திரமுகி பங்களாவில் நுழைதல் 
* வடிவேலுவிடம் ஒரு பைத்தியம் ஜார்ஜ் புஷ் அட்ரஸ் கேட்டல் 
* வடிவேலு பறந்து வந்து மதன் பாப் மேல் விழுதல் 
 இப்படி......


* ஆங்கிலத்தில் 'இடியம்' (idiom ) என்று ஒன்று  இருப்பதைப் படித்திருப்பீர்கள். ஒரு வாக்கியம் அதன் நேரடி, literal மீனிங் -ஐக் குறிக்காமல் வேறு எதையோ குறிப்பது.வாக்கியத்துக்கும் அதன் அர்த்தத்துக்கும் சில சமயம் 1% சம்பந்தம் கூட இருக்காது.

உதாரணமாக 

Carry the can என்றால் கேனை தூக்கிக் கொண்டு போ என்று பொருள் வராமல் பொறுப்பை எடுத்துக்கொள் என்று வருகிறது.

head and shoulders என்றால் தலையும் தோள்களும் என்று பொருள் கொள்ளாமல் எல்லாவற்றிலும் சிறந்த என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

lose (one 's ) shirt என்றால் நஷ்டம்.

சரி. தமிழில் இது போல நிறைய இல்லை. சங்கப் பாடல்களில் இடியம் கிட்டத்தட்ட ஜீரோ.ஆகு பெயர் என்று ஒன்று இருக்கிறது ஆனால் அது வேறு. எனக்குத் தெரிந்த வகையில் தமிழின் சில இடியம்கள். 

(மாறுமொழிகள் (அ ) திரிபுமொழிகள்  !?)

* மண்டையைப் போட்டுட்டான் 
* கால் கட்டு போடு 
* தண்ணி அடி 
* குட்டையைக் குழப்பாதே 
* மண்டை காஞ்சு போச்சு 
* பிசினஸ் பண்ணி கையை சுட்டுக்கிட்டான் 
* அவன் என் தலையில் மிளகாய் அரைச்சுட்டான் .
* அவன் என் காதில் பூ சுற்றுகிறான் 
*  சோப்பு போடறான் 
* ஐஸ் வைக்கிறான் 
* அவன் பனங்காட்டு நரி 

வேறேதேனும் உங்களுக்குத் தெரிந்தால் பகிரலாம்.

யாரேனும் பொழுது போகாதவர்கள் திருக்குறளில் எங்கேனும் திரிபு மொழிகள் வருகின்றனவா என்று தேடலாம். குறிப்பு: உருவகத்தையும் திரிபு மொழியையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம்,-தழங்கு அருவி
வேய் முற்றி முத்து உதிரும் வெற்ப!-அது அன்றோ
நாய் பெற்ற தெங்கம்பழம்.

இதில் வரும் நாய் பெற்ற தெங்கம்பழம் (தேங்காய்) என்பது idiom அல்ல.well , பழமொழி நானூறு ஒரு சுவாரஸ்யமான நூல். எல்லாப் பாடல்களும் பெரும்பாலும் ஒரு பழமொழியுடன் முடிகின்றன.

இதில் வரும் சில சுவாரஸ்ய பழமொழிகள்:

அறுமோ நாய் நக்கிற்று என்று கடல் 

பழங்கன்று ஏறு ஆதலும் உண்டு 

முன் இன்னா மூத்தோர் வாய்ச் சொல் 

மரத்தின்கீழ் ஆகா மரம் 

ஆயிரம் காக்கைக்கு ஒரு கல் 

தீ நாள் திரு உடையார்க்கு இல் ( :-) ) ...

குருட்டுக் கண்
துஞ்சில் என்? துஞ்சாக்கால் என்?

தட்டாமல் செல்லாது, உளி.

இல்லதற்கு இல்லை, பெயர். (impossible is nothing!)

கணையிலும் கூரியவாம் கண்.

உலக்கைமேல் காக்கை என்பார்.


- செல்வம் இருக்கிறதே, பி .எம்.டபிள்யூ கார் இருக்கிறதே என்று ஆடாதே....வீட்டில் நிமிர்த்தி வைக்கப் பட்ட உலக்கை மேல் ஒரு காக்கை உட்கார்ந்திருக்கிறது பார். அது போலத் தான் அதுவும். ஒரு சின்ன அசைவு !காக்கை பறந்து விடும். அத்தகைய நிலையற்றது செல்வம்.

செல்வத்தின் நிலையாமை பற்றி நம் இலக்கியங்கள் மிகையாகவே புலம்புகின்றன. இது பற்றி மேலும் நேரம் கிடைக்கும் போது அலசலாம்.

என்ன தான் செல்வம் நிலையாதது என்றாலும் , சம்பளம் வந்தவுடன் net banking பேஜ் ஓபன் செய்து மினி ஸ்டேட்மென்ட் பார்ப்பதில் நம்மாள்களுக்கு ஒரு அல்ப திருப்தி!

'முன் இன்னா' சொன்னோம்.. அப்படியானால் 'பின் இன்னா'?

here you go ...

"பின் இன்னா, பேதையார் நட்பு"..(பெண்களுக்கு பேதை என்று ஒரு பெயர் இருப்பது ஏனோ ஞாபகம் வருகிறது)

ஜோக்.

Funny facts about Google users: 50% of people use Google well as a search engine. The rest 50% of them use it to check if their internet is connected~சமுத்ரா 

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அற்பம், அபத்தம் - அவரவர் மனதைப் பொறுத்து...!

கவிதை அருமை...

Nothing is impossible...! உட்பட வித்தியாசமான பழமொழிகள்...

தொடர வாழ்த்துக்கள்...

ராஜி said...

பெரிய கதாகாலச்சேபம் கேட்ட மாதிரி இருக்கு

காமக் கிழத்தன் said...

நிறையவே எழுதுகிறீர்கள். ஆனாலும், எல்லாவற்றையும் சலிப்பில்லாமல் படிக்க முடிகிறது. காரணம், அசத்தல் நடை.

Anonymous said...

sir u did n,t reply to mail why sir?/ i hav asked about mass weight relation u hav wrongly mentioned in aaa unit of mass and weight

prithiv said...

sir chanceless u r rocking , epdi sir ovoru incident ivlo azhga explain panriga great sir

ஹேமா (HVL) said...

எப்போதும் போல அனைத்தும் நன்று!

Anonymous said...

Very good!

Anonymous said...

Very good!

விஜயன் said...

//Funny facts about Google users: 50% of people use Google well as a search engine. The rest 50% of them use it to check if their internet is connected//

rest of 50 ல் நானும் ஒருவன் ! :)

ல வோ த் சூ கவிதை செம, நல்லதொரு பகிர்வு.

நிறைய விசயங்கள் எழுதுறீங்க ! நிறைவாகவும் எழுதுறீங்க வாழ்த்துக்கள் சமுத்ரா :)