இந்த வலையில் தேடவும்

Friday, July 19, 2013

கலைடாஸ்கோப் -96

லைடாஸ்கோப் -96 உங்களை வரவேற்கிறது 


என்னடா வாழைப்பழம் குளித்துக் கொண்டு இருக்கிறதே 
என்று பார்க்கிறீர்களா? மேட்டர் உள்ளே.....

* நீங்கள் இப்போது அணிந்திருக்கும் உடை எங்கே, எப்போது வாங்கியது என்பது நினைவிருக்கிறதா?


* உங்களுடன் பள்ளி அல்லது கல்லூரியில் படித்த எல்லாருடைய பெயரையும் உங்களால் நினைவுகூற முடியுமா?


* யாரேனும் ஐந்து பேருடைய மொபைல் நம்பர்களை போனைப் பார்க்காமல் சொல்ல முடியுமா? 


-நினைவாற்றல் பற்றி கொஞ்சம் பேசலாம்.


நினைவாற்றல்  (memory process  ) என்பது நான்கு நிலைகளை உடையது என்கிறார்கள்.


முதலில் Attention (selection )


- ஒரு விஷயம் மூளையில் பதிய வேண்டும் என்றால் அதற்கு நம் attention மிகவும் அவசியம். நம்மைச் சுற்றி எத்தனையோ விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. நம் புலன்கள் தொடர்ந்து மூளைக்கு இடை விடாமல் அனுப்பும் செய்திகளில் பெரும்பாலானவற்றை மூளை 

தாட்சிண்யம் இன்றி நிராகரித்து விடுகிறது. ஒரு சில விஷயங்களை மட்டுமே , ஒரு 5% விஷயங்களை மட்டுமே பரிசீலிக்கிறது. எனவே ஒரு விஷயம் நினைவில் பதிய அதற்கு மூளையின் ஈடுபாடு மிகவும் அவசியம். ஹ்ம்ம்...ஆர்வமும் அவசியம். ஆர்வம் இல்லை என்றால் என்னதான் நெட்டுருப் போட்டாலும் மூளையில் தங்காது.

-Encoding 


ஒரு விஷயத்தை மூளை எப்படி பதிவு செய்து கொள்கிறது என்று தெளிவாக இதுவரை தெரியவில்லை. பதிவு செய்து கொள்ளப்பட வேண்டிய செய்தி ஒருவித pattern போல மூளையில் பதிவு ஆகிறது என்பது தெரிகிறது. ஆனால் இந்தப் pattern -கள் கம்ப்யூட்டர் மெமரி போல் அல்ல. அவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் refresh செய்ய வேண்டி உள்ளது. கம்ப்யூட்டரில் ஒரு தடவை store செய்து விட்டு பின்னர்  பல வருடங்கள் கழித்து அதை அப்படியே எடுக்கலாம். மூளைக்கு (குறைந்த பட்சம் பத்து நாள் இடைவெளியில்) refresh தேவைப்படுகிறது. மூளை பதிந்து வைத்த pattern களில் அடிக்கடி ரத்தம் பாயாவிட்டால் அவை தேய்ந்து போய் அழிந்து விடுகின்றன. மூளை என்பது ரத்தம் அதிகம் தேவைப்படும் ஒரு உறுப்பு.(blood -hungry ) உடலின் எடையில் வெறும் 2 சதவிகிதமே இருந்தாலும் மூளைக்கு 20% ரத்த சப்ளை தேவைப்படுகிறது. அதிகமாக சிந்தனை செய்தால் நம் உடல் சோர்வடைந்து விடுவது இதனால் தான்.-பொதுவாக ஒரு விஷயத்தை ஒலிக் குறிப்புகளாகவோ ஒளிக் குறிப்புகளாகவோ அல்லது அர்த்தத்தை வைத்தோ மூளை encode செய்கிறது . 'அம்மா இங்கே வா வா' என்றவுடன் நாம் உடனே 'ஆசை முத்தம் தா தா' என்கிறோம்.தன்ன  தன்ன தா நா 

தான  தன்ன தா நா 


 இந்த Association நாம் சாகும் வரை நமக்கு மறக்காது என்று நினைக்கிறேன். இது ஒலி குறிப்பில் செய்த association . ஒரு particular தாளக்கட்டு. கர்நாடக இசையில் பாடல்களை நினைவு வைத்துக் கொள்ள இந்த தாளக்கட்டு மிகவும் உதவுகிறது. கச்சேரியில் பாடகர் செய்த ஆலாபனை (தாளம் இல்லாததால்) நமக்கு நினைவில் இருப்பதில்லை. ஆனால் பாடல் வரிகள் ஓரளவு நினைவில் இருக்கின்றன. அதே போல ஒரு செய்யுளை நம்மால் சுலபமாக நினைவு வைத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் உரைநடை கஷ்டம்.


பழங்காலத்தில் வேதங்களை இந்த முறையில் தான் மனப்பாடம் செய்தார்கள்.


அடுத்து ஒளிக் குறிப்புகள். photographic memory அல்லது short term memory . அம்மா இங்கே வா வா என்ற பாட்டை ஒலியாக நினைவு வைத்துக் கொள்வது சுலபம். அதையே அம்மா வருவது போல, (அடுத்து) வந்து குழந்தையை எடுத்து முத்தம் தருவது போல ஒரு mental image ஐ வைத்தும் நினைவில் கொள்ளலாம். ஒரு பாட்டை ஒரு நோட்டில் எழுதி மனப்பாடம் செய்து பாருங்கள்.
அந்தப் பாட்டை பாடும் போதெல்லாம் அந்த நோட்டில் பாட்டு எழுதப்பட்டிருந்த pattern ஞாபகம் வரும்.


அடுத்து அர்த்தம்..(லாஜிக்)


நம் மொழியில் உள்ள பாடலை மனப்பாடம் செய்வது எளிதா வேறு புரியாத ஒரு மொழியில் உள்ள பாடலை செய்வது எளிதா? 


வாரண ராஜுனி ப்ரோவனு வேகமே 

வச்சினதி வின்னானுரா ராமா 

ஆனையின் வேந்தனை காத்திட வேகமாய் 

வந்ததை அறிவேனய்யா ராமா 

இரண்டில் எதை மனப்பாடம் செய்வது நமக்கு (தமிழர்களுக்கு) சுலபம்?


அ வந்தால் அடுத்து ஆ வரும் அடுத்து இ வரும் என்று உணர்ந்து மனப்பாடம் செய்வதும் இந்த encoding ற்கு வரும்.


அம்மா இங்கே வா வா பாடலில் மூன்று encoding -கும் (ஒலி ஒளி மற்றும் அர்த்தம்) இருப்பதால் அது நமக்கு ஜென்மத்துக்கும் மறக்காது.கடைசியில் storage அண்ட் retrieval ....என்ன தான் மூளை விஷயங்களை சேமித்து வைத்திருந்தாலும் தக்க சமயத்தில் அதை வேண்டும் போது அது எடுத்துத் தர வேண்டும். அதுதான் முக்கியம்.நாக்கு நுனியில் இருக்கிறது மூக்கு நுனியில் இருக்கிறது என்றெல்லாம் சொன்னால் பிரயோஜனம் இல்லை.  உண்மையில் memory என்பது எத்தனை store செய்யப் பட்டிருக்கிறது என்பதல்ல. தேவைப்படும் போது எத்தனை விஷயங்கள் வெளியே வருகின்றன என்பதைப் பொருத்தது.


டெக்னாலஜியின் உபயமும், ஒரே மாதிரியான வேலை செய்வதும் நம் ஞாபக சக்திக்கு அபாயமாகி விட்டன இப்போது. இப்போது ஞாபக சக்தி என்பது ஒரு தேவை என்பது போய் அது ஒரு திறமை என்று ஆகி விட்டது. எதற்கெடுத்தாலும் கம்யூட்டரையும் செல்-போனையும் கொஞ்சமாவது மூளையை உபயோகிப்போம்.

ஞாபக சக்தியை முன்னேற்ற சில டெக்னிக்-கள் சொல்கிறார்கள். அவற்றில் ஒன்றை மற்றும் அலசலாம்.கீழ்க்கண்ட பத்து பொருட்களை நீங்கள் ஷாப் செய்ய விரும்புவதாக வைத்துக் கொள்ளலாம். இவற்றை எப்படி லிஸ்ட் இல்லாமல் நினைவில் வைத்துக் கொள்வது?


-வாழைப்பழம், குளிக்கும் சோப்பு, ஆல் அவுட் லிக்விட், எண்ணெய் , வெங்காயம், நூடுல்ஸ், பால், ஊதுபத்தி, டூத் ப்ரஷ்,  கோதுமை மாவு.


-டெக்னிக் என்ன என்றால் இந்த சம்பந்தம் இல்லாத பத்து பொருட்களுக்கிடையில் நம் கற்பனை சக்தியைப் பயன்படுத்தி ஒரு crazy ஆன தொடர்பை ஏற்படுத்துதல்.


முதலில் வாழைப்பழம். சரி. அடுத்தது குளிக்கும் சோப்பு. இரண்டையும் தொடர்பு படுத்துதல்.


ஒரு காமன் சென்ஸ் -இற்கு அப்பாற்பட்ட தொடர்பு.


ஒரு மெகா சைஸ் வாழைப்பழம் சோப்பு தேய்த்துக் குளித்துக் கொண்டிருப்பதாக நினைக்கலாம்.


அடுத்து சோப்பு + மஸ்கிடோ லிக்விட்.


நீங்கள் சோப்பை முகர்ந்து பார்த்து விட்டு அய்யே இது என்ன ஆல் அவுட் வாசம் என்று அலறுகிறீர்கள்.


அடுத்த அயிட்டம் எண்ணெய் ,,,ஆல் அவுட் டப்பாவில் லிக்விடுக்கு பதில் எண்ணெய் இருக்கிறதாம்.


அடுத்து வெங்காயம்... வெங்காயம் ஒன்று எண்ணெய்யில் ஜாலியாக குளித்துக் கொண்டிருக்கிறதாம்.


அடுத்து நூடுல்ஸ்.... வெங்காயம் குளித்து முடித்து வந்ததும் திரித் திரியாக நூடுல்ஸ் மாதிரி ஆகி விடுகிறதாம்.


அடுத்து பால். அந்த திரிகளை பிழியும் போது பால் வழிகிறதாம்.


அடுத்து ஊதுபத்தி. பாலை முகர்ந்து பார்க்கும் போது ஊதுபத்தி வாசம் அடிக்கிறதாம்.


அடுத்து டூத் ப்ரஷ். ஊதுபத்தியின் மேலே டூத் பேஸ்ட் போட்டு யாரோ பல் விளக்குகிறார்கள்.


கடைசியில் சீக்கிரம் ப்ரஷ் பண்ணிக் கொண்டு வா..கோதுமை தோசை சாப்பிடலாம் என்று யாரோ கூப்பிடுகிறார்களாம்.


இப்படி ஒரு crazy ஆன association ஏற்படுத்திக் கொண்டால் அம்பது அயிட்டம் ஷாப் செய்ய வேண்டும் என்றாலும் மறக்காது....அடுத்த முறை முயற்சிக்கவும்.


அல்லது நம் கற்பனைத் திறத்திற்கு ஏற்ப சின்ன கதையை கூட ஏற்படுத்தி ஞாபகம் வைத்துக் கொள்ளலாம்.


உதாரணம்.


வாழைப்பழம் ஒன்று சோப்பு வாங்க கடைக்கு சென்றதாம். கடையில் இருந்த டீ வியில் கிரிக்கெட் மாட்ச் நடக்கிறது. 250 ரன்னுக்கு ஆல் அவுட்டாம். இதில் துள்ளிக் குதித்த வெங்காயம் ஒன்று  கீழே எண்ணெய் இருப்பது தெரியாமல் வழுக்கி வந்து வாழைப் பழம் மேல் மோதி பழம் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டதாம். யாரோ ஒருவர் அதை கையில் எடுத்து காப்பாற்றினாராம்.குடிக்க பால் எல்லாம் கொடுத்தாராம். ஆனால் அவரோ  மறுநாள் ப்ரஷ் பண்ணி விட்டு சாமிக்கு ஊதுபத்தி காட்டி பழத்தை  நைவேத்தியம் செய்து அதை தானே தின்று விட்டாராம். வாழைப்பழம் வயிற்றின் உள்ளே சென்றதும் அங்கே ஜீரணம் ஆகாமல் ஏற்கனவே இருந்த ஒரு கோதுமை அதைப் பார்த்து வெல்கம் என்றதாம்.உங்களுக்கு ஒரு exercise ...மேலே குறிப்பிட்ட இரண்டு முறைகளிலும் கீழ்க்கண்ட ஷாப்பிங் லிஸ்டை அமையுங்கள் பார்க்கலாம். 
1.டிஸ்யூ பேப்பர், 2. பிஸ்கட்,3. ஷாம்பூ,4. பல்பு, 5.காபிப் பொடி , 6.டூத் பேஸ்ட்,7. தக்காளி, 8.மெழுகுவர்த்தி, 9.கத்திரிக்கோல், 10. குடை 


இன்னொரு டெக்னிக் இருக்கிறது. Peg method அல்லது Mnemonic peg system; நீங்களே படித்துப் பார்த்து அது என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.


விக்கிபீடியா லிங்க்:


http://en.wikipedia.org/wiki/Mnemonic_peg_system


%%%%%%%%%%%%%%%%%%%
ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்களைப் படித்ததுண்டா? 


மிக ஆழமான, புரிதலுக்கு தீவிரமான தத்துவ வேதாந்த விஷயங்களை எளிய கதைகள் மூலமும் உதாரணங்கள் மூலமும் விளக்கியவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

உதாரணத்துக்கு சில:* குரங்குக் குட்டி அங்குமிங்கும் அலையும். தன் தாயை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது.பூனைக் குட்டியோ அப்படிச் செய்வதில்லை. இரக்கப்படும்படி கத்துகிறது. அதன் தாய் அதன் கழுத்தை கவ்வித் தூக்கிக் கொண்டு போகிறது. குரங்குக் குட்டி தனது பிடிப்பை விட்டுவிட்டால் கீழே விழுந்து காயமடையும். ஏனென்றால் அது தன் பலத்தை நம்பியிருக்கிறது. பூனைக் குட்டியோ அது போன்ற ஆபத்துக்கு உள்ளாவதில்லை. ஏனென்றால் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு அதன் தாயே அதைத் தூக்கிக் கொண்டு போகிறது.தன் பலத்தையே நம்பி இருப்பதற்கும் ஈசுவரனை சரண் அடைவதற்கும் உள்ள வித்தியாசமும் இப்படிப்பட்டதுதான். 


*சிக்கி முக்கிக் கல் , பல கோடிக் காலம் தண்ணீரில் மூழ்கிக் கிடந்தாலும் , தன் உள் நெருப்பை ஒருபோதும் இழப்பதில்லை .எப்போது வேண்டுமானாலும் சரி, அதை உரசினால் நெருப்புப் பொறி பறக்கும். அது போலத்தான் திட சித்தமுள்ள பக்தனும். அவன் உலக பாசங்களிடையே 

கலந்திருந்தாலும், அவனுடைய பக்தியும், பிரேமையும் குறைவுபடாது. ஈசுவரனுடைய நாமத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே அவன் தன்னை மறந்தவனாகி விடுகிறான்.

* தேனீயானது , பூவின் உள்ளே இருக்கும் தேனை அடையாமல் இதழ்களுக்கு வெளியே இருக்கும் வரையில் ரீங்காரம் பண்ணிக்கொண்டு பூவையே சுற்றிச் சுற்றி வரும்.ஆனால் பூவுக்குள் நுழைந்து விட்டால், தேனை சத்தம் செய்யாமல் குடிக்கிறது. கொள்கைகளையும் 

சித்தாந்தங்களையும் பற்றி ஒருவன் சண்டையிடும் வரையில் அவன் உண்மை பக்தியாகிய அமிர்தத்தைச் சுவை பார்க்க மாட்டான்.

* அரசன் ஒருவன் தன்னுடைய அரண்மனையிலே வேலை செய்யும் வேலைக்காரனுடைய வீட்டுக்கு விருந்தாளியாகப் போவதற்கு முன்னால் அவ்வேலைக்காரன் தன்னை தகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரிக்க வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய பண்டக சாலையில் இருந்தே வேண்டிய ஆசனங்கள், ஆபரணங்கள் உள்பட பலவற்றை வேலைக்காரன் வீட்டுக்கு அனுப்புகிறான். அதேபோல ஈசுவரன் பக்தனிடம் செல்வதற்கு முன்பு, பிரேமை, பக்தி, சிரத்தை போன்றவற்றை அந்த பக்தனுடைய ஆர்வமற்ற இருதயத்தில் புகும்படி அனுப்பி அருள் புரிகிறான்.
படித்ததில் பிடித்தது 


Question: What did one pessimist say to other pessimist?


Answer: Let us hope for the worst!


$$$$$$$$$$$


இந்த தமிழ் சினிமா ஹீரோக்கள் ஏன் படம் முழுக்கப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கே. டி .வியில் ஏதோ ஒரு படம்...பூவே உனக்காக வோ என்னவோ டைட்டில். அதன் ஹீரோ படம் முழுக்க மாய்ந்து மாய்ந்து பேசித் தள்ளுகிறார். சமீபத்தில் சிங்கம் என்ற திரைப்படத்தின் ஹீரோ கூட பயங்கரமாக பேசித் தள்ளுகிறார் என்று கேள்விப்பட்டேன். நம் ஹீரோக்கள் ஏன் அமெச்சூர்-ஆகவே இருக்கிறார்கள்? நம் டைரக்டர்கள் ஹாலிவுட் படங்கள் பார்ப்பதே இல்லையா? அதில் ஹீரோக்கள் அத்தி பூத்தது போலப் பேசுகிறார்கள். உதடு அசைவது கூடத் தெரிவதில்லை. மிகவும் தேவை, பேசவில்லை என்றால் தலை போய் விடும் என்றால் மட்டுமே திருவாய் மலர்கிறார்கள் .


ஒருவேளை அப்படிப்பட்ட உம்மணா மூஞ்சி ஹீரோக்கள் தமிழ் சினிமாவுக்கு ஸூட் ஆவார்களா தெரியவில்லை. மேலும் , ஹாலிவுட் ஹீரோக்கள் 'காதல்னா என்னன்னா' என்று ஆரம்பித்து ஒரு ஆறு ரீலுக்கு வசனம் பேசுவதையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

*********************************************

இங்கிலீஷில் Anti -proverb என்று இருக்கிறது. காலம் காலமாக புழங்கி வரும் பழமொழிகளை கொஞ்சம்  மாற்றி கிண்டல் செய்வது.


தமிழில் இது மாதிரி முயன்று பார்க்கலாம்.* அரசன் அன்று கொல்வான் ; தெய்வம் கிளைமாக்ஸில் கொள்ளும்.


*  அடிமேல் அடி வைத்தால் அடிப் பிரதட்சிணம் செய்யலாம்.


* கத்தி எடுத்தவன் கத்தியை கீழே வைப்பான் 


* காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்; கரண்ட் உள்ள போதே சார்ஜ் பண்ணிக் கொள்.


* சிறு துரும்பும் பல்லில் சிக்கிக் கொள்ளும் 


* தம்பி உடையான் உயிலுக்கு அஞ்சுவான் 


* பட்ட காலிலே படும். படாத காலிலும் படும்.


* பத்து மிளகு இருந்தால் பொங்கல் சமைக்கலாம்.


* ப
ம் நழுவி பாலில் விழுந்தது. பால் நழுவி தரையில் சிந்தியது.

* மரம் வைத்தவன் கை கழுவிக் கொள்வான்.


* விடிய விடிய ராமாயணம் கேட்டு காலையில் தூங்கிப் போனான்.வாசகர்கள் கீழ்க்கண்ட பழமொழிகளுக்கு  Anti -proverb எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு 


வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.


* வீட்டுக்கு வீடு வாசற்படி


வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.


* முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?


* மனம் இருந்தால் மார்க்கமும் உண்டு.


* பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.


* பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.* அ -அ -அ ஏன் எழுதுவதில்லை என்று தினமும் நூற்றுக்கணக்கில் மெயில்கள் வருகின்றன 


(reality :  ஒரே ஒருத்தர் தான் கேட்டார்)


கலைடாஸ்கோப் -100 எழுதி முடித்து விட்டு தான் அ -அ -அ  என்று சொல்லிவிட்டேன்
மாம்.

சரி. வாசகர்களின் இயற்பியல் ஆர்வத்துக்கு தீனி போட கொஞ்சம்:-


பூமியில் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கத்துக்கு ஒரு ஆழமான சுரங்கம் அமைக்க முடியுமா? அமைத்தால் என்ன ஆகும்? அந்தப்பக்கம் தலை கீழாக எழுந்து வருவோமா?


- இரண்டு விஷயங்கள் அப்படிப்பட்ட சுரங்கத்தை அமைக்க இடைஞ்சலாக இருக்கும் என்கிறது இயற்பியல். ஒன்று பூமியின் அடியில் கொதித்துக் கொண்டிருக்கும் மேக்மா குழம்பு. நாம் தோண்டும் சுரங்கத்தை உடலில் ஏற்படும்  காயத்தை வேகமாக வந்து அடைக்கும் ப்ளாடெலெட் செல்கள் போல வேகமாக வந்து மூடி விடும். 


-இரண்டு காற்றின் அழுத்தம். நாம் ஆழமாகக் குழி தோண்டிக் கொண்டு போகப்போக நமக்கு மேலே இருக்கும் காற்றின் அளவு (உயரம்) அதிகரிக்கிறது. வளிமண்டலத்தில் இருந்து தொடங்கி நம்மை அதிக அளவு காற்று அழுத்தும். காற்றழுத்தம் எக்குத்தப்பாக அதிகரிக்கிறது. பாயில் விதிப்படி (Boyle law ) அழுத்தம் அதிகரித்தால் வெப்பநிலை உயரும். (அழுத்தத்தின் போது காற்று மூலக்கூறுகள் நெருக்கமாகவும் வேகமாகவும் அசைவதால்.)அந்த வெப்பத்தில் சுரங்கம் தோண்டுபவர் டீப் பிரை ஆகி விடுவார். [இதனால் தான் கடல்மட்டம் சூடாகவும் மலை பிரதேசங்கள் குளிர்ச்சியாகவும் உள்ளன. ம. பிரதேசத்தில் நமக்கு மேலே அழுத்தும் காற்று குறைவு.]


சரி... இது இரண்டையும் எப்படியோ சமாளித்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். இன்னொரு பிரச்சினை பூமியின் சுழற்சியால் வருகிறது. பூமியின் அகண்ட மேற்பரப்பில் நாம் இருப்பதால் அது சுழல்வது நமக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. கீழே செல்லச் செல்ல அது நமக்கு தொந்தரவாக இருக்கும்.சரி. எப்படியோ இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் ஒரு சுரங்கம் தோண்டி விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் குதித்தால் என்ன ஆகும்? 42 நிமிடங்களில் அந்தப் பக்கத்தை அடைந்து விடுவோம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஆனால் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே ரிவர்சில் வந்து மீண்டும் விழுந்து ஒரு முடிவில்லாத oscillation -இல் சிக்கிக் கொள்வோம் என்கிறார்கள். ஆனால் இதுவரை மனிதனால் தோண்ட முடிந்த தூரம் 12 km தான். (ரஷ்யா) பூமியின் விட்டம் 12,742 km. அதனுடன் ஒப்பிடும் போது இது ஒரு சின்னக் கீறல் கூட பெறாது!

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல என்று வள்ளுவர் சொன்னது சரியாகத் தான் இருக்கிறது.


சில quotes :


Life is the dash between the birth date and the passed away date. Anonymous

A meeting is an event at which the minutes are kept and the hours are lost

If there is a wrong way to do something, then someone will do it

The man who smiles when things go wrong has thought of someone to blame it onஒரு கவிதை   - விநாயக முருகன் 

மேடயேறிய தலைவர்
மூச்சுக்கு முன்னூறு முறை
முப்பத்துமூன்று முப்பத்துமூன்று
முழங்கிக் கொண்டிருந்தார்
இரவுக்குள் வாங்கி தருவதாக
சத்தியம் கூட செய்தார்
மேடையிலிருந்து கீழிறங்கி
மகளிரணித் தலைவியை பார்த்தவர்
உதவியாளரிடம் கேட்டார்
ஆ‌மா…அம்மணிக்கு என்ன வயசு?
.
..
முப்பத்துமூன்று இருக்கும்


ஓஷோ ஜோக்.

முல்லா நசுருதீன் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு போன் செய்தார்.

"அய்யா, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு ஏழை பெண்ணுக்காக நான் பேசுகிறேன். அவள் விதவை கூட. மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு கூலி வேலை செய்து அனுதினம்  கஷ்டப்படுகிறாள் . வாடகை மூன்று மாதத்துக்கு 3000 ரூபாய் பாக்கி வேறு இருக்கிறது. அதைக் கொடுக்கவில்லை என்றால் அவள் வீட்டைக் காலி செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப் படுவாள். அவளுக்கு வாடகை தரவாவது பண உதவி ஏற்பாடு செய்ய உதவுங்கள்.....தயவு செய்து "என்றார்.

"கண்டிப்பாக அய்யா" என்ற மறுமுனை "சரி, நீங்கள் அந்தப் பெண்ணுக்கு என்ன வேண்டும்?" என்றது.

"நான் தான் அவள் வீட்டின் ஹவுஸ் ஓனர்" என்றார் முல்லா.


சமுத்ரா ..

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கற்பனைத் திறத்திற்கு சொல்லப்பட்ட உதாரணம் அருமை...

தமிழில் Anti -proverb ஹிஹி...

சின்னக் கீறல் !!!

கவிதை --> ஜோக்... ஹா... ஹா...

ராஜி said...

இப்படிலாம் கூட கற்பனைத் திறனை வளர்க்க முடியுமா?!

Dr.Dolittle said...

வைத்தியனுக்கு கொடுப்பதை வடை வாங்கி தின்னு
வெண்ணெய் திரண்டுவர வேணுகோபாலன் மேல் கண்னை வை
வீட்டுக்கு வீடு டிஷ் ஆன்டனா
வாயுள்ள பிள்ளை கடிக்கும்
முழு பூசணிக்காயை வைத்து football ஆடமுடியுமா ?
மனம் இருந்தால் மார்க்கபந்து / மனம் இருந்தால் மார்க்கெட் செல்லலாம்
பலநாள் திருடன் பஸ்ஸிலே பர்சடிப்பான்
பசி வந்தால் பத்து பன் சாப்பிடுவேன்

சமுத்ரா said...

Dr.DoLittle, good Attempt :):)

ஜீவன்சுப்பு said...

* வைத்தியனுக்கு கொடுப்பதை - வறுமையில் இருப்பவனுக்கு கொடு.

* வெண்ணெய் திரண்டுவர , தொன்னை உடைவது போல .

* வீட்டுக்கு வீடு அட்வைஸ் ...!

* வாயுள்ள பிள்ளை குரைக்கும்.

* முழு பூசணிக்காயை ,காம்ப்ளான் மாதிரி அப்டியே சாப்ட முடியுமா ?

* மனம் இருந்தால் – மயக்கமும் உண்டு .

* பலநாள் திருடன் ஒரு நாள் ஒப்பாரி வைப்பன் .

* பசி வந்தால் - பர்கரும் பறந்து போகும் .

Saravanakumar Karunanithi said...

1.வைத்தியனுக்கு கொடுப்பதை, மருந்து கடைகாரருக்கும் கொடு.
2.வெண்ணெய் திரண்டுவர தாழி நிறையும்.
3.வீட்டுக்கு வீடு தாழ்பாள்.
4.வாயுள்ள பிள்ளை வம்பில் சிக்கும்.
5.முழு பூசணிக்காய் சாம்பாரில் மறையும்.
6.மனம் இருந்தால் பயமும் உண்டு.
7.பலநாள் திருடன் பல நாள் திருடுவான்.
8.பசி வந்தால் உடல் சோர்ந்து விடும்.


ஹேமா (HVL) said...

1.வைத்தியனுக்குக் கொடுப்பதை வீட்டை விற்றுக் கொடு
2.வெண்ணை திரண்டு வர, கடைவதை நிறுத்து, பிரட்டில் தடவு
3.வீட்டுக்கு வீடு பிள்ளை புராணம்
4.வாயுள்ள பிள்ளை சட்டம் பேசும்
5.முழு பூசணிக்காயை தலையில் போட்டு உடை
6.மனம் இருந்தால் கனம் இழக்கலாம்
7.பலநாள் திருடன் திருட்டில் வல்லவன்
8.பசி வந்தால் பத்து வெள்ளி பீட்சா