இந்த வலையில் தேடவும்

Wednesday, November 7, 2012

பேய் இருக்கிறதா? ...


 பேயை விட பேய் வரும் அறிகுறிகள் தான் திகிலானவை -யாரோ 

ஒரு சிறந்த திரைப்படம் எப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? படம் முடிவை நெருங்கும் சில நிமிடங்களுக்கு முன்பே ஆடியன்ஸ் முடிவை ஒருவாறு ஊகித்து படம் விட்டதும் கிளம்புவதற்கு வசதியாக கழற்றி வைத்த ஷூவை அணிந்து கொள்ள , பாப் கார்ன் -ஐ  அவசரமாக காலி செய்ய வைக்கும் படி இருக்க வேண்டுமா?இல்லை படம் முடிந்து பெயர் போட்டதும் ஒ படம் முடிந்து விட்டதா என்ற சர்ப்ரைஸ் தரவேண்டுமா?சமீபத்தில் பார்த்த 'பிட்சா' படம் அந்த இரண்டாவது வகை சர்ப்ரைசை தந்தது. ..


பேய் பிசாசு அமானுஷ்யம் என்று எழுதப்படும் நாவல்களில் அல்லது எடுக்கப்படும் திரைப்படங்களில் கண்டிப்பாக ஏதேனும் ஒரு சமூக விரோத சமாச்சாரம் Default ஆக இருந்தே தீரும். சுஜாதா , ராஜேஷ் குமார் , இந்திரா சௌந்தர ராஜன் யாரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ..பேய் ஆவி பிசாசு என்று சூடு பிடிக்கும் கதைக்குள், பின் புலத்தில்  மெயின் மோடிவ் -ஆக வைரம் கடத்துவதோ போதைப் பொருளோ சிலை கடத்தலோ கொலையோ கொள்ளையோ இருக்கும்.அதாவது விஷயம் பண்ணுவது சாமி அல்ல ஆசாமி தான் என்று தெரிய வரும்.பிட்சா திரைப்படமும் இதற்கு விதி விலக்கு  இல்லை என்று தோன்றுகிறது.


காலம் முன்னேற முன்னேற பேய் பிசாசு சாமி விஷயங்களை நாவல்களிலும் திரைப்படங்களிலும் மிகவும் சூசகமாக மக்கள்  நம்பும்படி கையாள வேண்டி இருக்கிறது....பேயை நேரடியாகக் காட்டினால் அது அன் ரியலிஸ்டிக் ஆகி விடும்! சில பேர் பேய்ப்படம் என்றால் பேயை காட்டவே கூடாது என்று கூட வரையறை சொல்வார்கள்.ஈவில் டெத் போல க்ளோஸ் அப்பில் பேயைக் காட்டினால் இன்று அது காமெடி பீஸ் ஆகி விடும். காஞ்சனா கூட பேய்க்காக ஓடாமல் காமெடிக்காக ஓடியது என்று நினைக்கிறேன்.

பிட்ஸாவில் கூட நிறைய இடங்களில் ஆடியன்ஸ் சிரிக்கிறார்கள்! நம் மக்களுக்கு குளிர் விட்டுப் போய்விட்டது என்று நினைக்கிறேன்.அல்லது  They have become matured...பேய் என்பது இப்போது காமெடி சப்ஜெக்ட் ஆகி விட்டது....இந்தத் திரைப்படத்தில் ஹீரோயும் ஹீரோயினும் ஹீரோவின் முதலாளியின் பேய் வீக்னசை காமெடி செய்கிறார்கள்!மேலும் நம் மக்களை கன்வின்ஸ் செய்வதும் கஷ்டம். பேயை காட்டவில்லை என்றால் 'என்னடா மச்சா ஒரு இடத்துல கூட பேயே வரலை,,,காசு வேஸ்ட்' என்பார்கள்.. (அதான் ஒரு சீனில் ஹீரோயின் மேக்கப் இல்லாமல் வந்தார்களே அது போதாதா என்ற ஜோக் Apart !)பேயை சும்மா சும்மா காட்டினால் பயம் போய் விடும். படத்தில் வடிவேலு அல்லது காமெடியனின் ரோலை பேயே செய்து விடும்....எனவே மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்து ஓரளவு நம்பும்படியான பேய்க்கதையை தந்ததற்கு Pizza இயக்குனருக்குப் பாராட்டுகள்...

அறிவியல் ரீதியாக இந்த பேய் சமாசாரத்தை அணுகுபவர்கள் மிகக் குறைவு....முதலில் ஒன்று! மனிதன் இறந்து மீண்டும் பிறக்கும் இடைவெளிக்குள் இருக்கும் நிலையை மட்டுமே இப்போது நாம் பேய் பிசாசு அல்லது ஆவி whatever என்று வரையறை செய்வோம்.
இதைத்தவிர தனியாக பேய் என்று ஒன்று இல்லை...அல்லது உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் பேய் என்ற ஒன்று தேவையில்லை என்று இயற்கை நினைத்திருக்கலாம். கறுப்பு சாரி உடுத்தி காலை எழுந்து கண்ணாடியின் முன் தலை சீவும் மனைவியை பார்க்கும் பேறு உங்களுக்குக் கிடைத்திருந்தால் ஏன் இயற்கை பரிணாம வளர்ச்சியில் பேயை தனியாக சேர்க்கவில்லை என்று விளங்கும் . இதன் மூலம் பெண்கள் பேய் என்று சொல்ல வரவில்லை. நாம் எல்லாருமே சில சமயங்களில் பேய் மாதிரிதான் காட்சி அளிப்போம்! cant help !

மனிதன் இறந்த பின் நீடிக்கும் மர்மம் ,பல்வேறு கற்பனைகளுக்கு இடமளிக்கிறது.இறந்தவனுக்கு இதை செய் அதை செய் என்று சொல்லும்  பணத்தாசை பிடித்தவர்களை இந்த மர்மம் தான் வாழ வைக்கிறது. 'உன் அப்பா உன்னைக் கொன்று விடுவார்' என்று சொன்னால் அப்பா உயிருடன் இருந்தால் எந்த மகனும் நம்ப மாட்டான்! உன் அப்பாவின் ஆவியால் உனக்கு ஆபத்து! ஆயிரம் ரூபாய் செலவு செய்து பரிகாரம் செய் என்றால் நூறில் தொண்ணூறு பேர் எதற்கு வம்பு என்று செய்து விடுவார்கள்.பேய் பிசாசு சமாச்சாரங்களையும் இந்த மர்மம் தான் இதுவரை ஏதோ ஒரு உருவில் நம் நாவல்களிலும் டி .வியிலும் திரைப்படங்களிலும் வாழ வைக்கிறது!


அறிவியல் பேயை நம்புவதில்லை . பார்க்க முடிந்த உணர முடிந்த புலன்களுக்கோ கருவிகளுக்கோ தட்டுப்படக் கூடிய விஷயங்களை மட்டுமே அறிவியல் நம்புகிறது.பேய் வந்தால் மீட்டரின் முள் அசைவது கட்டுக் கதை தான்.உடல் அழிந்ததும் எல்லாம் பூஜ்ஜியம் என்று சொல்லி கணக்கை முடித்து விடுகிறது அறிவியல்.உடலின் கார்பன் இரும்பு போன்ற தனிமங்கள் மெல்ல மெல்ல Recycle ஆகி பிரபஞ்சத்தில் வேறுவிதத்தில் உலவும் அவ்வளவே. திரைப்படங்களில் காட்டுவது போல செத்தபின்  ஆசாமி மீண்டும் அப்படியே உயிர் பெற்று வருவது வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதிக்கு (Second law of thermodynamics)எதிரானது. உயிருடன் இருப்பது என்பது ஒரு வித Orderly state! ஆள் செத்ததும் உடல் அவசரமாக Disorderly state ஐ நோக்கி நகர ஆரம்பிக்கிறது. பார்யா பிப்யதி தஸ்மின் காயே என்று பஜகோவிந்தம் சொல்வது போல மனைவியே பயப்படும் அளவு உடல் மிக வேகமாக அழுகத் தொடங்குகிறது; கிருமிகள் எங்கிருந்தோ ஆள் செத்து  விட்டான் என்று தெரிந்து கொண்டு அட்டாக் செய்ய ஆரம்பிக்கின்றன  ..எனவே இத்தகைய ஒழுங்கு குலைந்த நிலையில் இருந்து மீண்டும் ஆள் புதுப் பொலிவோடு திரும்பி வருவது கனவில் மட்டுமே நடக்கும்.அல்லது அப்படி நடப்பதற்கு போதுமான வெளிப்புற ஆற்றலை இயற்கை செலவு செய்ய வேண்டி இருக்கும். இயற்கை சில சமயங்களில் ரொம்பவே கஞ்சம்!
எனவே மாண்டவர் மீள்வதில்லை (பேயாகக் கூட!)
 
ஆனால் ஆன்மிகம் உடலின் வெளிப்புற அடுக்கு மட்டுமே அழிகிறது என்கிறது. ஆள் பூஜ்ஜியம் என்றால் அவன் செத்ததும் -1,-2,-3...
என்று உல்டாவாக இன்னொரு வாழ்க்கை ஆரம்பிக்கிறது என்கிறது. புனரபி ஜனனம்!  முற்றும் ஞானம் அடைந்த யோகிகள் மட்டுமே தமது ஏழு உடம்புகளையும் துறந்து விட்டு பிரபஞ்சத்தில் கலக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.நம்மைப் போன்ற பாவிகள் ஆசா பாசங்களுக்கு அடிமையாகி நள்ளிரவில் பிட்டுப் படம் பார்த்தவர்கள் எல்லாம் அவ்வளவு சீக்கிரம்
ஏழு உடலையும் உருவிப் போட்டு விட முடியாது. சாகும் போது வேறு வழி இன்றி நம் மேற்புற அடுக்கு பிரிகிறது. அப்புறம் சூக்சும சரீரம் சாகாமல் அப்படியே இருக்கிறதாம்!

இந்த சூக்சும சரீரம் பெரும்பாலானவர்களுக்கு,இயற்கையாக இறந்தவர்களுக்கு  relaxed ஆக , unconscious ஆக இருப்பதால் அதை பிறர் உணர முடிவதில்லை.அவை விழித்துக் கொள்ளும் முன்பே இன்னொரு கருப்பையில் புகுந்து விடலாம்!ஆனால் சாகவே இஷ்டம் இல்லாமல் செத்தவர்கள் , ஆக்சிடெண்டில் போனவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள் இவர்களின் சூக்சும சரீரம் மிகவும் துடிப்போடு மற்றொரு அல்லது தனது  பழைய பௌதீக சரீரத்தைப் பெற உயிர்ப்போடு இருக்கலாம். அந்த சமயங்களி
ல் அவர்களது இருப்பை சிலரால் (எல்லோராலும் அல்ல) (தியான நிலையில் உள்ளவர்களால் ) உணர முடியும்...உண்மையில் எந்த அளவு நாம் விழிப்பின்றி இருக்கிறோமோ அந்த அளவு நாம் ஆவிகளை உணரும் வாய்ப்பு குறைவு என்கிறார் ஓஷோ. எனவே பிட்சா விற்பவருக்கோ குடிகாரருக்கோ ஆவி கண்ணில் தெரிவது ரொம்பவே அபூர்வம். மேலும் ஆவி பேய் என்பதெல்லாம் Subjective experiences!கனவு போல பிரத்யேகமானது. என் கண்ணுக்கு ஆவி தெரிந்தால் அது உங்களுக்கும் தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை....

ஒருவரை பேய் அல்லது ஆவி பிடிப்பது உண்மை என்கிறார் ஓஷோ. மிகுந்த பயந்த ஸ்வாபம் உள்ள ஒருவர் கடுமையான பயத்தில் இருக்கும் போது அவரது உயிர் மிகவும் சுருங்கிப் போய் விடுகிறது. அப்போது அருகே இருக்கும் சரீர வேட்கை மிகுந்த ஆத்மாக்கள் அந்த வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே புகுந்து விட முடியும் என்கிறார். மேலும் விவரங்களுக்கு ஓஷோவின் Dimensions beyond the known படித்துப் பார்க்கவும்.


எனவே பேய் இருக்கிறதா? என்று கேட்டால் ஒரு விதத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். ரெம்யா நம்பீசன் சொல்வது போல அது அவரவர் அனுபவங்களைப் பொருத்தது.பேயும் கடவுள் போன்றது தான் ..நம் அனுபவத்தில் உணரப்படும் வரை அது கற்பனை தான்..



[N.B:


படத்தில் வரும் ஹீரோவுக்கு நிகழ்வது போல நாம் பிட்சா டெலிவரி செய்யப் போன இடத்தில் ஒரு வீட்டினுள் இருட்டில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வோம்? ப்ளாக்கில் ரொம்ப matured  ஆக பேயாவது பிசாசாவது என்று கோவை சரளா மாதிரி வசனம் பேசும் நாம் உண்மையில் ஆடித் தான் போவோம்! 

தனிமையும் இருட்டும் நம்மை எவ்வளவு பயப்படுத்தி வைத்திருக்கின்றன? எத்தனை வயதானாலும் இவை நம்மை ஆட்டிப் படைக்கின்றன ! உண்மையில் இவை இரண்டும் அழகான விஷயங்கள்! தியானத்துக்கு உதவக் கூடிய விஷயங்கள்...ஆனால் இவை இரண்டையும் நாம் எவ்வளவு அசிங்கமாக மாற்றி வைத்திருக்கிறோம்! உண்மையில் தனிமையிலும் இருட்டிலும் ஏற்படும் பயம் நம்மைப் பற்றிய பயம் தான் என்கிறார் ஓஷோ.பேய் என்பது ஒரு சாக்கு தான். நம்மை நாமே நேருக்கு நேர் பார்க்க பயப்படுகிறோம் அவ்வளவு தான். பகலிலும் பிறரது கம்பெனி- யிலும் நாம் நம்மையே avoid செய்கிறோம்..பிட்சா டெலிவரி செய்யப் போகும் இடத்தில் உள்ளே அடைபட்டு கரண்டும் போய்  விட்டால் நம்மைத் தவிர யாருமே இல்லை. எல்லையில்லாத நான் !அந்த 'நான்' ஐ நாம் எந்தவித மறுப்பும் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.காதலி இல்லை..நண்பர்கள் இல்லை. டி . வி இல்லை.. தன்னைப் பற்றிய பயமே மனிதனை கொன்று விடுகிறது..

தனிமையை இருட்டை பயம் இன்றி எதிர் கொள்ளும் கலையை நாம் நம் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். இருட்டை நண்பனாக்கிக் கொள்வது எப்படி என்று கற்றுத் தர வேண்டும்.. இருட்டில் போகாதே, பூச்சாண்டி தூக்கிட்டுப் போயிடுவான் என்று சொல்லி வளர்க்கக் கூடாது. அம்மா வயிற்றில் நீ இருட்டில் தான் இருந்தாய்...இருட்டு உனக்கு இன்னொரு தாய்...ஆகவே பயப்படாமல் இருட்டில் போய் வா என்று சொல்ல வேண்டும். வீட்டில் யாரும் இல்லாத தனிமையில் தனக்குள்ளே உற்றுப் பார்க்கும் தியானத்தை குழந்தைக்கு நாம் தான் சொல்லித் தர வேண்டும்...

அப்படி வளர்த்தால் தான் யாரும் இல்லாத வீட்டில் கரண்ட் போய் விட்டால் கூட கொண்டாட்டத்துடன்  தியானத்தில் மூழ்கும் முதிர்ச்சியான மனிதனை நம்மால் உருவாக்க முடியும்.]


சமுத்ரா

16 comments:

அமுதா கிருஷ்ணா said...

இப்ப பசங்க எல்லாம் தெளிவா இருக்குதுங்க. இந்த படத்திற்கு என் தம்பி மகன்(வயது 6)வந்தான்.பேய் வரும் முன் வரும் ஃபோன் காலர் டியூனிற்கு சிரித்து சிரித்து பேயை பார்த்து பயப்படவே இல்லை. காமெடி சீனாக்கிட்டான்.

adhvaithan said...

PRAMATHAM :)

Vijay Periasamy said...

பயம் மனிதனின் பிறவி குணம் .
நல்ல பதிவு !

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பயம் என்ற குணம் கொஞ்சமாவது இருக்கவேண்டும் என்பது என் கருத்து.

G.M Balasubramaniam said...


மனிதனுக்குக் கற்பனை என்று ஒன்று இருக்கும்வரை பேய், பிசாசு பூதம் ,கடவுள் என்று எல்லாமே இருக்கும். யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

திண்டுக்கல் தனபாலன் said...

தவறு செய்ய பயப்பட வேண்டும்... அந்தப் பயம் எல்லோருக்கும் இருந்தால் நல்லது...

Anonymous said...

Excellent post
by
balaji

Aba said...

இன்னொரு அற்புதமான அலசல். தற்போதைக்கு நான் அறிவியலின் பக்கம் இருந்தாலும், ஓஷோ படித்துப் பார்த்துவிட்டுத்தான் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_13.html) சென்று பார்க்கவும்... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Caricaturist Sugumarje said...

//கொண்டாட்டத்துடன் தியானத்தில் மூழ்கும் முதிர்ச்சியான மனிதனை// மிகச்சரியான வார்த்தைகள்

இராஜராஜேஸ்வரி said...

தனிமையை இருட்டை பயம் இன்றி எதிர் கொள்ளும் கலையை நாம் நம் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். இருட்டை நண்பனாக்கிக் கொள்வது எப்படி என்று கற்றுத் தர வேண்டும்.

பயனுள்ள யோசனை ...


தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துகள்..

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு பகிர்வு! வாழ்த்துக்கள்!

Unknown said...

Nice cmnt grandpa

Unknown said...

Nice cmnt grandpa

prashant said...
This comment has been removed by the author.