இந்த வலையில் தேடவும்

Tuesday, November 13, 2012

கலைடாஸ்கோப்-76

லைடாஸ்கோப்-76 உங்களை வரவேற்கிறது 

*சன் டி வி யில் தோன்றி டைலி சமையல் செய்து கொண்டிருந்த செப் . ஜேக்கப்  மாரடைப்பால் இறந்து விட்டதாகப் படித்தேன்.Irony என்ன என்றால் தன் நிகழ்ச்சியில் ஜேக்கப், எப்போதும், இதை சாப்பிடாதீங்க, அதை அளவா சாப்பிடுங்க , இதை சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வந்திடும் ,இது இதயத்துக்கு ஆபத்து என்று அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருப்பார். அப்படியென்றால் அவர் சொல்வதை அவரே கடைபிடிக்கவில்லை என்று தோன்றுகிறது. இல்லை, என்னதான் டயட்டில் இருந்து காய்கறி இலைதழை எல்லாம் சாப்பிட்டுக் கொண்டு அருகம்புல் ஜூஸ் குடித்துக் கொண்டு உயிர் வாழ்ந்திருந்தாலும் மரணத்தை நிர்ணயிப்பதில் விதி வலியது என்று தோன்றுகிறது ..இதைப் பாருங்க இது தான் கேரட் சலாட்...இதை அடிக்கடி சாப்பிட்டால் நூறுவயது வரை ஹெல்தியா வாழலாம் என்று ஜேக்கப் கூறும் போது விதி மெல்ல புன்னகை புரிந்திருக்க வேண்டும்!*FLIPKART .COM என்ற ஆன்லைன் ஷாப்பிங் சைட் வெறும் புத்தகங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. நான் எல்லா புக்கும் அதில்தான் வாங்குகிறேன்.[flipkart 'பேக்கிங்' இற்குப் பெயர் போனது! பேக்கிங் பிரிக்கவே அரை நாள் வேண்டும்!] இப்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வாட்ச், காலணிகள்,டி வி , மொபைல், துணிமணி, லேப்டாப், கேமெரா, ஸ்டேஷனரி, பேக் , பொம்மைகள் என்று என்ன எல்லாமோ வந்து விட்டது.எதிர்காலத்தில் என்ன வெல்லாம் ஆன்லைனில் கிடைக்குமோ தெரியவில்லை. பயமாக இருக்கிறது!குழந்தைகள் கூட ஆன்லைனில் கிடைத்து விடும் போலிருக்கிறது.  ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கு குழந்தை பார்சல் வந்து விடும்.ஹலோ இது நாங்கள் ஆர்டர் செய்த குழந்தை இல்லை கலர் கொஞ்சம் கம்மியா இருக்கு என்று திருப்பிக் கூட அனுப்புவார்கள்!

*விளம்பரம் ஒன்றில் "வாழ்வின் சின்னச் சின்ன சந்தோஷங்களை எங்கள் வைரங்களுடன் கொண்டாடுங்கள்' என்று போட்டிருந்தது. அப்படியானால் அது 'சின்ன' சந்தோஷம் இல்லை பாஸ்! காஸ்ட்லியான சந்தோஷம்! மகிழ்ச்சியின் விலை எவ்வளவு என்பது ஒரே புதிராக இருக்கிறது.அந்தக் காலத்தில் மனைவிக்கு வாங்கிப் போகும் ஐந்து ரூபாய் மல்லிகைப் பூவில் மகிழ்ச்சி இருந்தது. இப்போது பிறந்த நாளைக்குப் பரிசாக அளிக்கும் லட்சக்கணக்கில் மதிப்புள்ள வைரத்தில் இருக்கிறது போலிருக்கிறது.சரி அப்படியே வைரம் வந்தாலும் எத்தனை நாள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? முதல் கொஞ்ச நாள் கல்யாணத்துக்கெல்லாம் போட்டுக் கொண்டு போய் சீன் காட்டலாம். பிறகு நம் சந்தோஷம் இந்த வைரத்தில் இல்லை என்று தெரிந்ததும் வாழ்க்கை மீண்டும் அர்த்தமற்றதாக மாறி போரடிக்க ஆரம்பித்து விடும்....எனவே கணவன்மார்களுக்கு ஒரு வேண்டுகோள்: 

விளம்பரங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம்... மகிழ்ச்சி என்பது தொடுவானம் மாதிரி ..அதை நெருங்க நெருங்க அது தூரம் போய்க் கொண்டே இருக்கும்...

*எனக்குப் பிடித்த இ -மெயில்:

புதிய அபார்ட்மென்ட் ஒன்றுக்கு கணவன் மனைவி குடி வருகிறார்கள்... மறுநாள் காலை கண்ணாடி ஜன்னல் வழியே பக்கத்து பிளாட்-ஐ பார்க்கும் மனைவி ,கணவனிடம் 'அந்த பிளாட்டில் காயப்போட்டிருக்கும் துணிகளைப் பாருங்கள்..அந்த பெண்ணுக்கு சரியாக துவைக்கவே வராது போலிருக்கிறது பாருங்கள் எவ்வளவு அழுக்கு ' என்கிறாள்..இதே போல் மறுநாளும் சொல்கிறாள்...இப்படியே ஒருவாரம் போகிறது ..ஒவ்வொரு நாளும் ஜன்னலைப் பார்க்கும் மனைவி , இதே போல துவைத்தது சரியில்லை டிடர்ஜென்ட் அல்லது சோப்பு சரியில்லை என்று ஏதேனும் சொல்கிறாள். சில நாட்கள் கழித்து ஒருநாள் காலையில் ஜன்னலைப் பார்க்கும் போது பக்கத்து பிளாட்டில் வெள்ளை வெளேர் என்று துணி ஒன்று காயப் போட்டிருப்பதை பார்க்கிறாள்..கணவனைக் கூட்டி வந்து காட்டி , 'என்னங்க பாருங்க பக்கத்து பிளாட் பெண்மணி துவைக்க கற்றுக் கொண்டு விட்டாள் போலிருக்கிறது... இல்லை அந்த மோசமான டிடர்ஜென்ட்-ஐ மாற்றி இருக்க வேண்டும்'  என்கிறாள்...அதற்கு கணவன் "..........இரண்டும் இல்லை ..இன்று காலை சீக்கிரம் எழுந்து நான் நம் வீட்டு ஜன்னலின் கண்ணாடியை சுத்தம் செய்தேன்' என்கிறான்.

நீதி: மற்றவர்களை குறை சொல்லும்முன் நமது ஜன்னல் சுத்தமாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்..

*போன வாரம் ஆபீசில் டீம் லஞ்ச் -இற்கு e -inn கூட்டிப் போயிருந்தார்கள்.. .பபே  சிஸ்டம்....ஒரு ஆளுக்கு நானூறு ரூபாய்...ஸ்டார்டர் -ரில் இருந்து டெசர்ட் -வரை வித விதமான கலர் கலரனான பலகாரங்கள் ஐஸ் கிரீம்கள்!.. பார்த்ததுமே வயிறு நிறைந்து விட்டது...நான் ஒரு பன் , கர்ட் ரைஸ், சில பழங்கள் இவற்றை தட்டில் எடுத்து வந்ததும் எல்லாரும் ஒரு மாதிரி பார்த்தார்கள்!!டீம் லஞ்ச் என்றாலே சில பேர் காலையில் இருந்து பட்டினியாக இருக்கிறார்கள் அப்போதுதான் வயிறுமுட்ட சாப்பிட முடியுமாம்! 

!பிறந்ததில் இருந்து எத்தனை விதமான லஞ்ச் -களை நாம் சாப்பிட்டிருப்போம்? சில சமயம் வெறும் வாழைப்பழம் சாப்பிட்டு லஞ்சை முடித்திருப்போம்! சில சமயம் சிம்பிளான ரசம் சாதம்! சில சமயங்களில் கல்யாண சாப்பாடு! சில சமயம் ஏதோ வடமாநிலத்தில் நமக்கு ஒத்துக் கொள்ளாத ரொட்டி! சில சமயம் செரிக்காத கேரளா அரிசி! சில சமயம் கையேந்தி பவன் பிரியாணி! சில சமயம் ரயிலில் லெமன் ரைஸ்!சில சமயம் நாமே சமைத்த மாகி! சில சமயம் ஏதோ ஒரு ரிசார்ட்டில் ராஜ விருந்து! சில சமயம் பட்டினி! சில சமயம் ஜூஸ்! சில சமயம் ஆஸ்பிடல் கஞ்சி !சில நேரங்களில் பிஸ்கட்!சில நாட்களில் பீட்சா! சில நாள் ஆந்திரா மெஸ்! சில நாள் மாமி மெஸ்!சில சமயம் (கல்யாணம் ஆன புதிதில்) மனைவியைப் பார்த்து 'இன்னிக்கி நீதான் லஞ்ச் !' என்று பேசும் சுகமான அபத்தங்கள்! வாழ்க்கை எத்தனை விதமான லஞ்ச் களை நமக்கு அளித்துள்ளது!  வாழ்க்கையின் versatility - யை அனுபவிக்க இதுவரை நாம் சாப்பிட்ட லஞ்ச்-களை நினைத்துக் கொண்டாலே போதும்!

*'உழைப்பு ஓரிடம், பலன் ஓரிடம்' என்று சொல்வார்களே..அதற்கு உதாரணமாக ஒரு பாடல்...

பாடல் : ஹரி நாராயண, இயற்றியவர்: புரந்தர தாசர்.

மனமே, நாராயண நாமத்தை ஸ்மரணை செய்!

நாராயண நாமத்தின் விதையை உலகில் நாரதர் விதைத்தார் .
துருவன் என்பவனால் அதன் ஓடு உடைந்தது.
பிரகலாதனால் அது முளை விட்டது.
ருக்குமாங்கதன் என்பவனால் அது மொக்கானது
பிதாமகர் பீஷ்மரால் அது மலர்ந்தது.
திரௌபதியால் அது காயானது.
கஜேந்திரன் என்ற யானையால் பழமானது
சுக முனிவரால் அது பழுத்த பழமாகக் கனிந்தது.
...

...
சரி.. இப்படிக் கனிந்த பழத்தை அப்படியே சாப்பிட்டு ஜூஸ் குடிக்கும் பாக்கியம் யாருக்கு வாய்த்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?Any guess ?? எப்போதும் இறைவனையே நினைத்து வழிபட்டுக் கொண்டிருந்த பக்தர் ஒருவருக்கு என்று தானே?அதுதான் இல்லை. சில விஷயங்களில் பகவான் crazy யாக நடந்து கொள்கிறார்!அந்தப் பழத்தை சுவைத்தவன் அஜாமிளன் என்னும் ஒருவன்.பரம நாத்திகன்.பகவானின் நாமம் எங்கே தன் காதுகளில் விழுந்து விடுமோ என்று காதுகளில் மணியைக் கட்டிக் கொண்டு அலைந்தவன்.....அப்படி இருந்தவன் தன் சாவு நேரத்தில் தப்பித்தவறி ஹரிநாமம் கேட்டுவிட ,அவனுக்கு வைகுண்டப்பதவி வாய்க்கிறது ...

இரவும் பகலும் பாடுபட்டு வெயில் மழை என்று பாராமல் தங்கள் வியர்வை சிந்தி கட்டிடம் கட்டுபவர்கள் இருக்க பிறகு அங்கே ஜாலியாக ஏ .சி. போட்டுக் கொண்டு குடி வருவார்களே அது போல!அதானே! காசு கொடுத்து விட்டால் ஒரு கட்டிடம் ஒருவருக்கு எப்படி சொந்தமாகும்! நாமெல்லாம் ஒரு விதத்தில் அஜாமிளன்கள் தான்!இந்த சோஷியல் சிஸ்டமே சரியில்லை போங்கள் ...

 *

 நாம் 'புக்' செய்த பஸ் மட்டும் வரவே வராது என்பது ஒருவித 'மெர்பி ' விதி போலும் ...தீபாவளிக்காக வெள்ளிக்கிழமை பெங்களூருவில் இருந்து கோயமுத்தூருக்கு புக் செய்திருந்த பஸ் சாந்தி நகரில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் லேட்டாக வந்தது...இப்படிப்பட்ட சமயங்களில் வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க அசாத்திய பொறுமை வேண்டும்! இந்தியாவின் மக்கள்தொகையை கண்டிப்பாக நொந்து கொள்ளத் தோன்றும்...பட்டினத்தார் சொல்வது போல புற்றீசல்கள் போலக் கிளம்பி வருகிறார்கள்! சரிதான்...நானும் அவர்களுக்கு ஒரு ஈசல் போல தான் தெரிந்திருப்பேன்...நம்முடைய 'ஈகோவை''நானை' எவ்வளவு சீக்கிரம் மக்கள் கூட்டம் சரித்து விடுகிறது!

சரி 

உதாரணமாக, 21:53 என்ற ஸ்பெஷல் பஸ்ஸை புக் செய்திருந்தால் 21:53 மட்டும் வரவே வராது.21:51 வரும், 21:52 வரும் 21:54 வரும்....ஏன் 22:15, 22:30 23:00 எல்லாம் சரியாக வரும்... இந்த பாழாய்ப் போன 21:53 மட்டும் வரவே வராது!ஒரு வேளை 21:53 என்ற ஒரு நம்பரே இல்லையோ, நாம் 21:53 க்கு புக் செய்தது இங்கே வந்து கால்கடுக்கக் காத்திருப்பது எல்லாம் ஒருவித மாயையோ என்று கூட நினைக்கத் தோன்றும்.பிறகு இரண்டு மணிநேரம் கழித்து எந்த வித அறிவிப்பும்  இல்லாமல் உடலுக்குள் நோய் நுழைவதைப் போல 21:53 பஸ் ஸ்டாண்டுக்குள் நுழையும்... மற்ற பஸ்ஸுக்கு எல்லாம் 21:51 பஸ் நம்பர் K A 7786  என்று நூறு முறை Announce செய்யும் ஆள் 21:53க்கு மட்டும் கடனே என்று ஒரே ஒரு முறை தொண்டைக்குள் announce செய்து விடுவார்... கொடுமை!Murphy! you are too bad....இந்த மாதிரி சமயங்களில் எனக்கு உற்சாகம் தரும் வாசகம் ஒன்று உள்ளது...அது என்ன தெரியுமா?THIS TOO SHALL PASS !!!*கடைசியாக ஒரு ஓஷோ ஜோக்....


ரோட்டில் நடந்து கொண்டிருந்த  கிளெவர் -ஹெட் -டிடம் பூச்செண்டு விற்பவன் ஒருவன் " சார், உங்க மனைவிக்கு ஒரு பூச்செண்டு வாங்கிக்கங்க " என்றான்...
"இல்லைப்பா ..எனக்கு மனைவி இல்லை..." என்றான்.

"அப்படியானா உங்க கேர்ள் பிரென்ட் -டுக்கு ஒன்னு வாங்கிக்கங்க" என்றான்.
"இல்லைப்பா ..எனக்கு கேர்ள் பிரென்ட் இல்லை..." என்றான்.
"ஓ ,அப்படியானா நீங்க கண்டிப்பா ரெண்டு வாங்கியே ஆகணும் ஆமா..உங்க அதிர்ஷ்டத்தைக் கொண்டாட" என்றான்..

சமுத்ரா  

13 comments:

அமுதா கிருஷ்ணா said...

ஜேக்கப் மரணம் மிக கொடியது.

பஃபே லஞ்ச் மொத்தமா பார்த்ததும் வயிறு நிறைந்து விடும்.ஒரு முறை கூட ஒழுங்காய் சாப்பிட்டதே இல்லை. நல்லா சாப்பிடுபவர்களை ஆச்சரியமாய் பார்த்தே பொழுது போயிடும்.

நாமும் அஜாமிளன்கள் தான் கரெக்ட்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஜேக்கப் அவர்களின் மரணம் நம்ப முடியவில்லை... மிகவும் வருத்தமாக இருந்தது...

நம்மை அறிவது மிகவும் முக்கியம்...

சுவனப் பிரியன் said...

//இதை அடிக்கடி சாப்பிட்டால் நூறுவயது வரை ஹெல்தியா வாழலாம் என்று ஜேக்கப் கூறும் போது விதி மெல்ல புன்னகை புரிந்திருக்க வேண்டும்!//

நானும் இவரது நிகழ்ச்சிகளை அவ்வப்போது பார்த்துள்ளேன்..

இராஜராஜேஸ்வரி said...

விளம்பரங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம்... மகிழ்ச்சி என்பது தொடுவானம் மாதிரி ..அதை நெருங்க நெருங்க அது தூரம் போய்க் கொண்டே இருக்கும்...

வண்ண வண்ண கலைடாஸ்கோப் ரசிக்கவைத்தது..

Vijay Periasamy said...

Nice Post. Interesting to read.

ஹாலிவுட்ரசிகன் said...

வழக்கம்போல இன்றும் கலைடாஸ்கோப் ரசிக்க வைத்தது... அதிலும் விதவிதமான லஞ்ச்களை ரொம்பவே ரசித்தேன். :-)

Abarajithan Gnaneswaran said...

டிவியில் சமையல் நிகழ்ச்சிகளில் அறுவை இல்லாமல் கொஞ்சம் சுவாரஸ்யமாக செய்பவர்களில் ஜேக்கப் ஒருவர். இப்போதுதான் விஷயம் கேள்விப்படுகிறேன்.

#அஜாமிளன்

இவ்வகையான கதைகளின் லாஜிக்கை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.ஒரு வகையில் பார்த்தால், வாழ்க்கை முழுவதையும் கடவுளுக்கு அர்ப்பணித்த பலருக்கு கிடைக்காத முக்தி, கணநேரத்தில் தவறுதலாக கடவுள் பெயரைக் கேட்டவனுக்கு கிடைக்கிறது என்பதில் ஒரு தவறான மெசேஜ் வருகின்றதே?

# THIS TOO SHALL PASS !!!

வாழ்க்கையில், எங்கேயும் எப்போதும் யாருக்கும் மிகச்சரியாக பொருந்தும் ultimate, universal quote.
கொஞ்சம் கொஞ்சம் ஜென் கதைகளை (மட்டுமே) வாசித்ததில் நானும் இவ்வாறாக நினைக்கத் தொடங்கியிருக்கிறேன். நல்ல இம்ப்ரூவ்மெண்ட்.

bandhu said...

வரைட்டி குறித்த லஞ்ச் யோசனை..அருமை.. அவ்வளவு கூட வேண்டாம். கலைடாஸ்கோப் படித்தாலே போதும்.. வாழ்க்கையின் வரைட்டி தெரிய என்று தோன்றுகிறது.

T.N.MURALIDHARAN said...

பல விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள் ஒவ்வொரு தகவலுக்கும் இடையில் கோடுபோட்டிருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.

சமுத்ரா said...

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

சமுத்ரா said...

அபராஜிதன், அஜாமிளன் கதையை மேலோட்டமாகப் படிக்கும் போது அப்படித்தான் தோன்றும்.
அநியாயம் இது என்று தோன்றும்.ஆனால் அதன் உள்ளே உள்ள சாராம்சத்தை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
என்னதான் காலம் முழுவதும் பக்தி செலுத்தினாலும் அதற்கு உச்சகட்ட நிலை, கிளைமாக்ஸ் என்று ஒன்று இருக்கும்.காலமெல்லாம் பூஜை செய்தேன் எனக்கு ஒன்றும் இல்லை..தப்பித்தவறி நாராயண நாமம் கேட்டு விட்டவனுக்கு மோட்சமா என்று கேட்பது
நல்லதொரு கேள்விதான்.ஆனால் காலம் பூராவும் அடைய முடியாத பக்தியின் பரவசத்தை ,essence -ஐ அவன் ஒரு நொடியில் அடைந்திருக்கக் கூடும்.தியாகராஜர் போன்றோர் என்னதான் பக்தி செய்தாலும் இன்னும் எனக்கு அந்த பக்தியின் உச்ச நிலை வாய்க்கவில்லையே ,இன்னும் இறைவன் கருணை வரவில்லையே
என்று அங்கலாய்ப்பதை காண்கிறோம். அந்த நிலை தான் முக்கியம். இருமை கடந்து காண்பது எல்லாம் இறைவன் தான் என்று உணரும் ஒரு மகோன்னதமான
தெய்வீக நிலை.அந்த நிலையை இறக்கும் தருவாயில் நாராயண நாமம் கேட்ட அஜாமிளன் ஒரு கணம் உணர்ந்திருக்கக் கூடும்....

வவ்வால் said...

சமுத்ரா,

//இறக்கும் தருவாயில் நாராயண நாமம் //

அஜாமிளன் இறக்க காரணமே அந்த சொல்லாக தான் இருக்க வேண்டும், காலம் பூரா கேட்காத அச்சொல்லை திடீரென கேட்ட அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் வந்து செத்து போயிருக்கலாம்.

மேலும் அவர் வைகுந்தம் போனதை கூட போய் யார் பார்த்து வந்து உறுதி படுத்தி இருக்கக்கூடும்.

வயசானவங்க சாகாம இழுத்துக்கிட்டு மரணப்படுக்கையில் இருந்தால் பால் ஊற்றுவது கூட தொண்டை அடைச்சு சாகட்டும் என் தான்.

அஜாமிளன் அதிர்ச்சியான ஒன்றை கேட்டால் இறந்துவிடுவார்னு சதி செய்து நாராயனா என கேட்க வைத்து கொன்றுவிட்டு பின்னர் கதை கட்டிவிட்டிருப்பார்கள்.

-----------

மர்பி விதி எல்லாம் நம் எதிர்பார்ப்பு நடக்காத போது தான் நினைத்து பார்ப்போம், சரியாக எல்லாம் நடந்தால் அப்போ மர்பி விதி பொய்த்து போய்விட்டதே என நினைப்பதே இல்லை :-))

Abarajithan Gnaneswaran said...

//ஆனால் காலம் பூராவும் அடைய முடியாத பக்தியின் பரவசத்தை ,essence -ஐ அவன் ஒரு நொடியில் அடைந்திருக்கக் கூடும்.//

நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிறது..

@Vavval sir,

//ஹார்ட் அட்டாக் வந்து செத்து போயிருக்கலாம்.// LOL :D