001
===
இந்தக் 'கொட்டாவி' யைப் பற்றி நிறைய பேர் ஆராய்ச்சி செய்து Ph .D எல்லாம் வாங்கி இருக்கிறார்கள். ஆனால் கொட்டாவி உண்மையில் ஏன் வருகிறது என்று இதுவரை தெரியவில்லையாம்.(?!) கொட்டாவியைத் தொடர்ந்து உடம்பை நீட்டி முறிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதாக சொல்கிறார்கள். ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்க, மூளையை குளிர்ச்சி செய்ய , தூக்கத்தின் அறிகுறியாக, உடம்பு தண்ணீர் வேண்டும் என்று கேட்பதால் என்று கொட்டாவிக்கு நிறைய காரணம் சொல்கிறார்கள். ஒரு விஷயம், ரொம்பவே போர் அடித்தால் அதை நாம் விடும் கொட்டாவி காட்டிக் கொடுத்து விடும். தொடர்ந்து பேசி கழுத்தறுக்கும் ஆசாமிகளிடம் இருந்து விடுபட கொட்டாவி ஒரு சிறந்த சாதனம்.
கொட்டாவி ஒரு தொற்றிக் கொள்ளும் வியாதி. சின்ன வயதில் இந்தக் கதையை பாட்டி சொல்லிக் கேட்டதுண்டு.
ஒரு வயதான கிழவி ரொம்பவுமே கருமியாக இருந்தாள். எச்சில் கையால் காக்காய் ஓட்ட மாட்டாள். தன்னிடம் உள்ள பணத்தையும் நகைகளையும் வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு குடுவையில் குழிதோண்டிப் புதைத்து வைத்துக் கொண்டு வெளியே ஏழை போல நடமாடினாள். வாரா வாரம் ஒருநாள் நடுராத்திரியில் எழுந்து கொண்டு தோட்டத்துக்கு சென்று பணம் சரியாக இருக்கிறதா என்று அவள் சரிபார்ப்பது வழக்கம்.அப்படி ஒரு நாள் அவள் செய்து கொண்டிருக்கும் போது அவளுக்கு ஏனோ கொட்டாவி வந்தது. உடனே கிழவி அலர்ட் ஆகி 'கொட்டாவி இல்லாமல் கொட்டாவி வராது; குடுவையே வா வீட்டுக்குள் போகலாம்' என்று சொல்லி குடுவையை வீட்டுக்குள் எடுத்துச் சென்று விட்டாளாம். கிழவி போனதும் புதையலை திருடி விடலாம் என்ற எண்ணத்துடன் அங்கே திருடன் ஒருவன் மரத்தின் பின் ஒளிந்து கொண்டிருந்தான்.நிறைய நேரம் காத்திருந்ததால் பாவம் அவனுக்கு கொட்டாவி வந்து விட்டது!
நம் மனதுக்குப் பிடித்த செயல்களை செய்யும் போதோ(உதாரணம்: குழிதோண்டி காசு புதைத்து வைத்தல்), நம் மனதுக்குப் பிடித்தவர்களுடன் இருக்கும் போதோ கொட்டாவி கண்டிப்பாக வராது என்று தோன்றுகிறது. நாளை ஒருநாள் முழுவதும் எத்தனை தரம் நீங்கள் கொட்டாவி விடுகிறீர்கள் என்று எண்ணி வையுங்கள்.
0- நீங்கள் வேற்று கிரக வாசி
0-5 படு ஆக்டிவ்வான மனிதர் நீங்கள்.
5-10 நீங்கள் நார்மல்
10-20 நீங்களும் நார்மல்.
20-50 நீங்கள் மிகவும் சலிப்பான மனிதர். உங்களைப் பற்றி ஏதாவது மேலும் எழுதலாம் என்றால் எனக்கே கொ. வருகி..
50 க்கு அதிகம் - இப்போது உள்ள வேலையை விட்டு விட்டு ஆசிரமம் ஆரம்பிக்கவும். சர்ச்சை, பேச்சு, பேட்டி, வீடியோ என்று
வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யம் ஆகி விடும்.
010
=======
ஒவ்வொரு
திருப்பத்திலும் -
ஒரு
சிறிய
தயக்கம்.
இது ஒரு ஹைக்கூ. எழுதியது யார் என்பது தெரியாது. ஆனால் இதன் அர்த்தம் சிந்திக்க வைக்கிறது. சாலையில் ஒரு திருப்பம் வருகிறது. நாம் நடந்து கொண்டிருந்தாலும் வாகனத்தில் சென்று கொண்டிருந்தாலும் திருப்பம் வரும் போது ஒரு தயக்கமும் கூடவே வருகிறது. சாலைகளில் மட்டும் அல்ல. வாழ்க்கையிலும் நமக்குத் திருப்பங்கள் நேர்கின்றன. அப்போதும் தயக்கம் நம்மிடம் தொற்றிக் கொள்கிறது. என்னடா? இதுவரை நல்ல ஜம்மென்ற சாலையில் பயணம் செய்தோமே? திருப்பத்துக்கு
அந்தப் புறம் என்ன இருக்குமோ? பெரிய மிருகம் ஒன்று படுத்திருக்குமோ? கொலைகாரர்கள் இருப்பார்களோ ? வாகனம் ஏதாவது படுவேகத்தில் வந்து கொண்டிருக்குமோ என்று ஒவ்வொரு திருப்பமும் ஒரு புதிராகவே இருக்கிறது.ஆனால் வாழ்க்கை என்பது தேசிய நெடுஞ்சாலை அல்லவே? திருப்பங்கள் நிறைந்த ஒரு திகில் கொண்டை ஊசி வளைவுப் பயணம். அடுத்த நொடி என்ன ஆகுமோ என்று தெரியாமல் தான் இன்று நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். But it has its own thrill too..
அடுத்த முறை ஊட்டி, சத்தியமங்கலம் போன்ற கொண்டை ஊசி வளைவுகள் வழியே பயணம் செய்ய நேரும் போது 'நம் வாழ்க்கையும் இப்படித்தான்' என்று ஒருமுறை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
011
=====
இன்று காலையில் பஸ்ஸில் பார்த்த ஃபிகரின் முகம் நினைவில் இருக்கிறதா? (இருக்கும்) .இதே உங்கள் அக்காவின் முகமோ, அம்மாவின் முகமோ, தங்கையின் முகமோ திடீரென்று ஞாபகத்தில் கொண்டுவருவது கஷ்டம். இது ஏன் என்றால் 'தினமும் பார்க்கும் மூஞ்சி தானே' என்று மூளை அதை அலட்சியப் படுத்தி விடுகிறது. ஓஷோவின் தியானம் ஒன்று உள்ளது. சிவா தன் துணைவிக்கு சொன்ன 108 தியான முறைகளில் இதுவும் ஒன்று.அதாவது நாம் தினமும் பார்க்கும் அரதப் பழசான விஷயங்களையும் கூட அன்று தான் முதன் முதலில் புதிதாகப் பார்ப்பது போல பார்ப்பது. உண்மையில் நாம் நிறைய விஷயங்களைப் பார்ப்பதே இல்லை. அதே மனைவி தானே, அதே ஆபீஸ் தானே, அதே டீம்-மேட்ஸ் தானே? அதே பஸ் தானே என்று கண்ணில் தோன்றும் நூறு விஷயங்களை நம் கண்ணே ஃபில்டர் செய்து விடுகிறது.
இனிமேல் அப்படிப் பார்க்காமல் ஒருநாள் மட்டும் இந்த தியானத்தை செயல்படுத்திப் பாருங்கள்.காலையில் கண் விழித்ததும் உங்கள் படுக்கை அறையை ஏதோ ஒரு புதிய அறையை பார்ப்பது போல அல்லது முதன்முதலில் பார்ப்பது போல பாருங்கள். காபி கொண்டு வரும் மனைவியை அன்று தான் முதன் முதலில் பெண் பார்க்க செல்வது போல பாருங்கள் (மனைவியின் பாசிடிவ்/நெகடிவ் ரியாக்சனுக்கு நான் பொறுப்பல்ல) குழந்தைகளையும் அப்படியே பாருங்கள். (வேலைக்காரியை எப்படிப் பார்க்க வேண்டும் என்று தியானத்தில் சொல்லவில்லை ) காரில் ஏறி அமர்ந்ததும் அன்று தான் அந்தக் காரைப் புதிதாக வாங்கியது போல கண்ணை சில மி.மீ முழித்துப் பாருங்கள். வழக்கமாக ஆபீஸ் செல்லும் சாலை, ஆபீஸ், ஆபீஸ் பியூன், மேனேஜர் என்று சகலத்தையும் புதிய விழிகளுடன் பார்க்கவும்..நீங்கள் ஜி.எம்.ஆகவே இருந்தாலும் முதல் முதலில் வேலை கிடைத்து பிரம்மாண்டமான ஆபீசுக்குள் நுழையும் போது எப்படி பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தது போலப் பார்த்தீர்களோ அப்படிப் பார்க்கவும். அன்று முழுவதும் நீங்கள் மிக உற்சாகமாக இருப்பது போல உணர்வீர்கள். புதிய விஷயங்களுடன் நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி இருக்கிறது எனவே இந்த தியானம் உங்கள் விழிப்புணர்வை விருத்தி செய்யும் என்கிறார் ஓஷோ.
உண்மையில் எல்லாமும் புதியது தான். பழையது என்பது மாயை. நீங்கள் உங்கள் மனைவியை/கணவனை இன்று பார்க்கும் போது அவர் நேற்று இருந்ததைப் போல இல்லை.எவ்வளவோ மாற்றங்கள் அவருக்குள் நிகழ்ந்து விட்டிருக்கின்றன.எனவே எல்லாமும் புதிது தான். நம் மனம் தான் எல்லாவற்றுக்கும் 'பழைய' சாயம் பூசி விடுகிறது.
100
=====
விகடனின் முத்திரைக் கவிதைகள் இரண்டு:
துல்லிய நீர்ப்பரப்பில்
துறவி போல் வந்தமர்ந்து
மெல்லிய தன் உடலை
மேற்பரப்பில் பிரதியாக்கி
தண்ணீரில் தவம் செய்யும்;
பார்பதற்குப் பரவசம் தான்
மீனுக்குத் தானே தெரியும்
கொக்கின் குரூரம்
-'தோற்ற மயக்கம்' -எஸ்.ஆர். ராஜாராம்
விழுங்கிய மீன்
தொண்டையில்
குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்
-'வலி' ஜி.ஆர்.விஜய்
101
=====
மேலும் சில கவிதைகள் :-
மோதல்
========
எத்தனையோ இடம் இருந்தும்
சில சமயங்களில்
எதிரெதிரே
முட்டிக் கொள்ளும் படி
வந்து விட நேர்கிறது.
சா ரி கா பா
===========
அங்க கொஞ்சம் இறக்கிப் பாடு
சா ரி கா பா தா ஸ நீ தா ரா ரா வேணு கோபாலா
சரணம் எடுக்கறப்ப சுருதி குறையுது பாரு
அந்த இடத்தில் ரொம்ப ஆட்டாதே
யதுகுல காம்போதி வந்துரும்
தலைல குட்டவா? தோடி பாடறியா தன்யாசியா?
-பாட்டி சங்கீதம் சொல்லித் தந்த சுவாரஸ்யம்
இன்று
'காகலி நிஷாதம்'
'If you compare these scales ' 'பிட்ச்' 'ஆக்டேவ்'
'You have to sing with little gamakam '
என்று சொல்லித் தரும் ஆன்லைன் பாடங்களில் இல்லை!
மழை
======
காலையில் வரும் மழை
ஏன் சூடாக இல்லை என்று
என் நான்கு வயது மகள் கேட்டாள்
இன்னும் விடையைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்.
-சமுத்ரா
110
===
சமீபத்திய ட்விட் ஒன்று இப்படி சொல்கிறது:
பொது கட்டண கழிப்பிடத்தில் ஒரு ரூபாய் அதிகம் வசூலித்தார்கள். ஏன் என்று கேட்டால் 'பெட்ரோல் விலை ஏறி விட்டது' என்கிறார்கள். பெட்ரோல் விலை உயர்வு நமக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. கீழ்க்கண்ட நடவடிக்கைகளில் ஏதாவது
ஒன்றையோ அல்லது எல்லாவற்றையுமோ அரசு மற்றும் பொதுமக்கள் செயல்படுத்தியே ஆக வேண்டும்.
(assuming decrease in demand will bring the price down)* ஒரு வீட்டுக்கு டூ வீலர் அல்லது ஃபோர் வீலர் ஒன்றை மட்டுமே அனுமதித்தல்.
* புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்பே டுர்-டுர் என்று உறுமும் ஆம்னி பஸ்களுக்கு ஃபைன் போடுதல்
* கார் -pooling ஐ கட்டாயமாக்குதல். கப்பல் போன்ற காரில் ஒருவர் மட்டுமே இருந்தால் அவருக்கு பைன் போடுதல். *கிராக்கியை இறக்கி விட்டு திரும்பும் கால் டாக்சிகளை உபயோகப்படுத்துதல்
* பெட்ரோலை அதிகம் குடிக்கும் பழைய , பழுதான வாகனங்களை பயன்படுத்தாது இருத்தல்; தடை செய்தல்
*முடிந்த வரை சாலைகளில் பிரேக்குகள், தேவையில்லாத திருப்பங்கள், தேவையில்லாத மேடுகள், டோல் கேட்டுகளைத் தவிர்த்தல்
*Fuel efficient வாகனங்களை வாங்குதல்.வாகனத்தை நல்லபடி MAINTAIN செய்தல்
* பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடைக்கு தீப்பெட்டி வாங்க டூ வீலரில் செல்லாமல் நடராஜா சர்வீஸ் உபயோகித்தல்
* அரசு பஸ்களை நேரத்துக்கு இயக்குதல். எல்லா இடங்களுக்கும் இயக்குதல்.பஸ்களை user friendly ஆக்குதல்.
* மாற்றுத் திறனாளிகளுக்கான பஸ்களை அதிகம் இயக்குதல்.
* ஆட்டோக்களுக்கு அளிக்கப்படும் லைசன்சுகளைக் குறைத்தல் (பெங்களூருவில் சாலையில் 50 % ஆட்டோக்கள் தான் போகின்றன.) தனிநபர் அட்டோவைத் தடை செய்தாலும் நலம்.
* பாரின் நாடுகள் போல சாலைகளில் சைக்கிள் மட்டுமே செல்ல தடங்களை அமைத்தல். இதனால் நிறைய பேர் சைக்கிள் உபயோகிக்கலாம். இப்போது சாலையில் சைக்கிளில் சென்றால் வேற்றுகிரக வாசி போல பார்க்கிறார்கள்.
*தேவையில்லாத சிக்னல்களை எடுத்து விடுதல்.
*மெதுவான வேகத்தில் போனால் போதும் ; ஃபிகரை impress செய்ய வேண்டாம் என்று நினைக்கும் தாத்தாக்களுக்கு பேட்டரி
டூ வீலர்கள் பேட்டரி கார்கள் அளித்தல். லோன் உதவி செய்தல்.
*weekdays களில் இன்று நிறைய பஸ் சர்வீஸ்கள் ஒரு பயணி, இரண்டு பயணிகளுடன் செல்கின்றன. இதை கண்டிப்பாக
investigate செய்து குறைந்த பட்சம் பத்து பேர் இருந்தால் மட்டுமே பஸ் எடுக்க முடியும் என்று சட்டம் இயற்றுதல்.முன்பே சொன்னது போல Return ட்ரிப் களை சிறப்பாக உபயோகித்தல். லாரிகளை முடிந்த வரை முழுவதுமாக லோட் செய்தல்.
111* பெட்ரோலை அதிகம் குடிக்கும் பழைய , பழுதான வாகனங்களை பயன்படுத்தாது இருத்தல்; தடை செய்தல்
*முடிந்த வரை சாலைகளில் பிரேக்குகள், தேவையில்லாத திருப்பங்கள், தேவையில்லாத மேடுகள், டோல் கேட்டுகளைத் தவிர்த்தல்
*Fuel efficient வாகனங்களை வாங்குதல்.வாகனத்தை நல்லபடி MAINTAIN செய்தல்
* பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடைக்கு தீப்பெட்டி வாங்க டூ வீலரில் செல்லாமல் நடராஜா சர்வீஸ் உபயோகித்தல்
* அரசு பஸ்களை நேரத்துக்கு இயக்குதல். எல்லா இடங்களுக்கும் இயக்குதல்.பஸ்களை user friendly ஆக்குதல்.
* மாற்றுத் திறனாளிகளுக்கான பஸ்களை அதிகம் இயக்குதல்.
* ஆட்டோக்களுக்கு அளிக்கப்படும் லைசன்சுகளைக் குறைத்தல் (பெங்களூருவில் சாலையில் 50 % ஆட்டோக்கள் தான் போகின்றன.) தனிநபர் அட்டோவைத் தடை செய்தாலும் நலம்.
* பாரின் நாடுகள் போல சாலைகளில் சைக்கிள் மட்டுமே செல்ல தடங்களை அமைத்தல். இதனால் நிறைய பேர் சைக்கிள் உபயோகிக்கலாம். இப்போது சாலையில் சைக்கிளில் சென்றால் வேற்றுகிரக வாசி போல பார்க்கிறார்கள்.
*தேவையில்லாத சிக்னல்களை எடுத்து விடுதல்.
*மெதுவான வேகத்தில் போனால் போதும் ; ஃபிகரை impress செய்ய வேண்டாம் என்று நினைக்கும் தாத்தாக்களுக்கு பேட்டரி
டூ வீலர்கள் பேட்டரி கார்கள் அளித்தல். லோன் உதவி செய்தல்.
*weekdays களில் இன்று நிறைய பஸ் சர்வீஸ்கள் ஒரு பயணி, இரண்டு பயணிகளுடன் செல்கின்றன. இதை கண்டிப்பாக
investigate செய்து குறைந்த பட்சம் பத்து பேர் இருந்தால் மட்டுமே பஸ் எடுக்க முடியும் என்று சட்டம் இயற்றுதல்.முன்பே சொன்னது போல Return ட்ரிப் களை சிறப்பாக உபயோகித்தல். லாரிகளை முடிந்த வரை முழுவதுமாக லோட் செய்தல்.
=====
ஓஷோ ஜோக்.
ஒரு நாள் முல்லா மாடிப் படிகளில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். டொம் என்று பெரிய சத்தம் கேட்டது. சட்டையில் ஒட்டி இருந்த மண்ணைத் துடைத்துக் கொண்டு எதுவுமே நடக்கவில்லை என்பது போல வீட்டுக்குள் வந்தார்.மனைவி ' என்ன சத்தம்' என்று கேட்டாள். முல்லா 'ஒன்றும் இல்லை. மாடியில் இருந்து என் சட்டை கீழே விழுந்து விட்டது' என்றார்.'சட்டை கீழே விழுந்ததற்கா அத்தனை சத்தம்?' என்றார் முல்லாவின் மனைவி
'அது ஒன்றும் இல்லை. அந்த சட்டைக்குள் நானும் இருந்தேன்' என்றார் முல்லா.
இன்னொரு ஜோக். வாழ்வே ஒரு கொண்டாட்டம். சிரியுங்கள். நடனமாடுங்கள் -ஓஷோ.
ஃபாதர் ஓ ஃப்லானகன் சர்ச்சில் கூடி இருந்தவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தார் 'அன்பர்களே, நீங்கள் எந்த சூழ்நிலையிலும்
கோபம் கொள்ளக் கூடாது. பொறுமையாக இருப்பவர்களையே கடவுளுக்குப் பிடிக்கும்.எதிரிகளிடமும் இனிய வார்த்தை பேச வேண்டும். கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும்.உதாரணமாக , பாருங்கள் என் மூக்கின் மீது ஒரு ஈ உட்கார்ந்து இருக்கிறது. நான் பதட்டப்படவே இல்லை. அதை நான் விரும்புகிறேன். அதைப் பார்த்து அன்புடன் 'ஓ ஈயே , நீ இங்கிருந்து போய் விடு என்று இதமாக சொல்லப் போகிறேன்.
"ஓ! ஜீசஸ், இது ஈ இல்லை. தேனீ, சீ, பாழாப் போன தேனீ, கடிச்சு கிடிச்சு வெச்சா என்ன பண்ணறது, கருமம் பிடிச்ச சனியனே, போ இங்கிருந்து , யாரு மூக்கு மேலே உட்கார்ந்திருக்க தரித்திரம் பிடிச்ச சனியனே "என்று துள்ளிக் குதித்தார் ..
சமுத்ரா
6 comments:
கொட்டாவியை வைத்து இத்தனை ஆய்வா ..,
என்னாது 0 - வேற்றுகிரகவாசியா ..?
வழக்கம் போல் தூள்... சென்னை வந்துட்டு போனதுல இருந்து கொஞ்சம் நகைச்சுவை உணர்வு சாஸ்தி ஆகிருக்கு போல ;) யார சந்திச்சீங்க?
அனைத்தும் அருமை.
அதிலும் ஹைக்கூ நிறைய யோசிக்க வைத்தது.
"கொட்டாவி இல்லாமல் கொட்டாவி வராது" அருமையான துப்பறியும் கதை. நன்றி.ஹைக்கூ அருமை
Sir, அணு அண்டம் அறிவியல் தொடரை நிறுத்திட்டிங்களா??
Sir, அணு அண்டம் அறிவியல் தொடரை நிறுத்திட்டிங்களா??
No, will post AAA today ;)
Post a Comment