அணு அண்டம் அறிவியல் -67 உங்களை வரவேற்கிறது.
"நாம் எதற்காக புதிய கிரகங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்? ஏன் அறிவுள்ள உயிர்களைத் தேட வேண்டும்?. அங்கே போய் மனிதன் அதையும் நாசம் செய்து விடுவான் என்று எதிர்மறையாக யோசிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மருத்துவத்தில் ஒரு புதிய மருந்து கண்டுபிடிக்கிறார்கள்.இந்த மருந்து ஒரு கிரிமினலைக் காப்பாற்றி விடும் என்று பயந்து எந்த விஞ்ஞானியும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியைக் கைவிட்டு விடுவதில்லை. பின்விளைவுகளை யோசிக்காமல் பணியாற்றும் அறிவியலின் இந்த 'கடமை உணர்ச்சி' கொஞ்சம் நெருடலாகத் தோன்றினாலும் அதீதமாக பயந்து கொண்டு அறிவியல் ஆய்வுகளை நாம் நிறுத்தக் கூடாது என்றே தோன்றுகிறது. புதிய கிரகத்திற்குக் குடி பெயர்ந்தாலும் மனிதன் தன் அபத்தங்களைத் தொடருவான். எல்லை பிரிப்பான்; பாலிடிக்ஸ் செய்வான்,சக மனிதர்களைக் கொல்வான்..என்ன செய்வது? இதற்காக நொந்து கொண்டு விஞ்ஞானிகள் எல்லாம் 'புத்தம் சரணம் கச்சாமி' என்று காவி தரித்துக் கொண்டு போய் விட முடியுமா? ஆஸ்பிடலில் சீரியஸ் என்று அட்மிட் ஆகும் ஒரு நோயாளியைப் பார்த்து டாக்டர் ஒருவர் 'நீங்க வாழ்ந்து என்ன பண்ணப் போறீங்க? வேலை இல்லாம தான் இருக்கீங்க, பிழைச்சாலும் அதே வெட்டி வம்பு பேசிட்டு இருப்பீங்க' என்று சொன்னால் எப்படி இருக்கும்? உடனே ஐ.சி.யூ விற்கு கொண்டு செல்கிறார்கள் அல்லவா? அதுபோன்ற ஒரு unbiased கடமை உணர்ச்சி தான் இதுவும். 'கொட்டுவது தேளின் கடமை; அதைக் காப்பாற்றுவது என் கடமை' என்று சொன்னார் ஒரு ஜென் சந்நியாசி.எனவே வேற்று கிரக உயிர்களுக்கான தேடல்கள் தொடர வேண்டும். மனிதன் தன்னால் முடிந்த அளவு தன் சிறகுகளை விரித்து சூரிய மண்டலத்துக்கு அப்பாலும் குடியேற வேண்டும் என்று நம் குறிக்கோள்களை பாசிடிவ் ஆக வைத்துக் கொள்வோமே?
"நாம் எதற்காக புதிய கிரகங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்? ஏன் அறிவுள்ள உயிர்களைத் தேட வேண்டும்?. அங்கே போய் மனிதன் அதையும் நாசம் செய்து விடுவான் என்று எதிர்மறையாக யோசிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மருத்துவத்தில் ஒரு புதிய மருந்து கண்டுபிடிக்கிறார்கள்.இந்த மருந்து ஒரு கிரிமினலைக் காப்பாற்றி விடும் என்று பயந்து எந்த விஞ்ஞானியும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியைக் கைவிட்டு விடுவதில்லை. பின்விளைவுகளை யோசிக்காமல் பணியாற்றும் அறிவியலின் இந்த 'கடமை உணர்ச்சி' கொஞ்சம் நெருடலாகத் தோன்றினாலும் அதீதமாக பயந்து கொண்டு அறிவியல் ஆய்வுகளை நாம் நிறுத்தக் கூடாது என்றே தோன்றுகிறது. புதிய கிரகத்திற்குக் குடி பெயர்ந்தாலும் மனிதன் தன் அபத்தங்களைத் தொடருவான். எல்லை பிரிப்பான்; பாலிடிக்ஸ் செய்வான்,சக மனிதர்களைக் கொல்வான்..என்ன செய்வது? இதற்காக நொந்து கொண்டு விஞ்ஞானிகள் எல்லாம் 'புத்தம் சரணம் கச்சாமி' என்று காவி தரித்துக் கொண்டு போய் விட முடியுமா? ஆஸ்பிடலில் சீரியஸ் என்று அட்மிட் ஆகும் ஒரு நோயாளியைப் பார்த்து டாக்டர் ஒருவர் 'நீங்க வாழ்ந்து என்ன பண்ணப் போறீங்க? வேலை இல்லாம தான் இருக்கீங்க, பிழைச்சாலும் அதே வெட்டி வம்பு பேசிட்டு இருப்பீங்க' என்று சொன்னால் எப்படி இருக்கும்? உடனே ஐ.சி.யூ விற்கு கொண்டு செல்கிறார்கள் அல்லவா? அதுபோன்ற ஒரு unbiased கடமை உணர்ச்சி தான் இதுவும். 'கொட்டுவது தேளின் கடமை; அதைக் காப்பாற்றுவது என் கடமை' என்று சொன்னார் ஒரு ஜென் சந்நியாசி.எனவே வேற்று கிரக உயிர்களுக்கான தேடல்கள் தொடர வேண்டும். மனிதன் தன்னால் முடிந்த அளவு தன் சிறகுகளை விரித்து சூரிய மண்டலத்துக்கு அப்பாலும் குடியேற வேண்டும் என்று நம் குறிக்கோள்களை பாசிடிவ் ஆக வைத்துக் கொள்வோமே?
எப்போதுமே இது நடக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்து வந்துள்ளது :-
முதன் முதலில் ஸ்கூலில் (எல்.கே.ஜி) சேர்ந்த போது சாயந்திரம் திரும்பி வந்து
'அம்மா, கிளாஸ்ல வேற வேற தெரு பையங்க எல்லாம் படிக்கறாங்க" என்றேன்.
கொஞ்சம் வளர்ந்து ஹை ஸ்கூல் போனதும்
"கிளாஸ்ல வேற வேற ஊர் பையங்க எல்லாம் படிக்கறாங்க"
காலேஜில்
"கிளாஸ்ல வேற வேற ஸ்டேட் பசங்க எல்லாம் படிக்கறாங்க"
ஆபீசில் சேர்ந்ததும்
"ஆபீஸ்ல வேறே வேற நாட்டு மனுஷங்க கூட எல்லாம் வொர்க் பண்றேன்" என்று சொல்லிக் கொள்வேன்.
"அம்மா, வேற வேற கிரகத்து மனுஷங்க கூட டீல் பண்றேன்" என்று சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே என் ஆசை.
பூமிக்கப்பால் வாழ்க்கை என்பது அறிவியல் அல்ல. வெறும் FICTION என்று சில பேர் சொன்னாலும் இதன் அறிவியல் கூறுகளை நாம் தொடர்ந்து ஆராய்வோம் :
வேற்று கிரக உயிர்களுக்கான அறிவியல் தேடல் 1959 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. கொக்கொனி மற்றும் மோரிசன் என்ற இரு விஞ்ஞானிகள் நம் ரேடியோ ரிசீவர்களை வானத்தை நோக்கித் திருப்புவோம் என்று சொல்லி, அதுவரை பூமியிலேயே முடங்கிக் கிடந்த மனிதனின் தேடலை முதன் முதலாக பூமிக்கப்பால் விஸ்தாரம் செய்யும் செயலுக்கு வித்திட்டனர். அதன் பிறகுவானத்தில் இருந்து வரும் சிக்னல்களை Official ஆகத் தேட ஆரம்பித்தனர். கண்ட குப்பைகளை எல்லாம் சேகரிக்காமல் முதலில் சிக்னல்-களுக்கு ஒரு அதிர்வெண் வரம்பு (FREQUENCY RANGE ) நிர்ணயிக்கப்பட்டது.[கம்ப்யூட்டரில் SEARCH IN A SPECIFIC FOLDER என்பது மாதிரி]மைக்ரோவேவ் Region -இல் 1GHz இல் இருந்து 10GHz வரை உள்ள சிக்னல்களை மட்டுமே அப்போதிலிருந்து இப்போது வரை தேடி வருகிறார்கள். இந்த அதிர்வெண் வரம்பு செல்லமாக WATER -HOLE , தண்ணீர்த் துளை என்று அழைக்கப்படுகிறது.ஆங்கிலத்தில் மனிதர்கள் கூடும் இடத்திற்கு வாட்டர் ஹோல் என்று பெயர். அதுபோல இந்த அதிர்வெண் வரம்பில்தான் நம்மால் ஏலியன்-களை சந்திக்க முடியும் என்பதால் இந்தப்பெயர்.
முதலில் நமக்குக் கிடைக்கும் அலைகள் (சிக்னல்கள்) இயற்கையாக நட்சத்திரங்களில் இருந்தோ வெளியில் பரவிக் கிடக்கும் மூலகங்களில் இருந்தோ வரவில்லை என்று உறுதி செய்ய வேண்டும்.They are called noise! நம்மை சுற்றி ஏராளமான சத்தங்கள் விரவிக் கிடக்கின்றன. முதலில் மூன்று கெல்வின் வெப்பநிலையில் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் பெருவெடிப்பின் மெல்லிய 'ஹிஸ்' சத்தம்.(CMBR ) அதை நம்மால் கேட்க முடிந்தால் பிரபஞ்சத்தின் எந்த மூலைக்குப் போனாலும் காதில் 'ஹிஸ்ஸ்' தான்..பிறகு நம் காலக்சிகள் சத்தம் போடுகின்றன. சூப்பர் நோவாக்கள், நட்சத்திர பிறப்புகள்,அழிவுகள், மோதல்கள் என்று இருபத்தேழு குழந்தைகள் இருக்கும் வீடு போல சதா களேபரம்.மேலும் சூரியனில் இருந்து கோடிக்கணக்கான charged particles நொடிக்கு நொடி வெளிவந்து கொண்டிருக்கின்றன. மிக அதிக அதிர்வெண்களில் எலக்ட்ரான்-களின் குவாண்டம் பண்புகள் காரணமாக 'குவாண்டம் NOISE ' வேறு இருக்கிறது.இப்படி நிறைய திரைகள் வானத்தை மறைக்கின்றன. இவ்வளவு திரைகள் இருந்தாலும் நம்மால் வானத்தை பார்க்க முடிவது VISIBLE SPECTRUM என்னும் narrow band (குறுகிய அலைக்கற்றை) ஒன்று இருப்பதால்.இது போல அதிர்ஷ்டவசமாக வானத்தை உற்றுநோக்க நமக்கு வசதியான ஒரு ஜன்னல் நுண்ணலை (MICROWAVE ) அதிர்வெண்களில் இருக்கிறது. உடுப்பியில் எப்படி ஸ்ரீ கிருஷ்ணனை கனகதாசர் ஜன்னல் வழியாகப் பார்க்கிறோமோ அது போல ஏலியன்களுடன் நாம் இந்த ஜன்னல் (WATER hole )வழியே மட்டும் தொடர்பு கொள்ள முடியும்.
கனகதாசர் ஜன்னல் |
நட்சத்திரங்களுக்கு இடைப்பட்ட வெட்ட வெளியான INTERSTELLAR SPACE பெரும்பாலும் ஹைட்ரஜன் அணுக்களால் நிரம்பி உள்ளது. (ஆனால் அடர்த்தி மிகக் கம்மி. ஒரு கன சென்டிமீட்டருக்கு ஒரு ஹைட்ரஜன் அணு மட்டுமே உள்ளது) இந்த அணுக்களில் உள்ள எலக்ட்ரான் மற்றும் ப்ரோட்டான்கள் தங்கள் சுழற்சியை (spin ) மாற்றிக் கொள்ளும் போது ஹைட்ரஜன் அணு உயர் ஆற்றல் நிலையில் இருந்து தாழ் ஆற்றல் நிலைக்கு இயல்பாக மாறுகிறது.இந்த ஆற்றல் மாற்றம் வெளியிடும் EM radiation ,1420.40575177 MHz, அதிர்வெண்ணும் 21 சென்டி மீட்டர் அலைநீளமும் உடையது. இந்த 21cm அலைநீள சத்தத்தை புவியில் உள்ள ரேடியோ ரிசீவர்களால் உணர முடியும். [இந்த அலைகள் தடைகளை ஊடுருவி எளிதில் பயணிக்கின்றன] இந்த 21cm அலைநீளக் கற்றை வேற்றுக் கிரக அறிவு ஜீவிகளுக்கும் தெரிந்திருக்கும். (ஹைட்ரஜன் முதல் மற்றும் எளிய தனிமம் என்பதால்) . ஹைட்ரஜனின் இயற்கையான radiation frequency 1420 மெகா ஹெர்ட்ஸ்-களாக இருப்பதால் அதை இயல்பான CARRIER ஆக உபயோகிக்க முடியும்.இந்த carrier frequency பிரபஞ்சம் முழுவதும் எளிதாகவும் இயற்கையாகவும் கிடைப்பதால் வேற்றுக் கிரக அறிவு ஜீவிகள் தொடர்பு கொள்ள கண்டிப்பாக இந்த அலைநீளத்தையே உபயோகிக்க வேண்டும் என்று அனுமானிக்கலாம்.மற்ற கதிரியக்கங்களில் (நட்சத்திரங்களில் இருந்து வருவது) அலைநீளம் மிகவும் பரவலாக உள்ளது. குறுகிய இடத்தில் குறைந்த ஆற்றலில் நிறைய செய்திகளை PACK செய்யவேண்டும் என்றால் குறைந்த அலைநீளம் வேண்டும்.[நாலு கார்களை அனுப்ப ஒரு கண்டெயினர் லாரி போதும். ஒரு ரயிலில் ஏற்றி அனுப்பினால் அது வீண் தானே?] அது போல வே.கி.௮.ஜீவிகள் இந்த இருபத்தியொரு சென்டி மீட்டர் பட்டை அகலத்தைத் தேர்ந்தெடுத்து செய்திகளை அனுப்பலாம் என்ற அனுமானத்தில் SETI ரிசீவர்கள் இந்த அலைநீளத்துக்கே டியூன் செய்யப்பட்டுள்ளன.ஒரு குறிப்பிட்ட ஸ்டேஷனைக் கேட்க ரேடியோவை டியூன் செய்வது மாதிரி.
அதிர்வெண் ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ராக்சில் இயல்பு அதிர்வெண்களுக்கு மத்தியில் அமைந்திருப்பதால் இது H +OH =வாட்டர் ஹோல் எனப்படுகிறது |
சரி.
வானம் முழுவதும் சல்லடை போட்டுத் துளாவினாலும் ET intelligence குக்கான தேடல் ஏமாற்றத்தையே அளித்து வந்துள்ளது. மேற்கு வெர்ஜீனியாவில் 1960 ஆம் ஆண்டில் ட்ராக் (ட்ராக் சமன்பாட்டை அறிமுகப்படுத்தியவர்) என்பவரால் புறவுலக உயிர்த் தேடலுக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. [PROJECT OZMA ]26 மீட்டர் விட்டமுள்ள ஒரு தொலைநோக்கி மூலம் நூற்றுக்கணக்கான பரிச்சயமான நட்சத்திரங்கள் ஸ்கான் செய்யபப்ட்டன.இதுவரை உருப்படியாக எந்த செய்தியும் கிட்டவில்லை.1971 ஆம் ஆண்டில் project cyclops தொடங்கப்பட்டது. பத்து பில்லியன் டாலர் செலவில் ஆயிரக்கணக்கான தொலைநோக்கிகள் ஒன்றாக நிறுவப்பட்டு ஆயிரம் ஒளி ஆண்டுகள் வரை வானம் கவனமாக ஸ்கான் செய்யப்பட்டது.No fruits !
1974 இல் Arecibo message என்ற செய்தி அனுப்பப்பட்டது.25000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள Cluster M13 என்ற நட்சத்திரத்திரளுக்கு இந்த செய்தி அனுப்பப்பட்டது. இந்த செய்தி மூன்று நிமிடங்கள் நீடித்து வானில் அனுப்பப்பட்டது. 210 பைட் (1679 பிட்)அளவுள்ள (குறுஞ்) செய்தி ஒன்று 2380 MHz அதிர்வெண்ணில் பரிமாறப்பட்டது. 1679 என்பதை 73 x 23 என்ற array அமைப்பில் எழுத முடியும் என்பதால் ஏலியன்கள் இந்த செய்தியை படத்தில் வரைந்து பார்க்கும் போது மேலே உள்ள உருவம் கிடைக்கும்:
இதில் உள்ள செய்திகள் ட்ரேக் மற்றும் Carl Sagan என்பவர்களால் எழுதப்பட்டன.
இந்த படத்தில் கீழ்வரும் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
* எண்கள் 1 முதல் 10 (பைனரியில்)
* DNA மூலக்கூறை உருவாக்கும் ஹைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ் இவற்றின் அணு எண்கள்
* குளுகோசின் வேதியியல் வாய்ப்பாடு
* DNA வின் ஏணி போன்ற சுருள் வடிவம்
* மனிதனின் உருவம் (ஆண்)
* சூரிய மண்டலத்தின் உருவம்
* Arecibo சிக்னலை அனுப்பிய தொலைநோக்கியின் படம்
இந்த செய்தி விடையை எதிர்நோக்கி அனுப்பப்படவில்லை என்றாலும் பிரபஞ்சத்தில் நம் இருப்பை அறிவிக்கும் ஒரு சிறு முயற்சி. அப்படியே அதற்கு பதில் வந்தாலும் அது நம்மை அடைய குறைந்தபட்சம் 25000 ஆண்டுகள் ஆகும்.
இத்தனை களேபரம் செய்த போதிலும் வானம் மௌனமாகவே இருந்தது. ஒருநாள் அதிசயமாக திருவாய் மலர்ந்தது.
WOW சமிக்ஞை |
1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இல் எதிர்பாராமல் வாட்டர் ஹோலில் ஒரு சிக்னல் கிடைத்தது.WOW சிக்னல் என்று அழைக்கப்படும் அது 72 வினாடிகள் நீடித்தது. ஆனால் அது திரும்பவும் உணரப்படவில்லை.சில பேர் இது நாம் அனுப்பிய ஏதோ ஒரு தொலைத்தொடர்பு சிக்னல் தான் எங்கோ பட்டு பிரதிபலித்து வந்திருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள்.
ஒரு கம்ப்யூட்டர் திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டு ஏதாவது சிக்னல் வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கும் வேலை எத்தனை பேஜாரானது என்று நினைத்துப் பாருங்கள்!!
1995 ஆம் வருடம் SETI (Search for Extra Terrestrial Intelligence )என்ற non profit Institute தொடங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான அண்மைய நட்சத்திரங்களை சமிக்ஞைகளுக்காக SETI இதுவரை 1200 -3000 MHz வரம்பில் தேடித் துழாவி உள்ளது.(இதற்கு ஆகும் செலவு ஒரு வருடத்திற்கு 5 மில்லியன் டாலர்கள் ) SETI @home என்ற ப்ராஜக்ட் கூட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான பயனர்களின் வீடுகளில் வேலை நேரம் போக சும்மா இருக்கும் கம்ப்யூட்டர்களில் இருந்தே ET சிக்னல்களைத் தேடும் முயற்சி தான் அது. ஒரு SETI சாப்ட்வேர் ஐ கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்தால் போதுமானது. சிக்னல்களைத் தேடும் பணியை அதுவே செய்யும். ஏதாவது சிக்னல் வந்தால் பீப் பீப் என்று சிவப்பு விளக்கு எரியும்.
இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும் WOW சமிக்ஞைக்குப் பிறகு வானம் மௌனமாகவே உள்ளது. எத்தனை பிரார்த்தித்தாலும் விடை தராத கடவுள் போல, காதலனின் தொடர் கடிதங்களுக்குப் பிறகும் மனமிரங்காத காதலி போல மௌனம் சாதிக்கிறது.
தியாகராஜர் போன்ற தீவிர பக்தர்கள் கூட சில சமயங்களில் இறைவா நீ உண்மையில் இருக்கிறாயா என்று சந்தேகிக்கின்றனர் ( எவரி மாட வினாவோ ராவோ இந்து லேவோ: யார் பேச்சைக் கேட்டாயோ, வரமாட்டாயோ இல்லை நீ இல்லையோ ) அது போல இரவு பகல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாலும் வானில் ஒரு செய்தி கூட வராதது SETI விஞ்ஞானிகளை ஏமாற்றத்துக்கு உள்ளாக்குகிறது. பிரபஞ்சத்தில் யாருமே இல்லையோ அல்லது நம் தேடலே தவறானதோ என்று சில சமயம் யோசிக்க வைக்கிறது.
சிலர் இந்த மாதிரி விஷயங்கள் time capsule (message to
future )அல்லது message in a bottle என்கிறார்கள். (முடியைக் கட்டி மலையை
இழு; வந்தால் மலை..போனால் முடி.) கப்பலிலோ அல்லது படகிலோ செல்லும் போது ஏதாவது ஆபத்து என்றால் ஒரு SOS ! செய்தியை ப்ளாஸ்டிக் பாட்டிலில் எழுதி அதைக் கடலில் வீசுவார்கள். அது யாராவது கைக்குப் போய் சேர்ந்து அதைப் படித்து நம்மைக் காப்பாற்ற வரமாட்டார்களா என்ற நப்பாசையில்.(டைட்டானிக் மூழ்கும் போதும் நிறைய MIB அனுப்பப்பட்டன.) பாட்டில் யாராவது கைக்குப் போய் சேரும் என்பது சந்தேகம் தான். அதற்கான நிகழ்தகவு ரொம்பக் கம்மி. கைக்குப் போய் சேர்ந்தாலும் அவர் படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. அவர் செய்தியைப் படித்தாலும் அதை சீரியசாக எடுத்துக் கொண்டு காப்பாற்ற வர வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.ஆனால் எதற்கும் இருக்கட்டும் என்று அனுப்பும் ஒரு மெசேஜ். அது போல தான் இந்த COSMIC CALLS ..செய்தி எப்போது எங்கே யாரை சென்றடையும் என்று தெரியாது.பிரபஞ்சம் என்னும் சமுத்திரத்தில் நாம் எறியும்
மிகச் சிறிய பாட்டில்கள் இவை.யாராவது ஒருநாள் எடுத்துப் படிக்க மாட்டார்களா என்ற நம்பிக்கை தான்.
சமுத்ரா