கலைடாஸ்கோப் -60 உங்களை வரவேற்கிறது.
.
Problem with life is: There is no background Music .
..
*சுற்றும் பூமி சுற்றும் அதன் சக்கரம் தேய்ந்து விடாதே
**பூமி சுற்றுவது நின்று விட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை.
*மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
சும்மா ஒரு கற்பனைக்காக நம் பூமி சுழலாமல் நின்று விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.அப்போது என்ன ஆகும் என்று பார்க்கலாம். பூமி வழக்கம் போல சூரியனை சுற்றி வருவதால் பருவகாலங்கள் மாற்றமின்றி வந்து கொண்டிருக்கும். ஆனால் பூமியில் இரவு பகல் சுழற்சி நின்று விடும். பாதி பூமி பகல்; பாதி இரவு.
பிரபஞ்சத்தில் தன் அச்சில் சுழலாத கிரகங்களைப் பார்ப்பது மிக மிக அரிது.சில கிரகங்கள் மிக மிக மெதுவாக சுழல்கின்றன (உதா: வெள்ளி). ஆனாலும் சுழலாமல் நிற்கும் கிரகங்கள் அரிது. எந்த ஒரு பொருளை வீசி எறிந்தாலும் அது முதலில் ஓரளவு ஸ்பின் ஆகிறது. அது போல நட்சத்திரத்தில் இருந்து வீசி எறியப்பட்ட கிரகத் துண்டுகள் சுழல ஆரம்பித்து அந்த சுழற்சியைத் தடுத்து நிறுத்த எதுவும் (எந்த விசையும்)இல்லாததால் இன்று வரை சமர்த்தாக சுழன்று கொண்டிருக்கின்றன.என், பிரபஞ்சமே சுழல்கிறது என்று சொல்லும் ஒரு கொள்கை இருக்கிறது.(Kurt Goedel theory ) பிரபஞ்சம் எதில் சுழல்கிறது,எதைப் பொறுத்து சுழல்கிறது என்று சொல்லாததாலும் சுழலும் பொருளுக்கு மையம் அவசியம் (ஐன்ஸ்டீன் கொள்கைப்படி பிரபஞ்சம் மையம் அற்றது.) என்பதாலும் இந்தக் கொள்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.
பூமி சுழலவில்லை என்றால் அதன் பகல் பகுதி தொடர்ந்து சூடேறி எப்போதோ கடல்கள் ஆவியாகி இருக்கும். அந்தப் பகுதி முழுவதும் ஒரு வறண்ட பாலைவனம் ஆகி விட்டிருக்கும். கிரீன் ஹவுஸ் விளைவால் வெப்பம் 110 டிகிரி செல்சியஸ் வரை எகிறும் என்று கணக்கீடுகள் சொல்கின்றன.அதே சமயம் பூமியின் இருண்ட பகுதி பயங்கர குளிரில் தத்தளிக்கும். வளிமண்டல வாயுக்கள் கூட உறைந்து போகும் அளவு குளிர் நிலவும்.(-240 டிகிரி செல்சியஸ்).ஆனால் பூமியின் சாய்ந்த அச்சு காரணமாக அதிர்ஷ்ட வசமாக பூமியின் சில இடங்கள் TWILIGHT ZONE எனப்படும் அந்தி நேர மண்டலத்தில் வரும் என்கிறார்கள்.அங்கே இரவும் அற்ற பகலும் அற்ற ஒரு அதிகாலை அல்லது அந்திமாலை நேர சூழல் எப்போதும் இருக்கும். அந்த இடத்தின் வெப்பநிலை -20 டிகிரி வரை இருக்கும் என்பதால் அங்கே ஓரளவு உயிர்கள் வாழ சாதகமான சூழல் இருக்கலாம்.
நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா?
-இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்று கேட்காதீர்கள் . ஏதோ ஞாபகம் வந்தது சொல்லி விட்டேன்.
...
OUR DAY IS MADE MOSTLY BY SWEET LITTLE THINGS ..
ஒரு நாளில் சின்னச் சின்ன சந்தோஷங்கள் நிறையவே வருகின்றன. நாம் தான் பெரும்பாலான நேரங்களில் அவைகளை கவனிப்பதில்லை.அதுவும் வானை வளைப்பேன் மலையை முறிப்பேன் என்ற சங்கல்பத்துடன் கிளம்பியிருக்கும் இந்த பிசினஸ் ஆசாமிகள் , இந்த சின்ன சின்ன விஷயங்கள் நேர விரயமே தவிர அவற்றால் உபயோகம் இல்லை என்பார்கள்.சின்ன விஷயம் தான் என்றாலும் அவை பின்னாளில் கிடைக்கும் என்று சொல்லி விட முடியாது.
வீட்டில் வயதானவர்கள் , (தாத்தா பாட்டி அப்பா அம்மா)Or நோயாளிகள் இருந்தால் காலை ஆபீஸ் கிளம்பும் அவசரத்திலும் ஒரு முறையேனும் என்ன காபி/ஹார்லிக்ஸ் சாப்பிட்டீங்களா?நேத்து தூக்கம் வந்துச்சா? என்று ரெண்டு வார்த்தை கேளுங்கள் போதும். உங்கள் பாலன்ஸ் சீட்டை அது எந்த விதத்திலும் பாதித்து விடாது.அதே போல காலையில் சீக்கிரம் எழுந்து காபி போட்டு டிபன் செய்து லஞ்ச் பாக்ஸில் சாப்பாடு நிரப்பி வழியனுப்பி வைக்கும் மனைவியை ஏதோ ரோபோட்டைப் பார்ப்பது போல பார்க்காமல், 'என்ன நேத்து தலைவலின்னு சொன்னியே,எப்படி இருக்கு?' 'இன்னிக்கு கோயிலுக்குப் போகனுமா' என்று ஏதாவது ரெண்டு ஹிதவார்த்தை பேசிவிட்டு ஆபீஸ் கிளம்பலாம். கார் டிரைவர் இருந்தால் 'வண்டி எடு' என்று கடுகடு மூஞ்சியுடன் சொல்லாமல் ஒரு புன்னைகையுடன் 'வண்டி எடுப்பா, உன் குழந்தை எப்படி இருக்கு?' என்று கேட்கலாம். (டிரைவருக்கு குழந்தை இருக்கிறதா என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்)காரில் செல்லும் போது சிக்னலில் ஸ்கூல் பஸ் எதிர்பட்டால் குழந்தைகளுக்கு டாட்டா காட்டலாம்.( +2 படிக்கும் குழந்தைக்கெல்லாம் டாட்டா காட்ட வேண்டியதில்லை).பஸ்ஸில் போகும் போது வயதான ஒருவர் நின்று கொண்டு வந்தால் கல்லூளிமங்கன் போல உட்கார்ந்திருக்காமல் சீட்டில் இருந்து எழுந்து 'நீங்க உட்காருங்க' என்று சொல்லலாம்.(தனக்கு வயதாகி விட்டதே என்று அவர் நினைக்கக் கூடாது என்று தான் எழுந்திருக்கவில்லை போன்ற சால்ஜாப்புகள் வேண்டாம்)
ரோட்டில் யாராவது கைகாட்டி லிப்ட் கேட்டால் நிறுத்தி ஏற்றிக் கொள்ளலாம்.ஃபிகராக இருந்தால்தான் ஏற்ற வேண்டும் என்ற வறட்டுப் பிடிவாதம் எல்லாம் வேண்டாம்.ஆபீசில் உராங்-உடாங் குரங்கு போல முகத்தை வைத்துக் கொண்டு வேலை செய்யாமல் பக்கத்தில் இருப்பவரைப் பார்த்து சிரித்து HOW IS WORK TODAY என்று கேட்கலாம்.பானி பூரி சாப்பிட்டு விட்டு கடைக்காரரை பார்த்து THANKS என்று சொல்லலாம்.ATM இல் நமக்குப் பின்னே இருப்பவர் உலக மகா அவசரத்தில் இருப்பது போல நெளிந்து கொண்டிருந்தால் 'சார், நீங்க போங்க' என்று கொஞ்சம் ஒதுங்கலாம்.(நீங்கள் போகும் போது பணம் காலி ஆகி விட்டால் அவரை அப்புறம் திட்டிக்கொள்ளலாம்)வீட்டுக்கு திரும்பி வந்ததும் லாப்-டாப்பை தூக்கி மடியில் வைத்துக் கொள்ளாமல் குழந்தைகளை அழைத்து ஒரு ஊர்ல ஒரு சிங்கம் இருந்துச்சாம் என்று சிறிது நேரம் கதை சொல்லலாம்.ஹோம் வொர்க் செய்து தரலாம். படுக்கப் போதும் முன் நீண்டநாள் பேசாத ஒரு நண்பருக்கு கால் செய்து HOW IS THINGS என்று கேட்டு பழைய நினைவுகளை அசைபோடலாம்.
இப்படி எவ்வளவோ இருக்கின்றன .OUR DAY IS MADE MOSTLY BY SWEET LITTLE THINGS ..
....
ஓஷோவின் ஒரு தியானம், பின் விளைவுகளுக்கு இந்த ப்ளாக் பொறுப்பல்ல.
ஒரு மாதிரியான தியானம் இது.
ஒன்று: முதலில் ஒரு சுடுகாடுக்கு செல்லவும் (ஒருமாதிரி என்று முன்பே சொன்னேன் இல்லையா?) நண்பன் வீட்டுக்கு போகிறேன் என்று வீட்டில் பொய் சொல்லி விடவும் [இந்தக் காலத்தில் எல்லாம் மின்மயானம் வந்து விட்டதால் சு.கா.வை கண்டுபிடிப்பது கடினம் தான். ஆனால் கிராமப் புறங்களில் அவை இன்னும் இருக்கின்றன] அங்கே போய் ஒரு மறைவான இடத்தில் உட்கார்ந்து கொள்ளவும்.[வெட்டியானை கரெட் செய்து ஒரு பத்தோ இருபதோ கொடுத்து விடவும்]அங்கே பிணம் ஒன்று எரிவதை கவனமாக கண் கொட்டாமல் பார்க்கவும் (ஹலோ யார் அது ஓடுவது? முழுவதும் படிங்க சார்,,) சரி இப்போது கொஞ்சம் சீரியசாக பேசலாம்.மனிதன் தன் உடலுடன் தன்னை மிகவும் அடையாளப்படுத்திக் கொண்டு விட்டான். இந்த அடையாளத்தைத் தகர்த்து எறிய இந்த தியானம் மிகவும் உதவி செய்யும் என்கிறார் ஓஷோ.உடல் ஒன்று மெல்ல மெல்ல எரிவதை பார்க்கும் போது நம் உடலுடனான நம் அடையாளம் மெல்ல மெல்ல விலகுவதை நாம் உணர முடியும்.[உனக்கும் இதே கதி தான் மச்சி!]
சரி. சுடுகாடு கஷ்டம் , கொஞ்சம் தர்ம சங்கடம் என்றால் இதன் எளிமைப்படுத்தப்பட்ட VERSION -ஐ வீட்டிலேயே செய்யலாம்.
நன்றாக மல்லாந்து படுத்துக் கொள்ளுங்கள். உடலின் எந்தப் பாகத்தையும் அசைக்காதீர்கள். சவம் போல படுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இறந்து விட்டதாக கற்பனை செய்யுங்கள். [உங்களை சுற்றி உங்கள் உறவினர்கள் அழுவது போல, உங்கள் எல்.ஐ.சி. பாலிசியை உங்கள் மனைவி தேடுவது போல அவரவர்கள் கற்பனாசக்திக்கேற்ப காட்சிகளை அமைத்துக் கொள்ளலாம்]. உங்கள் சுண்டு விரலை அசைத்தாலும் இந்த தியானம் துண்டிக்கப்பட்டு விடும். எனவே PERFECT DEAD BODY மாதிரி கிடக்கவும்.எறும்பு கடிக்கிறது என்றோ கொசு கடிக்கிறதோ அந்த இடத்தில் சொரிய வேண்டும் என்றோ உடலை அசைத்து விடாதீர்கள். நிஜ எறும்பு எப்போதாவது தான் கடிக்கும். மனம் என்னும் எறும்பு தான் உங்களை தியானம் செய்ய விடாமல் கடித்துக் கொண்டே இருக்கிறது என்று உணருங்கள்..இந்த தியானம் செய்யும் போது, உடல் அசையாதிருக்கும் போது உடலுடன் இணைந்த மனமும் தன் அசைவை நிறுத்திக் கொள்கிறது என்று சொல்கிறார் ஓஷோ.
ரெண்டாவது தியானம் ஈசி தானே ? இன்றே முயற்சி செய்யுங்கள். ஆனால் ஒன்று. தியானம் செய்யும் சாக்கில் அப்படியே தூங்கி விடாதீர்கள்.ஏனென்றால் இந்த தியானம் படுத்துக் கொண்டு செய்ய வேண்டும்.அப்படியே ரிலாக்ஸ் செய்து கொஞ்சம் திரும்பிப் படுத்துக் கொண்டே தியானம் செய்யலாம், போர்வை போர்த்திக் கொண்டு செய்யலாம், குறட்டை விட்டுக் கொண்டே செய்யலாம் என்றெல்லாம் நினைத்தால் அடி விழும்.கொஞ்சம் சின்சியராக இருங்கள்.
.....
பார்த்ததில் பிடித்தது
......
ஜோக்.
வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்ட மூன்று பணக்கார மகன்கள் தங்கள் அம்மாவின் பிறந்த நாளுக்கு அன்பளிப்பு அனுப்பினர்.
முதல் மகன் " நான் ஒரு பெரிய பங்களாவை அம்மாவுக்கு கட்டித் தந்திருக்கிறேன்" என்றான்.
இரண்டாம் மகன் " நான் அம்மாவுக்கு உலகிலேயே விலை உயர்ந்த காரை வாங்கி அனுப்பி இருக்கிறேன்" என்றான்.
மூன்றாம் மகன் " அதெல்லாம் சாதாரணம்.. நான் ஓர் உலகிலேயே அபூர்வமான கிளியை வாங்கி அனுப்பி இருக்கிறேன். அந்தக் கிளி வாடிகன் சர்ச்சில் இருபது வருடங்கள் சிறப்புப் பயிற்சி பெற்றது.பைபிளில் அத்தியாயத்தை மட்டும் சொன்னால் போதும்; அதன் வசனங்களை அப்படியே ஒப்புவிக்கும். பைபிளை தலைகீழாக கூட ஒப்புவிக்கும்,மேலும் சர்ச்சின் பிரேயர் எல்லாம் அதற்கு அத்துப்படி; சிறப்புத் திறமை பெற்ற கிளி' அது என்றான்.
ஒருவாரம் கழித்து அம்மாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது.
அன்பு மகன்களுக்கு,
'பெரியவன் கட்டித்தந்த வீடு நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் மகனே , எனக்கு இந்த வயதான காலத்தில் அத்தனை பெரிய வீடு எதற்கு?' வேலைக்காரர்களை வைத்துக் கொள்ளவும் பயமாக இருக்கிறது.
அடுத்தவன் அனுப்பிய காராலும் எனக்கு பெரிய உபயோகம் இல்லை.நான் இந்த தள்ளாத வயதில் எங்கே வெளியே அலையப் போகிறேன்? ஆனால் அனுப்பியதற்கு நன்றி .
கடைசி மகனே, நீ அனுப்பிய கிளி மிகவும் அருமை. ரொம்ப நன்றி. என் வாழ்நாளிலேயே இத்தனை ருசியான கிளிக்கறி சாப்பிட்டதில்லை. என்ன ஒரு ருசி"?
சமுத்ரா