இந்த வலையில் தேடவும்

Monday, February 13, 2012

அச்சமுண்டு அச்சமுண்டு




'உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே ' என்ற பாரதியாரின் (OVER ) confidence எப்போதும் பொருந்தாது என்று யோசிக்க வைத்தது சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படம். சினேகா மற்றும் பிரசன்னா நடித்த படம்.

படத்தின் ஒரு ரத்தினச் சுருக்கம்: பிரசன்னா சினேகா தம்பதிகள் தம் பெண் குழந்தையுடன் வெளிநாடு ஒன்றில் தனியாக வசிக்கிறார்கள்.பிரசன்னா வேலை செய்கிறார். சினேகா ஹவுஸ் WIFE . சினேகா இரண்டாம் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறார். முதல் குழந்தை என்பதால் அந்தப் பெண் குழந்தை மீது சினேகா அளவுக்கதிகமாகவே பாசம் வைத்திருக்கிறார். அந்தக் குழந்தைக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று எப்போதும் பயப்பட்டுக் கொண்டே இருக்கிறார். இதை விரும்பாத பிரசன்னா இது தன் மனைவியின் அதீத மனக்கற்பனை என்று உதாசீனம் செய்து அந்தக் குழந்தையை கராத்தே பயிற்சி பள்ளியில் சேர்த்து தைரியமாக வளர்க்க நினைக்கிறார். இதற்கிடையில் தம் வீட்டை பெயின்ட் செய்ய ஒரு வெளிநாட்டு ஆளை (வில்லன்) அவர்கள் நியமிக்கிறார்கள். அவன் மிகவும் நல்லவனாக இருப்பதாலும் அடிமாட்டு விலைக்கு வீட்டை பெயின்ட் செய்ய ஒத்துக் கொள்வதாலும் இருவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் அந்த ஆள் குழந்தைகளைக் கடத்தி அவர்களை பாலியல் வன்முறை செய்யும் ஒரு சைக்கோ. இது தெரியாமல் வீட்டுக்குள்ளேயே வினையை வைத்துக் கொண்டு வளைய வருகிறார்கள் இருவரும். ஒரு நாள் பிரசன்னா வெளியூர் போய் விட்டார் என்ற தைரியத்தில் சைக்கோ
குழந்தையை கடத்த முடிவெடுக்கிறான். ஆனால் ஏனோ பிரசன்னா வெளியூர் போகாமல் அன்று வீட்டிலேயே இருக்கிறார். வில்லன் தன் கடத்தல் பிளானை அரங்கேற்றுகிறான். சினேகாவை காலில் சுட்டு விட்டு குழந்தையை கடத்தும் போது (உள்ளே குளித்துக் கொண்டிருக்கும்)பிரசன்னா எதிரில் வந்து சண்டை போட்டு கடைசியில் வேறு வழி இன்றி அவனை வன்முறையுடன் சுட்டு வீழ்த்தி குழந்தையைக் காப்பாற்றுகிறார்.சினேகா ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்படுகிறார்.

இதிலிருந்து மூன்று விஷயங்களைப் பேசுவோம்.முதலில் இந்த திரைப்படம் கூறும் சில சுருக்கமான நீதிகள் :-

* வெளியூரிலேயோ வெளிநாட்டிலேயோ தனியாக வசிக்கும் போது வெளியாள்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். இப்படி சொல்வதால் எல்லாரையும் சந்தேகப்படுங்கள் என்று அர்த்தம் இல்லை. யார் மீதும் அசட்டுத்தனமான குருட்டு நம்பிக்கை வைக்க வேண்டாம்.

* உங்கள் மனதில் எதை திரும்பத் திரும்ப நினைக்கிறீர்களோ அதுதான் நடக்கும். (நல்லதோ கெட்டதோ)

* சில சமயம் உங்கள் உன்மனது (intuition ) சொல்வதற்கு செவி சாய்க்கவும்.

*குழந்தைகளை தைரியமாக வளர்க்கவும். பாசம் இருக்க வேண்டியது தான். ஆனால் அந்த பாசமே அவர்கள் வளர்ச்சிக்கு தடையாக அமையக்கூடாது.

௮-1
====

குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுப்போகும், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு பெற்றோரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது என்னவோ உண்மை தான்.இந்த நெருப்பு பெற்றோரின் Maturity level ஐப் பொறுத்து குழந்தை பெரியவனா(ளா)கும் வரையோ இல்லை சாகும் வரையோ தொடரும்.(50 வயது மகன் இன்னும் ஆபீசில் இருந்து வரவில்லையே என்று புலம்பும் பாட்டிகளும் உண்டு!) 'கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற நெடுமாலே' என்று பாடுகிறாள் ஆண்டாள். கம்சன் வயிற்றில் மட்டும் அல்ல. யசோதையின் வயிற்றிலும் தினம் தினம் நெருப்பு தான். மாடு மேய்க்கச் சென்ற தன் பிள்ளை இன்னும் வரவில்லையே என்று தோழியிடம் இவ்வாறு புலம்புகிறாள்:

ராகம்: பூர்வி கல்யாணி

என்னாச்சுதோ ஏதாச்சுதோ -என் கண்மணிக்
கென்னாச்சுதோ
ஏதாச்சுதோ

விண்ணாளும் பரிதி விளையும் பொழுதில் சென்றான்
மண்ணாளும் கம்சன் மாமன் துயர் செய்தானோ (என்னா)

எழிலாடும் வதனி பூதனி என்றொருத்தி வந்தாள்
உடுத்த உடை விலக்கி எடுத்து விஷப்பால் தந்தாள்
பழியாய்க் கிடப்பார் பார் பாரில் அவ்வரக்கரெல்லாம்
பாலனன்றோ என் மகன் பரிதவிக்குதே நெஞ்சம்
(என்னா)

தன் பிள்ளைதான் உலகாளும் பரமாத்மா என்று அரசல் புரசலாகத் தெரிந்த யசோதையே இப்படிப் பாடும் போது சாதாரண குழந்தைகளின் தாய் தந்தையர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி எப்படி கவலைப்படாமல் இருப்பார்கள் ? சரி . சின்னப்பாப்பா என்றால் நாம் தான் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஓரளவு வளர்ந்த குழந்தைகளுக்கு (5 +)பெற்றோர்கள் தான் இதுமாதிரி விஷயங்களில் கொஞ்சம் ட்ரைனிங் கொடுக்க வேண்டும். வீட்டு அட்ரஸ் என்ன? , அப்பாவின் போன் நம்பர் என்ன?, எப்படி மொபைல் போனை உபயோகிப்பது, தவறான நோக்கத்துடன் தொடுபவர்களை, பழகுபவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது,யாராவது ஏதாவது சாப்பிடக் கொடுத்தால் பறக்காவெட்டி போல வாங்கிக் கொள்ளாமல் எப்படி சாரி அங்கிள் என்று சொல்லி மறுப்பது என்றெல்லாம்.

௮-2
====

'எனக்காக என்ன செய்தாய்'? என்று அப்பா அம்மாவைப் பார்த்து நீங்கள் கேட்பதற்கு முன் ஒரு விஷயம். உங்களை உடம்பிலும்
மனத்திலும் ஒரு குறை இல்லாமல் இது வரை வளர்த்து ஆளாக்கியதே ரொம்பப் பெரிய விஷயம். ஸ்கூலில் இருந்து நம் பையன்/பெண் நல்லபடியாகத் திரும்பி வரவேண்டுமே , டூருக்கு சென்ற பிள்ளை எந்த அசம்பாவிதமும் இன்றி நல்லபடியாக வந்து சேரவேண்டுமே என்று உங்கள் பெற்றோர்களும் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு நிறைய நாட்கள் வருந்தி இருப்பார்கள். தெய்வங்களை வேண்டி இருப்பார்கள். கண்ணீர் விட்டிருப்பார்கள்.

மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து
வேலை மெனக்கெட்டு விழித்திருந்து -சூலாகிப்
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை
பித்தானால் என்செய்வாள் பின்? -என்கிறார் பட்டினத்தார்.

பிள்ளை பித்தானாலும் பரவாயில்லை. பின்னொருநாள் 'நீ எனக்காக என்ன செய்தாய் (செய்து கிழித்தாய்)?' என்று ஒரு வார்த்தை கேட்டுவிட்டால் அவர்கள் தாங்க மாட்டார்கள்.

௮-3
====

இந்தியாவில் தான் CHILD ABUSE எனப்படும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகம் என்று அந்த திரைப்படத்தில் சொல்கிறார்கள்.சரி. குற்றங்களின் அறிகுறிகளை (symptom ) அழிப்பதில் தான் நாம் எப்போதும் கவனம் செலுத்துகிறோம்.
குற்றவாளியை அடித்து உதைப்பது, நீ எல்லாம் அக்கா தங்கையுடன் பிறக்கவில்லையா என்று திட்டுவது தூக்கு தண்டனை அளிப்பது இப்படி. குற்றங்களின் வேர்கள் (Cause )எங்கே என்பதை நாம் மறந்து விடுகிறோம். Eliminate the causes; not the symptoms! திரைப்படங்களும் வில்லனை ஹீரோ வெறியுடன் கொன்று விடுகிறான் சுபம் என்று முடிந்து விடுகின்றன!

நாம் என்னவோ இயேசுவின், புத்தனின் நேரடி வாரிசுகள் மாதிரி நம்மை சில சமயங்களில் நினைத்துக் கொள்கிறோம். .பொது இடத்தில் நாம் பத்தோடு பதினொன்றாக பர்ஸ் திருடியவனை அடிப்பது ஒருவித PSYCHOLOGICAL PROTECTION என்கிறார் ஓஷோ. அதாவது நான் நல்லவன் நான் ஒழுக்கமானவன் நான் எதையும் திருடவில்லை என்று மறைமுகமாக சொல்வது. அடிக்காமல் ஒதுங்கி நின்றால் தன்னையும் திருடன் என்று சமுதாயம் நினைத்து விடுமோ என்ற பயம்.

நாம் எல்லாக் குற்றங்களையும் (கொலை, கொள்ளை, கற்பழிப்பு, CHILD ABUSE ) என்றாவது ஒருநாள் மனதளவில் கண்டிப்பாக செய்திருப்போம்.
அதை உடலளவில் செய்து விட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக குற்றவாளியை அருவருப்பாக பார்க்கிறோம். ஆம்..They need a treatment..not punishment. சமூகத்தில் நடக்கும் ஓவ்வொரு குற்றத்துக்கும் நாமும் ஏதோ ஒரு விதத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாகிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம் என்கிறான் பாரதி.நார்மலான (?) மனிதன் ஒருவன் பிஞ்சுக் குழந்தைகளைக் கற்பழிக்கும் அவல நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணம் யார்? அவனுக்கு தாள முடியாத தனிமையை,இயலாமையை பரிசளித்தது யார்? இயல்பாக கிடைக்கும் வாழ்வின் சின்னச்சின்ன சந்தோஷங்களை அவனுக்கு மறுத்தது யார்? நாம் தான்!




சிக்காட்டிலோ என்ற சீரியல் கில்லர் பற்றித் தெரியுமா? படத்தில் அப்பாவியாக போஸ் கொடுக்கிறானே அவன் தான்.அவன் குறிவைத்தது பெரும்பாலும் பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியரைத்தான் . 'நீ ஆண்மை அற்றவன்' 'நீ ஒன்றுக்கும் லாயக்கு இல்லாதவன்' என்று அவன் மனைவி அவனை அடிக்கடி திட்டியது அவன் உள்மனதில் ரணமாக உறுத்தி இருக்கிறது. எனவே ஒவ்வொரு கொலையை செய்யும் போது
ம் அவன் தன் ஆண்மையின் உச்சத்தை உணர்ந்து இருக்கிறான். அவனது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு கடைசியில் அவனுக்குதான் மரண தண்டனை கொடுக்கப்பட்டது. அவனை மனதளவில்
உளைச்சலுக்கு உள்ளாக்கிய மனைவிக்கு வெறும் கண்டனங்கள் தான்.

இன்னொரு சீரியல் கில்லர் கோர்டில் இப்படி வெடித்தான். "இப்போது என்னை எல்லாரும் இத்தனை பிரபலமாக கவனிக்கிறீர்களே? கேமராவைத் தூக்கிக் கொண்டு வந்து படம் பிடிக்கிறீர்களே? இதே சமுதாயம் தான் என்னை என் சிறுவயதில் புறக்கணித்தது. தனிமையில் , இருட்டில் , இயலாமையில் என்னை குமுற வைத்தது. சாப்பாடு இல்லாமல் தெருக்களில் அலைய வைத்தது. அப்போது எங்கே இருந்தது இந்த சமுதாயம்? நீங்கள் வைத்திருக்கும் கேமெராக்கள் ஒன்றின் விலையில் எனக்கு சாப்பாடு வாங்கித் தந்திருந்தால் இந்த அவல நிலைக்கு நான் வந்திருப்பேனா?"

நார்மலான ஒரு மனிதன் மனத்தில் CHILD ABUSE , HOMO SEXUALITY போன்ற பாலியல் விகாரங்கள் உருவாவதற்கு இந்த சமுதாயம் தான் முழுக்க முழுக்க பொறுப்பு.

விவேக் கோர்டில் வசனம் பேசுவதை நாம் எல்லாரும் காமெடியாகத் தான் பார்க்கிறோம்.ஆனால் அதன் பின்னே இருக்கும் கசப்பான உண்மைகளை மறந்து விடுகிறோம்.


~சமுத்ரா



14 comments:

Kumaran said...

இனிய காலை வணக்கம்,
தாமதமாக பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்கவும்.
பதிவி கலைக்கட்டிவிட்டது..திரைப்பட விமர்சனம் மாதிரி தொடங்கி சீரியல் கில்லர் சிக்காட்டிலோ வரை எத்தனையோ தகவல்கள், விளக்கங்கள்..மனதார ஒன்றிப்போகிறேன்...தங்கள் கருத்துக்குள் என்னை ஆழமாக சிந்திக்க வைக்கின்றன.தொடரட்டும் தங்கள் பணி..என் நன்றிகள்.

சைக்கோ திரை விமர்சனம்

adhvaithan said...

arumaiyaana pathivu... pramatham.. sindhikka vaiththathu

முனுசாமி said...

நன்றி.........ஆரோக்கியமான பதிவிற்கு

HVL said...

உங்கள் பதிவிற்கு கமெண்ட் போடுவதில்லையென்றாலும் தொடர்ந்து படித்து வருகிறேன்! மிக நன்றாய் இருக்கிறது!

இளங்கோ said...

good one post

Jayadev Das said...

\\விண்ணாளும் பரிதி விளையும் பொழுதில் சென்றான் மண்ணாளும் கம்சன் மாமன் துயர் செய்தானோ (என்னா)\\ யசோதை ஸ்ரீ கிருஷ்ணா பகவானை தன் வயிற்றில் பிறந்த மகனாகத்தான் பாவிக்கிறார், யசோதையைப் பொறுத்தவரையில் ஸ்ரீ கிருஷ்ணா வசுதேவர்-தேவகியின் புத்திரன் என்ற விஷயம், ஸ்ரீ கிருஷ்ண- அவரது அண்ணன் ஸ்ரீ பலராமா இருவரையும் மதுராவுக்கு அங்கே நடக்கும் குஸ்தி போட்டி ஒன்றில் பங்கேற்க அழைத்துச் செல்ல அக்ரூரர் வரும் வரையிலும் தெரியாது. அப்படியானால் கம்சன் மாமன் என்று யசோதை பாடுவதாக இங்கே உள்ளது எப்படி என்று புரியவில்லை....

Some additional Information:

[சொல்லப்போனால் ஸ்ரீ கிருஷ்ணா அவர் பகவான் என்று யசோதை ஒரு போதும் கருதியதில்லை, அப்படியே ஏதாவது சந்தேகம் வரும் அளவுக்குப் போய் விட்டால் அதை பகவான் உணர்ந்து கொண்டு உடனடியாக தனது யோக மாயையை வைத்து அவர் சிந்தனையை வேறு பக்கம் திருப்பி விட்டு மறக்கடிக்கச் செய்து விடுவார். யசோதையைப் பொறுத்த வரையில், எப்போதும் தன் மகனுக்கு பசிக்குமே, அவனுக்கு ஏதாவது நோய் நொடி வந்து விடுமே அல்லது பூதனா போல தீய சக்திகள் தாக்கி விடக்கூடுமே என்று எந்நேரமும் ஒரு தாயன்போடு பகவானைப் பராமரிக்கிறார். அவ்வாறு அல்லாது ஸ்ரீ கிருஷ்ணா தான் பகவான் என்ற எண்ணம் மனதில் வந்து விட்டால் அவர் மேல் மகன் என்ற முறையில் அன்பு செலுத்த முடியாது. சொல்லப் போனால் பகவானே தான் பகவான் என்பதையும் மறந்து விடுகிறார். இந்த மறதி தான் இந்த இருவருக்குமுள்ள பாச பினைப்புக்கே அஸ்திவாரம். ]

Jayadev Das said...

குழந்தை வளர்ப்பு பற்றி சில அவசியமான் சங்கதிகள்- எனக்கு ரொம்ப உதவியா இருக்கும், குறிச்சு வச்சுக்கறேன், நன்றி.

Jayadev Das said...

\\'எனக்காக என்ன செய்தாய்'? என்று அப்பா அம்மாவைப் பார்த்து நீங்கள் கேட்பதற்கு முன் ஒரு விஷயம். \\இப்படி ஒருத்தன் கேட்கிறான் என்றால் அவனுக்கு/அவளுக்கு இன்னும் திருமணமாகி குழந்தைகள் பிறக்கவில்லை என்று அர்த்தம். அதுக்கப்புறம் நிச்சயம் இந்தக் கேள்வியை எவனும் கேட்கமாட்டான். தன்னுடைய குழந்தைகளை வளர்க்கும்போது ஒவ்வொரு கணமும் தனக்காக தன்னுடைய தாய் தந்தையர் செய்த தியாகங்கள் எவ்வளவு என்பதை உணர்ந்த வண்ணமே இருப்பான்.

Jayadev Das said...

\\நார்மலான ஒரு மனிதன் மனத்தில் CHILD ABUSE , HOMO SEXUALITY போன்ற பாலியல் விகாரங்கள் உருவாவதற்கு இந்த சமுதாயம் தான் முழுக்க முழுக்க பொறுப்பு.\\ காய்ச்சல் தலைவலி போன்ற வியாதிகளைப் போலவே மனச்சிதைவு [Psychological Disorder] என்பதும் ஒரு வியாதிதான் பாஸ். சமுதாய ரீதியான காரணங்களாலும் மனச்சிதைவு ஏற்படலாம், ஆனால் நூறு சதவிகிதம் அது பொறுப்பல்ல. உடல் இருந்தால் அது சம்பந்தப் பட்ட நோய்கள் வரத்தான் செய்யும், அதே போல மனம் என்று ஒன்று இருந்தால் மனச்சிதைவு நோய் வரத்தான் செய்யும். மனச்சிதைவு எல்லோருக்குமே இருக்கிறது, only difference is the degree varies. சிலருக்கு குறைவு, சிலருக்கு கொஞ்சம் அதிகம்.

சமுத்ரா said...

ஹி ஹி இந்தப் பாட்டு நான் எழுதியது. :):):)மேலும் பூதனி,சகடாசுரன் எல்லாம் வந்ததற்குப் பிறகு யசோதா
ஒருவாறு என்ன விஷயம் என்று தெரிந்து கொண்டிருப்பாள் என்று நினைக்கிறேன்.She was not that dumb !

kaialavuman said...

அருமையான கருத்துகள் சமுத்ரா.

உங்களுக்கு விருது காத்திருக்கிறது. தயவு செய்து இங்கு வந்து http://kaialavuman.blogspot.in/2012/02/normal-0-false-false-false-en-us-x-none.html ஏற்றுக்கொள்ளவும்.

Chandru said...

//ஒவ்வொரு பெற்றோரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது என்னவோ உண்மை தான்.//இதற்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தமும், விரிவாக்கமும் ஒரு பெற்றோரால்தான் உணரமுடியும்.

பயிர் வளர்க்கும் போது களை எடுத்துத்தான் தீர வேண்டும். அதைப் பற்றி கவலைப்பட்டு அதற்காக இவ்வளவு மெனக்கெட வேண்டாம்.பிடுங்கினோமா எறிஞ்சோமா ன்ட்டு போகனும்.

Riyas said...

good post

நெல்லி. மூர்த்தி said...

"குற்றங்களின் வேர்கள் (Cause )எங்கே என்பதை நாம் மறந்து விடுகிறோம். Eliminate the causes; not the symptoms!"

100% உண்மை!