இந்த வலையில் தேடவும்

Monday, December 12, 2011

கலைடாஸ்கோப்-46

லைடாஸ்கோப்-46 உங்களை வரவேற்கிறது


==

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;- தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

- ஹலோ, எங்கே ஓடுகிறீர்கள்? பாரதியாரைப் பற்றி எல்லாம் பேசப் போவது இல்லை. ஏற்கனவே நிறைய பேர் காது புளிக்கும் அளவு பேசி விட்டார்கள்.

நெருப்பின் ஒரு சிறிய பொறியை 'இது என்ன செய்து விடப் போகிறது' என்ற அலட்சியத்துடன் (அவர்) காட்டில் வைத்து விட்டுப் போனாராம். திரும்பி வந்து பார்த்த போது காடே எரிந்து வெந்து தணிந்து இருந்ததாம். நெருப்பின் தன்மை அத்தகையது. பொறியாக இருந்தாலும் நெருப்பு நெருப்புதான். தன்னை தீண்டும் எதையும் நெருப்பாகவே மாற்றும் சக்தி நெருப்புக்கே உண்டு. 'நெருப்பு, பகை இந்த இரண்டையும் மிச்சம் வைக்காமல் முடிச்சிரணும்'-இப்படி தமிழ் சினிமா வில்லன்கள் சில சமயங்களில் புத்திசாலித்தனமாக வசனம் பேசுவதை நீங்கள் கேட்டிருக்கக்கூடும்.

இப்போதெல்லாம் கோரமான தீ விபத்துகள் பற்றிய செய்திகளை அடிக்கடி கேட்கிறோம். சமீபத்தில் கூட கொல்கொத்தாவில் ஒரு பிரபலமான ஆஸ்பத்திரியில் நடந்த ஒரு தீவிபத்தில் எழுந்து நடக்கக் கூட திராணி இல்லாமல் படுத்துக் கிடந்த நோயாளிகளை நெருப்பு காவு வாங்கி இருக்கிறது.

ஐ.டி. கம்பெனிகளில் சேருபவர்களுக்கு முதலில் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கிறார்களோ இல்லையோ FIRE SAFETY training என்று ஒருநாளை முழுவதும் ஒதுக்கி விரிவான ட்ரைனிங் கொடுப்பார்கள்.'தீ எப்படிப் பரவுகிறது, எப்படி தீயை மேலும் பரவாமல் தடுப்பது, எப்படி பாதுகாப்பாக (பதட்டப்படாமல்) வெளியேறுவது, நடக்க முடியாதவர்களை எப்படி சுமந்து கொண்டு வெளியே வருவது, தீயணைப்பான்-களை எப்படி உபயோகிப்பது ' என்றெல்லாம். ஆனால் நம் நகரங்களில் குருவிக் கூடு போல கட்டப்பட்டிருக்கும் பலமாடி நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு இது போன்ற முறையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றனவா என்று தெரியவில்லை. மருத்துவமனை ஊழியர்களும் பள்ளி ஆசிரியர்களும் திடீரென்று நெருப்பு பற்றிக் கொண்டால் அந்த சூழ்நிலையை பதட்டமில்லாமல் கையாளும் அளவுக்கு பயிற்சி பெற்றிருக்கிறார்களா என்பது சந்தேகம் தான்.
நிறைய பேருக்கு தீயணைப்புக் கருவியை எப்படி உபயோகிப்பது எந்தப் பக்கம் திறப்பது என்று கூடத் தெரிந்திருப்பதில்லை. 'எல்லாம் தீப்பிடிக்கும் போது பார்த்துக் கொள்ளலாம்' என்ற அலட்சியத்துடனே இருக்கிறார்கள். தீப்பிடிக்கும் போது எதைப் பார்த்துக் கொள்வது? மள மள என்று பரவும் தீயைத்தான் பெப்பெப்பே என்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்!

'தேவகிக்கும் வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தை தன்னை சாகடிக்கும் என்று தெரிந்திருந்தும் கூட கம்சன் ஏன் இரண்டு பேரையும் ஒன்றாக ஒரே சிறையில் அடைக்கிறான்?' என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. அது போல தீ பரவுவதற்கு மூன்று விஷயங்கள் கண்டிப்பாக ஒன்று சேர வேண்டும். இதை FIRE TRIANGLE என்பார்கள். எரிபொருள், வெப்பம், ஆக்சிஜன் இவை மூன்றும் அந்த முக்கோணத்தின் பக்கங்களாக இருக்கின்றன.இந்த மூன்றில் ஒன்று ஒத்துழைக்கா விட்டாலும் நெருப்பு பெரும்பான்மை இல்லாத அரசியல்வாதி போல வலுவிழந்து விடும்.

நெருப்பின் மீது தண்ணீர் ஊற்றுவது வெப்பத்தை அகற்றி இடத்தை குளிர்விக்கிறது. எனவே முக்கோணம் உடைபட்டு நெருப்பு நின்று விடுகிறது. ஆனால் எல்லாவகை நெருப்புக்கும் தண்ணீர் ஊற்றக் கூடாது என்கிறார்கள்.நெருப்பு மின்சாரம் மூலம் பரவி இருந்தால் அதன் மீது தண்ணீர் ஊற்றுவது ஆபத்தை நாமே விலைக்கு வாங்குவது போல.அடுத்து எரிபொருளை நெருப்புக்கு இரையாகாமல் அகற்றுவது. எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம் என்பதற்கு இது தான் அர்த்தம்.மூன்றாவதாக நெருப்புக்குக் கிடைக்கும் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்துவது, எரியும் மெழுகுவர்த்தியை நாம் வாயால் ஊதி அணைக்கும்போது இதை தான் செய்கிறோம். பெரும்பாலான தீயணைப்புக் கருவிகள் இதைத்தான் செய்கின்றன.

மேலும்,ஒருவரை நெருப்பு சாகடிப்பதை விட புகை தான் சாகடிக்கிறது என்று சொல்வார்கள்.அதாவது இருக்கும் ஆக்சிஜனை எல்லாம் நெருப்பு பேராசையுடன் எடுத்துக் கொள்ள ஆள் சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத் திணறி செத்துப் போகிறான். எனவே நெருப்பு நம் பக்கத்தில் வரவில்லையே , இந்த சிறிய வேலையை முடித்துக் கொண்டு அப்புறம் போய்க் கொள்ளலாம் என்று தேவையில்லாத ஹீரோயிசம் எல்லாம் வேண்டாம். ஃபயர் அலாரம் அடித்ததும் தண்ணீர் லாரி சத்தத்தைக் கேட்டு விரைந்தோடும் நகரப் பெண்கள் போல தலை தெறிக்க ஓடி வெளியேறவும்!

தீயை அணைக்க இன்னொரு வழி இருக்கிறது.'நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா' என்று தமிழ் சினிமாவில் பாடுவார்களே அது தான் அது. காட்டுத்தீ பரவும் போது அதற்கு எதிர்பக்கத்தில் இருந்து இன்னொரு தீயை பரவ விட்டு (இரண்டையும்) அணைப்பார்கள். ஆனால் இது கொஞ்சம் ஆபத்தான தீயணைப்பு! உங்கள் வீட்டில் தீ பிடித்துக் கொண்டால் அதை அறிவியல் ரீதியாக அணைக்கிறேன் பேர்வழி என்று இந்த மாதிரி ஏதாவது செய்து எரிகிற நெருப்பில் பெட்ரோல் ஊற்றி விடாதீர்கள்.முதலில் நெருப்பு முக்கோணத்தை உடையுங்கள் ..அது போதும்..


==

நெருப்பு, பகை இந்த இரண்டைப் போல இன்னொன்றையும் மிச்சம் வைக்கக் கூடாது.அது என்ன? Any guess ? என்னது சாப்பாடா? அட ராமா,,24 x 7 இதே நினைப்பு தானா உங்களுக்கு ? கடன் தான் அது.

அதனால் ஒருவரிடம் கடன் வாங்கி இருந்தால் முழுவதையும் திருப்பிக் கொடுத்து விடவும். நூறு ரூபாய் கடன் வாங்கி விட்டு மாதம் பத்து ரூபாய் கொடுக்கும் தவணை முறைக் கடன் என்றாலும் தொண்ணூறு ரூபாய் கொடுத்தாயிற்றே, இன்னும் பத்து ரூபாய் கொடுக்காவிட்டால் என்ன என்று அல்பத்தனமாக யோசிக்காமல் முழுவதையும் செட்டில் செய்து விடவும்.


==

இன்னும் ' கொலவெறி ' பாடல் கேட்கவில்லையா? என்று ஏதோ உலக மகாக்குற்றம் செய்து விட்டதைப் போல கேவலமாகப் பேசினார்கள் ஆபீசில். தமிழில் ஆ என்றால் ஊ என்று சொல்லவராத ஒரிசாக் காரர்கள், குஜராத்திகள், மராட்டிக் காரர்கள் எல்லாம் அந்தப் பாட்டுக்கு மகுடிப் பாம்பாக மயங்கிக் கிடக்கிறார்கள்.சரி அந்தப் பாட்டில் அப்படி என்ன தான் இருக்கிறது
எட்டாவது ஸ்வரம் எதையாவது உபயோகித்திருக்கிறார்களா என்று யூ-டியூபில் கேட்டுப் பார்த்தேன்.எனக்கு என்னவோ அந்தப் பாடல் மிகவும் சுமாராகத் தான் இருந்தது. இதனுடன் ஒப்பிடும் போது தனுஷின் இன்னொரு பாடலான 'நான் சொன்னதும் மழை வந்துச்சா' பாடல் எவ்வளவோ பரவாயில்லை.

நம் மக்களுக்கு சில விஷயங்கள் ஏன் பிடித்துப் போகின்றன என்பது புதிராகவே உள்ளது. உதாரணமாக மிகவும் யோசித்து, நிறைய கஷ்டப்பட்டு, புத்தகங்களை Refer செய்து ஒரு விஷயத்தை மெனக்கெட்டு எழுதுவோம்.அது அவ்வளவாக பிரபலம் ஆகாது.ஏனோ தானோ என்று நமக்கே இஷ்டம் இல்லாமல் எதையோ கிறுக்கி வைப்போம். அது எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும். ஆனால் இந்த மாதிரி INSTANT PUBLICITY பெற்று விடும் விஷயங்களில் நாம் படைப்பாளரின் முயற்சி, உழைப்பு, வலி, வேதனை, முதிர்ச்சி இதையெல்லாம் பார்க்க முடியாது என்பது உண்மை தான்.

மேலும் , ஒரு விஷயம் பிரபலம் அடைவது என்பது ஒருவிதமான CHAIN REACTION என்று தோன்றுகிறது. 'இவ்வளவு பேர் விரும்பிக் கேட்கிறார்கள்; அப்படியென்றால் இதில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும்' என்ற ஒரு மாயை.உதாரணமாக, நீங்கள் ஒரு ப்ளாக்கின் உள்ளே போகிறீர்கள். அதன் சமீபத்திய பதிவுக்கு 87 comments என்றோ 98 comments என்றோ இருந்தால் அப்படி என்ன தான் எழுதியிருக்கிறார் என்ற ஆர்வத்தில் (அல்லது பொறாமையில்) அதைப் படிப்பீர்கள்.அதே 0 கமெண்ட்ஸ் என்றோ 1 கமெண்ட் என்றோ இருந்தால், சரி தான் உள்ளே எதுவும் மசாலா இல்லை
போலிருக்கிறது என்று படிக்காமலேயே வெளியேறி விடுவீர்கள்.(உண்மை என்ன என்றால் 87 கமெண்டில் பாதிக்கும் மேல் ப்ளாக் ஓனரே போட்டிருப்பார்) 'கொலைவெறி' அந்த ரகம். உண்மையில் விரும்பிக் கேட்டவர்களை விட அப்படி என்ன தான் இருக்கிறது என்ற ஆர்வத்தில் கேட்டவர்கள் (கேட்டு ஏமாந்தவர்கள்) தான் அதிகம் என்று தோன்றுகிறது.

சினிமாப் பாடல்கள் ஓவராகக் கொண்டாடப்படுவதற்குக் காரணம் அதன் சாசுவதம் அற்ற தன்மையும் தான்.(Enjoy it before it 's gone !)காலப் போக்கில் கரைந்து போய் விடக் கூடிய விஷயங்களாக அவை இருக்கின்றன.சினிமாப் பாடல்களை கர்நாடக இசைப் பாடல்களிடம் இருந்து வேறுபடுத்துவதும் இந்த அம்சம் தான்.

ஒரு காலத்தில் மன்மத லீலையை
ஒரு காலத்தில் தென்றல் வந்து என்னைத் தொடும்
ஒரு காலத்தில் முக்காபுலா
ஒரு காலத்தில் வாளமீனுக்கும்
ஒரு காலத்தில் என்னமோ ஏதோ

ஆனால் ஒரு 'எந்தரோ மகானு பாவுலு' வோ 'என்ன தவம் செய்தனை' யோ காலம் என்ற பூச்சி அரிக்காத இசைப் பொக்கிஷங்கள்!


==

சில விம்ங்ள் பயங்கர எரிச்சல் தரும்.எந்திரன் ரஜினி செய்வது போல டி.வி யை அப்படியே போட்டு உடைத்து விடலாமா என்ற அளவுக்கு. பாட்டி பேத்தியுடன் சேர்ந்து FAIRNESS கிரீம் பூசிக் கொண்டு லூட்டி அடிப்பதும்,டியோடரண்ட் போட்டுக் கொண்டு போகும் இளைரை பெண்கள் தொடர்வதும், சோப்பை பூசிக் கொண்ட மாத்திரத்தில் உலக அழகி ஆகி விடுவதும்..

ஆனால் Everything has exceptions !சில விளம்பரங்கள் உண்மையிலியே கற்பனைத் திறன் மிக்கவையாக இருக்கின்றன. பார்ப்பவர் முகத்தில் சிறு புன்னகையை வரவழைக்கின்றன.

உதாரணம்:

*காரில் சைக்கிள் மோதி அதன் ஒரு பகுதி உடைந்து விடுகிறது. காரின் ஓனர் கோபத்துடன் 'அஞ்சு ரூபா எடு ' என்று கத்துவது. (FEVI QUICK )

*காரில் கீறல் செய்தபடி ஒரு சின்னப்பையன் ஓடுவது.'வயிற்றெரிச்சலா' என்று கேட்டு ஒரு மிட்டாயை விளம்பரப்படுத்துவது.

*வீட்டையே அலங்கோலப்படுத்தி ஒரு சிறுவன் வாஷிங் மெஷினுக்கு கைவைப்பது.

*நாக்கை கண்டபடி சுழற்றி பாடகர் போட்டியில் வெற்றி பெறுவது (சென்டர் பிரெஷ்)

*தாத்தா படி ஏறி வரட்டும் என்று சின்னப்பெண் வேண்டுமென்றே OUT OF ORDER போர்டை லிப்டில் வைப்பது ( இன்சூரன்ஸ் )

*கயிற்றின் மேல் நடந்து கொண்டிருப்பவருக்கு ஒருத்தர் அங்கேயே வந்து கொரியர் டெலிவர் செய்வது

சரி. கீழே உள்ள படங்களையும் பார்க்கவும்.==

நேற்று சன் டி.வியில் 'ஆனந்தபுரத்து வீடு' பார்த்தேன். ஹ்ம்ம்..படத்தில் வருவது மாதிரி நிஜ வாழ்க்கையில் நம் வீட்டிலும் ஒரு (நல்ல) ஆவி இருந்து காலையில் காபி போடுவது , கேரட் நறுக்குவது, சட்னி அரைப்பது, முகத்தில் சோப்பு பூசிக்கொண்டு மக்3கைத் தேடும் போது நகர்த்தி விடுவது என்று இது மாதிரி சின்னச் சின்ன எடுபிடி வேலைகள் செய்தால் தேவலாம் என்று தோன்றுகிறது. இதெல்லாம் கூட வேண்டாம். பாத்திரம் கழுவ மட்டும் ஏதாவது நல்ல ஆவி இருந்தால் சொல்லுங்கள்.
வீட்டு வேலைகளிலேயே அலுப்பானது இந்த பாத்திரம் கழுவுவது தான்!==
ஹி ஹி..

==
ஓஷோ ஜோக்.

சிரிப்பைத் தவிர புனிதமான மதம் வேறொன்று இல்லை- ஓஷோ..

இரண்டு வயதான தாத்தாக்கள் ஒரு பார்க் பெஞ்சில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

தாத்தா 1 : ஜான், எனக்கு இப்போ 83 வயசு.. வாழ்க்கை இப்போ ஒரே வலியாகவும், வேதனையாகவும் இருக்கு,,,உனக்கும் இதே வயசு தானே?நீ எப்படி ஃபீல் பண்றே?

தாத்தா 2 : நானா? எனக்கென்ன, இப்ப தான் பிறந்த குழந்தை போல உணர்றேன்..

தாத்தா 1 : அப்படியா? அதிசயம் தான்? உண்மையாகவா?

தாத்தா 2 : ஆமா. முடி இல்லை ...பல் இல்லை.. அப்புறம் இப்ப பாரு நான் என் பேன்ட்-டை ஈரம் செய்து விட்டேன்..


என்னது சிரிப்பு வரவில்லையா? அப்படியானால் இன்னொன்று.

ஒருநாள் ஒரு சின்னப்பெண் ஸ்கூல் முடிந்து வந்து தன் பாட்டியிடம் 'பாட்டி , பாட்டி கள்ளக்காதல் அப்படீன்னா என்ன? என்றாள்

பாட்டி , 'இரு சொல்றேன்...என்ன சொன்ன? கள்ளக்காதல் , கள்ள ...காதல் ...அய்யய்யோ கடவுளே ஒரு நிமிஷம் இரு' என்று பதறிக் கொண்டு உள்ளே ஓடினாள்..

தன் பெட்-ரூமுக்கு சென்று பீரோவை மெதுவாக நகர்த்தி சுவரில் இருந்த இன்னொரு ரகசிய அலமாரியை கஷ்டப்பட்டு திறந்தாள்.

ஒரு எலும்புக் கூடு புழுதி பறக்க வெளியே வந்து விழுந்தது.


முத்ரா

17 comments:

கணேஷ் said...

மிச்சம் வைக்காமல் முடிக்க வேண்டியது கடன் - 100 சதம் சரி. கடைசி ஜோக் அருமை. கரடி ஜோக்கும் புன்னகை மலரச் செய்தது. இந்த ‘கொலவெறி’ பாடல் பற்றி... நானும் ஏமாந்தவன்தான். உங்கள் கருத்தே என் கருத்தும். விளம்பரங்களில் சிலவற்றை நானும் மிக ரசிப்பேன். (நீங்கள் பட்டியலிட்ட எல்லாமே பிடித்தவைதான்) கலைடாஸ்கோப் மிகப் பிரமாதம்!

Katz said...

//- ஹலோ, எங்கே ஓடுகிறீர்கள்? பாரதியாரைப் பற்றி எல்லாம் பேசப் போவது இல்லை// laughed instantly

ஆனந்தபுரத்து வீடு பற்றி நானும் எழுதியுள்ளேன். நீங்க இப்போ நினைதததை போலவே.

http://thegoodstranger.blogspot.com/2010/08/3-aug-2010.html

சீனுவாசன்.கு said...

சிரிப்பு தாங்கல!சூப்பர் தல!

Jayadev Das said...

\\'கொலைவெறி' அந்த ரகம். உண்மையில் விரும்பிக் கேட்டவர்களை விட அப்படி என்ன தான் இருக்கிறது என்ற ஆர்வத்தில் கேட்டவர்கள் (கேட்டு ஏமாந்தவர்கள்) தான் அதிகம் என்று தோன்றுகிறது.\\ "இந்தக் கூட்டம் காசு குடுத்து கூட்டி வந்ததல்ல, தானா வந்தது" அப்படீங்கிற மாதிரி இந்தப் பாட்டை கேட்பவர்களும் விரும்பித்தான் கேட்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

Sugumarje said...

//ஒரு எலும்புக் கூடு புழுதி பறக்க வெளியே வந்து விழுந்தது//

ROFL - இது ஓவர் :)

bandhu said...

//நம் மக்களுக்கு சில விஷயங்கள் ஏன் பிடித்துப் போகின்றன என்பது புதிராகவே உள்ளது//
முற்றிலும் உண்மை. ஆனால், காரணம் எதுவும் இல்லாமல் பெரிய வெற்றி பெறும் எதுவும் சீக்கிரமே மறைந்தும் விடுகிறது. நாக்கு முக்க , என்னடி முனியம்மா போன்ற பாடல்கள் எங்கேயும் கேட்டுக்கொண்டே இருக்கும், ஒரு காலத்தில்.. இப்போது யாராவது கேட்கிறார்களா? அப்படித்தான் இதுவும்..இதுவும் மறைந்து போகும்..

Philosophy Prabhakaran said...

ஒருவேளை தேவகியையும் வசுதேவரையும் தனித்தனி சிறையில் வைத்திருந்தால் கூட வசுதேவர் காற்றாக உருமாறி வந்து புணர்ந்தார், களியாக மாறி புணர்ந்தார்ன்னு ஏதாவது ஒரு உலகமகா புருடாவை அள்ளி விட்டிருப்பார்கள்...

Anonymous said...

good one as always

Suresh

suryajeeva said...

colourful...

Uma said...

//இதனுடன் ஒப்பிடும் போது தனுஷின் இன்னொரு பாடலான 'நான் சொன்னதும் மழை வந்துச்சா' பாடல் எவ்வளவோ பரவாயில்லை.//எனக்கும் இந்த பாட்டுத்தான் பிடிச்சுது....கொலைவெறி பாட்டுக்கு நியூஸ் சேனல்ஸ் குடுக்குற hype கொஞ்சம் ஓவராவே இருக்கு...
//ஒரு விஷயம் பிரபலம் அடைவது என்பது ஒருவிதமான CHAIN REACTION என்று தோன்றுகிறது//அதென்னவோ உண்மை தான்...

V.Radhakrishnan said...

மிகவும் கலகலப்பான கலவையாக பல விசயங்கள் அமைந்து இருக்கிறது.

// நம் மக்களுக்கு சில விஷயங்கள் ஏன் பிடித்துப் போகின்றன என்பது புதிராகவே உள்ளது. உதாரணமாக மிகவும் யோசித்து, நிறைய கஷ்டப்பட்டு, புத்தகங்களை Refer செய்து ஒரு விஷயத்தை மெனக்கெட்டு எழுதுவோம்.அது அவ்வளவாக பிரபலம் ஆகாது.ஏனோ தானோ என்று நமக்கே இஷ்டம் இல்லாமல் எதையோ கிறுக்கி வைப்போம். அது எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும்.//

ஜாலி, சீரியஸ் என்பதில் ஜாலிதான் பலருக்கும் பிடிக்கும். ஜாலியில் சரத்து எதுவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றெல்லாம் இல்லை. சாவுக்கு அடிக்கப்படும் கொட்டு போல ஆட வைக்கும் தாளம் இவ்வுலகில் எதுவுமே இல்லை என்று கூட சொல்வார்கள். ;)

chandru said...

ஆனாலும் இது எப்படி பிடிக்குது சொல்கிறீர்கள். இந்தமாதிரி காரியங்களை செய்தால் தப்பில்லை என்பது போலும் எதிர்மறையாகவும் வேலை செய்யும். அவனை கையில் பிடித்து நாலு அறை அறைய வேண்டும் போல் தோன்றுவது வேறு. *காரில் கீறல் செய்தபடி ஒரு சின்னப்பையன் ஓடுவது.'வயிற்றெரிச்சலா' என்று கேட்டு ஒரு மிட்டாயை விளம்பரப்படுத்துவது.

chandru said...

கொல வெறி டி, அது தமிழிசையில் பாடப் பட்டிருந்தாலும் பெரும் பாலும் கீ வேர்ட்ஸ் எல்லாம் ஆங்கிலத்தில் இருப்பதால் ஒரு வேளை பிரபலமாகி இருக்கலாம்.ஏனென்றால் ”கையில கிளாசு” என்று பாடி விட்டு மீண்டும் அந்தவரிகளை ”ஹேண்ட்ல கிளாசு” பாடுவது அதற்காகத்தான். இருந்தாலும் ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது.

Anonymous said...

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=6145&Country_name=Gulf&cat=new

Cedricqczv said...

கொல வெறி டி, அது தமிழிசையில் பாடப் பட்டிருந்தாலும் பெரும் பாலும் கீ வேர்ட்ஸ் எல்லாம் ஆங்கிலத்தில் இருப்பதால் ஒரு வேளை பிரபலமாகி இருக்கலாம்.ஏனென்றால் ”கையில கிளாசு” என்று பாடி விட்டு மீண்டும் அந்தவரிகளை ”ஹேண்ட்ல கிளாசு” பாடுவது அதற்காகத்தான். இருந்தாலும் ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது.

Patrickagvr said...

கொல வெறி டி, அது தமிழிசையில் பாடப் பட்டிருந்தாலும் பெரும் பாலும் கீ வேர்ட்ஸ் எல்லாம் ஆங்கிலத்தில் இருப்பதால் ஒரு வேளை பிரபலமாகி இருக்கலாம்.ஏனென்றால் ”கையில கிளாசு” என்று பாடி விட்டு மீண்டும் அந்தவரிகளை ”ஹேண்ட்ல கிளாசு” பாடுவது அதற்காகத்தான். இருந்தாலும் ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது.

Anonymous said...

//மெழுகுவர்த்தியை நாம் வாயால் ஊதி அணைக்கும்போது இதை தான் செய்கிறோம். //

அண்ணாச்சி உங்க ப்ளாக் -ஐ அங்கேயும் இங்கேயுமாக படித்துவருகிறேன். நிறைய விஷயங்களை தொடுகிறீர்கள். சுவாரஸ்யமாக் எழுதிவருகிறீர்கள் வாழ்த்துக்கள்.

மெழுவத்தியை ஒரு அட்டை/விசிறி கொண்டு வீசினால் ஆக்ஸிசன் தடைபட்டு அனைகிறதா... இல்லை காற்றின் விசையால் அனைகிறதா ?

சாமிலிங்கம்