இந்த வலையில் தேடவும்

Tuesday, May 3, 2011

கலைடாஸ்கோப்- 16


லைடாஸ்கோப்- 16 உங்களை வரவேற்கிறது

விலங்குகள் தரும் ஞானம்
==========================

சமீபத்தில் பெங்களூரு 'பன்னேர்கட்டா நேஷனல் பார்க்' சென்றிருந்தேன். இனிமேல் 'ஆம்னி சபாரி 'செல்வதில்லை என்று முடிவு செய்து விட்டேன்..
பாரி 80 சதவிகிதம் சலிப்பாக இருக்கிறது.அவ்வப்போது கரடியோ, யானையோ, மான்களோ ஆங்காங்கே தென்படுகின்றன. கதவுகள் மூடப்பட்ட , கம்பி ஜன்னல் போட்ட வேனின் உள்ளே பயணம். கம்பி ஜன்னல் போட்டிருப்பதால் வெளியே இருப்பவற்றை சரியாகப் பார்க்க முடிவதில்லை.கரடியோ புலியோ தென்பட்டால் 'மம்மி ஸீ டைகர்' 'டாடி தேர் பியர்' என்று குழந்தைகளின் அலும்பு வேறு!

பெரும்பாலும் எல்லாரும் கம்பி ஜன்னலுக்கு வெளியே (சந்து வழியே) கேமராவை நீட்டி போட்டோ பிடிக்கிறார்கள். (புலியை 'லைவ்லி'யாக ரசிப்பதை விட்டு விட்டு அடுத்த நாள் கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்து ஆஹா ஓஹோ என்பார்கள் ) சில பேர் ஜன்னலுக்கு வெளியே கரடிக்கு பிஸ்கட் (??) போடுகிறார்கள்.

மிருகங்களை வேடிக்கை பார்ப்பது கூட ஒரு விதத்தில் அவைகளை
த் துன்புறுத்துவதற்கு சமம் தான் . குரங்குகளும் புலிகளும் நம் நகரத்திற்கு பாரி வந்து 'அங்கே பார் உலகிலேயே மிகவும் கொடூரமான மிருகம்' என்று நம்மை தங்கள் குட்டிகளுக்கு வேடிக்கை காட்டினால் எப்படி இருக்கும்? ஒரு ஐம்பது பேர் சேர்ந்து கொண்டு கோழைத்தனமாக மூடிய வேனுக்குள் இருந்து வெளியே சிவனே என்று படுத்திருக்கும் புலியை வேடிக்கை பார்ப்பது ஏனோ உறுத்துகிறது.

இந்த உலகம் மிருகங்களுக்கான பூமி. அதை அவைகளுக்கெல்லாம் பின்னால் வந்த மனிதன் அபகரித்துக் கொண்டு பின்னர் அந்த நிலத்தில் ஒரு சிறு பகுதியில் அவைகளுக்கு சரணாலயம் கட்டுகிறான்

ஆம்

உலகில்
ஒரு கோடி உயிரினம் இருப்பதாய்
உயிரியல் சொல்கிறது
ஆனால்
எங்கு பார்த்தாலும் மனிதன்!

சைடு பிட் 1 : செல்போன் டவர்கள் வந்ததால் சிட்டுக் குருவிகள் வழக்கொழிந்து போய் விட்டதாகச் சொல்கிறார்கள்.நம் இயந்திர வாழ்க்கையில் சிட்டுக் குருவிகளைப் பார்க்கும் கண்களை இழந்து விட்டோம் என்று சொல்வது தான் சரி என்று தோன்றுகிறது. சி.கு வைப் பார்க்க வேண்டும் என்ற உறுதியுடன் வெளியே கிளம்பினால் நம் கண்களுக்கு நான்கைந்து சி.கு வாவது தென்படும் என்பது நிச்சயம்

சைடு பிட் 2 : விலங்குகளுடன் கூடி இருந்தால் நமக்கு சீக்கிரமே ஞானம் கிடைக்குமாம். கிருஷ்ணர் பசுக்களுடனும் இயேசு ஆடுகளுடனும் காட்சியளிப்பது இதைத்தான் குறிக்கறது . ஏனென்றால் அவைகளிடம் நம் 'ஈகோ' செல்லுபடி ஆகாது. 'நான் யார் தெரியுமா? "நான் தான் இந்தியாவின் பிரதம மந்திரி''நான் தான் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ' என்ற பந்தா எல்லாம் அவைகளிடம் பலிக்காது. ரெண்டு நாள் கத்தி விட்டு அவைகளிடம் இருந்து எந்த ரியாக்சனும் இல்லை என்று தெரிந்து நாமே அமைதியாகி விடுவோம்.உபநிஷதத்தில் வரும் கதை ஒன்று: சுவேதகேது என்ற மாணவன் அதிகம் படித்ததால் தனக்கு நிகர் இல்லை என்ற தலைகனத்துடன் அலைகிறான். அவனைத் திருத்துவதற்காக அவரது குரு அவனை நானூறு பசுக்களுடன் காட்டுக்கு அனுப்புகிறார். சதா பசுக்களுடன் வாழ்ந்ததால் அவனது அகங்காரம் படிப்படியாக குறைந்து அவனும் ஒரு பசுவாகவே மாறி விடுகிறான். பசுக்கள் பெருகி எண்ணிக்கை ஆயிரமாக ஆனதும் அவற்றுடன்
சுவேதகேது ஊர் திரும்புகிறான். அவனது குரு 'பாருங்கள் அங்கே ஆயிரத்து ஒரு பசுக்கள் நடந்து வருகின்றன ' என்கிறார்!

மனிதர்களுடன் இருப்பதை விட மிருகங்களுடன் இருப்பதே மேல் என்று தோன்றுகிறது. இனி மேல் அவைகளிடம் கொஞ்சம் அன்பு காட்டுங்கள். முடிந்தால் வீட்டில் ஒரு நாயோ பூனையோ வளருங்கள்.

கடைசியாக ஒரு கவிதை (எங்கோ படித்தது)

கடையை மூடும் போது
வீசப்படும்
இறைச்சித் துண்டுகளுக்காக
அதிகாலையில் இருந்தே
வாலாட்டத் தொடங்கி விடுகின்றன
நாய்கள்...


அட்சய
=======

அட்சய திருதியைக்கும் நகைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. திரௌபதி ஒரு நாள் ஆற்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறாள். அப்போது அங்கே குளித்துக் கொண்டிருந்த ஒரு ரிஷியின் கோவணம் ஆற்றுத் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விடவே அவர் தர்ம சங்கடத்தில் நெளிகிறார். திரௌபதி கரையில் இருந்து தன் புடவையின் ஒரு சிறு பகுதியை கிழித்து அவரிடம் வீசுகிறாள். அதை அணிந்து கொண்டு கரையேறிய அவர் 'காலத்தினால் செய்த இந்த உதவி உன்னை தக்க சமயத்தில் காக்கும் ' என்று நன்றி சொல்கிறார்.

துருபதன் சபையில் அவளை துகில் உரிந்து துச்சாதனன் அவமதிக்கிறான்.அந்த சமயத்தில் கண்ணனோ துவாரகையில் ருக்மிணியுடன் அமர்ந்து 'ஹாயாக' தாயம் விளையாடிக் கொண்டிருக்கிறான். திடீரென்று பகடையை உருட்டி 'அட்சய' என்கிறான்.. இதன் பொருள் ருக்மிணிக்குப் புரிவதில்லை. அங்கே பாஞ்சாலிக்கோ மலை மலையாகத் துணி வளர்கிறது

இதன் மூலம் கண்ணன் நமக்கு சொல்ல வருவது என்ன என்றால் 'ஒருவருக்கு நாம் செய்த உதவி எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது தக்க சமயத்தில் இறைவனால் நமக்கு ஆயிரம் மடங்கு திரும்பக் கிடைக்கும் ' என்பது தான். கிருஷ்ணன் 'ஜாய்
லூக்காசிலோ , ஜி.ஆர்.டி யிலோ, ஸ்ரீ குமரன் தங்க மாளிகையிலோ க்யூவில் நின்று தங்கம் வாங்குங்கள்' என்றெல்லாம் சொன்னதாகத் தகவல் இல்லை



கோடையில் ஒரு நாள்
=====================

'கோடையில் ஒரு நாள் மழை வரலாம் ; என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ' என்று ஜெமினி கணேஷன் பாடியது எதார்த்தமாகத் தோன்றியது. ஆனால் இப்போதெல்லாம் கோடையில் தினமும் மழை வருகிறது. அது ஏனோ வெள்ளிக் கிழமைகளில் வரும் மழை பயங்கரமாக இருக்கிறது. போன வாரம் அப்படித்தான் பெங்களூருவில் வந்தது. ஆபீசில் இருந்து வீட்டுக்கு வந்து பார்த்தால் அது ஒரு மினி SWIMMING POOL போலக் காட்சியளித்தது. என் அரிய கலெக்ஷன்களான ஓஷோ புத்தகங்கள் , அறிவியல் புத்தகங்கள் எல்லாம் தண்ணீரில் நன்றாக ஊறி இனிமேல் படிக்க முடியாது என்பது போல ஆகி விட்டன.:( கொஞ்சம் சிரமம் பார்க்காமல் காலையில் அந்த புத்தகங்களை மேலே எடுத்து வைத்திருக்கலாம்.. (கிணத்துத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போகப் போகிறது என்று இருந்து விட்டேன்) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்கும் , இன்றும் ஏழரை மணிக்கு ஆபீசில் இருந்து வந்து 'நாதஸ்வரம்' பார்த்து விட்டு எட்டரை மணிக்கு உப்புமா சாப்பிட்டு விட்டு ஒன்பது மணிக்கு ---- செய்து விட்டு (இது ரகசியமாக்கும்!) , பத்தரைக்கு படுத்துக் கொண்டு கனவு காணலாம் என்று நினைத்திருந்தது எவ்வளவு தப்பு என்று புரிந்தது. அன்று இரவு முழுவதும் கரண்ட் வரவில்லை. பக்கத்து அறைகளிலும் யாரும் இல்லை. சாப்பாடும் இல்லை. YES..LIFE IS DIFFERENT EVERYDAY!

L.U.C.K
=======

அதிர்ஷ்டம் என்றால் என்ன? என்ன தான் அறிவியல் பூர்வமாக யோசித்தாலும் 'குரு பெயர்ச்சிப் பலன்கள்' என்று ஏதாவது குட்டிப் புத்தகம் கண்ணில் பட்டால் கை தானாக கும்பம் இருக்கும் பக்கத்தை புரட்டுகிறது. பொதுவாக இந்த கும்ப ராசிக் காரர்களால் எவ்வளவு திறமை இருந்தும் 'பரிமளிக்க ' முடியாதாம். குடத்தில் இட்ட விளக்கு அல்லது இணரூழ்த்தும் நாறா மலரனையர் அவர்கள்.

இது ஓரளவு உண்மை தான் போலிருக்கிறது. ஜோதிடம் என்பது அறிவியல் மற்றும் ஆன்மிகம் இரண்டுக்கும் சம தொலைவில் இருப்பதாக நினைக்கிறேன்..'எல்லாம் உடான்ஸ் ' என்று தள்ளவும் முடியாது.. சொல்வதெல்லாம் சரி என்று ஒத்துக் கொள்ளவும் முடியாது.நானெல்லாம் 'நாள் என் செய்யம் வினை தான் என் செயும் ' பார்ட்டி தான்.. கன்னடத்தில் ஒரு கவிஞர் சொல்வார்" இறைவா கிரகங்கள் வீடு மாறினாலும் நீ மட்டும் என் வீட்டை விட்டு அகலாதே' I .O .W பந்ததெல்லா பரலி கோவிந்தன தய நமகிரலி (வந்ததெல்லாம் வரட்டும் கோவிந்தன் கருணை மட்டும் நமக்கிருக்கட்டும்)

அதிர்ஷ்டம் என்பது ஒரு புதிரான விஷயம். சில பேரை சில பதவிகளில் பார்த்திருக்கிறேன். இவர்கள் இந்த நாற்காலிக்கு எப்படி வந்தார்கள் என்று நினைக்கக் தோன்றும்.சில பேரைப் பார்க்கும் போது 'நீங்கள் எங்கயோ இருக்க வேண்டிய ஆளு' என்று சொல்லத் தோன்றும். What makes this difference ?

ஐம்பது பேர் விளையாடும் 'musical chair ' இல் முதல் சுற்றிலேயே வெளியேறும் ஒரு நபரின் அதிர்ஷ்டம் தான் சிலருக்கு வாய்த்திருக்கிறது

சில சமயம் அவர்கள் இப்படி எதையாவது சொல்லி மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான்:

“Maybe I'm lucky to be going so slowly, because I may be going in the wrong direction”

Samudra 's twits
===================

குட் மார்னிங் , குட் நைட் என்று மொபைலில் குவியும் மொக்கை எஸ்.எம்.எஸ். களை யார் எழுதுகிறார்கள்?

ஓஷோ ஜோக் இல்லாத கலைடாஸ்கோப் -ஐ செய்ய முடியவில்லை

ஓஷோ ஜோக்
==============

ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்து சொன்னாள்:

"என் வீட்டு நாய் ரொம்ப அறிவு..தினமும் காலையில் ஏழரை மணிக்கு நியூஸ் பேப்பரை சரியாக உள்ளே கொண்டு வரும்"

இ.பெ: "இது என்ன பெரிய அதிசயம்? எல்லா வீட்டு நாயும் தான் இதை செய்கிறது"

"ஆனால் நாங்கள் எந்த நியூஸ் பேப்பருக்கும் சந்தாவே கட்டுவதில்லை"


முத்ரா

16 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஸ்வாரஸ்யம்.(சமுத்ரா ஸ்டைலில் ஒரு வார்த்தை)

♔ℜockzs ℜajesℌ♔™ said...

நிறைவான பதிவு , சுவாரசியமாக எழுதி இருக்கீங்க . .
வாழ்த்துக்கள் . .

Katz said...

மிருகம் பற்றிய கருத்து உண்மை. எனக்கு செல்ல பிராணிகள் ரொம்ப பிடிக்கும். தெரு நாய் கூட. அந்த நாய் கவிதை அருமை.

நானும் கும்ப ராசிதான். எனக்கும் ஜாதகத்தில் நம்பிக்கை இல்லையென்றாலும் அதை ராசி பலன்கள் படிப்பதில் மிக ஆர்வம். இவ்வளுவு நாளாய் நிறைய திறமை இருந்தும் என்னால் பரிமளிக்க முடியாததிற்கு இது தான் காரணமோ?

;-)

இளங்கோ said...

பகிர்ந்தவை அனைத்தும் அருமை.

bandhu said...

கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பதிவுகளில் உங்கள் சலிப்பு தெரிகிறது. விட்டு வெளியே வாருங்கள். The secret to coming out of a hole is to first stop digging! கல்யாணம் (ஆகவில்லை என்றால்) சீக்கிரம் பண்ணிக்கொள்ளுங்கள்! சலித்துக்கொள்ள இவ்வளவு இருக்கும்போது அதற்குப்போய் சலித்துக்கொண்டோமே என்று(ம்) தோன்றலாம்!

Mohamed Faaique said...

///புலியை 'லைவ்லி'யாக ரசிப்பதை விட்டு விட்டு அடுத்த நாள் கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்து ஆஹா ஓஹோ என்பார்கள்//

இதை நானும் உணர்ந்திருக்கிறேன். புகைப்படம் பிடிப்பதால் எத்த்னையோ அறிய காட்சிகலை தவற விட்டிருக்கிறேன்.

இஸ்லாம் சொல்கிறது, ஆடு மேய்ப்பவர்களுக்கு பணிவும், குதிரை வளர்ப்பவர்களுக்கு பெருமையும் உண்டாகும் என்று.அனுப்பப்பட்ட எல்லா இறை தூதரும் கொஞ்ச நாட்கள் ஆடு மேய்த்தவர்களாகவே இருக்கின்றனர்.மூஸா (Mosas) ஈஸா (Jesus) முஹம்மது நபி (ஸல்) அனைவருமே!!!

ஜோதிடம் ஜோதிடம் சொல்பவனின் அதிஸ்டமே!!!! மற்றப் படி அதை நம்புவதெல்லாம் சோம்பேரித்தனமாகவே நினைக்கிறேன்.

Athiban said...

ஒஷோ ஜோக் அருமை!!

சமுத்ரா said...

//கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பதிவுகளில் உங்கள் சலிப்பு தெரிகிறது. //I accept..கல்யாணம் எல்லாம் காரணம் இல்லை..இது வேறு விதமான சலிப்பு..

Nagasubramanian said...

//உலகில்
ஒரு கோடி உயிரினம் இருப்பதாய்
உயிரியல் சொல்கிறது
ஆனால்
எங்கு பார்த்தாலும் மனிதன்!//
அருமை !

//ஐம்பது பேர் விளையாடும் 'musical chair ' இல் முதல் சுற்றிலேயே வெளியேறும் ஒரு நபரின் அதிர்ஷ்டம் தான் சிலருக்கு வாய்த்திருக்கிறது//
I am one among them

ஷர்புதீன் said...

dont hesitate man, keep going !

"ராஜா" said...

//புலியை 'லைவ்லி'யாக ரசிப்பதை விட்டு விட்டு அடுத்த நாள் கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்து ஆஹா ஓஹோ என்பார்கள்

எனக்கும் அவர்களை பார்த்தால் அப்படிதான் தோன்றும் , வாழ்க்கையில் எப்பொழுதாவது காண கிடைக்கும் அறிய விஷயங்களை கிடைத்தும் அவர்கள் அதை அனுபவிக்காமல் இழப்பது போலவே தோன்றும்

இராஜராஜேஸ்வரி said...

: விலங்குகளுடன் கூடி இருந்தால் நமக்கு சீக்கிரமே ஞானம் கிடைக்குமாம். கிருஷ்ணர் பசுக்களுடனும் இயேசு ஆடுகளுடனும் காட்சியளிப்பது இதைத்தான் குறிக்கறது . ஏனென்றால் அவைகளிடம் நம் 'ஈகோ' செல்லுபடி ஆகாது. '//
அருமை.அனைத்து தொகுப்புகளும் .பாராட்டுக்கள்.

சிவகுமாரன் said...

கதம்ப மாலையாக மணக்கிறது

hari said...

Very interesting, I like your writing style.

arul said...

'ஒருவருக்கு நாம் செய்த உதவி எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது தக்க சமயத்தில் இறைவனால் நமக்கு ஆயிரம் மடங்கு திரும்பக் கிடைக்கும் '

nicely said

Unknown said...

//மனிதர்களுடன் இருப்பதை விட மிருகங்களுடன் இருப்பதே மேல் என்று தோன்றுகிறது. இனி மேல் அவைகளிடம் கொஞ்சம் அன்பு காட்டுங்கள். முடிந்தால் வீட்டில் ஒரு நாயோ பூனையோ வளருங்கள்.//
அற்புதம் 👌