இந்த வலையில் தேடவும்

Monday, May 16, 2011

கலைடாஸ்கோப்- 17
லைடாஸ்கோப்- 17 உங்களை வரவேற்கிறது

FREEWILL
==========

ஜென் குரு ஒருவர் நடந்து போய்க் கொண்டிருந்தபோது வழியில் இருந்த கிணற்றில் ஒருவன் விழுந்து 'உதவி' 'உதவி' என்று கத்திக் கொண்டிருந்தானாம், அவர் எதுவுமே நடக்காதது மாதிரி கண்டு கொள்ளாமல் கடந்து போய் விடுகிறார். 'ஏன் அவனைக் காப்பாற்றவில்லை?' என்று சீடர்கள் கேட்டதற்கு 'அவன் விதியில் நான் தலையிட விரும்பவில்லை' என்று சொல்கிறார்,

மனிதன் சுதந்திரமானவனா? இல்லை கண்ணுக்குத் தெரியாத விதிகளால் கட்டுப்பட்டவனா ?என்று விவாதிப்பது FREEWILL என்று பிலா
பியில் ஒரு hot topic ! இன்னொரு ஜென் குருவிடம் அவரது சீடன் இதே கேள்வியைக் கேட்கிறான்: அதற்கு அவர்

"உன் காலைத் தூக்கு " என்கிறார்

அவனும் காலைத் தூக்குகிறான்

"இப்போது இன்னொரு காலையும்
தூக்கு"

"அது எப்படி குருவே முடியும்?"

"ஆம்..மனிதன் ஒரு காலைத் தூக்கும் அளவு சுதந்திரமானவன்" என்கிறார். ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே!

நம்முடைய கடந்த காலம் நம் நிகழ்காலத்தையும் நிகழ்காலம் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது.(கர்மா?) மேலும் நாம் ஒவ்வொரு முறை ஒரு முடிவெடுக்கும் போதும் நம் வாழ்க்கை மாறுகிறது.

தண்டவாளத்தில் ஏற்படும் ஒரு சிறிய ட்ராக் மாற்றம் எப்படி அந்த ரயிலின் பாதையையே ஒட்டு மொத்தமாக மாற்றி விடுகிறதோ அப்படி.12 - பி படத்தில் ஹீரோவுக்கு பஸ்ஸைப் பிடித்திருந்தால் ஒரு வாழ்க்கையும் பஸ்ஸை நழுவ விட்டதால் ஒரு வாழ்க்கையும் நடப்பது மாதிரி..இதை பொதுவாக 'கேயாஸ் தியரி' என்றும் டெக்னிகலாக 'Parallel Universe ' என்றும் அறிவியல் சொல்கிறது. நமக்கு இரண்டு வாழ்க்கைகள் மட்டும் இல்லை..நிறைய இருக்கின்றனவாம். ஒவ்வொரு முறை நாம் ஒரு முடிவெடுக்கும் போதும் நம் வாழ்க்கையில் ஒரு Branching நடக்கிறது. இன்றைக்கு பச்சை டிரஸ் போடுவதா நீல டிரஸ் போடுவதா என்று நீங்கள் காலையில் குழம்பி கடைசியில் நீலம் என்று முடிவெடுத்தால் அங்கேயும் ஒரு Branching ! அதாவது அன்று பச்சை போட்டிருந்தால் உங்கள் வாழ்க்கை நீலம் போட்டதால் வரும் வாழ்க்கையை விட கொஞ்சம் மாறுபட்டு இருக்கும்..

ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு பெண்ணின் குழந்தை இறந்து விடுகிறது. அதன் பிரிவை அவளால் ஆற்றவே முடியவில்லை. இறந்த குழந்தையை எடுத்துக் கொண்டு ஊரின் ஒதுக்குப்புறமாக வாழும் ஒரு துறவியிடம் செல்கிறாள்.
"சாமி நீங்க தான் எப்படியாவது என் குழந்தையை உயிர்ப்பிக்கணும் " என்று கதறி மன்றாடுகிறாள்.

அதற்கு அந்தத் துறவி "நான் உன் கண் முன்னே உன் மகள் பற்றிய இரண்டு காட்சிகளைக் காட்டுகிறேன்..அவற்றைப் பார்த்து விட்டு உன் குழந்தையை காப்பாற்றுவதா வேண்டாமா என்று நீயே முடிவு செய் " என்கிறார்

முதல் காட்சியில் அந்தக் குழந்தை ஒரு கோடீஸ்வரக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு பணம், புகழ், நகை, மாளிகை, சேவகர்கள் என்று சொகுசாக வாழ்கிறது. விழா ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. யாரோ ஒருவர் அவளை நெருங்கி வந்து ஒரு விலை உயர்ந்த முத்து மாலையை பவ்யமாக அவளிடம் பரிசளிக்கிறார்.

இரண்டாவது காட்சியில் அதே குழந்தை பஞ்சப் பரதேசியாக வறுமையில் வாடுகிறது. அழுக்கேறிய உடைகளுடன் சாலையோரத்தில் பரிதாபமாகக் குடும்பம் நடத்துகிறது. அங்கே கடந்து செல்லும் ஒரு வண்டியில் இருந்து சில காய்கறிகள் கீழே உருளுகின்றன. அது ஓடிச் சென்று வெறி பிடித்தவள் போல அந்த காய்கறிகளைப் பொறுக்குகிறது.

இரண்டு காட்சிகளையும் பார்த்து விட்டு அந்தப் பெண் "சாமி சுடுகாடு எந்தப் பக்கம் இருக்கு ?" என்று கேட்கிறாள்...


இரண்டு முடிவுகள்
==================

இந்த மாதத்தில் இரண்டு முடிவுகள் தமிழ்நாட்டில் வெளியாயின. +2 தேர்வு முடிவுகள் மற்றும் தமிழக சட்ட சபை தேர்வு முடிவுகள்.(இரண்டாவதைப் பற்றி கருத்து சொல்ல நமக்கு எந்த அனுபவமும் இல்லை,anyhow மம்மி ரிடர்ன்ஸ் !)ஒவ்வொரு வருடமும் மாநிலத்தில் முதல் மூன்று இடங்களில் வரும் மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதன் பின்பு அவர்கள் ஏனோ காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம் பிடித்து விடுகிறார்கள்.They are never heard of again ! ஒவ்வொரு வருடமும் குறைந்த பட்சம் ஒருவரை எடுத்துக் கொண்டால் கூட நமக்கு இது வரை நூற்றுக் கணக்கான வி
ஞ்ஞானிகள் ,நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும். எல்லாரும் அறிவியலின் அனைத்துப் பிரிவுகளிலும் 200 க்கு 200 மார்க் வாங்குகிறார்கள். then where is it going wrong ? மனப்பாடம் செய்து உமிழும் தேர்வு முறையை, கல்வி முறையை நாம் என்று தான் விடப் போகிறோமோ தெரியவில்லை!


S .M .S
======

நம் நம்பர் இவர்களுக்கெல்லாம் எப்படி கிடைக்கிறதோ தெரியவில்லை. முடி வளரவைக்கும் தைலம், இரண்டு நாள் பிசினஸ் வொர்க் ஷாப், ப்ளாட்டுகள் விற்பனைக்கு , 24 மணி நேரத்தில் லோன், MBA அட்மிஷன்,

எடை குறைய வேண்டுமா? என்றெல்லாம் எஸ்.எம்.எஸ் கள் வருகின்றன. ஒருவர் தன் வுட் -பி இடம் இருந்து ஒரு முக்கியமான (?) காதல் எஸ்.எம்.சைஸை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது இப்படியெல்லாம் மெசேஜ் வந்தால் அவருக்கு எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்..சமீபத்தில் வந்த ஒரு எஸ்.எம்.எஸ்: அப்படியே :


Rehabilitation for mentally depressed and Drug addicts.If you are depressed and getting suicidal thoughts contact :

:) :) :)

உறவுக்குக் கை கொடுப்போம்
============================

பொதுவாக கலைடாஸ்கோப்-இல் டாபிக் களை Repeat செய்வதில்லை. சமீபத்தில் பார்த்த ஒரு காட்சி Repeat செய்ய வைக்கிறது. கலைர் தொலைக்காட்சியில் வரும் ஒரு நெடுந்தொடரில் ஐந்து வயதே மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை 'யார் கூட மோதறே, உனக்கு விஷம் வைத்து கொன்னுடுவோம்' என்றெல்லாம் வசனம் பேசுகிறது. விளம்பரங்கள் 'Next Generation ' 'Next Generation ' என்று அலறுகின்றன.ஆனால் உண்மையில் நம் Next Generation களான குழந்தைகளுக்கு நாம் எதையெல்லாம் கொண்டு செல்கிறோம் என்று நினைக்கும் போது பயமாக இருக்கிறது. ஐந்து வயதிலேயே விஷம் வைத்துக் கொன்றால் இருபத்தைந்து வயதில் உலகத்தையே அணுகுண்டு வீசி அழித்து விடுவார்களோ என்னவோ!


நாங்க இருக்கோம்
=================

கண்ணாடி போடாதவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. என்னதான் ஸ்டைல் ஸ்டைல்களாக கண்ணாடிகள் வந்து விட்டாலும் அதை அணிவது ஒரு சுமை தான்..சரி Laser Treatment செய்து கொஞ்சம் அழகாக (?) மாறலாம் என்று 'வாசன் ஐ கேர்' போயிருந்தேன். விளம்பரங்களில் காட்டுவது போலவே நிஜத்திலும் இன்முகம் காட்டி வரவேற்கிறார்கள். 'கன்சல்டேஷன்' என்று நூறு ரூபாய் தான் வாங்குகிறார்கள். (ஆனால் laser treatment 35 ,000 ரூபாயாம் !) குடிக்க ஜூஸ் கொடுக்கிறார்கள். டாக்டர்கள் கனிவாகப் பேசுகிறார்கள்.தினப்படி வாழ்க்கையில் தியானம் செய்ய நேரம் இல்லை என்று யார் சொன்னது? கண் ஆஸ்பத்திரிகளில் அவை கிடைக்கக்கூடும்! கண்ணுக்கு DROPS போட்டு விட்டு ஒரு மணி நேரம் அப்படியே கண் மூடிக் கொண்டு அசையாமல் உட்கார்ந்திருங்கள் என்று சொல்கிறார்கள். ஞானிகள் ஒரு மனிதன் 48 நிமிடங்கள் மட்டும் முழு விழிப்புணர்வோடு இருந்தால் அவனுக்கு ஞானம் வாய்க்கும் என்று சொல்லியிருக்கிறார்களாம். சரி நமக்கு பன்னிரண்டு நிமிடங்கள் அதிகமாகவே இருக்கிறதே, கண் மூடி தியானம் செய்யலாம் என்றால் அப்போது தான் ஆபீசில் நாளை செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் ஞாபகம் வந்து பயமுறுத்தின. மிஸ்டர். ஸ்ரீனிவாசன், மிஸ்ஸஸ். ரேவதி, மிஸ்டர். அவிஷேக் என்று பெயர்களை அழைக்கும் ஒலிகள் வேறு! வடிவேலு சொல்வது போல சும்மா உட்கார்ந்திருப்பது அத்தனை எளிதல்ல என்று உணர்ந்தேன்...

இரண்டு லென்சுகளை மாட்டி எது தெளிவாகத் தெரிகிறது என்று கேட்கிறார்கள்..எனக்கு இரண்டுமே ஒரே மாதிரி தான் தெரிந்தது. பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்களைக் காட்டி எது பிரகாசமாத் தெரிகிறது என்கிறார்கள்..It is very difficult to make a choice !

இப்போது கொஞ்சம் சிரிக்கலாம்


ஓஷோ ஜோக்
==============


ஒரு முதியவர் ஒரு சாலையோர பெஞ்சில் உட்கார்ந்து விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார்..

அவரை நெருங்கி வந்து ஓர் இளைஞன் "பெரியவரே , ஏன் அழறீங்க, என்ன பிரச்சனை ?" என்று கேட்டான்..

"எனக்கு நிறைய பணம் இருக்கு... ஒரு பங்களா.. அப்பறம் கப்பல் மாதிரி கார்..வேலைக்காரங்க...அப்பறம் இளம் மனைவி ஒருத்தி"

"ஐயோ,,,இவ்வளவும் இருந்தா அழறீங்க? இது எல்லாம் வேணும் அப்படின்னு தான் நிறைய பேர் ஏங்கறாங்க " என்றான் இளைஞன்..

"அதுக்காக அழலை..என் வீடு எங்க இருக்குன்னு மறந்து போச்சு"


முத்ரா

15 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

அத்தனை விஷயங்களும் அசத்தல்...

ஒரு புருட் மிக்ஸர் அருந்தியது போன்று...

சுந்தர்ஜி said...

ஏனோ இன்று மனது பாரமாக இருந்தது சமுத்ரா.உங்களின் கலைடாஸ்கோப் பெரிய ரிலீஃப் கொடுத்தது.எல்லா விஷயங்களும் படிக்கவும் யோசிக்கவும் வைத்தன.

Katz said...

;-)

Chitra said...

Good post. உறவுக்கு கை கொடுப்போம் - சிறு குழந்தையின் மிரட்டல் குறித்து வாசித்தேன். கண்டிக்கத்தக்க விஷயம். இந்த மாதிரி நிகழ்ச்சிகளை, மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

கக்கு - மாணிக்கம் said...

சுவைத்து மகிழத்தக்கவை.

ரிஷபன் said...

சுவையான சங்கதிகள்தான்.
கிணற்றில் விழுந்தவனைக் காப்பாற்ற.. ஜென் கதை.. ம்ஹூம்.. என்னால் ஏற்க முடியவில்லை. ஒரு வேளை இடைச்செருகலா.. ஒரிஜினல் ஜென்னில் இல்லாமல் பின்னாட்களில்..
பொதுவாய் இம்மாதிரி கதைகள் எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம் என்பது போல இருப்பது தான் அதன் பலம் பிளஸ் பலவீனம்.

Mohamed Faaique said...

எல்லாமே சூப்பர்.... கடைசி கதை, சுஜாதாவின் ஒரு பேட்டியில் ஆனந்த விகடனில் அவரது அனுபவம் போல் சொல்லி இருந்தார். எது சரி??????

HVL said...

எல்லாமே நன்றாய் இருந்தது.

ஷர்புதீன் said...

+2 வில் முதலிடம் பிடித்தவர்கள் அனைவரும் மாத சம்பளத்தில் வேலை பார்துகொண்டிருப்பார்கள், காரணம் அவர்கள் வேறு எதிலும் நாட்டம் இல்லாததால்தான் அந்த முதல் மதிப்பெண் சாத்தியம்மாயிற்று., எதையாவது நோண்டி கொண்டிருந்தவர்கள்தான் இந்த எடிசன், அப்துல்கலாம், ரஜினிகாந்த், விஸ்வநாதன் ஆனந்த், இளையராஜா, நாராயணமூர்த்தி, பில்கேட்ஸ், etc , பொதுவில் எனக்கு 90 க்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்களிடம் எனக்கு அவ்வளவாக மரியாதை கிடையாது., நம்ம சாய்ஸ் 60 முதல் 75 % எடுப்பவர்கள்தான்

ஷர்புதீன் said...

அதிலும் அந்த மாதிரி மார்க் (90% maark )பெண்கள் எடுத்தால் அந்த பக்கமே எட்டிபாற்பதில்லை, காரணம் எனக்கு லாஜிகல் மனிதர்களை தான் பிடிக்கும்

bandhu said...

//பொதுவில் எனக்கு 90 க்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்களிடம் எனக்கு அவ்வளவாக மரியாதை கிடையாது., நம்ம சாய்ஸ் 60 முதல் 75 % எடுப்பவர்கள்தான்//
எனக்கு இது ரொம்ப பிடிச்சிருந்தது!
சீ! சீ! இந்த பழம் புளிக்கும்!

ஜீவி said...

விதவிதமான வண்ணங்களில் கலைடாஸ்கோப் பார்த்து களிக்க அல்லாது பார்த்து யோசிக்க எண்ணங்களைக் கொண்டிருந்தது.

Katz said...

பனிரெண்டாம் வகுப்பில் நான் எண்ணூறு மார்க் எடுத்ததில் பெருமை அடைகிறேன். ;-)

ஹேமா said...

நம் வாழ்வாயிருந்தாலும் அது நம் கையில் இல்லை.அத்தனையும் வாழ்வியல் சிந்தனைகள்.ஓஷோவின் நகைச்சுவை சிரிக்க வைக்கிறது !

சுவனப்பிரியன் said...

சிறந்த பதிவு.

விதியைப் பற்றி முன்பு ஒரு நண்பருக்கு இட்ட பின்னூட்டத்தை இங்கும் பதிக்கிறேன்.

//எதிர்காலம்கூட தெரியாத ஒன்றை என்னால் கடவுளாக ஒத்துக்கொள்ளமுடியவில்லை. இந்த கற்பனா கதாபாத்திரத்தால் என்னை ஒன்றும் பண்ணிவிடமுடியாது.//

விதி என்ற ஒன்று இல்லாவிட்டால் நான் என்ன செய்யப் போகிறேன் என்பது இறைவனுக்கு தெரியாது என்று ஆகிவிடும். நாளை நான் என்ன செய்யப் போகிறேன் என்பது தெரியாத ஒருவன் எப்படி என் இறைவனாக இருக்க முடியும்? விதி இல்லை என்று சொன்னாலும் விபரீதம். விதி இருக்கிறது என்று சொன்னாலும் விபரீதம்.

விதி என்ற ஒன்றுக்கு மட்டும் எப்படி விளக்கம் அளித்தாலும் குழப்பமே வந்து நிற்கும். அதற்குரிய அறிவை இறைவன் நமக்கு கொடுக்கவில்லை.

'உங்களுக்கு தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியிருப்பதில் நீங்கள் பூரித்து போகாமல் இருப்பதற்காகவும் விதியை ஏற்படுத்தியுள்ளான்.'-குர்ஆன் 57:23

நடந்து விட்ட காரியங்களுக்குத்தான் விதியை நினைத்து மனதை தேற்றிக் கொள்ள வேண்டும். இனி வருங்காலங்களில் நம் விதி எது என்று நமக்கு தெரியாத காரணத்தால் விதி இல்லாதது போல் நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். நாளை ஒரு விபத்தில் எனது காலும் கையும் வெட்டப்படும் என்பது எனக்கு முன்பே தெரியும் என்று வைத்துக் கொள்வோம். இன்று இரவு என்னால் நிம்மதியாக தூங்க முடியுமா? எனவே விதியைப் பற்றிய ஒரு தெளிவின்மை மனிதர்களுக்கு நன்மையே தருகிறது. எனவே தான் உலக கணக்கெடுப்பில் தற்கொலைகளின் விகிதாச்சாரம் முஸ்லிம்களிடம் மிக மிக கம்மியாக இருக்கிறது. எது நடந்தாலும் இறை விதிப்படியே என்று முஸ்லிம்கள் நம்புவதுதான் இதன் காரணம்.

'இறைவன் நாடியதை அழிப்பான்: நாடியதை அழிக்காது வைப்பான்: அவனிடமே தாய் ஏடு உள்ளது.'-குர்ஆன் 13:40

ஒரு மனிதன் வருங்காலத்தில் தான் நல்லவனாக வாழ வேண்டும், தனக்கு சொர்க்கத்தில் இறப்புக்குப் பிறகு வாழ்வு வேண்டும் என்றும் நற் கருமங்கள் செய்வதாகவும் இறைவனிடம் மனமுருகி பிரார்த்தித்தால், அந்த பிரார்த்தனையை ஏற்று தான் எழுதிய விதியை தானே மாற்றுகிறான் இறைவன்.

இதையேதான் வள்ளுவரும்

'ஆகூழால் தோன்றும் அசைவன்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி'-குறள் 371 என்கிறார்.

செல்வம் வந்து சேர வேண்டிய நல்ல வேளை வந்து விட்டால் ஒருவனிடம் ஊக்கமும் வாடா முயற்சியும் வந்து விடும். போக வேண்டிய வேளை வந்து விட்டால் சோம்பல் வந்து செயலிழக்கச் செய்து விடும். எனவே நமது எண்ணத்தில் நமக்கு நல்ல விதியாக வருங்காலம் வர வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வர வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

விதியை உங்கள் வாழ்க்கையில் விலக்க நினைத்தாலும் உங்களையும் மீறி அநத விதி உங்கள் முன்னால் வந்து நிற்கும் என்று குறள் 380ல் வள்ளுவர் விளக்குகிறார். இதில் மேலும் விளக்கப் புகுந்தால் புறப்பட்ட இடத்துக்கே திரும்பவும் வந்து விடுவோம் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.