இந்த வலையில் தேடவும்

Thursday, April 28, 2011

கடவுளும் நானும்


கடவுளுக்கான இடம்
====================

கடவுளுக்கான இடம்
எல்லா வீடுகளிலும் இருக்கிறது
சில வீடுகளில்
பிரம்மாண்டமான பூஜை அறையில்
சில வீடுகளில்
புத்தக அலமாரிகளில்
சில வீடுகளில்
கடுகு, சீரக டப்பாக்களுக்கு மத்தியில்
பேச்சுலர்களின் அறைகளில்
ஒற்றை விநாயகர் பொம்மையாய்
கடவுளுக்கான இடம்
எல்லா வீடுகளிலும் இருக்கிறது

கடவுளும் நானும்
=================

போதும்
கடவுளைப் பார்த்து நான் பரவசப்பட்டது
பேருந்தின் வேகத்தில்
பின்னால் மறையும் கோவில்களைப் பார்த்து
கன்னத்தில் போட்டுக் கொண்டது
ஊர்வலத்தில் வந்த
பிள்ளையார்களை வணங்கி
ஓடிப் போய் விபூதி பூசிக் கொண்டது
கடவுள் படம் காலில் பட்டு விட்டால்
பதறிப் போய் கண்களில் ஒற்றியது
மணிக்கணக்கில் கால்கடுக்க வரிசையில் நின்று
கருவறையின் தெளிவில்லாத பிம்பத்தைப் பார்த்து மெய்மறந்தது
போதும்
கடவுளைப் பார்த்து நான் பரவசப்பட்டது
இனிமேல்
என்னைப் பார்ப்பதற்காய்
கடவுள் பரவசப்படட்டும்!


கடவுள் version -2
==================

தட்டினால்தான் திறக்கிறார்
கேட்டால்தான் கொடுக்கிறார்
கெட்டவர்களை 'நின்று' தான் கொல்கிறார்
நாம் ஒன்று நினைக்க அவர் ஒன்று நினைக்கிறார்
பிரளயம் நிகழ்ந்த பின்
அடுத்த யுகத்திலேனும்
கொஞ்சம்
மேம்படுத்தப்பட்ட கடவுள் கிடைத்தால் பரவாயில்லை!

நிதர்சனம்
===========

நாட்கள் தொடங்குவதென்னவோ
ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் தான்

இன்று எனக்கான
பிரமோஷன் கடிதம் வரக்கூடும்

இன்று நான் அனுப்பிய
கவிதை பத்திரிகையில் வந்திருக்கக்கூடும்

பாட்டிக்கு உடம்பு பரவாயில்லை என்று
அம்மா போன் செய்யக் கூடும்

பேருந்தில் அந்தப் பெண் இன்று
என்னைப் பார்த்து புன்னகைக்கக் கூடும்

வங்கியில் விண்ணப்பித்த கடன்
ஓ.கே என்று கடிதம் வரக்கூடும்..

என்றெல்லாம்
ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன்..

அனால்
நாட்கள் முடிவதென்னவோ
அதே
18 -பி பேருந்தின்
வியர்வைப் பயணத்துடனும்
அதே
ராகவன் மெஸ்ஸின்
பரோட்டாக்களுடனும் தான்...


~முத்ரா


19 comments:

Nagasubramanian said...

//அனால்
நாட்கள் முடிவதென்னவோ
அதே
18 -பி பேருந்தின்
வியர்வைப் பயணத்துடனும்
அதே
ராகவன் மெஸ்ஸின்
பரோட்டாக்களுடனும் தான்//
nice final touch

நிரூபன் said...

சில வீடுகளில்
கடுகு, சீரக டப்பாக்களுக்கு மத்தியில்//

ஹி...ஹி...

மனிதர்களின் நம்பிக்கையினைப் பற்றிச் சொல்லும் யதார்த்த வரிகள் இவை.

Mohamed Faaique said...

கடைசி கவிதை சூப்பர்......
அதிலும் கடசி வரிகள் வலிகள்

நிரூபன் said...

என்னைப் பார்ப்பதற்காய்
கடவுள் பரவசப்படட்டும்!//

இரண்டாவது கவியில்..
இயந்திர வேக வாழ்க்கையில்,பிடிக்க முடியாத தூரத்தில் இருக்கும் கடவுளைப் பற்றிப் பாடியுள்ளீர்கள்..

அருமை....

நிரூபன் said...

அடுத்த யுகத்திலேனும்
கொஞ்சம்
மேம்படுத்தப்பட்ட கடவுள் கிடைத்தால் பரவாயில்லை!//

போகிற போக்கைப் பார்த்தால்,அடுத்த யுகத்தில் இலவசக் கடவுள் கிடைப்பார் என்று நினைக்கிறேன்.

நிரூபன் said...

நிதர்சனம்//

இக் கால கைக்குள் அடங்காத வாழ்க்கை முறையினைச் சொல்லி நிற்கிறது.

ரிஷபன் said...

கடவுள் கவிதைகள் அத்தனையுமே அருமை..

Aba said...

Very nice.. love that v.2 :)

bandhu said...

மூன்றாவது கவிதை.. ஏன் இந்த சலிப்பு?

Katz said...

உங்க கவிதை கூட சிந்திக்க வைக்குது. எல்லாமே அருமை.

சமுத்ரா said...

//மூன்றாவது கவிதை.. ஏன் இந்த சலிப்பு?//

எல்லாம் அனுபவம் தான் :(

iniyavan said...

இன்றுதான் முதல் தடவையாக உங்கள் வலைப்பூவிற்கு வருகிறேன். கவிதை மிகவும் அருமை.

ஆனந்தி.. said...

Samu..Don't fed up for anything...God:) will take care of you..:))

பொன் மாலை பொழுது said...

// போதும்
கடவுளைப் பார்த்து நான் பரவசப்பட்டது
இனிமேல்
என்னைப் பார்ப்பதற்காய்
கடவுள் பரவசப்படட்டும்! //

VELU.G said...

எல்லாக் கவிதைகளும் அருமை

அதுவும் அந்த கடவுள் version2 மிக அருமை

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

கடவுளிடம் கவிதையும்
கவிஞனிடம் கடவுளும்
ஒளிந்திருப்பது வரை
கவிதைகளுக்குப் பஞ்சமில்லை.

அருமையான கவிதைகள் சமுத்ரா.

ஷர்புதீன் said...

சமுத்ரா , நமக்கு கவிதை ரொம்ப தூரம்பா

நெல்லி. மூர்த்தி said...

கடவுள் கவிதை version-2 .. மேலோட்டமாகப் பார்த்தால் நாத்திகத்தின் துவக்கம். ஆழமாக நோக்கினால் ஆத்திகத்தின் உச்சம்! கலக்கலோ கலக்கல்!
நிதர்சனம் - இறுதிவரிகள்... அனைவரும் அசை போடும் பேச்சுலர் வாழ்க்கையின் அனுபவத் துளிகள்!

சசிகலா said...

அடுத்த யுகத்திலேனும்
கொஞ்சம்
மேம்படுத்தப்பட்ட கடவுள் கிடைத்தால் பரவாயில்லை!

மிகச்சரியான எதிர்பார்ப்பு. மனங்கவர்ந்த பகிர்வு.