இந்த வலையில் தேடவும்

Wednesday, April 13, 2011

அணு அண்டம் அறிவியல்-21

அணு அண்டம் அறிவியல்-21 உங்களை வரவேற்கிறது

இயற்பியலில் 'அணிகள்' அவ்வளவாக உபயோகப்படுத்தப்பட்டதில்லை.. அணி என்றதும் 'மௌனம் என்றொரு சாவியைப் போட்டு மனதைப் பூட்டாதே' என்று சொன்னால் ஏகதேச உருவக அணி வருகிறது என்ற லெவலுக்கு தமிழின் மீது கொலைப்பற்று கொண்டு நீங்கள் நினைத்தால் தவறு..'அணி' என்றால் இங்கே கணிதத்தில் வரும் 'MATRIX '! இந்த அணிகளுக்கு நிறைய பயன்பாடுகள் உள்ளன.
உதாரணமாக ஒரு மின் சுற்றில் (electric circuit ) எந்தெந்த பகுதிகளின் (segment ) வழியே எத்தனை மின்சாரம் (current ) பாய்கிறது என்று இதை வைத்து சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும்..

அதாவது V = I R என்றால் இதை [V ] =[I ] [R ] என்று எழுதலாம்..

வெர்னெர் ஹைசன்பெர்க் தனது ஊரில் Hay fever என்று ஒரு விதமான காய்ச்சல் பரவி வந்ததால் அதிலிருந்து தப்ப கொட்டின்ஜென் நகருக்குச் சென்றிருந்தார் .அங்கு சென்றவர் சும்மா இருக்காமல் Matrix mechanics என்று அழைக்கப்படும் ஒரு புதிய கணிதம்-கம்-இயற்பியலை ஆராய்ந்து கொண்டிருந்தார்..System ஒன்றை அலசுவதற்கு சும்மா சகட்டு மேனிக்கு மாறிகளை (variables ) எடுத்துக் கொள்ளாமல் அதை விளக்குவதற்கு நம்மால் எதையெல்லாம் கவனிக்க முடிகிறதோ [observables ] அதை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும் என்பது அவரது அனுமானம்.எனவே அவர் எலக்ட்ரானின் நிலை (q ) மற்றும் உந்தம் (p ) ஆகியவற்றை (மட்டும்) எடுத்துக் கொண்டு கணக்கிட்டார்..சாதாரண கணிதத்தில் நாலை ஐந்தால் பெருக்கினாலும் ஐந்தை நாலால் பெருக்கினாலும் விடை ஒன்று தான் (commutivity
) ஆனால் மாட்ரிக் மெகாநிக்சில் அப்படி இல்லை..
அதாவது எதை முதலில் போடுகிறோம் என்பது முக்கியமானது.

[p][q] not equal to [q] [p]



இந்த இரண்டுக்குமான வித்தியாசத்தை([p][q]-[q][p]) அவர் கணக்கிட்ட போது அவருக்கு ஆச்சரியமாக பிளான்க் மாறிலி கிடைத்தது! (h bar
) சரி பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்து விட்டதே என்று அவர் அதை அப்போதைக்கு அப்படியே விட்டு விட்டார்..பின் நாட்களில் இது இயற்பியல் உலகைப் புரட்டிப் போடும் ஒரு தத்துவமாக உருவாகும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.


ஹைசன்பெர்க் -இன் நிச்சயமில்லாத் தத்துவத்திற்கு (uncertainty principle ) இப்படி ஒரு மொக்கையான அறிமுகம் கொடுத்ததற்கு மன்னிக்கவும்..இப்போது உண்மையிலேயே நிச்சயமின்மை என்றால் என்ன என்று பார்க்கலாம்..

எலக்ட்ரானைப் பார்க்கிறோம் என்று சொல்வது குவாண்டம் இயற்பியலில் முற்றிலும் தவறு...எலக்ட்ரானின் விளைவுகளை detect செய்கிறோம் என்று சொல்வது தான் கொஞ்சம் சரி..இந்த சித்தாந்தத்தை 'macroscopic 'உலகத்திற்கு நீட்டித்தால் 'நான் உன்னைப் பார்க்கிறேன்' என்று சொல்வது கூடத் தவறு தான்..'உன் விளைவுகளை என் புலன்கள் அறிகின்றன' என்று தான் சொல்ல வேண்டும்..ஒரு வேண்டுகோள்..இப்படியெல்லாம் தப்பித்தவறி கூட உங்கள் காதலியிடம் சொல்லிவிடாதீர்கள்!

ஒரு பொருள்(object ) அல்லது நிகழ்வு(event ) என்பது அதன் 'விளைவுகளில் (effect ) இருந்து வேறுபட்டதா இல்லை இரண்டும் ஒன்று தானா என்பது பிலாசபியில் ஒரு hot topic ! ஆனால் வி
ஞ்ஞானிகள் நிலைமையை மேலும் மோசமாக்க வேண்டாம் என்பதால் ஒரு நிகழ்வுக்கும் அதன் விளைவுக்கும் மிகக் குறைந்த இடைவெளி தான் உள்ளது.அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்கிறார்கள்.
உதாரணமாக நாம் பிரபஞ்சத்தைப் பார்க்கிறோம்..நிலா, மின்னும் நட்சத்திரங்கள், காலக்சிகள்..ஆனால் அது நிலவு" as it is " தானா அல்லது அது உண்மை நிலவு ஏற்படுத்தும் விளைவா (projection ) என்பது தக்குனூன்டு மனுசப் பதராக இருக்கும் நமக்குக் தெரியாது.



புலன்களின் வழியே வரும்போது உண்மை மறைக்கப்பட்டு விடுகிறது அல்லது குறைந்த பட்சம் வடிகட்டப்பட்டு விடுகிறது (senses distort reality ) என்பது ஆதி சங்கரரின் வாதம்."மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா" என்று அவர் சொல்லும் போது எல்லாம் மாயை, அங்கே எதுவுமே இல்லை என்ற பொருளில் சொல்லவில்லை.எது இருக்கிறதோ அதை நம் மனம் திரித்து விடுகிறது ,அது அப்படியே தெரிவதில்லை..நம்மை வந்து அடையும் போது அது முற்றிலும் வேறாக இருக்கிறது.எது இருக்கிறதோ அது மாற்றப்பட்டு தெரிகிறது என்பது தான் அதன் பொருள்.கயிறு தான் இருக்கிறது..அது நம்மை அடையும் போது நம் மனம் அதை பாம்பாகத் திரித்து விடுகிறது!

YES ..

பாம்பென்று எண்ணிப் பயந்திருந்த பொருளை எல்லாம்
தாம்பென்று அறிந்து நான் தகர்த்தெறிவ தெக்காலம்??

காண்பதெல்லாம் மறையும் என்றால் மறைந்ததெல்லாம் காணும் அன்றோ என்று பாரதி பாடுவதற்கும் இந்த அர்த்தம் தான்..
இதனால் தான் கடவுளுக்கு ஒரு வடிவம், குணம் இவற்றைக் கொடுப்பதை சில மதங்கள் கண்டிப்பாக எதிர்க்கின்றன. இந்து மதத்தில் கூடக் கடவுளுக்குப் பெயரே 'நிர்குணப் பிரம்மம்' தான்..yes it is a phenomenon without characteristics ...ஏனென்றால் கடவுளுக்கு ஒரு குணம் கொடுத்த மாத்திரத்தில் அது அவரது 'விளைவாக' மாறி விடுகிறது. உண்மை அதன் விளைவில் இருந்து வேறுபட்டது என்பதால் கடவுளை அவரது குணத்தால் விவரிக்க முடியாது. இதனால் தான் கடவுள் மிகவும் மறைந்து இருக்கிறார்..அவர் இருப்பதற்கான சுவடே தெரிவதில்லை..அப்படி அவர் வெளிப்பட்டால் அந்த வெளிப்படுத்துதலே அவரை பல மடங்கு குறைத்துக் காட்டி விடுகிறது.


இந்த விஷயம் அதாவது எலக்ட்ரான் அல்லது பிரபஞ்சம் என்றெல்லாம் நமக்குத் தோன்றுவது உண்மையிலேயே எலக்ட்ரான் அல்லது பிரபஞ்சமா இல்லை ஏதோ ஒன்று இருந்து அதன் விளைவுகளை , side effect களை நாம்
எலக்ட்ரான் அல்லது பிரபஞ்சம் என்று தப்பும் தவறுமாக உணர்கிறோமா என்ற விஷயம் இன்றும் நிறைய விஞ்ஞானிகளை நெருடுகிறது.இருந்தாலும் இன்னும் இயற்கையின் சூத்திரங்களை அறிந்து கொள்ளும் முயற்சி நடந்து கொண்டு தான் இருக்கிறது.

பகலில் ஒரு பொருளை நாம் பார்க்கிறோம் என்றால் அங்கே நிறைய விஷயங்கள் நடக்கின்றன..சூரியன் ஹைட்ரஜன் அணுக்களை அதீத அழுத்தத்தில் ஓட்ட வைத்து E =MC2 இன் படி ஹைட்ரஜனின் நிறை இழப்பை மின் காந்த ஆற்றலாக மாற்றி நம் கண்ணுக்குத் தெரியக்கூடிய அலைநீளங்களில் வெளித்தள்ளுகிறது.அந்த அலைகள் ஒளியின் வேகத்தில் பயணித்து கிட்டத்தட்ட எட்டு நிமிடங்களில் நாம் பார்க்கின்ற பொருளின் மேற்பரப்பின் மீது பட்டு விலக்கப்படுகின்றன . அப்படி விலக்கப்பட்ட அந்த அலைகள் நம் கண்களுக்குள் நுழைந்து (கண்களின் ரசாயனங்கள் அந்த குறிப்பிட்ட அலைநீளத்தை மட்டுமே உறிஞ்சுகின்றன ) விழித்திரையில் அந்தப் பொருளின் ஒரு தலைகீழ் பிம்பத்தை விழி லென்சின் துணையால் உருவாக்குகின்றன. அந்த தலைகீழ் பிம்பம் வேதியியல் துடிப்புகளாக நரம்புகளின் மூலம் மூளைக்கு அனுப்பப்படுகிறது .மூளை அதை நேராக்கி அலசி ஆராய்ந்து இது இன்னது, இன்ன தூரத்தில் உள்ளது,இன்ன நிறத்தில் உள்ளது ..இது ஆண், இது பெண் ,இது ஆட்டுக்குட்டி என்றெல்லாம் ஒருவழியாக அறிந்து கொள்கிறது..இந்த நிகழ்வுகளில் எங்காவது ஒரு இடத்தில் இம்மி பிசகினாலும் கூட நமக்கெல்லாம் சங்கரர் சொல்லும் மாயை என்றால் என்ன என்பது விளங்கும்! ஒரு பேச்சுக்காக நம் கண்களின் அமைப்பு இன்னும் நுட்பமான அலைநீளங்களை கிரகிக்கும் படி அமைந்திருந்தால் அவை X -ray கதிர்களையும் உள்வாங்கக் கூடும்..அப்போது நாம் பார்ப்பதெல்லாம் எலும்புக்கூடாக மாறி டான்ஸ் ஆடும் ...yes கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்குச் சொந்தமில்லை!

சரி மேட்டருக்கு வருவோம்..

நிச்சயமின்மைக்கு ஓர் உதாரணம்..(இது ஒரு உதாரணம் தான்..நிச்சயமின்மை என்றால் இது தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்!)

ஒரு அம்மா தன் ஐந்து வயது குழந்தையைப் பார்த்து "கண்ணு, போய் அப்பா என்ன பண்றார்னு பாத்துட்டு வா" என்கிறாள்..அப்பாவோ தன் அறையில் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கிறார்..தன் அறைப்பக்கம் யாரோ வருவது போலத் தோன்றவே அவசர அவசரமாக அதை அணைத்து விட்டு கையில் ஒரு நியூஸ் பேப்பரை எடுத்து வைத்துக் கொள்கிறார்..
குழந்தையும் பார்த்து விட்டு சமர்த்தாக "அம்மா அப்பா பேப்பர் படிக்கிறார்" என்று சொல்லி விடுகிறது. அதாவது அப்பா என்ன செய்கிறார் என்று அறிந்து கொள்ள அம்மா செய்த முயற்சியே அப்பா செய்து கொண்டிருந்ததை மாற்றி விடுகிறது. இதே ஐந்து வயது குழந்தைக்கு பதில் ஒரு வயது குழந்தை வந்தால் அப்பா கண்டு கொள்ளாமல் சிகரெட் பிடிப்பதைத் தொடரக்கூடும் ..ஆனால் அந்த ஒரு வயதுக் குழந்தைக்கு திரும்ப சென்று அம்மாவிடம் உண்மையை சொல்லும் அளவு ஞானம் (ஆற்றல்) இருப்பதில்லை..

ஒரு பொருளை நாம் பார்க்க முடிகிறது என்றால் அந்தப் பொருளின் அளவு ஒளியின் அலைநீளத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.எலக்ட்ரான் போன்ற துகள்கள் மிகச் சிறியவை என்பதால் அவற்றின் அளவை விட குறைந்த அலைநீளம் உள்ள அலைகளை அனுப்பி மட்டுமே அவற்றை நாம் வேவு பார்க்க முடியும். (அனுமார் ராவணன் அரண்மனையில் நுழையும் போது தன்னை சிறியதாகக் குறுக்கிக் கொள்வாரே அது மாதிரி) ஆனால் குறைந்த அலை நீளம் என்றால் அதன் அதிர்வெண் அதிகமாக இருக்க வேண்டும்..
ஆனால் குவாண்டம் இயற்பியலின் அலை-துகள் இருமைப்படி ஒளியின் ஒரு சிறிய பொட்டலத்தின் குறைந்த பட்ச ஆற்றல் E = hv ..அதிக அதிர்வெண் கொண்ட அலைகளை அனுப்புவதால் ஒளித்துகளின் ஆற்றலும் அதிகமாக இருக்கும். படம்..கிளிக் செய்து பெரிதுபடுத்தவும்



இந்த ஆற்றலானது ஒளித்துகள் (photon ) சென்று எலக்ட்ரானை மோதும் போது எலக்ட்ரானுக்கும் கொஞ்சம் transfer செய்யப்பட்டு எலக்ட்ரானின் திசைவேகம் (அல்லது உந்தம்) சகட்டு மேனிக்கு மாற்றமடைந்து விடுகிறது.

அதாவது இருப்பிடத்தை துல்லியமாக அறியும் முயற்சி அதன் உந்தத்தில் உள்ள துல்லியத்தன்மையை கெடுத்து விடுகிறது. சரி குறைந்த அதிர்வெண் உள்ள அலையை உபயோகப்படுத்தினால் அது எலக்ட்ரானை அவ்வளவாகப் பாதிக்காது.ஆனால் குறைந்த அதிர்வெண் உள்ள அலை தனது பரவிய அலைநீள வரம்பின் காரணமாக நமக்குப்
பொருளின் இருப்பிடத்தை தோராயமாகத்தான் காட்டும். (நம் உதாரணத்தில் ஒரு வயது குழந்தையைப் போல)

ஒரு தேனி பெரிய அறை ஒன்றில் இருந்தால் அது பெரும்பாலும் சுவரில் நிலையாக அமர்ந்திருக்கும்.(அறையின் எந்த இடத்தில் உட்கார்ந்திருக்கும் என்று நம்மால் சரியாக சொல்ல முடியாது. அதாவது வேகத்தை துல்லியமாக சொல்லும் போது இருப்பிடம் தவறி விடுகிறது) இதே அந்த அறையை கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாக்கிக் கொண்டே வந்து ஒரு பாக்ஸ் அளவுக்கு செய்து விட்டால் தேனி தான் சிறைப்பட்டதை உணர்ந்து கொண்டு வேகமாக உள்ளே பறக்க ஆரம்பிக்கும்..இப்போது அதன் இருப்பிடத்தை துல்லியமாக சொல்ல முடியும் (பாக்ஸ் சிறியது என்பதால்) என்றாலும் அது கோபத்தில் இருப்பதால் என்ன வேகத்தில் அலைபாயும் என்று சொல்ல முடியாது.

இது வரைக்கும் நாம் சொன்னதை
Complementarity என்கிறார்கள்..அதாவது ஒரே பொருளின் இரண்டு பண்புகள் ஒன்றுக்கொன்று எதிராய் இருக்கின்றன. ஓஷோ கடவுளைப் பற்றி இவ்வாறு கேட்கிறார்: கடவுள் மிகவும் கருணை உள்ளவர் மற்றும் நீதி தவறாதவர் என்கிறீர்கள்..அவர் கருணை உள்ளவராக இருந்தால் நீதி நியாயம் இவற்றில் compromise செய்து கொண்டு போகட்டும் போ என்று மன்னித்து விடுவார் ..நீதிமானாக இருந்தால் கருணையை எல்லாம் அப்பால் வைத்து விட்டு நடுநிலையில் நின்று தீர்ப்பு வழங்க வேண்டும்.ஆகவே கடவுள் ஒன்று கருணைக்கடலாக இருக்க வேண்டும் இல்லை நீதிமானாக இருக்க வேண்டும்..

but God is both !



கடவுளின் இந்த
Complementarity யை உணர்ந்து கொண்டவர் போல தியாகராஜர் தன் கிருதிகளில் சொல்வதைப் சொல்வதைப் பாருங்கள்

கருணா ஜலதே தாசரதே (ராகம்: நாத நாமக் கிரியா) -கருணைக் கடலே தசரதன் மைந்தா

காரு பாரு சேயுவாரு கலரே
(ராகம்: முகாரி) -நீதி நெறி தவறாது ஆட்சி செய்பவர் உன்னைப் போல இல்லை

சமுத்ரா

16 comments:

Mohamed Faaique said...

ஷப்பா..... முடியல... எத்தனை மேட்டர் சார்? எப்படி கோர்வையாக அழகாக கோர்த்து தர முடியுது?
நல்ல பதிவு ஸார்.

நெல்லி. மூர்த்தி said...

இன்றைய அணு, அண்டம், அறிவியல்- 21 பதிவு அறிவியல் குறித்தா அல்லது ஆன்மீகம் குறித்தா என 'பட்டி மன்றமே' வைக்கும் வகையில் இருந்தது. கலக்கல்! அசத்துங்கோ!!

suvanappiriyan said...

அறிவியல் செய்திகளை மிக எளிய முறையில் ஆன்மீகத்தோடு இணைத்து தருகிறீர்கள். இது போன்று முன்பு நான் இட்ட பதிவு ஒன்று. அறிவியல் பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டவும்.

இறைவனைப் பற்றி எழும் வினாக்கள்!

இறைவன் இருக்கிறானா? இல்லையா? என்ற கேள்வி ஒவ்வொரு மனிதனின் மனதிலும் எழுவது இயல்பே! ஏனெனில் இறைவனை யாரும் பார்த்தது கிடையாது. இறைவனின் பேச்சை நம்மில் யாரும் கேட்டதும் கிடையாது. அப்படி இருக்கையில் இறைவனைப் பற்றிய நம்பிக்கையை நாம் எப்படி வளர்த்துக் கொள்வது.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டார்கள்.கிறித்தவர்களிலும் கர்த்தரைப் பற்றிய எண்ணத்தில் தெளிவாகவே இருப்பார்கள். சிலர் ஏசுவையும், பரிசுத்த ஆவியையும் வணங்கலாம். இந்து நண்பர்களில் பலர் ஒரு கடவுளை ஒத்துக் கொண்டாலும், தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக கடவுளாக வழிபடுவார்கள்.

கடவுள் மறுப்பில் இருக்கும் நாத்திகர்களை எடுத்துக் கொள்வோம். இந்த உலகம் நிலையானது என்று கடவுளை மறுப்பவர்கள் கூறுகின்றனர். இந்த உலகம் எப்படி தோன்றியது என்று நாம் வினவினால் 'உலகம் தோன்றவில்லை. அது என்றும் நிரந்தரமாக உள்ளது' என்பார்கள். அதே போல் 'கடவுளும் தோற்றுவிக்கப் படவில்லை. அவன் எக்காலத்திலும் உள்ள நிரந்தரன்' என்று ஆத்திகர்கள் கேட்டால் 'அது எப்படி ஒருவன் தோற்றுவிக்கப்படாமல் இறைவன் தோன்ற முடியும்? என்னால் ஒத்துக் கொள்ள முடியாது' என்பார்கள். உலகம் பற்றிய வாதத்தில் ஒரு நிலை. இறைவன் பற்றிய வாதத்தில் வேறொரு நிலை. மானிடனின் அறிவில் புரிந்து கொள்ள முடியாத எந்த ஒன்றுமே எங்கும் இருக்க முடியாது என்ற தவறான எண்ணமே இதற்க்கெல்லாம் காரணம்.

வார்னர் ஹைசன்பர்க் என்ற அறிவியல் அறிஞர் ஒரு புரட்சிகரமான கோட்பாட்டை 1926-ல் ஒருவாக்கினார். அநிச்சய தத்துவம்(Uncertainity Principle) என்பது அதன் பெயர். அணுவுக்குள் இருக்கும் மின் அணுவான எலக்ட்ரான் எனும் மிகமிக சூட்சுமமான துகள்கள் அணுவின் மையக் கருவைச் சுற்றி ஒளியின் வேகத்தில் சுழல்கின்றன. அத்துகள்களின் ஒரு நேரத்தில் உள்ள வேகம், அந்த நேரத்தில் சுற்றுப் பாதையில் அது இருக்கும் இடம், இவை இரண்டையும் அளக்க முயலும் போது ஏற்படும் விளைவிலிருந்து ஹைசன்பர்க் இக்கோட்பாட்டை உருவாக்கினார்.
இக்கோட்பாட்டிலிருந்து அறிஞர்கள் கண்ட உண்மை என்னவெனில் 'துகளின் இருப்பிடத்தை எவ்வளவு துல்லியமாக நீங்கள் அளக்க முயல்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு துல்லியமற்ற நிலையிலேயே துகளின் வேகத்தை உங்களால் அளக்க முடியும்.' என்ற முடிவுக்கு வந்தனர். துகளின் இருப்பிடத்தையும், அத்துகளின் துல்லியமான வேகத்தையும் நம்மால் துல்லியமாக கண்டறிய முடியாது. எனவே இச் சோதனையிலிருந்து ஹைசன்பர்க் அவர்கள் 'மனிதனின் அறியும் ஆற்றலுக்கு மிக நிச்சயமாக ஒரு எல்லை உண்டு' என்பதை நிரூபித்தார்.

அற்பப் பொருளான அணுவைப் பற்றியே முழுமையாக அறிந்து கொள்ள இயலாதவனாக மனிதனைப் படைத்துள்ளான் இறைவன். அப்படி இருக்கையில் அந்த அணுவையும் படைத்து கோடானு கோடி கோள்களையும், உயிரினங்களையும் படைத்து பரிபாலிக்கும் அந்த இறைவனைப் பற்றியும, அவன் எப்படி உண்டானான் என்பது பற்றிய அறிவும் எனக்கு இருக்க வேண்டும் என்று மனிதன் எப்படி எதிர் பார்க்க முடியும்? இறைவனைப் பற்றி எனக்கு விளங்காதவரை இறைவன் இருக்கிறான் என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறுவது உயிர் என்றால் என்னவென்று எனக்கு புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறுவதற்க்கு ஒப்பாகும்.

suvanappiriyan said...

தொடரிச்சி...

'முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்.' என்று கூறுவீராக.

-குர்ஆன் 17:85
'ஒவ்வொரு அறிந்தவனுக்கு மேல் அறிந்தவன் இருக்கிறான்'
-குர்ஆன் 12:76

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் இறைவனைப் பற்றிய செய்திகளுக்கு குர்ஆன் தெளிவாக விளக்கமளிக்கிறது. ஹைசன்பர்க்கும், அறிவியல் அறிஞர் ஹாக்கிம் அவர்களும் எதை உறுதிப் படுத்துகிறார்களோ, அதை குர்ஆன் உண்மைப் படுத்துகிறது. நமக்கு குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளதால் ஒரு குற்ப்பிட்ட அளவுக்கு மேல் நம்மால் ஆய்வு செய்ய முடியாது என்பதை இதிலிருந்து விளங்குகிறோம்.
சரி. அப்படி என்றால் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை எப்படி நம்புவது? எப்படி உயிர் என்பதை பார்க்காமல் ஒத்துக் கொள்கிறோமோ அது போல் உலகில் உள்ள இறைவனின் அத்தாட்சிகளைப் பார்த்து நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். நம்முடைய பிறப்பையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு துளி விந்திலிருந்து ஒரு குழந்தை பிறக்கிறது. தகப்பனின் நிறம்,குரல்,சாயல்,குணம் அனைத்தையும் ஒரு துளி விந்தில் ஜிப் செய்யப்பட்டிருக்கிறதே அதை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? 10 நிமிடம் நம்மால் மூச்சு விடாமல் இருக்க முடியவில்லை. ஒன்பது மாதம் வயிற்றுக்குள் உணவும் தந்து, சுவாசிக்கவும் தகுந்த ஏற்ப்பாட்டை உண்டாக்கியது யார்? மனிதன் உண்டாக்கும் பல பொருட்களுக்கும் மூலப் பொருட்கள் உண்டு. அந்த மூலப் பொருட்களை உண்டாக்கியது யார்? பேரண்டத்தில் எத்தனையோ கோள்கள் இருக்க பூமியை மட்டும் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடமாக தேர்ந்தெடுத்தது யார்? இப்படி ஒவ்வொரு அதிசயங்களுக்கும் சூத்திரதாரி யார் என்பதை உங்களுக்குள்ளேயே கேட்டுப் பாருங்கள். விடை தானாக தெரியும்.
தகவல் உதவி:

'திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்."

Chitra said...

but God is both !


...well-said! :-)

Anonymous said...

எல்லாம் நம் சித்தாதத்தில் உள்ளது ஆனால் எதுவும் நிருபிகவில்லை. ஆனால் நீங்கள் நிருபிகிரீர்கள் . மிக அருமையாக சொல்கிறிர்கள்

Aba said...

simply superb.. மண்டையைப் பிச்சுக்கற தியரிகளையே சிம்பிளா விளக்கறீங்க..

தொடர்ந்து எழுதுங்கள்...

Pranavam Ravikumar said...

Good, Structured writings. Wonderful post. My wishes.

G.M Balasubramaniam said...

I JUST THOUGHT OF SKIMMING THROUGH YOUR BLOG. TO BE HONEST, I AM SIMPLY BOWLED LOCK,STOCK,AND BARREL.WHEN I READ YOUR BLOG ON AAA, I MUST ADMIT THAT I MIGHT REQUIRE READING THAT OVER AND OVER AGAIN, TO JUST GRASP THE INPUTS. YOUR KALEIDOSCOPE IS INTERESTING AND CONTAINS PLENTY TO READ AND ENJOY.PLEASE ACCEPT MY BEST WISHES.

சமுத்ரா said...

Thank you G.M B sir

தமிழ்மலர் said...

நன்று...
தொடர்ந்து படித்துவருகிறேன்

ஆனந்தி.. said...

இந்த பதிவை மெதுவா படிக்கிறேன் சமூ..

Jayadev Das said...

உதாரணங்கள் அருமை.

Unknown said...

You're a genius.

Unknown said...

#கடவுள் மிகவும் கருணை உள்ளவர் மற்றும் நீதி தவறாதவர் என்கிறீர்கள்..அவர் கருணை உள்ளவராக இருந்தால் நீதி நியாயம் இவற்றில் compromise செய்து கொண்டு போகட்டும் போ என்று மன்னித்து விடுவார் ..நீதிமானாக இருந்தால் கருணையை எல்லாம் அப்பால் வைத்து விட்டு நடுநிலையில் நின்று தீர்ப்பு வழங்க வேண்டும்.ஆகவே கடவுள் ஒன்று கருணைக்கடலாக இருக்க வேண்டும் இல்லை நீதிமானாக இருக்க வேண்டும்..#

குழந்தை முதல் குமரி கிழவி வரை கற்பழிக்கபட்டு சிதைக்கபடும் போது கருணை உள்ளவர் என்ன செய்தார்? முன்ஜென்மத்தில் அவர்கள் செய்த பாவத்திற்கு தான் இந்த ஜென்மத்தில் கடவுள் அந்த மானுடபிறவிகளுக்கு தண்டனை கொடுத்து தன் நீதியை நிலை நாட்டினாரா?



ஒருவேலை போன ஜென்ம பாவங்களுக்கான நீதிதான் அந்த கொடூரங்கள் என்றால் உமது வீட்டில் அல்லது எமது வீட்டிலோ அதே சீர்கேடுகள் நடைபெறும் போது தடுத்து நிறுத்தாமல் கடவுளின் நீதி என்று வேடிக்கை பார்ப்போமா?

Unknown said...

நண்பர் சுவனபிரியன்
*மாற்றம் ஒன்றே மாறாதது* என்ற கொள்கையை உடையவர்களே பகுத்தறிவாளர்கள்!

அது சரி எல்லாவற்றையும் உருவாக்கியது கடவுள் என்றால் அந்த கடவுளை உருவாக்கியது யார்? யார்?

ஒருவேலை கடவுளே தன்னை தானே உருவாக்கி கொண்டால்
இயற்கை தன்னை தானே தோற்றுவித்து கொள்ள முடியாதா?



நமது அறிவுக்கு எட்டியவரை உயிர்கள் தற்போது பூமியில் மட்டுமே உள்ளது


மேலும் சிந்தனை கொண்ட உயிர்களோ மிக மிக சிறுமை


ஆனால் அனைத்தையும் படைத்த கடவுள் மட்டும் சிந்தனை கொண்ட மனித உருவத்தில் இருப்பார் என்பது கொஞ்சம் வேடிக்கையா இருக்குல!



உயிரற்ற பொருள்களிலிருந்து உயிருள்ள பொருள்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி கூடங்களில் சாதித்துவிட்டதாக நினைவு!


அப்படி என்றால் மனிதன் கடவுளின் செயலை ஆக்கத்திலும் சரி அழிவிலும் சரி செயல்பட ஆரம்பித்து விட்டான் அல்லவா?



ஒருவேலை நடக்கும் சீர்கேடுகளை நாடகம் பார்ப்பது போல் ஒரு மூளையில் இருந்து கொண்டு கடவுள் ரசிப்பாரேயானால் அவர்மீதும் வலுவான இயற்கை விதிபடி தயாரித்த வலிமையான குண்டுகள் வீசபட்டு அழிக்கபடலாம்