இந்த வலையில் தேடவும்

Friday, April 15, 2011

குறையொன்றும் இல்லை!

ஏழைகளுக்கு
அது செய்தேன்
இது செய்தேன்
என்கிறார்கள்
ஏழைகளே இல்லாமல் செய்தேன்
என்று யாருமே சொல்வதில்லை!

நீங்கள்
பரமபத நாற்காலியில் போயமர்ந்ததும்
உங்களை ஏணியில் ஏற்றி விட்ட
இந்த-
பகடைக் காய்களை எறிந்து விடுவீர்கள்!

எங்கள் வாழ்வை
வண்ணமயமாய் ஆக்குவோம் என்றீர்கள்
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
வழங்குவீர்கள் என்று தெரிந்திருக்கவில்லை..

அலைவரிசைத் தொடர்களை நாங்கள்
அழுதுகொண்டு பார்த்திருக்க
அலைக்கற்றை ஊழல் ஒன்றை
அரங்கேற்றி விட்டீர்கள்

நாங்கள் விளைத்த அரிசியை
எங்களுக்கே
ஒரு ரூபாய்க்கு விற்கிறீர்கள்!
நோய்களை நீங்களே
நடவு செய்து விட்டு
'இலவச ஆம்புலன்ஸ்' என்று
இருமுகம் காட்டுவீர்கள்!

குளிரில் நடுங்கிய மயிலுக்கு
தன் மேலாடை தந்தவன் தமிழன்
நீங்களோ
கடைத்தேங்காயை எடுத்து
வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறீர்கள்
ஆம்-
இலவசங்களை
கொடுத்து விட்டு -எங்கள்
இறையாண்மையைப்
பிடுங்கிக் கொண்டீர்கள்

நீங்கள் தின்று
எறிந்த மிச்சத்தை
நாவைக் காட்டிக் கொண்டு
நக்குவதற்கு
நாங்கள் நாய்கள் இல்லை!

வாக்குக்காக
கை கூப்பும் போது
வாயு மைந்தன் போல்
வால் சுருட்டி நிற்கிறீர்கள்
ராஜ்ஜியம் கிடைத்ததும் -ஏன்
ராவணனாய் மாறுகிறீர்கள்?

வீரனாய் விவேகியாய்
வெள்ளித் திரையில் தோன்றி விட்டு
வீதிக்கு வந்ததும்
வேட்பாளரை அடிப்பீர்கள்!

கையில் இட்ட
மை கூட
காலத்தால் அழிந்து விடும்-எங்கள்
நெற்றியில் போட்ட நாமம் தான்
நித்தியத்துவம் பெற்று விட்டது

உண்மையிலேயே எங்களுக்காய்
ஓடாய் உழைத்திருந்தால்
இன்று ஏன்
ஓடி ஓடி பிரச்சாரம் செய்கிறீர்கள்?

சொன்னதை செய்வது
உங்கள் தர்மம்-ஆனால்
செய்ததை சொல்வது
சிறுபிள்ளைத்தனம்

பெரியார் விதைத்த கொள்கையை
அண்ணா வளர்த்த திராவிடத்தை -இன்று
காமெடி பீசுகளிடம்
கடன்கொடுத்து விட்டீர்கள்..

வேடிக்கை பார்ப்பதில்
வல்லவன் தமிழன்
குஷ்புவைப் பார்க்க வந்த கூட்டத்தை
'குலவிளக்குகளே' என்று கூசாமல் சொல்கிறீர்கள்

குறளுக்கு விளக்கம் எழுதுபவர்களே
"குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் "
என்று தமிழ்க்குரவன் செப்பியது
'டாஸ்மாக்' கை அல்ல!

மீனவர்களுக்காய் நீங்கள் கடிதம்
எழுதிக்கொண்டிருக்க
அவர்கள் இறப்புச்செய்தியை
எமன்
'பேக்ஸ்'இல் அனுப்புகிறான்

ஆம்
உங்கள் வசையாடல்களை
வேடிக்கை பார்ப்பதை விட்டு-எங்களுக்கு
வழியொன்றும் இல்லை
கொடநாடுகள் இருக்கும் வரை
ஆள்பவர்களுக்கும்
குறையொன்றும் இல்லை!



சமுத்ரா




10 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அருமையான கவிதை வாசித்தேன்...
ரசித்தேன்..
வாழ்த்துக்கள்..

சி.பி.செந்தில்குமார் said...

>>மீனவர்களுக்காய் நீங்கள் கடிதம்
எழுதிக்கொண்டிருக்க
அவர்கள் இறப்புச்செய்தியை
எமன்
'பேக்ஸ்'இல் அனுப்புகிறான்

நச்

ப.கந்தசாமி said...

நல்ல கவிதை.

பொன் மாலை பொழுது said...

சிறப்பான ஆக்கம். யாரையும் விட்டுவைக்காமல் விளாசியதும் நன்றே!

suvanappiriyan said...

நல்ல கவிதை.

Mohamed Faaique said...

சூப்பர்... உங்களுக்கு எத்தனை முகம் இருக்கு ஸார்????

Chitra said...

ஏழைகளுக்கு
அது செய்தேன்
இது செய்தேன்
என்கிறார்கள்
ஏழைகளே இல்லாமல் செய்தேன்
என்று யாருமே சொல்வதில்லை!



...Super!!! பட்டையை கிளப்பி இருக்கீங்க!

ஆனந்தி.. said...

அலைவரிசைத் தொடர்களை நாங்கள்
அழுதுகொண்டு பார்த்திருக்க
அலைக்கற்றை ஊழல் ஒன்றை
அரங்கேற்றி விட்டீர்கள்//

இது ரொம்பவே அழகா வந்திருக்கு சமுத்ரா..

மாலதி said...

//ஏழைகளுக்கு
அது செய்தேன்
இது செய்தேன்
என்கிறார்கள்
ஏழைகளே இல்லாமல் செய்தேன்
என்று யாருமே சொல்வதில்லை!//யாரையும் விட்டுவைக்காமல் விளாசியதும் நன்றே!

munna said...

LIKES