இந்த வலையில் தேடவும்

Friday, December 30, 2011

அணு அண்டம் அறிவியல் -56

அணு அண்டம் அறிவியல் -56 உங்களை வரவேற்கிறது மறுபடியும் ஒரு மாறுதலுக்காக வேறு ஒரு டாபிக். Artificial Intelligence (AI ) - செயற்கை அறிவு.




செயற்கை அறிவை வைத்து உலக அளவில் I , Robot டில் இருந்து எந்திரன் வரை படங்கள் வந்து விட்டன.ஆனால் அவையெல்லாம் அதீத கற்பனைகள்.ஒரு ரோபோ நாட்டைக் குறிஞ்சியில் ஹுசேனி கலந்து விட்டது என்றெல்லாம் கண்டு பிடிக்க ரொம்பவே மெனக்கெட வேண்டும். இதற்கு ஒன்று உண்மையிலேயே அதற்கு சங்கீத அறிவை உட்செலுத்த வேண்டும். ரோபோ, 'ரொம்ப போரடிக்கிறது மதுரை சோமுவின் வாசஸ்பதி ஆர்.டி.பி போடு' என்று அதுவாகவே சொல்லவேண்டும். அதுதான் AI ...இல்லையென்றால் ரோபோவின் உள்ளே ஒரு FREQUENCY DETECTOR வைத்து இசை எந்த விதமான ஆரோகண அவரோகன அதிர்வெண் கிரமத்தில் வருகிறது என்று கண்டுபிடித்து முதலிலேயே உட்செலுத்தப்பட்ட ராக Data base டேபிள்-ஐப் பார்த்து ,அதனுடன் ஒப்பிட்டு இது நாட்டைக்குறிஞ்சி என்று சொல்ல வேண்டும்.ஆனால் இது மீண்டும் மனிதனின் தர்க்க அறிவே தவிர இயந்திரத்தின் AI அல்ல.இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு டிடெக்டர் அது இது என்று வைத்துக் கொண்டே இருந்தால் ரோபோட் ஒரு டைனோசர் அளவுக்குப் பெரிதாகி விடும்.ரஜினி போல
ஸ்லிம்மாக கண்டிப்பாக இருக்காது.

முதலில் அறிவு என்றால் என்ன?

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.


ஒன்றை நல்லதா கெட்டதா என்று பிரித்துப் பார்ப்பது தான் அறிவு என்கிறார் வள்ளுவர். ஒரு கணிப்பொறிக்கு அது நாம் நல்லது செய்கிறோமா (ஆஸ்பத்திரியில் புதிய மருந்து கண்டுபிடிக்க) அல்லது கெட்டது செய்கிறோமா (தீவிரவாதிகள் கையில் இருக்கிறோமா) என்று தெரியாது.


அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

தனக்கு அழிவு நேரிடாமல் காத்துக் கொள்வது அறிவு. ஒரு ரோபோவை நோக்கி உருட்டுக் கட்டையால் அடிக்கப் பாருங்கள். அது கையை உயர்த்தி தானாகவே உங்களைத் தடுத்தால் அது தான் A .I

இங்கே இரண்டு விதமான வாதங்கள் இருக்கின்றன. ஒன்று : அறிவு என்பது பிரக்ஞைத்தன்மையின் துணைப்பொருள் என்று நம்புவது (Intelligence is the by-product of consciousness) .நாம் சிந்திக்கிறோம் என்றால் நமக்குள்ளே ஒரு விழிப்புணர்வு அல்லது ஆத்மா என்ற ஒன்று
இருப்பதால் தான் என்ற வாதம்.இன்னொன்று பிரக்ஞைத்தன்மை என்பது அறிவின் துணைப்பொருள் என்ற நம்பிக்கை (consciousness is the by-product of Intelligence) அறிவு இருப்பதால் தான் நாம் நம்மை உணர்கிறோம் என்பது.டெஸ்கார்டசின் Cogito ergo sum என்ற வாக்கியத்தை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.I think therefore I'm ! நான் நினைக்கிறேன் அதனால் நான் இருக்கிறேன்.இரண்டாவது வாதத்தில் I'm therefore I think ! நான் இருக்கிறேன் அதனால் நான் சிந்திக்கிறேன்! இந்த இரண்டாவது வாதம் உண்மை என்றால் Artificial Intelligence சாத்தியம் இல்லை. ஏனென்றால் ஒரு இயந்திரத்திற்கு நம்மால் செயற்கை இதயம், நுரையீரல் ஏன் மூளையைக் கூட வைக்க முடியும். ஆனால் அதற்கு 'உயிர்' கொடுக்க முடியாது.திரைப்படங்களில் வருவது போல மோட்டார்களையும் ஒயர்களையும் சென்சார்களையும் இணைத்து
'சிந்தனை செய் சிட்டி' என்றால் அது சிந்திக்காது.ஆனால் இன்னும் சில வி
ஞ்ஞானிகள் இயந்திரங்களை சிந்திக்க வைக்க முடியும் என்று நம்புகின்றனர். கிளாடி என்ற விஞ்ஞானியிடம் Can Machines think? என்று கேட்டதற்கு ஆமாம் என்று பதிலளித்தாராம்.'எப்படி'? என்று கேட்டதற்கு "I think, don't I?" என்றாராம். இவர்கள் மனிதனை வெறுமனே 'சிந்திக்கும் இயந்திரம்' என்று நம்புபவர்கள்.

இயந்திரங்களை சிந்திக்க வைத்தால் அவற்றால் தியானம் செய்ய முடியுமா ?

வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக்
கிட்டவரத் தேடிக் கிருபை செய்வது எக்காலம்? - என்ற பரவச நிலையை அவை அடையுமா தெரியவில்லை.

சரி.தத்துவம் ஒருபக்கம் இருக்கட்டும். இனி செயற்கை அறிவின் அறிவியலுக்குள் நுழைவோம்.

மெசின்களை சிந்திக்க வைப்பதற்கு முதலில் மனிதன் எப்படி சிந்திக்கிறான் என்பது தெரிய வேண்டும். ஏரோப்ளேன் கண்டுபிடிப்பதற்கு முன் பறவை எப்படிப் பறக்கிறது என்று ஆராய்வது போல. ஆனால் இன்றுவரை மனிதமூளை என்பது கைதேர்ந்த
விஞ்ஞானிகளுக்குக் கூட ஒரு மிகப்பெரும் சவாலாக,விடுவிக்க இயலாத புதிராக இருக்கிறது.மூளையின் சர்க்யூட்டுகள் அதாவது நியூரல் நெட்வொர்க்ஸ் எப்படி இயங்குகின்றன என்பது இதுவரை சரியாகத் தெரியவில்லை. குத்துமதிப்பாக இந்த இடத்தில் தூண்டினால் கோபம் வருகிறது இந்த இடத்தில் தூண்டினால் ஆள் ரொமாண்டிக்-மூடுக்குப் போகிறான் என்று கணக்குப் போட்டு வைத்திருக்கிறார்களே தவிர எப்படி மூளை இதை செயல்படுத்துகிறது என்று தெரியவில்லை. உதாரணமாக ஒரு மனிதனுக்கு ஒருமொழியில் பத்தாயிரம் வார்த்தைகள் தெரியும் என்று
வைத்துக்கொள்வோம். உடனே அவன் பேப்பர் பேனா எடுத்துக் கொண்டு கவிதை எழுதப் புறப்பட்டு விடுகிறான். ஆனால் ஒரு சாதாரண வீட்டுபயோக கம்ப்யூட்டரில் உலகின் அத்தனை மொழிகளின் அகராதிகளையும் ஒருங்கே சேமித்துவைக்க முடியும்.ஆனால் அது அத்தனை சொற்களையும் தனக்குள்ளே வைத்துக்கொண்டு எதுவும் செய்யாமல் தேமே என்று உட்கார்ந்திருக்கிறது. வைரமுத்து அளவுக்கு கவிதை எழுதாவிட்டாலும் 'பெண்ணே நீ பேரழகு' என்ற அளவுக்கு எழுதினால் போதும். ஆபீசுக்கு வந்து கம்ப்யூட்டரை ஆன் செய்து பார்த்தால் அது ஒரு கவிதை எழுதி வைத்திருந்தால் எப்படி
இருக்கும்? [ஒன்று மட்டும் நிச்சயம் சினிமா கவிர்களுக்கு வேலை போய் விடும்] 'அறிவுள்ள' ஒரு
கம்ப்யூட்டருடன் வேலை செய்வது சுவாரஸ்யமான விஷயம். இப்படியெல்லாம் நடந்தால் எப்படி இருக்கும்.

ஆள்: ஹலோ என் கணினியே? GM .
கணினி: ஹலோ, மார்னிங்..என்ன இன்னைக்கு சீக்கிரம் ஆபீசுக்கு வந்துவிட்டாய்?
ஆள்: மனைவியுடன் சண்டை
கணினி: உன் ஜி-மெயில் சேட்-டை எல்லாம் உன் மனைவிக்கு Forward செய்யவா?
ஆள்: என்ன மிரட்டுகிறாயா? உன் மதர் போர்டை பிடுங்கி விடுவேன்.
கணினி: அதையெல்லாம் எப்போதோ back -up எடுத்துக் கொண்டாகி விட்டது.
ஆள்: ரொம்ப பேசற நீ, சரி நேற்றைய பாலன்ஸ் சீட் ஒப்பன் பண்ணு
கணினி: நானே டேலி செய்து விடவா?
ஆள்: சரி செய். நான் போய் ஒரு காபி எடுத்து வருகிறேன்.இறுதியில் என் பெயர் போட மறக்காதே.
கணினி: மனிதர்களே இப்படித்தான் :(

இயற்பியல், நியூட்டனின் பிறப்புக்குப் பின்னர் மள மள என்று வளர்ந்தது.அது போல Artificial Intelligence -இன் நியூட்டன் என்று ஒருவர் இன்றுவரை பிறக்கவில்லை என்கிறார்கள். (ஒருவேளை அது நான் தானோ ?:) )ஆனாலும் இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க ஆராய்சிகள் செய்து Father of ai என்று அழைக்கப்படுபவர் ALAN TURING (23 June 1912 – 7 June 1954) என்ற பிரிட்டிஷ்
விஞ்ஞானி ,அறிவாளிகள் நீண்டநாள் வாழ்வதில்லை என்ற விதியை பொய்யாக்க விரும்பாமல் இவரும் தன் 41 -வது வயதில் வைகுண்டப்ராப்தி அடைந்தார்.




நமக்கு தான் -- வில் விஞ்ஞானிகளின் குறைகளை அலசுவது ரொம்பப் பிடிக்குமே? ஹி ஹி .டியூரிங் ஒரு ஹோமோ-செக்ஸுவல்.(Of course இது ஒரு குறை அல்ல) ஆனால் அந்தக் காலத்தில் ஓரினச்சேர்க்கை ஒரு தண்டிக்கத் தக்க குற்றமாக இருந்ததால் இவர் ஆபரேஷன் செய்து கொண்டு முழுவதும் பெண்ணாக மாறி விட முடியுமா என்று
யோசித்தார்.
ஹோமோ-செக்ஸுவல் களுக்கு சாதாரணமாகவே பாலியல் உணர்வுகள் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுவதற்கு ஏற்ப இவரும் ஒரு Aggressive ஹோமோ-செக்ஸுவல் ஆக இருந்தார். பொது நூலகங்களில் மறைவிடங்களில் 'பையன்களிடம்' தவறாக நடந்து கொண்டதாக இவர்மேல் வழக்குகள் கூட உண்டு. டியூரிங்கின் உயிர்காதலராக இருந்தவர் அர்னால்ட் முர்ரே. (பெண் அல்ல, ஆண்) இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த தருணங்களை ஆதாரம் காட்டி பிரிட்டிஷ் அரசாங்கம் இருவரையும் கைது செய்து கடுமையான தண்டனைகள் அளிக்கப்படும் என்று அறிவித்தது.(இரண்டாம் உலகப் போரின் போது இவர் வீட்டில் போராட்டக் காரர்கள் புகுந்து விட்டனர் என்று சொல்லி இவர் போலீசை அழைத்தார்.போலீஸ் வந்த போது இவரும் இவர் பாய்-பிரண்டும் எக்குத்தப்பாக இருந்ததை பார்த்து அவர்களை கைது செய்து விட்டது போலீஸ்.[போலீசை கூப்பிட்டு விட்டு ஏன் ஜல்சா செய்தீர்கள் டியூரிங் ??])இதனால் மனம் உடைந்த டியூரிங், அரசாங்கத்தின் கட்டளைக்கு பணிந்து பெண்ணாக மாறும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் அதில் முழுத்திருப்தி ஏற்படாமல் (He didn't like the breasts !)அடுத்த ஒரு வருடத்திலேயே சயனைடு கலந்த ஆப்பிளைத் தின்று தற்கொலை செய்து கொண்டார்.ஆப்பிள் நிறுவனத்தின் கொஞ்சம் கடிக்கப்பட்ட ஆப்பிள் லோகோ இவரை கவுரவிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். டியூரிங் இறப்பிற்குப் பிறகு இயற்கைக்கு எதிரான காதல்களை குறிக்க கூட இந்த கடிக்கபப்ட்ட ஆப்பிள் சின்னம் பயன்படுகிறது.



இரண்டாம் உலகப்போரில் நாஜிக்களின் 'எனிக்மா' என்ற யுத்த மெசினின் நிரல்களை (code) உள்ளே புகுந்து அழிக்கும் எதிர் மெசின்களை வடிவமைத்தவர் டியூரிங்

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு பெருகி வரும் இன்றைய நாட்களில், சமீபத்தில் 2009 ஆம் ஆண்டில் ஜான் க்ராஹாம் என்பவர் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு மாபெரும் விஞ்ஞானியை அவர் ஓரினச் சேர்க்கையாளர் என்ற ஒரே காரணத்துக்காக கேவலமாக நடத்திய செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஒரு வழக்கு தொடர்ந்தார்.பிரிட்டிஷ் பிரதமர் ,We cant reverse the clock என்று கூறி பேசிய மன்னிப்பு உரையை அப்படியே பார்க்கலாம்.

"Thousands of people have come together to demand justice for Alan Turing and recognition of the appalling way he was treated. While Turing was dealt with under the law of the time and we can't put the clock back, his treatment was of course utterly unfair and I am pleased to have the chance to say how deeply sorry I and we all are for what happened to him ... So on behalf of the British government, and all those who live freely thanks to Alan's work I am very proud to say: we're sorry, you deserved so much better "

மிக அதிக பாலின உணர்வு உள்ளவர்கள் மிக அதிக புத்திசாலிகளாக இருப்பார்கள் என்ற பேச்சுக்கு டியூரிங் விதிவிலக்கு அல்ல.கணிதத் துறைக்கும் கணினித் துறைக்கும் இவர் கொடுத்த பங்குகள் அளப்பரியவை.
Godel

கணிதத்தில் இருக்கும் ஒரு முக்கியமான தேற்றம் கோடலின் INCOMPLETENESS THEOREM .அதாவது கணிதத்தில் நிரூபிக்கவே முடியாத சில தரவுகள் (axioms )இருக்கின்றன என்பது.[எந்த ஒரு முழு எண்ணையும் இரண்டு பகா எண்களின் கூடுதலாக எழுத முடியும் என்பதற்கு நிரூபணம் இன்றுவரை இல்லை.ஆனால் இது உண்மை ] கணிதம் என்பது முழுமையானது என்ற கருத்தை இந்த தேற்றம் பொய்யாக்கியது. எப்படி ஹைசன்பெர்க்- இன் நிச்சயமில்லாத் தத்துவம் இயற்பியல் உலகை ஆட்டம் காண வைத்ததோ அப்படி கோடலின் தேற்றங்கள் கணித உலகையே உலுக்கின.அதே போல டியூரிங் ஒரு கொள்கையை முன்வைத்தார்.

இன்றைய கணிப்பொறியின் உள்ளீடு (INPUT ) , CPU மற்றும் வெளியீடு (OUTPUT ) மாடலை முதன்முதலில் உருவாக்கியவர் டியூரிங்.இது டியூரிங் இயந்திரம் என்று அழைக்கப்படுகிறது [Turing Machine ]ஒரு
டியூரிங் இயந்திரம் , ஒரு கணக்கீட்டை செய்ய ஒரு கணிக்கத்தக்க நேரம் எடுத்துக் கொள்ளுமா அல்லது முடிவில்லாத நேரம் எடுத்துக் கொள்ளுமா என்று உறுதியாக சொல்ல முடியாது. இயந்திரம் முடிவில்லாத நேரம் எடுத்துக் கொள்கிறது என்றால் நாம் அளித்த உள்ளீடு கணக்கிட இயலாதது (In computable ) அல்லது நிரூபிக்க முடியாதது என்று அர்த்தம். எனவே டியூரிங்-கின் இயந்திர மாடல் மீண்டும் கோடலின் கணிதவியல் தேற்றங்களை உறுதிப்படுத்தியது.

Artificial Intelligence இன் முதல் படி என்ன என்றால் ஒரு இயந்திரம் Turing Test என்ற ஒரு டெஸ்டை பாஸ் செய்ய வேண்டும்.( என்ட்ரன்ஸ் எக்ஸாம் மாதிரி!) ஒரு மனிதனையும் மெஷினையும் சீல் செய்யப்பட பெட்டிகளில் அடைக்க வேண்டியது. எந்தப் பெட்டியில் எது இருக்கிறது என்று வெளியில் இருந்து யாருக்கும் தெரியாது.இரண்டு பெட்டிகளையும் நோக்கி
கேள்விக்கணைகளைத் தொடுக்க வேண்டியது. விடைகளை வைத்து அது மெஷின் சொன்னதா அல்லது மனிதன் சொன்னதா என்று வெளியிலிருந்து அனுமானிக்க முடியாவிட்டால் அந்த மெஷின் Turing டெஸ்டை பாஸ் செய்து விட்டது என்று அர்த்தம்.

உதாரணமாக நான் செத்துப் போகிறேன்; பிறகு எனக்கு ஒரு குழந்தை பிறக்கிறது ; அதன் பெயர் என்ன? என்று கேட்டால் 'தெரியாது' என்று விடை வந்தால் அது மெஷின். 'டேய் பேரிக்காய் மண்டையா, செத்துப் போனதுக்கப்பறம் எப்புடிடா பாப்பா பொறக்கும்' என்று (கவுண்டமணி வாய்சில்)பதில் வந்தால் அது மனிதன்.

ஒரு அறிவாளி ரோபோட்டை வடிவமைப்பதில் இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று Top -down இன்னொன்று Bottom -up .எந்திரன் படத்தில் இந்த இரண்டு அணுகுமுறைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

TOP DOWN - ஒரு ரோபோட்டின் உள்ளே சி.டி. அல்லது சிப் ஒன்றை நுழைத்து அதை திடீரென அறிவாளியாக ஆக்குவது

BOTTOM UP - அடிப்படை அறிவு (?) உள்ள ஒரு ரோபோட்டை உருவாக்கி விட்டு பின்னர் மற்ற எல்லாவற்றையும் 'நீயே அறிந்து கொள்' என்று விட்டு விடுவது.

இந்த இரண்டைப் பற்றியும் விரிவாக அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

சமுத்ரா

Wednesday, December 28, 2011

கலைடாஸ்கோப்-48

லைடாஸ்கோப்-48 உங்களை வரவேற்கிறது

#
You can't just ask customers what they want and then try to give that to them. By the time you get it built, they'll want something new -Steve Jobs

'புதிய' என்ற இந்த வார்த்தை நமக்கெல்லாம் மிக கவர்ச்சிகரமானது.இது புதிய சோப்புக்கும் பொருந்தும் புதிய காருக்கும் பொருந்தும்.புதிய வீட்டுக்கும்! நீண்ட காலங்களுக்கு முன்பு வீட்டுக்கு முதன்முதலில் டி.வி. வந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.டி.வி என்றால் இப்போது இருப்பது போல எல்,ஈ.டி , வால் மவுன்ட் , டாடா ஸ்கை போன்ற அதீத மிகைகள் இல்லாத தூர்தர்ஷன் மட்டுமே தெரியக்கூடிய சின்ன கறுப்பு வெள்ளை போர்டபிள் டி.வி.கேபிள் டி.வி கூட அப்போது வழக்கத்தில் இல்லை. One and only தூர்தர்ஷன் ! ரிமோட் என்பது அப்போது கேள்விப்படாத ஒரு பெயர்.டி.வியில் டொக்கு டொக்கு என்று சானலைத் திருப்பும் குமிழ் ஒன்று இருக்கும். கேபிள் டி.வி இல்லாததால் அது உபயோகிக்கப் படாமலேயே இருக்கும்.

இப்படிப்பட்ட டி.வி முதன்முதலில் வீட்டுக்கு வந்த போது ராமர் தன் வீட்டுக்கு வருவதை அறிந்து மகிழ்ச்சியில் திளைத்த சபரி போல உணர்ந்தோம்.டி.வி யுடன் வரும் ஒரு சுகமான அவஸ்தை ஆண்டெனா.அப்போதெல்லாம் வீட்டின் மேல் ஆண்டெனா இருந்தாலே அவர்கள் கொஞ்சம் 'பெரிய ஆள்' . நம் ஒட்டு வீடு மீது அண்டெனா ஏறி அமர்ந்ததும் சமூக அந்தஸ்து ஒரு படி உயர்ந்து விட்டது போல (?) உணர்ந்தோம்.ஆன்டெனாவின் கரங்கள் சினிமா நடிகையின் பல் வரிசை போல ஒரே சீராக இருந்தால் தான் கீழே படம் நன்றாகத் தெரியும். காற்றில் கலைந்து விட்டால் தம்பியை ஓட்டின் மீது ஏறி வானரசேஷ்டை செய்யும்படி பணிக்க வேண்டி இருக்கும்! தூர்தர்சனில் பெரும்பாலும் 'பென்சில்' என்று செல்லமாக அழைக்கப்படும் சிம்பல் ஒன்று கூஊஊஊஊஊய் என்ற சத்தத்துடன் வந்து கொண்டிருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் மகாபாரத், சந்திரகாந்தா போன்ற சரித்திரத் தொடர்கள், சித்ரஹார் , சித்ரமாலா மேலும் சமந்தர்,சுவாபிமான்,ஔரத் போன்ற சீரியல்கள்..!!தூர்தர்சனைப் பார்த்தே பாட்டியும் அம்மாவும் அக்காவும் பாதி ஹிந்தி கற்றுக் கொண்டு விட்டிருந்தார்கள்.

டி.வி வந்த புதிதில் அதை ஒரு Royal guest போல பாவித்து, அதை கவர் போட்டு மூடி வைக்க வேண்டும்.(நீலக்கலர் கவர் போட்டால் கறுப்பு-வெள்ளை-நீல(கலர்) டி.வி என்ற பெருமை வேறு) .தினமும் ஒருவர் சுத்தம் செய்ய வேண்டும். இரண்டு மணிநேரத்துக்கு மேல் தொடர்ச்சியாகப் போடக்கூடாது (ஹீட் ஆகி விடுமாம்) ,குமிழ்களை தேவையில்லாமல் திருகக் கூடாது, ஸ்டேபிலைசர் போடாமல் டி.வி போடக்கூடாது என்ற விதிமுறைகளை நாங்களே வகுத்துக் கொண்டோம் !!

வந்த புதிதில் அப்படி உலக அதிசயமாகத் தோன்றிய டி.வி இப்போது வீட்டில் குப்பை துடைக்க ஆள் இன்றி பரிதாபமாக
உட்கார்ந்திருக்கிறது.
(of course , இது வேறு டி.வி)

பழகப் பழக பால் மட்டும் அல்ல டி.வி, செல்போன், கார், ஐ-பாட் ,மனைவி எல்லாமும் புளிக்கும்.

##
[மலரும் நினைவுகளில் ஆழ்ந்து போகாமல் இந்தக் காலத்துக்கு வரவும்]

-வோடபோனில் இருந்து 123 டயல் செய்தால் சினிமா நட்சத்திரங்களின் height , வெயிட், டயட் எல்லாம் தெரிந்து கொள்ளலாமாம். சரி. முதலில் நான் ஏன் அவர்களின் வெயிட்டை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. அது எந்த விதத்தில் எனக்குப் பயன்படும் என்றும் தெரியவில்லை.இது மாதிரி அபத்தங்களை செய்யாமல் இருப்பது நமக்கும் நல்லது. அவர்களுக்கும் நல்லது. நமக்கு எப்படி நல்லது என்றால் அந்த நேரத்தில் நாம் வாழ்க்கைக்குத் தேவையான வேறு விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.

நட்சத்திரங்களை மிகையாக தலையில் தூக்கிக்கொண்டு ஆடாமல் இருப்பது அவர்களுக்கும் நல்லது.பின்னாளில் அதே ரசிகர்களால் பரிதாபகரமாகப் புறக்கணிக்கப்படும் போது அவர்களுக்கு அது பெரிதாக வலிக்காமல் இருக்கும்.

-- இப்போதெல்லாம் இந்திய தடகள வீராங்கனைகள் தங்கம் வென்றார்கள் என்ற செய்தியைக் கேட்டு சந்தோஷப்பட முடிவதில்லை. மிக விரைவிலேயே அவர்கள் ஜெயித்தது செல்லாது. ஊக்க மருந்து சாப்பிட்டார்கள் என்று இன்னொரு செய்தி வருகிறது. வீராங்கனைகளே, வீரர்களே, உலகிலேயே சிறந்த, ஆனால் (இன்னும்) தடைசெய்யப்படாத ஒரு ஊக்கமருந்து இருக்கிறது. அதன் பெயர்--------------------------'மனம்'


###

மனம் ஒரு சிறந்த ஊக்க மருந்து என்று சொன்னோம். ஆனால் இது நம்மைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு.'ஓஷோ' என்ன சொல்கிறார் என்றால் ஜப்பானின் சாமுராய்கள் ஒரு மனமற்ற நிலையில் சண்டை போடுகிறார்கள் என்கிறார். ஏனென்றால் மனம் அல்லது மூளை என்பது காலத்தால் இயங்குவது.மனம் செயல்படுவதற்கு காலம் வேண்டும்.அதனால் ஆக்ரோஷமான ஒரு சண்டையில் மனத்தை நம்பி இறங்க முடியாது. சாமுராய்கள் தங்கள் சக்தியை தொப்புளுக்குக் கீழே இருக்கும் 'ஹரா' என்ற மையத்தில் குவிக்கிறார்கள்.ஹரா, காலம் கடந்த ஒரு பரிமாணத்தில் இயங்கக் கூடியது.அந்த மையத்தில் சக்தியைக் குவித்த சாமுராய்-களுக்கு எதிரி தாக்கும் முன்பே அவன் எங்கே தாக்கப் போகிறான் என்று தெரிந்து விடுகிறது.எனவே எதிரி தாக்கும் முன்பே அவர் தன்னைத் தற்காப்பு செய்து கொள்ளத் தயாராகி விடுகிறார்.

போதிதர்மர் இந்த மாதிரி ஒரு சண்டைப்பயிற்சி தான் மேற்கொண்டார். ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யா (போதிதர்மர்) சண்டை போடும் போது அவர் முகத்தில் ஒரு வித அமைதி, ஒருவித தியான நிலை நிலவுவதை நீங்கள் கவனித்திருக்கலாம் . பரிட்சையில் வரும் கேள்வி எல்லாம் முதல் நாளே தெரிந்து விட்டால் நம் முகம் எப்படி டென்ஷன் இன்றி அமைதியாக இருக்குமோ அப்படி. எதிரி என்னதான் கொம்பனாக இருந்தாலும் அடுத்து அவன் எங்கே தாக்கப்போகிறான் என்று அவர்களுக்குத்
தெரிந்து விடுகிறது.இரண்டு சாமுராய்கள் சண்டை போட்டால் அது இன்னும் அழகானது. இன்று பெரும்பாலான தமிழ் சினிமாக்களில் நாம் பார்க்கும் சண்டைகள் அசிங்கமானவை.ஹீரோ கண் சிவந்து, முடி கலைது
ந், பல்லைக் கடித்து,நரம்பை முறுக்கி,,,,,,Can 't help !

உலகின் மிகப் பெரிய கணித மேதையான ஹார்டி , ஒரு குறிப்பிட்ட புதிரை விடுவிக்க ஆறுமணிநேரம் எடுத்துக் கொண்டாராம். அதே புதிரை நம் ராமானுஜத்திடம் சொன்னபோது அவர் ஒரு சில வினாடிகளில் விடையை சொல்லி விட்டாராம். ராமானுஜம் அவர் முன் பிறவியில் ஹரா சக்கர பயிற்சி பெற்ற ஒரு சாமுராயாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார் ஓஷோ.

####

இப்போதெல்லாம் போர்கள் நடப்பதில்லை. விலங்குகள் நல அமைப்புகள் பெருகி வருகின்றன.'புற்கள் மீது நடக்காதீர்கள்' என்று போர்டுகளைப் பார்க்கிறோம்.ஜீவ காருண்யம் மலிந்து எல்லாரும் வள்ளலார், புத்தர் ஆகி விட்டார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் ஒன்று நிச்சயம்.Torture என்பது Physical என்ற நிலையில் இருந்து Mental என்ற நிலைக்கு நகர்ந்து உள்ளது. உடல் அளவில் ஒருவரைக் கொடுமைப்படுத்தாமல் மன அளவில் டார்ச்சர் கொடுப்பது.இப்போதெல்லாம் கணவன் மனைவியை கைநீட்டி அடித்தால் (கைநீட்டாமல் எப்படி அடிப்பது?) குறைந்த பட்சம் ஆறுமாதம் உள்ளே போட்டு விடுகிறார்கள்.ஆனால் கோபத்தில் அடித்து விடுவது கூட நல்லது தான்.(அடிக்கிற கைதான் அணைக்கும்) ஆனால் மனைவியை/கணவனை மனவியல் ரீதியாகக் கொடுமைப்படுத்துவது என்பது அடிப்படை விட மிகவும் வேதனை தரக்கூடியது. தாத்தா சண்டை போட்டுக் கொண்டு பாட்டியிடம் இரண்டு நாள் பேசாமல் இருந்தால் பாட்டி அவளே வாலண்டியராக அவரிடம் போய் சொல்வாள் "வேணும்னா என்னை நாலு அறை அறைஞ்சுருங்க, இப்படி பேசாமல் இருக்காதீங்க" என்று.

மெண்டல் டார்ச்சர் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? போய் முதலில் ஏதாவது ஒரு மெகா சீரியலைப் பார்க்கவும்.

#####

என்.சொக்கன் தினம் ஒரு பா வெப்சைட்டில் தினமும் ஒரு தமிழ் செய்யுள் சொல்லி அழகாக விளக்கம் சொல்கிறார். நம் மக்கள் அதையெல்லாம் படிக்கமாட்டீர்கள் என்று தெரியும்.இருந்தாலும் ஒரு நப்பாசைக்கு சொல்கிறேன்.

அதில் என்னைக் கவர்ந்த ஒரு கம்பராமாயணப் பாடல்:

வருந்தேன், அது என் துணை வானவன் வைத்த காதல்;
அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால்,
பெருந்தேன் பிழிசாலும் நின் அன்பு பிணித்தபோதே,
இருந்தேன்! நுகர்ந்தேன்! இதன்மேல் இனி ஈவது என்னோ?

எனக்கு எந்த வருத்தமும் இல்லை- என் உள்ளம் கவர்ந்தவரின் அன்பு அத்தகையது. அதனால் காரியம் முடியும் வரை எதையும் அருந்த (க்கூட)மாட்டேன். தேன் போன்ற உன் அன்பினால் என்னை கட்டிப் போட்டாய்.அதுவே எனக்கு இங்கு தங்கி இளைப்பாறி நுகர்ந்த சுகத்தைத் தந்து விட்டது, இனி எனக்கு நீ எதுவும் கொடுக்க வேண்டியது இல்லை. வழியை விடு என்று ராமகாரியத்திற்காக ஏகிய அனுமன் தன்னைத் தடுத்த மலைப்பெண்ணை நோக்கி சொல்கிறான்.

மனைவியைப் பிரிந்து நீண்ட நாள் வெளியூர் செல்லும் ஆண்கள் தங்கள் முன் எதிர்ப்படும், பழகும் பெண்களைப் பார்த்து இந்த பாடலை மனதுக்குள் சொல்லிக் கொள்வது நல்லது.ஒரு சின்னத் திருத்தத்துடன் : வருந்தேன் அது என் துணை ஆனவள் வைத்த காதல்.. மீதிப் பாட்டில் எந்த மாற்றமும் வேண்டாம். கம்பர் மன்னிப்பாராக!


//நம் மக்கள் அதையெல்லாம் படிக்கமாட்டீர்கள் என்று தெரியும்// இதற்காகக் கோபப்படாதீர்கள். உதாரணம்:

-ஏழாம் அறிவு -திரைப்பட விமர்சனம் ( 34 கமெண்ட்ஸ்)
-ஆண்டாள் திருப்பாவை (மார்கழி ஸ்பெஷல்) (1 கமெண்ட்)

#####

ஒரு கவிதை. கவிதை என்பதை விட ஒரு ரெக்கார்டிங்.


மணி 1.00: டேபிள் 8- கே ஒந்து சின்ச்வான் ஃபிரைட் ரைஸ், கோபி மன்சூரி

மணி 1:45: டேபிள் -5 க்கே நூடுல்ஸ், மோசம்பி ஜூஸ்

மணி 2:00: டேபிள் -2 கே பட்டர் நான் , கோபி சில்லி, ஒந்து பாலக் பனீர்

மணி 2:45:
டேபிள் 8- கே மசாலா பப்பட், பட்டர் குல்ச்சா, ஜீரா ரைஸ்,வாடர் பாட்டில்

மணி 3:15: டேபிள் 1- கே சப்பாத்தி, ஆலு கோபி, ஆரஞ் ஜூஸ், பெப்சி

மணி: 3:30 : டேபிள் -4 க்கே ரொட்டி, சன்னா மசாலா , ஆப்பிள் ஜூஸ், ரவா தோசா பார்சல்

மணி 4.15 :குரு , ஒந்து அன்னா சாம்பார் கொடி..
(சர்வர் சாப்பிட உட்காருகிறார்)

(அன்னா சாம்பார்=சாதம் + சாம்பார்)



######

என்னைக் கவர்ந்த ஓர் எஸ்.எம்.எஸ்:

Breakup Story:

Girl - Hi baby :)
Boy - Hi my Love :)
(Sending Failed)

Girl- Are you there?
Boy - Yes Darling. I'm all here
(Sending Failed)

Girl- R U ignoring me or what?
Boy - Honey I'm not
(Sending Failed)

Girl: It's over. Don't ever talk to me..Good bye :(
Boy: Damn! Go to Hell
(Message Sent)

#######

சுபாஸ் என்ற நண்பர் பிங் செய்து லைடாஸ்கோப் ஆண்டாள் எல்லாம் இருக்கட்டும் முதலில் ௮-௮-௮ தொடர்ந்து எழுதுங்கள். நூறு எபிசோடு முடிந்ததும் புத்தகம் போடுங்கள்.முதல் ஆளாக நான் வாங்குகிறேன் (இதை அவர் சொல்லவில்லை. அப்படியே Flow -வில் வந்து விட்டது) என்றார். மேலும் 'ஒளியின் வேகம் மாறக்கூடியது ' என்பதை அப்போதே நீங்கள் கணித்து ௮-௮-௮ வில் சொல்லியிருக்கிறீர்கள் .இப்போது அதை நிரூபித்திருக்கிறார்கள்.(?!)நீங்கள் பெரிய ஆள் (well . இதையும் அவர் சொல்லவில்லை. FLOW !)என்றெல்லாம் சொன்னார்.

அ௮-௮ எழுதலாம் என்று உட்காரும் போது ஏனோ தூக்கம் தான் வருகிறது. இயற்பியல் கட்டுரைகளை படித்தால் இப்போதெல்லாம் எரிச்சல் தான் வருகிறது.எழுத்தாளர் சுஜாதா டெல்லியில் ஒரு தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டுக்குப் போயிருந்தாராம். திரும்பும் வழியில் ரோட்டில் ஒரு ஏழைச் சிறுமி கவனிப்பாரற்று டிசம்பர் குளிரில் நடுங்கியபடி உட்கார்ந்திருந்தாளாம்.'உலகின் அத்தனை புத்தகங்களையும் எரித்து அவளுக்கு குளிர் காய்ச்சலாம் போல இருந்தது' என்று கற்றதும் பெற்றதும் -இல் எழுதி இருந்தார்.

நேற்று வழக்கம் போல ஆபீசுக்கு வந்த போது வெளியே ஒரு கிழவி பரிதாபமாக நின்று கொண்டு வருவோர் போவோரைப் பார்த்து கையேந்திக் கொண்டிருந்தாள்.செக்யூரிட்டிகள் , டிப்-டாப்பான ஆசாமிகள் நடமாடும் ஓர் எம்.என்.சி யின் வாசலில் இப்படி ஒரு 'காட்சி உறுத்தல் ' (eye -sore ) போல அவள் நின்று கொண்டிருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் 'இல்லி எல்லா நில்ல பாரது; ஆகடே ஹோகு..' என்று வலுக்கட்டாயமாக வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள்.ஒரு சில அடிகளில் தான் மனித வாழ்வில் எத்தனை வித்தியாசம்? ஏழைக் கிழவி ஒருத்தியின் ஒருவேளை பசிக்கு உதவாத சாப்ட்வேர் என்ஜினீயரிங்,
குவாண்டம் பிசிக்ஸ் இவையெல்லாம் இருந்து என்ன பிரயோஜனம் என்று தோன்றுகிறது.

########

சரி. வழக்கம் போல கடைசியில் ஒரு ஓஷோ ஜோக்.

ஒரு பெண் கைரேகை ஜோசியக்காரரிடம் போனாள்.

அவள் கையைப் பார்த்த அந்த ஆள் " மனதைத் திடப்படுத்திக்கங்க.உங்க கணவர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுவார்" என்றான்

அவள் " அப்படியா, சரி. அப்படியே எனக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருக்கான்னு கையைப் பார்த்து சொல்றீங்களா" என்றாள்.

என்னது அடல்ட் ஜோக் வேண்டுமா? கடைசியில் என்னையும் எழுத வைத்து விட்டீர்களே, ஓஷோவின் ஒரு அடல்ட் ஜோக்.

ஒரு அமெரிக்கப் பெண் ஒரு கறுப்பு ஆப்பிரிக்கனைக் காதலித்தாள்.அதை சிறிதும் விரும்பாத அவளது பெற்றோர் எப்படியாவது இதைத் தடுக்க வேண்டும் என்று அந்த ஆளை வீட்டுக்கு அழைத்து,

இதப்பாருப்பா "எங்க மகளுக்கு கல்யாணத்துக்குப் பின்னாடி 'உலகிலேயே சிறந்த மாளிகை' இருக்கணும்" என்றார்கள்

அதற்கு அவன் "Big Sam காதலிக்கிறான்; big Sam கட்டுவான்" என்று சொல்லிச் சென்றான்.

ஆறு மாதம் கழித்து ஒரு அழகான மாளிகையைக் கட்டிக் காண்பித்தான்.மீண்டும் வந்தான்.

இந்த முறை அந்த பெற்றோர்கள் "
இதப்பாருப்பா எங்க மகளுக்கு கல்யாணத்துக்கு உலகிலேயே காஸ்ட்லி டயமன்ட் பரிசாக அளிக்கணும்' என்றனர்.

அதற்கு அவன் "Big Sam காதலிக்கிறான்; big Sam வாங்குவான்"என்று சொல்லிச் சென்றான்.

ஒருமாதம் கழித்து உலகிலேயே விலை உயர்ந்த வைரத்துடன் வந்து நின்றான்.

கடைசியாக இதை எப்படியாவது தடுத்துவிட நினைத்த அவர்கள் "
இதப்பாருப்பா எங்க மகளுக்கு 'அது' பன்னண்டு இன்ச் இருக்கணும், இல்லைன்னா வேலைக்கு ஆகாது" என்றனர்.

அதற்கு அவன் "Big Sam காதலிக்கிறான் ; Big Sam வெட்டுவான் " என்றான்.

முத்ரா

Monday, December 26, 2011

தேநீர்ப்பேச்சு- 4 (மார்கழி ஸ்பெஷல்)

தொடர்கிறது...

வாழ்க்கையில் தாழ்ந்த விஷயங்களுக்கு ஆசைப்படுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அது கிடைத்து விட்டாலும் மன நிம்மதி ஏற்படுவதில்லை.அதே சமயம் உயர்ந்த விஷயங்களுக்கு ஆசைப்படுபவர்கள் இன்னொரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த விஷயம் கிடைக்காவிட்டாலும் அதற்கு முயற்சியாவது செய்தோமே என்ற ஆழ்ந்த ஒரு ஆத்மத் திருப்தி கிடைத்து விடுகிறது . இதை தான் வள்ளுவர் சொல்றார்:

"கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது"

-காட்டுக்கு வேட்டையாடப் போறோம். ஒரு சின்ன முயலை அம்பு எய்தி பிடிக்கறதில் என்ன பெருமை இருக்கிறது? யானையை குறிவைக்கணும் .யானை கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை;யானையை குறி வைக்கணும். நம்முடைய லட்சியம் உயர்ந்ததா இருக்கணும்.இந்தக் காலத்துல யானையோ முயலோ எதைக் குறிவைச்சாலும் புடிச்சு உள்ள போட்டுடுவா. அது வேற விஷயம்.

நாம எல்லாம் முயலின் பின்னாடியே ஓடிண்டு இருக்கோம்.பணம் என்கின்ற முயல், பதவி, பட்டம், பெருமை என்கின்ற முயல்
சமூக அந்தஸ்து, புகழ் என்கின்ற முயல்களின் பின்னே ஓடி நம் வாழ்க்கையை வீணடிக்கிறோம்.ஆனால் அந்த முயல் கிடைத்து விட்டாலும் பெரிதாக ஒண்ணும் நடந்து விடுவதில்லை. பணத்துக்காக கனவு காண்பவனுக்கு குறைந்த பட்சம் நாளை நன்றாக இருப்போம் என்ற நம்பிக்கையாவது இருக்கிறது.ஆனால் பணம் புகழ் இது எல்லாம் கிடைத்து விட்டவனுக்கோ அதில் ஒண்ணுமே இல்லை,நாம மோசம் போயிட்டோம் என்ற விரக்தி தான் மிஞ்சுகிறது.




ஆண்டாள் போன்ற அடியார்களோ முயலின் பின்னே அலைவதை விட்டு விட்டு யானையை பற்றிக் கொண்டவர்கள். யானை என்றால் சாதாரண யானையா?இல்லை. கஜேந்திரன் என்ற யானையை ரட்சித்த யானை.குவாலய பீடம் என்ற யானையை வென்று அடக்கிய யானை. இருகை வேழத்து ராகவன் என்று இரண்டு கையுடைய யானை என்று கம்பரால் போற்றப்படும் யானை.சாமஜ வர கமனா என்று யானை போன்ற கம்பீரமான நடை கொண்டவன் என்று தியாகராஜரால் வர்ணிக்கப்படும் யானை.கம்பர் சொல்வது போல யானை தன் காலைப் பற்றியவர்களை தன் தலைக்கு மேலே தூக்கி வைக்கும்.வீரத்தில் யானையை நிகர்த்த ராமனும் தன் சரணங்களைப் பற்றியவர்களை உயர்வாகக் கொண்டாடுவான். ராமன் மட்டும் தான் யானையை நிகர்த்தவனா?கண்ணனும் யானையை ஒத்த
வீரமும் கம்பீரமும் கொண்டவன் தான். இதை ஆண்டாளே சொல்கிறாள் கேளுங்கள்

[சுவாமிகள் பாடுகிறார்: ராகம் சாவேரி]

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தேகாபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவி(ப்)
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

மதநீரை உடைய களிறு போன்ற கண்ணனைப் பிள்ளையாகப் படைத்த நந்தகோபன் என்கிறாள் ஆண்டாள். கண்ணன் தந்தை நந்தகோபன் ஓடாத தோள்வலியன் என்கிறாள்.போரில் புறமுதுகு காட்டி ஓடாதவன்.அப்படிப்பட்ட வீரனின் மகன் வீரனாகத்தான் இருப்பான் ; கண்ணன் மாவீரன் என்று சொல்லாமல் சொல்கிறாள்; கந்தம் கமழும் குழலி! வாசனை கொண்ட கூந்தல் ..இந்த இடத்திலே ஒன்றைக் கவனிக்க வேண்டும். பாவை நோன்பு நோற்ற போது பெண்கள் 'மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்' என்ற சங்கல்பம் எடுத்துக் கொள்கிறார்கள்.அப்படியானால் உள்ளே இருக்கும் பெண் அந்த விதியை மீறி யாருக்கும் தெரியாமல் இரவு வாசனை மலர் சூட்டிக் கொண்டாளா என்று கேட்டால் அவள் கூந்தல் இயற்கையிலேயே மணக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. பெண்கள் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்ற திருவிளையாடல் காலத்து வழக்கை ஆண்டாள் இங்கே நிரூபிக்கிறாள் போலும் .

ஆண்டாள் மட்டும் அல்ல, ஆயர்பாடியில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் தன்னை கண்ணனுக்கு மனைவியாகவும் நந்தகோபருக்கு மருமகளாகவும் பாவித்துக் கொள்கிறார்கள்.அவளைக் கூப்பிடும் போது ஆண்டாள் 'நந்தகோபர் மருமகளே' என்றே விளிக்கிறாள்.
மீராவைப் போல 'கண்ணன் எனக்கு மட்டும் தான்' 'மேரே தோ கிரிதர கோபாலா' என்று Possessive ஆக நினைக்காமல் ஆண்டாள், அவன் எல்லாருக்கும் நாயகன் என்ற பெருந்தன்மையில் பாடுகிறாள்.கோழி கூவியது என்றால் உள்ளே இருப்பவள் அது சாமக் கோழியாக இருக்கும் ;இன்னும் பொழுது விடியவில்லை என்று நினைத்துக் கொள்வாளோ என்று பார் மாதவிப் பந்தல் குயில்கள் எல்லாம் கூவின;விடிந்து நேரம் ஆகி விட்டது பார் என்கிறார்கள் தோழிகள்.உள்ளே இருப்பவள் சின்னப் பிள்ளை போல ஒரு பந்தை வைத்துக் கொண்டு தூங்குகிறாளாம். இந்தக் காலத்துப் பெண் பிள்ளைகள் teddy bear என்ற கரடி பொம்மையை வைத்துக்கொண்டு தூங்குவதைப் போல.இன்னும் விளையாட்டுப் பெண்ணாகவே இருக்கிறாயே! எழுந்திரு, விளையாட்டை விட்டுவிட்டு நாம் முக்தியடையும் வழியைப் பார்க்கலாம் என்று அர்த்தம்.

ஆகவே ஆண்டாள் போன்ற அடியார்கள் சிறிய சிறிய குறிக்கோள்களைப் பற்றிக் கொள்ளாமல் 'பற்றுக பற்றற்றான் பற்றினை' என்பது போல உயர்ந்த குறிக்கோளான பகவானையே பற்றுகிறார்கள்.ஒரு பெண், பெரிய இடத்துப் பையனை விரும்பி திருமணம் செய்து கொண்டால் அவளது தோழிகள் 'பரவாயில்லை, பிடிச்சது தான் பிடிச்சே, நல்ல புளியன்கொம்பாய் பிடிச்சிருக்கே' என்று கேலி செய்வார்கள்.ஆனால் ஆண்டாளோ இருப்பதிலேயே பெரிய இடத்துப் பையனைப் பிடித்திருக்கிறாள். சந்தனக் கொம்பைப் பிடித்திருக்கிறாள்; இந்தப் பிறவியில் ஒரு நரனைத் திருமணம் செய்து கொண்டு இந்தப் பிறவியின் பயனை நிறைவேற்றுவதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது? நம் இறுதிக் குறிக்கோளான , எல்லாப் பிறவிகளின் பயனான பரமாத்மாவை காலம் தாழ்த்தாமல் இப்போதே பிடித்துக் கொண்டு விடலாம் என்று புத்திசாலித்தனமாக நினைக்கிறாள் ஆண்டாள்.ஒரு கட்டடத்துக்கு படிப்படியாக ஏறிப் போகாமல் லிப்டில் போகிறோமே அது மாதிரி!



ஆண் பிள்ளைகள் திருப்பாவை பாடினால் 'என்ன இது பெண் பிள்ளைமாதிரி பாடிக் கொண்டு' என்று சொல்லாதீர்கள். இந்த திருப்பாவை வெறுமனே ஒரு பெண் ஓர் ஆணை நினைத்துப் பாடுவது அல்ல. ஒரு ஜீவன் பரமாத்மாவை நோக்கிப் பாடுவது. எல்லா ஜீவாத்மாக்களுக்கும்,ஆணுக்கும்,பெண்ணுக்கும் நாயகன் அவன் ஒருவன் தான்.எல்லா ஜீவன்களும் ஆத்மரீதியாகப் பெண்கள் தான். மீராவின் வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று சொல்லப்படுவதுண்டு. ஒரு சாமியார் தன் வாழ்வில் பெண்களையே பார்ப்பதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டு வாழ்ந்து வந்தாராம். அவரது கிராமத்துக்கு ஒருமுறை வருகை தந்த பக்த மீரா அவரது சீடர்கள் தடுத்தும் கூட நிற்காமல் அவர் வீட்டுக்குள் நுழைந்து விட்டாளாம் . தவறுதலாக மீராவைப் பார்த்து விட்ட அவர் 'அய்யோ, என் சத்தியம் தவறி விட்டதே, என் தவம் முறிந்து விட்டதே' என்று புலம்பி அவள்மேல் கோபப்பட்டாராம். அவரைப் பார்த்து மீரா ,"நீங்கள் கிருஷ்ணாவின் பக்தராக இருந்து கொண்டு இன்னும் உங்களை ஆண் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா, நான் பிரபஞ்சத்தில் உள்ள ஒரே ஆண்மகன் கிருஷ்ணன் மட்டும் தான் என்றல்லவா நினைத்தேன்" என்கிறாள். இதைக் கேட்ட அவர் மனம் மாறி மீராவின் காலில் விழுகிறார். பரமாத்மாவுடன் பக்தி கொள்ளும் சாதுக்கள் அவர்கள் ஆண்களாக இருந்தாலும் நாயகி மனோபாவத்துக்கு மாறி விடுகிறார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் இந்த நாயகி பாவத்துக்கு எந்த அளவு தன்னை அர்ப்பணித்தார் என்றால் அபரிமிதமான பக்தியில் தனக்கு மாதவிலக்கு வருவதை அவர் உணர்ந்தாராம்!

எனவே பரமாத்மாவை விழைவது தான் ஒரு ஜீவனுக்கு அழகு; ஒரு ஜீவனுக்கு உண்மையான ஆனந்தம்.அதுதான் பிரம்மானந்தம்.

[ஸ்வாமிகள் பாடுகிறார்]

"அரவிந்தமுன ஜுசி பிரம்மானந்த மனுபவிஞ்சுவா
ரெந்தரோ மஹானுபாவுலு
அந்தரிகி வந்தனமுலு "

ஆனந்தம் என்றதும் எனக்கு ஆனந்த பைரவி நினைவுக்கு வருகிறது.

[ஸ்வாமிகள் பாடுகிறார்: ராகம் ஆனந்த பைரவி]

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!



ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். ஆண்டாள் ஒரு பாசுரத்தில் கூட மணி ஐந்து ஆகி விட்டது, அஞ்சே முக்கால் ஆகி விட்டது ஆறு ஆகி விட்டது என்று சொல்லி தோழிகளை எழுப்புவதில்லை.இயற்கையின் விடியல் அறிகுறிகளை சொல்லி தான் எழுப்புகிறாள். இது, அந்தக் காலத்தில் எல்லாரும் மெஷின்களை நம்பாமல் இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழ்ந்தார்கள் என்று காட்டுகிறது . நாமோ இன்று கடிகாரத்தையும் காலண்டரையும் நம்பி வாழ்கிறோம். இயற்கை நமக்கு சொல்லும் அறிகுறிகளை நாம் கவனிபப்தே இல்லை. இயற்கையின் கடிகாரமும் நம் உடலின் கடிகாரமும் ஒன்றிணைந்தால்தான் நாம் நோயில்லாத வாழ்க்கை வாழமுடியும்.

'உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்' என்கிறாள் . எங்கள் புழக்கடை என்று சொல்லவில்லை. விடிந்து விட்டது. அதன் அறிகுறிகளை நீயே கண்கொண்டு பார். சந்திரனின் ஒளியில் மகிழ்ந்திருக்கும் ஆம்பல் சூரியன் வருகிறான் என்று தெரிந்ததும் கூம்பி விட்டது பார் என்கிறாள். வெண்ணிற பற்களைக் கொண்ட தவ யோகிகள் காலை நேர சங்கு ஊத கோயிலுக்குப் புறப்பட்டு விட்டனர் பார் என்கிறாள்.யாருக்கு பல் வெண்மையாக இருக்கும்? எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கு தான். அதைத் தான் ஆண்டாள் குறிப்பால் சொல்கிறாள். இன்று நாம் என்ன தான் காலையில் COLGATE WHITENING எல்லாம் போட்டு பல் விளக்கினாலும் காபி, டீ , பான்பராக், வெற்றிலை பாக்கு என்று போட்டுக் கொண்டே இருந்தால் பல் எங்கே வெண்மையாக இருக்கும்?

சரி.

மனிதன் எப்போதும் இரட்டை நாக்கு உடையவன். நேற்று ஒன்று சொன்னால் அதற்கு நேர்மாறாக இன்று வேறொன்று சொல்பவன். அந்தப் பெண் முந்தாநாள் சொன்னாளாம் "நாளைக்கு பார் உங்களுக்கு எல்லாம் முன்னால் எழுந்து கொண்டு நான் வந்து உங்கள் வீட்டுக் கதவைத் தட்டுகிறேன் பார்' என்று. ஆனால்,இன்றோ இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குகிறாளாம்.நாமும் இப்படி தான். நாளையில் இருந்து சிகரெட் பிடிப்பதை அடியோடு விட்டுவிடுகிறேன் பார் என்கிறோம். ஆனால் நாளை மீண்டும் அதையே செய்கிறோம். சரி இன்று ஒன்றே ஒன்று புகைப்போம் என்று சமாதானம் வேறு சொல்லிக் கொள்கிறோம். நாளையில் இருந்து கோபப்பட மாட்டேன் என்று சத்தியம் செய்கிறோம்.ஆனால் மறுநாள் அதையே செய்கிறோம்.அதை தான் ஆண்டால் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ என்கிறாள்; மாற்றி மாற்றிப் பேசாதே என்கிறாள்..

பகவான் ஒருத்தன் தான் சொன்ன சொல் தவறாதவன். வாக்கு மாறாதவன், 'சம்பவாமி யுகே யுகே' என்று சொன்னால் அவன் அதில் இருந்து மாற மாட்டான். அதுதான் தியாகராஜர் சொல்கிறார் :-உன் பேச்சுகளையே, உன் வார்த்தைகளையே நான் சித்தாந்தமாக கொண்டிருக்கிறேன் ராமா.. நீ வார்த்தை தவறாதவன் ஆயிற்றே, அதனான் உன் வார்த்தைகளே என் உயிர் என்கிறார்.

[ஸ்வாமிகள் பாடுகிறார் .ராகம் :கமாஸ்]

வாதாத்மஜா துல செந்தனே
வர்ணிஞ்சின நீ பலுகுலெல்லா
சீதாபதே நா மனசுனா சித்தாந்தமனி உன்னானுனா
சீதாபதே ...


சரி. த்யாகராஜர் ராமனை இப்படி புகழ்ந்து விட்டு கிருஷ்ணன் சமயத்துக்கு தகுந்தபடி மாற்றி மாற்றி பேசுவான் என்கிறார்.

[ஸ்வாமிகள் பாடுகிறார் .ராகம் :ஆரபி ]

கோபிஜன மனோரத மொசங்கலேகனே
கேலியு ஜேசே வாடு

சமயானிகி தகு மாடலாடெனே

அது சும்மா விளையாட்டு. ஆனால் கிருஷ்ணனும் வார்த்தை தவறாதவன் தான்.



-தொடரும்




Friday, December 23, 2011

தேநீர்ப்பேச்சு- 3 (மார்கழி ஸ்பெஷல்)

ருக்மிணி மாமி : வாங்க மாமி, என்ன சௌக்யமா? என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்.

பட்டு மாமி: நீங்க தான் சிக்கவே மாட்டீங்கறீங்க..நேத்து சாயந்திரம் கூட வந்திருந்தேன்.. நீங்க எங்கேயோ போயிருக்கறதா உங்க பேரன் சொன்னான்.நாளைக்கு விசாகா ஹரி காலட்சேபம் இருக்கு. அதுக்கு வரேளான்னு கேட்கத்தான் வந்திருந்தேன்.

ருக்மிணி மாமி: அப்படியா? சரி போலாம்.நேத்து அமெரிக்காவுல இருந்து இவரோட அக்கா வந்திருந்தா இல்ல.காமாட்சி ஹால்ல கேசவப்ரேமி சுவாமிகளோட திருப்பாவை சொற்பொழிவு இருந்துது. அதான் கூட்டிப் போயிருந்தேன்.

.மாமி: அவர் நல்லாப் பேசுவாராச்சே..அவர் இஞ்சினியரா இருந்து சன்யாசம் வாங்கிண்டவர் தானே ?...சொற்பொழிவு எப்படி இருந்தது?

ரு.மாமி: வித்தியாசமா சுவாரஸ்யமா இருந்தது. இதோ அவர் இந்த ரெகார்டர்ல கூட போட்டுட்டு வந்திருக்கார். போடறேன் ..கேட்கறேளா?

.மாமி: தாராளமா. நேர்ல தான் கேட்க முடியலை..இங்கேயாவது கேட்போம்..

[ரெக்கார்டர் ஆன் செய்யப்படுகிறது]

ஹரி ஓம்..

இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே


தமிழ் இலக்கியத்துல பெண்களோட பங்கு ஏனோ மிகவும் குறைவாகவே இருக்கு. பெண் அப்படீன்னா காலாகாலத்துல கல்யாணம் கட்டிக் கொடுத்து குழந்தை குட்டி பெற்றுக் கொண்டு, கணவனுக்கு சமைத்துப் போட்டுக் கொண்டு,கைங்கர்யம் பண்ணிக்கொண்டு ஒரு மிஷின் மாதிரி இருக்கணும் அப்படீன்னு அந்தக் காலத்துல ,ஏன் இந்தக் காலத்துலயும், நிறைய பேர் நினைச்சதால 'கழுதை இவளுக்கு என்ன இலக்கியம், கருமாந்திரம்' எல்லாம் வேண்டிக்கிடக்கு அப்படீன்னு பெண்கள் கவிபாடுவதை வன்மையா எதிர்த்தாங்க; ஒரு பெண் கவிதை பாடினால் அவளை ஏதோ புரட்சிக்காரி மாதிரி பார்த்தாங்க; பார்க்கறாங்க.

ஆனால் அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்துலையும் சமுதாயம் பெண்ணுக்கு எழுதிய அத்தனை அடிமைத்தனமான வரையறைகளையும் மீறி 'பெண் என்றால் பெற்றோர் கைகாட்டும் நரனுக்கு கழுத்தை நீட்டி, தன் வாழ்க்கையை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைத்துக்கொள்ளும் உணர்சிகளற்ற பிராணி அல்ல ' என்று பறைசாற்றி புரட்சி செய்தவள் ஆண்டாள். பக்திக்கு மட்டும் ஆண்டாள் இலக்கணம் இல்லை. புரட்சிக்கும் அவள் ஒரு எடுத்துக்காட்டு. அவள் அருளிச் செய்த திருப்பாவையை ஏதோ அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய விதத்துல அலசலாம். சபா எனக்கு கொடுத்திருக்கிற நேரத்துல முப்பது பாடலையும் ஒவ்வொன்னா பாக்கறது அசாத்தியம். எனவே திருப்பாவை-ங்கற முத்து மாலையில் ஆங்காங்கே ஒளிரும் வைரங்களை மட்டும் பார்க்கலாம்.


சரி. நாம அத்வைதத்த எடுத்துட்டாலும், த்வைதமா இருந்தாலும், விசிஷ்டா
த்வைதமா இருந்தாலும் ஒரு ஜீவனுக்கு இறுதி இலக்கு பரமாத்மா தான்.இதுல 'செகண்ட் தாட்' டே கிடையாது. ஆனா என்ன, ஒரு ஜீவாத்மா எப்படி, எந்த சூழ்நிலைல, என்ன வழிமுறை ல பரமாத்மாவை அடையும்-கறதுல ஒவ்வொரு மார்க்கமும் வேறுபடறது.

இங்கே இருக்கற நிறைய பேர் கணிதம் படிச்சிருப்பீங்க என்ற நம்பிக்கைல சொல்றேன்.மத்வாசார்யாரின் த்வைத மார்க்கம் கொஞ்சம் ஸ்ட்ரிட். சங்கரரின் அத்வைத மார்கத்துல பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு சதுரத்தின் பக்கத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு மாதிரி. அதாவது பக்கத்தை மிகச் சரியாக நாலு மடங்கு செய்தால் அதன் சுற்றளவு வந்து விடும். நான்கு என்பது ஒரு RATIONAL நம்பர்..எந்த Ambiguity -யும் கிடையாது.

ஆனால்
த்வைத மார்க்கத்தில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு வட்டத்தின் விட்டத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு போன்றது.விட்டத்தை பை (pi)மடங்கு பண்ணாதான் அதன் சுற்றளவு வரும். ஆனால் நீங்க படிச்சிருப்பீங்க பை என்ற நம்பர் ஒரு Irrational number என்று.அதாவது அதை இரண்டு முழு எண்களின் விகிதமாக எழுத முடியாது. இருபத்து இரண்டு பை ஏழு அப்படீங்கறது ஒரு approximation தான். ஆனால் பை என்ற இந்த விகிதம் முடிவில்லாமல் அனந்தமாகப் போய்க்கொண்டே இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். மூணு புள்ளி ஒண்ணு நாலு அப்படீன்னு எழுதி அதற்குப் பிறகு கோடி கோடி இலக்கங்கள் போட்டாலும் பை என்ற எண் முடிவு பெறாது. எனவே வட்டத்தின் சுற்றளவை இது சரியாக அதன் விட்டத்தைப் போல இத்தனை மடங்கு அப்படீன்னு உறுதியா சொல்லவே முடியாது. விட்டத்தின் எல்லை அதன் சுற்றளவு தான். சுற்றளவு என்பது ஒரு முழுமையான எண். வட்டத்தின் விட்டமும் ஒரு முழுமையான எண். ஆனால் இவை இரண்டின் விகிதம் ஒரு முற்றுப்பெறாத எண்.விட்டம் தான் ஜீவாத்மா சுற்றளவு தான் பரமாத்மா என்று எடுத்துக் கொண்டால் பரமாத்மா ஜீவாத்மாவின் இலக்கு என்றாலும் அது ஜீவனின் இத்தனையாவது படிநிலை என்று உறுதியாக சொல்ல முடியாது. விட்டத்தின் ஏதோ ஒரு முடிவிலி மடங்கில் சரியாக வட்டத்தின் சுற்றளவு வரலாம்.ஆனால் எத்தனை துல்லியமாக கணக்குப் போட்டாலும் பையை கோடி தசம ஸ்தானம் வரை எடுத்துக் கொண்டாலும் விட்டத்தின் மடங்குக்கும் சுற்றளவுக்கும் ஒரு சிறிய மைன்யூட் வேறுபாடு இருந்து கொண்டே தான் இருக்கும்.அதே போல ஜீவனின் இலக்கு பரமாத்மா என்று சொன்னாலும் பரமாத்வை அடைய (பரமாத்மாவாக மாற) ஜீவாத்மா எண்ணிலாத,கணக்கற்ற படிகளை கடக்க வேண்டி இருக்கிறது. ஒரு ஜீவன் சாதனைகளை செய்து படிப்படியாக எவ்வளவு தான் முன்னேறினாலும் அது சுற்றளவை நெருங்கலாமே தவிர சுற்றளவாக மாற முடியாது.த்வைதம் ஸ்ரீமன் நாராயணனை சுற்றளவாக நிர்ணயம் செய்கிறது. உலகின் எண்ணிறைந்த ஜீவன்கள் தான் வட்டத்தின் எண்ணிறைந்த விட்டங்கள். விட்டம் சுற்றளவாக மாற எண்ணிறைந்த முடிவிலியான படிநிலைகளைக் கடக்க வேண்டும். இதை தான் அவர்கள் தாரதம்யம் என்று அழகாகச் சொல்கிறார்கள். அதாவது ஒரு ஜீவாத்மா பரமாத்மாவாக முழுவதும் மாறி விடுவதை , எப்படி கணிதம் விட்டம் சுற்றளவாக மாறி விடுவதை தடை செய்கிறதோ , அப்படி த்வைதத்தின் பஞ்சபேத தத்துவம் தடை செய்கிறது. விட்டம் சுற்றளவா மாறுது அப்படீன்னா பை அப்படீங்கறது ஒரு Rational நம்பர் அப்படீன்னு ஆயிரும்.கணிதத்தின் முக்கிய எண்ணான பையின் அழகே அது கணிக்க முடியாமல் irrational ஆக இருப்பது தான். எனவே ஜீவன் மற்றும் பரமாத்வாவின் உறவும் இப்படி நிச்சயமற்று Irrational ஆக இருக்கிறது என்கிறார் மத்வாச்சாரியார்.

ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு பற்றிய சமன்பாடுகளிலும் இந்த பை அப்படீங்கற நம்பர் வருது. அப்படீன்னா நம்மால் பிரபஞ்சத்தில் எதையும் இது இதன் இத்தனை மடங்கு அப்படீன்னு சொல்ல முடியாது. எதிலும் ஒரு நிச்சயமின்மை இருக்கவே செய்யும். இதை தான் மத்வாச்சாரியார் பஞ்சபேதம் , அதாவது சமமின்மை என்கிறார். ஒரு ஜடப்பொருளும் ஜீவாத்மாவும் பேதப்பட்டது, ஏன் ஒரு ஜீவன் இன்னொன்றில் இருந்து பேதப்பட்டது. ஒரு ஜீவன் பரமாத்மாவிடம் இருந்து பேதப்பட்டது. என்கிறார்.சங்கரர் மாதிரி சி இஸ் ஈக்குவல் டு ஃபோர் (C= 4a)அப்படீன்னு சொல்லிட்டா, பரமாத்வா ஜீவனின் இத்தனையாவது படி அப்படீன்னு சொல்லிட்டா நாம பரமாத்மாவை வரையறை செய்து ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ள அடைச்சுட்ட மாதிரி இருக்கும். ஆனால் வேதாந்தம் பரமாத்மாவை நி-சீமா , எல்லையற்றவன், வரம்பு வரையறை அற்றவன் என்று சொல்கிறது.

எனவே மத்வாச்சாரியார் ரொம்ப சைன்டிபிக்-கா சி இஸ் ஈக்குவல் டு பை டி அப்படீங்கறார். ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா திரிகோணமிதில சைன் மற்றும் காஸ் மதிப்புகளை கண்டுபிடிக்கும் 'டைலர்' சீரீஸை அப்பவே கண்டுபிடித்தவர் மத்வாசாரியார்.அவர் ஒரு பெரிய கணிதவியல் மேதை கூட .அவர் எவ்வளவு அழகா தன் சித்தாந்தத்தை கணிதத்தில் இருந்து, கணிதத்தின் ஒரு அழகான எண்ணில் இருந்து எடுத்திருக்கார் என்பது அற்புதம்.

சரி இங்க விசிஷ்டாத்வைதம் ,அதாவது ஆண்டாள் போன்ற ஆழ்வார்களின் நெறி என்ன அப்படீன்னா பரமாத்மா என்பது வட்டம் போல மாயத்தோற்றம் காட்டும் ஒரு சதுரம் என்பது. இந்த மார்க்கம் த்வைதம் மற்றும் அத்வைதம் இரண்டையும் ஓரளவு ஒத்துக்கொள்கிறது. அரிஸ்டாடிலின் கோல்டன் மீன் (Golden Mean)அப்படீன்னு சொல்வாங்களே அது மாதிரி .ஒரேயடியாக ஒரு ஜீவனிடம் நீ தான் பரமாத்மா அப்படீன்னு சொல்ல முடியாது. அவனுக்கு மிதப்பு வந்து விடும். அதே போல உன்னால் எத்தனை சாதனை செய்தாலும் பரமாத்மாவாக எப்போதும் மாற முடியாது என்று சொன்னால் அவன் மனமுடைந்து விரக்தியாகி விடுவான்.எனவே நீ அஞ்ஞானத்தில் இருக்கும் வரை பரம்பொருள் உனக்கு ஒரு குழப்ப வட்டம். நீ ஞானம் பெற்றால் அது உனக்கு ஒரு தெளிந்த சதுரம் என்று சொல்கிறது இந்த நெறி.அதாவது வெளியே குப்பன், சுப்பன், கந்தன், கண்ணன் என்று பலபேர்களில் அழைக்கப்படுபவர்கள் பஸ்ஸில் ஏறியதும் கண்டக்டருக்கு 'டிக்கெட்' ஆக மாறி விடுவது போல.

சரி இதெல்லாம் வேதாந்தம்.கடவுளை அடைய இது ஒரு மார்க்கம். வே ஆப் தி ஹெட்! ஆனால் இன்னொரு மார்க்கம் இருக்கிறது .உணர்வுப்பூர்வமாக அணுகுவது. வே ஆப் தி ஹார்ட்! ஆண்டாள்
த்வைதமா, அத்வைதமா , இரண்டுக்கும் நடுவிலா என்ற பேச்சே வேண்டாம். என் இலக்கு என்ன என்பது எனக்கு முக்கியம் அல்ல. நான் பரமாத்வாவின் பக்தை. நான் பரமாத்வானின் பக்தன். அவனை எண்ணும் போது எனக்கு புளகாங்கிதம் அடைந்து கண்ணீர் வருகிறது. ஜென்ம ஜென்மத்துக்கும் இதுவே போதும்.அவன் நாமத்தின் சுவையே போதும். அவன் பக்தியின் ஆனந்தமே போதும் என்கிறது பக்தி மார்க்கம்.

இதனால் தான் ஒரு ஆழ்வார் 'அச்சுவை தரினும் வேண்டேன் அரங்கமா நகருளானே' என்று பாடுகிறார். அதாவது ஆழ்வார்கள் தாங்கள் முக்தி அடைந்து பரமாத்மாவாக அல்லது நித்தியசூரிகளாக மாறிவிட விரும்பவில்லை என்ற
விசிஷ்டாத்வைத 'சப்போர்ட்டை' ஆங்காங்கே வெளிப்படுத்துகிறார்கள்.ஆண்டாளும் எற்றைக்கும் ஏழு ழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம் என்கிறாள்.ஏழேழ் பிறவி என்றால் ஏழு பிறவி அதற்குப் பின் முக்தி என்று அர்த்தம் அல்ல. இனிமேல் எழுகின்ற பிறவிகள் எல்லாம் நாம் ஜீவாத்மாக்களாகவே இருந்து உன்னைப் பாடுவோம் என்ற மனப்பான்மை.இன்று ஒரு நாள் எங்களுக்கு மகிழ்வளித்து எமக்கு மோக்ஷமளித்தாலும் , அது தேவையில்லை கோவிந்தா என்று இற்றைப்பறை கொள்வான் அன்றுகாண் கோவிந்தா என்கிறாள் ஆண்டாள்.

கடைசிக்கு முந்திய இருபத்தி ஒன்பதாவது பாசுரத்தில் இதைதான் சொல்கிறாள் ஆண்டாள். நாம் காரணம் இல்லாமல் ,காலையில் ரொம்ப சீக்கிரம் எழுந்திரிக்க மாட்டோம்.ஏதோ ஒரு கல்யாணம் காட்சி என்றாலோ, இன்டர்வியூ இருந்தாலோ, பிரயாணம் செய்ய வேண்டி இருந்தாலோ தான் காலையில் சீக்கிரம் எழுந்து கொள்வோம். அதுவும் இது மார்கழி மாசம் வேறு. குளிர் காலம்பற அஞ்சு மணிக்கு உடலைத் துளைக்கும்.பல்லெல்லாம் டைப் ரைட்டிங்குல ஹையர் கிரேடு பாஸ் பண்ண லெவலுக்கு நடுங்கும்.இன்னும் கொஞ்சம் இழுத்துப் போத்திக்கிட்டு படுத்துக்குவோம்;என்ன குடியா முழுகிப்போயிடப் போறது ? என்று நினைப்போம்.வி
ஞ்ஞானிகள் சில பேர் பூமி வெப்பத்துல அழிஞ்சு போகும்கறா.எனக்கு என்னவோ நாம் எல்லாரும் குளிர்ல தான் கைலாசம் போவோம்னு தோணறது.

பகவான் 'மாதங்களில் நான் மார்கழி' அப்படீன்னு ஏன் சொன்னார்னா 'இந்த ஆள் மே மாசம் புழுக்கம் தாங்காம காலையில அஞ்சரை மணிக்கு எழுந்துக்கறதுல எந்த விஷயமும் இல்லை. மார்கழி மாசம் நடுங்கும் குளிர்ல எழுந்துண்டு குளிச்சிட்டு கோயிலுக்கு வர்ற உண்மையான பக்தன் யாரு'அப்படீன்னு கண்டுபிடிக்க தான் அப்படி பொடிவச்சு சொல்லியிருக்கான். ஆனாலும் சிலர் பேர் கோயிலில் கிடைக்கும் வெண்பொங்கல் புளியோதரைக்காகவே காலம்பற சீக்கிரம் எழுந்திருக்கரா. சரி அவா எல்லாம் பலகாரத்துலையே பகவானைப் பார்க்க பழகிண்டுட்டா போலும்.

எனவே ஆண்டாள் சொல்கிறாள், "கிருஷ்ணா, நாங்க இத்தனை காலையில் குளிரில் எழுந்து வந்து உன்னை சேவிக்கிறோம் என்றால் சும்மா இல்லை; எங்கள் கோரிக்கையைக் கேள் என்கிறாள். கோரிக்கை என்ன? ஆண்டாள் 'எனக்கு மாதம் நாற்பதாயிரம் சம்பாதிக்கிற , கார் , 2BHK வீடு வைத்திருக்கிற, பார்க்க ஹேன்ட்சம் -ஆன, கொளுத்த பேங்க் பேலன்ஸ் இருக்கிற,H1B இருக்கிற மாப்பிள்ளை வேண்டும்' என்றா கேட்கிறாள்?இல்லையே

"எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் "

-கிருஷ்ணா ! "நாங்கள் இனிவரும் பிறவிகளில் உனக்கே அடிமை செய்து கொண்டிருக்கும் வரம் கொடு என்று தான் கேட்கிறாள். மேலும் உன்னைத் தவிர எம் மனத்தில் எழும் ஆசைகளையெல்லாம் மாற்றி உன்னையே மனம் விரும்பும்படி செய்" என்கிறாள். என்ன ஒரு பக்குவப்பட்ட பெண் பாருங்கள் ஆண்டாள்!

[ஸ்வாமிகள் பாடுகிறார். ராகம்: மத்யமாவதி]

"சிற்றம் சிறுகாலே வந்துன்னை சேவித்துன்
....
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்"

என்னடா இது முதல்பாட்டே மத்யமாவதியில் பாடுகிறார் என்று நினைக்கவேண்டாம். மத்யமாவதி என்றால் மத்யத்தில் அதாவது கச்சேரிக்கு இடையில் பாடும் ராகம் என்றுதான் அர்த்தம். அதாவது கச்சேரி கொஞ்சம் போர் அடித்தால் இதுமாதிரி கொஞ்சம் ஸ்பீடான ராகங்களைப் பாடி தூங்குபவர்களை எழுப்பலாம் என்றுதான்.கச்சேரிக்கு கடைசியில் எழுப்பி என்ன பிரயோஜனம்? எப்படியிருந்தாலும் கச்சேரி முடிந்ததும் எல்லாரும் கீரைவடை சாப்பிடும் ஆசையில் அவர்களே எழுந்து கொள்வார்கள்.

ஆண்டாள் பக்குவப்பட்ட பெண் மட்டும் அல்ல. புத்திசாலியும் கூட தான். அந்தக் காலத்துப் பெண்களை 'மழை எப்படிப் பெய்கிறது' ?என்று கேட்டால் பூமியில் உள்ள பதிவிரதைகளின் பதிபக்திக்கு மெச்சி வருணன் மழை தருகிறான் என்று தான் சொல்வார்கள்.ஆண்டாள் எத்தனை அழகாக , அறிவியல் ரீதியாக, மழை பெய்வதை வர்ணிக்கிறாள் என்று பாருங்கள்: -



[ஸ்வாமிகள் பாடுகிறார். ராகம்: வராளி]

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து(ப்)
பாழிய் அம் தோளுடை பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலார் எம்பாவாய்

அடியவர்களுக்கு எல்லாமே கண்ணன்தான். உண்ணும் சோறு தின்னும் வெற்றிலை கூட கண்ணன்தான். பாரதியார் கூட 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா உந்தன் கரியநிறம் தோன்றுதடா நந்தலாலா' என்று பாடுகிறார்.ஆண்டாளுக்கு மழை பெய்வதைப் பார்த்தவுடன் கண்ணன் ஞாபகம் வந்து விட்டது.

'கர்ணனுக்குப் பின் கொடை இல்லை கார்த்திகைக்குப் பின் மழை இல்லை' என்பதெல்லாம் பின்னால் வந்த வசனம்;அப்போதெல்லாம் மார்கழியில் கூட மழைபெய்யும் போலிருக்கிறது.அவள் சொல்கிறாள்: மேகமே, போ, போய் கடல் நீரை அள்ளு.அதிர்ந்து மேலே ஏறு!கண்ணனின் உருவம் போல கறுத்துப்போ! பின் அவன் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம் போல் மின்னலடி.அவன் கரத்து பாஞ்சஜன்யம் போல முழங்கி இடியோசை செய். அவன் கையில் இருக்கும் கோதண்ட வில்லில் இருந்து புறப்படும் அம்புகள் போல சீறி மழைபொழி! என்கிறாள்.

பொதுவாக போர்களை வர்ணிக்கையில் அம்புகள் மழையாகப் பொழிந்தன என்பார்கள். இங்கே ஆண்டாள் உல்டாவாக கண்ணனின் வில்லம்புகள் போல மழை பொழியட்டும் என்கிறாள்.அதாவது விஷ்ணுவின் அம்புகள் எப்போதும் நன்மைக்காகத்தான் வில்லில் இருந்து புறப்படும்.மேலும் எப்போது தேவையோ அப்போதுதான் திருமால் தன் வில்லில் நாண் பூட்டுவார்.அடுத்து ஹரியின் அம்புகள் காரியம் ஆனதும் திரும்ப அவர் கைக்கே வந்துசேரும். இதே போல மேகமே உன் அம்பாகிய மழையையும் நீ உலகை அழிக்கப்பெய்யாமல் வாழ்விக்கப் பெய், வாழ உலகினில் பெய்திடாய்!எப்போது தேவையோ அப்போது பெய் என்கிறாள். அம்புகள் திரும்ப சென்று விடுவது போல மழையும் பூமியில் பெய்து ஆவியாகி பின் மேகத்துக்கே சென்று விடும் என்ற அறிவியல் உண்மையையும் சொல்லாமல் சொல்கிறாள்.





திருப்பாவை முப்பது பாட்டுக்கும் அரியக்குடி இசையமைத்து எம்.எல்.வி அவர்கள் பாடியிருப்பதை நீங்கள் கேட்டிருக்கக்கூடும்.பாட்டுக்குப் பொருத்தமான ராகங்கள். உதாரணமாக 'ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி' வீரரசம் நிரம்பிய ஆரபியில் பாடப்படுகிறது. ஓங்கி ஒருகாலில் உலகை அளந்தது உண்மையில் வீர சாகசம் அல்லவா?

மாரிமலை மு
ழைஞ்சில் பாடலில் ஆண்டாள் "மழைக்குப் பயந்து குகையில் அடைபட்டுக் கிடக்கும் சிங்கம் மழைக்காலம் முடிந்ததும் எப்படி கண்களில் தீப்பறக்க ,பிடரி மயிரை சிலுப்பிக்கொண்டு , கர்ஜனை செய்தபடி கம்பீரமாக வெளிவருமோ அப்படி எங்களுக்கு காட்சிதா" என்று சொல்கிறாள். இந்தப் பாடலுக்கு அரியக்குடி பிலஹரி ராகம் தந்திருக்கிறார். சிங்கம் என்றால் இங்கே நரசிம்மரைக் கற்பனை செய்யலாம். நரசிம்மருக்கு மிகவும் உகந்த ராகம் பிலஹரி.

எத்தனை பொருத்தம் பாருங்கள். மேலும் குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் என்ற பாடலில்

[ஸ்வாமிகள் பாடுகிறார். ராகம் :சஹானா]

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி(க்)
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

இது கண்ணனும் அவன் நாயகியும் ஏகாந்தத்தில் இருக்கும் போது பாடுவது.இதை நாம்

[ஸ்வாமிகள் பாடுகிறார். ராகம்: அடானா ]

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல்

என்று அடாணாவில் அடிக்கவருவது போல பாட முடியுமா? இருவரும் அலறி அடித்துக் கொண்டு என்னமோ ஏதோ என்று எழுந்து விடமாட்டார்களா?அந்த ஏகாந்த சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு சாந்தமான ஸ்ருங்கார ரசம் ததும்பும் ராகத்தில் தான் பாட வேண்டும். ஆண்டாள் இந்த பாடலை குத்து விளக்கெரிய என்று ஆரம்பிக்கிறாள். காதலுக்கு நிறைய வெளிச்சமும் ஆகாது. இருட்டும் ஆகாது. இந்தக் காலத்தில் கேண்டில் லைட் டின்னர் என்று ஏதோ சொல்கிறார்களே. அதுமாதிரி ஒரு மிஞ்சிய வெளிச்சம் சூழ்நிலையை ரொமாண்டிக் ஆக மாற்றிவிடும்.அதுமாதிரி குத்துவிளக்கின் சிற்றொளியில் இருவரும் ஏகாந்தமாக பஞ்சணை மேல் காதல் மேலிட படுத்திருந்தார்கள் என்று சஹானாவில் பாடும் போதே உங்களுக்கும் காதல் உணர்வு மேலிடும்.சன்யாசிக் கழுதைக்கு ஸ்ருங்கார ரசம் பற்றி என்ன பேச்சு என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.பட்டினத்தார் சொல்வது போல நானும் ஒரு காலத்தில் சம்சாரக் கழுதையாக இருந்ததால் தான் சொல்கிறேன்.

இத்தனை பொருத்தமாக பாடல்களுக்கு ராகம் போட்டவர் ஏன் ஆழி மழைக்கண்ணாவுக்கு மட்டும் அமிர்தவர்ஷினியில் போடாமல் வராளியில் போட்டார் என்று தெரியவில்லை. பொதுவாக வராளியை குரு சிஷ்யர்களுக்கு சொல்லித்தர மாட்டார். அதே மாதிரி ஆண்டாள் மழைபெய்யும் ரகசியத்தை தன் மக்குத்தோழிகளுக்கு சொல்லித்தர விரும்பவில்லையோ என்னவோ?

-தொடரும்...


சமுத்ரா