இந்த வலையில் தேடவும்

Thursday, January 7, 2016

பாண்டிச்சேரி - பயணக் கட்டுரை

நீண்ட நாட்களுக்குப் பிறகு ப்ளாக்-இல் சந்திக்கிறோம். :)

If traveling was free, you will never see me again என்பது எனக்குப் பொருந்தும். :) புதிய இடங்களை, புதிய மனிதர்களை, புதிய கலாச்சாரங்களை எக்ஸ்ப்ளோர் செய்வது மிகவும் பிடிக்கும். பொதுவாக, தனியாகவே கிளம்பி விடுவேன். தனியாகச் செல்வதில் சில சங்கடங்கள் இருக்கின்றன. பேச்சுத் துணைக்கு ஆள் இல்லை. செலவுகளை ஒருவரே ஏற்க வேண்டும். உடம்புக்கு ஏதாவது என்றால் ரிஸ்க். ஆனாலும் அதில் கொஞ்சம் சவுகரியங்கள் இருக்கவே செய்கின்றன. நானே ராஜா நானே மந்திரி. யாருக்காகவும் காத்திருக்கத் தேவை இல்லை. நினைத்த இடங்களுக்குச் செல்லலாம். பாண்டிச்சேரிக்கு ஒரு சோலோ ட்ரிப் கிளம்பி விட்டேன். பெங்களூரு கிருஷ்ண ராஜ புறத்தில் இருந்து புதுச்சேரி எக்ஸ்பிரஸ் .11005 பெங்களூருவில் பயங்கரக் குளிர். இரண்டு ஜாக்கெட்டுகள் போட்டுக் கொண்டிருந்தாலும் குளிர் ஊடுருவிக் கொண்டு உள்ளே பாய்கிறது. அந்தக் குளிரிலும் பிளாட் பாரத்தில் ஒருவர் லேசான சட்டை மட்டுமே அணிந்து படுத்திருந்தார். "சுர மந்திர தரு மூல நிவாஸ :" என்று ஆதி சங்கரர் சொல்வது போல. வானமே கூரையாய் ...நமக்குத் தான் ஜாக்கெட், ஸ்வட்டர், ஷூ என்று ஆயிரம் சுமைகள். எனிவே, டிரெயின் சரியாக 10:30 க்கு குறித்த நேரத்தில் பந்து சேரி விட்டது. மும்பையில் இருந்து வந்தாலும். குர்லா குர்லா என்று பெங்களூருவில் இருந்து ஒரு எக்ஸ்பிரஸ் உண்டு. மறுநாள் கோயமுத்தூரில் ஏதேனும் அவசர வேலை என்றால் அதை தயவு செய்து புக்கி விடாதீர்கள். ஸ்கெட்யூல் டைம் 22:15 தான். அது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒருநாள் SBC க்கு அதிகாலை 3:30 மணிக்கு சாவகாசமாக வந்து சேர்ந்தது. ஆற அமற கோவைக்கு காலை 11:30 க்குப் போய்ச் சேர்ந்தது.

ம்ம்ம்..

கூட்டம் அதிகம் இல்லை. வீக் டே என்பதால். லோயர் பர்த் . எதிர் சைடு லோயரில் ஆர். ஏ  .ஸி என்று 3 பெண்கள் ஒன்றாக அமர்ந்திருந்து அரட்டை அடித்துக் கொண்டே வந்தார்கள். அடுத்ததில் நண்பர்கள் குழாம் ஒன்று சிரத்தையாக சீட் ஆடிக் கொண்டிருந்தார்கள். லைட்டை அணைக்கவில்லை. ட்ரையின் பயணத்தின் போது எனக்கு இந்த அரட்டை ஆசாமிகள் அலர்ஜி. கிளம்பிய ஐந்து நிமிடத்தில் பர்த்தை மேலே மாட்டி லைட்டை அணைத்து தூங்கி விட வேண்டும் எனக்கு. நல்ல வேளையாக அரட்டை ஆசாமிகள் காட்பாடியில் இறங்கி விட்டார்கள்.

சரியாக ஏழு மணிக்கு புதுச்சேரியை அடைந்து நின்றது வண்டி.

ஆட்டோ வாலாக்கள் லிட்டெரல் ஆக பகல் கொள்ளை அடிக்கிறார்கள். பாண்டியில் முழுவதும் ஆட்டோ ராஜ்ஜியம் தான் போலும். சிடி பஸ்கள் மருந்துக்கும் கண்ணில் தென்படவில்லை. பிளாட்பாரத்துக்கே வந்து ஆட்டோ வாலாக்கள் பையைப் பிடுங்குகிறார்கள். ஸ்டேஷனுக்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் unofficial ஆக நின்று கொண்டு வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறார்கள். ஈ .ஸி .ஆர் போவதற்கு வாய் கூசாமல் 200-250 கேட்கிறார்கள். ஸ்பெஷலாக அங்கே நிற்பதற்கு அவர்கள் பணம் கட்ட வேண்டும் என்று சொல்வது நம்ப முடியவில்லை. மீட்டர் என்ற ஜந்துவை எதற்கு வம்பு என்று நன்றாக பிளாஸ்டிக் கவர் போட்டு மூடி வைத்து விட்டார்கள். மீட்டர் என்றால் ஏதோ கெட்ட வார்த்தையை செவி மடுத்தது போல முகம் சுளிக்கிறார்கள் .சரி. நமக்கு முதல் ட்ரிப் என்பதால் வேறு வழி இன்றி ஏறினேன். தெரியாமல் லாஸ்பெட்டில் ஹோட்டல் புக் செய்து விட்டேன். 

முதலில் மங்கலகரமான மீன் வாசனையுடன் உங்களை வரவேற்கிறது புதுச்சேரி.
சாலைகள் சுத்தமாக இருக்கின்றன. காலைக் குளிர் கொஞ்சம் காற்றில் கலந்திருந்தது. எம்.ஜி.ஆர் ரீகென்சி என்ற விதோனப் பெயர் கொண்ட ஹோட்டல். ஹோட்டலில் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு மதியம் 12 மணி வாக்கில் ஆரவில் கடற்கரைக்கு சென்றேன்.
வாவ். கடற்கரை மனித நடமாட்டம் இல்லாமல் அழகாக  இருந்தது. சென்னை கடற்கரையைப் பார்த்துப் பழகிப் போன கண்களுக்கு பாண்டிச்சேரியின் சுத்தமான கடற்கரைகள் ஆச்சரியத்தைத் தரும். வெயில் அதிகம் என்பதால் திரும்பி வந்து விட்டேன். வழியில் வெளிநாட்டுப் பெண்கள் ஜோராக பைக்குகளில் பறக்கிறார்கள். ஒரு நல்ல வெஜ் ஹோட்டலுக்குச் செல்லுமாறு ஆட்டோவைப் பணித்தேன். அவர் சர்குரு என்ற ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். உள்ளே நுழையத் தயக்கமாக இருந்தது. ஏனெனில் உள்ளே முழுவதும் வெளிநாட்டுக் காரர்கள். நம் நாடுதான் என்றாலும் அவர்கள் உளவியல் ரீதியாக நமக்குள் ஒரு inferiority யை ஏற்படுத்தி விடுகிறார்கள். சர்வர்களும் வெளி நாட்டவர்களை கொஞ்சம் எக்ஸ்டிரா கவனத்துடன் கவனித்தார்கள். இருப்பினும் அவர்கள் நம் சவுத் இன்டியன் மீலை வெறும் கைகளில் பிசைந்து சாப்பிடுவது பார்க்க அழகாக இருக்கிறது. யுவதி ஒருவர் பெரிய அப்பளத்தைக் கையில் வைத்துக் கொண்டு இந்த வஸ்துவை கடிப்பதா, உடைப்பதா, என்று தெரியாமல் நோக்கிக் கொண்டிருந்தார். பாண்டியில் எல்லா இடங்களும் ஒருவித exotic (தமிழில் என்னவோ) இருக்கின்றன. இந்த உணவகமும் அப்படியே. பில் 180 
ரூபாய் வந்தது. உணவு நன்றாகவே இருக்கிறது.ஐரனி என்ன என்றால் நம் நாட்டுக் காரர்கள் ஒன் நூடுல்ஸ் ப்ளீஸ் என்று ஆர்டர் செய்து கொண்டிருக்க அவர்கள் நம்மூர் பூண்டு ரசத்தை இன்னும் கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். உணவகத்தின் வெளியே லோக்கல் பெண்கள் சுருக்குப் பைகளை பரப்பி வைத்து விற்கிறார்கள். வெளிநாட்டுப் பெண்கள் அதை ஆர்வமுடன் வாங்குகிறார்கள். 



ஆட்டோ எம். ஜி. ரோடு வழியே செல்கிறது. எம்.ஜி ரோடு பழமையும் புதுமையும் கலந்து அழகாக இருக்கிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத சிறிய பொதுக்கூட்டம் ஒன்றில் ஒருவர் கர்ம சிரத்தையுடன் ஜெயலலிதாவை திட்டிக் கொண்டிருக்கிறார். பழங்காலக் கட்டிடங்கள் காணக் கிடைக்கின்றன. சைக்கிள் ரிக்ஷாக்கள் இருக்கின்றன. அதில் யாரும் பயணிப்பதாகத் தெரியவில்லை. வழியெங்கிலும் ஏழை மாரியம்மன், ரட்சக மாரியம்மன் என்று வினோதப் பெயர்கள் கொண்ட கோயில்கள் காணக் கிடைக்கின்றன. அம்மாவைப் புகழும் போஸ்டர்கள் ஒன்றிரண்டு அங்கேயும் விதிவிலக்கு இல்லை போலும். ஆட்டோக்காரர் இப்போது காந்தி சிலை கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்.

இன்னோர் அழகிய கடற்கரை. இங்கே மணல் இல்லை. நுரை ததும்பும் பெரிய அலைகள் மெகா சைஸ் கருங்கற்களை மோதி மோதி பாலிஷ் செய்கின்றன. கடலில் இறங்க இந்த அபாயகரமான கற்களைக் கடந்து செல்ல வேண்டும். தைரிய இளைஞர்கள் சிலர் பாறைகளின் மீது ஏறி செல்பி எடுத்துக் கொண்டிருந்தார்கள். காந்தி சிலைக்கு எதிரே பாண்டிச்சேரி அரசின் சார்பில் சர்வதேச யோகா பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அங்கே ஈயாடியது. ஏழெட்டு தலைகள் அங்கே வெயிலுக்கு ஒதுங்கி விருந்தன. மைக்கில் ஒரு பெண்மணி கடமை உணர்ச்சியுடன் கிட்டத்தட்ட தமிழ் போல் இருந்த ஆங்கிலத்தில் கத்திக் கொண்டிருந்தார். concentrate  anagatha chakra; concentrate  moolaadhar chakra என்றெல்லாம். எனக்கு உண்மையில் சக்ரா கோல்ட் டீ தான் சாப்பிட வேண்டும் போலிருந்தது. குண்டலினி எழும்புகிறதா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். மட்ட மட்ட மத்தியான வேளையில். வெல் எனக்கு ஏப்பம் தான் எழும்பியது.



நிற்க. இப்படி பல்க் ஆக யோகாவை கற்பிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது குரு சீடன் இருவருக்கு இடையேயான one -to -one relationship . மருத்துவர் ஒருவர் ஆயிரம் பேரைக் கூட்டி வைத்துக் கொண்டு மாஸ் வைத்தியம் பார்த்தால் எப்படி இருக்கும்? அது போலத்தான் இது. ஒவ்வொருவரின் உடல் மன சித்தங்கள் வேறு பட்டவை. எனிவே மாஸ் யோகாவில் ஒரு அரை மணிநேரம் பொழுது போனது. கடற்கரை ஓரம் அமைந்துள்ள சில கபே க்கள் நம்மை அரை நூற்றாண்டு பின்னோக்கி அழைத்துச் செல்கின்றன. ஹிலாரியஸ்! 



மீண்டும் ஹோட்டல் அறைக்குத் திரும்பி லோக்கல் சானல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
தூக்கம் வரவில்லை. மாலை 5:15 மணிக்கு மீண்டும் ஊர் சுற்றக் கிளம்பி விட்டேன். கொண்டுவந்த பணத்தில் பெரும்பாலான பகுதி ஆட்டோவுக்கே கரைந்து கொண்டிருந்தது. ஆசிரமம் மற்றும் கணேஷா டெம்பிளுக்கு மீண்டும் ஒரு 150/-


அரவிந்தரின் ஆசிரமம் நகருக்கு நடுவே அமைதியான இடத்தில் சுத்தமான சுற்றுப் புறத்தில் வீற்றிருக்கிறது. சாலைகள் அதி சுத்தம். ஆசிரமத்தின் 10% பகுதி மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப் படுகிறது. அதுவும் மாலை ஆறு மணிவரை மட்டுமே. நான் போகும் போது  5:40 ஆகி விட்டிருந்தது. ஆசிரமத்தின் உள்ளே ஒரு பெரியவர் நின்று கொண்டு பேஷாதீர்கள் என்று உதட்டின் மேல் விரல் வைத்து செல்லமாக அதட்டிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஈஷா யோக மைய தியான லிங்க மண்டபம் போல் இருக்கிறது. அரவிந்தர் மற்றும் அன்னையின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. அதைச் சுற்றிலும் மக்கள் மண்டியிட்டு அமர்ந்து வணங்குகிறார்கள். சுற்றிலும் அமர்ந்து தியானம் செய்கிறார்கள். பறவைகளின் ஒலி அந்த சூழ்நிலைக்கு அழகு சேர்க்கிறது. வாசனை ஊதுபத்தி எரிகிறது. சமாதி மேல் இலைதழைகள் விழாமல் இருக்க வலைகளைக் கட்டி உள்ளார்கள். கூன் விழுந்த பாட்டிகள் தரையைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். 75% வெளிநாட்டவர்கள் தான். பெரும்பாலான இடங்கள் No Access !
 ஆசிரமத்தில் ஒருவித பாசிடிவ் அதிர்வுகள் நம்மைத் தொற்றிக் கொள்வது உண்மை. மாலையில் கொஞ்சம் மூட் அவுட் ஆகி இருந்தேன். what am I doing with my life என்று. ஆசிரம விசிட்-டிற்குப் பிறகு அப்படி ஒரு உற்சாகம். 



அடுத்து ஆசிரமத்தை ஒட்டி உள்ள, புகழ் பெற்ற மணக்குள விநாயகர் திருக்கோயில். கோயிலின் முன்னே லக்ஷ்மி என்ற பெயர் தாங்கிய கம்பீர யானை ஒன்று நிற்கிறது. அதை மக்கள் போட்டோ எடுத்தும், ஆசீர்வாதம் வாங்கியும் இம்சித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு இந்தக் கோயில்களில் யானைகளை இம்சிப்பது பிடிக்கவே பிடிக்காது. உள்ளே விநாயகரை வணங்கி விட்டு வெளியே யானையை வேடிக்கைப் பொருளாக வைத்திருப்பது மிகப்பெரிய ஐவரி சாரி ஐரனி . வெளிநாட்டுப் பெண்கள் flash களுடன் போட்டோ எடுக்கிறார்கள். பாவம் யானை! அவர்களுக்கு யானை அபூர்வம் போல. ஒருவித மினி டைனோசர் !

கோயில் ஒரு மிகப்பெரிய திருமண மண்டபம் போல இருக்கிறது. சுவர்களில் விதம் விதமான விநாயகர் உருவங்கள். முருகனுடன் பில்லியனில் அமர்ந்து செல்லும் விநாயகர், தாய்லாந்து விநாயகர், இந்தோனேஷியா விநாயகர், அன்ன வாகனம் கொண்ட பிரம்ம விநாயகர், மயூர விநாயகர், லக்ஷ்மி விநாயகர், ஹேரம்ப விநாயகர், டுண்டி விநாயகர், வாதாபி விநாயகர், சிங்கமுகம் கொண்ட விநாயகர்(இது கொஞ்சம் ஓவர்) , இரண்டுமுக, மூன்றுமுக , ஆறுமுக விநாயகர் இப்படியெல்லாம். கடவுள்களிலேயே இப்படிப்பட்ட ஒரு பாலிமார்பிசம் விநாயகருக்கு மட்டுமே வாய்த்துள்ளது. மேற்கூரையில் திருமால் விநாயகரிடம் பாஞ்சஜன்யம் வாங்குதல் கஜமுகாசுர வாதம் ஞானக்கனி பெறுதல் போன்ற ஓவியங்கள். விநாயகர் கோலாகலமான கடவுள். கருவறையில் மணக்குள விநாயகர் சப்பணமிட்டு அருள் பாலிக்கிறார். சுற்றிலும் முருகன், மற்றும் உற்சவர் சந்நிதிகள். சிறிய கோயில் தான். சிறிய கோயில் என்றாலும் அங்கே சைடில் ஒரு சிறப்பு தரிசனக் க்யூ நகர்ந்து கொண்டிருக்கிறது. கான்ட் ஹெல்ப்.

ஆசிரமத்தை சுற்றியுள்ள வீதிகளில் பெரும்பாலும் வெளிநாட்டு முகங்கள். புத்தகம் மற்றும் துணிக் கடைகள். இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். எல்லாமே வெளிநாட்டவர் வருகையால் கொள்ளை விலை. எத்தனை சொன்னாலும் அவர்கள் புன் முறுவலுடன் பேரம் பேசாமல் வாங்கி விடுகிறார்கள். அருகில் அடையாறு ஆனந்த பவன். அங்கே பிரபலமான கொழுக்கட்டை சாப்பிட்டேன். மீண்டும் கடற்கரை விசிட். இரவில் கடற்கரை அழகாக ஜொலிக்கிறது. வெண்ணிற நுரைகளுடன் இத்தனை பெரிய அலைகளை பாண்டியில் தான் பார்க்கிறேன். கடலைப் பார்க்கப் பார்க்க பரவசம். அது எல்லைகள் இல்லாமல் விரிந்து இருப்பதாலோ என்னவோ. நாம் எல்லைகளுடன் உள்ளவைகளையே பார்த்துப் பழகி விட்டோம். கடல் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. என்னதான் இருந்தாலும் அது நமது பிறந்த வீடு அல்லவா? 
கடற்கரை உணவகம் ஒன்றில் பிரைடு ரைஸ் சாப்பிட்டு பாண்டியில் ஒருநாள் இனிதே முடிந்தது. ஆட்டோக் காரர் சைக்கிள் கேப்பில் "சார், மசாஜ் சார், கேர்ள்ஸ் , சூப்பரா இருக்கும், போலாமா " என்றார். பெங்களூரில் இல்லாததா அய்யா என்று கேட்டவுடன் அமைதியாகி விட்டார். என் பர்ஸ் மட்டும் தலைவனை எண்ணி வாடும் தலைவியின் இடை போல சிறுத்துக் கொண்டே வந்தது. 

ஹோட்டலின் மெத்து மெத்தென்ற படுக்கையில் நன்றாகத் தூங்கிப் போனேன். மசாஜ் பார்லர் செல்வது போல கனவு வந்தது.

கடைசியாக ஆரோவில். மறுநாள். ஈ .ஸி .ஆர். இல் இருந்து ஆரோவில் செல்ல ரூ.550/- ஆட்டோ கட்டணம்.! :)



உலகம் முழுவதையும் ஒரே சமுதாயமாக அமைத்துப் பார்க்கும் ஒரு பரிசோதனை முயற்சி ஆரோவில். ஓஷோ கூட இதை கம்யூன் என்ற பெயரில் முயற்சித்து இருக்கிறார். அரசியல், குடும்பம், பணம், மூடப் பழக்கங்கள் இவைகள் இல்லாத ஒரு அட்வான்ஸ்ட் கான்செப்ட் இவை. இங்கே யாவரும் சமம். பிரிவினை பேதங்கள் இல்லை. வாசுதேவ குடும்பகம். ஆனால் இவையெல்லாம் நடைமுறைக்கு வர இன்னும் 500 வருடங்கள் ஆகலாம். பறந்து விரிந்த நிலப்பரப்பு ஆரோவில். நடப்பவர்கள் நடக்கலாம். சில பேர் சைக்கிள்களில் செல்கிறார்கள். சிலர் ஆசிரம வண்டிகளில். ஏரியா முழுவதும் சுத்தம் அமைதி, ஏகாந்தம், சௌந்தர்யம், பசுமை... இங்கேயும் பெரும்பாலும் வெளிநாட்டு முகங்கள். வழி நெடுகிலும் கிளை பரப்பிய ஆல மரங்கள். தோட்டங்கள். இதன் மெயின் மேட்டர் க்ளோப் வடிவில் அமைக்கப்பட்ட ஒரு ஜொலிக்கும் தியான மண்டபம். போகும் வழியெங்கும் சாதகனுக்கு இருக்க வேண்டிய 12 அவசிய குணங்களைக் தாங்கிய போர்டுகள். Sincerity , humility , courage இப்படியெல்லாம். பார்வையாளர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை. ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருந்து பார்க்க மட்டுமே அனுமதி. வரும் வழியில் கடைகள், உணவகங்கள், காபி ஷாப்கள்...as usual கொள்ளை விலை. 






 கோளத்தைப் பார்த்து மூன்று பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.


"உள்ளே என்னடி இருக்கு?"

"பெரிய புதையல் இருக்காம்"

"உள்ளே சாமி இருக்காம்"

மூன்றாம் பெண்:

"உள்ளே ஒண்ணுமே இல்லை!"

-ஒரு ஜென் கதைக்கான தகுதி இந்த சம்பவத்துக்கு இருக்கிறது.




இத்துடன் என் பாண்டிச்சேரி பயணம் இனிதே நிறைவேறியது. மீண்டும் பெங்களூருவுக்கு 
தாதர் எக்ஸ்பிரஸ். ரயில் முழுவதும் சிறுவர் சிறுமியர்களால் நிரம்பி இருந்தது. கையில் யோகா மேட் . கேட்டால் யோகா காம்பெடிஷன் என்றார்கள். யோகாவிலும் போட்டியை நுழைத்து விட்டார்கள் நம் ஆட்கள்.

மொத்தத்தில் தன்னை நாடி வருபவர்களை ஏமாற்றாத ஓர் அழகிய அமைதியான கடற்கரை நகரம் பாண்டிச்சேரி.


~சமுத்ரா 

















8 comments:

மனஸிகன் said...

அருமை.. சமு. குளோப் இன் உள்ளே மலரனைய நீட்டும் மலர் போல் சூரிய ஒளி புகுவதாக போய் வந்த நண்பர் சொன்னார்.தியான பீடமாம் .

ஆகஸ்ட் 15 அன்று அஸெஸ்ஸ் இல்லாத இடங்களில் போய் வர அனுமதி இருக்கிறது .காக்கடார்த்தி, முதல் பூஜை, வைகுண்ட ஏகாதேசி திறப்புக்கு காத்திருந்து போவது போல் போகணும். விநாயகரை பார்ததேளே !!கொஞ்சம் விவிலிய மாதா வையும் பார்த்துண்டு வந்துருக்கலாமே... நெக்ஸ்ட் டைம் டோன்ட் மிஸ்... சமு.

மாதேவி said...

இனிய பயணம்..

மாதேவி said...

இனிய பயணம்..

nimiththigan said...

புதுச்சேரிக்கு வருகை தந்தமைக்கு நன்றி. புதுச்சேரியில் தாங்கள் நிறைய இடங்களைப் பார்க்கத் தவறிவிட்டீர்கள். உங்கள் ஊர் 'கப்பன் பார்க்' போல் இல்லை என்றாலும் 'ஆளுனர் மாளிகை' முன்பு உள்ள பூங்கா, தாவரவியல் பூங்கா, சுன்னாம்பு ஆறு படகு சவாரி, மிகப்பெரிய ஊசுட்டேரி, குயில் தோப்பு எனும் சித்தானந்தா கோவில் இதுபோல பல நல்ல இடங்களும் இருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் நீங்கள் ஆட்டோ கட்டணம் செலுத்த வேண்டும் என்றால், ஒரு புதிய ஆட்டோவே வாங்கிடலாம். எனக்குத் தெரிந்து, ஆட்டோ கட்டணம் மிக அதிகம் உள்ள ஊர் புதுச்சேரிதான். அவர்கள் பிழைப்பு நடத்துவது உங்களைப் போன்ற வெளி வருகையாளர்களை நம்பித்தான். ஏனெனில், புதுச்சேரியின் எந்த எல்லைப் பகுதிக்கும் நாங்கள் சென்றுவர பெரிதும் பயன்படுத்துவது, இருசக்கர வாகனங்களைத்தான். நகரப் பேருந்துகள் பெரும்பாலும் நரகப் பேருந்துகள்தான். மேற்கொண்டு பேசினால் - அரசியல் பேசியதுபோல் ஆகிவிடும். ஒரு சில நிகழ்வுகள் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால், புதுச்சேரியின் சார்பாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் எங்கள் மக்களில் மிக நல்லவர்களும் உள்ளனர். அடுத்த முறை நீங்கள் வரும்போது அந்த அனுபவம் கிடைக்க வாழ்த்துகிறேன்.

தனியனின் தேடல் பகிர்வுகள் said...

welcome back !

_/\_

Unknown said...

மெத்தென்ற படுக்கையில் படுத்ததும் தூங்கிப்போனேன்; கனவில் ஃபாரங்களை பூர்த்தி செய்தேன். சொர்கத்தீவு சுஜாதா ஞாபகம் வந்தது. Super!

G.M Balasubramaniam said...


எனக்கு உங்கள் இந்த புதுச்சேரி பயணம் நீங்கள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை என்றே தோன்றுகிறதுஒரு இடத்துக்குப் போகுமுன் என்ன எதிர்பார்ப்பு எங்கெல்லாம் போக விருப்பம் என்னென்ன இடங்கள் பார்க்கும்படியானது போன்று முதலிலேயே திட்டமிட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்பது என் எண்ணம் வலைப்பக்கத்துக்கு திரும்பி வந்ததற்கு பாராட்டுக்கள் இதையே முகநூலில் என்றால் ஒரு லைக் மட்டும் போட்டுப் போயிருப்பேன் முகநூலில் லைக் என்றால் வந்து போன அடையாளமாமே

Sugumarje said...

Welcome Back... :)
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த புதுச்சேரியை இப்போதுள்ள புதுச்சேரி ஏமாற்றுவதாக, புதுச்சேரிவாசிகளே சொல்கிறார்கள். எனிவே, பயணம் நமக்கு மாற்றம் எற்படுத்தியிருந்தால் நல்லதுதான்...