இந்த வலையில் தேடவும்

Sunday, January 17, 2016

ஜோதிடம்


ஜோதிடம் கொஞ்சம் நெருடலான விஷயம். ஜோ. அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் இடைப்பட்டது என்கிறார் ஓஷோ. இந்தப்பக்கம் அறிவியல் அந்தப்பக்கம் ஆன்மிகம். முற்றிலும் உண்மை என்று ஏற்றுக் கொள்ளவும் முடியாத முற்றிலும் பொய் என்று ஒதுக்கி விட முடியாத ஒன்று ஜோதிடம். முதலில் ஜோதிடமும் வானவியலும் ஒன்றாகவே இருந்திருக்கின்றன. வானியல் என்றால் ஒன்பது கிரகங்கள், சில நட்சத்திரங்கள் அவ்வளவே. இப்போது தான் காஸ்மாலஜியில் காலக்ஸிகள் , நெபுலாக்கள் , சூப்பர் நோவாக்கள் என்று போய் விட்டோம். பின்னர் சில சாமார்த்திய  ஆசாமிகள் ராஜாவை தாஜா செய்து எதிர்காலம் கணித்தல், போருக்கு செல்ல நல்ல நாள் குறித்துக் கொடுத்தல் போன்றவற்றை ஆரம்பித்து வைத்து இருக்கிறார்கள். அது இன்று வரை 'பெண் ஜாதகத்தில் 9 ம் அதிபதி அஸ்தமனமாக இருப்பதால் கணவனிடம் சுகம் பெறுவதில்லை'  என்ற ரேஞ்சுக்கு படுக்கை அறை வரை டாப் கியரில் போய்க் கொண்டிருக்கிறது.

ஜோதிடம் ஆன்மிகம், அறிவியல் என்ற தன் இரண்டு துருவங்களில் இருந்தும் விமர்சனத்துக்கு ஆளாகி வந்துள்ளது. அறிவியல், கிரகங்கள் உயிரற்ற வெறும் பாறைகள். சூரியனுடைய பந்தத்தால் பிணைக்கப்பட்டு சுற்றி வருபவை உனக்கு திருமணம் எப்போது ஆகும் என்று அவை எப்படி நிர்ணயிக்கும் என்று கேட்கிறது. அடுத்த துருவத்தில் பக்தர்கள் , எனக்கு இறைவன் ஒருவன் போதும், நாள் நட்சத்திரம் எல்லாம் வேண்டாம். சந்திரனே அபிராமிக்கு குண்டலம் தானே!

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த        

கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு    
 தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்          
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

எல்லாமே கோள்கள் தான் என்றால் கடவுளுக்கு என்ன வேலை?

சரி...

நம்மைச் சுற்றிக் கவிழ்ந்திருக்கும் வானத்தில் அரைக் கோளத்தில் இந்த ஒன்பது கோள்கள் சுற்றுகின்றன. அந்தக் காலத்தில் இதை ஒரு வான கடிகாரமாகப் பயன்படுத்தினார்கள். அவ்வளவே. கடிகாரம், காலண்டர் எல்லாம் மிகவும் பின்னால் வந்த சமாச்சாரங்கள். அந்தக் காலங்களில் அறுவடைக்கு காலம்  தெரிய வேண்டி இருந்தது. விதைப்பதற்கு காலம் அறிய வேண்டி இருந்தது. திசை அறிய வேண்டி இருந்தது. ஒருவரின் வயது தெரிய வேண்டி இருந்தது. இஸ்லாமியர்கள் மெக்காவின் திசை நோக்கித் தொழ வேண்டி இருந்தது. இப்படி.. இதற்கெல்லாம் வானத்தைத் தான் பார்த்தார்கள். perfect clock !! உதாரணமாக திருவாதிரை நட்சத்திரம் எழும் போது மழை பொழியும். விதை விதைக்க ஏற்ற நேரம். ஆடிப்பட்டம் தேடி விதை. பன்னெடும்காலமாக Polaris எனப்படும் துருவ நட்சத்திரத்தை வைத்தே வட திசையை அறிந்து வந்துள்ளார்கள் பயணிகள். துருவ நட்சத்திரம் வானத்தில் கண்டபடி அலைந்து திரியாமல் வடக்குத் தொடுவானில் அப்படியே நிற்கும். எனவே காம்பாஸ் வரும்வரை அது ஒரு சிறந்த திசைகாட்டி.


சந்திரன் நம் பூமியை சுற்ற கிட்டத்தட்ட 27 நாட்கள் ஆகின்றன.இந்த 27 நாட்களும் சந்திரன் தன் பின்னணியில் இருக்கும் 27 நட்சத்திரக் கூட்டங்களைக் கடந்து செல்கிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை கற்பனையாக கோடு இணைத்து வரைந்து குதிரைத்தலை (அஸ்வினி) , கை (ஹஸ்தம்) என்றெல்லாம் பெயர் இட்டார்கள். சில தனி விண்மீன்கள். (மகம், சித்தரை...) பல, பெரும்பாலும் விண்மீன் கூட்டங்கள். குழந்தை பிறக்கும் நாளில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் பின்னணியில் இருக்கிறதோ அதுவே அந்தக் குழந்தையின் பர்த் ஸ்டார். சில நட்சத்திரங்கள் நல்ல நட்சத்திரங்கள் என்று சொல்வது நாம் முதலிலேயே கூறிய பருவ நிலைகளை வைத்துத் தான். சூரியன் தன் பின்னணியில் இந்த 27 நட்சத்திரங்களையும் கடந்து செல்ல ஓர் ஆண்டு ஆகிறது. உதாரணமாக இன்று சூரியன் மக நட்சத்திரத்தில் உள்ளது என்றால் சூரியன் இன்று எழும் போது கூடவே மகம் எழுந்தது என்று அர்த்தம். தோராயமாக இரண்டு வாரங்கள் சூரியன் மகத்தில் இருக்கும். சில நட்சத்திரங்கள் தோன்றும் போது நல்ல மழை பொழிந்து சுபிட்சம் ஏற்பட்டதால் அவை சுப நட்சத்திரங்கள் எனப்பட்டன. சில நட்சத்திரங்கள் தோன்றும் போது பஞ்சம் வந்தது. இவை ஐந்தாறு முறை ரிபீட் ஆனதும் அந்த நட்சத்திரம் கெட்டது ஆகி விட்டது. உண்மையில் எல்லா நட்சத்திரங்களும் எரியும் ஹைட்ரஜன் பந்துகள் அவ்வளவே. நல்லதாவது கெட்டதாவது !


பூமி சூரியனை சுற்றி வருவதால் ஒவ்வொரு மாதமும் சூரியனின் பின்னணியில் உள்ள விண்மீன்கள் மாறுகின்றன. இந்த சுற்றுவட்டப் பாதையை 12 பகுதிகளாகப் பிரித்து அதில் கற்பனை உருவங்களை வரைந்து அதை ராசி என்றார்கள். சில நட்சத்திரக் கூட்டங்கள் கற்பனையாக ஆட்டை உருவாக்கின. ( மேஷம்) சில ஒரு  குடத்தை. (கும்பம்) இப்படி.


இப்படி மாதம் ஒரு ராசி வீதம் சூரியன் ஒரு வருடத்தில் 12 ராசிகளையும் கடக்கிறது. (அல்லது கடப்பது போல தோன்றுகிறது)  ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு சூரியன் செல்வது சூரியப் பெயர்ச்சி அல்லது சங்கராந்தி எனப்படுகிறது. நாம் பொங்கல் என்று அழைப்பது பொதுவாக சூரியன் மகர ராசியில் நுழைவது. எனவே பொங்கல் புத்தாண்டு கிடையாது. ராசி சக்கரத்தை முடித்து சூரியன் மீண்டும் மேஷத்தில் பிரவேசிக்கும் சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டு. இதே போல மற்ற கிரகங்களும் இந்த ராசிக் கட்டங்களின் பின்னணியில் பயணம் மேற்கொள்கின்றன. ஒவ்வொரு ராசியையும் சந்திரன் சீக்கிரமாக 2 1/4 நாட்களில் கடந்து விடுகிறது. வியாழன் ஒரு ராசியைக் கடக்க 1 வருடம் ஆகிறது. சனி கடந்து செல்ல 2 1/2 ஆண்டுகள். சனி ரொம்ப ஸ்லோ. இதனால் தான் சனியின் காலை கொஞ்சம் ஊனமாக்கி வைத்தார்கள். சனியை வாரத்தின் கடைசி கிழமையாகவும் வைத்தார்கள். வருடம் ஒருமுறை நமக்குத் தவறாமல் ஜோதிட சிகாமணிகள் கணித்துத் தரும் குரு  பெயர்ச்சி பலனும் 2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சிப் பலனும் கிடைத்து விடுகிறது. 2 நாட்களுக்கு ஒருமுறை 'சந்திரப் பெயர்ச்சிப் பலன்' என்று புத்தகம் போட்டால் அடிக்க வந்து விடுவார்கள். வாரத்தின் ஏழு நாட்களைத் தவிர இந்த ராகு மற்றும் கேது என்ற சாயா கிரகங்கள். சூரியன் பூமியை சுற்றும் நீள் வட்டமும் சந்திரன் சுற்றும் நீள்வட்டமும் எதிர் எதிர் புறங்களில் ஒன்றை ஒன்று வெட்டும் புள்ளிகள். உண்மையில் சந்திரன் சுற்றும் வழி இங்கிருந்து 384000 கி .மீ தூரத்திலும் சூரிய சுற்று வழி இங்கிருந்து 15 கோடி கி .மீ தூரத்திலும் உள்ளதால் அறிவியல் படி தேர் ஈஸ் நோ ராகு-கேது ஸ்நேக்ஸ்.

ஒரு குழந்தை பிறக்கும் போது வானத்தில் கோள்கள் எந்த
நிலையில் உள்ளன என்பது ஜோதிடத்தில் மிகவும் முக்கியம். 9  கோள்களும் எந்தெந்த  ராசியின் பின்னணியில் இருக்கின்றன என்று பார்த்துக் குறித்து வைப்பார்கள். சந்திரன் எந்த ராசியில் உள்ளதோ அதுவே அந்தக் குழந்தையின் ராசி. நம் ஜாதகக் கட்டம் என்பது 12 கட்டங்களைக் கொண்டது. இவை உண்மையில் வானத்தை கிழக்கில் இருந்து மேற்காக 12 பிரிவுகளாகப் பிரித்த கற்பனைப் பிரிவுகள். வானத்தில் மீனோ, ஆடோ, கன்னிப்பெண்ணோ எதுவும் இல்லை. நாம் பிறந்த கணத்தில் சில கோள்கள் மட்டுமே வானத்தில் பார்வைக்குக் கிடைக்கும். சில மேற்கு வானில் மறைந்து கொண்டிருக்கும். சில வானத்தில் தென்படாது.  நம் ராசிக் கட்டத்தில் சில கட்டங்கள் காலியாக இருக்கும். நாம் பிறந்த போது வானில் அந்த ராசிகள் தென்படவில்லை(அந்த ராசியின் பின்னணியில் எந்த கிரகமும் இல்லை) என்பது பொருள். பிறந்த நேரத்தில் கிழக்கில் எழும் ராசி தான் அந்தக் குழந்தையின் லக்னம் அல்லது முதல் வீடு. அதற்கு அடுத்தது இரண்டாம் வீடு. சிம்ம லக்னம் என்றால் குழந்தை பிறந்த சமயத்தில் கிழக்கு வானில் சிம்ம ராசி இருந்ததாக அர்த்தம். லக்னத்தில் இருந்தே clockwise ஆக வீடுகளை எண்ணுகிறார்கள்.கீழே உள்ளது ராசிக்கட்டம். இதில் மேஷம் முதல் மீனம் வரை ராசிகள் கடிகாரமுள் திசையில் காட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு அதிபதி. மேஷத்துக்கு செவ்வாய் . குழந்தை பிறந்த போது செவ்வாய்  மேஷத்தில் இருந்தால் அந்த மேஷத்துக்கு உரிய முதல் கட்டத்தில் "செ" என்று குறிப்பார்கள். இது ஆட்சி வீடு எனப்படும். கிரகங்கள் அவற்றின் ஆட்சி வீட்டில் இருப்பது நல்ல பலன்களைக் கொடுக்குமாம்.
ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியில் உச்சம் பெறுகிறது. உதாரணமாக சூரியன் மேஷத்திலும் செவ்வாய் மகரத்திலும் . may be , இந்த ராசியில் இருந்தால் அந்தக் கிரகம் ஒளி மிகுந்து இருக்கும் என்பதாக இருக்கலாம். சூரியன் மேஷத்தில் இருக்கும் சித்திரையில் தானே பலமாக தகிக்கிறது? சில கிரகங்கள் சில ராசிகளில் நீசம் அடைகின்றன. உதாரணமாக சூரியன் துலாம் ராசியில் நீசம் அடைகிறது. may be , இந்த ராசியில் இருந்தால் அந்தக் கிரகம் ஒளி குறைவாக  இருக்கும் என்பதாக இருக்கலாம். பிறந்த போது கிரகங்கள் அவற்றுக்கு உரிய உச்ச ராசிகளில் இருந்து விட்டால் அதிர்ஷ்டமாம். வானவியல் ரீதியாக குழந்தை பிறந்த போது ஒன்பது கிரகங்களும் பிரகாசமாக இருந்திருக்க வேண்டும். இப்படி யாருக்கும் நடக்காது. ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன் என்று அடிக்கடி கேட்பீர்கள். அவன் தொட்டதெல்லாம் தங்கம் தானாம். உண்மையில் 2, 3 கிரகங்கள் உச்சத்தில் இருந்து
விட்டாலே பயங்கர அதிர்ஷ்டம் தானாம். என் ஜாதகத்தில் ஒரு கிரகம் கூட உச்சம் இல்லை.ஹிஹி ..


இது அம்மாவின் ஜாதகம். மகத்தில் பிறந்ததால் ஜகம் ஆகிறார். சுக்கிரன் மீனத்தில் உச்சம். அவருக்கு சுக்கிரன் உச்சத்தில் உள்ளதைக் கவனிக்க.
 
. கிரகம் வக்கிரம் ஆவது என்று ஒரு கான்செப்ட் உள்ளது. உண்மையில் கிரகங்கள் பூமியை சுற்றாமல் சூரியனை சுற்றுவதால் அவைகளின் வேக மாறுபாடு காரணமாக கிரகங்கள் u turn அடிப்பது போலத் தோன்றுவது. ஒரு கிரகம் பின் நோக்கிச் செல்வது வக்கிரம் எனப்படும்.“அவன் வக்கிரம் பிடிச்ச ஆளு, அவனிடம் எதுவும் வைத்துக்கொள்ளாதே” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீகள் அல்லவா? 


அடுத்து இந்த செவ்வாய் தோஷம். ஜாதகரின் லக்னக் கட்டத்தில் இருந்து எண்ணும் போது அல்லது சந்திரனில் இருந்து எண்ணும் போது  2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால், செவ்வாய் தோஷம் ஏற்ப்படும் என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.இப்படி இருந்தால் வாழ்க்கைத் துணை மரணம், மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு இவைகள் அமையுமாம். :)  கீழே செவ்வாய் தோஷம் உள்ள ஒரு ஜாதகம் காட்டப்பட்டுள்ளது. சந்திரனில்  இருந்து 7 ஆம் வீட்டில் செவ்வாய் உள்ளது.

சரி. கடைசியாக இவை எல்லாம் எந்த அளவு உண்மை என்று விவாதிக்கலாம். முதலில் அறிவியல் ரீதியாக கோள்கள் நம்மை ஈர்ப்பு மற்றும் காஸ்மிக் கதிர்களால் மட்டுமே பாதிக்க முடியும். ஜோதிடம் பூமியை நிலையானது என்று கருத்தில் கொண்டு உருவான ஒன்று. ஆனால் பூமி அண்ட வெளியில் சுற்றும் ஒரு சின்னப்பையன் அவ்வளவே. மேலும் சூரியன் தவிர மற்ற கிரகங்களின் ஒளி சூரிய ஒளியே. இந்த லட்சணத்தில் குரு லாப ஸ்தானத்தைப் பார்க்கிறார் என்றால் என்ன அர்த்தம்? ஆனால் அந்த பாதிப்புகள் பூமியில் உள்ள எல்லாருக்கும் பொதுவாகவே இருக்கும். மேலும் ஏன் ஒரு ஜாதகருக்கு ராஜ வாழ்க்கை? இன்னொருவருக்கு நாய்ப்பாடு? இதற்கு போன ஜென்மத்தைக் காரணம் காட்டுகிறார்கள். சரி, போன ஜென்மத்தின் கணக்குப்படி நான் இந்த ஜென்மத்தை வாழ்ந்து முடிக்கிறேன். அப்படியென்றால் இந்த ஜென்மம் எப்படி அடுத்த ஜென்மத்தை பாதிக்கும்? போன ஜென்மத்தில் இந்த குழந்தை இந்தப் பாவம் செய்தது, எனவே இது பிறக்கும் போது நாம் 7ஆம் இடத்தில் போய் நின்று கொள்வோம் என்று செவ்வாய் நினைக்குமா? மேலும் ஜோதிடத்திலேயே ஏகப்பட்ட குளறுபடிகள், குழப்பங்கள், விதிகள், விதி விலக்குகள், பரிகாரங்கள்.. செவ்வாய் தோஷத்துக்கே 1008 விதி விலக்குகள் உள்ளன. எது உண்மை?எல்லாமே கிரகங்கள் என்றால் மனித முயற்சிக்கு என்ன மதிப்பு?

ஜோதிடம் statistics படி வேலை செய்கிறது. 10 பேரில் 6 பேருக்கு கணிப்பு சரியாக அமைந்து விட்டால் ஆகா ! ஜோதிட சிரோன்மணி சொன்னது பலித்து விட்டது!  தப்பாக அமைந்தால் கண்டு கொள்ள மாட்டார்கள். 
எனிவே, எதுவும் கெட்டது நடந்து விடவில்லை. மே பி , கடவுளின் கருணை! ஒரு நிகழ்ச்சி. 1186 ஆம் ஆண்டில் ஏழு கோள்கள் ஒரே ராசியில் கூடும் எனவும் அப்போது பெரும் சூறாவளி வரும் எனவும் இங்கிலாந்தில் ஜோதிடர்கள் பயமுறுத்தினார்கள். ஐரோப்பாவில் பல இடங்களில் தரைக்கடியில் பதுங்கு அறைகள் அமைக்கப்பட்டன. மக்கள் உண்ணாநோன்பு இருக்கப் பணிக்கப் படுகிறார்கள். ஆனால் அஞ்சியது போல எதுவும் நடக்கவில்லை, அன்றைய நாளில். இதைக் கிண்டலடித்து யோர்க் க்ரோனிகள் என்னும் பத்திரிகையில் ஒரு பாதிரியார் இவ்வாறு எழுதுகிறார்: "மேடையில் இருந்து பேராயர் விட்ட குசுவைத் தவிர வேறெந்த காற்றும் அடிக்கவில்லை".. :)

10 க்கு 8 குசுக்கள் வந்தாலும் கோ -இன்சிடன்ஸ் ஆக வரும் 2 சூறாவளிகளால் ஜோதிடம் இன்னும் பிழைத்துக் கொண்டுள்ளது. ஜோதிடர்களின் பணப்பையையும் நிரப்பி வருகிறது. அடியேன் எப்போதும் நாள் என் செயும் கட்சி மட்டுமே.

சமுத்ரா ..8 comments:

karthi eechuusorange said...

சூப்பர் ஜீ

தெளிவா இருக்கு..

குட்டிப் பூனை(Facebook)

karthi eechuusorange said...

சூப்பர் ஜீ

தெளிவா இருக்கு..

குட்டிப் பூனை(Facebook)

karthi eechuusorange said...

எஸ் ஐ வி ஏ ராமன்(ஃபேஸ்புக்) ஜோதிடம் அறிந்தவர். அவரை டேக் செய்கிறேன் ஃபேஸ்புக்கில்.

karthi eechuusorange said...

எஸ் ஐ வி ஏ ராமன்(ஃபேஸ்புக்) ஜோதிடம் அறிந்தவர். அவரை டேக் செய்கிறேன் ஃபேஸ்புக்கில்.

Nanthakumar Dhamodaran said...

அருமை ஜி
இன்று அனைத்து தொலைக்காட்சி, பத்திரிகை ஊடகங்களில் முக்கிய நிகழ்ச்சியாக ஜோதிடம் இடம்பெறுகிறது.
ராசி பலன் சொல்லும் போதோ அல்லது செய்தித்தாளில் பார்க்கும்போதோ ஒருகணம் நம்மை அறியாமல் மனம் அதை பற்றி கேட்கவோ அல்லது படிக்கவோ ஆர்வம் தோன்றவே செய்கிறது, நிச்சயம் அது நடக்க போவது இல்லை என்று தெரிந்தும் கூட,
என்னதான் சொன்னாலும் மனசு ஓரத்துல ஜாதகம் பற்றிய நம்பிக்கை இருக்கதானே செய்கிறது.

ஒரு சின்ன சந்தேகம்
1186 ல் பத்திரிக்கைகள் வந்துவிட்டதா?

இராசகுமார் said...

Dear Samudhra,

Happy to see back in blogger

Actually I like to see in blogger than FB. To me FB looks cluttered

Reading your Anu Andam Ariviyal for the third time :) . Any idea to get that as a book

ரெண்டு said...

ரொம்ப அருமைங்க. தெளிவான விளக்கம்.

Anonymous said...

ஜோதிடம் குறித்த என் அனுபவத்தைப் பகிர்கிறேன். சில வருடங்களுக்கு முன்னர் என் வாழ்வில் சில பிரச்சனைகள் வந்த போது வேறு வழி தெரியாமல் ஜோதிடத்தை நாடினேன். நம்பிக்கை இல்லாததால் ஒருவரோடு திருப்தி அடையாமல் ஏறத்தாழ 10 ஜோதிடர்களை சந்தித்தேன். அதில் பெரும்பான்மையோர் ஒரு குறிப்பிட்ட வயதை அல்லது வருடத்தை சொல்லி அதன் பின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் வரும் என்றார்கள். பலர் ஒரே மாதிரி சொன்னதால் நம்பித்தான் பார்ப்போமே என்று நம்பினேன். சொன்னது போல் வாழ்க்கை மாறியது. மாற்றம் வந்த பின் ஜோதிடம் குறித்த தர்க்க ரீதியான விளக்கங்களை நாடி சில நூல்கள், இணையத்தில் கிடைத்த சில sources படித்தேன். அதன் மூலம் அறிந்து கொண்டவை

1. ஜோதிடம் சிக்கலான கலை. எளிமையான விளக்கங்கள்,கிரகப்பெயர்ச்சி பொதுப் பலன்கள் இவையெல்லாம் வீண்.
தசா புக்தியை வைத்துத் தான் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள் பற்றி கணிக்கிறார்கள். என் ராசிக்கு குரு/சனி/etc பெயர்ச்சி நன்றாக இருந்தாலும் தசா புத்தி சரியில்லை என்றால் கஷ்டம் தான்.
கிரக நிலையைக் குறிக்கும் சக்கரம் தவிர நவாம்சம்,சதுர்த்தாம்சம்,சப்தாம்சம்,தசாம்சம் என்று பல சக்கரங்களை வைத்துக் கொண்டு சில நிகழ்வுகளை துல்லியமாக கணிக்கலாம் என்று சொல்கிறார்கள். இவை தவிர இன்னும் ஏராளம் நுணுக்கங்கள் உண்டு.

2.மறுபிறவி, கர்மவினை போன்றவற்றை நம்பாதோர் ஜோதிடத்தை நம்புவதில் அர்த்தமில்லை
ஒரு நிகழ்வு இன்னோர் நிகழ்வைப் பாதிக்கிறது. முற்பிறவிகளில் செய்த வினைகளின் தொடர்ச்சியாக இப்பிறவியில் சில நிகழ்வுகள் நிகழலாம். அவை பற்றிய ஒரு குறிப்பை ஜோதிடம் தர முடியும். ஒரு ஆன்மாவின் கர்மவினைகளுக்கும் அது இன்னோர் பிறவியில் கருவாக உருவாகும்,குழந்தையாக பிறக்கும் நேரங்களுக்கும் தொடர்பு இருக்க வேண்டும். அல்லது ஜோதிட கணிப்புகள் சாத்தியமில்லை. அந்தத் தொடர்பு என்ன? அது எப்படி நிகழ்கிறது? என்று தெரியாதது தான் சிக்கல்.
ஜோதிடத்தைப் பொறுத்தவரை கர்மவினைப்படி செவ்வாய் தோஷம் இருக்கும் ஒரு ஆன்மா செவ்வாய் லக்கினத்துக்கு 2,7,8 இல் இருக்கக்கூடிய நேரத்தில் சரியாக பிறக்கிறது. அது எப்படி என்பது புரியாத புதிர். நாம் அறியாத சிக்கான தொடர்புகள் இருக்க வேண்டும்.
ஒரு பேருந்து தினமும் ஒரிடத்திலிருந்து காலை 6 மணிக்கு கிளம்பி இன்னோரிடத்தை மதியம் 12 மணிக்கு அடைகிறது என்று கொண்டால் அங்கே பேருந்து நிலையத்தில் நிற்கும் ஒருவர் கடிகாரத்தில் 12 மணி நெருங்கும் போது பேருந்து சில நிமிடங்களில் வந்து விடும் என்று எதிர்வு கூறலாம். இங்கே கடிகாரத்திற்கும் பேருந்துக்கும் நேரடி சம்பந்தமில்லை. கடிகாரத்தில் காணும் நேரத்தை வைத்துக் கொண்டு பேருந்தின் வருகையை கணிக்கிறோம். (சில நாட்களில் இது தவறாகவும் கூடும்) அதே போல் தான் பிறக்கும் நேரத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து வாழ்வின் நிகழ்வுகளைக் கணிப்பதுவும். வான கடிகாரம் என்று சொன்னீர்களே - அதே தான்! கடிகார முட்களை வைத்துக் கொண்டு எதிர்வு கூறுதல். மற்றும்படி கிரகங்களில் இருந்து வரும் கதிர்கள் எம்மைப் பாதிப்பதாக சொல்வதெல்லாம் தவறான விளக்கங்கள் என்றே கருதுகிறேன்.
3. கிரகங்கள் அல்ல - முன்வினைப் பயன்களே நம் வாழ்வின் சில நிகழ்வுகளைத் தீர்மானிக்கின்றன. மழை வரலாம் என்று வானிலை அறிக்கை சொன்னால் குடை கொண்டு செல்வது போல முன்வினைப் பயன்களின் விளைவுகள் தெரிந்தால் அவற்றை எதிர்கொள்ளத் தயாராகலாம். இது தான் ஜோதிட கணிப்புகள் மூலம் கிடைக்கக் கூடிய நன்மை. நம் வாழ்வில் நடக்கும் எல்லாமே முன்வினைப் பயன்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டவை அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இவை தான் நான் தெரிந்து கொண்டவை. இவற்றில் தவறுகளும் இருக்கலாம். மேலும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.