கலைடாஸ்கோப்-90 உங்களை வரவேற்கிறது.
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி !
Even if you fall on your face, you're still moving forward.
Victor Kiam
நகுமோமு கனலேனி நா ஜாலி தெலிசி - தியாகராஜர்.
நம்மை சுற்றிலும் உலகம் முகங்களால் நிரம்பி உள்ளது. விதம் விதமான, ரகம் ரகமான , வகை வகையான முகங்கள்!கருப்பான, சிவப்பான, உருண்ட, நீளமான, வட்டமான , அழகான, மீசை வைத்த, மீசை இல்லாத, தாடி வைத்த, தாடி இல்லாத, கண்ணாடி போட்ட, கண்ணாடி போடாத ...இப்படி ..
முகங்களுக்கு தான் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம்! ஏதோ ஒரு போர் . போர் முடிந்ததும் தலை அற்ற உடல்கள் நிறைய கிடந்தனவாம். உடலை வைத்து ஒருத்தரைக் கூட அடையாளம் சொல்ல முடியவில்லையாம் ...அதாவது அவர்கள் சொந்த மனைவி, அம்மா இவர்களால் கூட..!முகம் போல, உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானவை என்றாலும் முகம் இல்லாமல் போனால் நம்மில் எத்தனை பேரால் மனிதர்களை அடையாளம் காண இயலும்?
யாரும் இல்லாத போது ஓய்வறையில் உள்ள கண்ணாடியில் முகம் பார்க்காதவனே உண்மையான ஞானி என்று சொல்வார்கள் ! - அதே முகம் தான் என்று தெரியும்...அரை மணி நேரம் முன்பு தான் கண்ணாடியில் பார்த்திருப்போம்! அதே மூக்கு...அதே உதடு...அதே மீசை..ஆனாலும் அப்படி பார்த்து தலை முடியை கொஞ்சம் அப்படி நீவி விட்டுக் கொள்ள வேண்டியது! mirrors are addictive !
முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து செய்யக் கூடிய தியானங்கள் கூட இருக்கின்றன.கொஞ்ச நேரம் நாம் கண்ணாடியைப் பார்க்கிறோம் என்பதை மறந்து விட்டு கண்ணாடியில் உள்ள உருவம் நம்மைப் பார்ப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்போது, பார்ப்பது, பார்க்கப்படுவது, பார்வை இவற்றால் ஒரு மூடிய வளையம் (closed loop ) ஏற்பட்டு தியானத்தின் அனுபவம் கிட்டுமாம். சரி, கண்ணாடி முன்னால் நின்று கொண்டு தியானம் செய்ய யாருக்கு நேரம்??..லிப்ஸ்டிக்கை சரி செய்வதிலும் மீசையை ட்ரிம் செய்வதிலுமே நேரம் போய் விடுகிறது!
முகங்களை ஞாபகம் வைத்துக் கொள்வது ஒரு பெரிய கலை என்று தோன்றுகிறது. எனக்கு ஏனோ அந்தக் கலை அவ்வளவாகக் கை வரவில்லை. பேசி முடித்து விட்டு அப்பால் நகர்ந்ததும் முகம் மறந்து போய் விடும். (இதுவும் ஒருவேளை நல்லது தானோ!) ஹோட்டலில் நம்மை கவனிக்கும் சர்வர் யார் என்பதோ பஸ்ஸில் நாம் இறங்கும் ஸ்டாப்பை கேட்ட ஆள் யார் என்பதோ என்னால் முகத்தை வைத்து ஞாபகம் வைத்துக் கொள்ள முடிவதில்லை. அவர் அணிந்திருந்த சட்டையையோ இல்லை வேறு ஏதோ ஒரு அடையாளத்தையோ கவனிக்க வேண்டி இருக்கிறது!
வாய்ப்பாட்டுப் பாடும் பெண்ணே மௌனங்கள் கூடாது
வாய் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது.
சொல்லுக்கும் அர்த்தத்துக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது.
[ஒரு நிமிடம்: மௌனம் சரி...அது என்ன மௌனங்கள்??? தமிழ் சினிமா பாடல்களில் இது போல நிறைய சொல்லாடல்கள் இருக்கின்றன. 'பெண் மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு' 'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே' 'ஓர் நாள் உன்னைக் காணாவிடில்' தனக்குளே ஓர் தேடல்கள் ஞானம் தரும் ...இப்படி..மௌனங்கள் தேடல்கள் இவையெல்லாம் சரி தானா...?!என்னையா ? பாட்டை ரசிச்சுட்டு போவியா..என்கிறீர்களா .அதுவும் சரி தான். ]
மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
“Don't raise your voice, improve your argument."
― Desmond Tutu
இதன் விளைவாகவோ என்னவோ குரல்களை அடையாளம் காண்பது எனக்கு எளிதாக இருக்கிறது. குரலை வைத்து அன்னிக்கு ட்ரைன்ல மீட் பண்ணமே அவங்க தானே! என்ற லெவலுக்கு..ஒருவரின் முகம் மறந்து விட்டாலும் குரல் அவ்வளவு சீக்கிரம் மறந்து போவதில்லை. முகமும் குரலும் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை என்பதை கவனித்திருக்கிறீர்களா? நல்ல உயரமான, ஸ்மார்ட்டான, ஜிம் பாடி உள்ள சினிமா ஹீரோக்கள் பலர் டீன் ஏஜ் பையனின் குரலில் பேசுகிறார்கள். அதே சமயம் ஒருவரது manly -ஆன குரலை வைத்து நாம் அவரை என்னவோ ஏதோ என்று ஆஜானுபாகுவாக கற்பனை செய்து வைத்திருந்தால் அவர் ஒல்லியாக ஸ்கூல் பையன் போல தோற்றமளிப்பார்.
ஒருவருடைய personality -இல் அவரது குரல் பெரும் பங்கு வகிக்கிறது என்று சொல்லலாம். வடிவேலு காமெடி ஒன்றில் வில்லன் ஒருவன் தன் அடியாட்களை கூட்டிக் கொண்டு வந்து மிரட்டுவான். ஆனால் வாய் திறந்து பேசும் போது கீச்சுக் குரலில் பேசுவான் :-)ஒருவரின் குரல் அவரது கேரக்டருடன் ஒன்றவில்லை என்றால் நமக்கு எதையோ மிஸ் செய்தது போல இருக்கிறது.அதே போல ஊமையாக வரும் ஒரு கேரக்டருடன் நம்மால் சுலபமாக இணைந்து விட முடிவதில்லை.
நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என்
கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா
இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே
voice modulation என்பது மனிதனுக்கு வாய்த்திருக்கும் மிகப்பெரியதொரு வரப் பிரசாதம் ... எல்லாரிடமும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி, நியூஸ் வாசிப்பவர் மாதிரி பேசினால் எப்படி இருக்கும்?வேலையாட்களிடம் பேசும் போதும், முதலாளியிடம் பேசும் போதும் , காதலியுடன் பேசும் போதும், நண்பருடன் பேசும் போதும், குழந்தைகளுடன் பேசும் போதும் நம் குரல் எப்படி ஆட்டோமாடிக் --ஆக தன்னை மாற்றிக் கொள்கிறது?அதிசயம் தான்.ஒருவர் எவ்வளவு romantic -என்பதை அவரது குரலே காட்டிக் கொடுத்து விடுகிறது ..காதலில் குரல் தான் மெயின் கேரக்டர்...என்னதான் காதலாகி கசிந்துருகினாலும் காதலியுடனோ காதலனுடனோ பேசும் போது உங்கள் குரலும் ரொமாண்டிக் ஆக இருக்க வேண்டும். தர்பாரி கானடா ஒரு மாதிரி காதில் நுழைந்து மயிலிறகால் மனதை வருடுமே அது போல! சண்டைக்கு வருவது போலவோ மார்க்கெட்டில் கத்திரிக்காய் பேரம் பேசுவது போலவோ பேசக் கூடாது. சில பேர் வாயைத் திறந்தாலே ஏதோ டிரெயினை பிடிக்கப் போகும் அவசரத்துடனேயே பேசுவார்கள். சில பேர் போல்லீஸ் ஸ்டேஷனில் கைதியுடன் பேசும் போலீஸ் போல பேசுவார்கள்.. இப்படி இருந்தால் நீங்கெல்லாம் எப்படி பாஸ் லவ் பண்ணுவீங்க? நெளிவு, சுழிவு , ஏற்றம், இறக்கம், கொஞ்சல், கெஞ்சல் , முனகல், சில சமயம் வெறும் காத்துதான் வருது என்ற அளவுக்கு நீங்கள் உங்கள் குரலை காதலிப்பதற்கு முன் பழக்கிக் கொள்ள வேண்டும். ஆண் என்றால் ரகுவரன் மாதிரி ஒரே கட்டையில் பேச வேண்டும் என்ற ரூலெல்லாம் இல்லை. நான் ஆம்பிளை..நான் எப்படி அப்படியெல்லாம் பேசறது என்றால் நீங்கள் காதலிக்கவே லாயக்கு இல்லை....times are changing ..
தொடர்புடைய ஒரு விஷயம்...பதிவர் ஒருவர் கேட்டது...உருவங்களையும் சத்தங்களையும் நம்மால் அசை போட முடிகிறது...ஆனால் வாசனையையும் சுவையையும் முடிவதில்லை...ஏன்? அதாவது, இறந்து போன பாட்டி கனவில் வருகிறாள். அவளைப் பார்க்க முடிகிறது...ஏன்டா 'பூர்வி கல்யாணி ' தானே பாடறே..இன்னும் ப த ப ஸா பிரயோகமே வரலையே' என்கிறாள். அதைக் கேட்க முடிகிறது...ஆனால் பாட்டி செய்யும் மைசூர் பாகின் சுவையையோ அவள் சேலையில் இருந்து வரும் வாசனையையோ உணர முடிவதில்லை... இது ஏன்? மேலும், ஒளியையும் ஒலியையும் நம்மால் எத்தனை தூரத்துக்கு வேண்டுமானாலும் அனுப்ப முடிகிறது. ஆனால் வாசனையையும் சுவையையும் கடத்த முடிவதில்லை.
well ..
'ஒளி ' என்பது மிக நிச்சயமான ஒரு விஷயம். it exists ! அது ஒருவகை ஆற்றல்..பிரபஞ்சம் இருக்கும் வரை எங்கோ ஒரு மூலையில் ஒளியும் இருந்தே தீரும்.[ எல்லா இயற்பியல் வினைகளிலும் ஒளி ஒரு அழையாத விருந்தாளி போல வந்து விடுகிறது. It's very difficult not to produce the light என்கிறார் ஒரு இயற்பியலாளர்.] ஒரு நிறுவனத்தில் ஒருவருக்கு பதவி உயர்வு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவரும் ஜாலியாக அதை ஏற்றுக் கொள்கிறார். போகப் போக அந்தப் பதவியின் சுமைகளும் பொறுப்புகளும் அவரால் தாங்க முடியாத அளவுக்குச் சென்று' போதும்டா சாமி..இந்த உயர்ந்த இடம் எனக்கு வேண்டாம்...பழைய போஸ்டிலேயே போட்டுடுங்க ' என்று கேட்டுக் கொண்டு மீண்டும் பழைய சீட்டுக்கு வந்து நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். இது மாதிரி, அணுவுக்குள் ஜாலிக்காக உயர் ஆற்றல் மட்டங்களுக்கு செல்லும் எலக்ட்ரான்கள் பின்னர் நொந்து போய் மீண்டும் தங்கள் சொந்த வீ(கூ)டுகளுக்குத் திரும்பும் போது வெளி வரும் நிம்மதிப் பெருமூச்சு தான் ஒளி (அல்லது பொதுவாக Electro magnetic radiation ....)எனவே ஒளி உண்மை..
Don't look at me in that tone of voice” | |
David Farber quotes
|
அடுத்து இந்த ஒலி (sound ) ஒளியைப் போல அவ்வளவு உண்மை அல்ல.காற்றோ தண்ணீரோ அல்லது ஒரு திடப் பொருளிலோ ஏற்படும் அழுத்தம் அதை அதிர வைக்கிறது..இந்த அதிர்வுகள் மெல்ல மெல்ல அதே ஊடகத்தில் நகர்ந்து நகர்ந்து ஒலியாக உணரப்படுகின்றன. பூமியின் வளிமண்டலத்தை தாண்டியதும் நாம் இவ்வளவு நேரம் சிலாகித்த நம் குரல் வீணாகப் போய் விடும்.எல்லாருமே ஊமைகள் தான். சைகை பாஷை தான். கிளி மொழியாள் , தேன் மொழியாள் , மஞ்சு பாஷினி , மிருது பாஷிணி இந்த செல்லம் கொஞ்சுதல் எல்லாம் மேலே ஒரு நூறு கிலோ மீட்டருக்கு அப்புறம் செல்லுபடி ஆகாது. பயப்பட வைக்கும் நீண்ட நெடிய மௌனம்!
வெட்ட வெளியே விரியும் மௌனமே! மனதுக்கு
எட்டவொண்ணாத இறையே !-
என்று சித்தர் பாட்டு போல 'விரியும் மௌனம்!'
[கொசுறு: ஏழெட்டு குட்டிக் குழந்தைகள் ஒரு வீட்டில் இருந்தால் வீடு எப்படி களேபரமாக இருக்கும்? அதே போல எலக்ட்ரான் குட்டிகளை வைத்துக் கொண்டுள்ள அணுவின் வீடு எப்படி இருக்க வேண்டும்? எலக்ட்ரான்-களுக்கு இடையே சண்டைகள், சச்சரவுகள், போட்டிகள், தாவல்கள், திரும்பல்கள், போதாக் குறைக்கு பக்கத்து வீட்டு பெற்றோர்களுடன் பங்கிடுதல்கள் ,..இத்தனை இருந்தும் நமக்கு இந்த களேபரங்கள் ஏன் கேட்பதில்லை? ]
சத்தம் என்பது வெளிச்சம் போல அவ்வளவு absolute இல்லை என்பதால் அதை நெடும் தூரத்துக்கு கடத்த அதை மீண்டும் மின்காந்த அலை என்ற குதிரை மீது ஏற்றி அனுப்ப வேண்டும். ஏற்றி அனுப்புவது என்பது கூட சரியில்லை. modulation ! ஆளுக்குத் தகுந்தபடி குதிரையையே மாற்றுவது!
மறு முனையில் குதிரை எப்படியெல்லாம் மாற்றப்பட்டிருக்கிறது என்பதை வைத்துக் கொண்டு
இந்த ஆளைத்தான் அனுப்பி இருப்பார்கள் என்று அவரை re -construct செய்வது!
மாறும் ஒலிக்கேற்ப மின்காந்த அலையின் சில பண்புகளை அதிர்வெண்ணை அல்லது உயரத்தை திருத்தி அதைக் கடத்துவது!
அடுத்து, இந்த வாசனை சுவை போன்றவை வெறுமனே biological experiences ...
ஒளி ,ஒலி போன்றவை பொதுவாக எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். எஸ் பி பி பாடுகிறார் என்றால் அவர் இரண்டு பேருக்கு ஒரே மாதிரி தெரிவார்; பாடுவது இரண்டு பேருக்கு ஒரே மாதிரியே கேட்கும்.அனால், வாசனை என்பது தனிப்பட்ட அனுபவம்..ஜலதோஷம் வந்தால் வாசனையே தெரியாது.smell , taste , they don't have an existence on their own !
அல்வா இனிப்பாக இருக்கிறது; மல்லிகைப்பூ மணக்கிறது, சாக்கடை துர்நாற்றம் வீசுகிறது என்று சொன்னால், வாசனை என்பது பூவின் ஒரு inherent குணம் அல்ல.அதன் உள்ளார்ந்த பண்பு அல்ல...பூவில் உள்ள சில கெமிகல்கள் மூக்கில் உள்ள வாசனை நரம்புகளுடன் வினை புரிவதால் வரும் ஒரு அனுபவம். ஆகவே வாசனையை அறிய பூவும் வேண்டும் மூக்கும் வேண்டும். IOW இனிப்பு சர்கரையிலா இல்லை நாக்கிலா என்று சொல்வது கஷ்டம்.
பேரின்பம் மெய்யிலா ? நீ தீண்டும் கையிலா?
மூக்கு இல்லாத போது வாசனை இல்லை...அப்படி என்றால் கண்கள் இல்லாத போது பூவும் இல்லையா
well , நாம் பார்க்காத போது , நம் அனுபவத்தில் வராத போது , நாம் உணராத போது ஒரு பொருள் இருக்கிறதா (objective reality ) அல்லது நாம் இருப்பதால் தான் எல்லாமே இருக்கிறதா என்ற வாதம் இது வரை முடிவில்லாமல் தொடர்கிறது. பூனை கண்ணை மூடினால் பிரபஞ்சம் இருண்டு விடுமா?
நாம் வாயில் வைத்தவுடன் உருவாகும் சுவை போல நாம் பார்க்கும் போது பொருள்கள் உருவாகின்றனவா? ஒரு வீடியோ கேம் போல!நாம் navigate செய்து கொண்டு செல்லச் செல்ல மரமும், வானமும், மனிதர்களும் dynamic ஆக உருவாகிறார்களா?
சரி..நீங்கள் போகும் போது தான் சேலம் பஸ் ஸ்டாண்டும், அதன் கடைகளும், மனிதர்களும், பஸ்களும் உருவாக்கப்படுகிறார்கள் என்ற கொள்கை அபத்தமாகத் தோன்றினாலும், இந்தத் தியரியின் நீர்த்த வடிவம் ஒன்று உண்டு .. நீங்கள் சென்றால் சேலம் பஸ் ஸ்டாண்ட் நீங்கள் செல்லாமல் இருந்தால் எப்படி இருக்குமோ அதை விட கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் மாறுகிறது. கேயாஸ் தியரி!!!உங்களுடைய involvement விஷயங்களை கொஞ்சம் மாற்றி விடுகிறது.ஏதோ ஒரு விஷயம் மாறி இருக்கலாம்.
பிரபஞ்சத்தின் விஸ்தீரணத்துடன் ஒப்பிடும் போது பூமி ஒன்றுமே இல்லை தான். ஆனால் பூமியின் இருப்பு பிரபஞ்சத்தை ஏதோ ஒரு விதத்தில் பாதித்து விடுகிறது.
observer -independent experiment சாத்தியம் இல்லை என்று குவாண்டம் இயற்பியல் கை விரித்து விடுகிறது. கவனிப்பவர் தன்னை அறியாமல் கவனிக்கப்படுவதை மாற்றி விடுகிறார் என்கிறது. வேறொரு விதத்தில் சொன்னால், எதனாலும் கவனிக்கப்படாத , எதனுடனும் (போட்டான்-களுடன் கூட!) வினை புரியாத, எதனுடனும் சாராத ஒன்றை நாம் அனுபவத்தில் கொண்டு வருவது கஷ்டம். பூவைப் பார்க்கிறோம் என்றால் பூவுடன் அதைப் பார்ப்பவர் சம்பந்தப் படுகிறார் என்று அர்த்தம். பார்ப்பவனால், உணர்பவனால், அனுபவிப்பவனால் மாற்றப்படாத , விகாரம் அடையாத ஒன்று உள்ளதா? நிர்விகாரம் ஆன பரப்ரம்ஹமா அது?
வேளுக்குடி கிருஷ்ணன் சொல்வது:
ப்ரஹ்மம் உபாதான காரணமாக இருக்க வேண்டுமானால், அது
மாறித்தானே ஆக வேண்டும். ப்ரஹ்மம் மாறி ஜகத்தாக பரிணமிக்கிறது. சரி, ஆனால்
இதில் ஓர் ஐயம் எழும். ப்ரஹ்மம் மாறுகிறதென்றால், விகாரம் அடையும் என்று
பொருள். ஆனால், வேதாந்தமோ, ப்ரஹ்மத்திற்கு விகாரம். அதாவது, மாறுதலே
கிடையாது; ஒரே ஸ்வரூபத்தோடே இருப்பது – என்று கூறுகிறது.
ஒரே ஸ்வரூபத்தோடே
மாறுதல் இல்லாமல் இருக்க வேண்டுமானால், உபாதான காரணமாக முடியாது. உபாதான
காரணமாக, அதாவது குடத்திற்கு மண் போன்று, இருக்க வேண்டுமானால், மாறித்தான்
தீர வேண்டும்.
அப்போது ‘ப்ரஹ்மம் நிர்விகாரம்’ என்கிற பெருமை அழிந்து
போகும். ஆக, இந்தப் பெருமை கூற வேண்டுமேயானால் அதை இழக்க வேண்டும். அந்தப்
பெருமை கூற வேண்டுமானால் இதை இழக்க வேண்டும். ஆனால், வேதாந்தமோ ப்ரஹ்மத்தை
உபாதான காரணமாகவும், அதே சமயத்தில் ப்ரஹ்மத்தை எந்த மாறுதலுக்கும் உட்படாத
நிர்விகார தத்துவமாகவும் கூறுகிறது. பின் எப்படி இந்த இரண்டையும்
சேர்த்துப் பார்க்கப் போகிறோம்? கேளுங்கள்.
மேலும் படிக்க:
* ஜென் கதை ஒன்று...நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கக் கூடும்.
ஒருவனுடைய மனைவி இறந்து கொண்டிருக்கிறாள். மரணப் படுக்கையில் அவள் தன் கணவனிடம் 'நான் உங்களை மிக மிக நேசிக்கிறேன்..எனவே என் மரணத்துக்குப் பிறகு வேறு யாருடனும் நீங்கள் காதல் கொள்ளக் கூடாது; உங்களை நான் மரணத்துக்குப் பிறகும் கண்காணித்துக் கொண்டே இருப்பேன்' என்கிறாள்.
மனைவி இறந்ததும், சில மாதங்கள் அவன் தனித்து இருக்கிறான். பிறகு ஒரு பெண்ணிடம் மனதைப் பறிகொடுக்கிறான். அவளை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறான். அன்று இரவே அவனது மனைவி, பேயாக வந்து அவனை எச்சரிக்கிறாள், 'நீ எப்படி இவ்வாறு செய்யலாம்' என்று கேள்விகளால் துளைத்தேடுக்கிறாள். அவனுக்கும் அவன் புதிய காதலிக்கும் நடந்தவைகளை ஒன்று விடாமல் கூறுகிறாள். தனக்கு எல்லாமே தெரியும் என்றும் எதையும் அவளிடமிருந்து மறைக்க முடியாது என்றும் கூறுகிறாள். தினமும் வந்து அவன் தூக்கத்தைக் கெடுக்கிறாள்.
இந்த தொல்லையில் இருந்து விடுபட வேண்டி அவன் ஒரு ஜென் குருவை சென்று சந்திக்கிறான். அவர் அவனுக்கு ஒரு விஷயத்தை சொல்லிக் கொடுத்து மறுமுறை ஆவி அவனிடம் வரும்போது அதை செயல்படுத்தும்படி சொல்கிறார்.
அன்று இரவு மறுபடியும் ஆவி வருகிறது. அதனிடம் அவன், 'உனக்கு எல்லாம் தெரியுமா?' என்கிறான். அது' ஆமாம்...எல்லாம்' என்கிறது..
உடனே அவன் பக்கத்தில் இருந்த மூட்டையில் இருந்து கைப்பிடி அளவு பீன்ஸ் விதைகளை அள்ளிக் கொண்டு, "இதில் மொத்தம் எவ்வளவு பீன்ஸ் விதைகள் உள்ளன என்று சொல்லேன்" என்கிறான்.
உடனே அந்த உருவம் மறைந்து விடுகிறது...அதற்குப் பிறகு அது திரும்ப வரவே இல்லை!
.
..
...
....
.....
இதில் இருந்து நமக்குத் தெரியும் விஷயம் என்ன....? இரண்டு சொல்கிறார்கள்.
ஒன்று : கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு...எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்து விடாது...
but ,எனக்குப் பிடித்த version இதுதான்:
இரண்டு: அந்த ஆவி என்பது உண்மையில் அவனுடைய மனம் தான். வேறொன்றும் இல்லை. அவன் மனச்சாட்சி தான் அவனை தினமும் அலைக்கழிக்கிறது. தனக்கு எல்லாம் தெரியும் என்கிறது. காதலியுடன் நடந்த ஒவ்வொன்றும் அவனுக்குத் தெரியும் என்பதால் அந்த ஆவிக்கும் தெரிகிறது. ஆனால், கையில் சரியாக எத்தனை பீன்ஸ் விதைகள் உள்ளன என்பது அவனுக்கே தெரியாது. எனவே அவனது மனதின் பிம்பமான ஆவிக்கும் தெரிவதில்லை. எனவே கேள்வி கேட்டதும் அது மறைந்து விடுகிறது.மனம் தான் மிகப் பெரிய பேய் !
ஒரு ஹைக்கூ:
பறவை பறந்ததும்
கொஞ்ச நேரம்
ஆடும் கிளை!
ஓஷோ ஜோக்:
அன்புள்ள இலியா,
எப்படி இருக்கிறாய் அன்பே? சில வாரங்கள் முன்பு நாம் பிரிந்து விட்டோம்.
ஞாபகம் இருக்கிறதா? அதில் இருந்து என்னால் நானாக இருக்கவே முடியவில்லை. என் மனச்சாட்சி என்னைக் கொல்கிறது .உன் போல அன்பும் அழகும் நிறைந்த பெண்ணை நான் பிரிந்தது எத்தனை முட்டாள்தனம்?
இப்போதும் என் இதயத்தில் உனக்கான இடம் இருக்கிறது அன்பே. இப்போது தான் உணர்கிறேன்...உன்னை நான் எவ்வளவு காயப்படுத்தி இருக்கிறேன்.
உன்னிடம் இருந்து விலகிச் சென்றுள்ளேன்...உன்னுடைய அன்பைப் புரிந்து கொள்ளாமல் கல் இதயத்துடன் பிரிந்து விடலாம் என்றேன்..
இப்போதும் சொல்கிறேன்..உண்மை அன்பு, சுயநலம் அற்ற காதல் என்றால் என்ன என்பதை உணர்ந்து விட்டேன். எனக்கு நீ வேண்டும்..உன் இதயத்தின் தொடுதல் வேண்டும் அன்பே..என் செல்லமே...என் வாழ்வில் இன்னொரு வாய்ப்பு தருவாயா? பாலைவனம் போன்ற என் மனதில் மீண்டும் உன் அன்பெனும் பூ மலருமா ? என் முட்டாள் தனத்தை மறந்து என்னை மீண்டும் நீ கருணை கூர்ந்து ஏற்றுக் கொள்ள மாட்டாயா, என் உயிரே! பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என் இளவரசி!
இப்படிக்கு
என்றென்றும் உன்னை மறவாத
ஜார்ஜ்.
[பின் குறிப்பு: சமீபத்திய ஸ்டேட் லாட்டரியில் முதல் பரிசு வென்றதற்கு என்
உளமார்ந்த வாழ்த்துக்கள்..]
சமுத்ரா ...
14 comments:
இனிமையான பாடல்கள் உட்பட கலைடாஸ்கோப் அருமை... தொடர வாழ்த்துக்கள்....
மனம் தான் மிகப் பெரிய பேய் !
கலைடாஸ்கோப் ரசிக்கவைத்த வண்ணங்கள்.. பாராட்டுக்கள்..
எழுத்தில் சற்று வித்தியாசம் தெரிவதுபோல் தோன்றியது. ஆனால் போகப்போக சயின்ஸும் ஃபிசிக்ஸும் ப்ரபஞ்சமும் உங்கள் Specialised subject-கள் வந்து விடுகின்றன. கண்ணாடி முன் நின்று ‘நீதான் அது ‘ என்று சொல்வதுபோல் முன்பு நான் Random thoughts in eight hours என்னும் பதிவில் எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது. ( நலம்தானே.. காணவே முடியவில்லை.)
GMB சார்,நலம் தான்.நீங்களும் நலம் தானே?
கருத்துக்கு நன்றி தி.தனபாலன், இராஜேஸ்வரி ...
varanum neenga palaya samudra va thirumbi varanum..aaa enachu..
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் தளம் பார்த்துவிட்டு வந்தேன்.
முகத்தில் ஆரம்பித்து, குரல், ஒலி, ஒளி என்று பலவற்றைப் பற்றியும் எழுதியிருக்கிறீர்கள். இடையில் சினிமா பாடல்களில் காணப்படும் சொற்கள் பற்றிய விசாரம்.
நடுவில் வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமியின் உபன்யாசம். பிறகு ஜென், ஓஷோ என்று உங்கள் கலைடாஸ்கோப் பலவற்றின் கலவையாக இருக்கிறது.
நானும் உங்கள் ஊரில் தான் இருக்கிறேன்.
சீக்கிரம் சந்திப்போம்!
உங்கள் எண்ணங்கள் விரிந்து பரந்து பறந்து எல்லாவற்றையும் தொட்டுப் பார்த்து விட்டு வருகின்றன. நிறைய வாசிப்பீர்கள் போல. அருமையான 'loud thoughts'. வாழ்த்துகள் சமுத்ரா!
வலைச்சரத்தை ஸ்மெல்லிட்டு ஸ்மைலினேன்.
வாலைக்குமரியோ எனும் ஐயத்தில், அச்சத்தில் (!)
அலைபோல, இல்லை !
மலைபோல பிரும்மாண்டமாக பரிணமித்து இருக்கும்
உங்கள் கருத்துக் களஞ்சியமா ! இல்லை
ஆழம் காண இயலா ஆழ்கடலா ? உங்கள்
வலைப்பதிவாம் கலைடாஸ்கோப்புக்குள் நானும் சங்கமமானேன்.
முகத்தையே மறுபடியும் மறுபடியும் காணுகிறோம். கண்டு ரசிக்கிறோம்.
ஒரு தடவை கண்ட முகம் மறுமுறை காணுவதில்லை. ஆம்.ஜ
5 வயதில், நம் முகம், 10 வயதில், 20 வயதில், 30 ல், 40 ல், இப்படி எல்லா முகங்களையும்
ஒன்றாக நமது நிழற்படங்களை பாருங்கள். அதே சமயம் ஆடியில் இப்பொழுதிருக்கும்
முகத்தையும் பாருங்கள்.
என்ன இது. !! ஐந்தில், பத்தில், இருபதில், முப்பதில், நாற்பதில், ஐம்பதில், ஏன் அறுபதில்
இருந்த முகம் கூட ஏன் எழுபதில் காணோம் ?
தொலைந்தா போயிற்று. மாறிவிட்டது என சமாதானம் சொல்லிக்கொண்டாலும்
அந்த முகம் மறந்து போயிற்று. இப்பொழுது இருக்கும் முகம் தான் சாஸ்வதம் என்று
நினைக்கிறோம்.
உண்மை என எழுத துவங்கும்போதே அது பொய் ஆகிவின்றது என்பதும் எத்துணை
உண்மை !!
ஐந்தில் துவங்கி எழுபது வரை நாம் ஒவ்வொரு நாளும் கண்டு மகிழ்ந்த முகங்கள்
மாறிவிட்டனவா ? மரித்துப்போயினவா ?
நான் என்ற ஒன்று எழுபது வருடங்களாக தொடர்ந்து இருந்தபோதிலும் நானில் இருந்த
முகம் மட்டும் அல்ல, ஒவ்வொன்றுமே மாறிக்கொண்டு வருகின்றன.
பழையன கழிதலும், புதியன புகுதலும்..... நடந்துகொண்டே இருக்கிறது.
இத்தனைகளுக்கும் நடுவில் ஒன்று நிலைத்து நிற்கிறது எனின்
அதுதான் பிரும்மம்.
அது நிர்குணம். நிராகாரம் அதனால் அதில் மாற்றம் இல்லை.
//பிரும்மம் மாறி ஜகத்தாக பரிணமிக்கிறது //
ஐ ஆம் சாரி. வேளுக்குடி வார்த்தைகளில் விளையாடுகிறார்.
பிரும்மம் ஜகத்தாக அனைத்துமாக பரிணமித்துக்கொண்டு இருக்கிறது.
மாறி என்ற சொல்லில் எனக்கு உடன்பாடு இல்லை.
பிரும்மத்தை உணர்ந்தவன் உணர் நிலையிலே மாற்றம் இல்லை.
பிரும்மத்தை உணர தலைப்படுவோரின் நிலைகளில் மாற்றம் என்பதே மாறிக்கொண்டு இருக்கிறது.
வாஸ்தவம்.
ஆனால் பிரும்மம் மாறவில்லை.
இருட்டில் கயிற்றை மிதித்து விட்டு பாம்போ என ஒரு கணம் பயந்து ஐயப்பட்டு, பாம்பாக
இருக்காது என்ற நிலை வந்து, பாம்பில்லை, கயிறு தான் என்ற நிலைக்கு வருகிறோம்.
நம் நிலைகளில் மாற்றம் இருக்கிறது. பாம்பாய் மனத்திரையில் தோன்றிய கயிற்றில்
மாற்றம் இல்லை. அது பாம்பு என நாம் நினைத்தபோது எப்படி இருந்ததோ அதுவாகவே
இறுதியிலும் இருக்கிறது.
ஸ ஏகஹ. விப்ராஹ பஹுதா வதந்தி.
அவனை உணர்வதில் மாற்றம் இருக்கிறது. நம் முகங்கள் மாற்றம் அடைவது போலே.
அவன் நிலையானவன்.
மேலும் பேசலாம்.
சுப்பு தாத்தா.
www.pureaanmeekam.blogspot.com
www.subbuthatha.blogspot.in
நாளை முதல் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்கும் தங்களுக்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள்... அசத்துங்க...
//அவனை உணர்வதில் மாற்றம் இருக்கிறது. நம் முகங்கள் மாற்றம் அடைவது போலே.
அவன் நிலையானவன். //
சுப்பு தாத்தா! நீங்கள் சொல்லுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம போல இருக்கிறது! நன்றி.. நன்றி!
தத்துவார்தங்களின் ஊடே வாழ்வின் எதார்த்தங்களையும் வியப்புகளையும் விரித்து கூறிய விதம் ஒரு ஆசிரியரைப் போல
ஒரு கதை சொல்லியை போல மிக அழகாக வார்த்தைகளை அடுகிய விதம் அருமை
தங்களின் அறிவியல் விளக்கும் நடை சூப்பர்...
எலக்ட்ரானின் தாவல்,ரேடியோ மாடுலேசன் போன்றவற்றை வித்தியசமான சொற்களில் கேட்கிறேன்.. சூப்பர் !! (எழுத்தாளர் சுஜாதாவை நினைவு செய்கிறது)
//மனம் தான் மிகப் பெரிய பேய் !//
:)
//மூக்கு இல்லாத போது வாசனை இல்லை...அப்படி என்றால் கண்கள் இல்லாத போது பூவும் இல்லையா//
!!!! ஏன் இப்படி !!
Post a Comment