இந்த வலையில் தேடவும்

Tuesday, March 5, 2013

கலைடாஸ்கோப்-86

லைடாஸ்கோப்-86 உங்களை வரவேற்கிறது.

“Times are bad. Children no longer obey their parents, and everyone is writing a book.” 


― Marcus Tullius Cicero





* பெரும்பாலும் எல்லா மதங்களும் கடவுளை குழந்தையாக வழிபடுகின்றன. குழந்தைகளின் மீது நமக்கு இருக்கும் unconscious ஈர்ப்புக்கு காரணம் என்ன? கல்யாணம் ஆன ஒரு தம்பதி, குழந்தைகளை விரும்புவதற்கு என்ன காரணம்? பல்வேறு காரணங்கள் சொல்கிறார்கள்..


“There are two kinds of travel: first class and with children.” 


― Robert Benchley


 * குழந்தைகளின் மூலம் மணவாழ்க்கை நிறைவு பெறுகிறது என்று பொதுவான (தவறான) ஒரு கருத்து நிலவுகிறது.குழந்தை இல்லை என்றால் தம்பதிகள் அன்னியோன்னியமாக இல்லையோ என்று ஒரு சந்தேகம் வருகிறது. எனவே குழந்தை என்பது தம்பதிகளின் அன்னியோன்னியத்தை வெளியே காட்டும் மறைமுக வழி .


* ஆண் குழந்தை ஒன்றை மனைவி கணவனின் extension ஆகவும், பெண் குழந்தையை கணவன் மனைவியின் extension ஆகவும் கருதுகிறார்கள்... தன் கணவன் அல்லது மனைவி குழந்தையில் எப்படி இருந்திருப்பார்கள், எப்படி நடந்து கொண்டிருப்பார்கள் என்று miss செய்த வருடங்களை பார்க்கும் ஒரு வாய்ப்பு.


* மனிதன் தான் இறந்த பின்னும், தன் குழந்தைகள் மூலம் வாழ விரும்புகிறான்.


 * ஆண், தன் குழந்தையின் மூலம் தன் ஆண்மையை, பெண், தன் பெண்மையை நிரூபிக்க விரும்புகிறார்கள்.


* சில செக்ஸ்ஸாலஜிஸ்ட்  -கள் மனிதன் குழந்தையை ஒரு sexual object ஆக , உணர்வற்ற நிலையில் உணர்வதாக சொல்கிறார்கள். நம்புவதற்கு கடினம் என்றாலும் இதில் ஓரளவு உண்மை உள்ளது. பொது இடத்தில் தம் குழந்தையை ஒரு ஆணோ பெண்ணோ தயக்கமின்றி கொஞ்சலாம்; முத்தமிடலாம்..தன் இணையிடம் அவ்வாறு செய்ய முடியாது. குழந்தை ஒன்று மறைமுகமாக உங்கள் sexual urge ஐ நிறைவு செய்கிறது; அல்லது அதற்கு  மாற்று அளிக்கிறது.


*A child relieves  a woman of her bedroom duties owed to her husband. 'இதப் பாருங்க, குழந்தை வந்தாச்சு, இனிமேல் அடிக்கடி டார்ச்சர் பண்ணாதீங்க' என்று சொல்லி தப்பி விடலாம்.இதனாலேயே அப்பாக்களுக்கு குழந்தை மேல் ஒரு ஆழ்மன பகைமை கூட இருக்கிறதாம்.


  * வம்சம் வளரணு ம், தாத்தா குழந்தையாகப் பிறக்கணும், பாட்டி பேர் வைக்கணும் போன்ற emotional விஷயங்கள்..குழந்தை கடவுளின் அனுக்கிரகம் என்று நம்புதல்.


* பிற்காலத்தில் வேர்கள் விழுந்து விட்டால் விழுதுகள் வேண்டுமே என்ற ஒரு முன்னெச்சரிக்கை. தாம் சாதிக்காததை தம் குழந்தைகள் சாதிக்க மாட்டார்களா என்று நப்பாசை.


* தானும் மறுபடி குழந்தை ஆகும் ஆசை...குழந்தையுடன் விளையாடும் சாக்கில் தானும் பீப்பி பொம்மையை அமுக்கிப் பார்க்கலாம்..சாக்கோ பார் சுவைக்கலாம்..ஜூவுக்குப் போகலாம்..போகோ டி.வி பார்க்கலாம்.ரைம்ஸ் படிக்கலாம்.புஸ்ஸி கேட் ரைம்ஸ்-ஐ தர்ம சங்கடமாக உணராமல் சத்தமாக சொல்லலாம்;பேபி ஹார்லிக்ஸ் ஒரு மிடறு குடிக்கலாம்; பாத் ரூமில் ஜான்சன் பேபி சோப் போட்டுக் கொள்ளலாம்.சாட் பூட் த்ரீ விளையாடலாம்; அண்டர் ஆர்ம் பவுலிங் செய்து கிரிக்கெட் விளையாடலாம்.. குழந்தை ஒன்று நம்மையும் மறுபடி குழந்தையாக மாற்றி விடுகிறது.

* குழந்தையைக் காட்டி சமுதாயத்தில் ஒரு advantage எடுத்துக் கொள்ளலாம். அதற்கு.குட்டிக் குழந்தையுடன் பஸ்ஸில் ஏறினால் யாராவது இடம் தருவார்கள்...லேடீஸ் வந்து  எழுப்பி விட மாட்டார்கள்...க்யூவை ப்ரேக் செய்து முன்னேறலாம். குழந்தை இருக்கிறது என்று ஆபீசில் சாக்கு சொல்லி ஷாப்பிங் போகலாம். குழந்தைக்கு பசிக்கும் என்று வீட்டில் 12 மணிக்கே சமைத்து விடுவார்கள். தமிழ் சினிமா மாதிரி குழந்தையை முன்னிறுத்தி பிரிந்த குடும்பங்கள் இணையலாம்.மேலும் குழந்தை வருவதால் கணவன் அல்லது மனைவி ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போகும் வாய்ப்பு வெகுவாகக் குறைகிறது.
 

* யாரையாவது எப்போதும் dominate செய்யும் ஆசை...அதைத் தொடாதே, இதை எடுக்காதே என்று ஆரம்பிக்கும் இந்த domination  , அதைப் படிக்காதே ,அவளை கல்யாணம் செய்யாதே, ரிட்டயர்மெண்ட் வாங்கிக் கொள் என்று காலம் பூராம் தொடர்கிறது.

* சில பேர் குழந்தை பெற்றுக் கொள்வதன் மூலம் தமது பெற்றோர்களை மறைமுகமாக பழிவாங்கும் (revenge at wrong place  ) சமாச்சாரமும் இருக்கிறது என்கிறார்கள். மேலும் ஒரு மனிதன் தாத்தா ஆக விரும்புகிறான் என்று சொல்லும் crazy தியரிகளும் உள்ளன...தாத்தா ஆவதென்றால் முதலில் அப்பா ஆக வேண்டுமே, எனவே குழந்தை பெற்றுக் கொள்கிறான்..


சரி.[மேலே சொன்ன motivation எதுவும் இன்றி வெறுமனே குழந்தைக்காக மட்டுமே நீங்கள் குழந்தை பெற்றுக் கொண்டால் நீங்கள் தான் உண்மையான பெற்றோர்!]


 voluntary childlessness என்று ஒன்று இருக்கிறது.. குழந்தை என்பதே தொல்லை என்று வேண்டுமென்ற குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பது. குழந்தை தங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதித்து விடுமோ என்றோ அல்லது குழந்தைகளுக்குப் பயப்படும் pediaphobia என்று கூட வைத்துக் கொள்ளலாம்... .மேலும்,குழந்தைகளுக்கு மலம் அள்ளி, யூனிபார்ம் மாட்டி விட்டு, லஞ்ச் பாக்ஸ் நிரப்பி, ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டு, PT மீட்டிங் attend செய்து, வளர்த்து ஆளாக்கி, கடைசியில் 'அப்பா, நீங்க ரெண்டு பேரும்  தனியா போயிருங்க' என்ற வார்த்தைகளை ஏன்  கேட்க வேண்டும்? ! ஆளை விடுங்கடா சாமி என்கிறார்கள்.. 


இதன் உச்சகட்டமாக, VHEM (Voluntary Human Extinction Movement) என்ற அமைப்பு, உலகத்தில் இருக்கும் அத்தனை பேரையும் தயவு செய்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறது. பூமி மனிதனுக்குப் படைக்கப்பட்டது அல்ல; அது மரங்களுக்கும் விலங்குகளுக்கும் பூச்சிகளுக்குமானது. எனவே மனிதன் மெல்ல மெல்ல பூமியை விட்டு அகல வேண்டும்..இனப்பெருக்கத்தை நிறுத்திவிட்டு மெல்ல மெல்ல நாம் பூமியிடம் இருந்து விடைபெற வேண்டும் என்கிறது.




 மேலும், எதற்கு இந்த மனித வாழ்க்கை? அதன் வலிகள் , கஷ்டங்கள், வேதனைகள், கவலைகள்?
 இ .எம்.ஐ கவலைகள், இன்கம் டாக்ஸ் பயங்கள் !அரக்கப் பறக்க கனவு கலையாமல் எழுந்து, தீர்ந்து போன டூத் பேஸ்டை இம்சை செய்து பிதுக்கி பல் துலக்கி , பக்கெட் தண்ணீரில் எந்திரம் போல குளித்து விட்டு, அண்டர்வேர் தேடி, எதையோ உடுத்திக் கொண்டு, பஸ் பிடித்து கூட்டத்தில் நசுங்கி, ஆபீஸுக்கு  சென்று, இன்று மேனேஜர் என்ன மெயில் அனுப்பி இருக்கிறானோ என்று பயத்துடன் mail பாக்ஸ் ஓபன் செய்யும் அவலங்கள்? எதற்கு அர்த்தமற்ற இந்த வாழ்க்கை ..உண்டதே உண்டு நித்தம் உடுத்ததே உடுத்து! சும்மா வழக்கொழிந்து போய் விடலாம்! ஜிம் ஜோன்ஸ் செய்தது போல mass suicide செய்து கொள்ளாமல் ஒரு புது வித ஐடியா...நம்முடைய சந்ததிகளை வாழ்வின் அத்தனை கஷ்டங்க -ளிலிருந்தும் நாமே விடுவித்து விடுவது தான் இந்த VHEM . sounds different ???


*மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்...






கழுதை: கழுதையை தட்டினால் அது தானும் திரும்பி உதைக்கும் ...சில மனிதர்கள் தங்களை யாராவது அவமதித்தால் உடனே அதைத் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்.


எருமை: எருமையை முதுகில் தட்டினால் அது எந்த மறுவினையையும் காட்டாமல் அப்படியே இருக்கும். சில பேர் தம் மீது வரும் அவமதிப்பு களையும் அவதூறுகளையும் அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவர்.


குதிரை: முதுகில் தட்டினால் இன்னும் வேகமாக முன்னால் ஓடும். சிலர் தாங்கள் சந்திக்கும் அவமானங்களையும் , அடிகளையும் மூலதனமாக வைத்து வாழ்வில் முன்னேறி விடுவார்கள்.


-பூஜ்யஸ்ரீ  பரமஹம்ச நித்தியானந்த ஸ்வாமிகள் 



*ச.பா.ப 

(சமீபத்தில் பார்த்த படம்)- Orphan 




கேதே மற்றும் ஜான் தம்பதிக்கு  மூன்றாவது பெண் குழந்தை இறந்தே பிறக்கிறது. இதனால் கேதே மனமுடைகிறாள். அவர்களது மற்றொரு (இரண்டாவது) பெண் குழந்தையும் (மேக்ஸ்)பேச முடியாமலும்  சரியாக காது கேட்காமலும் இருக்கிறது. இன்னொரு பையன் பெயர் டேனியல்.

தம்பதி, தங்களுக்கு நேர்ந்த துயரத்தை மறக்க வேண்டி, அகதிகள் முகாமில் இருக்கும்  எஸ்தர் என்ற ஒரு ஒன்பது வயது பெண் குழந்தையை தத்து எடுக்கிறார்கள். ஜானுக்கு அந்த சிறுமியை மிகவும் பிடித்து விடுகிறது.. .எஸ்தர் வீட்டுக்கு வந்ததும் அவளை மேக்ஸ்ஸும்  ஆர்வமுடன் வரவேற்று அக்காவாக ஏற்றுக் கொள்கிறாள்.ஆனால் டேனியலுக்கு எஸ்தரை ஏனோ பிடிக்கவில்லை. 

எஸ்தர்,  வீட்டிலும் பள்ளியிலும் ஒரு புதிரைப் போல இருக்கிறாள்; யாருடனும் அதிகம் பேசாமல் தனித்தே இருக்கிறாள்; விநோதமாக சாப்பிடுகிறாள்; பெற்றோர்கள் அன்னியோன்னியமாக இருக்கும் போது எட்டிப் பார்க்கிறாள். குழந்தைகள் சேர்ந்து விளையாடும் போது , எஸ்தர் ஒரு குழந்தையை மேலிருந்து தள்ளி விட்டு விடுகிறாள்; தான் அப்படி செய்யவே இல்லை என்று வாதிடவும் செய்கிறாள்.தன் காப்பகத்திலிருந்து வந்த சிஸ்டர் ஒருவரை காரில் கொடூரமாக கொலை செய்கிறாள். ஸ்கூலில் காரின் பிரேக்கை ரிலீஸ் செய்து உள்ளே உட்கார்ந்திருக்கும்   மேக்ஸ்-ஐ கொலை செய்ய முனைகிறாள். மேக்ஸ், பேச வராததால் எஸ்தரின் சத்தமில்லாத வன்முறைகளுக்கு மௌன சாட்சியாக  இருக்கிறாள்


கேதே, தன் இறந்து போன குழந்தையின் நினைவாக வளர்த்து வந்த பூச்செடியை ஒரு சாடிஸ்ட் போல எஸ்தர் பிடுங்கி விடுகிறாள். இதிலிருந்து, அவளுக்கு எஸ்தர் மீது சந்தேகம் வருகிறது. எஸ்தரின் பின்புலத்தை ஆராய வேண்டும் என்றும் , அவளை மீண்டும் காப்பகத்தில் விட்டு விடுவது நல்லது    என்றும் தன் கணவனிடம் சொல்கிறாள். அவனோ இதற்கு ஒத்துக் கொள்வதில்லை. கேதே, அளவுக்கு அதிகமாகக் குடித்து விட்டு தேவை இல்லாமல் விஷயங்களை கற்பனை செய்வதாக திட்டுகிறான். கணவனுக்குத் தெரியாமல் எஸ்தரின் பின்புல விவரங்களை அறிய கேதே முற்படுகிறாள்.

 ஒருநாள் , மரவீட்டில் வைத்து, எஸ்தர், சிறுவன் டேனியலை கொலை செய்ய முயற்சிக்கிறாள். டேனியல் கீழே விழுந்து மூர்ச்சை ஆகிறான். அவனை கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்ய முயற்சிக்க சின்னப்பெண் மேக்ஸ் அதைத் தடுத்து விடுகிறாள். டேனியல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறான். அங்கும் , எஸ்தர், ஆக்சிஜன் டியூபைப் பிடுங்கி சிறுவனை கொலை செய்ய முயற்சிக்கிறாள். ஆனால் டேனியல் காப்பாற்றப்பட்டு விடுகிறான். கேதேவின் சந்தேகம் வலுத்து விடவே, ஆஸ்பத்திரியில் அவள் எஸ்தரை கோபமாகத் தாக்குகிறாள். டாக்டர்கள் அவளுக்கு ஊசி போட்டு மயக்கமடைய செய்கிறார்கள்.

 வீட்டில், எஸ்தர் செக்ஸியாக உடையணிந்து , குடிபோதையில் இருக்கும் ஜானை மயக்க முற்படுகிறாள்.அவளது மூவை உணர்ந்து கொண்ட ஜான், அவளை கடுமையாக கண்டிக்கிறான்.இதற்கிடையில், ஆஸ்பிடலில் இருக்கும் கேதேவுக்கு ஒரு அழைப்பு வருகிறது. எஸ்தர் , ஒரு மனநல ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்தவள் என்றும், அவள் உண்மையில் குழந்தை அல்ல..அவளுக்கு 33 வயது என்றும், குழந்தை உருவில் வேடமிட்டு, கொடூரமான முறையில்  நிறைய பேரை கொலை செய்வது அவள் வழக்கம் என்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் அவளுக்குக் கிடைக்கின்றன.


கேதே காரில் வீட்டுக்கு விரைகிறாள்.ஜானை போனில் கூப்பிட்டுப் பார்த்தால் லைன் கிடைப்பதில்லை. இதற்குள் சாடிஸ்ட் எஸ்தர் ஜானை வெறியோடு கொலை செய்து விட்டு சின்னப்பெண் மேக்ஸ் -சை கொலை செய்ய துரத்துகிறாள்.இதற்குள் கேதே வீட்டுக்கு வந்து விட , கடுமையான சண்டைக்குப் பிறகு அவள், எஸ்தரை நீரில் அமுக்கிக் கொலை செய்கிறாள்...வழக்கம் போல கடைசியில் போலீஸ் வருகிறது.

[ எஸ்தராக வரும் பெண்ணின் நடிப்பு அருமை. பல கொலைகள் செய்து விட்டு ஒன்றும் தெரியாத பாப்பா போல் நடிப்பது வியக்க வைக்கிறது. ஊமைப் பெண்ணாக வரும் மேக்ஸ் -சின் expression -கள்  அருமை. க்ளைமாக்ஸில் , ஒரு 33 வயது ஸாடிஸ்ட் ஆண்டி, மேக்கப்பின் உதவியுடன் 9 வயது குட்டிப்பெண் போல நடித்து எல்லாரையும் ஏமாற்றி இருக்கிறாள் என்று அறியும் போது சிலிர்ப்பாக  இருக்கிறது]



சில லிமெரிக்குகள் :- 


[சுஜாதா தமிழுக்கு அறிமுகப்படுத்திய இந்த லிமெரிக்குகள்/ஐந்துவரிக் கவிதைகள்   பொருள் ஏதும் பெரிதாய் இல்லாவிட்டாலும் சும்மா   நகைச்சுவைக்கு எழுதப்படுகின்றன..ஆனால் ஒரு விதியை இதில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்...A-A-B-B-A..முதல் வரி, இரண்டாம் வரி, ஐந்தாம் வரி மற்றும் மூன்றாம் நான்காம் வரிகளில்  கடை எதுகை ஒன்றி வர வேண்டும்...

சில உதாரணங்கள்:]


முனுசாமி என்றொரு மனிதன் இருப்பான் 
காட்டில் தினமும் மரங்களை அறுப்பான் 
ஒருநாள் மரம்அவன் உடல்மேல் விழுந்திடும் 
மண்ணில்  புழுதியும் மிகவாய் எழுந்திடும் 
அதுவரை எமனும் அவனுக்காய் பொறுப்பான்..

அவன் ஒரு ரவுடி ; பெயரோ காளி 

அடித்துப் போட்டால் ஆள் அப்பவே காலி 
யாரேனும்  உங்களை டார்ச்சர் பண்ணினால் 
அவனை நீங்கள்  அமுக்கிட எண்ணினால் 
காளியைப் பார்க்கவும்...ஒரு லட்சம் கூலி!

காபி குடிக்கப் போனான் முத்து 

அவனிடம் இருந்ததோ ரூபாய் பத்து 
ஹோட்டலில் வந்த பில்லோ பன்னண்டு 
சர்வர் அவனது சங்கடம் கண்டு 
பரவாயில்லை என்றான் சிரித்து 

சங்கீதம் கற்கச் சென்றாள் கீர்த்தி

பாட்டு வரலை வந்தது ப்ரீதி
வர்ணம் வரலை வந்தது விருப்பம்
தாளம் வரலை வந்தது திருப்பம்
கீர்த்தி இப்போது மிஸ்ஸஸ் .மூர்த்தி

வானத்துக்கு ஏறுது விலைவாசி 

கடப்பாரை விலைக்கு விற்குது ஊசி 
ஆள்பவனும் ஒண்ணு எதிர்ப்பவனும் ஒண்ணு 
அத்தனை பேருக்கும் பணத்திலே கண்ணு 
பலனொன்றும் இல்லை அவர் பேரவையில் பேசி!



*கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு 'திருமதி செல்வம்' சீரியல்  பார்க்க நேர்ந்தது.உடல் இல்லாத ஆத்மாக்களுக்கு ஒரு நாள்ஒரு வாரம்ஒரு மாதம், ஒரு வருடம் எல்லாமே ஒன்று தான் என்பார்கள்இந்த விதி  சீரியல்களுக்கும் பொருந்தும் என்றுதோன்றுகிறது. கதை  இன்னும்  அப்படியே  இருக்கிறது..இன்னும் பழையபடி,பாக்கியம் நந்தினிக்கு  ரோட்டோர டெலிபோன் பூத்தில் இருந்து போன் செய்து 'நந்தினி, திரும்பவும் செல்வம் அர்ச்சனா கிட்ட போயிடுவான்  போல  இருக்குகவனமா இரு.. நேத்து சூப்பர் மார்கெட்ல வாசுவும் ரேவதியும்..."  என்கிறாள். Oh  god !  ஒரே ஒரு மாற்றம் என்ன என்றால் அர்ச்சனா  கால்டாக்சி  டிரைவர் கி  இருக்கிறாள்.அவ்வளவு தான். சரி.. நம்முடைய சீரியல்கள்  ரொம்பவே  பின் தங்கி இருக்கின்றன.சிநேகிதி   புருஷனை  காதலிப்பது, அக்கா  புருஷனுக்கு ரூட் போடுவதுதம்பி மனைவிக்கு  நூல் விடுவது என்று ...இந்த முறை தவறிய காதலில் இன்னும் இன்னும் நிறைய வெரைட்டி  இருக்கிறதுஇதையெல்லாம் வைத்து  சீரியல் எடுத்தால் ரொம்பவே சுவாரஸ்வயமாக இருக்கும்! :P , 

உதாரணமாக 

மாற்றுத் திறனாளிகள் மீது மட்டுமே ஏற்படும் ஈர்ப்பு 

சிலைகள் மேல் காதல் கொள்ளுதல் (இவர்களுக்கு கமல் சொல்வது போல 'ஜவுளிக் கடை பொம்மையை பார்த்தால்  மனதுக்குள் கவுளி கத்தும்)

எந்திரங்கள் மீது காதல் கொள்ளுதல்..(ஒரு ஆசாமி தன் காருடன் உறவு கூட வைத்துக் கொள்கிறானாம்) (ரோபோ படத்துக்கு அப்படியே ஆப்போசிட்)

தன்னை குழந்தையாக உருவகித்துக் கொண்டு மற்றவர்கள் குழந்தை போல் தன்னை கொஞ்ச வேண்டும் என்று ஏங்குதல் 

பயங்கர குண்டாக இருப்பவர்கள் மேல் காதல் கொள்ளுதல். 

உடலின் ஒரு குறிப்பிட்ட பாகத்தை மட்டும் காதலித்துக் கொண்டாடுதல்.. உதாரணம் foot fetish செல்லமாக இதை 79 என்று அழைப்பார்கள் :P 

 சேப்பியோ செக்ஸுவல் : அறிவினால் ஈர்க்கப்படுதல்...இவர்களுக்கு  ஆள்  எத்தனை அசிங்கமாக இருந்தாலும் பரவாயில்லை. . சேக்ஸ்பியர் சானெட் ஒன்று சொன்னால் அப்படியே விழுந்து விடுவார்கள்.

விலங்குகள் , இறந்த உடல்கள் மேல் ஈர்ப்பு கொள்ளுதல் 

தாவரங்களை பாலியல் ரீதியாக காதலித்தல் (?) - காதலியை தான்  பூவே , மலரே , கொடியே என்று வர்ணிப்பார்கள்.. இவர்களுக்கு பூ  தான்  காதலி.

உயிரற்ற பொருள்களை (நாற்காலி, கட்டில், மெத்தை, கதவு ...) மனதாரக்  காதலித்தல் ..!

well , கடவுள் மீது காதல் கொள்வது, மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றக் கனாக்காண்பது போன்றவை இந்த முறைதவறிய காதலில் வருமா என்று தெரியவில்லை..சிலர் வரும் என்கிறார்கள்..
வீர வைஷ்ணவர்கள் என்னை அடிக்க வராதிரும்...
இந்த மாதிரி இருப்பவர்களுக்கு வழக்கமான, traditional  ஆன  'நலம்  நலமறிய ஆவல்' என்று காதலனும் காதலியும் கர்நாடகத் தனமாக  லெட்டெர் போட்டுக் கொண்டு காதலிப்பதைப்பார்த்தால் வாந்தி வந்துவிடும்.


 * தற்போது ஆங்கிலத்தை எழுதும் முறையில் நிறைய பேர் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்...சீக்கிரமே சில மாற்றங்கள் வரலாம். உதாரணமாக cell phone என்பதை சுருக்கி selfon என்று எழுதப் போகிறார்கள். clear , clean , cricket என்பவைகளை klear , klean ,kriket என்று எழுதுவார்கள். ph என்பதை முழுக்க f என்று மாற்றலாம்.. உதாரணம் physics = fysics ,
சொற்களில் சத்தம் இல்லாத எழுத்துகளையும் , repeat  ஆகும்  எழுத்துகளையும் எடுத்து விடுவார்கள். 'gave you a grave ' என்பதை 'gav you a grav' என்று எழுதினால் போதும். island என்பதை iland !   'th' என்பது 'z ' ஆல் மாற்றப்படும்...இந்த மாற்றங்கள் யூரோப்பில் இருந்து                  தொடங்கலாமாம்...  பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு ஆங்கிலம் இப்படி எழுதப்படலாம்.


 Zer vil be no mor trubl or difikultis and evrivun vil find it ezi TU understand ech oza. Ze drem of a united urop vil finali kum tru.




விஜய் டி .வி பக்தித் திருவிழாவில் இளம்பிறை மணிமாறன் கம்ப ராமாயணம் பேசுகிறார். அலட்டிக் கொள்ளாமல் உணர்ச்சி வசப்படாமல் தெளிந்த நீரோட்டம் போன்ற பேச்சு... சில பேர் மேடையில் கம்ப  ராமாயணம் பேசினால் ஏதோ தான் சொல்லிதான்  கம்பரே   ராமாயணம் எழுதியது  போல் ஆவேசமாகப் பேசுவார்கள்!


அனுமானுக்கும் சீதைக்கும் நடக்கும் உரையாடல்கள் சுவாரஸ்யம்..

பார்த்தால் ஏதோ பழம் பறித்துத் தின்னும் குரங்கு போல் இருக்கிறதே ; இது எப்படி கடலைத் தாண்டியது என்று சீதைக்கு சந்தேகம்...என்னடா ராவணன் கீவணன் மாயவேலை செய்கிறானா என்று "ஐய! நீ அளப்ப அரும் அளக்கர் நீந்திலை எய்தியது எப் பரிசு?" என்று கேட்கிறாள்..

நாமாக இருந்தால் பரக்காவெட்டி போல , 'நான் தான் கடந்தேன்,உனக்கு ஏன் நிரூபிக்க வேண்டும் ? நம்புவதென்றால் நம்பு' என்று சொல்லி இருப்போம்... அவன் அனுமான், அல்லவா? "உன் ஒரு துணைவன் தூய தாள் ஒருங்குடை உணர்வினோர், ஓய்வு இல் மாயையின் பெருங் கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல், கருங் கடல் கடந்தனென், காலினால்' "---உன் கணவன் பாதம் பற்றுபவர்கள் பிறவிப் பெருங்கடலையே கடக்கிறார்கள்; இந்த கடல் என்ன பெரிய? ஜுஜுபி என்று அழகாக பதில் சொல்கிறான்.ஓய்வு இல் மாயை! கடவுள் அலகிலா விளையாட்டுடையவன் என்றால் மாயையும் அவனுக்கு சற்றும் சளைக்காமல் ஓய்வில்லாமல் தன் வேலையை செய்கிறது போலும்!

அதெல்லாம் சரி தானப்பா , [இவன் யாரு என் ராமனை புகழ்ந்து பேச என்று ஒரு சின்ன possessiveness!] பிசிக்ஸ் சரியாக வரலையே, பார்த்தால் குட்டியூண்டு இருக்கிறாயே  "இத் துணைச் சிறியது ஓர் ஏண் இல் யாக்கையை; தத்தினை கடல்; அது, தவத்தின் ஆயதோ? சித்தியின் இயன்றதோ? செப்புவாய்என்று மேலும் கேட்கிறாள்...பெண்களுக்கு எப்போதுமே சந்தேகம் தான்...[கொரியர் கொடுக்க ஆள் வந்தால் பாட்டி அவனைப் பார்த்து 'ஏம்பா, யூனிபார்ம் இல்லையே! என்பாள்!] .சரி பேசி இனி வேலைக்கு ஆகாது என்று அனுமன் பிறகு தன்  விஸ்வரூபம் காட்டுகிறான். சொல்லால் நிரூபிக்க முடியாமல் போனால் செயலால் நிரூபிக்க வேண்டும்! 



ஓஷோ ஜோக்:


டாம் தினமும் ஆபீசுக்கு லேட்டாக வந்தான். காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது தான் அவனுக்கு பிரச்சினை...ஒரு நாள் டாக்டர் ஒருவரிடம் சென்று சீக்கிரம் எழுந்திருப்பதற்கு மாத்திரை வாங்கி வந்தான். 

பிறகு, அடுத்த நாள் சீக்கிரம் ஆறு மணிக்கே எழுந்து கொண்டான்... உற்சாகமாக குளித்து முடித்து டிபன் சாப்பிட்டு எட்டு மணிக்கெல்லாம் ஆபீசுக்கு சென்று மேனேஜர் முன் பெருமையாக நின்றான்.."பாருங்கள், நான் சீக்கிரமாக வந்து விட்டேன்" என்றான்.

"அது சரிப்பா, ஆனா நேத்து பூராம் எங்கே போயிருந்தே"? என்றார் மேனேஜர்...

சமுத்ரா 

  


8 comments:

Katz said...
This comment has been removed by the author.
Katz said...

அத்தனையும் அருமை. ஜோக் மட்டும் வழக்கம் போல சிரிப்பு வரவில்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

ஐந்துவரிக் கவிதைகள் அருமை...

HVL said...

குழந்தைகளைப் பற்றிய (மனிதனின்) கருத்துகளில் சில உண்மையோ என்று பயமாய் இருக்கிறது.
மூன்று விதமான மனிதர்கள் சுவாரஸ்யம். நான் சில நேரங்களில் எருமை, சில நேரங்களில் குதிரை.
ச.பா.ப
பார்க்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.
லெமெரிக் நெடு நாட்களுக்கு முன் படித்தது. முனுசாமி லெமெரிக்கை ரசித்தேன்.
சீரியல் வழி மொழிகிறேன்.

VENTURER said...

உங்க குழந்தைங்க மேல உங்களுக்கு நிறைய வெறுப்பு உண்டாயிருக்குமோ?? வழக்கம்போல் இந்த பகுதியும் அருமை!!!!

Sathyaseelan said...

நண்பரே ! என்னைக் கவர்ந்தது Orphan பட விமர்சனமும், கவிதையும் !
புதியதாய் தெரிந்த கொண்ட உணர்வு.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Caricaturelives said...

அருமை...

ம.தி.சுதா said...

அருமையாக இருந்ததைர ரசித்துப் போகிறேன்