இந்த வலையில் தேடவும்

Thursday, March 21, 2013

Recursion - சிறுகதை

வணக்கம்..
[ஒரு புதிர்:

ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவர் அந்த நிறுவனத்தின் வரவேற்பறையில் அதன் மினியேச்சர் மாடல் ஒன்றை வைக்க விரும்பினார். இஞ்சினியரை அழைத்து ' மாடல் அச்சு அசல் அப்படியே நிஜ கம்பெனி எப்படி இருக்கிறதோ அப்படி இருக்க வேண்டும். மீட்டிங் அறைகள், பேன்ட்ரிகள் , ரெஸ்ட் ரூம்கள் , மாடிப்படிகள், கேண்டீன் ,பர்னிச்சர் , ஏன் ஒரு சின்ன  தீயணைப்பு கருவி கூட மினியேச்சரில் அப்படியே இருக்க வேண்டும்.' என்றார் .இஞ்சினியர் சிறிது நேரம் யோசித்து விட்டு 'அப்படியானா அது சாத்தியம் இல்லை சார்' என்று சொல்லி விட்டு சென்று விட்டார்....ஏன்?
note: it's not an Engineering limitation ]


ஒரு விதத்தில் பார்த்தால் இது ஒரு கதை அல்ல. ஆனாலும் இதை கதை என்றே அழைப்போம். (?!) ஒரு கதை தன்னைத் தானே எழுதிக் கொள்ளுமா என்று எனக்குத் தெரிய வேண்டும்.  ஒரு, நல்ல கதை என்பது தன்னைத் தானே எழுதிக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்..எனவே அதை சோதித்துப் பார்த்து விடுவது என்று முடிவு செய்து  விட்டேன். கதை எழுதுவதில் இரண்டு அணுகுமுறைகள் உள்ளன என்று நினைக்கிறேன். ஒன்று  fixed memory allocation ..கதை என்ன, பாத்திரங்கள் யார் யார், சுமதி எத்தனையாவது அத்தியாயத்தில் செத்துப் போக வேண்டும் , ஜெயந்தி எப்போது யாருடன் ஓடிப் போக  வேண்டும், என்று தொடக்கத்தில் இருந்து முடிவு வரை எல்லாம் தீர்மானித்து பின்னர் பிள்ளையார் சுழி போடுவது.. இன்னொன்று dynamic memory allocation ..எந்த ஐடியாவும் இல்லாமல் கதையை தொடங்கி மனம் போன போக்கில் எப்படி எப்படியோ கதையை நகர்த்திக் கொண்டு செல்வது! நான், இது இரண்டும் இல்லாமல் ஒரு கதை தன்னைத் தானே நகர்த்திச் செல்லுமா என்று அறிந்து கொள்ளவே இந்தக் கதையை எழுதுகிறேன்..அல்லது இந்தக் கதை என் மூலமாக தன்னை எழுதிக் கொள்கிறது.

நான் ஒரு ஸோ கால்ட் எழுத்தாளன்.  எனக்கு இந்த தமிழ் கூறும் நல்லுலகில் அங்கீகாரம் , விருது ப்ளா ப்ளா இவை எல்லாம் ஒரு இழவும்   வேண்டாம் ..உண்மையில், பணம் கிடைத்தால் போதும். ஏதோ எழுத்தை விற்று ஓரளவு வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. சாராசரியான வாராந்திரப் பத்திரிகை ஒன்றில் 'வாரம் ஒரு சிறுகதை' என்ற தலைப்பில் வாராவாரம் ஏதோ ஒரு சுமாரான சிறுகதையை எழுதி ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறேன். எல்லாமே எனக்கு சராசரியாக அமைந்து விட்டது. மனைவி உட்பட! உலகில் தொண்ணூறு சதவிதிகம் பேர் இப்படித் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சராசரி பத்திரிகையில் சராசரி சிறுகதை, சராசரி வருமானம், சராசரி வீடு எக்ஸ்செட்ரா . அவ்வப்போது அரிதாக வாசகர் கடிதங்கள் ஒன்றிரண்டு வரும், பாராட்டி! Sir, you are awesome...I read your story last week...!அது எல்லாம் எனக்கு வேண்டும் என்பதும் இல்லை. முன்னே சொன்னபடி சரியாக பணம் வந்தால் போதும்..வாரம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் ..போதுமே! மகளின் எல்.கே.ஜி...பீஸுக்கு  வெந்நீரில் தண்ணீர் என்று உபயோகமாய் இருக்குமே!

இந்த வார கோட்டாவிற்கு என்ன கதை எழுதி அனுப்புவது என்று தெரியவில்லை. குடும்பக் கதை, பேய்க் கதை, அறிவியல் புனைவுக் கதை , பாப்பா கதை என்று எல்லாம் எழுதியாகி விட்டது. இது சலிப்பான வேலை..ஓரளவு சுவாரஸ்யமாக கதை எழுத வேண்டும் என்பதால் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. நிறைய படிக்க வேண்டி இருக்கிறது.(சில சமயம் ந்யூஸ் பேப்பரில், போண்டா சுற்றிய எண்ணெய் காகிதத்தில்  கூட கதைக்கான கரு கிடைக்கலாம்). நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. ஏன் , டி .வி. சீரியலைக் கூட ஒன்று விடாமல் பார்க்கிறேன்.நாதஸ்வரத்தில் ராகினி தன் புருஷனை அடித்து விட்டு அம்மா வீட்டுக்கு வந்து விட்டாள் என்பது வரை அப்டேட்டட் -ஆக இருக்கிறேன். குடும்பத் தலைவிகளுக்கான பத்திரிகை ஒன்று என்னிடம் ஒரு குடும்ப அழுகாச்சி  தொடர்கதை ஒன்றை எழுதித் தருமாறு கேட்டுள்ளது. ஆகா, சரி என்று சொல்லி விட்டேன். அதை எழுத மூளை தேவையே இல்லை..ஒரு அப்பாவி மருமகள், அரக்கி மாமியார், இரண்டு பேரிடம் சிக்கித் தவிக்கும் கணவன் + ஒரு சொட்டைத்தலை மாமனார் என்று நான்கு பேர் இருந்தாலே நான்கு மாதம் கதையை நகர்த்தி விடலாம் பாருங்கள்.

எனவே யோசித்து யோசித்து சலித்து விட்டது. கதையே , இந்த முறை நீ உன்னை நீயே எழுதிக் கொள் என்று சொல்லி விட்டேன்...கீ போர்டில் விரல்களை ரெடியாக வைத்துக் கொள்வது மட்டுமே என் வேலை; மற்றபடி உன்னை நீயே உருவாக்கிக் கொள் என்று சொல்லி விட்டேன்.இந்த நிமிடம் வரை கதை யாரைப் பற்றியது, எதைப் பற்றியது, கதா நாயகன் யார்?.. கார்த்தியா கந்த சாமியா அல்லது நானேவா? கதா நாயகி யார் ? மாலதியா மகேஸ்வரியா , கள்ளக் காதல் வருமா , பெண்களின் அங்கங்களை வர்ணிக்கும் சொற்றொடர்கள் வருமா, கெட்ட வார்த்தைகள் வருமா, பிராமண  பாஷை வருமா , கதையில் கடவுள் வருவாரா , ராஜா யாராவது வருவாரா? கொலை விழுமா , டீன் ஏஜ் காதல் இருக்குமா , பிக்சன் இருக்குமா,துப்பறிதல் இருக்குமா, ஒன்றும் தெரியாது. ஆமாம், எனக்கு எப்படித் தெரியும், கதைக்குத் தான் தெரியும்!

கதை ஒன்று மனிதனின் கற்பனைக்கு எப்படி எல்லாம் தீனி போடுகிறது! ஒரு கட்டுரை எழுதுவதை விட கதை எழுதுவது சுலபம்..தான் சொல்ல வருவதை கதாபாத்திரம் மூலம் சொல்லி விடலாம். நம் மனதுக்குள் ஒளிந்திருக்கும் வினோத பெர்வர்ஷன்களை கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தலாம். பிறகு பழியை அந்தக் கதாபாத்திரத்தின் மேல் போட்டு விடலாம்.ஆம்..கதை ஒரு வடிகால்..

சரி. பேசியது போதும்...என் கதையின் வசம் என்னை நான் ஒப்படைக்கப் போகிறேன். ஏனென்றால் வெற்று மூங்கில் வழியே தான் சங்கீதம் பிறக்கும்.. கதை தன்னை எழுதும் போது நான் இருக்கக் கூடாது..கதை என்னை பயன்படுத்தும் போது நான் முற்றிலும் மறைந்து விட வேண்டும்.இது தான் உயரிய இசைக் கலைஞர்கள் சிலரின் அனுபவமாம்.
இசையை மெய் மறந்து பாடும் போது ஒரு கட்டத்தில் இசை மட்டுமே இருந்து தாங்கள் மறைந்து விட்டதை உணர்வார்களாம் .வாலி ஸ்டைலில் சொல்வதானால்

இசைக்கு -
பிறப்பிடம் அல்ல என் தொண்டை 
மூளை அன்று ..அது வெறும் மண்டை
இசையை
இயற்றவில்லை என் நாக்கு
என் மூலம் இசை வர
அது வெறும் சாக்கு!

சரி,சரி  நான் இருக்கக் கூடாது..கதை தன்னை எழுத ஆரம்பித்து விட்டது.
உஷ், உஷ், அப்புறம் பேசலாம்...BFN ..

அட, என்ன ஆச்சிரியம் கதை தன்னை எழுதி முடித்து விட்டதே... ஆகா.. மனிதன் ஓர் ஊடகம் என்பது எத்தனை உண்மை! இதே போல ஒவ்வொரு வாரமும் கதை தன்னையே எழுதிக் கொண்டால் பரவாயில்லை. ஆனால் இது போன்ற அதியச அனுபவங்கள் அபூர்வமாகவே நிகழும் என்று நினைக்கிறேன். அடுத்தவாரம் பெரும்பாலும் நானே கதையை எழுத வேண்டி இருக்கும் :-( கதையை பத்திரிகை ஆபீசுக்கு இ -மெயிலில் அனுப்பியும் விட்டேன்..சரி.. போய் வருகிறேன்..

என்ன?? கதையை உங்களுக்குக் காட்ட வேண்டுமா? முடியாதே பாஸ்.. சிறுகதை , பத்திரிகையில் வரும்வரை அதை லீக் செய்யக் கூடாது என்று எனக்கு அவர்கள் கண்டிஷன் போட்டிருக்கிறார்கள்.. கதைக்கு ஆயிரம் ரூபாய் தருபவர்களை நான் எப்படி மீற முடியும் சொல்லுங்கள்...

என்ன அடம் பிடிக்கிறீர்கள்.. கதையை சொல்லத்தான் வேண்டுமா? முடியாது முடியாது..

வாட்????

சரி.. இவ்வளவு கேட்கிறீர்கள்...ஆனால் முழுக் கதையை சொல்ல முடியாது..என் அவுட் பாக்ஸை திறந்து கதையின் முதல் பத்தியை மட்டும் கொஞ்சம் காட்டுகிறேன்..இதுவரை என்னுடன் வந்த உங்களுக்கு அந்த அளவிலேனும் உபகாரம் செய்யாவிட்டால் எப்படி?இதோ ஹியர் யு கோ..


"வணக்கம்..

ஒரு விதத்தில் பார்த்தால் இது ஒரு கதை அல்ல. ஆனாலும் இதை கதை என்றே அழைப்போம். (?!) ஒரு கதை தன்னைத் தானே எழுதிக் கொள்ளுமா என்று எனக்குத் தெரிய வேண்டும்.  நல்ல கதை என்பது தன்னைத் தானே எழுதிக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்..எனவே அதை சோதித்துப் பார்த்து விடுவது என்று முடிவு செய்து  விட்டேன். கதை எழுதுவதில் இரண்டு அணுகுமுறைகள் உள்ளன என்று நினைக்கிறேன்.
ஒன்று  fixed memory allocation ..கதை என்ன, பாத்திரங்கள் யார் யார், சுமதி எத்தனையாவது அத்தியாயத்தில் செத்துப் போக வேண்டும் , ஜெயந்தி எப்போது ஓடிப் போக  வேண்டும், என்று தொடக்கத்தில் இருந்து முடிவு வரை எல்லாம் தீர்மானித்து பின்னர் பிள்ளையார் சுழி போடுவது.. இன்னொன்று dynamic memory allocation ..எந்த ஐடியாவும் இல்லாமல் கதையை தொடங்கி மனம் போன போக்கில் எப்படி எப்படியோ கதையை நகர்த்திக் கொண்டு செல்வது! நான், இது இரண்டும் இல்லாமல் ஒரு கதை தன்னைத் தானே நகர்த்திச் செல்லுமா என்று அறிந்து கொள்ளவே இந்தக் கதையை எழுதுகிறேன்..அல்லது இந்தக் கதை என் மூலமாக தன்னை எழுதிக் கொள்கிறது...."

~ சமுத்ரா 

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா.... ஹா.... இது ஒரு தொடர்கதை ஆகவில்லை... சந்தோசம்... வாழ்த்துக்கள்...

G.M Balasubramaniam said...


ஆஹா..! இது நான் என் பேரக்குழந்தைகளுக்குச் சொல்லும் முடிவில்லாக் கதை போல் இருக்கிறதே.”ஒரு ஊர்ல ஒரு அப்பா அம்மாவாம் அவர்களுக்கு ஒரு மகனாம். அவனுக்கு ஒரு குழந்தையாம். அந்தக் குழந்தை தன் தாத்தாவிடம் ‘ ஒரு கதை சொல்லு என்று கேட்குமாம். அந்தத் தாத்தா கதை சொல்லத் துவங்குவாராம்....ஒரு ஊர்ல ஒரு அப்பா அம்மாவாம். அவர்களுக்கு ஒரு மகனாம்..................” இப்படியே போகும் கதை. இது எப்பூடி......?

உஷா அன்பரசு said...

நல்ல 'கதை'...!

Anonymous said...

Arputham...

Anonymous said...

Ennachu.... keela vilundheengala....thalayila adipattuducha?......

Naduvula koncham kadhaya kaanom....

கவிநயா said...

seriously... கதை தானாக எழுதிக் கொள்ளுமா இல்லையா என்று கண்டு பிடித்தீர்களா இல்லையா? :)