இந்த வலையில் தேடவும்

Tuesday, February 12, 2013

கலைடாஸ்கோப் -83

லைடாஸ்கோப் -83 உங்களை வரவேற்கிறது.
'ரேசர்' தெரியுமா? ஜில்லட் அல்ல...ஓக்கம் 'ஸ்  ரேசர் .....(Occum's Razor) ..

சுஜாதாவின் துப்பறியும் கதை ஒன்று... hit and run கேஸ் ஒன்றில் கணேஷ் வசந்த் துப்பறிகிறார்கள்... நடு இரவில் டூ வீலர் ஆசாமியையும் அவனது மனைவியையும் அடித்துவிட்டு சென்று விடுகிறான்...கார் நம்பர் இல்லை..ஓட்டியது ஆணா பெண்ணா ஆவியா தெரியாது..விபத்து நடந்த இடத்தின் மேப்பை வைத்துக் கொண்டு துப்பறிகிறார்கள்..விபத்து நடந்த இடத்துக்கு சற்றே தொலைவில் மூன்று பாதைகள் பிரிகின்றன...கார் வந்த அபார வேகத்துக்கு அது நடுவில் உள்ள நேரான பாதையில் இருந்தே வந்திருக்கவேண்டும் என்று ஊகிக்கிறார்கள்...அந்தப் பாதையில் குறிப்பிடப்படும் இடங்களாக ஒரு சினிமா தியேட்டர், ஒரு ரெசிடென்ஷியல் காலனி, மற்றும் ஒரு இன்ஸ்டிட்யூட் ஆகியவை இருக்கின்றன..வசந்த், 'ஆள் சினிமா தியேட்டர் சென்று வந்திருக்கலாம்... என்கிறான்... தியேட்டருக்கு போன் செய்து இரவுக் காட்சி எத்தனை மணிக்கு முடிகிறது என்று கேட்கிறார்கள்...12:30க்கு என்று பதில் வருகிறது..விபத்து நடந்தது ஒண்ணேகால் மணிக்கு..எனவே தியேட்டர் சாத்தியத்தை ஒதுக்கி விடுகிறான் கணேஷ்...'ஆள்தியேட்டருக்கு போய் விட்டு வேறு எங்காவது, நண்பன் வீட்டுக்கோ , சின்னவீடுக்கோ போய் விட்டு விபத்து நடந்த இடத்துக்கு வந்திருக்கலாமே?" என்று வசந்த் கேட்க ,கணேஷ்.. "இல்லை.. ஒரு விஷயத்தை ஊகிக்கும் போது எந்த ஊகம் எளிமையாக இருக்கிறதோ அதை தான் முதலில்  எடுத்துக் கொள்ள வேண்டும்... அதுவே பெரும்பாலும் உண்மையாகவும் இருக்கும்" என்கிறான்...


இதுதான் Occum's Razor...இது அறிவியல்,தத்துவம், கணிதம் என்று நிறைய இடங்களில் பயன்படுகிறது..இயற்கை நிறைய விஷயங்களில் எளிமையை விரும்புகிறதாம்..பாப்பா டிரஸ் எதுவும் போடாமல் பப்பி ஷேமாக பிறக்கிறது...ஒளி எப்போதும் short ரூட்டில் பயணிக்கிறது..(ஆட்டோக் காரர்களுக்கு அப்படியே opposite !) மனித உடம்பு மிகவும் சிக்கலானது என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்....  ஆனால் இன்னொரு கண்ணோட்டத்தில் அது மிகவும் எளிமையானது.. தேவையில்லாத சமாசாரம் ஒன்றும் மனிதஉடம்பில் இல்லை..'உனக்கு தூங்கும் போது  குதிரையின் காலடி சத்தம் கேட்டால் சாதா குதிரையை உருவகம் செய்..வரிக் குதிரையை அல்ல' என்கிறது ஒரு தத்துவம்..."when you hear hoof-beats behind you, think horses, not zebras"

ஒரு கட்டிடத்தை சின்னச் சின்ன செங்கற்களால் கட்டுகிறோம்...அந்த செங்கலுக்கு பெயிண்ட் அடித்து சிங்காரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? [இதனால்தான்  இயற்கை,பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள்களை மிக எளிமையாகவே அமைத்திருக்கும் என்று சில விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்  ...Strings ! நவராத்திரி கொலுவுக்கு பொம்மைக்குடிரஸ் போடுகிறோம். அந்த பொம்மைக்கு பின் பக்கத்தில் ஒன்றும் போடாமல் விட்டு விடுகிறோம். ( அது பார்ப்பவருக்கு தெரியாது என்பதால்) ..எனவே பொருட்கள் அல்லது விஷயங்கள் எவ்வளவு எளிமையாக இருக்கிறதோ அவ்வளவு பயனுள்ளதாக Practical ஆக இருக்கும்  என்கிறது இந்த விதி..

இதன் தொடர்ச்சியாக KISS என்பதை சொல்கிறார்கள்....Keep It Simple, Stupid (கமாவை கவனியுங்கள்) நாம் நிறைய சந்தர்ப்பங்களில் இந்த kiss தத்துவத்தை மறந்துவிடுகிறோம்..வழ வழா  கொள கொளா என்று சொல்ல வந்த விஷயத்தை விட்டு வேறு எல்லாம் சொல்வோம்.."எஜமானரே, இலங்கைக்கு போனேனா, என்ன ஆயிற்று என்றால்,,,ஆஹா தேவலோகம்... அங்கே மாளிகைகள், அரண்மனைகள், நந்தவனங்கள்  எத்தனை அருமை தெரியுமா?அந்த மாதிரி வனம் ஒன்றில் தான் இந்திர ஜித்தை பந்தாடினேன் கேட்டீரோ?! ராவணனை வென்று நீங்கள் அங்கேயே குடியிருக்கலாம் போங்கள் ...மயன் கைவண்ணம்...அங்கே, அந்த அழகிய நகரத்தில், தங்கள் அருமைஜானகி மாதா " ....இந்த வேலையெல்லாம் அனுமானிடம் நடக்காது... 'கண்டேன் சீதையை' அவ்வளவு தான்...மேட்டர் ஓவர்... அப்புறம் துருவித் துருவிக் கேட்டால்தான் இந்த்ரஜித் மேட்டர் எல்லாம் சொல்லுவார்...'அண்டரும் காணாத லங்காபுரியில்' என்று அனுபல்லவி போட்டு பாகேஸ்வரியில் தேவை இருந்தால் அப்புறம்  பாடுவார்....


'வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒருசார், விண் தோய்,காலையும் மாலைதானும் இல்லது ஓர் கனகக் கற்பச்
சோலை அங்கு அதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய
சாலையில் இருந்தாள் - ஐய! - தவம் செய்த தவம் ஆம் தையல்'  -என்பதெல்லாம் கம்பனின் கற்பனை...

இந்தக் கதையை நீங்கள் கேட்டிருக்கலாம்...

தத்துவ வகுப்பு ஒன்றில், பேராசிரியர் மாணவர்களைப் பார்த்து, 'உங்கள் முன்னே இருக்கும் இந்த நாற்காலி இல்லவே இல்லை' என்று நிரூபியுங்கள் பார்க்கலாம்'என்றார்...மாணவர்கள் அவசரமாக ஆளுக்கு ஒரு குயர் நோட்டு எடுத்துக் கொண்டு தங்களுக்குத் தெரிந்த தத்துவக் கொள்கைகளையெல்லாம் பயன்படுத்தி என்ன என்னவோ எழுதிக் கொண்டிருந்தார்கள்...ஒரு மாணவன் கூலாக ஒரு துண்டுக் காகிதத்தில் 'எந்த நாற்காலி???' என்று எழுதிக் கொடுத்தான்..

Keep it simple!!

ஒரு கவிதை...

நகரத்தில் எங்கோ...


*நகரத்தில் எங்கோ இப்போது 
ஒரு ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது..
யாரோ இரண்டு பேர் 
சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்...
யாரோ இரண்டு பேர் 
பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்..
யாரோ ஒருவர் சாலையோரத்தில் 
கூவி எதையோ விற்றுக் கொண்டிருக்கிறார்.
யாரோ இரண்டு பேர் 
கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்..
எங்கோ ஒரு சவ ஊர்வலம் 
நிகழ்ந்து கொண்டிருக்கிறது..
யாரோ ஒரு பெண் அழுது 
கொண்டிருக்கிறாள்..
ஏதோ ஒரு சாமிக்கு 
அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது..
ஏதோ ஒரு பேருந்து 
பிதுங்கி வழியும் கூட்டத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது..
யாரோ ஒருவருக்கு அறுவை சிகிச்சை 
நடந்து கொண்டிருக்கிறது...
யாரோ ஒருவர் குடிபோதையில் 
தள்ளாடியபடி இருக்கிறார்..
யாரோ ஒருவர் 
தியானமும் செய்து கொண்டிருக்கிறார்...

 -ஆபீஸ் கேபில் போய்க் கொண்டிருந்த போது  ரேடியோவில் 'முந்தே பன்னி எல்லா முந்தே பன்னி ' என்ற கன்னடப்  பாட்டு வந்தது... படம் 'பெங்கியல்லி அரளித ஹூவு ' (நெருப்பில் மலர்ந்த மலர்) ..தமிழில் வந்த 'அவள் ஒரு தொடர்கதை' யின் ரீமேக்...சுஹாசினி நடித்தது..படத்தில் கண்டக்டராக வரும் கமல்ஹாசன் இந்தப் பாட்டைபாடுகிறார்...ஒருத்தரைப் பார்த்து 'முன்னாடி வாங்க , முன்னாடி  வாங்க' என்று முழு மனதுடன் சொல்வது பஸ் கண்டக்டர் மட்டும்தானாம்..மற்றவனெல்லாம் நம்மை எப்படிடா'பின்னுக்குத் தள்ளுவது' என்று பார்த்துக் கொண்டிருப்பானாம்...btw , இப்போது அவன் ஒரு தொடர்கதை என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்...ஏன் என்று யோசியுங்கள்...

* பேஸ் புக்கில் உங்கள் நண்பர்கள் எவ்வளவு பேர்? என்னது ரெண்டாயிரமா? no comments ...சரி...800 ஆ? பெரிய ஆள்தான் நீங்கள்...ஆனால் வெயிட்...டன்பர் நம்பர் (Dunbar's number)என்று ஒன்று இருக்கிறது..அதன் படி ஒரு மனிதனால் அதிகபட்சம் 150 பேருடன் தான் சிறந்த படி social relationship சமூக உறவை மேற்கொள்ள முடியுமாம்...என்னது 150 ரொம்ப அதிகம் என்கிறீர்களா? அது என்னவோ உண்மை தான்..நம்முடன் ப்ரி கேஜியில் இருந்து படித்தவர்களை எல்லாம் சேர்த்தால் 150க்கு அதிகமாகவே வந்துவிடும்...அனால் அதில் எத்தனை பேருடன் contact இல் இருக்கிறோம்? மூன்று,  நான்கு? அதிகபட்சம் 15??? அவ்வளவு தான்... நிறைய பேரின் பெயர் கூட மறந்து போய்விட்டது..எட்டாம் வகுப்பு annual பரிட்சையின் போது இங்க் தீர்ந்து முழித்துக் கொண்டிருக்கையில் நமக்கு பேனா கொடுத்து உதவிய ஆபத்பாந்தவன் பெயர் என்ன?...மறந்துவிட்டதே...

உலகத்தையே தனதாக்கிக் கொண்டு தொடங்குகிறது மனிதனின் வட்டம்...கடைசியில் அது குறுகிக் குறுகி  , நண்பர்கள் குறைந்து , உறவுகள் குறைந்து, கடைசியில் மகன்கள் கைவிட்டு மனைவியுடன் ஏதோ ஒரு நகரத்தின் 2bhk யில் ஒதுங்கி,, தான் தன்  மனைவி என்று குறுகி, பிறகு படுக்கையில் 'நான் மட்டும் தான் உலகம்' என்ற அளவுக்குசிறுத்து,பின்  புள்ளியாய் மறைந்து போய் விடுகிறது மனிதனின் வட்டம்...

* சில சமயம் கணவன் மனைவி இரண்டு பேரும் ஒரே முக அமைப்புடன் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? சமீபத்திய ஆய்வு ஒன்று, ஒருவர் கிட்டத்தட்ட தன்னுடன் உருவ ஒற்றுமை உள்ளவரையே வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தேடுப்பார் என்று சொல்கிறது..அப்புறம் இதையும் யோசித்துப் பாருங்கள்...குழந்தைகள் எப்போதும் அவர்களது பெற்றோரை விட ஒரு படி அழகாக இருக்கிறார்கள்...இப்படியே பார்த்தால் எதிர்காலத்தில் ஒருநாள் எல்லாரும் அழகாகி விடுவார்களோ?...:) கூகிள் இமேஜ் செர்ச்சில்'ஐஸ்வர்யா ராய்' என்று தேட அவசியமே இருக்காது...

Love is an overused word and an under-lived experience - Nandita Das


காதலர் தினம் வருகிறது..காதல் முக்கோணம் என்ற ஒன்றை சொல்கிறார் மனவியல் நிபுணர் ராபர்ட் ஸ்டென்பெர்க் ...(Robert Sternberg) வெற்றி கரமான காதல் என்பது கீழ்க்கண்ட முக்கோணத்தை பூர்த்தி செய்ய வேண்டுமாம்..[சினிமாவில் காட்டும் முக்கோணக் காதல் என்பது வேறு!]

Intimacy  - நெருக்கம் , அன்னியோன்னியம்

Passion  - பற்று, இச்சை ,ஆசை  whatever

commitment  - ஈடுபாடு

முதலில் நெருக்கமாக தொடங்கும் எந்த ஒரு காதலும் பின் இச்சை, ஈடுபாடு என்று வளர்ந்து advance ஆகிறது...தொடர்கிறது... இது மூன்றும் ஒரே சமயத்தில் நீண்டகாலத்துக்கு இருக்கும் காதல் அரிது..இதை  தான் கமல் தெய்வீகக் காதல் என்கிறாரோ  தெரியவில்லை..அபிராமிக்கே வெளிச்சம்...அடிக்கடி 'நாங்க சும்மா friends தான்..நெருக்கமா தான் இருக்கோம், ஆனா just  friends தான் ' என்று 'தோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்' என்று பாடுவதும் காதலின் ஒரு வகை தான் ...வெறும் இச்சை மட்டுமே இருந்தால் அதற்கு பெயர் என்ன என்று உங்களுக்குத் தெரியும்..இன்று இருக்கிற காதல்களில் 75% இப்படித் தான் இருக்கின்றன... 'நீ தான் என் மூச்சு' 'நான் என்று சொன்னாலே நான் அல்ல நீ தான்' 'நீ இல்லாமல் நான் இல்லை' 'வெய்யில்ல ரொம்ப அலையாதடா செல்லம்' 'What my angel is doing?' என்று தினம் நூறு எஸ்.எம்.எஸ். ...நாற்பது கால் செய்து கொண்டு பின்னர் இச்சை தீர்ந்ததும் 'I'm too busy  now a days dear' என்று ஒரே எஸ்.எம்.எஸ். உடன் முடித்துக் கொள்வது.(அப்புறம் நம்பர் மாற்றி விடுவது!)இதில் சேரும்..வெறும் commitment மட்டுமே இருப்பதற்கு 'empty love 'என்று சொல்கிறார்கள்..கல்யாணத்துக்கு அப்புறம் நிறைய காதல்கள் இப்படித் தான் இருக்கின்றன..கீழே உள்ள வென் வரைபடத்தில் இதைப் பார்க்கலாம்..
மேலும், காதல் பித்துக்களை பல வகைகளில் பிரித்திருக்கிறார்கள்...

EROS : அழகுப் பைத்தியம்: 'முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது' என்ற டைப் இவர்கள்...'அவ கிட்ட ஏதோ இருக்கு மச்சான்' என்பார்கள்... கெமிஸ்ட்ரி யில் நம்பிக்கை உள்ளவர்கள்...அழகை ஆராதிப்பவர்கள்... முதன்முறை பார்த்ததும் madras  eye போல தொற்றிக் கொள்ளாவிட்டால் அது லவ்வே இல்லை என்பார்கள்..

LUDUS : ஆட்டக்காரன்: காதலே இவர்களுக்கு ஒரு விளையாட்டு தான்...டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்சு பொண்ண காதலி...தாவணி போனா சல்வார் உள்ளதடா என்றடைப்...ஆம்...காதல் ஒரு கடலு மாரி ...வாழ்க்கையோ குறுகியது..பின்னர் ஏன் 'சர்க்கரை நிலவே ' என்று தாடி வளர்த்துக் கொண்டு பேண்ட் ஜோபில் கை வைத்துக்கொண்டு பாடிக் கொண்டு டம்பளருக்குள் நீச்சல் அடிக்க வேண்டும்?

STORGIC : நண்பன்: பெண்களை பொதுவாக இந்த ஜாதியில் சேர்க்கலாம்.. 'இல்லை இன்னும் உன் மேல எனக்கு லவ் வரலை..டைம் வேணும்.. இது இன்னும் friendship தான் என்பார்கள்..காதல் வந்தாலும், நட்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாது....break ஆன பின்பு கூட ஒருநாள் எதிர்பாராமல் 'hi how are you? remember me?'என்று மெசேஜ்வரும்.. மீண்டும் காதல் விதை துளிர்த்து விட்டது என்று நம்  பையன் உணர்ச்சிவசப்பட, அவர்கள் ,சும்மா 'as a friend, I asked' என்று நட்புப் புராணம் பாடுவார்கள்...

PRAGMA : வியாபாரி: காதலில் கூட கணக்கு பார்ப்பவர்கள்...மாலாவை கல்யாணம் பண்ணிட்டா லைப் நல்லா இருக்குமா? ஷீலாவை பண்ணிக்கிட்டா நல்லா இருக்குமா? என்று தூங்கும் போது கூட கணக்கு போடுபவர்கள்...மறுபடியும் இதில் பெரும்பாலும் பெண்களே வருகிறார்கள்...
MANIC : மிகை: காதலை ரொம்பவே சீரியஸாக பார்ப்பவர்கள்..possessive ...சந்தேகம் ..போனில் யாருடனாவது கொஞ்ச நேரம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தால் அடித்து துன்புறுத்தவெல்லாம்  மாட்டார்கள்..பதிலுக்கு கண்ணீருடன் , 'நான் உனக்கு கசந்து போயிட்டன்ல ,,யாரு அது புது ஆளு? ' என்று சீன் காட்டுவார்கள்...


AGAPE : பக்தன்: காதலுக்கு இருவரும் சம தளத்தில் இருக்க வேண்டும் என்பதில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை...காதலியை ஒருபடி உயர்த்தி சாட்சாத் 'பராசக்தி' ரேஞ்சில் பாவித்து தினமும் பூஜை செய்பவர்கள்.. 'நான் உன் பக்தன்' 'நான் உன் அடிமை' 'நான் உன் தாசி' என்றெல்லாம் ஓவராக உருகுபவர்கள்...
இதில் நீங்கள் எந்தத் டைப்? அல்லது ரஜினி போல உங்கள் வழி தனி வழியா?

ஷோ ஜோக்...

 இதை இங்லீஷில் சொன்னால் தான் நன்றாக இருக்கும்...

An old man phoned his son-in-law – he had just got married to his daughter – and asked him, ”How are things going?”
The son-in-law said, ”I am sorry to say, sir, but it seems I am married to a nun.”
The old man said, ”What do you mean – ’married to a nun?
The young man said, ”None in the night, none in the morning.”
The old man laughed and he said, ”Now I understand. Then tonight you come for dinner to my home and see the Mother Superior.”

சமுத்ரா


10 comments:

Katz said...

very nice

Maya said...

Excellent write-up. The venn diagram for love is great material!

G.M Balasubramaniam said...


எல்லாமே ரசிக்க வைத்தது.

Anonymous said...

sir neenga sema manda sir

Caricaturist Sugumarje said...

அருமை!
Osho joke... கிழிஞ்சது!!!

குணசேகரன்... said...

அழகான படங்களுடன் அருமையான பதிவுகள். எப்போதும் உங்களால் எப்படி முடிகிறது
முதன் முதலில் உங்கள் பதிவுகளைப் பார்த்தேன். அருமை.. உங்கள் பதிவைப் படிக்க இனி தினமும் வருகிறேன்

இராஜராஜேஸ்வரி said...

Keep it simple!!

devadass snr said...

அன்புடையீர் வணக்கம்
தங்களது இணைய பதிவை இன்றுதான் தற்செயலாக வேறு ஒன்று தேட தங்களது பதிவை படிக்க நேர்ந்தது.
உலகத்தில் சில அதிசயங்கள் தற்செயலாகத்தானே கிடைக்கிறது.
இவ்வளவு நாள் தங்களது பதிவை பார்க்காமல் விட்டது தவறுதான் மன்னிக்கவும்.
மனிதனுக்கு ஏதெல்லாம் தேவையோ அதை மட்டுமே கொடுத்துள்ளீர்கள்.
இணையத்தின் முழு பலனை பெற்று அதனை தாங்கள் சரியான முறையில் உருவாக்கி எங்களுக்குத் தருவது மிகப்பெரிய விசயம்.இதற்காக தங்களது உழைப்பு எவ்வளவு என்பது நன்றாகவேத் தெரிகிறது்.
தங்களது பதிவுகளை எனது மெயிலுக்குத் தர இயலுமா?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
snrmani@rediffmail.com

சந்துரு said...

"சில சமயம் கணவன் மனைவி இரண்டு பேரும் ஒரே முக அமைப்புடன் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? சமீபத்திய ஆய்வு ஒன்று, ஒருவர் கிட்டத்தட்ட தன்னுடன் உருவ ஒற்றுமை உள்ளவரையே வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தேடுப்பார் என்று சொல்கிறது.."அந்த ஆய்வு இருக்கட்டும் ஒரு பக்கம், இப்படி யோசித்துப் பாருங்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையான அன்புடனும் அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் பல வருடங்கள் வாழும் போது ஒருவரின் முகபாவத்தை நோக்கி மற்றவரின் முகம் மாறலாம் அல்லவா இதை பல தம்பதியரின் முகம் கண்ட போட்டோ கிராபர் என்ற முறையில் பதிவிடுகிறேன்

சமுத்ரா said...

அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் பல வருடங்கள் வாழும் போது ஒருவரின் முகபாவத்தை நோக்கி மற்றவரின் முகம் மாறலாம் அல்லவா /- True