இந்த வலையில் தேடவும்

Wednesday, January 30, 2013

கலைடாஸ்கோப்-82

லைடாஸ்கோப்-82 உங்களை வரவேற்கிறது 

“We should consider every day lost on which we have not danced at least once.” ― Friedrich Nietzsche


டனம் என்பதைப் பற்றி  பேசுவோம்....கடைசியாக எப்போது டான்ஸ் ஆடினீர்கள்? நியூ இயர் பார்ட்டிக்கு அபத்தமாக ஆடியதையும் சொல்லலாம் பரவாயில்லை...Dance is a dance..எனக்கும் இதற்கும் ஏனோ எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருந்திருக்கிறது...இரண்டாம் வகுப்பு படிக்கும் போது ஸ்டேஜில் ஏறி 'ஜாடி ஜாடிக்கு மூடி' என்று ஏதோ ஒரு பாட்டுக்கு ஆடி சோப்பு டப்பா ப்ரைஸ் வாங்கியதோடு சரி...அந்த டான்சுக்கு ஸ்டெப்ஸ் அதிகம் இல்லை...கை விரல்களை பூவைப் போல விரித்து 270 டிகிரிக்கு சுழற்ற வேண்டும்..இடது கை இடுப்பில் இருக்க வேண்டும்..கால்கள் முன்னே பின்னே சென்று வர வேண்டும்...அவ்வளவு தான்ஆனால் ஒரு இரண்டாம் வகுப்பு பாப்பாவுக்கு இதுவே அதிகம்...முதலில் என் மீது உள்ள நம்பிக்கையில் முதல் ரோவில் நிறுத்தி இருந்தார்கள்..நமக்கு தான் எப்போதுமே multitasking வராதே? ( கார் ஓட்ட வராது... MT தான் பிரச்சனை....ஒரே சமயம் ரோடைப் பார்க்க வேண்டும்..ஸ்டியரிங் திருப்ப வேண்டும் ...வழியில் மாடோ மகாவிஷ்ணுவோ குறுக்கே வந்தால் ஹாரன் அடிக்க வேண்டும்.. கிளட்சை மிதித்து பிரேக்கை மிதிக்க வேண்டும்...சில சமயம் கிளட்சை மிதிக்காமல் ஆக்சிலரேட்டர் -ரில் இருந்து காலை எடுக்காமல் பிரேக்கை அழுத்தி விடுவேன்...எனக்கு கார் டிரைவிங் சொல்லித் தந்த டிரைவர், சார்....நீங்கள் ஒரு டிரைவரை வைத்துக் கொண்டு பின் சீட்டில் ஹாயாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வருவது தான் சிறந்தது..ஜக்கி வாசுதேவ் மாதிரி  அத்தனைக்கும் ஆசைப்பட்டால் எப்படி ? கார் டிரைவிங் எல்லாம் அடுத்த ஜென்மத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றார்] டான்சில் கையை தானே திருப்ப வேண்டும்? நான் காலை திருப்ப முயன்று கொண்டிருந்தேன்.. பிறகு என்னை விட கொஞ்சம் நன்றாக ஆடிய ஒரு பாப்பாவை முதல் வரிசையில் நிற்க வைத்தார்கள்..[எல்லாருக்கும் கடைசியில் அதே லைட் பச்சை கலர் சோப்பு பாக்ஸ் தான்]. அதற்குப் பிறகு நடனம் என்றாலே அலர்ஜி...காலேஜில் டூர் போகும் போது பஸ்ஸில் ஆட்டம் போட நண்பர்கள் அழைத்த போது ஆடி இருக்கலாம் தான்... ஆடினால் பிரபுதேவா மாதிரி தான் ஆடவேண்டும் என்று விதிகள் இல்லை தான்...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXhjVMH-O9ZE4JAeVI6KGaxAHeTNs34vbQ9uL1OElMp1nfbWw1KmS_2Bx64ybzxQWlYwYdgXgJ1XBCKf2DoKZUsfp7RAs5inl-x-Qp3QN4FyqQ5Pnd6vmRQQVY9SE-Dl-oQQiOS0Kx0IE/s320/shiva_nataraja_chidambaram-6.jpg

'நடனம் ' மற்ற கலைகளை விட ஒரு விதத்தில் ஸ்பெஷல் என்பதை கவனியுங்கள்...ஓவியம் வரைகையில் கைக்கு மட்டுமே வேலை...பாட்டுப் பாடும் போது தொண்டைக்கு மட்டுமே வேலை..[well , சில பேர் பாட்டுக் கச்சேரியா நடனக் கச்சேரியா என்று சந்தேகம் வரும்படி பாடுவதை விட்டு விடுவோம்....அருணா சாய்ராம் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம். தொடையில் தாளம் கொஞ்சம் mild ஆகத் தட்டுங்கள்..சில பக்தி ரசம் ததும்பும் கீர்த்தனைகளின் அழகை  பாடகர்களின் சர்க்கஸ் வேலைகள் கெடுத்து விடும் வாய்ப்பு இருக்கிறது] ஆனால் நடனத்துக்கு உங்கள் முழு உடலும் , புருவங்களில் இருந்து பாதங்கள் வரை ஒத்துழைக்க வேண்டும்... உடம்பின் ஒவ்வொரு செல்லும் ஆட வேண்டும்...இதனால்தான் நடனம் ஒரு  தியானமாக இருந்து வந்துள்ளது.. kind of dynamic meditation...உடல் சுழன்று சுழன்று பயங்கரமாக இயக்கத்தில் இருக்கும்போது , உள்ளே உள்ள அசையாத சூறாவளியின் மையத்தை உணர்ந்து கொள்வது சுலபம் என்கிறார் ஓஷோ..சும்மா இரண்டு பேர் கட்டிப் பிடுத்துக் கொண்டு வெறுமனே 
expression காட்டிக் கொண்டு கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று முன்னே உட்கார்ந்திருக்கும் மாஸ்டர்களை வியக்க வைப்பது மட்டுமே நடனம் அல்ல.. நடனம்  ஒரு தியானம்...

 “You've gotta dance like there's nobody watching,
Love like you'll never be hurt,
Sing like there's nobody listening,
And live like it's heaven on earth.”
― William W. Purkey


 குருட்ஜிப் , நடனத்தை ஒரு  ஞான நிலையின் கருவியாக உபயோகித்தார்... நடனம் ஆடுபவருக்கு மட்டும் அல்ல ...அதைப் பார்ப்பவருக்கும்... குருட்ஜிப், நியூயார்க்கில்  ஆயிரக்கணக்கான ஆடியன்ஸ் முன்பு இந்த நடனத்தை அரங்கேற்றினார்..நூற்றுக்கணக்கில் சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட கலைஞர்கள் மேடையில் ஆடுகிறார்கள்..ஆட்டம் என்றால் அப்படி ஒரு, சுழன்று சுழன்று ஆடும் ஒரு பேயாட்டம்...அந்த சுழற்சி மெல்ல மெல்ல பார்ப்போரையும் தொற்றிக் கொள்கிறது..எத்தனை சுழன்றாலும் ஒருவர் கூட தலைசுற்றி கீழே விழுவது இல்லை...ஆட்டம் உச்ச கட்டத்தை அடையும் ஒரு நிலையில் குருட்ஜிப், STOP என்று கத்துகிறார்.. உடனே நடனம் நிற்கிறது... கலைஞர்கள் எந்த நிலையில் ஆடிக் கொண்டி -ருந்தார்களோ அதே நிலையில் சிலையாகிறார்கள் ...ஸ்டாப் என்றதற்குப் பிறகு ஒரு அசைவு கூட இல்லை....ஒரு கால் மேலே இருந்தால் இருந்தது இருந்த படியே..அந்த நிலையில் நின்றால்  பாலன்ஸ் கிடைக்காமல் விழ நேரிடும் என்றாலும் அவர்கள் அப்படியே வேரற்ற மரம் போல விழுகிறார்கள்..[விழும் போது அதை நாம் எதிர்ப்பதாலேயே காயம் ஏற்படுகிறது என்கிறார்  குருட்ஜிப்...] அப்படி நிற்கும் போது ஆடியன்ஸ் இற்கு ஒரு புது அனுபவம் ஏற்படுகிறது...அவர்களின் மனம், எண்ணங்கள் உடனே நின்று விடுகிறது!!!தியானத்தின் கண நேர தரிசனம் பார்ப்பவர்களுக்கும் கிட்டி விடுகிறது...

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcR_ywtAreH_2rS4A1CWxB1hcUIKzHkxk75roWpQczO_2ZGl9U3Ttw

ந்த 'நிறுத்து' என்ற கட்டளை, நமக்கு நாமே இடும் கட்டளை , சிவாவின் 112 தியான முறைகளில் ஒன்றாம்  ...நாம் எந்த ஒரு செயலையும் உடனடியாக நிறுத்துவதில்லை...கொஞ்ச கொஞ்சமாக ஒருவித நியூட்ரல் கியருக்கு கொண்டுவந்து தான் நிறுத்துகிறோம்...ஆனால் ஒரு விஷயத்தை உடனடியாக நிறுத்தும் போது நமக்கும் நம் உடம்புக்கும் ஒருவித இடை வெளி உருவாக்கப் படுகிறது.. மனம் உடனடியாக நிற்கிறது...பாடகர் ஒருவர் , ஒரு ராகத்தை ஆலாபனை  செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்...அது ஒருவிதத்தில் ஏரோப்ளேன் ஓட்டுவது போல தான்..முதலில் மெதுவாக நகர்ந்து , ரன் வேயில் position செய்து கொண்டு மெல்ல மெல்ல ஓடி momentum கிடைத்ததும் மேலே கிளம்பி , உச்ச வேகத்தில் சஞ்சரித்து மெல்ல மெல்ல கீழே இறங்கி மீண்டும் ஓடி கொஞ்ச கொஞ்சமாக நிறுத்துதல்...இதுதான் procedure ...இங்கே ஒரு பேச்சுக்கு உச்ச ஸ்தாயியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது பாடகர் , for ex : கேதார கௌளை ராகம்..தனா நா....ஆஆஆஅ...ஆஆஆஆஆஆஆ.....STOP .....அங்கே பாடுபவருக்கும் பாட்டைக் கேட்பவருக்கும் மனம் நின்று போகும்...நீங்களும் இந்த தியானத்தை செய்யலாம். பாட வேண்டும் ஆட வேண்டும் என்பதில்லை...குளிக்கும் போது இதை செய்யலாம்...தலைக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும் போது STOP என்று உங்களுக்கு நீங்களே கட்டளை இட்டுக் கொள்ளலாம்...ஆசை, மற்றும் புலன்களின் விஷயத்திலும் இதை பயன்படுத்திப் பார்க்கலாம்... உங்களுக்கு பயங்கர தாகம்..கிச்சனுக்கு செல்லுங்கள்.டம்ப்ளரில் தண்ணீர் நிரப்பிக் கொள்ளுங்கள்..அதை வாயருகே கொண்டு சென்று குடிக்க செல்லும் போது உடனே STOP என்று சொல்லி சிலையாகி விடுங்கள்...தாகம் அப்படியே இருக்கட்டும்...இப்போது உங்கள் மனம் நின்று விடும்....ஏனென்றால் அது தர்க ரீதியானது..தாகம் வந்தால் ஆள் கிச்சனுக்கு சென்று தண்ணீர் குடிப்பான் என்று கணக்கு போட்டுக் கொண்டிருக்கும்...நீங்கள் உடனடியாக நிறுத்தினால்  அதை எப்படி handle செய்வது என்று அது program செய்யப்படவில்லை.


மீபத்தில் படித்த இரண்டு புத்தகங்கள்..:

1. காற்றின் கையெழுத்து...by பழனிபாரதி 

இதில் இருந்து சில கவிதைகள் மட்டும்..

 இத்தருணத்தில் 
போராடவில்லை என்றால்...
எதிரி 
துப்பாக்கியால் நம் உயிரைப் பழிவாங்குவான்...
அதன் பின் -
நம் எலும்பினைக் குத்திக் காட்டி 
இந்த எலும்புகள் எல்லாம் 
அடிமையின் எலும்புகள் என்று 
எக்காளமிடுவான் 

- டியான் சியான் (சீனக் கவிஞன் )


அம்மா.

நம் எல்லாருடைய வாழ்க்கையும் 
ஆயுட்கால சிறைபோல.

நான் அழவில்லை 

இந்தக் கலங்கி வீங்கிய நதியைத் தாண்டி 
நான் உன்னிடம் வந்து சேருவேன்.
நீ விளக்கை அணைத்து விடாதே 
நான் வந்து சேரும்வரை 
நமது வீட்டை 
யாருக்கும் கொடுத்து விடாதே...

-ஆஷாலதா (மலையாளம் )


வேலிகளுக்கு வெளியே 
புழுதியாகவேனும் 
விளையாடக் கிடைத்த 
பூமியின் மடியை 
கல்லறையாகக் 
காயப்படுத்தியது யார்?

உறக்கத்தின் இடத்தில் 
மரணத்தை நிறுத்தி 
இரவின் நம்பகத்தை 
எவர் பறித்தார்கள்?

-இன்குலாப்


யாருடைய கைகளில் பகடைகள் நாம்?

யாருடைய தூண்டில் புழுக்கள் நாம்?
யாருடைய ஆட்டத்தில் ஜெயிக்கிறோம்?
யாருடைய ஆட்டத்தில் தோற்கிறோம் ?

- இளையபாரதி 

நல்லவேளை 

வறுமைக் கோடாவது கிடைத்தது...
இல்லையென்றால் 
இதன் கீழ் வாழ்பவர்கள் 
வேறு 
எதன் கீழ் வாழ்வார்கள் ?

-அப்துல் ரகுமான் 

 இரண்டாவது What Einstein told his barber...

இதிலிருந்து சில சுவாரஸ்யமான கேள்விகள் ...அதில் ஒன்றுக்கு மட்டும் பதிலை பார்ப்போம்..


* நெருப்பு எப்போதும் மேலே தான் போகிறது...அதற்கு எப்படி எது மேலே எது கீழே என்று தெரிகிறது?

*தண்ணீர் நிறம் அற்றது...அது உறைந்து கிடைக்கும் பனி மட்டும் ஏன் வெள்ளை நிறம்?

*  மிக அதிக குளிரில் பனிப் பொழிவு இருக்காதாம்.. ஏன்?

*
உங்களுக்கு கிட்டப் பார்வை இருக்கிறது... அதாவது தூரத்தில் வருவது பசுமாடா பட்டு மாமியா என்பது தெரியாது.. இப்போது நீங்கள் கண்ணாடியில் பார்க்கிறீர்கள்....கண்ணாடியில் தூரத்தில் உள்ள பொருட்கள் தெளிவாகத் தெரிய வேண்டும்.. ஏன் என்றால் கண்ணாடியில் எல்லாப் பொருட்களும் உங்களிடம் இருந்து சமதொலைவில் உள்ளன..ஆனால் கண்ணாடியிலும் தூரத்தில் உள்ளவை மங்கலாகத் தெரிகிறதே...ஏன்?



கேள்வி:

ஒரு நிகழ்வு நடக்குமா நடக்காதா என்று எது தீர்மானிக்கிறது? அதற்கு ஏதாவது விதிகள் இருக்கின்றனவா?  உதாரணமாக, காபியில் சர்க்கரை போட்டால் அது கரைய வேண்டும், அருவி எப்போதும் கீழே விழ வேண்டும், தீக்குச்சி உரசினால் எரிய வேண்டும்...இதையெல்லாம் தீர்மானிக்கும் விதிகள் உள்ளனவா?இது அபத்தமான கேள்வியாய் இருந்தாலும் பதில் சொல்லவும்..

பதில்:  அபத்தமானது என்று எதுவும் இல்லை...உண்மையில், இது இயற்பியலின் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்று....வில்லியார்ட் கிப்ஸ் (Josiah Willard Gibbs) என்பவரின் கண்டுபிடிப்புக்குப் பிறகு இதற்கான பதில் மிக எளியது... அவரது விளக்கப்படி இயற்கை எப்போதும் இந்த இரண்டு  விஷயங்களின் சம நிலையை உறுதி செய்கிறது...ஒன்று Energy (ஆற்றல்) இன்னொன்று Entropy (ஒழுங்கின்மை`)...

சில வேதியியல் வினைகள் அது பாட்டுக்கு நடந்து விடும்...நாம் எதுவுமே செய்ய வேண்டியது இல்லை...ஆனால் ரிவர்சில் நடக்காது....நாம் வெளியில் இருந்து அதிகமான ஆற்றல் தராதவரை ரிவர்சில் போகாது... தண்ணீர் மேலே இருந்து கீழே வந்து விடுகிறது...கீழே இருந்து மேலே போக பம்ப் வைக்க வேண்டும்...காபியில் கரைந்த சர்க்கரை மீண்டும் வேண்டும் என்றால் அது கொஞ்சம் கஷ்டம்..ஆனால் அசாத்தியம் அல்ல..காபியை ஆவியாக்கி சில வேதியியல் முறைகள் மூலம் சர்க்கரையை மீண்டும் கொண்டு வந்திட முடியும்...எரிந்து போன தீக்குச்சிக்கு மீண்டும் ரிவர்சில் வந்து தீத்தொப்பி போட்டு விடுவது இன்னும் கடினம்..ஆனால் நேரமும் தகுந்த உபகரணங்களும் இருந்தால் சாம்பல் , புகை, வாயு இவற்றை வைத்துக் கொண்டு தீக்குச்சியை மீண்டும் பழையபடி கொண்டு வரலாம்... அதாவது இயற்கை ஒரு விஷயம் நடக்க வேண்டுமா இல்லையா என்பதை இந்த ஆற்றல்-ஒழுங்கின்மை சமநிலையை (Energy - Entropy Balance) வைத்தே தீர்மானிக்கிறது...



 முதலில் ஆற்றல்: பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே தன்னிடம் உள்ள ஆற்றலை எப்படியாவது இழக்கவே விரும்பும்...[சினிமாவில் நான்கைந்து வாலிபர்கள் 'சக்தி கொடு' என்று தொண்டை கிழிய பாடுவது இயற்கைக்கு  சும்மா தற்காலிகம் தான்]தண்ணீர் கீழே விழும்போது இதுதான் நடக்கிறது.... அதனிடம் உள்ள நிலை ஆற்றல் இழக்கப்படுகிறது.... வேதியியல் வினைகள் நடப்பதும் இதனால்தான்...பொருட்கள் தங்களிடம் உள்ள , சேமிக்கப்பட்டுள்ள வேதியியல் ஆற்றலை இழந்து 'அப்பாடா' என்று ரெஸ்ட் எடுக்கவே விரும்பும்...பட்டாசு பற்ற வைத்தவுடன் ரயில் பிடிக்கும் அவசரத்தில் பற்றிக்கொண்டு வெடிப்பது இதனால்தான். எனவே, இயற்கையின் ரூல் நம்பர் ஒன் : ஒரு செயலின் மூலம் (அதில் ஈடுபடும் பொருளின்) ஆற்றல் குறையும் என்றால் அந்த செயல் நடந்து விட வாய்ப்புகள் மிக அதிகம்...

இது ஒரு விஷயம்...இயற்கையின் இன்னொரு விதி ஒழுங்கின்மை அதிகரிப்பு...ஏனோ, இயற்கை ஒழுங்கமைப்பு அல்லது ORDER விரும்புவதில்லை...நன்றாக இருக்கும் வீட்டை கலைத்துப் போட்டு இன்புறும் குழந்தை போல இருக்கிறது இயற்கை..கால்பந்து ஆட்டம் ஒன்று தொடங்கும் முன் விளையாட்டு வீரர்கள் வரிசையாக, சீராக அணிவகுத்து நிற்கிறார்கள்... விளையாட்டு முடிந்ததும் மைதானம் முழுவதும் பரவி சிதறி அங்கொன்றும் இங்கொன்றுமாக நிற்கிறார்கள்... இது பிரபஞ்ச விளை - யாட்டுக்கும் பொருந்தும்... கண்ணாடி கீழே விழுந்தால் நொறுங்குவது இதனால் தான்....ஏனெனில் நொறுங்கிய கண்ணாடிக்கு ஒழுங்கின்மை அதிகம்... எனவே இயற்கையின் ரூல் நம்பர் இரண்டு: எல்லாமே ஒரு ஒழுங்கற்ற நிலையை நோக்கியே நகரும்..

எனவே , சாதாரணமாக,ஒரு பொருளின் ஆற்றலை அதிகரிக்க இயற்கை அனுமதிக்காது... ஆனால்  வேறு ஏதோ ஒரு இடத்தில் நாம் ஒழுங்கின்மை ,entropy யை அதிகரித்துக் கொள்கிறோம் என்றால் கொஞ்சம் சரி என்று ஒத்துக் கொள்ளும்...அதே போல பொதுவாக ஒரு சமாசாரத்தை ஒழுங்குபடுத்த இயற்கை ஒத்துக் கொள்வதில்லை...ரூம் அப்படியே கிடக்கட்டுமே ,என்ன பெரிய க்ளீனிங்?என்ற lazy பேச்சிலர் மனோநிலை.. இதப் பாரும்மா , வேறு எங்காவது ஆற்றலை இழந்து தொலைக்கிறோம் என்றால் மட்டுமே கொஞ்சம் மனமிரங்கும்...ஒரே சமயத்தில் (in a closed system)ஆற்றலை அதிகரிக்கிறோம் ஒழுங்கையும் அதிகரிக்கிறோம் என்றால் அது நடக்கவே நடக்காது....ஒண்ணா கூழ் இல்லைன்னா மீசை இரண்டுக்கும் ஆசைப்பட்டால்  நடக்காது..... இயற்கை ஒரு கறாரான banker போல இந்த balance கண்காணித்துக் கொண்டே இருக்கிறது...


அருவி மேலே இருந்து கீழே விழுகிறது...அங்கே ஒழுங்கின்மை அதிகரிப்பு எதுவும் இல்லை...ஆனால் ஆற்றல் குறைவதால் அது நடக்கிறது. சர்க்கரை தண்ணீரில் கரையும் போது ஆற்றல் இழப்பு ஏதும் இல்லை...ஆனால் அங்கே ஒழுங்கின்மை அதிகரிப்பு நடக்கிறது...தண்ணீரில் கரைந்த சர்க்கரை அணுக்கள் சர்க்கரைப் படிகத்தில் இருப்பதை விடவும் மிக அதிக ஒழுங்கின்மை (dis -orderly ) நிலையில் இருக்கும்...

சரி, தீக்குச்சி? அங்கே ஆற்றல் இழப்பு இருக்கிறது...அதன் தலையில் சேமிக்கப்பட்டுள்ள வேதி ஆற்றல்  இழக்கப்படுகிறது..மேலும் அங்கே ஒழுங்கின்மை அதிகரிப்பும் இருக்கிறது..தீக்குச்சி எரிந்ததும் மிஞ்சும் சாம்பலும் வாயுவும் அது தலையில் குவிக்கப்பட்டு இருந்ததை விட மிகவும் ஒழுங்கு குறைந்த நிலையில் இருக்கும்...எனவே தீக்குச்சி எரியும் போது அது இயற்கையின் இரண்டு விதிகளையும் ஒரே நேரத்தில் சமர்த்தாக பூர்த்தி செய்வதால் 'நீ எரி ராஜா' என்று இயற்கை அதை ஊக்குவிக்கிறது... தீப்பெட்டியோ ,குச்சியோ ஈரம் இல்லாத பட்சத்தில் குச்சியை உரசும்போது நெருப்பு வராமல் இருப்பது கிட்டத்தட்ட அசாத்தியம்...

 இன்னோர் உதாரணம்::  

பூமியில் கடலில் மட்டும் 10 மில்லியன் டன் எடை உள்ள  கட்டி ஒன்றை செய்யும் அளவு தங்கம் பரவி உள்ளது...அந்தக் கட்டியை நம்மால் செய்ய முடிந்தால் அதன் entropy மிக மிகக் குறைவு..அதை பொதுவாக இயற்கை அனுமதிக்காது...ஏனெனில் கடலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கும் தங்க அணுக்களுக்கு entropy மிக மிக அதிகம்...அனால் அதற்கு மிக அதிக அளவு ஆற்றலை நாம் இழந்தால் இயற்கை அதை விதியே என்று அனுமதிக்கும்..ஆனால் கடலில் மூழ்கி தங்கத்தை எல்லாம் அணு அணுவாக கலெக்ட் செய்வதற்கு ஆகும் ஆற்றல், செலவு அந்தத் தங்கக் கட்டியின் விலையை விட மிக மிக அதிகம்...

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRROLOUIPmyA_pwPcdgoCWwX3dwQd9pgubqAN9jCBl7smMY5vDe

note : நாளை காலை 9-10 மணிக்கு திருவையாறில் நடக்க இருக்கும்  தியாகராஜ ஆராதனையை (பஞ்ச ரத்ன கிருதிகள்)டி .வியில் நேரடியாக பார்த்து, கேட்டு மகிழுங்கள்...


ஷோ ஜோக்...


மெர்பி கனவு கண்டு கொண்டிருந்தான்...கனவில் அழகான தீவு ஒன்றில் பொழுதைக் கழித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தான்..படகில் ஏறும் போது சுங்க அதிகாரி ஒருவன் எதிர்ப்பட்டு "நூறு டாலர்  படகில் போகஎன்றான்..


"நூறு டாலரா?"..அது கொள்ளையாச்சே ...அம்பதே அதிகம்...அம்பது தான் தருவேன் என்றான்...

"அம்பதா? அம்பதுக்கு நீ நீந்தி தான் போகணும்" என்றான் அதிகாரி...

மெர்பி : அம்பது தான்...

அதிகாரி: முடியாது..

மெர்பி , "அட மடையனே, ஒழுங்கா அம்பது வாங்கிக்கோ...நான் திடீர்ன்னு  முழுச்சுக்கிட்டா அம்பது கூட உனக்குக் கிடைக்காது" என்றான்...


Man is asleep -OSHO


SaMuDrA

9 comments:

வவ்வால் said...

சமுத்ரா,

என்ட்ராப்பி பத்தி எங்கே புடிச்சிங்கன்னு தெரியலை, ஆனால் வேற கான்செப்டில் சொன்னதை வேற கான்செப்டுக்கு உதாரணமாக சொல்லிக்கிட்டு இருக்கிங்க.

இயற்கையில் என்ட்ராப்பி என்பதை ஒழுங்கின்மைக்கு சொல்வதை விட சிதைவுறுதல் என சொல்வதே சரியாக இருக்கும். கிரேக்க பொருளும் அதான் சொல்கிறது.

தெர்மோ டைனமிக்சில் என்ட்ரப்பி என்பது வேலைக்கு பயன்படதா வெப்ப ஆற்றல். எனவே என்ராப்பி என்பது சிதைவுறும் போது வெளியிடும் வெப்ப ஆற்றலில் பயன்ப்படுத்தாமல் இருப்பது எனக்கொள்ளலாம்.

இயற்கை ஒழுங்கின்மையை அதிகம் அனுமதிப்பதா சொல்வதும் சரியல்ல, உண்மையில் இயற்கையில் அனைத்தும் ஒழுங்காக அமைவதையே அனுமதிக்கிறது.

இயற்கையாக உருவான கிரகங்கள் கோளமாக இருப்பது,நீள் வட்டப்பாதையில் சுழல்வது.

இயற்கையாக உருவாகும் மேகங்களுக்கு கூட வடிவம் சீராக உள்ளது, அதனை வைத்தே மேகங்களை வகைப்படுத்துவார்கள்.வளி மண்டலத்தில் இன்ன உயரத்தில் இன்ன வடிவ மேகம் உருவாகும் என வகைப்பிரித்துள்ளார்கள்.

காற்று வீசுவதும் ஒரு ஒழுங்கில் உள்ளது இதனால் தான் பருவக்காற்றுகள் என்கிறார்கள்.

ஒளிச்சிதறல் மூலம் உருவாகும் நிறமாலையே வானவில் அதுவும் ஒழுங்கில் உள்ளது.

ஒவ்வொரு பொருளிலும் அணுக்கள் அதனுள் எலெக்ட்ரான்,நியுட்ரான், புரோட்டான் என ஒழுங்கில் உள்ளது,எலெக்ட்ரான் வட்டப்பாதையில் சுழல்கிறது.

இயற்கை ஒரு சம நிலையை தான் விரும்புகிறது,அதுவே ஒரு ஒழுங்கு தானே.

கண்ணாடி நொறுங்குவது இயற்கை அல்ல அக்கண்ணாடியை யாரோ ஒருவர் எடுத்துப்போட்டால் தான் உண்டு , யாரும் கைவைக்கவில்லை எனில் 100 ஆண்டுகள் ஆனாலும் அப்படியே தான் இருக்கும், எனவே மேன் மேட் செயல் அது :-))

தேவைப்படும் போது closed system என சொல்லிக்கொள்கிறீர்கள், closed system என்பது செயற்கையாக உருவாக்க வேண்டும். இயற்கையில் ஓபன் சிஸ்டம் தான்.

//சர்க்கரை தண்ணீரில் கரையும் போது ஆற்றல் இழப்பு ஏதும் இல்லை..//

இதுவும் சரியல்ல, சர்க்கரை தண்ணீரில் கரைவது ஒரு என்டொ தெர்மிக் ரியாக்‌ஷன். தண்ணீர் தன் வெப்பத்தினை இழக்கும், அதனை வைத்து சர்க்கரை மூலக்கூறுகள் உடைகிறது எனவே அது ஒரு வெப்ப ஏற்பு வினை. தண்ணீருக்கு ஆற்றல் இழப்பு ஏற்படும்,இதனால் சர்க்கரை கரைந்த நீர் குளிர்ச்சியாக இருக்கும்.

//ஆனால் நேரமும் தகுந்த உபகரணங்களும் இருந்தால் சாம்பல் , புகை, வாயு இவற்றை வைத்துக் கொண்டு தீக்குச்சியை மீண்டும் பழையபடி கொண்டு வரலாம்...//
சில வேதி வினைகள் ரிவர்சிபில் ,இர்ரிவர்சிபில் என இருக்கிறது. நீங்கள் சொன்னது போல எரிந்த தீக்குச்சியை மீண்டும் உருவாக்க முடியாது.

ஹி...ஹி ஒரு முட்டையை ஆம்ளேட் போடலாம் ஆனால் என்ன தான் செய்தாலும் ஆம்லேட் மீண்டும் முட்டையாகாது :-))

இயற்கை ஆற்றலை இழக்க விரும்புவதாக சொல்வது கூட சரியல்ல ,ஒரு சம நிலையை விரும்புகிறது எனலாம். அதே சமயம் ஆற்றலை சேமிக்கவும் செய்கிறது உ.ம் தாவரங்கள். பொதுவாக இயற்கை ஒரு சுழற்சியினை பேணுகிறது, ஆற்றலை ஒரு பக்கம் இழந்தால் இன்னொருபக்கம் பெறுகிறது எனவே தான் ஆற்றல் அழிவின்மை விதி இயங்கிறது.

Dr.Dolittle said...

Vawaal sir I'm not an expert in physics. But as far as I know .glass is a liquid and will melt down(but takes lots of years ) justifying the entropy

வவ்வால் said...

டொக்டர்,

நீங்க சொல்வது சரி தான் கண்ணாடி உறைந்த திரவம் தான்(குண்டு துளைக்காத கண்ணாடி என்றப்பதிவில் நானே சொல்லியிருப்பேன்)

இயற்கையாக சிதைவுறவே செய்யும்,எனவே தான் என்ட்ராப்பியை சிதைவுறுதல் என சொல்லலாம்னு பின்னூட்டம் ஆரம்பத்தில் சொல்லியிருப்பேன்.

இயற்கை என்பது ஆற்றல் சம நிலையை விரும்புகிறது.

- அ + மின்னூட்ட அயனிகள் தனித்து இருப்பதில்லை ஒன்றிணைந்து மூலக்கூறுகளாக சமநிலை அடைகின்றன.

இயற்கையில் ஏதோ ஒரு வகை ஒழுங்கு தன்மை ,பீரியாடிக் நேச்சர் இருக்கிறது என்பது தான் பெரும்பாலோர் கருத்து.

பூமி சூரியனை சுற்றுவது,நீள் வட்டப்பாதை, 24 மணி நேரம்,365 நாள் என பல ஒழுங்கான,பீரியாடிக் நேச்சரில் உள்ளதை காணலாம்.

Dr.Dolittle said...

Thanks sir for the explanation.and just want to state that universe itself expanding .:-)

narayanan chormpet said...

narayanan said super kavithai super explin pchies

narayanan chormpet said...

vowal" anna arumai anna nalla pureetha Neega Oru Village Vigannai {chennai Eranthalam olagam portha varai chennai oru village ;thannna }

வவ்வால் said...

டொக்டர்,

விரிவடையும் அண்டம் என்பது ஒரு வகை சிதைவுறுதல் தான், ஒரு சம நிலை அடையும் வரை விரிவடையும் பின்னர் மீண்டும் சுருங்கும் அல்லது ,அப்படியே நின்றுவிடும் என்கிறார்கள், அதற்கு சொல்லும் காரணம் , நிறையும், சுருங்கும் விசையும் சமம் அடைந்தால் நின்றுவிடும், சுருங்கும் விசை நிறையை விட அதிகமானால் ,அண்டம் சுருங்கி ,சிங்குலாரிட்டி என்ற நிலை அடைந்து மீண்டும் பெரு வெடிப்பு நிகழும்.

ஆக மொத்தம் அதிலும் ஒரு ஒழுங்கு ,பீரியாடிக் நேச்சர் தான் கணிக்கப்படுகிறது. அண்டமே ஒரு சைக்கிள்,அதனால் தான் வாழ்க்கையே ஒரு வட்டம்னு சொல்லுறாங்க :-))
-----------

குரோம்பேட்டை நாராயணன்,

குரோம்பேட்டையுடன் ஒப்பிட்டாலே எங்க ஏரியா கிராமம் தான் , கிராமபஞ்சாயத்து தான் :-))

சமுத்ரா said...

இயற்கை சமநிலையை விரும்புகிறது என்பது ஓரளவு தான் சரி...ஓர் அறையின் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் என்று வைத்துக் கொள்வோம்... அதில் நாம் கொதிக்கும் அண்டா நீரை வைக்கிறோம்... (100 டிகிரி)..அது மெல்ல மெல்ல குளிர்ந்து

கடைசியில் 30 டிகிரிக்கு வந்து விடும்...(ஜீரோ வுக்குப் போகாது!)ஆனால் அந்த அறை மட்டுமே பிரபஞ்சம் அல்ல...அந்த அறையும் தன்னுடைய 30 டிகிரி வெப்பத்தை இழக்கவே விரும்பும்..[தன்னை விட சுற்றுப் புறத்தில் வெப்பமான பொருள் இல்லாத பட்சத்தில்] சூரியன் திடீரென்று மறைந்து விட்டால் அந்த வெப்பம் மெல்ல மெல்லக் குறைந்து எல்லாம் 3டிகிரி கெல்வின் அளவு உள்ள பிரபஞ்ச பின்புல கதிரியக்கத்துக்கு (CMBR ) வந்து விடும்..எனவே பொருட்கள் ஆற்றல் இழப்பையே விரும்புகின்றன என்று சொல்லலாம்..

அடுத்து இந்த சீரமைப்பு அல்லது ஒழுங்கு...கோள்கள் சீராக சுற்றுகின்றன...அது இது என்பதெல்லாம் அவற்றுக்கு ஒரு Energy support இருப்பதால்தான்...ஈர்ப்பு என்பது ஆற்றல் தான்...எனவே அவை சீராக இருக்கின்றன ..அந்த energy input நின்று விட்டால் அவை சீரற்று entropy விதிப்படி வெளியில் பறந்து சிதறி விடும்...

வவ்வால் said...

// பொருட்கள் ஆற்றல் இழப்பையே விரும்புகின்றன என்று சொல்லலாம்..//

ஆற்றல் இழப்பு என்பது ஆற்றல் ஏற்பு என்ற நிலை இல்லாத வரை சாத்தியமில்லை- ஆற்றல் அழிவின்மை விதி :-))

எனவே எலாமே ஒரு வட்டம் தான் , பீரியாடிக் நேச்சர் தான். எனவே இயற்கையில் சீர்குலைவு என்பதை விட ஒரு ஒழுங்கு நியதி தான் உள்லது,ஆனால் மனிதன் அதனை உணர்வதில்லை.

அவன் உருவாக்கிய ஒழுங்கு குலைந்தால் மட்டுமே சீர்குலைவு என நினைக்கிறான்.

செங்கல்லை அடுக்கி வைப்பது மனிதன்,அதனை தள்ளிவீட்டு கலைக்கும் போது உருவாவது சீர்குலைவு என நினைப்பது மனித இயல்பு,ஆனால் எந்த பொருளை கொட்டினால், தாறுமாறாக அள்ளி வீசினாலும் கூம்பு வடிவம் அமையும்.

ஒரு மூட்டை நெல்லை அள்ளிக்கொட்டுங்க ,தானா ஒரு கூம்பு வடிவம் அமையும்.

தள்ளிவிட்ட செங்கல் கூட ரஃப்பா ஒரு கூம்பு வடிவம் உருவாக்கும்.

ஒரு சொட்டு நீர் வைத்தால் அது தானாக கோள வடிவம் தான் எடுக்கும், சதுரமாகவோ ,முக்கோணமாகவோ அமையாது.ஒரு பரப்பின் மீது வட்டமாகவே இருக்கும்.

//.ஈர்ப்பு என்பது ஆற்றல் தான்...எனவே அவை சீராக இருக்கின்றன ..அந்த energy input நின்று விட்டால் அவை சீரற்று entropy விதிப்படி வெளியில் பறந்து சிதறி விடும்...//

ஈர்ப்பு என்பது ஆற்றல் தான் ஆனால் எனர்ஜி இன்புட் தேவையில்லை, நிறை என ஒன்று இருந்தாலே ஈர்ப்பு சக்தி உருவாகும் என நியுட்டன் சொல்லி இருக்கிறார், நியுட்டோனியன் லா ஆஃப் கிராவிட்டி பார்க்கவும்.

வெட்ட வெளியில் எதுவும் சிதறிபோய்விடாது, பிரபஞ்சமே சுயசார்பு ஈர்ப்பு விசையால் இயங்குகிறது, பிரபஞ்சம் முழுக்க உள்ள பருப்பொருள்கள் ஈர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன, எனவே எங்கும் ஈர்ப்பு சக்தியுள்ளது, ஆனால் அது திசையிலியாக உள்ளது அவ்வளவே.