"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி" ,
"தந்தை தாய் இருந்தால்" ...
-இப்படி உணர்ச்சிப் பூர்வமான கவிதைகளில் தந்தைக்கே முதலிடம். இதை சொல்வதற்கு இப்போது காரணம் இருக்கிறது.07 -10 -2012 ,ஞாயிறு அன்று அப்பா எங்களை எல்லாம் பிரிந்து வைகுண்டப் ப்ராப்தி அடைந்து விட்டார். நீண்ட நாட்களாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தார்.மருத்துவம் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம். கடைசியில் தன் இறுதி மருந்தை (ultimate medicine ) அப்பா எடுத்துக்கொண்டு தன் துன்பங்களில் இருந்து நிரந்தர விடுதலை பெற்றுவிட்டார்.
நம்மிடம் ஒரு பொருளைக் கொடுத்து அதனுடன் உறவு ஏற்படுத்தி , அளவளாவச் செய்து , அன்பு செலுத்த வைத்து பின் திடீரென்று ஒரு நாள் நம்மிடம் இருந்து அதை வெடுக்கெனப்
பிடுங்கிக் கொண்டால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்டது தான் மரணம். நாம் தான் நம் அப்பா நம் அம்மா நம் மனைவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இயற்கையோ 'இவர் என்னுடையவர்' என்று கருணையின்றி ஒருநாள் தன் வசம் எடுத்துக்கொண்டு விடுகிறது. ஓஷோவின் புத்தகங்களை அதிகம் படித்ததால் அப்பாவின் மரணம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.'மரணம் என்பது வாழ்வின் மலர்தல்', மரணம் ஒரு கொண்டாட்டமாக வேண்டும் என்கிறார் ஓஷோ.
குழந்தை எங்கிருந்து வருகிறது என்பதும் இறந்தவர் எங்கே போகிறார் என்பதும் இன்னும் மர்ம முடிச்சுகள் தான்.
இறந்தவுடன் யமலோகம் என்று சும்மா சொல்லிவிட்டாலும் ஜீவன் அங்கே யாத்திரையாக நடந்து செல்ல ஒரு வருடம் ஆகிறது என்கிறது கருட புராணம்.ஒவ்வொரு மாதமும் புத்திரன் அளிக்கும் மாசிக பிண்டத்தை உண்டு அது படிப்படியாகக் கடக்கிறதாம். போகிற
வழியில் ஜீவனுக்கு வழி தெரிய வேண்டி இங்கே தீப தானம்,குளிர் அடிக்காதிருக்க இங்கே கம்பளி தானம் , தாக சாந்தி நீங்க உதுகும்ப தானம். வைதரணி நதியைக் கடக்க இங்கே கோதானம் முதலியவை செய்தல் வேண்டுமாம். இவையெல்லாம் சுத்த ஹம்பக் என்று
நினைக்கத் தோன்றினாலும் இறந்தவர்கள் பெயரை சொல்லியாவது மனிதனை தானம் செய்விக்கத் தூண்டும் உத்திகள் தான் இவை.என்ன, இந்தத் தானத்தை எல்லாம் சுமோ வீரர்கள் போல வயிறை வளர்த்து வைத்திருக்கும் ப்ரோகிதர்களுக்குக் கொடுக்காமல் உண்மையிலேயே
கஷ்டப்படும் ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
ஒருவர் இறந்து விட்டால் 'அடடா அவர் இருந்த போது இன்னும் நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கலாமே?"என்ற ஆதங்கம் தோன்றுவது இயல்பு தான். ஆனால் இறந்து விட்ட ஒருவருக்காக நாம் என்ன செய்ய முடியும்? அது நம் கூண்டை விட்டு அகன்று விட்ட, இனிமேல் எப்போதும் திரும்பி வராத பறவை.என்னதான் தத்துவம் பேசினாலும் நமக்கு நெருக்கமான ஒருவரது இழப்பு நம்மை எப்படி நிலைகுலைய வைத்து விடுகிறது?
அப்பேர்ப்பட்ட பட்டினத்தாரே
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் -செய்ய
இருகைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
என்று கதறுகிறார். அன்னையின் மரணத்தைப் பார்ப்பதே கொடுமை என்றால் பெற்ற மகனின் மரணத்தைப் பார்க்கும் கொடுமை வந்துவிட்டது பாட்டிக்கு.என்ன செய்வது?
அப்பாவின் மரணத்திற்கு பட்டினத்தார் செய்யுள் எழுதியதாய்த் தெரியவில்லை...நாம் எழுதி விடுவோம்...
மன்மதனோ மாதவனோ மன்னனும் தானோஇவன்
என்மகனோ என்றுமிக இன்புற்று -தன்மனதில்
களிப்புடன் நான் பிறக்கையிலே கையேந்தும் தந்தைக்கோ
குளிப்பாட்டி சடங்கு செய்வேன்!
தோள்மீதும் மார்மீதும் தூக்கி எனைசுமந்து
மாளாமல் அனுதினமும் அரவணைத்து- ஆளாக்கப்
பள்ளிக்குப் போயமர்த்தும் தந்தைக்கோ இன்றுயான்
கொள்ளிதனைக் கையேந்து வேன்.
கேட்ட பொழுதிலெல்லாம் காசுதந்து என்னிதயம்
வேட்டதெல்லாம் அன்புடனே விளைவித்து -நாட்டமுடன்
அள்ளி அரவணைத்த அத்தனுக்கோ இன்றுயான்
எள்ளெடுத்து இறைத்திடுவேன்
உள்ளுடலின் கருப்பைதனில் உளமார சுமந்திட்ட
நல்லகத்தாள் அன்னைதனை மிஞ்சிடவே -உள்ளமெனும்
கருப்பையில் எனையிருத்தி காலமெல்லாம் சுமந்தவர்க்கோ
தருப்பையை விரலேந்து வேன்.
நானுலகில் உதித்திடவே உயிரளித்து என்னிடத்தில்
தேனொழுகும் தண்மொழிகள் உரைத்திட்டு -நான்விரும்பும்
பண்டமெல்லாம் எனக்களித்த பாசமிகு தந்தைக்கோ
பிண்டமதைப் பரிமாறு வேன்.
அறிவெல்லாம் எனக்களித்து அரவணைத்து யான்கொண்ட
குறையெல்லாம் கருதாமல் காத்திருந்து -பரிவுடனே
வாத்சல்யம் காட்டியிவண் வாழ்ந்திருந்த அப்பனுக்கோ
தீச்சட்டி கரமேந்து வேன்.
நடைகொடுத்தாய் நாலும் கொடுத்தாய் நான்வாழ நல்லோர்
படை கொடுத்தாய் பாயதனில் பணிந்து நின்பதத்தில்
உடைகொடுத்த உயிரன்னை உவந்தணிந்த தாலிக்கும்
விடைகொடுத்தாய் பாவியிங்கே விழைந்திடவும் வேறுளதோ!
வாசகர்கள் அப்பாவின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கவும்.
சமுத்ரா
17 comments:
ஆழ்ந்த இரங்கல்கள் சமுத்ரா.
பொதுவாக நாம் பெற்றதை விட இழந்ததை அதிகம் எண்ணிப்பார்க்கும் சந்ததியினர்.நம் ஜீன் சம்பந்தப் பட்டது.
இப்படிப்பட்ட தந்தையைப் பெற முடிந்ததால் தான் இழக்கவும் நேரிட்டது என்பதையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
இந்தத் துயரமான தருணத்தை அவருடன் செலவிட்ட இனிமையான தருணங்களுடன் அசை போடுங்கள். அது அருமருந்தாக இருக்கும்.
ஆழ்ந்த இரங்கல்கள்...
வெண்பாக்கள் அற்புதம்...
தங்கள் அப்பாவின் ஆன்மா சாந்தியடையட்டும்
அன்பு காட்ட நினைக்கும் போது அப்பா இல்லை என்பார் சுஜாதா.
அப்பா அவர்களின் ஆன்ம சாந்திக்கு பிரார்த்தனைகள் சமுத்ரா ..... உணர்வுப் பூர்வமாய் வடித்த வெண்பாக்கள் ... ஒவ்வொரு மகனும் படிக்கவேண்டியவை ....
தங்கள் அப்பாவின் ஆன்மா சாந்தியடையட்டும் சமுத்திரா.
வெண்பாக்கள் அருமை - மனத்தைத் தொட்டது
ஆழ்ந்த அனுதாபங்கள் :(
ஆழ்ந்த அனுதாபங்கள் சமுத்ரா.. அப்பாவின் இழப்பு வாழ்நாள் முழுவதும் துரத்தும். உடன் இருந்த நினைவுகள் உங்களுக்கு ஆறுதல் தரட்டும்.
உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
தந்தையின் ஆன்மா சாந்தியடைய இறையிடம் பிரார்த்திக்கிறேன்...
அன்பு சமுத்ரா,( மது ஸ்ரீதர் )
இழப்பைத் தாங்கிக் கொள்ளும் முதிர்ச்சி உங்களிடம் இருக்கிறது. “இவன் தந்தை எந்நோற்றான் கொல் “ எனும் வள்ளுவர் வாக்குக்கு ஏற்ப வாழ்ந்து காட்டுங்கள். அதுவே நீங்கள் அவருக்கு செய்யும் கைம்மாறு. அவர் ஆன்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகளும்.
ஆழ்ந்த இரங்கல்கள்...
அப்பா!, இந்த வார்த்தை எவ்வளவு அழகு. தோள்மீது ஏற்றியும், கைபிடித்து நடை பழக்கியும் என்னை ஒரு தோழனாய் நடத்திய என் அப்பாவின் நினைவு எனக்கு வருகிறது. எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
தங்கள் தந்தையின் ஆன்மா அமைதியடைய பிரார்த்திக்கிறேன்.
ஆழ்ந்த இரங்கல்கள். Take Care
என் ஆழ்ந்த இரங்கல்கள்
அப்பாவின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்
My deep condolences samudra:(..
By balaji
Post a Comment