இந்த வலையில் தேடவும்

Friday, October 5, 2012

கலைடாஸ்கோப் -74

லைடாஸ்கோப் -74 உங்களை வரவேற்கிறது.
Ф

There's Plenty of Room at the Bottom என்கிறார் விஞ்ஞானி ரிசார்ட்ஃ பெயின்மேன்.

மெஷின்கள் எவ்வளவு சிறிதாக இருக்க முடியும்? நமக்கெல்லாம் தெரிந்த மிகச் சின்ன மெஷின் எது?பென்சில் சீவும் மெஷின் என்று சொல்லக் கூடாது :) ... நம் உடலின் செல்கள் கூட ஒருவிதத்தில் மெஷின்கள் தான். இப்போது ஒரு அணுவையே ஒரு மெசினாக மாற்ற முடியாதா என்று யோசித்து வருகிறார்கள். உதாரணமாக கம்ப்யூட்டர் சிப் ஒன்றில் ஆயிரக்கணக்கான டிரான்சிஸ்டர்-கள் இருக்கின்றன.ஒவ்வொரு டிரான்சிஸ்டருக்குள்ளும் மில்லியன் கணக்கில் அணுக்கள் இருக்கின்றன. இப்போது ஒவ்வொரு தனித்தனி அணுவையும் நம்மால் கட்டுப்படுத்த முடிந்தால் மிகச் சிறிய இடத்தில் ஒரு தொழிற்சாலையையே அமைத்து விடலாம். (Lab on a chip !)மெஷின்களை இவ்வளவு சிறியதாக அமைப்பதன் மூலம் மிகப் பெரிய நன்மைகள் விளையும்.

*இப்போது கேன்சர் செல்களை குத்துமதிப்பாக அழிக்க வேண்டி உள்ளது. 'மாலிக்குலார் மெஷின்கள்' வருமேயானால் ஒவ்வொரு கேன்சர் செல்லையும் தனித்தனியாக கண்டுபிடித்து அழிக்கலாம். ஹெச்.ஐ.வி வைரஸ்களையும்!

* குட்டிக் குட்டி மெஷின்கள் அடங்கிய மாத்திரைகளை உட்கொள்ளும் போது அது மிகச் சரியாக எங்கே பிரச்சினை இருக்கிறதோ அங்கே சென்று அதை சரி செய்கிறது.இந்த மெஷின்களை இதயத்தில், ரத்தக் குழாய்களில் ஏற்படும்
அடைப்புகளை சரிசெய்ய உபயோகிக்கலாம்.[அதாவது பிற்காலத்தில் வியாதி வந்தால் டாக்டரையே முழுங்கி விடுவோம்!]

* வைரஸ்கள் பரவுவதையும் கதிரியக்க கழிவுகள் சுற்றுச்சூழலுடன் கலப்பதையும் இந்த குட்டி மெஷின்கள் மிகத் திறமையாக செயல்பட்டு  அ
ழிக்க முடியும்.

இந்த தொழில் நுட்பத்தை நானோ டெக்னாலஜி என்கிறார்கள்.

ஒரு எளிய உதாரணம் சொல்வதென்றால், தொழிற்சாலை ஒன்றின் உற்பத்தியை அதிகரிக்க, மேல்மட்ட நிலையில் அதன் எம்.டி யை சந்தித்து ஆலோசனை செய்யலாம். மீட்டிங் வைக்கலாம்.புரியாத பாசையில் பேசிக் கொள்ளலாம்.சார்
ட்டுகள் வரையலாம்,இண்டஸ்ட்ரியல் எக்ஸ்பெர்ட் களை வரவழைக்கலாம்! இப்போதைய நம் எலக்ட்ரானிக் மற்றும் மருத்துவ சமாச்சாரங்கள் இப்படி தான் இருக்கின்றன. நானோ டெக்னாலஜி என்பது ஒவ்வொரு தொழிலாளியின் வீட்டுக்கும் தனித்தனியே சென்று அவரை சந்தித்து அவர் இப்போது செய்யும் வேலை என்ன? அதை எப்படியெல்லாம்
மேம்படுத்தலாம்.
அதனால் அவருக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன  தொழிற்சாலைக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று எடுத்து சொல்லி அவரை நன்றாக வேலை செய்ய ப்ரைன் வாஷ் செய்வது!இரண்டில் எந்த அணுகுமுறைக்கு அதிக பலன் கிடைக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்!
ФФ

பிடித்த ஈமெயில்:

பிரபலமான ஹார்ட் சர்ஜன் ஒருவர் தன் காரை சர்வீஸ் செய்ய மெக்கானிக் ஒருவரிடம் வந்தார். காரை பழுது பார்த்த மெக்கானிக்,


"டாக்டர், நீங்கள் செய்வதையே தான் நானும் செய்கிறேன்...நானும் வா
ல்வுகளைப் பிரிக்கிறேன்.. பாகங்களை வெட்டி ஒட்டுகிறேன்.அடைப்பை சரி செய்கிறேன்.புதிய ஸ்பேர் பார்ட்ஸ் போடுகிறேன்..நீங்களும் அதையே தான் செய்கிறீர்கள்..அப்படி இருக்கும் போது உங்களுக்கு  மட்டும் எப்படி அதிக பணம்,புகழ்?" என்று கேட்டான்.

சில வினாடிகள் மௌனம் சாதித்த டாக்டர், புன்னைகையுடன் ,"நீ சொன்ன வேலைகளையெல்லாம் இஞ்சின் ஓடிக் கொண்டிருக்கும் போது செய்து பார், அப்போது புரியும்!" என்றார்.

ФФФ

இரண்டு கவிதைகள்:


அப்பா:

ஒருநாள் நான் காலேஜில் இருந்து
பத்து  மணியாகியும் வரவில்லை.
அப்போது எங்கள் வீட்டில் ஃபோனும் இல்லை
என்னிடம் செல்போனும் இல்லை.
அம்மா அழத்துவங்கி இருந்தாள்...
அவளுக்கு அதுதான் சீக்கிரம் வரும்..
அக்கா நொடிக்கொருதரம்
வெளியே வந்து வெறித்துப் பார்த்து
'பச்' என்றாள்..
பாட்டி ஹனுமத் கவசம் சொல்லிக் கொண்டிருந்தாள்...
அண்ணன் 'ஆண்பிள்ளை தானே
வந்திருவான் 'என்றான்..நான் எப்போதோ  எழுதிக் கொடுத்திருந்த
சிநேகிதன் வீட்டு போன் நம்பரை
குறித்துக் கொண்டு
சட்டையை மாட்டியபடி இருளில் கரைகிறார் அப்பா!


அப்பா ரொம்பவே கம்பீரம்
அவர் மீசை என்ன, மேல்துண்டு என்ன!
மேலே பார்த்தபடி தான் நடப்பார்...
வேட்டி கட்டும் அழகு என்ன?
முன்னே வந்தால் கிராமத்து
ஜனங்கள் விலகி வழிவிடுவார்கள்!
அன்று நான்
ஹாஸ்டல் சுவரேறிக் குதித்து
காலேஜில் என்னை
சஸ்பென்ட் செய்து விட்டார்கள்
முதல்வர் அப்பாவை கூப்பிட்டார்
தன் உயரத்தில் அரை அடி குறைந்து
தாழ்ந்த பார்வை பார்த்து
'எனக்காக மன்னிச்சுங்கங்க ' என்ற
அப்பாவை அன்று தான் பார்த்தேன்!


ФФФФ


சிவா சொன்ன 112 தியானங்களில் ஒன்றைப் பார்ப்போம். (நன்றி : விக்யான் பைரவ் தந்த்ரா -ஓஷோ)

ஒரு பொருளை முழுமையாகப் பார்ப்பது! நாம் ஒரு பொருளை முழுமையாகப் பார்ப்பதே இல்லை என்பதைக் கவனித்திருக்கிறீர்களா? உதாரணமாக ஒருவரைப் பார்க்கும் போது அவர் முகத்தை மட்டுமே முதலில் பார்க்கிறோம். பிறகு அவர் உடலைப் பார்க்கிறோம். நம் கண்களை முகத்தில் இருந்து வேறு பகுதிகளுக்கு அசைக்கிறோம். அப்படி இல்லாமல் ஒரு பொருளை அல்லது ஒரு நபரை ஒட்டுமொத்தமாக ஒரேயடியாக முழுமையாகப் பார்க்கவும்.இதை முதலில் கடைபிடிப்பதற்கு கடினமாக இருக்கும். ஏனென்றால் நாம் பகுதிகளைப் பார்க்கவே பழக்கப்பட்டிருக்கிறோம். முழுமையை அல்ல! ஆனால் கடைபிடிக்க கடைபிடிக்க இந்த தியானம் மிகச்சிறந்த பலனை அளிக்கும். 

ஒரு பொருளை முழுமையாக பார்க்கும் போது நம் கண்கள் நகருவதில்லை. எனவே நம் மனமும் நகர்வதில்லை. இதனால் ஒரு தெளிந்த ஸ்திரத்தன்மை நமக்குள் விளைவிக்கப்படுகிறது. (STILLNESS ).திடீரென்று நம்மை நாமே  சந்திக்கிறோம்! ஆச்சரியமாக இந்த முறையில் ஒரு பெண்ணையோ ஆணையோ பார்க்கும் போது ஒருவருக்குள் காம உணர்வும் எழுவதில்லை. 

சினிமா ஒன்றை இந்த முறையில் பார்க்க முயற்சிக்கவும். மிகவும் கஷ்டம் தான். திரையில் பொதுவாக நாம் ஹீரோ , அவர் முகம்,,,கார், வில்லன்... ஹீரோயின் என்றால் ....:):):) ஹி ஹி ..அப்படிப் பார்க்காமல் திரையையே ஒட்டு மொத்தமாக கண்களை அசைக்காமல் பார்ப்பது!!!! இப்படிப் பார்ப்பதால் படத்துடன் ஒன்ற முடியாது. அதனால் என்ன? அந்த குப்பை மசாலாப் படத்துடன் ஒன்றவில்லை என்றால் என்ன குடியா முழுகி விடும்???

ФФФФФ


பச்சை நிறமே பச்சை நிறமே,,,,என்றெல்லாம் நாம் அவ்வப்போது காதலியைப் பார்த்துப் பாடுகிறோம்.உண்மையில் நிறம் என்பதே இல்லையாம்!இந்தப் படத்தைப் பாருங்கள்...இடப்பக்கம் இருப்பது நமக்குத் தெரிகிற உலகம். வலப்பக்கம் இருப்பது நம் வீட்டு நாய்க்குட்டிக்குத் தெரியும் உலகம்...எது உண்மை?நிறம் என்பது நம் கண்களின் ஏற்படும் வினைகள் தான்...

கீழே உள்ள படம் நாம் பச்சை நிறமே பச்சை நிறமே என்று பாடிய இயற்கை இன்ப்ரா ரெட் அலைநீளத்தில் எப்படித் தெரியும் என்று காட்டுகிறது.


எல்லாமே மாயை தான். நிறங்கள் உட்பட..அடுத்தமுறை உங்கள் கணவர் வாங்கி வந்த டிரெஸ்ஸை 'அய்யே கலரே சரியில்லை' என்று திருப்பிக் கொடுக்கச் சொல்ல வேண்டாம்!

ФФФФФФ


சில ஓஷோ ஜோக்குகள்....நன்றாக சிரித்து வாழ்வைக் கொண்டாடுங்கள்.... ஜோக்குகள் மூலம் :- தம்மபதம் -VII

டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்தவன்.சர்ச்சில் முழந்தாளிட்டு தன்னை ஆசிர்வதிப்பதற்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறான்."ஆறு வீடுகள் தந்திருக்கிறாய், இறைவா, அதற்கு நன்றி சொல்லவேண்டும். ஆனால் இன்னும் ஒன்றிரண்டும் எனக்குத் தரலாமில்லையா? ரோல்ஸ்ராய்சும் அந்த ஆறு கெடிலாக் கார்களும் சரிதான்.நன்றி.ஆனால் எனக்கு ஓரிரண்டு படகுகள் இருந்தால் நன்றாக இருக்குமே! என் சொத்தாக இருக்கும் பாங்குகளுக்கு நன்றி.இன்னும் ஐந்து பாங்குகளுக்கு நான் முதலாளியாக இருந்தால் நன்றாக இருக்குமே!

அவனுக்குப் பக்கத்தில் உருவத்தில் சிறிய ஒருவன் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான்.கடவுளிடம் பேசினான். "எனக்குக் கொஞ்சம் ரொட்டியும் ஒரு சின்ன வேலையும் கொடு, கடவுளே! உனக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்"

டெக்சாஸ்காரன் உடனே ஒரு நூறு டாலர் நோட்டை உருவினான். அவனிடம் நீட்டி ,'இந்த சில்லறை விவகாரத்துக்கெல்லாம் கடவுளை போய்த் தொந்திரவு செய்கிறாயே!" என்று கடிந்து கொண்டான்.

*************

ஓர் ஏழை. வீட்டுக்கு வருகிறான். மனைவியிடம் ,"பிளின்ட்ஸ் சமைக்கிறாயா?" என்று கேட்டான்.

"சரிதான்." அவள் சொன்னாள். "அது கொஞ்சம் செலவாகுமே. பாலாடைக் கட்டி வேணும்."

"அதை விட்டுட்டுப் பண்ணலாம் இல்லியா?"

"அப்படியும் முட்டை வேணுமே."

"அதையும் விட்டுடலாமே"

"சரி. ஆனா வெண்ணை வேணும். லவங்கம் வேணும்.சர்க்கரை வேணும்."

"இதெல்லாம் இல்லாம பண்ணினா என்ன?"

அப்படியே அவளும் செய்தாள்.சாதாரண கேக் போன்ற ஒன்று.மாவும் தண்ணீரும் தவிர அதில் வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

அதை சுவைத்துப் பார்த்தவன் , "ஏன் இந்தப் பணக்காரங்க எல்லாரும் பிளின்ட்ஸ் -சுக்கு இந்த அடி அடிச்சுக்கரானுகளோ!" என்றான்.

***************

ரயில் நயாகரா நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. மேரியும் பாபியும் மேல் பர்த்தில் இருக்கிறார்கள். "பாபி நமக்கு கல்யாணம் ஆகிப்போச்சுங்கறதையே நம்ப முடியல்லே!" என்கிறாள் மேரி.

கீழ் பெர்த்தில் இருந்து தூக்கக் கலக்கத்தில் ஒரு குரல் , "அடாடா , சீக்கிரம் அவளை நம்ப வையப்பா .நாங்க தூங்கணும்"...

முத்ரா

5 comments:

Anonymous said...

Nice and Nice.I very much like your way of writing sir.

Thanks with regards
Sakthi. Tiruppur

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா.. ஹா.. நல்ல ஜோக்ஸ்...

| * | அறிவன்#11802717200764379909 | * | said...

இதய நிபுணர் சிரிப்பும், திருமணத்தை நம்ப வைக்க வேண்டிய தேவையும் சிரிக்க வைத்தன.

கவிதைகள் இரண்டும் ப்ரோஸ்..

ஜெயதேவின் பதிவில் உங்கள் விளக்கங்கள் அருமை..

Anonymous said...

I truly find this a interesting subject. Never looked at this subject in this manner. If you are planning to create more articles relating to this subject, I definitely will be back in the near future!

இராஜராஜேஸ்வரி said...

பிற்காலத்தில் வியாதி வந்தால் டாக்டரையே முழுங்கி விடுவோம.???!!.

அனைத்து பகுதிகளும் அருமை !