இந்த வலையில் தேடவும்

Saturday, September 22, 2012

அணு அண்டம் அறிவியல் -71

அணு அண்டம் அறிவியல் -71 உங்களை வரவேற்கிறது...

சமுத்ரா, கவிதை (லைடாஸ்கோப்)எழுதியது போதும் .-- எழுதவும் என்று சில பேர் கேட்டுக் கொண்டதால்....

WORM HOLE பற்றி சுருக்கமாக பேசி விட்டு வேறு ஒரு புதிய டாபிக் ஆரம்பிப்போம்.

பூமிக்கு ஆபத்து ஏற்படும் போது தொழில்நுட்பத்தில் வளர்ந்த நம் சந்ததிகள் எப்படியெல்லாம் space travel செய்யலாம் என்று பார்த்து வருகிறோம்.

'ஆலிஸ் இன் வொண்டர் லான்ட்' மூவியில் ஆலிஸ் ஒரு மர்மக் குழியில் விழுந்ததும் வேறு ஒரு புதிய உலகிற்கு எடுத்துச் செல்லப்படுவாள். அது போல பிரபஞ்சத்தில் இருக்கும் இந்தப் புதை குழிகள் சில சமயங்களில் நம்மை வேறு வெளிகளுக்கு, ஏன் வேறு பிரபஞ்சத்துக்கு கூட கொண்டு செல்லும் என்கிறார்கள். 



ஆப்பிள் ஒன்றின் மீது வாழும் இரு புழுக்களைக் கருதுவோம்.புழு நம்பர் ஒன்று ,வெறும் இரண்டு பரிமாணங்களை மட்டுமே அறிந்துள்ளது.நீளம் அகலம்... ஆழம் என்ற பரிமாணத்தைப் பற்றி அதற்கு அறிவெதுவும் இல்லை. புழு நம்பர் இரண்டு கொலம்பஸ் போல புதிய பரிமாணங்களைத் தேடி ஆப்பிளை சுற்றிக் கொண்டு செல்கிறது. . புழு நம்பர் ஒன்று மற்றொரு புழு தொடுவானில் மறைந்து விட்டது என்று நினைத்துக் கொள்ளும். கொலம்பஸ் ஆப்பிளை சுற்றி வரும் போது ஆப்பிள் கண்ணுக்குத் தெரியாத மூன்றாவது பரிமாணத்தில் வளைந்துள்ளது என்ற முடிவுக்கு வரும். கொலம்பஸ், இப்போது ஆப்பிளின் மறுபக்கத்துக்கு செல்ல இன்னொரு வழி இருக்கிறது என்று அனுமானிக்கிறது.மூன்றாவது பரிமாணத்தின் வழியே ஆப்பிளைத் துளைத்துச் செல்வது!இந்தத் துளைகளின் வழியே செல்லும் போது நேரத்தையும் தூரத்தையும் கணிசமாக மிச்சப்படுத்தலாம் என்ற முடிவுக்கு வருகிறது. இந்த 'புதைகுழிகளுக்கு' பெயர் தேடிக் கொண்டிருந்த போது ஜான் வீலர், ஆப்பிள் ஒன்றை புழு ஒன்று துளைத்துக் கொண்டு செல்வதைப் பார்த்து இந்தப் பெயர் வைத்தாராம்.அதாவது WORM HOLE , புழுத்துளை.

நம் பிரபஞ்சத்தை ஒரு (முப்பரிமாண) ஆப்பிள் போலக் கருதினால் அதன் மற்ற பரிமாணங்கள் வளைந்து இருக்கக் கூடும். அவைகளின் வழியே நாம் துளைகளை ஏற்படுத்தி தொலைதூரங்களுக்கு பயணிக்க முடியும். வார்ம் ஹோல்-களின் ஒரு பண்பு என்ன என்றால் அவைகளின் முனைகளை எவ்வளவு நீட்டித்தாலும் ஒரு முனைக்கும் இன்னொரு முனைக்கும் உள்ள தூரம் மாறாமல் இருக்கும். அதே போல ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு செல்லும் நேரமும் மாறாது. இந்த புதிரான பண்பை வைத்துக் கொண்டு நாம் வார்ம் ஹோலின் இருமுனைகளையும் வெவ்வேறு காலங்களில் இருப்பது போல மாற்றி அமைக்க முடியும்.ஒரு முனையை வேகமாக முடுக்குவதன் மூலமாகவோ அல்லது மிக அதிக நிறையின் அருகின் வைப்பதன் மூலமோ (சார்பியலின் படி)இரண்டு முனைகளுக்கிடையே கணிசமான காலவேறுபாட்டை உருவாக்கலாம். எனவே வார்ம் ஹோலின் ஒரு முனையில் நுழைந்து இன்னொரு முனை வழியே வேறு ஒரு காலத்தில் (கடந்த காலம் அல்லது எதிர்காலம் ) அனாயாசமாக வெளிவரலாம்.சரி.



சில பேர் இன்னொரு சாத்தியக்கூறை முன்வைக்கிறார்கள். ராக்கெட், விண்கலம், ஒளிவேகம், பயணம் இதை எல்லாம் கடாசி விட்டு மனிதனை இங்கிருந்து அங்கே அப்படியே TELEPORT செய்ய முடியுமா என்று. மாயாபஜார் திரைப்படத்தில் வருவது போல!

நவீன இயற்பியலுக்கு இது புதிது அல்ல. உண்மையில் குவாண்டம் லெவலில் டெலி போர்டேஷன் நடந்து கொண்டு இருக்கிறது. எல்லா துகள்களையும் , பொருளையும் நாம் அலை
(WAVE )என்றும் கருத முடியும். நானும் நீங்களும் கூட அலை தான். அலை என்பது ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியும். எனவே நாம் பூமியிலும் பிரபஞ்சத்தில் வேறு ஏதோ ஒரு மூலை காலக்ஸியிலும் இருப்பதற்கு ஒரு பூஜ்ஜியமற்ற (NON ZERO )சாத்தியம் உள்ளது.நம்முடைய அளவு குவாண்டம் நிலையுடன் ஒப்பிடும் போது மிக மிகப்பெரியது என்பதால் நம் அலைநீளம் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக உள்ளது.[வேதியியலில் நீங்கள் இரண்டு அணுக்கள் எலக்ட்ரான்களை 'பகிர்ந்து' கொண்டு மூலக்கூறுகளை உருவாக்குகின்றன என்று படித்திருப்பீர்கள்.உதாரணமாக நீர் மூலக்கூறு இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு ஆக்சிஜன் அணுவுடன் தமது எலக்ட்ரான்-களைப்  பகிர்ந்து கொள்வதால் உருவாகிறது. குவாண்டம் நிலையில் இதை எலக்ட்ரான் ஒரே சமயத்தில் இரண்டு அணுக்களிலும் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே IT 'S NOT ACTUALLY SHARING ..



தமிழ்த் திரைப்படங்களில் ஒரே ஹீரோ இரண்டு பெண்களை கல்யாணம்
செய்து கொண்டு அது தெரிந்து விடாமல் இருக்க அங்கும் இங்கும் அல்லாடுவார். கடைசியில் அது இரண்டு ஹீரோயின்களுக்கும்  தெரிந்து, போகட்டும் சனியன் இரண்டு
பேரும் ஒரே ஹீரோவை பகிர்ந்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு  வருவார்கள்.சுபம்... மனிதனுக்கு தான் இந்த limitation .கிருஷ்ணா பரமாத்மா ஒரே சமயத்தில் ருக்மிணியின் வீட்டில் ருக்மிணி கிருஷ்ணனாகவும் சத்யபாமா வீட்டில் சத்யபாமா கிருஷ்ணனாகவும் இருக்க முடியும். அதே போல எலக்ட்ரான்கள் ஒரே சமயத்தில் தன் எல்லா சின்ன வீடுகளிலும்(அணுக்களிலும்) இருக்கின்றன. எலக்ட்ரான்களின் இந்த குவாண்டம்  பண்பு வேதியியலை,
நம் வாழ்வை சாத்தியமாக்குகிறது.]

ஏற்கனவே ௮-௮-௮ வில் சொன்னது போல எலக்ட்ரான்கள் அணுவின் ஆற்றல் மட்டங்களுக்கு இடையே உள்ள தூரத்தை டெலிபோர்ட் செய்கின்றன.அதாவது இடையே எங்கும் பயணிக்காமல் இங்கிருந்து மறைந்து அங்கே தோன்றுகின்றன. இதை வெளியின் மிகச்சிறு பகுப்பு (quantization of space ) என்பார்கள்.இதை மிகப்பெரிய தூரங்களுக்கு நம்மால் நீட்டிக்க முடிந்தால் teleportation சாத்தியமாகும்.ஆனால் இதற்கு நாம் பிளான்க் மாறிலியின் மதிப்பை மாற்ற வேண்டி இருக்கும். மனிதனால் இயற்கையின் மாறிலிகளை மாற்ற முடியுமா என்று தெரியவில்லை.
(  அதாவது பிளான்க் நீளம் ஒரு மீட்டராக இருந்தால் நாம் ஒவ்வொரு மீட்டராக 'ஜம்ப்' செய்து நடக்க வேண்டி இருக்கும். ஒரு இடத்தில் மறைந்து மீண்டும் ஒரு மீட்டர் கடந்து முடித்த பின் அங்கே தோன்ற வேண்டி இருக்கும். ஒரு மீட்டருக்கும் குறைந்த தூரங்களை கடக்க முடியாது. (1 .5 மீட்டர், 2 .5 மீட்டர் etc ))

இன்னொரு சாத்தியம் ஒரு பொருளை அணு அணுவாகப் பிரித்து ஒவ்வொன்றையும் ஒளியின் மூலம் வேறு இடத்துக்கு அனுப்பி பிறகு
அங்கே Re -construct செய்வது.[நாம் அனுப்பும் தகவல் தொடர்பு சிக்னல்கள் இவ்வாறு தான் செல்கின்றன]இதற்கு நாம் பொருளின் அணுக்கள் எல்லாம்
ஒருமித்த ஒத்திசைந்த ஏகாந்த நிலையில் (ராணுவ வீரர்கள்
போல ) துடிக்கும்படி செய்யவேண்டும். 


வேறு வேறு அணுக்கள் இல்லை. எல்லாம் ஒரே அணு! அதிக வெப்ப நிலையில் இதை செய்ய முடியாது.அதிக வெப்பநிலையில் ஒரு பொருளின் அணுக்கள் கண்டபடி அதிர்ந்து கொண்டிருக்கும். எனவே பொருளை கிட்டத்தட்ட பூஜ்ஜிய ஆற்றல் நிலைக்கு (-273 டிகிரி செல்சியஸ்) அருகில் கொண்டுவர வேண்டும்.அப்போது அணுக்கள் சக்தி இல்லாததால் சிவனே என்று கிட்டத்தட்ட இயக்கமற்ற நிலைக்கு வந்து மிக மிக மெதுவாக ஒரே கதியில் துடிக்க ஆரம்பிக்கின்றன. எல்லா அணுக்களின் அலைசார்பும் (WAVE FUNCTION)ஒன்றுடன் ஒன்று பொருந்தி நமக்கு ஒரு மெகா ஏகாந்த அணு கிடைக்கிறது. ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகள் ஒரு பெரிய கூட்டத்தையே ஹிப்னாடைஸ் செய்து எல்லா ஆட்களையும் ஒரே மனநிலை கொண்ட ஒற்றை ஆளாக மாற்றுவது போல![இந்த விளைவை கண்டுபித்தவர் நம் இந்திய விஞ்ஞானி போஸ் !] இப்படி ஏகத்துக்கு குளிர்விக்கப்பட்ட பொருளின் மீது சாதாரண நிலையில் இருக்கும் அணுக்களை அனுப்ப வேண்டியது. (உதா: ருபீடியம் அணுக்கள்) அவை குளிர்விக்கப்பட்ட பொருளின் அணுக்களுடன் வெப்பசமநிலை அடைய வேண்டி ஆற்றலை (ஒளியை) உமிழ்ந்து தாமும் குளிர்கின்றன. இப்போது வெளிவரும் ஒளி ஆச்சர்யமாக அந்த ஒரிஜினல் பொருளை மீண்டும் கட்டமைக்கும்(re-construct)அத்தனை தகவல்களையும் கொண்டிருக்கிறது. இந்த முறை மூலம் இப்போது விஞ்ஞானிகள் சில நூறு அணுக்களை டெலிபோர்ட் செய்துள்ளனர். ஒரு எலியையோ மனிதனையோ இப்படி கடத்த முடியுமா என்று தெரியவில்லை. மேலும் மனிதன் என்பவன் வெறும் அணு, மூலக்கூறுகளின் கலவை தானா என்றும் தெரியவில்லை.

ஸ்ட்ரிங் தியரி -இழைக் கொள்கை
=======================
 
அறிவியலின் நோக்கம் என்ன என்று கேட்டால் நமக்கு சரியான விடை கிடைப்பதில்லை.

*மனித வாழ்வை எளிமையாக ஆக்குவதா?

* பிரபஞ்சம் முழுவதும் (if not நம் காலக்சியில்) குடியேற்றங்களை அமைப்பதா?

*மனிதனை மரணமற்றவனாக மாற்றி கடவுளின் இடத்தை பிடித்துக் கொள்வதா?

* வெறுமனே இயற்கையின் ரகசியங்களை அறிந்து கொள்வதா?

கடவுள் அல்லது இயற்கை, தன்னுடைய இடத்தை மனிதன் பிடித்துக் கொள்வதை விரும்புமா என்று தெரியவில்லை. தனது ரகசியங்களை நெருங்க முடியாதபடி அது இயற்கையின் விதிகளை அமைத்திருக்கலாம். ஆனாலும் சில வி
ஞ்ஞானிகள் இயற்கையின் ரகசியங்களை அறிந்து கொள்ள முடியும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். மனிதன் தன்னுடைய இடத்தைப் பிடிக்கக் கூடாது என்று கடவுள் கருதினால் அவர் மனிதனை வெறுமனே ஐந்தறிவுள்ள மனிதனாகப் படைத்திருக்கலாம். மனிதனுக்கு ஆறறிவு கொடுத்திருக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. என்கிறார்கள் .மனிதனின் ஆறாம் அறிவு வியக்க வைக்கிறது. மிகச் சிறியதில் இருந்து மிகப் பெரியது வரையில் ஓரளவு மனிதன் இயற்கையின் மர்மங்களை அறிந்து வைத்துள்ளான்.பூமி பிரபஞ்சத்தின் மையம் அல்ல ....பிரபஞ்சம் மிகப் பெரியது என்ற அறிவை அவன் அடைந்திருக்கிறான் .இந்த அறிவை முடிவில்லாமல் விருத்தி செய்ய இயற்கை அனுமதிக்குமா? நம் அறிவின் எல்லை என்ன? தனது பொக்கிஷங்களை ஒன்று விடாமல் இயற்கை மனிதனுக்கு தொடர்ந்து காட்டுமா?அல்லது சில சாவிகளை ஒருபோதும் காட்டாமல் ஒளித்து வைக்குமா?

நம்மால் இயற்கையின் ரகசியங்களை அறிய முடியாவிட்டாலும் நம் அறிவின் எல்லை என்ன என்பதையாவது அறிந்து கொள்ள இயலுமா? அறிவியலின் பணி என்பது எல்லாவற்றிலும் நம்மை வெற்றி கொள்ள செய்வது மட்டும் அல்ல. நம் அறிவின் எல்லையை அறிந்து கொள்ளும் ஒரு முயற்சியும் கூட.உதாரணமாக ஹைசன்பர்கின் நிச்சயமில்லாத் தத்துவம் நம் அறிவின் கீழ் விளிம்பை நிர்ணயிக்கிறது. இதை கண்டுபிடித்ததே மனித மூளையின் மிகப் பெரிய சாதனை தான்.

இன்னொரு விஷயமும் மனிதனை வருத்துகிறது. உண்மை என்பது objective அல்லது subjective ?நான் இல்லாவிட்டால் இந்த பிரபஞ்சம் எப்படி
இருக்கும்? கவனிப்பவன்(observer ) இருப்பதால் தான் 'கவனிக்கப்படுவதும்' (observed ) இருக்கிறதா?நாம் கண்டுபிடித்து வைத்துள்ள அறிவியல் உண்மைகள் மற்றும் விதிகள் 'மனிதனை சார்ந்தவையா?' (anthropic ) அல்லது சார்பற்ற உண்மை , objective reality என்று ஏதேனும் இருக்கிறதா? என்பது. இந்த ஒரு விஷயம் தான் அறிவியலை ஆன்மீகத்தை விட்டு முற்றிலும் வேறுபடுத்துகிறது. ஆன்மிகம் தூரத்து நட்சத்திரங்களைப் பற்றியும் அணுக்களுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதைப் பற்றியும் ஒருபோதும் கவலை கொண்டதில்லை. வேதத்தில் ஸ்ட்ரிங் தியரி இருக்கிறது பகவத் கீதையில் ரிலேடிவிடி இருக்கிறது என்பதெல்லாம்
சுத்த அபத்தம். -- வில் பெரும்பாலான இடங்களில் நானே இந்த அறிவியல்-ஆன்மீக ஒப்பீடு தவறை செய்திருக்கிறேன். அவை வாசகர்களிடத்தில் ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவே.ஆன்மிகம் முழுக்க முழுக்க நான் யார்? எனக்கு உள்ளே என்ன இருக்கிறது ?என்பதில் கவனம் செலுத்துகிறதே தவிர எலக்ட்ரான் என்பது துகளா அலையா என்பதில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை.



சரி. அப்படியானால் தன்னை அறிந்த ஒரு ஞானிக்கு இயற்கையின் புதிர்கள் எல்லாம் விடுவிக்கப்படுமா? புத்தர் ஒருவரிடம் இருந்து பிரபஞ்சம் எதனால் ஆனது?காலப் பயணம் சாத்தியமா? போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்குமா? கௌதம புத்தரிடமே இத்தகைய கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அவர் இத்தைகைய கேள்விகளுக்கு விடை சொல்ல மறுத்து வந்தார். விடை தெரியாது என்று அர்த்தம் அல்ல. தன்னை அறிந்த ஒரு மகோன்னத பரவச நிலையில் இத்தகைய கேள்விகள் சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றலாம். அல்லது கேள்விகளே மறைந்து விடலாம். அதே போல ஞானம், பக்தி, பரவசம் இத்தகைய நிகழ்வுகளை அறிவியல் அல்லது இயற்பியல் மூலம் விளக்க முடியுமா என்றும் ஆராய்சிகள் நடந்து  வருகின்றன. மூளையில் சில நியூரான்கள் தூண்டப்படுவதன் மூலம் இன்பம் துன்பம் இவை உணரப்படுகின்றன என்றால் நியூரான்களின் உள்ளே என்ன நடக்கிறது? (குவாண்டம் நிலையில்) சுவை என்பது என்ன ? சுவை உண்மையில் சர்க்கரையில் இருக்கிறதா அல்லது நாக்கில் இருக்கிறதா? சர்கரையின் அணுக்களும் நாக்கில் உள்ள செல்கின் அணுக்களும் நடத்தும் பரிமாற்றங்கள் தான் சுவையாக உணரப்படுகின்றதா? வாசம் என்பது மலரிலா?நாசியிலா ? அல்லது மலரும் நாசியும் நடத்தும் வினையிலா? பிரபஞ்சத்தில் எல்லாமே அணுக்களின் திருநடனம் தானா?  

உதாரணமாக இயற்பியல், விசைகளை துகள்களின் இடையறாத பரிமாற்றம் என்கிறது.அணுவின் கருவுக்குள்ளே நியூட்ரான்களும் ப்ரோட்டான்களும் பிணைத்து வைக்கப்பட்டுள்ளன என்று தெரியும். ஒரே மின் சுமை கொண்ட ப்ரோட்டான்களை ஒன்றை ஒன்று விலகி ஓடிவிடாமல் ஒட்டி வைத்திருப்பது வலிய விசை எனப்படும் ஒரு விசை.ஆனால் இந்த விசை துகள்கள் மிக மிக அருகில் இருக்கும் போது மட்டுமே செயல்படுகிறது. விண்மீன்களில் நான்கு ஹைட்ரஜன் அணுக்கருக்கள் (ப்ரோட்டான்கள்) இணைந்து ஒரு ஹீலியன் அணுக்கரு (இரண்டு  ப்ரோட்டான் இரண்டு  நியூட்டரான்) உருவாகி அதன் விளைவாக நமக்கு ஆற்றல் கிடைக்கிறது. இதை நாம் அணுக்களின் பரிமாற்றங்கள் மூலம் விளக்க இயலும். 

நட்சத்திரங்களின் ஆற்றலுக்குக்காரணம் அதன் உள்ளே நடக்கும் அணுக்கரு இணைவு என்று கண்டுபிடிக்கப்பட்டாலும் அதில் ஒரு புதிர் நிலவியது.
சூரியன் போன்ற ஒரு மிடில் சைஸ் நட்சத்திரத்தின் வெப்பநிலை இரண்டு ப்ரோட்டான்களை மிக மிக அருகே வரவைத்து ஒட்டிக் கொள்ள வைக்கப்
போதுமானதாக இல்லை என்று கணக்கிடப்பட்டது. (ப்ரோட்டான்கள் ஒன்றை ஒன்று விலக்கும் என்பதால் )எனவே இந்த வினையில் W -போசான் என்ற துகள் பங்குபெறுவதாக அனுமானிக்கபட்டது.ப்ரோடானின் உள்ளே உள்ள மேல் குவார்க் (UP QUARK ) ஒன்று W -போசான் என்ற (நிலையற்ற) துகளை உமிழ்ந்து கீழ் குவார்க் என்ற மற்றொரு அடிப்படைத் துகளாக மாறுகிறது.எனவே ப்ரோடான் நியூட்ரானாக மாற்றப்பட்டு ,இந்த நியூட்ரானும் மற்றொரு ப்ரோடானும் இணைந்து[
நியூட்ரான் மின்சுமை அற்றது என்பதால் எளிதில் ப்ரோடானுடன் இணைகிறது ] 'டியூட்ரான்' என்ற இடைநிலை தனிமம் உருவாகிறது. வினையில் வெளிப்பட்ட W -போசான்  நிலையற்றதாகையால் சிதைந்து ஒரு பாசிட்ரான் மற்றும் நியூட்ரினோ துகள்கள் கிடைக்கின்றன.[சூரியனில் இருந்து வெளிப்படும் அதிவேக நியூட்ரினோ துகள்கள் இப்படி தான் உருவாகின்றன]. மீதமிருக்கும் பாசிட்ரான் தன் எதிர் இணையான எலக்ட்ரானுடன்  இணைந்து அழிந்து ஆற்றல் (ஒளி)வெளிப்படுகிறது. டியூட்ரான் என்ற இடைநிலைத் தனிமம் மீண்டும் ஒரு ப்ரோடானுடன் இணைந்து ஹீலியம் உருவாகிறது. இப்படிப்பட்ட துகள்களின் இடையறாத பரிமாற்றங்களால் விசைகள் உணரப்படுகின்றன. துகள்கள் பரிமாற்றப்படும் போது ஏற்படும் நிறை இழப்பு ஆற்றலாக வெளிப்படுகிறது. இந்த துகள் வினைகள் கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளன.[[குறிப்பு : சூரியனை விட மிக அதிக வெப்பநிலை கொண்ட விண்மீன்களில் இந்த களேபரம் எதுவும் இன்றி நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் வெறுமனே இணைந்து ஒரு ஹீலியம் உருவாகி ஆற்றல் வெளிப்படுகிறது.]



 


இவை எல்லாவற்றுக்கும் மேலாக விழிப்புணர்வு Consciousness என்பது என்ன?அதுவும் இயற்பியல் விளைவு தானா?உதாரணமாக உங்கள் உடலில் பில்லியன் கணக்கில் அணுக்கள் இருக்கலாம் . அவைகளுக்கெல்லாம் 'நான்' என்ற விழிப்புணர்வு இருக்குமா? எல்லாம் சேர்ந்ததும் நான் என்ற உணர்வு எப்படி உங்களுக்கு வருகிறது?

இங்கே இரண்டு கேள்விகள்.

* பிரபஞ்சம் ஏன் இருக்கிறது?
* பிரபஞ்சம் ஏன் 'இப்படி' இருக்கிறது?


பிரபஞ்சம் ஏன் இருக்கிறது? என்பது தத்துவ வேதாந்த விசாரம். அதை விட்டு விடுவோம்.



ஜென் ஞானி ஒருவரிடம் சீடன் ஒருவன் கேட்கிறான்.
'குருவே, பிரபஞ்சத்திலேயே அதிசயமான விஷயம் என்ன?'
'நான் இங்கே உன் முன்னே உட்கார்ந்திருக்கிறேனே அதுதான்' ...

புரிகிறதா?



பிரபஞ்சம் ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு anthropic தத்துவத்தை விளக்கம் சொல்கிறார்கள். YOU ARE HERE என்ற போர்டை பல கட்டிடங்களில் பார்த்திருப்பீர்கள். அதை நாம் படிக்கும் போது நாம் இங்கே இருக்கிறோம் என்று இந்த போர்டுக்கு எப்படித் தெரிந்தது ??? என்று நினைக்கலாம். நாம் அங்கு இருப்பதால் தான் you are here என்று படிக்க முடிகிறது.அதே போல பிரபஞ்சம் ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பிரபஞ்சம் இப்படி இல்லை என்றால் (பிரபஞ்சம் ஏன் இப்படி இருக்கிறது என்ற) கேள்வி கேட்க நீயே இருக்க மாட்டாய் என்று சொல்லி குழப்புவது!


சரி.

இந்தப் பதிவில் மட்டும் நாம் எலக்ட்ரான், குவார்க் ,நியூட்ரினோ, போட்டான் ,W போசான் என்று நிறைய அடிப்படைத்துகள்களை பார்த்தோம்.ஏன் இத்தனை அடிப்படைத் துகள்கள் இருக்கின்றன?ஒன்றே ஒன்று அல்லது இரண்டு இருந்தால் போதாதா? ஏன் இத்தனை வெரைட்டி?ஒவ்வொன்றுக்கும் வேறு நிறை, வேறு சுழற்சி (SPIN ) வேறு நிறம்? வேறு பண்புகள்? வேறு மின்சுமை? இவற்றுக்கு விடையாக எல்லாத் துகள்களையும் ஒரு பொதுவான பொருளின் பண்பாக 
விளக்கும் முயற்சி தான் ஸ்ட்ரிங் தியரி.

சமுத்ரா

10 comments:

Unknown said...

thanks for your post. daily i will open and wait for your AAA. Today you have done it. Thanks

Unknown said...

And also another request to you. I want to understand mathematics which is i seen more complicated. Please if you have that level of knowledge share with me.

Katz said...

good one. please post often...

Anonymous said...

Thank you sir.
I have been waiting for this AAA post for a long time..


Suresh

ammuthalib said...

Did you watch the Big Bang Theory television series?

ammuthalib said...

AAA is good.

ரத்தினகிரி said...

மிகவும் அருமை.

Vijayan Durai said...

தலைசுற்றுகிறது :)

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_16.html?showComment=1392506757030#c2810563175120508250

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dd said...

மிகவும் அருமை