இந்த வலையில் தேடவும்

Friday, September 7, 2012

கலைடாஸ்கோப்-72

லைடாஸ்கோப்-72 * உங்களை வரவேற்கிறது

X

பாடல்களை சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ள அந்தக் காலத்தில் அந்தாதிகளை எழுதினார்கள் . அதாவது ஒரு செய்யுள் முடியும் சொல்லை முதலாவதாக வைத்துக் கொண்டு அடுத்த செய்யுளை ஆரம்பிப்பது. கடைசி பாடலின்
கடைசி சொல்லை முதல் பாடலின் முதல் சொல்லோடு ஒரு மாலை போல கட்டி முடிப்பது.புகழ் பெற்ற சில அந்தாதிகள் கம்பரின் சரஸ்வதி அந்தாதி,அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி போன்றவை.

மயிலே குயிலே என்று காதலியை மட்டும் அல்ல இறைவியையும் வர்ணிக்கலாம் . கம்பர் இவ்வாறு பாடுகிறார்.

மயிலேமடப் பிடியே கொடியே இளமான் பிணையே
குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூர் இருட்கோர்
வெயிலே நிலவெ
ழு மேனி மின்னே இனிவேறு தவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற்பாதங்களே


மனக் கூர் இருட்கோர் வெயிலே! என்ன ஒரு பிரயோகம்...இருளுக்கு அவள் வெயிலாம்! (வெய்யில் என்பது தவறு வெயில் என்பதே சரி) .அடுத்த பாடல் பாதங்கள் என்று ஆரம்பிக்கிறது.(பாதாம்புயத்திற் பணிவார் தமக்கு)

இவரும் தன் இறைவியை கிளி என்கிறார். அபிராமி பட்டர் கொஞ்சம் பெருத்தன கருத்தன என்றெல்லாம் naughty -ஆகப் பாடி இருக்கிறார். அதை விட்டு விடுவோம்.

கிளியே கிளை
ர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே!
(அடுத்த பாடல் அதிசயம் என்று தொடங்கும்)

ஒளிரும் ஒளிக்கு இடமே
! கொஞ்சம் இயற்பியல் வருவது போல இருக்கிறது (ஆரம்பிச்சுட்டான்யா!) ஒளி எப்படிப் பரவுகிறது?
ஒளிக்கு இடம் தருவது எது?என்று விஞ்ஞானிகள் குழம்பி வருகிறார்கள். வெளியின் ஐந்தாவது பரிமாணத்தில் பரவலாம் என்று யோசித்து வருகிறார்கள். ஒருவேளை கடவுள் தான் ஒளிக்கு ஊடகமோ?

எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே! ஒன்றும் இல்லாததும் எல்லாமுமாக இருப்பதும் கடவுள்! வெளிமுதல் பூதங்கள் என்பதை வெளி முதலான பஞ்ச பூதங்கள் அல்லது வெளியை முதலாய்க் கொண்டு உதித்த பூதங்கள் என்றும் கொள்ளலாம். பூதங்கள் எல்லாம் ஒன்றுமற்ற வெளியில் இருந்தே பிறந்தன என்கிறாரோ ?

அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே! -பக்தன் எந்த அளவோ பகவானும் அந்த அளவு. எந்த மாத்ரமுன எவ்வரு தலசின அந்த மாத்ரமே நீவு!நீ கடவுளை கல்யாண ப்ரோக்கராகப் பார்த்தால் அவன் கல்யாண ப்ரோக்கர் தான் என்ன செய்வது? என்கிறார் அன்னமாச்சாரியார்.

சரி.

அபிராமியின் குண்டலம் நிலவு போல பெரிதாய் ஒளிர்ந்தது என்றால் அப்போது அவளின் காது எவ்வளவு பெரிதாய் இருக்க வேண்டும்? அவள் எவ்வளவு பெரியவளாய் இருக்க வேண்டும்? அப்படிப்பட்ட ஒரு உருவம் அறிவியல் ரீதியில் சாத்தியமா?

சின்ன வயதில் பாட்டி பாட்டு சொல்லித் தருவாள்:-

எழுதிக்கோ. மருகேலரா ஒ ராகவா...
.
..
சூர்ய சுதாகர லோசனா..

அக்கா இடையில் வந்து ' பாட்டி , ஒரு நிமிஷம், உண்மையிலேயே பகவானோட கண்ணு சூரியன் சந்திரன் மாதிரி இருக்குமா?'என்பாள்.

பாட்டி 'அதெல்லாம் ஒரு உபமானம் டி ' என்பாள்.

'அதெப்படி?? சந்திரன் சூரியனை விட ரொம்ப சின்னது...ஒரு கண்ணு பெருசா ஒரு கண்ணு சிறுசா இருந்தா நல்லாருக்குமா?'

'இங்கேயிருந்து பார்கறப்ப ரெண்டும் ஒரே சைசில் தானே இருக்கு'

'போ பாட்டி உனக்கு சயின்சே தெரியலை'

'அதில்லைடி,,, இதுக்கெல்லாம் நேரடி அர்த்தம் எடுத்துக்கக்கூடாது..சூரியன் சந்திரன் போன்ற கண்ணு அப்படீன்னா பகவான் ஒரே சமயத்துல பக்தர்கள் மேல சந்திரன் போல இதமாகவும் அதே சமயம் ராட்சசர்களுக்கு சுட்டெரிக்கும் சூரியன் போலவும்
இருப்பான்' ன்னு அர்த்தம் பண்ணிக்கணும்...

பாட்டியின் இந்த அறிவுக்குக் காரணம் அவள் வயது.

XX

வயதாகிறதே என்ற கவலை பட்டினத்தாரில் இருந்து பக்கத்து வீட்டு பத்மநாபன் மாமா வரை எல்லாரையும் ஆட்டிப் படைத்துள்ளது.

வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்து இருகண்கள் இருண்டு
வயதுமுதிர்ந்து
நரைதிரை வந்து
வாதவிரோத
குரோதம் அடைந்து -என்று பட்டினத்தாருக்கு தத்துவார்த்த கவலைகள் என்றால் பத்மநாபன் மாமாவுக்கு ரிட்டையர் ஆனதும் பென்சன் கிடையாதே,,எப்படி காலம் தள்ளுவது? என்ற கவலை ....சரி.

மனித உடலின் வடிவமைப்பின்படி அது தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளவேண்டும் என்கிறார்கள் வி
ஞ்ஞானிகள். வயதாவதற்கு உயிரியல் காரணங்கள் எதுவும் இல்லையாம். பின்னே நமக்கு ஏன் வயதாகிறது? இயற்கையின் வஞ்சனைகளில் இதுவும் ஒன்று. வயதாகி செத்துப் போ என்ற செய்தி நம் ஜீன்களிலேயே எழுதப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்து வருகிறார்கள். உயிரியல் விஞ்ஞானிகள். எந்திரன் ரஜினிகாந்த் போல எப்போதும் இளமையாக இருக்கும் சிலரிடம் ஜீன் ஆராய்சிகள் செய்து வருகிறார்கள். Aging ஜீன்களைத் தேடும் வேலை கடற்கரை மணலுக்கிடையே கடுகைத் தேடுவது போல என்கிறார்கள். (அதானே? சுலபமாக வைத்தால் மனிதன் அதைக் கண்டுபிடித்து ஹிரண்யகசிபு போல அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விடுவான்!) .

வயதாவதற்கு பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கை Free radical கொள்கை. இதன்படி நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமாக கருதப்படும் ஆக்ஸிஜனே நமக்கு எமனாக மாறி நம்மை தாத்தா பாட்டி ஆக்குகிறது.அமுதமே விஷம்! இரும்பு துருப்பிடிப்பது போல வெள்ளி கறுத்துப் போவது போல ஆக்சிஜனால் நம் செல்கள் மெல்ல மெல்ல சேதாரம் அடைகின்றன. அதாவது நம் செல்களிலும் துருப்பிடிக்கிறது.

எனவே சில
விஞ்ஞானிகள் ஆழமாக மூச்சு விடுவது சிறந்தது அல்ல என்கிறார்கள். உள்ளே செல்லும் ஆக்சிஜன் நமக்கு நல்லது செய்து கொண்டே சைக்கிள் கேப்பில் free radical என்ற ஒன்றை உருவாக்கி விடுகிறது.இவை தங்களுடைய எலக்ட்ரான் தேவையை பூர்த்தி செய்ய பக்கத்தில் சிவனே என்று இருக்கும் செல்களை தொந்தரவு செய்கின்றன. படிப்படியாக எலக்ட்ரான்களை இழக்கும் செல்கள் தங்கள் கட்டமைப்பை இழந்து மறுபடியும் புணரமைக்கமுடியாதபடி சேதமடைந்து விடுகின்றன. சில நேரங்களில் செல்களே Free radicals ஆக மாறி மற்ற செல்களை சேர்த்துக் கொண்டு கண்டபடி வளர்ந்து புற்றுநோயாக உருவாகிறது.antioxidant களை உட்கொள்வதன் மூலம் வயதாவதை ஓரளவு தாமதம் செய்யலாம். வைட்டமின் ஏ, ஈ, மற்றும் சி இவைகளில் இது இருக்கிறது.டீ கூட ஆண்டி ஆக்சிடன்ட் என்கிறார்கள்.சரி.

பக்கத்து வீட்டு மாமாவுக்கும் மாமிக்கும் ஒரே வயதில் தான் கல்யாணம் நடந்தது. இப்போது மாமி இன்னும் மினுமினுப்பாக இருக்க மாமா வத்திப் போன கொத்தவரங்காய் போல ஆகி விட்டாரே என்று கேட்டால் அதற்கு பெண்களின் உடம்பில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.எனவே மாதவிலக்கு நிற்கும் வரை பெண்கள் வேகமாக வயதாவதில் இருந்து இயற்கையாகவே காக்க
ப்படுகிறார்கள். (சந்ததிகளை தன் உடம்பில் வைத்து உருவாக்கித் தருவதால் பெண்களுக்கு இயற்கையே கொடுத்த சலுகை! ஆண்களைப் பார்த்து அஸ்கு புஸ்கு, நீ சும்மா ஆரம்பிச்சு தானே வைத்தாய்? என்கிறது இயற்கை) ஆண்களோ கல்யாணம் ஆன மறுநாளில் இருந்தே அப்பா ஆவதற்கு தயார் ஆகிறார்களோ இல்லையோ 'அங்கிள்' ஆவதற்குத் தயார் ஆகி விடுகிறார்கள்.

இன்னொரு ஆச்சரியமான தகவல்: அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பவர்கள் நீண்ட நாள் வாழ்வார்களா
ம். மணிக்கொருதரம் பிரிஜ்ஜை திறந்து எதையாவது கொறித்துக் கொண்டே இருக்கும் போது உங்கள் இஞ்சின் அதிக வெப்பத்தை வெளியிடுகிறது. இந்த வெப்பமே உங்கள் செல்களை அரித்து விடுகிறது. ஆக்சிஜன் நன்றாக எரிந்து மேலும் அதிக free radicals ஐ தோற்றுவிக்கிறது.சில பேர் உயிர்வாழ்வதே சாப்பாட்டுக்கு தான். இப்படி பட்டினி கிடந்து நீண்ட நாள் வாழத்தான் வேண்டுமா? பஜ்ஜி போண்டா வடை மிக்சர் ஜிலேபி மைசூர்பா இதெல்லாம் சாப்பிடாமல் தொண்ணூறு வயது வரை இருந்தென்ன லாபம் என்பார்கள்.

தண்டவாளத்தில் அடுக்கிய காசுகளை ரயில் எவ்வாறு சிதைக்கிறதோ அப்படி காலம் நம்மை சிதைத்து விடுகிறது என்பார் சுஜாதா.
..
...
கால ரயிலோட நாமெல்லாம் காசானோம்
வாலிபம் போய் ஆச்சே வயசு!


- தத்துவக் கவிதைகளிலும் அழகு தமிழ்!

XXX

தமிழில் கோவை தமிழ், திருநெல்வேலி தமிழ், மதுரைத் தமிழ், சென்னை செந்தமிழ் என்று இருப்பது போல சமயத்தமிழ் என்றும் இருக்கிறது போல.கீழே உள்ளவை மூன்று வெவ்வேறு சமயத்துக்கு உண்டான தமிழ்கள்:

"பாபியான துரியோதனன் திரௌபதியை ஸ்த்ரீஹரணம் செய்து சபைக்கு அழைத்துவரும்படி ஆணையிட்டான். சேவகன் சென்று அவள் தான் அகத்துக்கு விலக்காய் இருக்கிறேன் என்றியம்பியதையும் சட்டை செய்யாது அவளை பலவந்தமாய் சபைக்கு கொணர்ந்தான். சபையில்
திரௌபதி பெரியோர்களை பார்த்து நமஸ்கரித்து ஹே பண்டிதர்களே பீஷ்மரே த்ரோணரே உங்கள் கண்முன்பே உங்கள் புத்ரி போலிருக்கும் மாதொருத்திக்கு அபமானம் நேர்கையில் அதைக் கண்டும் வாளாயிருக்க வேணும் என்று உங்கள் சாஸ்திரங்கள் இயம்புகின்றவோ என்று வினவினாள். இப்போது பாபியான துச்சாதனன் அவள் வஸ்திரங்களைப் பற்றிக் களையலானான். மனுஷ்யர்களால் தனக்கினி உபகாரம் இல்லை என்றுணர்ந்த அப்புனித நாரி மேலே நோக்கி அச்சுதனை ஸ்துதி செய்யலுற்றாள் .ஹே கோபாலா, ஜகத் ரட்சகா, பக்த வத்சலா, ஹரே, அபலை எனக்கு நேர்ந்த இந்த அபமானத்தை நீயே அகற்றியருளல் வேண்டும் பிரபோ என்று பல விதங்களில் ஸ்துதித்து பின் கைகளிரண்டையும் சிரமேல் உயர்த்தி கோவிந்தா என்னு மூர்சையில் விழலானாள். அப்போது சபையிற் தோன்றிய ஸ்ரீயப் பதியான பகவான் தன் கருணையினால் திரௌபதிக்கு விதவிதமாக வஸ்திரங்கள் தொடர்ந்து வரும்படிக்குப் பணித்தார். வஸ்திரங்களை உரிய சக்தி அற்றுப் போய் துச்சாதனன் மூர்ச்சித்து விழுந்தான். சபையில் இருந்தோர்கள் மற்றும் பாண்டவர்கள் ஹே கிருஷ்ண ஹே மாதவ என்று பலவிதங்களிலும் பகவானை நமஸ்கரித்தனர்"

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப் பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.
எபேசியர் 2:8-9

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
பேதுரு 1:3

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை
விளங்கப்பண்ணுகிறார் .
ரோமர் 5:8



‘அவளும், அவளுடைய சமுதாயத்தினரும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன். அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான். ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை’ வானங்களிலும்,பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும், இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீஙகள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா? ‘



இன்னும் அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர்; அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். “இன்னும் கொடுரமானதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது தான் நரக) நெருப்பு; அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான்; மேலும்: அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

XXXX

கூறு நண்பனே,
இசை உனக்கு இனிக்காது என்கிறாய்
இலக்கியங்கள் என்றாலே
அலர்ஜி என்கிறாய்
புத்தகங்களைப் புரட்டும்
பழக்கமே இல்லை என்றாய்
கவிதைக்கும் உனக்கும்
காத தூரம் என்கிறாய்
குழந்தைகளுடன் விளையாட்டு
காலவிரயம் என்கிறாய்
-பிறகு
தினந்தினமும்
அவசர வாழ்வில்
அடிபட்டு துவண்ட மனதை
எப்படித்தான்
ஆசுவாசம் செய்வாய்?


* என் பிம்பம் எங்கோ
எதிரொளித்துக் கொண்டே இருக்கிறது
நான் அறியாமலேயே
தூரத்து காரின் கன்னாடியிலேயோ
சாலையில் தேங்கியிருக்கும் மழை நீரிலேயோ
சைக்கிள் காரன் கொண்டுசெல்லும்
சில்வர் பாத்திரத்திலோ
பாப்பாவின் உடையில் இருக்கும்
குட்டிக் குட்டி
கண்ணாடிகளிலேயோ
தொலைவில் உள்ள கட்டிடத்தின்
தூங்கும் ஜன்னலிலோ
நான் அறியாமலேயே
என் பிம்பம் எங்கோ
எதிரொளித்துக் கொண்டே இருக்கிறது
எப்படியோ

XXXXX


எப்படி கடவுளை சிரிக்க வைப்பது? அவரிடம் உங்கள் எதிர்கால திட்டங்களைக் கூறுங்கள் - உட்டி ஆலன்

உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி. காலம் பறக்கிறது. உங்களுக்கு ஒரு நல்ல செய்தி..நீங்கள் தான் அதன் பைலட் - மைக்கேல் ஆட்சலர்

விளையாட்டை விளையாடுபவர்களை விட அதன் பார்வையா
ர்களே அதைத் தெளிவாகப் பார்க்கிறார்கள் - சீனப் பழமொழி

எல்லாரும் ஒருவிதத்தில் நிலாவைப் போன்றவர்கள். தங்கள் இருண்ட பக்கத்தை யாருக்கும் காட்டாமல் வைத்திருக்கிறார்கள் - மார்க் ட்வைன்

வாழ்வை விட மரணமே பொதுவானது. ஏனென்றால் எல்லாரும் சாகிறார்கள். ஆனால் எல்லாரும் வாழ்வதில்லை - சார்ஸ்

எங்கே செல்கிறோம் என்ற இலக்கு இல்லாதவர்கள் பாதை தவறுவதே இல்லை - ஹெர்ப் கோஹென்

பூனைகளுடன் கழித்த நேரங்கள் ஒருபொழுதும் வீணாக்கப்படுவதில்லை - கோலேட்

புத்திசாலி ஒரு பிரச்சனையை தீர்க்கிறான். ஞானியோ அதை விட்டு விலகி இருக்கிறான் - ஐன்ஸ்டீன்

நாம் நம் பாவங்களால் தண்டிக்கப்படுகிறோம். பாவங்களுக்காக அல்ல -
ஹபார்ட் ,எல்பர்ட்

XXXXXX

எல்பர்ட் ஆஸ்பத்திரி ஒன்றில் கண் விழித்தான்.

அங்கே வந்த டாக்டர் அவனைப் பார்த்து ' எல்பர்ட், குட் மார்னிங்.உனக்கு நான் ஒரு கெட்ட செய்தி மற்றும் ஒரு நல்ல செய்தி சொல்ல வேண்டும்.எதனை முதலில் சொல்லட்டும் ? என்று கேட்டார்.

கலவரமடைந்த எல்பர்ட் "கெட்ட செய்தியை முதலில் சொல்லுங்க டாக்டர்" என்றான்.

"உன் கால்கள் இரண்டையும் ஆபரேஷன் செய்து எடுத்து விட்டோம்"

"ஓ மை காட்! அப்படியானால் நல்ல செய்தி?"

"பக்கத்து படுக்கையில் இருப்பவர் உன் ஷூ-க்களை விலைக்கு வாங்க விரும்புகிறார்"


ஓஷோ சொல்கிறார் : சிரிப்பு என்பது தெய்வீகத்தின் பாடல்.




11 comments:

சிவகுமாரன் said...

அந்தாதி வடிவில் கலைடாஸ்கோப் அருமை.
கடைசி வரியை நீக்கி விடுங்கள்.
பதிவை படிக்கும் போதே தெரிந்து விடுகிறதே.
Free Radical உதாரணம் வெகு அருமை. எப்படி இப்படியெல்லாம் உங்களுக்கு யோசிக்க முடிகிறது. ?
உண்மையில் நீங்கள் ஒரு ஜீனியஸ் சமுத்ரா

சமுத்ரா said...

நன்றி சிவகுமாரன் ..நீக்கி விட்டேன்.

Aba said...

வழக்கத்தைவிட வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது. அந்தாதி ஸ்டைல் நல்ல innovation. கடைசி வரியை எடுத்துவிட வேண்டாம். (எனக்கு அதைப் பார்த்த பின்புதான் புரிந்தது)

# அந்தாதி

//(ஆரம்பிச்சுட்டான்யா!)// அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைக்க முயலும் உங்க pseudo interpretation களை படிக்கும்போதெல்லாம் நான் மனசுக்குள்ளேயே சொல்லிக்கறது, நீங்களே சொல்லிட்டீங்க...

# வயது

//சில விஞ்ஞானிகள் ஆழமாக மூச்சு விடுவது சிறந்தது அல்ல என்கிறார்கள்.//

பல மூச்சுப்பயிற்சி சென்டர்களில் அப்படியே எதிராகச் சொல்கிறார்களே? சில தேவைகளுக்காக இந்தத் தகவலுக்கு ஆதாரம் தருகிறீர்களா?

# சமயத் தமிழ்
முடியல...

# கவிதை

'கூறு நண்பனே' அருமை. உங்கள் பெயரோடு reshare செய்து கொள்கிறேன்.

# Quotes

//புத்திசாலி ஒரு பிரச்சனையை தீர்க்கிறான். ஞானியோ அதை விட்டு விலகி இருக்கிறான் - ஐன்ஸ்டீன்//

I don't agree... அதே ஐன்ஸ்டீனே

"It's not that I'm so smart, it's just that I stay with problems longer. "

என்று சொல்லியிருக்கிறாரே?

சமுத்ரா said...

அபராஜிதன், என்ன ஆளையே காணோம்!
அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைக்க முயல்வது
முட்டாள்தனம் என்று ஓஷோவே சொல்லி இருக்கிறார்.
எனவே ஒரு ச்வாரச்யத்துகாக அப்படியாவது இரண்டையும்
படிக்க மாட்டார்களா என்று நப்பாசைக்காக எழுதுகிறேன்.
அபிராமி பட்டருக்கு Kaluza தியரி தெரியும் என்று சொல்வது
ஓவர் தான்.ஐன்ஸ்டீனின்
quote நான் தவறாக மொழி பெயர்த்து விட்டேன்
என்று நினைக்கிறேன். சரி பார்க்கிறேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பல விஷயங்களை ஒரே பதிவில் சொல்ல்விட்டீர்கள்.நன்று.

Aba said...

நேரப் பற்றாக்குறை மற்றும் வேறு சில காரணங்களால் கமென்ட் செய்ய முடியவில்லை. மற்றபடி உங்கள் பதிவுகளை படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். G+ இல் active ஆக இருக்கிறேன். உங்கள் பதிவுகளையும் சில புத்தகங்களைப் பற்றி சொந்த குறுவிமர்சனங்களையும் அங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

//எனவே ஒரு சுவாரஸ்யத்துக்காக அப்படியாவது இரண்டையும்
படிக்க மாட்டார்களா என்று நப்பாசைக்காக எழுதுகிறேன்.//

உண்மைதான். ஆனால் இணையத்தில் பலபேர் இதே வேலையாக, சீரியஸாக இரண்டுக்கும் முடிச்சுப் போட்டு உயிரை வாங்கும் நேரத்தில், நீங்களே இப்படி எழுதும்போது சீரியஸுக்கும் சிரியஸுக்கும் வித்தியாசம் சட்டென புரிபடுவதில்லை. அண்மையில், நடராஜர் சிலையை CERN இல் வைத்ததால் தான் 'கடவுள் துகள்' திடீரென்று கண்டுபிடிக்கப்பட்டது (அல்லது தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொண்டது) எனும் காமெடியை நீங்கள் இணையத்தில் பார்த்திருக்கலாம்.

மூச்சுப்பயிற்சி ஆதாரம் ப்ளீஸ்?

G.M Balasubramaniam said...


உரை நடையில் அந்தாதியா.? கேல்விப்பட்டதில்லையே, நான்கு பேர் படிக்க வேண்டும் என்று நானும் ஏதேதோ செய்கிறேன். ஆனால் பொதுவாகவே சீரியசான விஷயங்கள் வலைகளில் அம்பல மேறுவதில்லை.

venkatesu-thamizh said...

நண்பரே விகடனில் பார்த்து உங்கள் பதிவுகளை படிக்கிறேன். வித்தியாசமா இருக்கு. நிறைய அறிவியல் சொல்கிறீர்கள் நன்றி.

சிவகுமாரன் said...

வாருங்களேன் நம் வலைப்பக்கம்

Dino LA said...

supper

ரிஷபன்Meena said...

//ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா//

இந்த வரிக்கு இப்படி ஒரு பரிமானம் இருப்பதே உங்களைப் போன்றவர்கள் எடுத்துக்காட்டினால் தான் தெரியவே வருகிறது.

இராமன் சீதையை தேடி வரும் போது சிறிது தூரம் தேரின் (புஷ்பகவிமானம்) தடம் தெரிந்தது, பின் அது வானில் பறந்து சென்றதாக சடாயூ மூலம் அறிவதாக வரும். அந்தக் காலத்திலேயே விமானத்தை பயன்படுத்தினார்கள் என்று நினைக்கவேண்டாம், ஆனால் சிறிது தூரம் தரையில் ஓடிய பின்னால் தான் வானில் பறக்க முடியும் என்ற கற்பனையாவது இருந்ததே என்று வியக்கலாம்.

இதை ஆன்மீகத்தையும் அறிவியலையும் இனைப்பதாக நினைக்க வேண்டியதில்லை.