7
==
The best doctors in the world are Doctor Diet, Doctor Quiet, and Doctor Merryman.
Jonathan Swift
- பேஷண்டுக்காக டாக்டர் காத்திருந்தது அந்தக் காலம். இப்போது பேஷண்டுகள் தான் டாக்டருக்காக பொறுமையோடு காத்திருக்க வேண்டும். அதுவும் சில ஸ்பெஷலிஸ்டுகளுக்கு காலை ஐந்து மணியில் இருந்தே டோக்கன் க்யூ ஆரம்பித்து விடுகிறது. திருப்பதி பெருமாளை தரிசிக்கும் பயபக்தியுடன் வெளியே காத்திருக்க வேண்டும்.சில கோயில்களில் உற்சவரை முதலில் தரிசிப்பது போல அச்சிஸ்டன்ட் டாக்டரைப் பார்த்து முதலில் நோயின் ரிஷிமூலம் நதிமூலம் எல்லாம் சொல்லி விட வேண்டும்.அவர் நமது வெயிட் பி.பி. இத்யாதிகளைப் பார்த்து விட்டு மீண்டும் மூலவரின் தரிசனத்துக்குக் காத்திருக்குமாறு பணிப்பார்...
இப்போது பெரும்பாலான டாக்டர்கள் சிடுமூஞ்சிகளாக இருக்கிறார்கள். கஸ்டமர் தான் கடவுள் என்ற மந்திரம் செல்லுபடியாகாத ஒரே துறை மருத்துவம். அங்கே எப்போதும் டாக்டர் தான் கடவுள். டாக்டர் பெரும்பாலும் புன்னகைப்பது கூட இல்லை. புன்னகைத்தால் நோயாளியின் வியாதி ஒட்டிக் கொண்டு விடுமோ என்னவோ? நோயாளியுடன் அதிகபட்சம் உள்ளே ஒருவரைத் தான் அனுமதிக்கிறார்கள்.ஆஸ்பத்திரியிலேயே ரூம் எடுத்துத் தங்கி இருந்தாலும் ரூமில் நோயாளியுடன் ஒருவர் தான் இருக்க வேண்டும். டாக்டர் வந்து chart -களைப் பார்க்கும் வரை கைகட்டி வாய்பொத்தி அந்தணர் முன் நிற்கும் நந்தன் போல நிற்க வேண்டும்.பின்னர் அவர் சொல்லும் வேதவாக்குகளை அப்படியே செவிமேற்கொள்ள வேண்டும். என்ன சாப்பிட்டார்
எப்போது யூரின் போனார் போன்ற கேள்விகளுக்கு 'அதுங்களா, விடி காலைல பசின்னாருங்க, ஒரு பாதி டம்பளர் ஹார்லிக்ஸ் குடிச்சார். அப்புறம் பையன் வர்றப்ப ஆப்பிளு வாங்கிட்டு வந்தான்..அதுல ரெண்டு துண்டு தின்னாருங்க..அப்புறம் பத்து மணிக்கு அன்ன பூர்னாவுல வாங்கியாந்த இட்லில ஒன்னரை சாப்பிடாருங்க ...கால் டம்பளர் டீ என்று மெகா சீரியல் லெவலுக்கு கதை சொல்லாமல் அனுமார் போல வார்த்தைகளை கச்சிதமாக அளந்து பேச வேண்டும்....கேட்டதை மட்டும் சொல்லுங்க என்று சில டாக்டர்கள் சலிப்புடன் சொல்லி விடுவார்கள்.
கொஞ்சம் அதிகம் பேசி விட்டால் இங்கே நான் டாக்டரா நீ டாக்டரா என்று கூட சிலர் எரிந்து விழுவார்கள்.
டாக்டர்களுக்கு இருக்கும் பிஸி ஷெட்யூலில் , ஒவ்வொரு நோயாளியையும் 'என்ன ராமசாமி , வீட்ல எல்லாரும் சௌக்யமா' என்று விசாரிப்பார் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவர் என்றாலும் டாக்டர்கள் குறைந்த பட்சம் தேவையில்லாத வெட்டி பந்தா இல்லாமல் இருக்கலாம். நோயாளிகளின் கணவனோ மனைவியோ டாக்டருக்குப் படிக்கவில்லை.எனவே அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அது எத்தனை அபத்தமாக இருந்தாலும் பதில் சொல்வது டாக்டர்களின் கடமை.பக்தனுடன் அமர்ந்து சிரித்த முகத்துடன் பேசி அளவளாவும் கடவுளுக்கு தான் மதிப்பு அதிகம். கடவுளை தன்னுடன் பேச வருமாறு விளையாட வருமாறு அழைக்காத பக்தர்கள் குறைவு. தியாகராஜ சுவாமிகளின் 'ஆட மோடி கலதே' கேட்டிருக்கிறீர்களா?
6
===
ஆ.மாதவனின் நாயனம் என்ற சிறுகதை.
குக்கிராமம் ஒன்றில் இழவு ஒன்று நேர்ந்து விடுகிறது. கல்யாண சாவு தான் என்றாலும் பெண்களின் ஒப்பாரி பலமாக ஒலிக்கிறது. "இப்படியே இருந்தாப் பொழுதுதான் இருட்டும். இருட்டு வருமுன்னே இதோ அதோன்னு காரியத்தை முடிப்பம்" என்று ஊர்ப் பெரிசுகள் பேசிக் கொள்கின்றன. இறந்த பெரியவருக்கு நாயனம் என்றால் மிகவும் பிடிக்கும் போலிருக்கிறது. எனவே அவரின் இறுதி யாத்திரை ஒரு நாயனக் கச்சேரியுடன் தான் நடக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. ஆனால் அந்த மழைக்கால மாலையில் நாயனக்காரர்களை தேடுவது குதிரைக் கொம்பாக இருக்கிறது. தேடிப் போன ஒருவன் ஓடி வந்து 'சின்னண்ணனும், வடிவேலும் தட்றாம்பட்டிக்குச் சைக்கிள்லே போயிருக்கிறாங்க. மேலாத்தூரிலே யாரும் நாயனக்காரங்க ஆப்டலியாம். சேதி சொல்லச் சொன்னாங்க" என்கிறான்.காத்திருப்பவர்கள் "இந்தக் காலத்திலே, யாருப்பா நாயனமும், பல்லக்கும் வச்சிக்கிறாங்க? ஏதோ அக்கம் அசலுக்கு ஒரு தொந்தரவு இல்லாமெ, காரியத்தை முடிக்கிறதெ விட்டுவிட்டு?" என்று அலுத்துக் கொள்கிறார்கள்.
இன்னொரு கூட்டம் "செத்தவங்க ஆத்துமா நிம்மதியாப் போகட்டுமே" என்று நாயனக்காரனுக்காக காத்திருக்கிறது.இப்போது இருட்டத் தொடங்கி மழை வேறு வந்து விடுகிறது.எல்லோர் முகத்திலும் ,சலிப்பும், விசாரமும், பொறுமை இழந்த வெறுப்பும் நிறைந்திருக்கின்ற்ன. மணி வேறு இரவு ஒன்பது ஆகி விடுகிறது. பிணம் வாய்க்கரிசி போடப்பட்டு பாடையில் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலத்துக்கு தயாராக இருக்கிறது.நாயனக் காரன் வந்த பாடில்லை.
சின்னண்ணனும் வடிவேலுவும் வந்து சேர்கிறார்கள். கொஞ்சம் பிரபலமான நாயனக்காரர்களை அழைத்துவர முடியவில்லை என்றும் சமயத்துக்கு அகப்பட்ட யாரோ ஒரு நாயனக் காரனை அவசரத்துக்கு அழைத்து வந்தோம் என்றும் சொல்கிறார்கள் . காய்ந்து போன மூங்கில் குழாய் போல, சாம்பல் பூத்த நாயனத்தை வைத்துக்கொண்டு , மாறு கண்ணும் குட்டைக் கிராப்பும், காவி மேலாப்புமாக, ஒரு குட்டை ஆசாமி அவன். சரி ஆள் எப்படி இருந்தால் என்ன? காரியத்தை முடிப்போம் என்று இறுதி ஊர்வலம் தொடங்குகிறது.
நாயனக்காரன் மெல்ல உதட்டில் வைத்து, “பீ ப்பீ.. ‘ என்று சுத்தம் பார்க்கிறான். நாயனக்காரன் வாசிக்க ஆரம்பிக்கிறான் . ‘பீ..பீ’ என்ற அவலம் பரிதாபகரமாக இருக்கிறது . தவுல்காரன் சந்தர்ப்பம் தெரியாமல் வீறிட்ட குழந்தைபோல-வாத்தியத்தைத் தொப்புத் தொப்பென்று மொத்துகிறான். போகப் போக நாயனம் அபஸ்வரமாக ஒலித்து எல்லாரையும் தர்ம சங்கடப்படுத்துகிறது.ஊர்வலம், ‘சனியனே’ என்ற பாவனையில் அவனையே பார்த்துக் கொண்டு வழி நடக்கிறது.சுடுகாட்டுத் தூரம் தீராத் தொலைவெளியாகத் தோன்றுகிறது. இன்னும், பீ..ப்பீ..பீ..பீ..’கிராமத் தலையாரி முத்தன் , அவனையும் அந்த நாயனத்தையும் ஒரு முறை வெறித்துப் பார்க்கிறார்.
”படவா ராஸ்கல். நாயனமா வாசிக்கிறே?” என்று எரிச்சலுடன் நாயனத்தை அப்படியே இழுத்துப் பறித்து கால் மூட்டின் மேல் வைத்து , இரண்டு கைகளாலும், ‘சடக்’ இரண்டு துண்டாக முறித்து வீசி விடுகிறார்.ஊர்வலம் தயங்கக் கொஞ்சம் நின்றது. எல்லார் முகத்திலும், ’முத்தண்ணே நீ செஞ்ச காரியத்துக்கு உனக்கு தங்கக் காப்பு அடிச்சுப் போட்டாலும் தகும்’ என்ற திருப்தி பளிச்சிடுகிறது.
5
==
சில ஹைக்கூக்கள்
- ஹோட்டலில் இருந்து
வெளியேறிய பெண்
எனக்குள்
சுதந்திரத்தைப் பிறப்பித்தாள்.
- என் மீது
சகதியை வாரித் தெறித்தது ஒரு வண்டி.
என்
கவலைகள் எல்லாம்
ஒரு கணம்
ஸ்தம்பித்து நின்றன!
-நடந்து
வருகையில்
புல்லின் வாசம்!
-நான் பார்த்த
ஒரு கணத்தில்
அசையாமல் நின்றது
கடிகாரம்!
4
==
'Thoughts ' என்ற புத்தகத்தில் இருந்து சில பொன்மொழிகளின் தமிழாக்கம்.
-தான் எங்கே போகிறோம் என்று அறிந்திருக்கும் மனிதனுக்கு உலகமே வழிவிடுகிறது - டேவிட் எஸ் ஜார்டன்
- நீங்கள் நேர்மையானவராய் இருங்கள். அப்போது உலகில் ஒரு ராஸ்கல் குறைந்து விட்டான் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். - தாமஸ் கார்லைல்
- கூட்டத்தின் பின்னே போகும் மனிதனை எந்தக் கூட்டமும் பின் தொடராது - ரிசார்ட் டோனெல்
-விமர்சகர்களைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். இது வரை உலகில் விமர்சகருக்கு என்று ஒரு சிலையும் இல்லை.-ஜீன் சிபெல்யாஸ்
-ஏழையோ பணக்காரனோ பணத்தை வைத்திருப்பது நல்லது - சிட் லான்ஸ்
-யார் பணக்காரன்? யார் திருப்தி உடையவனோ அவன்.. யார் அது? யாரும் இல்லை - பெஞ்சமின் பிராங்க்ளின்
-உங்கள் சட்டைப் பையில் பணம் இருந்தால் நீங்கள் அழகானவர்... நீங்கள் நன்றாகப் பாடுபவரும் கூட - யாரோ
-என்னால் என்ன செய்யமுடியும் என்பதை வைத்து நான் என்னை மதிப்பிடுகிறேன். நான் என்ன செய்திருக்கிறேன் என்பதை வைத்து மற்றவர்கள் என்னை மதிப்பிடுகிறார்கள் - ஹென்றி லாங் ஃபெலோ
3
==
வாழ்க்கையை எப்படி அனுபவிப்பது என்பதை மனிதனை விட எல்லா மிருகங்களும் தெரிந்து வைத்திருக்கின்றன.
இந்த பொன்மொழியை ஞாபகப்படுத்தியது ஐஸ் ஏஜ் -4 திரைப்படம். ஒரு காலத்தில் பூமியின் எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்திருந்தன என்று படித்திருக்கிறோம்.பிறகு பூமியின் அடுக்குகள் நகர்ந்ததால் தனித்தனியே பிரிந்து போயின. அப்படி நடந்த போது மனிதன் இன்னும் வந்திருக்கவில்லை என்று தோன்றுகிறது. அப்போது மிருகங்கள் அடிக்கும் லூட்டியை படம் விவரிக்கிறது. ஆண் கம்பள யானை ஒன்று கண்டங்களின் நகர்ச்சியால் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து போகிறது. பின்னர் திரும்பி வந்து தன் குடும்பத்துடன் சேரும் வரை ஒரே லூட்டி தான். மேன்னி என்ற அந்த யானையின் கம்பீரம் அபாரம். சிட் (Sid)என்ற ஒரு ஸ்லோத் படம் முழுவதும் காமெடியனாக வருகிறது. சிட் ஒரு சோம்பேறி தீனிப் பண்டாரம்.ஆனால் வாய் மட்டும் முழம் நீளம்.படம் தமிழில் வரும் போது சிட் வடிவேலு வசனங்களை பேசி நம்மை இன்னும் சிரிக்க வைக்கிறது. (ஆங்கிலத்தில் சில இடங்களில் விலங்குகள் பேசுவதைப் புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கிறது) மிருகங்களுக்கு குரல் கொடுப்பது கஷ்டமான வேலை என்று தோன்றுகிறது.குறிப்பாக சிட் என்ற அந்த ஓட்டை வாய் மிருகத்துக்கு குரல் கொடுத்தவரை பாராட்டியே ஆக வேண்டும்.
பூமியில் மனிதன் வருவதற்கு முன்னர் விலங்குகள் நன்றாக என்ஜாய் செய்திருக்கின்றன என்று தோன்றுகிறது. குரங்குக்குள் இருந்து மனிதன் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்த நிமிடத்தில் இருந்து அவைகளின் எமகண்டம் ஆரம்பம் ஆகியிருக்க வேண்டும்.கம்பள யானைகளை மனிதன் வேட்டையாடியே கொன்று விட்டான் என்கிறார்கள். ஒரு கம்பள யானையை கொன்றால் ஒருமாதம் முழுவதும் ஊர் முழுக்க சாப்பிடலாமாம். பனி யுகம் என்பதால் உணவு கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.
தமிழ்நாட்டின் வெய்யிலைப் பார்த்தால் மீண்டும் அந்த பனியுகம் பூமியில் வராதா என்று ஏக்கமாக இருக்கிறது.
2
==
சமீபத்தில் ஆ.விகடன் புதுமை புதுமை என்று ஏதோ விளம்பரம் செய்தார்கள். ஒரு புதுமையும் இல்லை என்று தோன்றுகிறது. அதே பழைய கஞ்சி தான். அட்டையை மட்டும் மாற்றி இருக்கிறார்கள். என் விகடனையும் நிறுத்தி விட்டார்கள் என்று தோன்றுகிறது. ஆ.வி. யில் மதனின் கேள்வி பதிலுக்குப் பதில் இப்போது வாசகர்களே கேள்வி கேட்டு பதில் சொல்ல
ஆரம்பித்து விட்டார்கள் போலிருக்கிறது . எனக்கு என்னவோ விகடனை விட குங்குமம் பரவாயில்லை என்று தோன்றுகிறது. வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்கள் அதில் வருகின்றன.'குமுதம்' வாங்குவது டோட்டல் வேஸ்ட். பத்து ரூபாயை டஸ்ட் பின்னில் போட்டதற்கு சமம் அது . எந்தப் பத்திரிக்கையாக இருந்தாலும் இந்தத் 'தலைவர்' கடி ஜோக்குகளை விடுவதாக இல்லை. உதாரணங்கள்:
தலைவரே
உங்க தொகுதிக்காரர் ஒருத்தர் கடிதம் அனுப்பியிருக்கார் !
என்னவாம் ?
நிலம் நிலமறிய ஆவல்னு !
தலைவர் கோபமா இருக்காரே, என்னாச்சு ?
தன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு தலைவர் சொன்னதை, சன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு பிரசுரம் செய்துட்டாங்களாம் !1
===
ஓஷோ ஜோக்.
விவசாயி மிடோ மப்பின் -இன் பண்ணை முழுவதும் தீயில் எரிந்து சாம்பல் ஆகி விட்டது.
மறுநாள் அங்கு வந்த இன்சூரன்ஸ் அதிகாரிகள் " ஐயா, நாங்கள் இந்த நஷ்டத்துக்குப் பணம் தர முடியாது. அதற்குப் பதில் உங்கள் பண்ணை முதலில் எப்படி இருந்ததோ அதே போல அதே அளவு அதே உயரம் அதே பரிமாணங்கள் அதே மூலப் பொருட்களுடன் அதே மாதிரி கட்டித் தருவோம்" என்றார்கள்.
மிடோ மனதில் 'அப்படியானால் முதலில் நாளை காலை என் மனைவி மீதான லைப் இன்சூரன்ஸ் ஐ கான்சல் செய்ய வேண்டும்' என்று நினைத்துக் கொண்டான்.
****
ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்து இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர்.
மரியா 'என் பாய் பிரண்ட் ஜான் ரொம்ப மோசம்...அவன் ஒரு மோசமான பொம்பளை கூட உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டே டின்னர் சாப்பிடற மாதிரி கனவு கண்டேன்' என்றாள்.
இன்னொரு பெண் ' கம் ஆன்...இது வெறும் கனவு தான். இதற்கு ஏன் உன் காதலனை திட்டுகிறாய்'? என்றாள்.
'உனக்குத் தெரியாது மரியா, என் கனவிலேயே அவன் இப்படி செய்யும் போது அவன் கனவில் என்னென்னவெல்லாம் செய்வானோ' என்றாள் அவள்.
சமுத்ரா
6 comments:
மருத்துவர்கள் பற்றிய பகுதி மிகவும் அருமை. ஆனாலும் எல்லாரையும் பொதுமைப் படுத்திவிட முடியாதுங்களே
எல்லாவற்றையும் ஒரு இடுகையிலேயே எழுதிவிட்டீர்கள் போல, இரண்டாக போட்டு இருக்கலாம்.
//நிலம் நிலமறிய ஆவல்னு !//
ஊழல் ஊழல் அறிய ஆவல்! :)
//பூமியில் மனிதன் வருவதற்கு முன்னர் விலங்குகள் நன்றாக என்ஜாய் செய்திருக்கின்றன என்று தோன்றுகிறது.//
ஐஸ் ஏஜ் முதல் பகுதியில் மமூத் மனித குழந்தையைக் காப்பாற்றுவதாக வரும்.
நல்ல அலசல்...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி...
அருமை..மிகவும் அருமை
So, Can I take it as you are interested with film News?? Because Kungumam contains 90% of film news and Glamour pose of actress. Compare with all books Anantha Vikadan is better.
Proof : From that book only I came to know your blog. Did you contact them and gave the ad about your blog??
Hope you are not.. So they are searching for good things..
And for question & Answer section, did you read the answers from the readers??
Even for some questions Madan even can't answer in that way....
Just I am telling my view, as you shared yours...
அருமை..மிகவும் அருமை
Post a Comment