இந்த வலையில் தேடவும்

Friday, August 17, 2012

கலைடாஸ்கோப்-69

லைடாஸ்கோப்-69 உங்களை வரவேற்கிறது.

?

சமீபத்தில் the so called சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது . (எங்கெல்லாம் குண்டு வெடிக்குமோ என்ற பயத்துடன்). சின்ன வயதில் சுதந்திர தினம் என்றால் ஸ்கூலில் கொடியேற்றி மிட்டாய் தருவார்கள் என்று மட்டும் தெரியும். ஜன கன மன அவசரமாகப் பாடி விட்டு வீட்டுக்கு ஓட்டம் எடுக்கலாம்.!பொதிகையில் ரோஜா படம் போடுவார்கள்.(இப்போதும் போடுகிறார்கள் என்று நினைக்கிறேன்) இப்போது பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. சுதந்திரம் தினத்துக்கு முந்தாநாள் ஆபீசில் நாலைந்து பேர் I LOVE INDIA என்ற தலைப்பிட்ட FORWARD இ-மெயில்கள் அனுப்புகிறார்கள்.சட்டையில் கொடி குத்திக் கொள்கிறார்கள். டி.வி.யில் திரைக்கு வந்து சில வருடங்களே சாரி சில மாதங்களே ஆன திரைப்படங்களும் தேசத்துக்கு மகத்தான ஒப்பரிய சேவை ஆற்றிய ஹீரோயின்களின் பேட்டியும் போடுகிறார்கள் .சுதந்திர தினம் ஓவர்.

இந்த 'சுதந்திரம்' என்பது ஒரு SUBJECTIVE TERM ..அதற்கு சரியான வரையறை இல்லை.மேலும்,அப்போது (1947 க்கு முன்பு) இருந்த தேச பக்தி இப்போது ஏன் இல்லை என்றால் அப்போது குறைந்த பட்சம் ஒரு பொது எதிரி நமக்கு இருந்தான்.நம் சொந்த நாட்டை இன்னொருவன் ஆளுவதா? சுதந்திரம் கிடைத்து விட்டால் நாடே சொர்க்கமாக மாறும் பணமழை பொழியும் என்ற குறைந்த பட்ச நம்பிக்கையும் அப்போது இருந்தது.இப்போது நம்மிடம் அந்த பொது எதிரி இல்லை. .ஆனால் கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் நிறைய இருக்கின்றன.இவைகளிடம் இருந்து சுதந்திரம் பெறுவது கிட்டத்தட்ட இயலாத காரியம் என்றே தோன்றுகிறது .வறுமை, ஊழல், பொருளாதார வீழ்ச்சி, அதிகார துஷ்ப்ரயோகம், மக்கள் தொகை பிரச்சினை,வேலை இன்மை போன்ற எதிரிகளிடம் இருந்து சுதந்திரம் கிடைக்கும் நாள் மட்டுமே நமது உண்மையான சுதந்திர நாளாக இருக்க முடியும்.

??

சமீபத்தில் படித்த இரண்டு கதைகளைப் பற்றிப் பேசலாம். ஒன்று

ஒரு கப் காபி -இந்திரா பார்த்தசாரதி

-ராஜப்பா ஒரு ஏழை பிராமணன். கல்யாணம் ஆகி விட்டது. எந்த வேலையும் சரிப்பட்டு வராமல் சும்மா தம்பியின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு பொழுதைக் கழிக்கிறான். அக்கம் பக்கத்தில் திவசம், கல்யாணம் வேறு விசேஷங்கள் நடந்தால் அதை சாக்காக வைத்து ஓசி சாப்பாட்டில் ஒரு நாள் நகராதா என்று யோசிப்பவன்.பிராமணணாய்ப் பிறந்துவிட்டு, மந்திரமும் தெரியாது. ஒருநாள் காலை ராஜப்பாவுக்குக் காப்பி குடித்தாக வேண்டும் என்றிருக்கிறது . அவன் மனைவி சொல்லிவிடுகிறாள் : ‘காப்பிப் பொடி கிடையாது. காசு கொண்டு வந்தா காப்பி. இல்லாட்டா தீர்த்தத்தைக் குடிச்சுட்டு சும்மா கிடங்கோ. நான் வீடு வீடா போய்க் கடன் வாங்கத் தயாரா இல்லே.என்று.ராஜப்பா ’காலத்தை அனுசரித்துக் கோயிலில் பெருமாளுக்குக் காலையில் காப்பி நைவேத்தியம் பண்ணக்கூடாதா? கோயிலில் தினம் காப்பிப் பிரசாதம் கிடைத்திருக்கும் என்று அங்கலாய்க்கிறான் .

பஸ் ஸ்டாண்டுக்குப் போனால் காபிக்கு வழி கிடைக்கும் என்று ராஜப்பா பஸ் ஸ்டான்ட் போகிறான்.அங்கே ஒரு பழக்கடையில் கணவன் மனைவியுமாக இரண்டு பேர் நின்று கொண்டு பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராஜப்பா சென்று அவர்களுக்காக பழத்தைப் பேரம் பேசி கம்மி விலையில் வாங்கிக் கொடுக்கிறான். அவர்களுடன் பேச்சுக் கொடுத்ததில் அது அவனது பால்ய சிநேகிதன் அனந்து என்று தெரிய வருகிறது.வயத்துப் பொழப்புக்கு டெல்லியில் ஒரு கம்பெனியிலே இருப்பதாகவும் நாலு காசு சம்பாதிக்க என்னென்ன அக்கிரமமெல்லாம் பண்ணணுமோ, அதெல்லாம் செய்வதாகவும் அனந்து சொல்கிறான். மேலும் 'உன்னைப் பார்த்தா பொறாமையா இருக்குடா ராஜப்பா. யாரையும் ஏமாத்த வேணாம். ஊரோட வாசம். பெரியவா எழுதி வச்ச மந்திரம், சோறு போடறது. நீ வாத்தியாராத்தானே இருக்கே? நீ சொல்லாட்டாலும் உன் வேஷம் சொல்றதே! மஞ்ச சூர்ணம், முகத்தில் தேஜஸ்..’
என்கிறான். அனந்து அவனை தான் தங்கி இருக்கும் உயர்ரக ஹோட்டலுக்கு அழைத்து செல்கிறான்.அவன் மனைவி ராஜப்பாவை காபி சாப்பிடுமாறு சொல்கிறாள். அனந்து கோபத்துடன் "அவன் இங்கெல்லாம் காபி சாப்பிடுவானா? என்ன ஒரு ஆசாரம் ? பால் கூட சாப்பிட மாட்டான்" என்று கடிந்து கொள்கிறான்.

ராஜப்பாவுக்கு எரிச்சலாக வருகிறது. இதற்கிடையில் அனந்து சாப்பாட்டுக்கு அவன் வீட்டுக்கு வருவதாக சொல்கிறான். கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதே என்று கடைசியில் ராஜப்பா ,"
தோ பாரு, அனந்து! நான் வேதவித்துமில்லே, ஒரு மண்ணாங்கட்டியுமில்லே. வேதவித்து வேணும்னா நீ வேத காலத்துக்குத் தான் போகணும். முதல்லே நான் கேக்கறதை முதல்லே கொடு, அப்புறம் எல்லாத்தையும் விவரமா சொல்றேன், ஒரு கப் காபி கொடு' என்கிறான்.

அடுத்த கதை 'நாயனம்'-ஆ.மாதவன்.. இதை அடுத்த லைடாஸ்கோப்பில் பார்க்கலாம்.

???

சில ஹைக்கூ-கள்

* ஒவ்வொரு முறை
புது சட்டை அணியும் போதும்-
தீபாவளியின் வாசம்

* தடுக்கியதும்
எல்லாரும் -கொஞ்சம்
வேகமாக நடக்கிறார்கள்

*கண்ணாடியில்
தெரியும் உலகை
மெல்லமெல்ல மூடுகிறது
சாரல் மழை!


????

Moon illusion என்ற ஒரு விளைவைப் பற்றிப் பேசலாம். சந்திரன் (சூரியன்) சில சமயங்களில் அடிவானத்தில் இயல்புக்கு மாறாக மெகா சைசில் தெரிவது.இது நீண்ட நாட்களாகவே தத்துவ ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தி வந்துள்ளது. உண்மையில் தொடுவானத்தில் சூரியன் நம்மை விட்டு அதிக தூரம் இருக்கிறது. எனவே அது சிறியதாகத் தெரிய வேண்டும். நம் வளிமண்டலம் ஏதாவது மாயம் செய்கிறதா என்றால் இல்லை. இதற்கு இயற்பியல் ரீதியான காரணங்கள் எதுவும் இல்லை என்கிறார்கள். எல்லாம் நம் மூளை செய்யும் வேலை.[தலை கீழாக நின்று பார்த்தால் சந்திரன் சாதாரண சைசில் இருப்பது தெரியுமாம்!] சந்திரன் அடிவானத்தில் இருக்கும்போது நம் மூளை அதை கட்டிடங்கள், மரங்கள் போன்ற சிறிய பொருட்களுடன் ஒப்பிடுகிறது. எனவே இவைகளை விட சந்திரன் பெரிதாக இருக்க வேண்டும் என்ற ஊகத்தில் மூளை தானாகவே அளவை கூட்டி விடுகிறது. சந்திரன் நடுவானில் வரும்போது அது அண்டவெளியின் பரந்து விரிந்த பிரம்மாண்டத்துடன் ஒப்பிடப்படுவதால் மூளை அதை சிறிதாக்கி விடுகிறது. கீழே படத்தில் உள்ள விளைவைப் போன்றது தான் இதுவும்.


?????

Muscle memory என்ற இன்னொரு விஷயம். திறமையான பாஸ்கட் பால் ப்ளேயர் ஒருவரைக் கண்ணைக் கட்டி விட்டு கூடையில் பந்து போடச் சொன்னார்கள். அது மிகச் சரியாகப் போய் விழுந்தது. இதற்கு காரணம் மூளை பல விஷயங்களில் முதலில் மட்டுமே சிறிது கவனம் செலுத்துகிறது. பிறகு தன் நினைவுத் திறனை உடலின் தசைகளுக்கு மாற்றி விட்டு விட்டு கார் ஓட்டும் போதும் , பூ கட்டும் போதும் , டைப் அடிக்கும் போதும் நாளை என்ன டிரஸ் போட்டுக் கொண்டு போகலாம் என்று independent ஆக யோசிக்கிறது. கீ போர்டில் பாஸ்வோர்ட் ஐ டைப் செய்யும் போது அந்த சொல்லை மூளை நினைக்கும் முன்னரே உங்கள் விரல்கள் அடித்து விடுவதை கவனித்திருக்கலாம்.கிட்டத்தட்ட எல்லாமே தசைகளின் நினைவாற்றல் தான். வயலின் , கீ போர்ட் வாசிப்பது, தையல் மெஷினில் தைப்பது, எம்ப்ராய்டரி போடுவது இப்படி. இதனால் தானோ என்னவோ விளையாட்டு வீரர்கள் , கார் ரேஸ் வீரர்கள், கின்னஸ் சாதனை செய்பவர்கள் இவர்களெல்லாம் கவிஞர்கள் , தத்துவ ஞானிகள் , விஞ்ஞானிகள் போன்றவர்களுக்கு ஒரு படி கீழே இருக்கிறார்கள். பத்து நாள் கார் ஒட்டி விட்டால் அப்புறம் மூளையின் தேவை இன்றி கைகள் தானாகவே கியர் மாற்றவும் கால்கள் கிளச்சை மிதிக்கவும் கற்றுக் கொண்டு விடும். ஆனால் கவிதை எழுத ஒவ்வொரு முறையும் மூளையை உபயோகிக்க வேண்டும். மூளையில் யோசிப்பது கூட ஒரு விதமான muscle memory என்று நீங்கள் விவாதித்தால் அதற்கு என்னிடம் பதில் இல்லை.

மூளையின் கற்பனைக்கு ஒரு உதாரணம்.. அகநானூறு

மழைக் காலம் தொடங்கி விட்டது ...இன்னும் தலைவன் வரவில்லையே.அவன் தேரின் குதிரைகளின் கழுத்தில் கட்டப்பட்ட மணியோசை கேட்கவில்லையே என தலைவி வருந்துகிறாள்.அப்போது தோழி, அவளைத் தேற்றும் விதமாக 'அடி பைத்தியக்காரி,, அவன் வந்து கொண்டு தான் இருப்பான்.. வரும் வழியில் சோலைகளில் இன்ப முயக்கில் மயங்கிக் காதல் களிப்பில் கிடக்கும் வண்டுகளை தொந்தரவு செய்ய விருப்பம் இல்லாமல் மெதுவாக தான் குதிரைகளின் கழுத்தில் உள்ள மணியைக் கழற்றி விட்டு சத்தம் போடாமல் வருவான்' என்கிறாள்.

பூத்த பொங்கர்த் துணையோடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி
மணி நா ஆர்த்த மாண்வினைத் தேரன்..


-அருமையானதொரு மழைக் காலத்தின் தொடக்கத்தை, முல்லை நிலத்தை, இதை விட எப்படி ரொமாண்டிக் ஆக வர்ணிக்க முடியும்?



?????

கீழே உள்ளவை சில விளம்பரங்கள். மனிதனின் கற்பனை சக்திக்கு எல்லையே இல்லை.





??????

ஓஷோ ஜோக்.

முல்லா நசுருதீன் ஒரு நாள் குடித்து விட்டு யாருடனோ பயங்கரமாக சண்டை போட்டு விட்டார். அவர் முகமெல்லாம் ரத்த காயம் ஆகி விட்டது. அன்று நள்ளிரவில் தட்டுத் தடுமாறி வீடு வந்து சேர்ந்தார். மனைவி இந்தக் கோலத்தில் தன் முகத்தைப் பார்த்தால் பூகம்பம் வந்து விடும் என்று பாத் ரூமுக்கு சென்று அவசர அவசரமாக ஏதோ ஒரு க்ரீமை எடுத்து முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கொண்டார்.பெட் ரூமுக்கு சென்று போர்த்திக் கொண்டு படுத்து விட்டார். காலை விடிந்ததும் முல்லாவின் மனைவி பாத் ரூமில் இருந்து கத்தினாள்:

"என்னங்க,,, யாரு இந்த பாத் ரூம் கண்ணாடி பூரா டூத் பேஸ்டை அப்பி வெச்சது?"

$$$$

முல்லா நசுருதீன் ஒரு பாரில் உட்கார்ந்து மொடாக்குடி குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே அச்சு அசலாக ஒரே மாதிரி உடையணிந்த ஒரே மாதிரி தோற்றம் கொண்ட ஒரு ட்வின்ஸ் வந்தார்கள். முல்லா நசுருதீன் அவர்களையே குழப்பத்துடன் பாத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களில் ஒருவன் முல்லாவை நெருங்கி வந்து "பெரியவரே ரொம்ப கவலைப் படாதீங்க..நீங்க ஸ்டெடியா தான் இருக்கீங்க . நாங்க உண்மையில் ட்வின்ஸ்".. என்றான். அதற்கு முல்லா "அப்படியா? நீங்க நாலு பேருமேவா?" என்றார்.

சமுத்ரா

10 comments:

சமுத்ரா said...

someone add in tamilmanam..thank U

திண்டுக்கல் தனபாலன் said...

இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கதை, ஹைக்கூ, அகநானூறு,விளம்பர போர்டு, ஓஷோ ஜோக்...என பதிவு கதம்பம்... நன்றி...

முதலில் தமிழ்மணம் சென்று (http://tamilmanam.net/) உங்கள் பதிவை இணைக்கவும்...
பிறகு ஒட்டுப்பட்டையை இணைக்கவும். மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html) சென்று பார்க்கவும்... நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

எல்லாம் நம் மூளை செய்யும் வேலை.[தலை கீழாக நின்று பார்த்தால் சந்திரன் சாதாரண சைசில் இருப்பது தெரியுமாம்!]

கலைடாஸ்கோப்பின் வண்ணமயம் சிந்திக்கவைக்கிறது.. பாராட்டுக்கள்..

Katz said...

குட். அடிக்கடி எழுதுங்க!!!

வவ்வால் said...

சமுத்திரா,

//சந்திரன் அடிவானத்தில் இருக்கும்போது நம் மூளை அதை கட்டிடங்கள், மரங்கள் போன்ற சிறிய பொருட்களுடன் ஒப்பிடுகிறது. எனவே இவைகளை விட சந்திரன் பெரிதாக இருக்க வேண்டும் என்ற ஊகத்தில் மூளை தானாகவே அளவை கூட்டி விடுகிறது.//

கடற்கரையில் நின்று கொண்டு கடலில் எழும் சந்திரன்/சூரியன் பார்த்தாலும் பெரிதாக தெரியும், அங்கே வீடுகளோ,மரங்களோ இல்லையே ,

ஏன் பெரிதாக தெரிகிறது எனில் நம் முன் தெரியும் பறந்த வெளி கன்வெர்ஜ் ஆவது போல தெரிவதும், அடிவானத்தின் ரெபரென்ஸ் கோடும் ஒப்பீட உதவுவதே.

கன்வெர்ஜிங் எஃபெக்டுக்கு இணையான தண்டவாளம் ஒன்றாக இணைவது போல தூரத்தில் தெரிவது உதாரணம்.

எனவே நம் முன் இருக்கும் பரப்பு கன்வெர்ஜ் ஆவது போல தெரிந்தாலும் சூரியன் ,சந்திரன் அப்படி கன்வர்ஜ் ஆக ஆவதாக தெரியாது எனவே அதே அளவில் இருக்கும் சூரியன்/நிலா பெரிதாக தெரிகிறது.

கடற்கரையில் சூரிய உதயம் பார்த்துவிட்டு சொல்லவும்.

வவ்வால் said...

மசில் மெமரி என்பதும் ஒரு ஹப்போதீசிஸ் தான் அது அறிவியல் இல்லை, தசைக்கு எல்லாம் மெமரி இல்லை, நாம் தொடர்ந்து செய்வதால் தானாக செய்ய ஆரம்பிது அனிச்சையான செயலாக மாறிவிடுவதே மற்றபடி மெமரி விரல் நுனிக்கெல்லாம் வராது :-))

மனசு ரொம்ப குழப்பமாக இருந்தால் தவறு செய்ய ஆரம்பிப்பதும் இதான் காரணம்.

இதற்கு நல்ல உதாரணம் கிரிக்கெட், பல ஆண்டு ஆடி அனுபவம் இருந்தாலும் , பந்த்தினை சரியாக எல்லா நாளும் டைமிங் செய்ய முடியாமல் போவது ஏன்? அன்று மனம் ஒருமுகமாக இல்லை எனில் டைமிங் மிஸ் ஆகும், நீங்கள் சொல்வது போல மசில் மெமரி இருக்குமெனில் எல்லா நாளும் சச்சின் 100 அடித்துக்கொண்டே இருப்பார் :-))


கொசுக்கடித்தால் பார்க்காமலே நம் கை அடித்தால் கொசு அடிக்கும் மெமரி என சொல்வீர்களா, அது ஒரு அனிச்சை செயல்.

கான்ஷியஸ் மைண்ட், அன் கான்ஷியஸ் மைண்ட் நிலை தான் காரணம்,நீங்கள் சொல்வது போல அல்ல.

Aba said...

#சுதந்திர தினம்
மிக உண்மை.

#ஹைக்கூ
:))

#மஸிள் மெமரி,

எனக்கு, வவ்வால் சார் சொல்வது சரியென்று தோன்றுகின்றது.

#விளம்பரம்
சூப்பர்.

#ஜோக்ஸ்
:D

MARI The Great said...

//
பொதிகையில் ரோஜா படம் போடுவார்கள்.(இப்போதும் போடுகிறார்கள் என்று நினைக்கிறேன்)
///

ஹா ஹா ஹா, ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பீர்கள் போல தெரிகிறது!

ஹேமா (HVL) said...

Moon illusion நன்றாக இருக்கிறது. அதே போல ADகளும், கதைகளும். இன்னும் நிறைய எழுதுங்கள்

G.M Balasubramaniam said...


படித்தேன் ரசித்தேன்.