Δ
I wake up every morning at nine and grab for the morning paper. Then I look at the obituary page. If my name is not on it, I get up-Benjamin Franklin
உங்கள் பெயர் என்ன? எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை ஒரு மூன்று முறை உரக்க சொல்லுங்கள். ஒரு மாதிரி இருக்கிறது அல்லவா? நம் பெயரை நாம் பயன்படுத்துவதே இல்லை என்பதால் தான் அது. பெயர் என்பது நமக்கு அல்ல. மற்றவர்களுக்கு. பெயரை வைத்து செய்யும் ஓஷோவின் தியானம் ஒன்று இருக்கிறது. அதை அப்புறம் சொல்கிறேன்.
ஸ்கூலில் படித்தபோது ஒவ்வொரு வகுப்பிலும் கண்டிப்பாக ஒரு சேகர், ஒரு மணிகண்டன், ஒரு குமார், ஒரு செந்தில், ஒரு தினேஷ் ஒரு கணேஷ், இருப்பார்கள்.ஒரு பிரியா, ஒரு சங்கீதா, ஒரு வனிதா ஒரு வித்யா இருப்பார்கள்.இங்கே கர்நாடகாவில் ஸ்ரீநிவாஸ், மஞ்சுநாத், லிங்கப்பா போன்ற பெயர்கள் பிரபலம்.
'common ' பெயர்கள் இருப்பவர்கள் நமக்கு ஸ்பெஷல் பெயர் இல்லையே என்று வாழ்க்கையில் ஒரு முறையாவது நினைத்து வருந்தியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. [இதற்கு வடிகாலாகத்தான் ப்ளாக் எழுதும் போது பேயோன், வேதாளம், சிறுத்தை, புலிக்குட்டி, பூனைக்குட்டி, ஆட்டுக்குட்டி, அக்னிக்குஞ்சு,வெட்டிப்பயல்,தண்டப்பயல்,பெயரிலி என்றெல்லாம் நமக்கு நாமே பெயர் வைத்துக் கொள்கிறோம்] இப்போதெல்லாம் பிள்ளைகளுக்கு கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பெயர்களை வைக்காமல் புதிது புதிதாக அனிருத், சங்கல்ப், ரியா, ரிதன்யா,ஆதனா, கௌசிக், மிலன், என்றெல்லாம் வைக்கிறார்கள்.
சரி. இந்தியாவில் பஞ்ச பூதங்களுக்கும் பெயர்கள் இருக்கின்றன.
வானம் - ஆகாஷ்
பூமி - பிருத்வி
காற்று - பவன்
நீர் - சுதா
நெருப்பு -பிரஜ்வல்
பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்லும் ஒரு கோஷ்டி இருக்கிறது. பெயரில் தான் எல்லாமே இருக்கிறது என்று சொல்லும் கோஷ்டியும் இருக்கிறது.எனக்கு நியூமராலஜியில் நம்பிக்கை கிடையாது.J என்ற எழுத்தில் பெயர் இருந்தால் ஜே ஜே என்று வருவார்கள் . R என்ற எழுத்தில் தொடங்கினால் ராஜா மாதிரி வாழ்வார்கள் ;M என்ற எழுத்தில் தொடங்கினால் மத்யஸ்த வாழ்க்கை தான் ; இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.என்னைப் பொறுத்தவரை Name is just a Name ...
ஆனால் பெயர் என்பது நம்முடன், நம் வாழ்வுடன் மிகவும் ஒன்றிக் கலந்து விட்ட ஒன்று போலத் தோன்றுகிறது. எனவே பெயரை மாற்றினால் வாழ்க்கை மாறுமோ இல்லையோ நம் மனநிலை மாறும். அது ஒரு மறுபிறப்பு போல; இதனால்தான் பெண்கள் புகுந்தவீடு போகும்போது பெயரை மாற்றுகிறார்கள். சந்நியாசம் ஏற்கும் போது பெயரை மாற்றுகிறார்கள். நீ அதே பழைய மனிதன் அல்ல. நீ புதிதாகப் பிறந்திருக்கிறாய் என்று நினைவுபடுத்த!
நம்முடைய பெயர் நம் மனதில், அடியாழத்தில், விழிப்பற்ற நிலையில் புதைந்துள்ளதாக ஓஷோ சொல்கிறார். யாராவது நம் பெயரை அழைத்தால் உடனே ஆட்டோமேடிக்-ஆகத் திரும்புகிறோம் இல்லையா?
ஓஷோவின் 'பெயர்' தியானம் என்பது உங்கள் பெயரை ஒரு மந்திரம் போல உபயோகிப்பது. உதாரணமாக உங்கள் பெயர் இசக்கி என்றால் (வேற பேரே கிடைக்கலையா?) இசக்கி இசக்கி இசக்கி என்று உங்கள் மூளையை கசக்கி தொடர்ந்து விடாமல் உச்சரிப்பது.அப்படி உச்சரிக்கும் போது உங்களுக்கும் உங்கள் பெயருக்கும் ஒரு சிறிய இடைவெளி உருவாகிறது. நான் இசக்கி அல்ல என்ற உணர்வு மெல்ல மெல்ல வருகிறது.மேலும் நீங்கள் ஒன்றை கண்டிப்பாக செய்ய விரும்பினால் உங்களுக்கு நீங்களே உங்கள் பெயருடன் கட்டளை இடுங்கள்..உதாரணமாக இசக்கி, நாளை காலை சரியாக ஐந்து மணிக்கு எழுந்து கொள் ..இசக்கி, நீ அந்தப் பெண்ணை திரும்பிப் பார்க்காதே, இசக்கி , தூங்கப்போ, இசக்கி ஜொள்ளு விடாமல் இயல்பாகப் பேசு என்றெல்லாம்! IT WORKS ..(நான் சொல்லலைங்க ஓஷோ சொல்கிறார்)
ΔΔ
சத்தம் என்பதைப் பற்றி மேலும் ஓஷோ சொல்கிறார்; (டேய், உனக்கு சொந்தமா எதுவும் தெரியாதா ???)இந்து மதம் சத்தம் என்பதற்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. நவீன அறிவியல் ஒளியை பிரபஞ்சத்தின் ஆதாரம் என்கிறது. ஆனால் மதங்கள் ஒலிக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன.ஒரு குறிப்பிட்ட சப்தத்தின் மூலம் உங்கள் உடலையும் மனதையும் கட்டுப்படுத்த முடியும்.வேத மந்திரங்கள் அதைத் தான் செய்கின்றன. குறிப்பிட்ட மந்திரங்கள் மூலம் காட்டு விலங்குகளையும் கட்டிப்போட முடியும். மேலும் 'ராகங்களுக்கும்'மனித உணர்சிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது.
[அமிர்த வர்ஷிணி பாடினால் மழை வரும் ; புன்னாக வராளி பாடினால் பாம்பு வரும்; குந்தள வராளி பாடினால் சிரிப்பு வரும்; முகாரி பாடினால் சோகம் வரும் சஹானா பாடினால் காதல் வரும் ஆஹிரி பாடினால் சாப்பாடு வரும்; சாரி வராது; என்றெல்லாம் சும்மா சொல்லவில்லை. பாடும் விதத்தில் பாடினால் உண்மையிலேயே இதெல்லாம் வரும்.தான்சேன் பாட்டுப்பாடி தீபங்களை ஏற்றி வைத்தார் என்று கேட்டிருக்கிறோம்.ஏதோ ஒரு ஏடாகூட ராகத்தைப் பாடியதன் காரணமாக கோவலன் மாதவி உறவு பிரேக் ஆனது என்று படித்திருக்கிறோம்.எந்தெந்த ராகங்கள் எந்தெந்த நோயை தீர்க்கும் என்று ஒரு லிஸ்டே இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் பைரவி கேளுங்கள் என்றும் தோல்வியாதி ஏதாவது இருந்தால் அசாவேரி கேளுங்கள் என்றும் சொல்கிறார்கள். அதற்காக ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா ரேஞ்சுக்கு சொரிந்து கொண்டிருக்கும் போது 'தசரத நந்தனா' கேட்டுக் கொண்டிருக்க வேண்டாம். டாக்டரை அணுகவும்]
piezo electric effect என்று ஒன்று இருக்கிறது.அதிர்வுகளால் மின்சாரம் பிறக்கும் என்று சொல்லும் ஒரு அறிவியல் தத்துவம். [உங்கள் வாட்சில் நடப்பது உல்டா. மின்சாரத்தால் அதிர்வுகள் பிறக்கின்றன] ஒலியும் ஒருவித அதிர்வு தானே?எனவே ஒலியால் ஏன் மின்சாரம் பிறக்காது?Sonoluminescence என்ற ஒன்றும் அறிவியலில் இருக்கிறது.இது என்ன என்றால் சில திரவங்கள் சத்தத்தின் மூலம் அதிரும் போது அதிலிருந்து வெளிச்சம் பிறக்கிறது என்னும் கண்டுபிடிப்பு!டெலிபோனில் நாம் பேசும் சத்தம் மின் துடிப்புகளாக மாறி தான் மறுமுனைக்கு செல்கிறது. ஆனால் சத்தத்தின் மூலம் ஒரு வீட்டுக்குத் தேவையான மின்சாரம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. நம்மை சுற்றி எத்தனையோ சத்தங்கள் கேட்டபடி உள்ளன. டிராப்பிக்கில் சிவப்பு எரிவது தெரிந்தும் பொறுமை இன்றி ஹாரன் அடிக்கும் வண்டிகளின் சத்தம், மெஷின்கள் ஓடும் சத்தம் புல்டவுசர் சத்தம், ரேடியோ சத்தம், அரசியல் பிரசார சத்தம்,மனைவி கணவனை ஹை பிட்சில் திட்டும் சத்தம், பக்கத்து வீட்டுக்காரர் அபஸ்வரமாக வயலின் கற்றுக் கொள்ளும் சத்தம் என்று நிறைய. இதையெல்லாம் சோலார் செல் போல சேகரித்து ஒரு குண்டு பல்பை எரிய வைக்க முடியுமா? விஷயம் தெரிந்தவர்கள் சொல்லவும்.ELECTRICITY FROM NOISE POLLUTION என்பதை யாராவது கடைசி வருட இஞ்சினியரிங் மாணவர்கள் ப்ராஜக்ட்-ஆக எடுத்துக் கொண்டு செய்யலாம். மின் பற்றாக்குறையால் தவிக்கும் தமிழ் நாட்டுக்கு புண்ணியமாகப் போகும். [இங்கே பெங்களூருவில் அவ்வளவாக பவர் கட் இல்லை. போனாலும் ஒரு இருபது நிமிடத்தில் சமர்த்தாகத் திரும்பி விடுகிறது]
ΔΔΔ
ரசித்த கவிதை அப்பா
டாட்டா காட்டும் போது
உற்சாகமாக கையசைக்கும் குழந்தை -
ஏனோ
அம்மா
டாட்டா காட்டும் போது
முகம் மாறி
அழத் தொடங்குகிறது.
ஒரு ஜோக் ஞாபகம் வருகிறது.
ஒரு ஆல்பத்தைப் பார்த்து சின்னப்பையன் ஒருவன் கேட்கிறான்.
அம்மா அந்தப் போட்டாவில் அழகா, கரு கரு முடியோட , எடுப்பா மீசை வைச்சுக்கிட்டு இருக்காரே அவரு யாரும்மா?
அம்மா 'டேய், அதான்டா உங்க அப்பா'
சின்னப்பையன் : 'அப்ப எப்பவாச்சும் வீட்டுக்கு வந்து போறாரே, அந்த சொட்டைத் தலை யாரும்மா?'
[இதற்கு தான் அப்பாக்கள் ஆபீஸே கதி என்று கிடக்கக் கூடாது. அவ்வப்போது குழந்தைகளுக்கு உங்கள் திருமுகத்தைக் காட்டவும்]
ரசித்த ஒரு ட்விட்:
#அம்மா, முதன் முதல்ல நில அபகரிப்பு பண்ணவர் நம்ம மகா விஷ்ணு, வாமன அவதாரத்துல, அவர் மேல ஒரு கேஸ் போட்டுடலாமா?
ΔΔΔΔ
இப்போது நிறைய பேர் விருது வழங்குகிறேன் பேர்வழி என்று கிளம்பி இருக்கிறார்கள். எனக்கு கூட இரண்டு மூன்று பேர் விருது(?) கொடுத்திருக்கிறார்கள். இது தவறு என்று சொல்ல வரவில்லை. VERSATILE BLOGGER என்று ஒருவருக்கு விருது கொடுக்கிறார்கள். அவர் எழுத்தைப் படித்துப் பார்த்தால் அவர் எழுதுவதில் எவ்வளவோ முன்னேற வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.VERSATILE ஆக எழுத வேண்டும் என்று நிறைய பேர் ஆசைப்படுவது சரிதான். ஆனால் அதற்கு நிறைய படிக்க வேண்டும்.கண்டதையும் படிக்க வேண்டும். (சாரு நிவேதிதா உட்பட)நிறைய அனுபவப்பட வேண்டும். அப்போது தான் VERSATILITY கிடைக்கும். சும்மா கூகிளில் தேடி காபி பேஸ்ட் செய்வதில் பயன் இல்லை. (இன்று அறிவியலை சரியாகப் படிக்காமல் நிறைய பேர் பரிணாமமே தவறு ; மனிதன் பிரம்மாவின் மூஞ்சியில் இருந்துதான் வந்தான் என்றெல்லாம் எழுதக் கிளம்பி இருக்கிறார்கள்.)காபி பேஸ்ட் என்று அதுவே காட்டிக் கொடுத்து விடும். அல்லது உங்கள் எழுத்து காப்பி அடித்தது என்று
யாருக்கும் தெரியாத படி (நான் எழுதுவது போல) தில்லுமுல்லு செய்து எழுத வேண்டும்.ஒருவர் எழுத்தைத் திருடினால் திருட்டு. நூறுபேர் எழுத்தைத் திருடினால் ஆராய்ச்சி :) :)
நமக்கு நாமே விருது கொடுத்துக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது ? ஒருவர் உங்கள் ப்ளாக்குக்கு தவறாது வந்து பின்னூட்டம் இடுகிறார் என்றால் அவருக்கு விருது கொடுத்து விடுவதா? இந்த ப்ளாக்கிலும் தான் J .D . தாஸ் என்பவர் விடாப்பிடியாக கமென்ட் போடுகிறார். (நான் தான் அவரை கண்டுகொள்வதே இல்லை :( :( ).உங்கள் வாசகர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை என்பது இன்னும் இன்னும் நன்றாக எழுதுவது தான். 'உங்கள் கருத்துரைக்கு நன்றி ' என்று சொல்லக் கூடத் தேவை இல்லை. எனவே என்னைப் பொறுத்தவரை விருது என்பதெல்லாம் சின்னப் பிள்ளை சமாச்சாரம். ANYWAY ,என்னையும் மதித்து விருது கொடுத்தவர்கள் மனம் புண்பட்டிருந்தால் அடியேனை மன்னித்தருளவும்.
ΔΔΔΔΔ
கன்னடத்தில் ஒரு பிரபலமான பாவ கீதே மொழிபெயர்ப்புடன்:
ತೆರೆದಿದೆ ಮನ ಓ ಬಾ ಅತಿಥಿ
ಹೊಸಬೆಳಕಿನ ಹೊಸ ಗಾಳಿಯಾ
ಹೊಸ ಬಾಳನು ತಾ ಅತಿಥಿ
ಆವ ರೂಪದೊಳು ಬಂದರು ಸರಿಯೇ
ಆವ ವೇಷದೊಳು ನಿಂದರು ಸರಿಯೇ
ನೀಸೆರುದಯದೊಳು ಬಹೆಯಾ ಬಾ
ತಿಂದಳನ್ದದಲಿ ಬಹೆಯಾ ಬಾ ||
தெரெதிதே மனே ஓ பா அதிதி
(திறந்துள்ளதில்லம் ஓ வா விருந்தே)
ஹொஸ பெளகின ஹொஸ காளியா
ஹொஸ பாளனு தா அதிதி
(புது வெளிச்சத்தின் புது காற்றினை புது வாழ்வினைத் தா விருந்தே)
ஆவ ரூபதொளு பந்தரு சரியே
ஆவ வேஷதொளு நிந்தரு சரியே
(எந்த வடிவினில் நீ வரினும் சரிதான் எந்த வேடத்தினில் வரினும் சரிதான்)
ಇಂತಾದರು ಬಾ ಅಂತಾದರೂ ಬಾ
ಎಂತಾದರು ಬಾ ಬಾ ಬಾ
இந்தாதரு பா அந்தாதரு பா
எந்தாதரு பா பா பா
இப்படியேனும் வா அப்படியேனும் வா எப்படியேனும் வா வா வா
-அப்போதெல்லாம் விருந்தினர்களை எவ்வாறு உயர்வாக (கடவுளைப்போல)மதித்தார்கள் என்பதற்கு இந்தப் பாடலே உதாரணம், அதிதி என்ற சொல்லுக்கே ௮-திதி நேரம் காலம் இல்லாமல் வருபவர் என்றுதான் பொருள். அதிதி எப்போது வந்தாலும் அவரை உபசரிக்க வேண்டுமாம். அவர் என்ன கேட்டாலும் கொடுக்கவேண்டுமாம். உங்கள் பெண்ணை எனக்குப் பிடித்திருக்கிறது; கல்யாணம் செய்து வையுங்கள் என்று ஆசைப்பட்டால் அதிதிக்கு பெண்ணைக் கொடுத்து விட வேண்டுமாம்; (பெண் , பிள்ளைக்கறி இதெல்லாம் கேட்பது கொஞ்சம் ஓவர்)எனவே யார் வேண்டுமானாலும் வரட்டும் ...என் வீடு திறந்து தான் இருக்கிறது ..நீ எப்போதுவேண்டுமானாலும் வரலாம். உன்னால் தான் என் வாழ்வு விளங்கும்; உன்னால்தான் என் வீடு துலங்கும் என்று பெருந்தன்மையுடன் சொல்கிறது இந்தப் பாடல்!
சரி. இந்தக் காலத்தில் யார் வீட்டை திறந்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்?பெரும்பாலான கதவுகள் மூடியே இருக்கின்றன. வெளியே இருப்பவன் எல்லாம் திருடன் கிராதகன் கொலைகாரன் என்ற எண்ணத்திலேயே யாரும் வீட்டை திறப்பது கூட இல்லை. தப்பித் தவறி திறப்பவர்கள் கூட குருவி போல தலையை மட்டும் வெளியே நீட்டி காரியத்தை முடித்து விட்டு பட்டென்று கதவை சாத்தி விடுகிறார்கள். அதிதிக்காக இல்லாவிட்டாலும் கொஞ்சம் புதுக்காற்று உள்ளே வரட்டும் என்பதற்காகவாவது கதவை கொஞ்ச நேரம் திறந்து வையுங்கள்! அப்புறம் இன்னொரு வேண்டுகோள். கொரியர் காரரோ, காய்கறி விற்பவரோ, பேப்பர் காரனோ, கொஞ்ச தூரம் போனபிறகு கதவை சாத்துங்கள். ஆள் இருக்கும் போதே முகத்தில் அறைவது போல கதவை மூடாதீர்கள்.
ΔΔΔΔΔΔ
ஓஷோ ஜோக்..
(Partially ' A ' )
சார்டினி, போலீஸ் ஸ்டேஷன் சென்று ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும் என்றான்.
யார் மீது? என்றார் இன்ஸ்பெக்டர்..
'ஒரு நாதாரி லாரி டிரைவர் மேல சார், நான் ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்தில் இருந்தேன். அந்த நாய் நான் வெளியே வருவதற்கு அவகாசமே கொடுக்காம பூத் டோரை ஒடச்சு வெளியே தள்ளி விட்டுட்டான்.ஒரு நிமிஷம் நானும் டைம் கேட்டுப் பார்த்தேன். அவன் ஒத்துக்கலை. என்னதான் அவசரம்-னாலும் இப்படியா வன்முறையா நடந்துக்கறது? 'என்று பரிதாபமாக சொன்னான் சார்டினி.
"சரிதான். உண்மையிலேயே அவன் ஒரு ராஸ்கல் தான். அந்த சமயத்தில் நீங்கள் எப்படி மோசமாக உணர்ந்திருப்பீர்கள் என்று என்னால் உணர முடிகிறது"
'ரொம்ப சரி இன்ஸ்பெக்டர். ரொம்ப மோசமா உணர்ந்தேன்.அந்த பரதேசிநாய் என் காதலி மேலாடையை அணிந்து கொள்ளக் கூட அவகாசம் கொடுக்கவில்லை' !
சமுத்ரா