இந்த வலையில் தேடவும்

Thursday, January 5, 2012

கலைடாஸ்கோப்-49

****************************250- ஆவது பதிவு! ************************************

லைடாஸ்கோப்
-49 உங்களை வரவேற்கிறது

ஒன்று
======'குரு' என்ற ஸ்தானத்துக்கு மிகவும் முக்கியத்துவம் தரக்கூடியது சீக்கிய மதம். என்ன தான் அம்மாவும் அப்பாவும் அன்பைப் பொழிந்து ஒரு குழந்தையை வளர்த்தாலும் அவனுக்கு கல்வி கற்றுத் தந்து வெளியுலகுக்கு அறிமுகம் செய்வது குருதான். குரு வெளி உலகை மட்டும் அறிமுகம் செய்பவர் அல்ல. (Teacher ) உள் உலகையும் நமக்கு அறிமுகம் செய்பவர் (master )


சீக்கிய மதம் குருநானக் (1469 – 1539 ) என்பவரால் நிறுவப்பட்டது என்று நமக்கெல்லாம் தெரியும்.மற்ற மதங்களுடன் ஒப்பிடும் போது இது கொஞ்சம் இளமையான ,இக்காலத்திய மதம்! சீக்கிய மதம் இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களின் கலப்பு என்றும் சொல்வார்கள்.முதலில் அது ஒரு மதமாக (Religion ) கருதப்படாமல் கடவுளை அடையும் ஒரு மார்க்கமாக ( way ) கருதப்பட்டது. குருநானக் ஏற்படுத்திய சீக்கிய மார்க்கத்தில் தலைப்பாகை, தாடி, கத்தி எல்லாம் இல்லை. அவை எல்லாம் பின்னால் வந்தவை. சரி. ஓஷோ குருநானக் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

"ஒரு மழைக்கால இரவு. எங்கும் இருட்டு. நடுசாமத்தை தாண்டிவிட்டது நேரம். நானக் இன்னும் தூங்காமல் பக்திப்பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார்.பக்கத்து அறையில் இருந்த அவரது தாய், 'நானக், நேரம் ஆகி விட்டது, பாட்டை முடித்து விட்டு தூங்கு' என்கிறார். கொஞ்ச நேரம் பாட்டை நிறுத்திய நானக், எங்கோ தொலைவில் ஒரு குருவி 'குவிக் குவிக்' என்று கூவுவதைக் கேட்டு விட்டு மீண்டும் பாடத் தொடங்கினார். தன் தாயாரைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார், "அம்மா, அந்தக் குருவி இந்த நேரத்திலும் தன் துணையை அழைக்கிறது;நானும் என் துணையை (கடவுளை)அழைக்க வேண்டும். குருவியின் துணை அருகிலேயே, பக்கத்து மரத்திலேயே இருக்கலாம். ஆனால் என் துணையோ மிக தூரத்தில் இருக்கிறது. பிறவி பிறவிகளாக அவனை அழைத்தாலும் அது போதாது.எனவே நான் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை"- நானக் மனமுருகிப் பாடுவதன் மூலமாகவே இறைவனை அடைந்தவர். தியானம், யோகம்,சடங்குகள் இவை நானக்கின் வழிமுறைகள் அல்ல"

சீக்கிய மதத்தை ஒரு வீர மதமாக, சீக்கியர்களை குருவின் (கடவுளின்) படை வீரர்களாக சித்தரித்தவர் குரு கோவிந்த் சிங். 'தெய்வீக வீரர்கள்'! தன்னை கடவுளின் நம்பிக்கைக்கு உரிய ஒரு வீரனாக பாவித்துக் கொள்ளும் தன்மை இந்து மதத்திலும் உண்டு. 'ராமா, காமக் குரோதங்களை நிலைகுலைய வைக்கும் வீரனாக, இராமபக்தியின் அனுபவத்தைக் கேடயமாகவும், ராம பக்தியை முத்திரையாகவும், ராம நாமத்தை வாளாகவும் ஏந்திய வீரனாக என்னை மாற்று' என்று கேட்பவர் யார் தெரியுமா ? இசை மூவரில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகள் (பண்டு ரீதி கொலு ஈயவய்ய ராமா)

சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் சீக்கிய மதத்தைப் பற்றியும், பொற்கோயிலில் தினமும் நடக்கும் நிகழ்ச்சிகள் பற்றியும் விரிவாகக் காட்டினார்கள்.அதில் சொன்ன ஒரு விஷயம் என்னை மிகவும் கவர்ந்தது. மற்ற கோயில்களில் கடவுளின் சந்நிதி கொஞ்சம் மேடாக , படிகளில் ஏறிச் செல்வதாக உயரமான இடத்தில் இருக்கும். ஆனால் சீக்கிய குருத்துவாராக்களில் கொஞ்சம் கீழாக படிகளில் இறங்கிச் சென்று தான் மூலஸ்தானத்திற்கு செல்ல வேண்டும். மனிதன் எத்தனை பெரியவனாக இருந்தாலும் கடவுளை நோக்கி செல்லும் போது ஒரு சாதாரணனாக கீழே இறங்கி வரவேண்டும் என்பதை இது காட்டுகிறதாம்.

இரண்டு
=======

* இன்று ,ஜனவரி ஐந்து,நம் அப்பாவும் அம்மாவும் மிக அருகில் நெருங்கி வரும் நாளாகும்.yes , பூமி சூரியனுக்கு (வருடத்தில்)மிக அருகில் வரும் நாள். (
perihelion ) கிட்டத்தட்ட முப்பது லட்சம் மைல்கள் கிட்ட வருகிறது.அப்படி வந்தாலும் ஏன் இன்னும் குளிர்காலமாக இருக்கிறது என்று உங்கள் சயின்ஸ் டீச்சரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். ஜூன் மாதம் மீண்டும் இருவரும் போபித்துக் கொண்டு தூரப் போய் விடுகிறார்கள்.

** பாம்புகள் பால் குடிக்காது, மாணிக்கத்தைக் கக்காது, இணையைக் கொன்றவனை டான்ஸ் ஆடி விட்டு வந்து பலி(ழி)வாங்காது என்பவை இப்போது நிரூபிக்கப்பட்ட உண்மைகள். என்ன தான் சொன்னாலும் நாகங்கள் பற்றிய கதைகளும் , சினிமாக்களும் இன்னும் சுவாரஸ்யமாகத் தான் இருக்கின்றன. சன். டி.வியில் வந்து கொண்டிருந்த 'நாகம்மா' தொடரை ஏன் பாதியில் நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை.நாகவனம், மாணிக்கம், தங்கச் சிலை, நாககன்னி, சித்தர்கள் என்ற ரேஞ்சில் செல்லும் இந்திரா சௌந்தர ராஜன் கதை. நன்றாகத் தான் இருந்தது.

*** நாகம்மாவில் ஒரு சித்தமருத்துவர் சொல்லுவார் ,பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் கிட்டத்தட்ட விஷம் மாதிரி என்று. பயணங்களின் போது எவ்வளவு சுலபமாக நாம் தண்ணீர் பாட்டில்களை வாங்கி மடக் மடக் என்று குடித்து விடுகிறோம்! ஆனால் நமக்கும் வேறு வழி இல்லை. இன்றைய அவசர நகரங்களில் பயணங்களின் போது நதிகள், அருவிகள் இவற்றைத் தேடிக்கொண்டு போகவா முடியும்?

மூன்று
======

ஹெவியாக மத்தியான சாப்பாடு சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் கூட தூங்காதவர்கள் (கண் அசராதவர்கள்) மனிதர்களே அல்ல என்பது என் தாழ்மையான கருத்து. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு! ஆபீசில் என்ன தான் தலைபோகிற வேலை இருந்தாலும் தலை கவிழ்ந்து ஒரு பதினைந்து நிமிடம் 'குட்டித் தூக்கம்' போடுவது வழக்கம் ஆகி விட்டது. நிஜமான தூக்கத்தை விட இந்த மாதிரியான 'குட்டித் தூக்கங்கள் ' உடலுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள். குட்டித் தூக்கங்கள் உடலையும் உணர்வையும் Refresh செய்து புத்துணர்வைத் தருமாம்.ஆபீசில் நண்பர் ஒருவரை நீங்கள் குட்டித் தூக்கம் போடமாட்டீர்களா என்று கேட்டதற்கு 'போடலாம் தான்..ஆனால் குட்டி தான் கிடைக்க மாட்டேன் என்கிறது' என்றார்.PLAYBOY !

நான்கு
======

* ஆபீசில் அடுத்த வாரம் 'கொடகு' டூர் கூட்டிப் போகிறேன் என்றார்கள். வெள்ளிக்கிழமை பதிமூன்றாம் தேதியாம் ! (Friday the 13th ). ட்ரெக்கிங் சென்று நடுக்காட்டில் கூடாரம் போட்டு தங்குகிறார்கள் போலிருக்கிறது. நான் கண்டிப்பாக வர மாட்டேன் என்று சொல்லி விட்டேன். எதற்கு வம்பு? கூடாரம் போட்டு குஜால் செய்து கொண்டிருக்கும் போது காட்டில் வாழும்
ஏதோ ஒரு சைக்கோவோ, கன்னிபாலோ கையில் கோடாரியுடன் வந்து விட்டால்? நீங்களும் எதற்கும் ஒரு Safety க்கு அடுத்த வெள்ளிக்கிழமை ஆபீசுக்கு லீவ் போட்டு விட்டு டி.வி.சீரியல்களை ஒன்று விடாமல் பார்க்கவும். [சும்மா சொன்னேன்..பயம் கியம் எல்லாம் இல்லை. அடுத்த வெள்ளிக்கிழமை தியாகராஜர் ஆராதனை. நேரில் தான் போக முடிவதில்லை. டி.வி.யிலாவது ப.ர.கிருதிகளைக் கேட்டு மகிழலாம் என்று]

** டி.வி யில் வரும் 'சொல்வதெல்லாம் உண்மை' 'கதையல்ல நிஜம்' போன்ற நிகழ்ச்சிகள் பார்க்க எரிச்சலாக இருக்கின்றன. நாலு சுவர்களுக்குள் நடக்கும் விஷயங்களை ஊர் அறிய உலகம் அறிய தண்டோரா போடுகிறார்கள். குடுமியைப் பிடிக்காத குறையாக சண்டை போட்டுக் கொள்கிறார்கள். பெரும்பாலானவை கணவன் மனைவி பிரச்சினை கேசுகளாக வருகின்றன. சின்னவீடு, பெரியவீடு பிரச்சினைகள்! கொடுமை என்ன என்றால் பிஞ்சுக் குழந்தைகளை பக்கத்தில் வைத்துக் கொண்டே 'நீ உருப்பட மாட்டே' 'நாசமாப் போ' என்றெல்லாம் குழாயடிச் சண்டை போடுகிறார்கள். அந்தக் குழந்தைகள் பாவம் சுற்றிலும் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. இது உண்மையான சண்டையா, இது மாதிரி டி.வி.யில் ஒளிபரப்புவதால் பிரச்சினை சுலபமாகத் தீர்ந்து விடுமா என்று தெரியவில்லை. அல்லது சேனலின் டி.ஆர்.பி யோ ஏதோ ஒரு ரேட்டிங் சொல்கிறார்களே, அது உயர்வதற்கு அவர்களே செய்யும் பொய் நாடகமா தெரியவில்லை.

ஐந்து
=====

இவருக்கு தான் இந்த மாதத்தின் Employee of the month அவார்ட் -டாம்!


ஆறு
====
ஓஷோ ஜோக்.

நோயாளி ஒருவரைப் பார்த்து டாக்டர்: " சாரி , நீங்கள் இன்னும் ஆறுமாசம் தான் உயிரோடு இருப்பீர்கள்".

நோயாளி 'ஆயுளை நீட்டிக்க வழியே இல்லையா டாக்டர்?'

டாக்டர்: 'இந்த ஆறு மாதம் சிகரெட் வேண்டாம், குடிக்க வேண்டாம், உடல் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம், போதை, பாஸ்ட் புட் எதுவும் வேண்டாம்.எல்லாவற்றையும் ஒரேயடியாக விட்டு விடுங்கள்'

'இப்படி செய்தால் நீண்டநாள் வாழும் சாத்தியம் அதிகரிக்குமா டாக்டர்' ?

டாக்டர் 'அது எனக்குத் தெரியாது ஆனால் இந்த ஆறு மாசமே உங்களுக்கு ரொம்ப நீண்டதா தெரியும்'.

சமுத்ரா5 comments:

Jayadev Das said...

\\250- ஆவது பதிவு! \\ மேலும் வளரட்டும்!1 [பதிவும் 250, Followers 250!! ]

சிவகுமாரன் said...

சுவையான தகவல்கள்
நன்றி.

ராஜ் said...

கலைடாஸ்கோப் ரொம்ப நல்லா இருக்கு......நல்லா எழுதுறேங்க...
கதையல்ல நிஜம் பத்தி நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட்..சேனல்காரன் சும்மா டி.ஆர்.பி ஏத்த இந்த மாதிரி எல்லாம் பண்ணுறான்..

VELU.G said...

250க்கு வாழ்த்துக்கள் நண்பரே

Anonymous said...

http://tamil.alisina.org/
அலி சினா in tamil