இந்த வலையில் தேடவும்

Tuesday, May 17, 2011

அணு அண்டம் அறிவியல்- 26

அணு அண்டம் அறிவியல்- 26 உங்களை வரவேற்கிறது


குவாண்டம் இயற்பியலில் இரண்டு விஷயங்களை சொல்வதாக சொல்லியிருந்தோம். ஒன்று நிச்சயமின்மை (Uncertainty ) இரண்டு மேற்பொருந்துகை (Superposition )

ஹைசன்பெர்க் -இன் நிச்சயமின்மை இயற்பியலில் நிறைய புதிர்களை விடுவித்தது. உதாரணமாக அணுவின் 99 .9999999 சதவிகிதம் ஏன் வெற்றிடமாக உள்ளது? ஏன் எலக்ட்ரான்கள் அணுக்கருவின் உள்ளே சென்று விழுந்து விடுவதில்லை என்பவைகளுக்கான விடைகளைத் தந்தது. ஏன் ப்ரோடான் என்றும் எலக்ட்ரான் என்றும் அணு என்றும் கார்பன் என்றும் இருக்க வேண்டும்? எல்லாம் ஒன்று சேர்ந்து சூனியமாக மாறி விடலாமே?

'தந்த்ரா' என்ன சொல்கிறது என்றால் ஒன்றுமற்ற சூனியமான இறைமை தன்னை ஆணாகவும் பெண்ணாகவும் வெளிப்படுத்திக் கொள்கிறது என்கிறது.அதாவது 'ஜீரோ' வில் இருந்து +1 ஐயும் -1 ஐயும் பிரித்தெடுப்பது போல..

ஏன் இறைமை சூனியமாக இல்லாமல் தன்னை ஆணாகவும் பெண்ணாகவும் பிரித்துக் கொண்டு கஷ்டப்படுகிறது? எதற்காக ஹார்மோன்களின் அலைக்கழிப்புகள்? பெருமூச்சுகள்? பின் தொடரல்கள்? காதல் கடிதங்கள்? தூக்கமில்லா இரவுகள்? உரையாடல்கள்? ஏக்கங்கள்? 'என்னைக் காணவில்லையே நேற்றோடு' 'அன்பே அன்பே
கொல்லாதே '
என்றெல்லாம் இதயத்தைப் பிடித்துக் கொண்டு பாடும் தமிழ் சினிமா பாடல்கள்?

இதற்கான விடையைத் தேடி எங்கேயும் போக வேண்டாம்..நம் கம்பரே சொல்லியிருக்கிறார்:

"---
---
அலகிலா விளையாட்(டு) உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே"

இந்த பிரபஞ்சமே இறைவனின் விளையாட்டு..கடவுளின் அவதாரங்களை நாம் இந்தியாவில் 'லீலா' என்று தான் சொல்கிறோம்..ராம லீலா, கிருஷ்ணா லீலா என்று..பிரபஞ்சம் சும்மா ஒரு டைம்-பாஸ் அவ்வளவு தான்..ராமனும் அவனே(அல்லது அதுவே), சீதையும் அவனே , ராவணனும் அவனே , அனுமானும் அவனே ...ஆனால்
Just for Game 's sake ..

குவாண்டம் மெக்கானிக்ஸ் , இந்த பிரபஞ்சம் ஒரு தீர்மானிக்கப்படாத பகடை (Dice ) போல செயல்படுகிறது ,யாரோ இதை வைத்து
விளையாண்டு கொண்டிருக்கக் கூடும் என்று கண்டு பிடித்து சொன்ன போது ஐன்ஸ்டீன் உட்பட பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்..பிரபஞ்சம் ஒரு விளையாட்டு அல்ல என்று அவர்கள் தீர்க்கமாக நம்பினார்கள்.

ஆனால் பிரபஞ்சம் ஒரு விளையாட்டு..எனவே அடுத்த முறை இண்டர்வியூ ஃபெயில் ஆனால் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் !


விளையாட்டு என்று வரும் போது 'துவைதம்'(இருமை) தேவையாக இருக்கிறது. எதுவுமே இல்லை எல்லாம் சூனியம் என்று இருந்தால் அத்வைதம் (இருமையின்மை)சரியாக இருக்கும். ஆனால் விளையாட்டு என்று வரும் போது 'இரண்டு' இருந்தால் தான் சரியாக வரும். கிரிக்கெட்டில் Batsman னும் பந்தைப் போடும் bowler ரும்
ஒரே அணி தான் என்றால் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும்? கடவுளின் விளையாட்டுக்கு இருமை தேவைப்படுகிறது. ஆண் என்றும் பெண் என்றும் இரவு என்றும் பகல் என்றும் எலக்ட்ரான் என்றும் பாசிட்ரான் என்றும் இருமை தேவைப்படுகிறது

அடிமட்டத்தில் அத்வைதமே இருக்கிறது என்றாலும் நம் விளையாட்டை சுவாரஸ்யமாக்க , சினிமாவில் NAIL BITING CLIMAX இல் ஹீரோவும் வில்லனும் சண்டை போடும் போது நாம் சீட்டு நுனியில் உட்கார த்வைதமே தேவையாய் இருக்கிறது.

இந்தியாவில் தோன்றிய இந்த இரண்டு மாபெரும் தத்துவங்களுக்கு ஒரு Golden -mean ஆக
இரண்டையும் compromise செய்யும் படி தோன்றியது தான் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் ..அது என்ன சொல்கிறது என்றால் இந்த உலகத்தில் இருமை இருக்கவே செய்கிறது.ஆனால் அடிமட்டத்தில் எல்லாமே ஒன்று தான்...இறைவனை நெருங்க நெருங்க இருமை மறைந்து அத்வைதம் மேலோங்குகிறது.அதாவது நெருப்புக்குள் போடும் முன்னர் எல்லாம் தனித்தனி இது விறகு , இது குச்சி, இது சுள்ளி, இது தேங்காய் மட்டை,இது சோளக்கட்டை என்று இருமை...நெருப்பில் விழுந்து எரிந்த பின் எல்லாவற்றுக்கும் ஒரே பெயர் 'சாம்பல்' தான்! கொஞ்சம் சினிமா பாஷையில் சொல்வதென்றால் "கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத் துளி ? , காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி'!


ஓகே..அறிவியலில் இருந்து விலகுவது போலத் தோன்றினால் பயப்படாதீர்கள்...I wont lose the track ! இவ்வளவு தூரம் வந்து விட்டோம்..அப்படியே திரும்புவதற்கு முன் சாந்தோக்ய உபநிஷதத்தின் நாலாவது அத்தியாயத்தில் வரும் ஒரு கதையையும் பார்த்து விடலாம்..இதிலும் ஒரு பகடை வருகிறது


'ஜனஸ்ருதி' என்ற அரசன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தான தர்மங்களில் சிறந்து விளங்கினான். இல்லை என்று வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அவன் சமையலறை 24 x 7 பிஸியாக இருந்தது. சிறந்த குணவானாகவும், நல்லவனாகவும் ஆட்சி செய்தான்.மக்கள் சேவையில் மட்டும் அன்றி ஆன்மீகத்திலும் அவன் நாட்டமுள்ளவனாக இருந்தான்.

ஒரு கோடைக்கால இரவில் அவன் தன் மாளிகையின் உப்பரிகையில் மஞ்சத்தில் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது இரண்டு அன்னப் பட்சிகள் வானில் பறந்து செல்கின்றன.அவற்றில் ஒன்று வேகமாக முன்னே பறந்து போகிறது .அதைப் பார்த்து பின்னால் பறக்கும் பறவை "முட்டாள் பறவையே, கண்களைத் திறந்து முன்னால் பார்த்துக் கொண்டு கவனமாகப் பறந்து செல்..
கீழே அரசன் ஜனஸ்ருதி தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனது தேஜஸ் நாம் பறக்கும் போது நம்மை சுட்டு விடக் கூடும்..எனவே கவனமாகப் பறந்து செல் " என்கிறது.

அதற்கு அந்த முதல் பறவை " யார் அந்த ஜனஸ்ருதி, அவன் தேஜஸ் நம்மை எரிக்கும் அளவு அவன் ஆன்ம பலம் வாய்ந்தவனா? அவன் அவ்வளவு பெரிய ஆளா? மாட்டு வண்டி வைத்திருக்கும் 'ரைக்வா' வை விட அவன் ஆன்மீகத்தில் பெரியவனா?" என்று ஏளனம் செய்கிறது

இதையெல்லாம் கீழே படுத்துக் கொண்டிருக்கும் அரசன் கேட்கிறான்

அடுத்த நாள் காலை அரசவையைக் கூட்டி ரைக்வாவைக் கண்டுபித்துக் கொண்டு வருமாறு ஆணையிடுகிறான்..வீரர்கள் நாலாபக்கமும் ரைக்வாவைத் தேடிச் செல்கிறார்கள். ஒரு வீரன் மாட்டு வண்டி அருகே ஓய்வாக அமர்ந்திருக்கும் ரைக்வாவைக் கண்டுபிடிக்கிறான்..அரசனும் அறுநூறு பசுக்கள், நூறு குதிரை வண்டிகள், தங்க மாலைகளுடன் ரைக்வாவை சந்தித்து 'எனக்கு ஞானத்தின் வழியைக் காட்டுங்கள் ' என்று கேட்கிறான். ரைக்வா கோபம் அடைந்து 'மூடனே, இதையெல்லாம் திரும்பிக் கொண்டு போய் விடு, என் கண் முன்னே நிற்காதே' என்று கூறி விடுகிறார்..

அரசன் மிகுந்த வேதனையுடன் திரும்பப் போகிறான்

இரண்டாவது முறை ஜனஸ்ருதி ஆயிரம் பசுக்கள், எழு கிராமங்களுடன் திரும்ப வந்து 'இவற்றை ஏற்றுக் கொண்டு எனக்கு உபதேசம் அருளுங்கள்' என்கிறான்..அதற்கு ரைக்வா 'நீ ஞானத்தின் தேடலில் உண்மையானவனாக இருக்கிறாயா இல்லையா என்று சோதனை செய்யவே உன்னிடம் கடுமையாக நடந்து கொண்டேன்..சாதாரண ஆளாக இருந்திருந்தால் இரண்டாவது முறை திரும்ப வந்திருக்க மாட்டான்" என்று கூறி அவனுக்கு 'சம்வர்க்க வித்யா' என்ற வித்யையை உபதேசிக்கிறார்.



'யத் க்ருத
யா விஜிதயாதரேயா சம்யந்தி ஏவம் ஏவம் சர்வம் ததாபிசமேதி
யத் கிஞ்ச பிரஜா சாது குர்வந்தி ..." என்று பறவைகள் ரைக்வாவைப் பற்றி சொல்கின்றன. பகடையில் நாலு விழுந்தால்(கிருதையா ) அது எப்படி ஒன்று , இரண்டு , மூன்று எல்லாவற்றையும் உள்ளடக்கியதோ அதே மாதிரி தன்னை அறிந்தவன் உலகில் எல்லாவற்றையும் அறிகிறான்..சரி...

ப்ரோடான்களும், எலக்ட்ரான்களும் செய்யும் காதல் விளையாட்டுகளால் தான் நாமெல்லாம் இருக்கிறோம். எலக்ட்ரான்கள் அப்படியே போய் அணுக்கருவில் விழுந்து விட்டால் என்ன ஆகும்? நாமெல்லாம் இருக்க மாட்டோம் அவ்வளவு தான்..

இது சாதாரண வாழ்க்கையில் நடக்காது என்றாலும் 'neutron star ' எனப்படும் நியூட்ரான் நட்சத்திரங்களில் இது நடக்கிறது. ஒரு நட்சத்திரத்தின் எரிபொருள் தீர்ந்து (அதன் நிறை சந்திரசேகர் எல்லையை விட அதிகமாக இருந்தால்) அதன் கடைசிக் காலங்களில் அது தன் சுய ஈர்ப்பால் சுருங்க ஆரம்பிக்கிறது. இந்த ஒடுக்கம் எந்த அளவு இருக்கும் என்றால் அது அணுவின் வெளியே தூரத்தில் சுற்றும் எலக்ட்ரான்களை நெருக்கி உள்ளே சென்று அணுக்கருவில் வலுக்கட்டாயமாக விழ வைக்கிறது. இப்போது எலெக்ட்ரான் ப்ரோடானுடன் இணைந்து விண்மீன் ஒரே நியூட்ரான் மயமாக காட்சியளிக்கிறது.அணுவின் வெற்றிடம் எல்லாம் இப்போது ஒடுக்கப்பட்டு விடுவதால், நட்சத்திரத்திற்கு அபாரமான அடர்த்தி கிடைக்கிறது.( ஒரு சிறிய குன்றின் அளவே இருக்கும் நியூட்ரான் நட்சத்திரத்திற்கு நம் சூரியனின் இரண்டு மடங்கு நிறை இருக்கும்.)

இது எப்படி என்றால் ஒரு கோலிக் குண்டை பலூனுக்குள் போட்டு ஊதுங்கள்..பலூன் பெரிதானதும் அதன் வாயைக் கட்டி ஒரு பெரிய பாத்திரத்தில் போடுங்கள்..இப்படியே நிறைய கோலிக்குண்டு பலூன்களை பாத்திரத்தில் போட்டு அதை நிரப்புங்கள்..பாத்திரத்தை சுலபமாக நம்மால் தூக்க முடியும்.(அடர்த்தி குறைவு) இப்போது பலூன் வேண்டாம்..பாத்திரத்தை வெறும் கோலிகுண்டுகளால் மட்டும் நிரப்பினால் அதன் அடர்த்தி அதிகமாக இருக்கும் இல்லையா? அணுவின் உள்ள தேவையில்லாத வெற்றிடம் நீங்கியதால் இப்போது நியூட்ரான் நட்சத்திரம் அபாரமான அடர்த்தியுடன் இருக்கும்.

ஆனால் சாதாரணமாக எலக்ட்ரான்களை நம்மால் அமுக்க முடியாது.. வெறி கொண்ட சிங்கத்தை ஒரு சிறிய கூண்டில் அடைக்க முயல்வது போல அவை திமிரும்..தம் எதிர்ப்பைக் காட்டும்..ஆனால் ஈர்ப்பு விசை இதை சாதிக்கிறது..


முத்ரா




22 comments:

ஷர்புதீன் said...

nice man, i need more knowledge to understand some matters in ur article

Katz said...

padichaachu.

சமுத்ரா said...

too bad Katz!

அகல்விளக்கு said...

Interesting....

அடுத்தது எப்போ வரும் தல...??

சமுத்ரா said...

அகல்விளக்கு
you can expect it every Tuesday..

Katz said...

Why Madhu?
என்ன கமென்ட் போடுறதுன்னு தெரியல. அதான் அப்படி போட்டேன். ;-)

சமுத்ரா said...

just kidding Katz..thanks!

G.M Balasubramaniam said...

முன்பே ஒரு முறை உங்கள் பதிவுக்கு வந்து படித்து புரிந்து கொள்ள முயன்று திக்கு முக்காடிப் போய்விட்டேன். மேலோட்டமாக படித்துப் போவது எனக்கு உடன்பாடில்லை. உங்கள் அணு அண்டத்தைவிட கலிடாஸ்கோப் புரிந்து கொள்ள எளிதாயிருக்கிறது. புரிந்து கருத்திட முயற்சிக்கிறேன்.

Katz said...

Yeah, I understand. but i am not missing to link your post in my google buzz and facebook profile.

Thenammai Lakshmanan said...

மிக அருமை சமுத்ரா.. எப்போதும் திகைப்பளிக்கிறீர்கள் உங்கள் ஞானத்தால். விஞ்ஞானம்., மெய்ஞானம். உபநிடதம் என்று..:))

Chitra said...

ஆனால் சாதாரணமாக எலக்ட்ரான்களை நம்மால் அமுக்க முடியாது.. வெறி கொண்ட சிங்கத்தை ஒரு சிறிய கூண்டில் அடைக்க முயல்வது போல அவை திமிரும்..தம் எதிர்ப்பைக் காட்டும்..ஆனால் ஈர்ப்பு விசை இதை சாதிக்கிறது..


.....சிறிய கதைகள் மற்றும் உதாரணங்கள் மூலம் பெரிய விஷயங்களை அருமையாக சொல்றீங்க. பாராட்டுக்கள்! விரைவில் இதை புத்தகமாக வெளியிட வாழ்த்துக்கள்!

ரிஷபன் said...

மேலோட்டமாய்ப் படிக்க முடியாத கனமான விஷயங்களை எளிமையாய் சொல்லும் உங்கள் எழுத்துக்கு ஒரு சல்யூட்.
அது எப்படி ஒன்று , இரண்டு , மூன்று எல்லாவற்றையும் உள்ளடக்கியதோ அதே மாதிரி தன்னை அறிந்தவன் உலகில் எல்லாவற்றையும் அறிகிறான்..
தத்துவமும் விஞ்ஞானமும் அழகாய்க் கை கோர்க்கின்றன..

Mohamed Faaique said...

வழமை போல் கலக்கல் அண்ணா...

நெல்லி. மூர்த்தி said...

"இது எப்படி என்றால் ஒரு கோலிக் குண்டை பலூனுக்குள் போட்டு ஊதுங்கள்..பலூன் பெரிதானதும் அதன் வாயைக் கட்டி ஒரு பெரிய பாத்திரத்தில் போடுங்கள்..இப்படியே நிறைய கோலிக்குண்டு பலூன்களை பாத்திரத்தில் போட்டு அதை நிரப்புங்கள்..பாத்திரத்தை சுலபமாக நம்மால் தூக்க முடியும்.(அடர்த்தி குறைவு) இப்போது பலூன் வேண்டாம்..பாத்திரத்தை வெறும் கோலிகுண்டுகளால் மட்டும் நிரப்பினால் அதன் அடர்த்தி அதிகமாக இருக்கும் இல்லையா? அணுவின் உள்ள தேவையில்லாத வெற்றிடம் நீங்கியதால் இப்போது நியூட்ரான் நட்சத்திரம் அபாரமான அடர்த்தியுடன் இருக்கும்."
இதைவிட எதார்த்தமான உதாரணம் வேறு இருப்பதாகத் தெரியவில்லை. கல்லூரிக் காலங்களில் 'இயற்பியல்' துறையினைக் கண்டு பயத்துடன் அணுகிய நான் இன்று உங்கள் 'அணு அண்டம் அறிவியலினால்' பரவசமுடன் அணுகின்றேன். இப்பெருமை உங்களையேச் சேரும் எனில் மிகையில்லை.

VELU.G said...

அன்பு சமுத்ரா நெல்லி மூர்த்தி சொல்லியது போல இயற்பியலை பயத்துடன் தான் எப்போதும் அனுகியிருக்கிறேன். எனக்கு விருப்பமான பாடம் வேதியலே. ஆனால் இவ்வளவு எளிமையாக வரும் உங்கள் பதிவுகள் இயற்பியலை விரும்ப வைக்கிறது

தொடருங்கள்

வாழ்த்துக்கள்

VELU.G said...

அன்பு சமுத்ரா

இந்த பதிவில் இரண்டு கருத்துக்களை முன்வைத்திருந்தீர்கள் ஒன்று uncertainty and superposition. இவை இரண்டும் எந்த இடத்தில் விளக்கப்படுகிறது. எலக்ட்ரான் ப்ரோட்டான் இரண்டும் அனுக்கருவில் விழுந்து empty space இல்லாமல் ஆவததுதான் superpositionஆ. மற்றும் நிச்சயமின்மை குறித்தான விளக்கம் வேண்டுகிறேன்.

Unknown said...

ஆழமான பதிவு அண்ணாச்சி! எல்லா வரிகளுமே செதுக்கின மாதிரி இருக்கு! வாழ்த்துக்கள்!

Anonymous said...

Super. vaalga valamudan.

சிவகுமாரன் said...

கதைகள் உதாரணங்கள் மூலம் எளிதாய் புரிய வைக்கிறீர்கள்.
என் பையனை இந்த பதிவை ஆரம்பிதிலிருந்து படிக்க சொல்லி இருக்கிறேன். ஆங்கிலத்தில் நன்றாக இருக்கும் என்கிறான்

இராஜராஜேஸ்வரி said...

அலகிலா விளையாட்(டு) உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே"
விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒப்பிட்டு அருமையான விளக்கத்திற்குப் பாராட்டுக்கள்.

madhu said...

மிகவூம் அருமையாக உள்ளது சமுத்திரா.தொடரட்டும் உங்கள் சேவை.

P Madhu M Sc.,B Ed., Physics
District coordinator,
SSA,Dharmapuri

Unknown said...

நியூட்ரான் Star அடர்த்தி அதிகரிப்பது எல்லாம் ஓகேதான்

ஆனால் நிறை எப்படி கூடிட்டே போய் முடிவிலியில் முடியும்னு சொல்லுங்களேன்!